Saturday, June 16, 2007

கபீரும் காமுகனும்; கபீருக்கு வந்த சோதனை

இயற்பகை நாயனார் என்று ஒரு சிவனடியார். பரமசிவன் ஒரு அந்தண வேடம் பூண்டு, அவரை அணுகி அவரது மனைவியையே யாசிக்கிறான்.முகம் சுளிக்காது அவருடன் கற்புக்கரசியான மனைவியை வழியனுப்பியதுமல்லாமல் தானே வழித்துணையாகவும் செல்கிறார்.
கொடுத்த வாக்கைக் கடைசி வரை காப்பாற்றுதலே ஒருவனின் தலையாய கடமை என்பதை போற்றிய காலம் அது. முழுக்கதையையும் வலைப்பூவிலே வாசிக்க இங்கே சொடுக்கவும் . இத்தகைய சோதனை கபீருக்கும் வருகிறது.

ஒருமுறை ஒரு பெரிய அடியார் குழாம் அன்றைய பிட்சைக்காக கபீர் வீட்டை அடைந்தது. கபீருக்கு இது ஒரு சோதனையானது. வீட்டில் பண்டங்கள் இருந்ததோ மிக மிகக் குறைவு. வெளியில் கடனோ தலைக்கு மேல். யாரை அண்டினாலும் அவமானம் தான் மிஞ்சும் என்ற நிலை. கபீரின் பரிதவிப்பைக் கண்ட அவரது மனைவி, லோயி, தயங்கித் தயங்கி ஒரு விஷயத்தை வெளியிடுகிறாள்.

"மூலைக் கடை சேட் டிற்கு என் மேல் ஒரு கண். பலமுறை பலவிதமாக சாடைமாடையாக பேசியிருக்கிறான். அவன் விருப்பத்திற்கு இணங்கினால் அவனால் இப்போதுள்ள பிரச்சனைத் தீரும்"

இதைக் கேட்ட கபீரின் கண்கள் கலங்கியது. லோயியின் தியாகம் அவரை வேதனையுறச் செய்தது.

பசித்தவன், உணவில் ருசி பற்றிய எண்ணத்தை விடுவான். களைத்துச் சோர்ந்தவன் தூங்குவதற்கு மெத்தை என்ற எண்ணத்தை விடுவான். அதுபோல் காமம் தலைக்கேறியவன் வெட்கம் என்ற குணத்தை விட்டுவிடுவான்.

விருந்தோம்பலை தலையாய கடமையாகக் கொண்ட கபீர் வேறு வழி தெரியாமல் சம்மதிக்கிறார். லோயி கடைக்கு சென்று அன்று இரவே சேட் டை சந்திப்பதாகச் சொல்லி தேவையான பொருட்களைப் பெற்று விருந்தினர்களின் பசியாற்றி வழியனுப்பி வைக்கிறாள்.

அந்தி நெருங்கியது. இருவரின் உள்ளத்திலும் எந்த சலனமும் இல்லை. கபீர் தமது ராம ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார். தாமரை இலை நீர் போல் உலகில் ஒட்டாமல் வாழ்க்கை நடத்திய தம்பதிகள் அவர்கள். அந்நேரம் பெரிதாக மழை வேறு பிடித்துக்கொண்டது. அங்கே சேட் டிற்கு பதைபதைப்பு ஆரம்பமாகி விட்டது. தான் ஏமாற்றப் பட்டு விட்டோமோ என்ற கவலை மனதை அரிக்கத் தொடங்கியது. ஆனால் குறித்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. சொல்லியபடி லோயி அங்கே நின்றிருந்தாள்.

உற்சாகமாக அவளை வரவேற்று பலவிதமான அழகு பொருட்களையும் அணிகலன்களையும் வாசனைத் திரவியங்களையும் கொடுத்து அழகு படுத்திக்கொள்ள ஒரு அறைக்குள் அனுப்பி வைக்கிறான் சேட்டு. வெளியே நிலைக்கொள்ளாமல் மேலும் கீழுமாக அவன் உலாத்திக் கொண்டிருந்த பொழுது மீண்டும் ஒரு முறை கதவு தட்டப்பட்டது.

இப்போது அங்கே நின்றிருந்தது ஊர் காவல் அதிகாரி. "நீ ஏதோ பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கிறாயாமே ! உன் வீட்டை சோதனையிட வேண்டும்" என்று வீம்பாக உள் நுழைந்து தேடத் துவங்கினான். கடைசியாக சாத்தியிருந்த அறை முன்னே நின்று அதைத் திறக்கச் சொன்னான். சேட் டுக்கு கைகால்கள் வெட வெடக்கத் தொடங்கியது.

உள்ளே கபீரின் மனைவியைக் கண்டதும் " இவள் கபீர்தாஸின் மனைவியாயிற்றே. அவர்களது வறுமையைப் பயன் படுத்திக்கொள்ள உனக்கு வெட்கமாயில்லை" என்று அவனை திட்டி அவளை பத்திரமாக அவர்கள் வசித்த தெரு வரைக்கும் துணை சென்று வீடு சேர்த்தான்.

நடந்ததை அறிந்த கபீருக்கு உள்ளம் பதைத்தது. கொடுத்த வாக்கை தவறிவிட்டோம் என்ற அவப்பெயர் வந்துவிடுமே என்று சேட் டின் வீட்டை அடைந்து அவனிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அவனையும் அழைத்துக்கொண்டு காவல் அதிகாரி வீட்டை அடைந்து கதவை கோபத்துடன் தட்டினார்.

அரைகுறைத் தூக்கத்தோடு கதவைத் திறந்த காவல் அதிகாரிக்கு கபீரின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. தம்மிருவரில் ஏற்பட்டிருந்த ஒப்பந்தப்படி தன் மனைவியை தானே சேட் டின் வீட்டிற்கு அனுப்பியிருக்கையில் இதில் அந்த அதிகாரி தலையிட அவசியமென்ன என்பதே கபீரின் வாதம். ஆனால் அந்த அதிகாரியோ கபீர் பேசுவது எதுவுமே தனக்கு புரியவில்லை என்று சாதித்தான். ஒரு நிலையில் சண்டையாக மாறி கைகலப்புக்கு முற்றியது.

கபீரின் செவிகளிலே திடீரென்று ஒரு அசரீரி ஒலித்தது.
"என்னை இன்னுமா தெரியவில்லை கபீர் ?"
மின்னல் போல கபீருக்கு எல்லாம் புரிந்து விட்டது.
காட்டுவழியிலே தியாகராஜருக்கு காவல் செய்த அதே ராமன் அதற்கும் முன்பே கபீருக்கும் காவல் புரிந்துள்ளான். அந்த ஆதர்ச தம்பதியரின் கௌரவம் காக்க அவன் காவல் அதிகாரி உருவில் போட்ட நாடகம் இது. உண்மையான காவல் அதிகாரிக்கு நடந்தது எதுவும் தெரியாது.

அவர்களின் மனத்தூய்மையை கண்டு அவமானமுற்ற சேட் தன் கீழ்மைக்காக அத்தம்பதிகளின் கால்களில் பணிந்து மன்னிப்பு வேண்டினான்.
காமம் என்ற பொல்லாத வழுக்குப் பாதை மனித வர்க்கத்தை கீழே தள்ளுவது போல் வேறொன்றை இணையாக சொல்லமுடியாது. அதற்கு காரணம் புலன்களை சர்வ ஜாக்கிரதையாக கையாளாமல் விடுவதே ஆகும். இதை கபீர் இப்படி குறிப்பிடுகிறார்.

कामी तो निरभय भया, करै न काहूं संक ।
इन्द्री केरे बसी पडा़ भुगते नरक निसंक ॥


காமி தோ நிர்பய் பயா, கரை ந காஹூ சன்க்
இன்த்ரீ கரே பஸீ படா, புக்தே நரக் நிஸன்க்


நிர்பயமானான் காமியுமே, விட்டான் நல்வினை யாவையுமே
நரகக்குழியில் வீழலுமே, புலன்கள் போட்டன நாடகமே

(நிர்பயம் =பயம் இல்லாமல் போவது)

கதை நடுவே பொருள் கூறப்பட்டிருந்தாலும் - கதை ஓட்டத்திற்காக - குறிப்பிடாமல் விடப்பட்ட தோஹா இதோ:

कामी लज्जा न करै, मन मांहीं अहलाद ।
नींद न मांगै साथरा, भूख न मांगै स्वाद ॥


காமி லஜ்ஜா ந கரை, மன் மாஹி அஹ்லாத்
நீன்த் ந மாங்கை ஸாத்ரா, பூக் ன மாங்கை ஸ்வாத்


உலோலனுக் கில்லை இலச்சை, உள்ளுள் கிளர்ந்தது இச்சை
உறுதுயிலும் தேடுமோ மெத்தை, உறுபசிக் கெதுவும் பிச்சை


(உலோலன்=காமுகன் ; இலச்சை = லஜ்ஜை, வெட்கம் ; உறு = மிகுதியான )

Sunday, June 10, 2007

ஈயா மனிதரும் எட்டாப் பழமும்


திருமகள் ஒரு ஊர் சுற்றி. ஓரிடத்தில் நிற்பதை அறியாள். அதனால் உலகத்தாரும் அவள் பின்னே சுற்றுகின்றனர். இந்த ஊர் சுற்றிக்கு ஒரு சிலர் பாடம் கற்பிக்க நினைத்து ஒரு பெட்டியிலோ, பையிலோ, கிணற்றிலோ (இக்காலத்தில் வங்கியிலோ) அடைத்து வைத்து விடுகின்றனர். இதனால் பலருக்கு அவள் கண்ணில் படாமல் கையில் கிடைக்காமல் இருந்து விடுகிறாள். ஆனாலும் பூட்டி வைப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிவதில்லை. அந்த உண்மையை நாலடியார் எடுத்துச் சொல்லுகிறது.

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்படும்।

(பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லை தானாவது அனுபவிக்க வேண்டும். இரண்டுமில்லாத கருமித்தனம் உடையவன் செல்வம் , வீட்டுக்குள் அழகிய கன்னிப் பெண்களை எவ்வளவு நாள் வைத்து பாதுகாத்தாலும் அவர்கள் மணமாகி கணவன் வீடு போய் விடுவது போலாகும்.)

'துய்த்தல்' அல்லது அனுபவிப்பது என்பது திருமகள் கைமாறிக் கொண்டே இருப்பதற்கான ஒரு வழி। அவளுடைய ஓட்டத்திற்கு துணை போவது. நாம் துய்க்காமல் விட்டாலும் கூட அவள் போய்விடுவாள். இதை யாவரும் அறிவது அவசியம். அனுபவிக்காமல் அவளை இழப்பதை விட அனுபவித்து அவளை வழி அனுப்புவது மேலானது அன்றோ!

பிறருக்கு கொடுத்து உதவாதவர் பற்றி கபீரின் வார்த்தைகளில் பார்ப்போம்। இது வடநாட்டில் மிகப் பிரபலமான தோஹாக்களில் ஒன்று.

बढा हुआ तो क्या हुआ जैसे पेड खजूर
पंथी को छाया नहीं फल लागे अति दूर

படா ஹுவா தோ க்யா ஹுவா, ஜைஸே பேட் கஜுர்
பந்தி கோ சாயா நஹீம், பல் லாகே அதி தூர்
ஓங்கி உயர்ந்து விட்டால் என்னே ஈச்சந் தருபோலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைத் தருபழமே

ஈச்சமரம் உயரமாக வளர்ந்து நிற்கும்। அதனடியில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கான நிழல் இருக்காது. போகட்டும் அதனுடைய பழத்தைப் பறித்துப் பசியாவது ஆறலாம் என்றால் அதுவும் எட்டாத உயரத்தில் அல்லவோ இருக்கிறது. இந்த மரத்தினால் யாருக்கு என்ன பயன் ? சமூகத்திலே செல்வத்தால் உயர்ந்து பிறர்க்கு உதவாதவர்கள் அத்தகைய ஈச்ச மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் கபீர். பட்டினத்து அடிகள் அத்தகைய மனிதர்களை ஏன் படைத்தாய் என்று இறைவனிடம் அங்கலாய்கிறார்.

நாயாய் பிறந்திடின் நல்வேட்டை
ஆடி நயம் புரியும்
தாயார் வயற்றில் நரராய்ப்
பிறந்துபின் சம்பன்னர் ஆய்க்
காயா மரமும் வறள் ஆம்
குளமும் கல் ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்
தாய்கச்சி ஏகம்பனே.

(கல் ஆவும் = கல்லால் ஆன பசு ; சம்பன்னர் = செல்வமெலாம் பெற்றவர்)

கல்லால் வடிவமைக்கப்பட்ட பசு எப்படி பால் தர இயலாதோ அது போல் எல்லா செல்வங்கள் இருந்தும் பிறருக்கு கொடுத்து உதவாதவர்கள் கல்நெஞ்சர்। ஒரு காய்க்காத மரத்தையும் வறண்ட குளத்தையும் போல இருந்தும் இல்லாதவர்கள் அவர்கள்। அத்தகையவரைக் காட்டிலும் ஒரு நாய் பிறவி கொடுப்பின் தன் எஜமானனுக்காக வேட்டையில் உதவி புரிந்து ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவாவது இருக்கும் என்று காஞ்சியின் ஏகம்பனிடம் முறையிடுகிறார் பட்டினத்தார். கபீரும் நாயை வைத்து பல தோஹாக்களை செய்துள்ளார். ஒன்று இங்கே.

நாய்களின் இனப்பெருக்க முறை, இயற்கை அமைத்திருக்கும் விதம், கண்டு கபீருக்கு ஒரு வேடிக்கையான உதாரணம் தோன்றுகிறது. அதை கருமிகளை கிண்டல் செய்யப் பயன் படுத்துகிறார்.

सूम थैली अरु श्वान भग दोनो एक समान ।
घालत में सुख ऊपजै, काढ़ निकसै प्रान ॥

ஸூம் தைலி அரு ஷ்வான் பக் தோனோ ஏக் ஸமான்
காலத் மேய்ன் ஸுக் ஊபஜை, காட் நிக்ஸை ப்ரான்

உலோபியின் சுருக்குத் தயிலி, ஒக்கும் சுனகன் யோனி
எக்குதலில் ஏகக் களிப்பு, எடுக்கையில் ஏனோ தவிப்பு

(தயிலி= பை, சுருக்குத்தயிலி =பணப்பை . சுனகன் = நாய். யோனி = கரு வாய். எக்குதல் =உள்வாங்குதல், உள்ளிடல்)

செல்வம் வருகையில் காட்டும் சந்தோஷம், கொடுக்க வேண்டும் என்னும் போது உயிரே போகுமளவு துன்பமாய் விடுகிறது என்பதை எத்தனை நகைச்சுவை உணர்வோடு சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரருகே இருந்து கேட்டவர்கள் சிரிப்பை கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும். நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் உவமை இது.