Sunday, June 10, 2007

ஈயா மனிதரும் எட்டாப் பழமும்


திருமகள் ஒரு ஊர் சுற்றி. ஓரிடத்தில் நிற்பதை அறியாள். அதனால் உலகத்தாரும் அவள் பின்னே சுற்றுகின்றனர். இந்த ஊர் சுற்றிக்கு ஒரு சிலர் பாடம் கற்பிக்க நினைத்து ஒரு பெட்டியிலோ, பையிலோ, கிணற்றிலோ (இக்காலத்தில் வங்கியிலோ) அடைத்து வைத்து விடுகின்றனர். இதனால் பலருக்கு அவள் கண்ணில் படாமல் கையில் கிடைக்காமல் இருந்து விடுகிறாள். ஆனாலும் பூட்டி வைப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிவதில்லை. அந்த உண்மையை நாலடியார் எடுத்துச் சொல்லுகிறது.

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்படும்।

(பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லை தானாவது அனுபவிக்க வேண்டும். இரண்டுமில்லாத கருமித்தனம் உடையவன் செல்வம் , வீட்டுக்குள் அழகிய கன்னிப் பெண்களை எவ்வளவு நாள் வைத்து பாதுகாத்தாலும் அவர்கள் மணமாகி கணவன் வீடு போய் விடுவது போலாகும்.)

'துய்த்தல்' அல்லது அனுபவிப்பது என்பது திருமகள் கைமாறிக் கொண்டே இருப்பதற்கான ஒரு வழி। அவளுடைய ஓட்டத்திற்கு துணை போவது. நாம் துய்க்காமல் விட்டாலும் கூட அவள் போய்விடுவாள். இதை யாவரும் அறிவது அவசியம். அனுபவிக்காமல் அவளை இழப்பதை விட அனுபவித்து அவளை வழி அனுப்புவது மேலானது அன்றோ!

பிறருக்கு கொடுத்து உதவாதவர் பற்றி கபீரின் வார்த்தைகளில் பார்ப்போம்। இது வடநாட்டில் மிகப் பிரபலமான தோஹாக்களில் ஒன்று.

बढा हुआ तो क्या हुआ जैसे पेड खजूर
पंथी को छाया नहीं फल लागे अति दूर

படா ஹுவா தோ க்யா ஹுவா, ஜைஸே பேட் கஜுர்
பந்தி கோ சாயா நஹீம், பல் லாகே அதி தூர்
ஓங்கி உயர்ந்து விட்டால் என்னே ஈச்சந் தருபோலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைத் தருபழமே

ஈச்சமரம் உயரமாக வளர்ந்து நிற்கும்। அதனடியில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கான நிழல் இருக்காது. போகட்டும் அதனுடைய பழத்தைப் பறித்துப் பசியாவது ஆறலாம் என்றால் அதுவும் எட்டாத உயரத்தில் அல்லவோ இருக்கிறது. இந்த மரத்தினால் யாருக்கு என்ன பயன் ? சமூகத்திலே செல்வத்தால் உயர்ந்து பிறர்க்கு உதவாதவர்கள் அத்தகைய ஈச்ச மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் கபீர். பட்டினத்து அடிகள் அத்தகைய மனிதர்களை ஏன் படைத்தாய் என்று இறைவனிடம் அங்கலாய்கிறார்.

நாயாய் பிறந்திடின் நல்வேட்டை
ஆடி நயம் புரியும்
தாயார் வயற்றில் நரராய்ப்
பிறந்துபின் சம்பன்னர் ஆய்க்
காயா மரமும் வறள் ஆம்
குளமும் கல் ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்
தாய்கச்சி ஏகம்பனே.

(கல் ஆவும் = கல்லால் ஆன பசு ; சம்பன்னர் = செல்வமெலாம் பெற்றவர்)

கல்லால் வடிவமைக்கப்பட்ட பசு எப்படி பால் தர இயலாதோ அது போல் எல்லா செல்வங்கள் இருந்தும் பிறருக்கு கொடுத்து உதவாதவர்கள் கல்நெஞ்சர்। ஒரு காய்க்காத மரத்தையும் வறண்ட குளத்தையும் போல இருந்தும் இல்லாதவர்கள் அவர்கள்। அத்தகையவரைக் காட்டிலும் ஒரு நாய் பிறவி கொடுப்பின் தன் எஜமானனுக்காக வேட்டையில் உதவி புரிந்து ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவாவது இருக்கும் என்று காஞ்சியின் ஏகம்பனிடம் முறையிடுகிறார் பட்டினத்தார். கபீரும் நாயை வைத்து பல தோஹாக்களை செய்துள்ளார். ஒன்று இங்கே.

நாய்களின் இனப்பெருக்க முறை, இயற்கை அமைத்திருக்கும் விதம், கண்டு கபீருக்கு ஒரு வேடிக்கையான உதாரணம் தோன்றுகிறது. அதை கருமிகளை கிண்டல் செய்யப் பயன் படுத்துகிறார்.

सूम थैली अरु श्वान भग दोनो एक समान ।
घालत में सुख ऊपजै, काढ़ निकसै प्रान ॥

ஸூம் தைலி அரு ஷ்வான் பக் தோனோ ஏக் ஸமான்
காலத் மேய்ன் ஸுக் ஊபஜை, காட் நிக்ஸை ப்ரான்

உலோபியின் சுருக்குத் தயிலி, ஒக்கும் சுனகன் யோனி
எக்குதலில் ஏகக் களிப்பு, எடுக்கையில் ஏனோ தவிப்பு

(தயிலி= பை, சுருக்குத்தயிலி =பணப்பை . சுனகன் = நாய். யோனி = கரு வாய். எக்குதல் =உள்வாங்குதல், உள்ளிடல்)

செல்வம் வருகையில் காட்டும் சந்தோஷம், கொடுக்க வேண்டும் என்னும் போது உயிரே போகுமளவு துன்பமாய் விடுகிறது என்பதை எத்தனை நகைச்சுவை உணர்வோடு சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரருகே இருந்து கேட்டவர்கள் சிரிப்பை கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும். நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் உவமை இது.

2 comments:

Anonymous said...

/////////////////////
அனுபவிக்காமல் செல்வத்தை இழப்பதை விட அனுபவித்து வழி அனுப்புவது மேலானது அன்றோ!
////////////////////////

ஈகை இல்லாவிட்டாலும் அனுபவிக்கும் போது அதன் பலன் பலரையும் சென்று அடைகிறது. உதாரணம் பட்டாசு வெடித்தல். பெரியவர்கள் காசு கரியாச்சு என்று முகம் சுளித்தாலும் எத்தனை பேருக்கு அது வேலை வாய்ப்பு தருகிறது; கண்டவர்க்கு எத்தனை மகிழ்சி தருகிறது என்பதை யோசிக்கும் போது "அனுபவித்து வழி அனுப்புதலும்" சரியே என்று படுகிறது

கபீரன்பன் said...

நன்றி அனானி (பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே!).பொருத்தமான உதாரணம். மீண்டும் வருக