Wednesday, January 10, 2007

அஞ்ஞானிகளின் அல்லல்கள்

வாழ்க்கையில் நாம் எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்ளாமலே இருந்து விடுகிறோம். இதனால் நமக்கு பெரிய இழப்போ இல்லையோ கண்டிப்பாக உலகுக்கு ஒரு இழப்பும் இல்லை. இன்னொரு விதத்தில் சொல்வதானால் "அறியாமையின் ஆனந்தத்தில்" நாம் பெரும்பாலும் இருந்து விடுகிறோம். Bliss of Ignorance என்பார்களே அப்படி. பிரச்சனை எப்போதென்றால் அரைகுறை ஆர்வம் காரணமாக நாமும் சும்மா இருக்காமல், சும்மா இருப்பவனையும் இழுத்துவிட்டு செய்வதறியாமல் முழிப்போமே அப்பொழுது தான். இந்த ஆர்வக் கோளாறு கடவுள் விஷயத்தில் மிக அதிகமாகவே உண்டு. இந்த வியாதி மிக மிகப் பழமையானது என்றும் பெரியவர்களின் கருத்துகளிலிருந்து தெரிகிறது. கபீர்தாஸரின் சில வேடிக்கை வரிகளைப் பார்ப்போம்.

आगॆ अन्धा कूप मॆं दूजा लिया बुलाय
दॊनॊं डूबॆ बापुरॆ, निकसॆ कौन उपाय

ஆகே அந்தா கூப் மேன், தூஜா லியா புலாய்
தோனோ டூபே பாபுரே, நிக்ஸே கௌன் உபாய்


வாவியுள் அந்தக னொருவன் வாவென்பான் வேறொ ருவனை
பாவிகள் இருவரும் மூழ்குவர் வெளியேறும் வழியும் எங்ஙனை

(அந்தகன் = குருடன் வாவி = கிணறு : பாவிகள் என்பதை பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று பொருள் கொள்க)

இதையே சற்று திருமூலரின் வழியில் கூறுவதானால் கீழ்கண்டவாறு சொல்லலாம்.

குருடனுக்கு குருடன் வழிகாட்டி குறுக்கே வந்தது கூபமடி
இருவரும் விழுவர் அம்மாடி வெளியேறும் வழியு
முண்டோடி
(கூபம் = கிணறு )

திருமந்திரத்தின் மூலப் பாடல்கள் இதோ. கபீரின் கருத்துகள் திருமூலரோடு எவ்வளவு அழகாக ஒத்துப் போகின்றன என்பதை இங்கே காண்கிறோம்.

குருடருக்கு கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகியே (2048)


குருட்டினை நீக்கும் குருவனைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழுமாறே (1680)


போலிகள் எக்காலத்தும் உண்டு. அவர்களைப் பிரித்தறிவதே ஒரு வித சாதனை தான். அது சாதகனுள் உண்மையான முயற்சி இல்லாமல் கைவராது. மிகப் பெரும் ஞானிகள் தனிமை விரும்பிகளாகவே இருப்பர். ஜட்ஜ் சுவாமிகளை குருவாய் கொள்வதற்கு அவர் பின்னாலேயே சுற்றுவாராம் கிருஷ்ணமூர்த்தி. அவரை அருகே வரவிடாமல் கற்களை எடுத்து எறிவாராம் ஜட்ஜ் சுவாமிகள். வெகு காலம் பின்பே சாதகனுடைய வைராக்கியத்தைக் கண்டு அவருக்கு குருவாகி வழிகாட்டினார். பிற்காலத்தில் அச்சீடனே சேந்தமங்கலம் ஸ்வயம்பிரகாச சுவாமிகளாக போற்றப்பட்டார். ஆகையால் ஆரம்ப கால சாதனை, தினையையும் பதரையும் பிரித்தறிவதிலே கழிக்க வேண்டிய ஒன்று புரிகிறது.


ज्ञानि कॊ ज्ञानि मिलै रसकी लूटम लूट
ज्ञानि अज्ञानी मिलै, हॊवै माथा फूट


ஞானி கோ ஞானி மிலை, ரஸ்கீ லூடம் லூட்
ஞானி அஞ்ஞானீ மிலை, ஹோவை மாதா பூட்

ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்
ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்

ஞான ரசக் கொண்டாட்டத்தை முதலில் பார்ப்போம். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா" என்ற பாடல் கர்நாடக இசையிலே மிக பிரபலமான பாடல். ஆபோகி ராகம். இயற்றியவர் நந்தனார் சரித்திரம் செய்த கோபாலகிருஷ்ண பாரதி. அவர் மாயவரத்திலிருந்து திருவையாற்றை அடைந்து தியாகரஜரின் வீட்டை அடைகிறார். இன்னாரென்று முகமன் சொல்லிக் கொள்ளும் முன்பே, மாயவரம் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்தில் 'கோபால கிருஷ்ண பாரதியை தெரியுமா?' என்று அவரிடமே கேட்டாராம் தியாகராஜர்! அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கியே மேற்கண்ட பாடலை இயற்றியதாக வரலாறு. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் அறிஞர்கள் இவரது பாடல்களில் யாப்பிலக்கண விதிகளே கிடையாது என்று முடிவு சொல்லிவிட்டிருந்தனர் . தியாகரஜருக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவர் உள்ளம் தன்னைப் போன்ற இறை நாட்டமுள்ள இன்னொரு உள்ளத்தை கண்டதில் உவகை கொண்டது. அங்கே ஒரு போட்டிக் கவிஞரென்ற பொறாமையோ அல்லது சிவனை போற்றும் பாடலாயிற்றே என்ற அலட்சியமோ இல்லாமல் அப்பாடலை போற்றி கொண்டாடினாராம் ராமனை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தியாகராஜர். அந்த கொண்டாட்டத்தின் பயனாகத்தான் தமிழ் இசையுலகுக்கு ஒரு இறவாப் பாடல் கிடைத்தது. இறைவனைப் பற்றிய எந்த ஒரு சிந்தனையும் ஆனந்தம் அளிப்பதாகவே இருக்கும். அதுவே ஞானிகளின் போக்கு

ஆனால் அஞ்ஞானிகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்து கூறமுடியாது. அதனால் வரும் சிரநோவுகளும் பலவிதம்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கதை ஒன்று. மதம் பிடித்த யானை ஒன்று தெருவில் வேகமாக வந்து கொண்டிருந்தது. மேலிருந்த பாகன் எல்லோரையும் ஒதுங்கச் சொல்லிக்கொண்டே அங்குசத்தால் அதை வழிக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்தான். ஒரு பெரும் குருவுடைய சீடனுக்கு குருவின் மொழிகள் அந்நேரத்தில் ஞாபகத்திற்கு வருகிறது. "இவ்வுலகமே பிரம்ம மயம். எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது பிரம்மமே. எதுவும் பிரம்மத்திற்கு புறம்பானதல்ல". ஆகையால் இந்த யானையும் பிரம்மம் ;நானும் பிரம்மம். இதையறிந்த என்னை இந்த யானை ஒன்றும் செய்யாது என்று எண்ணிக் கொண்டே வழியிலேயே நின்றிருந்தான் அச்சீடன். ஆனால் அந்த யானைக்கு பிரம்மத்தைப் பற்றித் தெரியாததால் அந்தச் சீடனைத் தூக்கி வீசி எறிந்து விட்டு தன் வழியே போயிற்று. உடலெல்லாம் காயத்துடன் குருவை அடைந்த சீடன் தன் நிலைச் சொல்லி புலம்பினான். குருவின் வார்த்தைகளில் தான் வைத்த நம்பிக்கை வீணாயிற்று என்றான். குரு சிரித்தார். "அடே மூடா ! யானை என்ற 'பிரம்மம்' உன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த அதே நேரத்தில் மேலே அமர்ந்திருந்த பாகன் என்ற 'பிரம்மம்' ஒதுங்கச் சொன்னதை நீ புரிந்து கொள்ளவில்லையே ! உன்னை விட யானையைப் பற்றி அவனல்லவோ அதிகம் அறிவான். உன் துன்பத்திற்கு காரணம் உன் அரைகுறை அறிவே" என்று சொல்லிப் புரிய வைத்தார். ஆகையால் இத்தகைய நிலைமையை 'பாழும் சிரநோவுத் திண்டாட்டம்' என்று கபீர் வருணிப்பதில் வியப்பில்லை.

कबीरा संगति साधु की हरै और की व्याधि
संगति बुरी असाधु की, आठॊं पहर उपाधि

கபீரா சங்கதி ஸாது கீ, ஹரை ஔர் கீ வ்யாதி
சங்கதி புரீ அஸாது கீ, ஆடௌன் பஹர் உபாதி


சாதுவின் இணக்கம் கபீரா, களையும் ஈனோர் வியாதி
சாது அல்லாரோடு ஆயின் விளயும் எண்சாம உபாதி
(எண்சாமம் : எட்டு சாமப் பொழுது, ஒரு தினம் ; உபாதி : துன்பம்,சங்கடம் )

இறையருள் பெற்ற மகான்கள் கர்ம வினைகளை அனுசரித்து மக்களின் துயர் தீர்ப்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராகவேந்திரர், ஏசு இன்னும் பலரும் பிணி தீர்ப்பது மட்டுமன்றி இறந்தவர்களை உயிர்ப்பித்ததையும் படிக்கிறோம். ஏசுபிரான் சொல்வதைப் போல் மந்தை ஆடுகளை ஒரு நல்வழியில் அழைத்துச் செல்லும் மேய்ப்பவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் நம்மை ஆடுகளாகக் கருதாது தெய்வ நிலைக்கு உயர்த்தும் முயற்சியில் இறைவனில் நமது நம்பிக்கையை வளர்ப்பதற்காக ஈடுபட்டு செய்யும் ஒரு சிறிய இடை நிலையே அது. ஆனால் அவர்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அதை பெரும்பாலும் நாம் செயல்படுத்துவதோ அல்லது சிந்திப்பதோ கூட இல்லை.

வாழ்வில் நாம் சந்திக்கும் சிலரை 'அழுமூஞ்சி' என்று கண்டு ஒதுங்குவோம். காரணம், யாராவது கிடைத்தால் போதும் அவர்கள் தம் சோகக் கதையை தொடங்கி விடுவார்கள். நமக்கே இந்த நிலைஎன்றால் தேடி வரும் அனைவருமே ஒரு சோகக் கதையோடு வந்தால் சாதுக்களின் கதி என்னாவது? அத்தகைய பெரிய ஞானிகளை அணுகும் போது ஆன்மீக முன்னேறத்திற்காக இல்லாமல் குறுகிய வட்டத்துள் தம் சொந்தப் பிரச்சனகளைப் பற்றியே பேசுவர் உலகோர். இது மனத்தளவில் அவர்களுக்கு எவ்வளவு சங்கடம் உண்டு பண்ணும் என்ற நினப்பும் இருப்பதில்லை. ஆயினும் அவர்கள் பெரும் கருணையாளர்களாக தம்மை தேடி வந்தவரின் மன அமைதிக்காக துன்பம் துடைக்கும் வடிகால்களாக செயல்படுகிறார்கள். நமது (மன)வியாதிகளை களைவதில் அவர்கள் உபாதிகளை ஏற்றுக் கொள்கின்றனர்.

6 comments:

  1. கதைகளுடம் படிப்பதற்கு சுவையாக உள்ளது, நன்றி.
    அஞ்ஞானம் எதுவென்று கேட்கலாமென்று முதலில் நினைத்தேன். பின்னால் ஞானிகளின் கதைகளை படிக்கும்போது, ஞானிகள் எதை செய்யமாட்டாரோ அதுவே அஞ்ஞானம் என தெளிந்தேன்!

    ReplyDelete
  2. நன்றி ஜீவா.
    கட்டுரையின் துவக்கமே "யாரெல்லாம் அஞ்ஞானிகள்?" என்ற கேள்வியுடன் தான் முதலில் எழுதப்பட்டது. பின்னர் 'நானே அஞ்ஞானி; இதில் நான் என்ன அஞ்ஞானிகளைப் பற்றி கருத்து கூறுவது' என்ற எண்ணம் மேலோங்கியது. "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்பதுதான் உரைக்கல். கண்டவர் ஞானிகள். விண்டவர் அஞ்ஞானிகள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. கபீரன்பன், வணக்கம். உங்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் மடலுக்குத் தான் நான் இன்னும் சரியான பதிலெழுத இயலவில்லை என்ற வருத்தம் உள்ளது. கபீரைப் பற்றியும் அவருடைய பாக்களைப் பற்றியும் தெரியாததால் ஒரு தயக்கம். நண்பர்களிடம் ஆலோசனை கேட்டாவது எழுதுவோம் என்றிருக்கையில் உங்கள் வலைப்பூவை இன்று தமிழ்மணத்தில் காண நேர்ந்தது. தமிழ்மணம் & தேன்கூடு உதவிப்பக்கம் பார்த்து அவர்களின் மறுமொழி நிலவர சேவயைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்னும் பலரையும் சென்றடையும். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பாலா மற்றும் சேதுக்கரசி நன்றி. தயக்கம் என்னிடம் தானே இருக்க வேண்டும். எதையாவது உளறிவிடாமல் இருக்கவேண்டுமே !comment அடிப்பதற்கும் புரியாமல் போனால் அதை சொல்வதற்கும் உங்களுக்கேன் தயக்கம்? தவறாமல் வாருங்கள்.

    ReplyDelete
  6. கபீரன்பரே மறுமொழி மட்டுறுத்தலை பயன்படுத்தினால் இன்னமும் நிறைய அன்பர்களை சென்றடைய இயலும் என்ற சேதுக்கரசியின் யோசனையை சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி