Saturday, June 16, 2007

கபீரும் காமுகனும்; கபீருக்கு வந்த சோதனை

இயற்பகை நாயனார் என்று ஒரு சிவனடியார். பரமசிவன் ஒரு அந்தண வேடம் பூண்டு, அவரை அணுகி அவரது மனைவியையே யாசிக்கிறான்.முகம் சுளிக்காது அவருடன் கற்புக்கரசியான மனைவியை வழியனுப்பியதுமல்லாமல் தானே வழித்துணையாகவும் செல்கிறார்.
கொடுத்த வாக்கைக் கடைசி வரை காப்பாற்றுதலே ஒருவனின் தலையாய கடமை என்பதை போற்றிய காலம் அது. முழுக்கதையையும் வலைப்பூவிலே வாசிக்க இங்கே சொடுக்கவும் . இத்தகைய சோதனை கபீருக்கும் வருகிறது.

ஒருமுறை ஒரு பெரிய அடியார் குழாம் அன்றைய பிட்சைக்காக கபீர் வீட்டை அடைந்தது. கபீருக்கு இது ஒரு சோதனையானது. வீட்டில் பண்டங்கள் இருந்ததோ மிக மிகக் குறைவு. வெளியில் கடனோ தலைக்கு மேல். யாரை அண்டினாலும் அவமானம் தான் மிஞ்சும் என்ற நிலை. கபீரின் பரிதவிப்பைக் கண்ட அவரது மனைவி, லோயி, தயங்கித் தயங்கி ஒரு விஷயத்தை வெளியிடுகிறாள்.

"மூலைக் கடை சேட் டிற்கு என் மேல் ஒரு கண். பலமுறை பலவிதமாக சாடைமாடையாக பேசியிருக்கிறான். அவன் விருப்பத்திற்கு இணங்கினால் அவனால் இப்போதுள்ள பிரச்சனைத் தீரும்"

இதைக் கேட்ட கபீரின் கண்கள் கலங்கியது. லோயியின் தியாகம் அவரை வேதனையுறச் செய்தது.

பசித்தவன், உணவில் ருசி பற்றிய எண்ணத்தை விடுவான். களைத்துச் சோர்ந்தவன் தூங்குவதற்கு மெத்தை என்ற எண்ணத்தை விடுவான். அதுபோல் காமம் தலைக்கேறியவன் வெட்கம் என்ற குணத்தை விட்டுவிடுவான்.

விருந்தோம்பலை தலையாய கடமையாகக் கொண்ட கபீர் வேறு வழி தெரியாமல் சம்மதிக்கிறார். லோயி கடைக்கு சென்று அன்று இரவே சேட் டை சந்திப்பதாகச் சொல்லி தேவையான பொருட்களைப் பெற்று விருந்தினர்களின் பசியாற்றி வழியனுப்பி வைக்கிறாள்.

அந்தி நெருங்கியது. இருவரின் உள்ளத்திலும் எந்த சலனமும் இல்லை. கபீர் தமது ராம ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார். தாமரை இலை நீர் போல் உலகில் ஒட்டாமல் வாழ்க்கை நடத்திய தம்பதிகள் அவர்கள். அந்நேரம் பெரிதாக மழை வேறு பிடித்துக்கொண்டது. அங்கே சேட் டிற்கு பதைபதைப்பு ஆரம்பமாகி விட்டது. தான் ஏமாற்றப் பட்டு விட்டோமோ என்ற கவலை மனதை அரிக்கத் தொடங்கியது. ஆனால் குறித்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. சொல்லியபடி லோயி அங்கே நின்றிருந்தாள்.

உற்சாகமாக அவளை வரவேற்று பலவிதமான அழகு பொருட்களையும் அணிகலன்களையும் வாசனைத் திரவியங்களையும் கொடுத்து அழகு படுத்திக்கொள்ள ஒரு அறைக்குள் அனுப்பி வைக்கிறான் சேட்டு. வெளியே நிலைக்கொள்ளாமல் மேலும் கீழுமாக அவன் உலாத்திக் கொண்டிருந்த பொழுது மீண்டும் ஒரு முறை கதவு தட்டப்பட்டது.

இப்போது அங்கே நின்றிருந்தது ஊர் காவல் அதிகாரி. "நீ ஏதோ பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கிறாயாமே ! உன் வீட்டை சோதனையிட வேண்டும்" என்று வீம்பாக உள் நுழைந்து தேடத் துவங்கினான். கடைசியாக சாத்தியிருந்த அறை முன்னே நின்று அதைத் திறக்கச் சொன்னான். சேட் டுக்கு கைகால்கள் வெட வெடக்கத் தொடங்கியது.

உள்ளே கபீரின் மனைவியைக் கண்டதும் " இவள் கபீர்தாஸின் மனைவியாயிற்றே. அவர்களது வறுமையைப் பயன் படுத்திக்கொள்ள உனக்கு வெட்கமாயில்லை" என்று அவனை திட்டி அவளை பத்திரமாக அவர்கள் வசித்த தெரு வரைக்கும் துணை சென்று வீடு சேர்த்தான்.

நடந்ததை அறிந்த கபீருக்கு உள்ளம் பதைத்தது. கொடுத்த வாக்கை தவறிவிட்டோம் என்ற அவப்பெயர் வந்துவிடுமே என்று சேட் டின் வீட்டை அடைந்து அவனிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அவனையும் அழைத்துக்கொண்டு காவல் அதிகாரி வீட்டை அடைந்து கதவை கோபத்துடன் தட்டினார்.

அரைகுறைத் தூக்கத்தோடு கதவைத் திறந்த காவல் அதிகாரிக்கு கபீரின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. தம்மிருவரில் ஏற்பட்டிருந்த ஒப்பந்தப்படி தன் மனைவியை தானே சேட் டின் வீட்டிற்கு அனுப்பியிருக்கையில் இதில் அந்த அதிகாரி தலையிட அவசியமென்ன என்பதே கபீரின் வாதம். ஆனால் அந்த அதிகாரியோ கபீர் பேசுவது எதுவுமே தனக்கு புரியவில்லை என்று சாதித்தான். ஒரு நிலையில் சண்டையாக மாறி கைகலப்புக்கு முற்றியது.

கபீரின் செவிகளிலே திடீரென்று ஒரு அசரீரி ஒலித்தது.
"என்னை இன்னுமா தெரியவில்லை கபீர் ?"
மின்னல் போல கபீருக்கு எல்லாம் புரிந்து விட்டது.
காட்டுவழியிலே தியாகராஜருக்கு காவல் செய்த அதே ராமன் அதற்கும் முன்பே கபீருக்கும் காவல் புரிந்துள்ளான். அந்த ஆதர்ச தம்பதியரின் கௌரவம் காக்க அவன் காவல் அதிகாரி உருவில் போட்ட நாடகம் இது. உண்மையான காவல் அதிகாரிக்கு நடந்தது எதுவும் தெரியாது.

அவர்களின் மனத்தூய்மையை கண்டு அவமானமுற்ற சேட் தன் கீழ்மைக்காக அத்தம்பதிகளின் கால்களில் பணிந்து மன்னிப்பு வேண்டினான்.
காமம் என்ற பொல்லாத வழுக்குப் பாதை மனித வர்க்கத்தை கீழே தள்ளுவது போல் வேறொன்றை இணையாக சொல்லமுடியாது. அதற்கு காரணம் புலன்களை சர்வ ஜாக்கிரதையாக கையாளாமல் விடுவதே ஆகும். இதை கபீர் இப்படி குறிப்பிடுகிறார்.

कामी तो निरभय भया, करै न काहूं संक ।
इन्द्री केरे बसी पडा़ भुगते नरक निसंक ॥


காமி தோ நிர்பய் பயா, கரை ந காஹூ சன்க்
இன்த்ரீ கரே பஸீ படா, புக்தே நரக் நிஸன்க்


நிர்பயமானான் காமியுமே, விட்டான் நல்வினை யாவையுமே
நரகக்குழியில் வீழலுமே, புலன்கள் போட்டன நாடகமே

(நிர்பயம் =பயம் இல்லாமல் போவது)

கதை நடுவே பொருள் கூறப்பட்டிருந்தாலும் - கதை ஓட்டத்திற்காக - குறிப்பிடாமல் விடப்பட்ட தோஹா இதோ:

कामी लज्जा न करै, मन मांहीं अहलाद ।
नींद न मांगै साथरा, भूख न मांगै स्वाद ॥


காமி லஜ்ஜா ந கரை, மன் மாஹி அஹ்லாத்
நீன்த் ந மாங்கை ஸாத்ரா, பூக் ன மாங்கை ஸ்வாத்


உலோலனுக் கில்லை இலச்சை, உள்ளுள் கிளர்ந்தது இச்சை
உறுதுயிலும் தேடுமோ மெத்தை, உறுபசிக் கெதுவும் பிச்சை


(உலோலன்=காமுகன் ; இலச்சை = லஜ்ஜை, வெட்கம் ; உறு = மிகுதியான )

6 comments:

  1. ந்ன்றி கபீரன்பா. அருமையான கதையும் கபீரின் வரிகளும்

    ReplyDelete
  2. கதை தொடங்கும் போது இராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒட்டி இருப்பது போல் தோன்றியது. ஆனால் இறுதியில் இறைவனே வந்தது இங்கே வேறுபாடு. அவன் அடியார்கள் புகழைச் சொல்லி முடியாது. மிக்க நன்றி கபீரன்பரே.

    ReplyDelete
  3. நன்றி தி.ரா.ச, நன்றி குமரன். "அலகிலா விளையாட்டுடையான்" வைக்கும் பரீட்சையில் தேறினோர் புகழ் அவன் புகழையும் மிஞ்சுவதாகிறது

    ReplyDelete
  4. எட்டு சாதனைகள் பதிவு போட கூப்பிட்டுருகேன். எட்டு போடுங்க.

    ReplyDelete
  5. மதுரைக்கு சோதனை வந்தால் ஒரு சொக்கன் உண்டு. கபீருக்கு சோதனை வந்தால் இராமன் உண்டு. இந்த அன்பனுக்கு சோதனை வரும்போது யாருண்டு? எட்டு சாதனைக்கு எங்கு போவேன்? எட்டி நின்று ரசிக்கும் சகோதரியே உருப்படியாக ஏதேனும் தோன்றினால் கண்டிப்பாகப் போடுவேன்

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்,
    தான் செய்து நடப்பன போல் காண்பேன்
    செய்விப்பான் அவன் யாரோ
    என்ற கபீரின் கனிமொழியை தாங்கள் எந்தளவு உணர்ந்து கொண்டுள்ளீர் என்பதை காண்கிறோம் தங்கள் படைப்புகளில். இச்சேவை தொடர எல்லாம் வல்லானை பிரார்த்தனை செய்கிறோம்.எழுத்தும் கருத்தும் திருப்தியாக உள்ளது ஐயா.. நன்றி 🙏

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி