Saturday, January 27, 2007

மாயா மாயை மரியா மனம்

மாயையைப் பற்றிய பதிவு என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அருகில் கணிணியில் வேலைசெய்து கொண்டிருந்த சகபணியாளர் ஏதோ பிரச்சனை காரணமாக வேறொருவரிடம் ஒரு 'கமெண்ட்' அடித்தார்.

'கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'. அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது. ஆனால் அதுவே மாயையைப் பற்றி ஆரம்பிக்க நல்லத் தொடக்கமாகத் தோன்றியது. மேற்கண்ட பழமொழியை என் பள்ளி நண்பன் அடிக்கடி விளையாட்டாக நாய்களின் மீது கல் விட்டெறிந்து கூறக் கேட்டிருக்கிறேன். வெகு நாட்களுக்குப் பின் ராமகிருஷ்ண விஜயத்தில் அதன் விளக்கத்தைப் படித்த பிறகுதான் அது ஒரு Murphys Law அல்ல என்பது புரிந்தது.

கல்லால் ஆன ஒரு நாயைப் பார்க்கும் பொழுது கல்லைப் பற்றிய சிந்தனை மனதில் வருவதில்லை. நாயின் உருவமைப்பு கண் காது இவற்றின் தத்ரூபமான வேலப்பாடு இவற்றில் நம் கவனம் செல்கிறது.அதுவே அதை வடிவமைத்த சிற்பி அத்தகைய சிற்பம் வடிக்கத் தேவையான கல்லின் குணாதிசயங்கள், பரிமாணம் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி விளக்கிக் கூறும் பொழுது மனம் நாயை மறந்து விட்டு கல்லைப் பிடித்துக் கொள்கிறது. இதைப் புரிய வைக்கும் வகையில் எழுந்த திருமந்திரப் பாடல்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
.................................. (2289)
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைத்தது பொன்னணி பூடணம்
........................................ (2290)


மரத்தில் செதுக்கப்பட்ட யானையை ரசிக்கும் போது மரத்தின் குணாதிசயங்களைப் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதிலை. அது போல ஒரு நகையைப் போற்றும் போது அதன் வேலைப்பாடுகளைப் போற்றுவோமே அன்றி அதன் தரத்தைப் பற்றி கவனம் கொள்வதில்லை. அதுவே பொன்னின் மாற்று சற்றுக் குறைவாக இருந்தாலும் அதை உடனே நிராகரிக்கத் தயங்க மாட்டோம்.ஏனெனில் அவ்வேளை நம் கவலை பொன்னின் தரம். யாருக்கு வேண்டும் வேலைப்பாடு! ஆகையால் நாம் எடை போடும் எதுவும் நமது மனத்தளவில் எழும் உணர்சிகளே. இது தான் மாயையின் பிடி போலும். மாயையை விவரித்து பலர் பலவிதமாக கூறினாலும் உண்மையில் அதை புரிந்து கொண்டவர் எத்தனை பேர்? ஆனால் கபீரைப் போல எளிமையாக இதை விளக்கியவர் இல்லை எனலாம். கபீர் மாயையைப் பற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம்.

माया माया सब कहैं माया लखै न कॊय
जॊ मन सॆ ना ऊतरॆ, माया कहिए सॊय


மாயா மாயா ஸப் கஹை, மாயா லகை ந கோய்
ஜோ மன் ஸே நா ஊத்ரே, மாயா கஹியே ஸோய்


மாயை மாயை யென்பர், அறிவா ரில்லை மாயையை
மாயை யாவது அதுவே மனம்விட்டு அகல மறுப்பதுவே


மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது மாயை. "யா மா : ஸா மாயா" என்று வட மொழியில் விளக்கம் கூறுவர். (யா- எது; மா-மாற்றம் அடைவதோ; ஸா -அது; மாயா- மாயை).

ஆகவே தான் மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலக வாழ்க்கையையும் மாயை என்பர். மனிதனின் மனமும் நிலைக் கொள்ளாமல் ஒன்றை விட்டு ஓன்றைப் பற்றிக் கொண்டு தடுமாறுகிறது. மனதைப் பிடித்தாட்டும் புலன் வழிப்போக்கு இருக்கும் வரையில் மாயை என்பது ஒழிவதில்லை. மனம் மரிக்காத வரையில் அதன் ஆட்டம் தொடரும். இந்த ஆட்டத்தை ஒழிக்க இயலாதவர் போல் தாயுமானவர் இறைவனை இறைஞ்சுவார் " எல்லாமும் வலம் இந்த மனமாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ?"

மாயையின் இருப்பிடமே மனிதனின் மனம் தான். அதனால் தான் கபீர் அதை சுய சோதனை மூலம் கண்டு கொள்ள சுலபமான வழி உபதேசிக்கிறார். எது நம் மனதை விட்டு அகல மறுக்கிறதோ அதுவே மாயை.

அதே சுயசோதனையையே திருமூலரும் பரிந்துரைக்கிறார்.

மன மாயை மாயை, இம் மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்ற ஒன்றும் இல்லை
பினை மாய்வதில்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்திருப்பது தத்துவம் தானே (2956)


பொருள் : மனதின் கற்பனையே மாயையாம். அது மயக்கம் அளிக்கும் (அஞ்ஞானத்தில் தள்ளி விடும்). அந்த மனமயக்கம் போன பின் வேறொன்றும் இல்லை. அதற்கு மேல் மாய்வதற்கு ஏதும் இல்லை. வீண் பேச்சு எதற்கு? ஆன்ம தத்துவம் என்பது தன்னை (தன் எண்ண ஓட்டங்களை) கவனித்திருந்து அடங்கியிருப்பதே ஆகும்.

மனமுதிர்ச்சி பெற்றவரின் மனநிலை எத்தகையது என்பதை எடுத்துக்காட்ட ஒரு பழமையான கதை. உலக வாழ்க்கையைத் துறந்து ஒரு தம்பதியர் காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாதையில் ஒரு பொன்னால் ஆன மூக்குத்திக் கிடந்தது. அதைக்கண்டால் எங்கே மனைவியின் மனதில் சஞ்சலம் உண்டாகி விடுமோ என்றெண்ணி காலினால் மண்ணை தள்ளி அதை மூடுகிறான் கணவன். பின்னால் வந்து கொண்டிருந்த மனைவி அதைக் கண்டு வருத்தமடைகிறாள். மெல்லிய குரலில் கணவனை கேட்டாள் "இன்னுமா மண்ணிற்கும் பொன்னிற்கும் வித்தியாசம் தெரிகிறது ?"

மாயையை வென்ற பெண்மணி அவள். ஏனென்றால் பொன் எனும் மாயை அவள் மனதை விட்டு அகன்று விட்டிருந்தது.

माया मरी न मन मरा, मर मर गए शरीर
आशा तृष्णा न मरी कह गए दास कबीर


மாயா மரீ ந மன் மரா, மர் மர் கயே ஷரீர்
ஆஷா த்ருஷ்ணா ந மரீ, கஹ் கயே தாஸ் கபீர்

மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


மாயையால் பீடிக்கப் பட்ட மனது, தான் நினைத்ததை அடையும் வரை நம்மைப் படாத பாடு படுத்தி விடுகிறது. பல நேரங்களில் நாம் செய்யக் கூடாதனவற்றையும் செய்யச் சொல்லி துன்புறுத்துகிறது. இந்த துன்பத்தை தாயுமானவர்

ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்,
மோசம் வரும் இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கான
நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற்
கொடுமை பற்றி நிற்பர் அந்தோ
தேசு பழுத்தருள் பராபரமே நிராசை
இன்றேல் தெய்வமுண்டோ


என்று பாடுகிறார். பெருங்காற்றில் சிக்கிக் கொண்ட இலவம் பஞ்சு படும் பாட்டை போல நமது மனம் மட்டுமல்ல தேகமும் உழன்று ஓய்ந்து போய் விடுகிறது. ஆனாலும் நிராசை என்ற வேகத்தடை இல்லாததால் மீண்டும் மீண்டும் பல்வேறு ஆசையிலே சிக்கி தவிக்கின்றோம். இதையே கபீர் தீர்க்க முடியாத தாகம் என்று உவமித்துச் சொல்கிறார்.

எளிமையான கபீரின் ஈரடிகளுக்கு இத்தனை விளக்கங்கள் அவசியமா? இல்லைதான். ஆயினும் நமக்கு மனதுக்கு பிடித்தமான ஒரு குழந்தையையோ அல்லது தெய்வ உருவத்தையோ அலங்கரித்து அழகு பார்ப்பதில் ஓர் ஆசை. இதுவும் அந்த மாயையின் ஆட்டம் தான்.

6 comments:

  1. வணக்கம் கம்பீரப்பன்

    //ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம்
    பஞ்சு //
    தாயுமானவரின் விளக்கம் அருமை.
    மாயையைப் பற்றி நல்லாக எழுதியிருக்கிறீர்கள்.
    நன்றி

    ReplyDelete
  2. ஆஹா இத்தனை நாள் நான் தேடிக் கொண்டிருந்த கபீர்தாஸின் பாடலும் அதன் தமிழ் பொருளுரையும் கிடைத்தது. நல்ல கருத்தாழமுள்ள பதிவி.சிக்கெனப் பிடித்தேன் . நன்றி. இதுபோல சூர்தாஸரின் கவிகளுக்கும் விளக்கம் தரமுடியுமா?

    ReplyDelete
  3. நன்றி செல்லி மற்றும் தி.ரா.ச. செல்லி, அது என்ன புது Title கம்பீரப்பன் ? அழகாகத்தான் இருக்கிறது. கபீருக்கு சூட்டி மகிழுவோம். அவரது வாழ்க்கையே மிகவும் கம்பீரமானது தான். சிறிது சிறிதாக வரும் பதிவுகளில் காண்போம். தி.ரா.ச, உங்கள் மூலமாக மாயை என்னை தன் வலையில் மேலும் சிக்க வைக்கப் பார்க்கிறது. இப்போது செய்யும் கபீரின் மொழிபெயர்ப்பே நுனிப்புல் மேய்வது போலத்தான். இதை ஒரு நிலைக்கு கொண்டு வர எவ்வளவு நாட்கள் பிடிக்குமோ தெரியாது. இதில் சூர்தாஸுமா? அம்மாடி !!!!!!!

    ReplyDelete
  4. கபீர் அன்பன் அவர்களே கம்பர் இராமயணத்தை எழுதுமுன்பு சொல்கிறார். "ஒரு பூனையானது பாற்கடலுக்கு முன்பு நின்று கொண்டு அதை முழுவதும் குடித்துவிடலாம் என்ற பேராசையைப் போல இருக்கிறது நான் ராமாயணம் எழுதி விலாம் என்ற எண்ணம்." ஆகவே துணிந்து எழுதுங்கள் என்னைப் போன்றவர்களே எழுதும் போது உங்களுக்கு என்ன கவலை.

    ReplyDelete
  5. மாயா மாயா ஸப் கஹை!
    அருமையாக மொழியாக்கமும் திருமூலராய் மலர்கிறது...!

    என் பங்கிற்கு ஒரு திருமந்திரச் செய்யுள்:
    ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
    வாயு மனமும் கடந்துஅம் மயக்ககறின்
    தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
    வேயும் பொருளாய் விளைந்ததுதானே.

    - அகமும் புறமும் மாயையால் மூடிக்கிடக்கிறது. மாயை நீங்கினால், அறிவு சுத்தமடைகிறது. அப்போது அதனால் பெரும் ஆனந்தம் சிவானந்தமாய் நமக்கு அரணாய் அமைந்து நம்மை காக்குமாம்!

    ReplyDelete
  6. தி ரா ச, உங்கள் தன்னம்பிகையூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ஜீவா, நீங்கள் குறிப்பிட்டுள்ள திருமந்திரத்தில் "மனமும் கடந்து அம்மயக்கறின்" என்ற வரி முக்கியமானது என்று கருதுகிறேன். It is a Conditional statement. மாயையின் பிறப்பிடமான மனதைக் கடந்தால் மயக்கம் தெளிகிறது. பிறகு சிவானந்தமே. மனித முயற்சியெல்லாம் 'கடப்பதைக்' குறித்தே இருக்கவேண்டும் என்பது பெரியோரின் கருத்து. நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி