Sunday, August 12, 2007

மேலோர் என்றும் சம நோக்கினரே

கபீர்தாஸருக்கு, அவர் காலத்தில், இருந்த பக்தர்களைக் காட்டிலும் எதிரிகளே அதிகம். எல்லா சீர்திருத்தவாதிகளும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை இதுவானாலும் இரு மதத்தை சேர்ந்தவரும் இந்த எதிர்ப்பைத் தனித்தனியாகக் காட்டினர். கபீருடைய குற்றமெல்லாம், அவர் உள்ளதை உள்ளபடி கூறியதே. வரலாற்றில் இது சாதாரணமாகக் காணப்படுவதுதான்.

ஒருவரை அவரது காலத்திற்கு பிறகு மகானாக ஏற்றுக் கொள்ளும் மனித சமுதாயம் அவர்கள் தம்மிடையே வாழும் காலத்தில் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. தமக்குள்ள முக்கியத்துவத்திற்கு இம்மகான்கள் கூறும் உண்மைகள் ஊறு உண்டு பண்ணும் என்ற பய உணர்ச்சியே சிலரை அத்தகைய செயல்களில் தூண்டுகிறது. அப்படியானால் இந்த ஏற்பு பின்னர் எப்படி ஏற்படுகிறது?

இறந்து போன ஒருவர் யாருக்கும் எதிரியாவதில்லை. எனவே காலப்போக்கில் அவர்கள் விட்டுச் சென்ற நல்ல விஷயங்கள் எவ்வித பூச்சுமின்றி நினைவில் நிற்கின்றன. பேசப்படுகின்றன. பொய் எதிர்ப்புகளும் பொறாமை பிரசாரங்களும் வலுவிழந்து மடிந்து போகின்றன. புத்தர் ஏசுவின் காலத்திலிருந்து வள்ளலார், ஷிரடி ஸாயி வரையிலும் காலம் கண்ட உண்மை இது.

சமுதாயத்தின் கோணத்திலிருந்து உண்மை இதுவானால், அம்மகான்கள் சமுதாயத்தை எப்படிக் காண்கிறார்கள் ?

கபீரே விடை சொல்கிறார்.

कोई आवै भाव लै, कोई अभाव ले आव ।
साधु दोऊ को पोषते, भाव न गिनै अभाव ॥

கோயி ஆவை பாவ் லை, கோயி அபாவ் லே ஆவ்
ஸாது தோவூ கோ போஷ்தே, பாவ் ந கினை அபாவ்

அண்டுவர் சிலர் உள்ளன்போடு, அஃதிலார் சிலரும் அண்டுவரே
கண்டிலர் அவருள் வேற்றுமை மேலோரென் றும்சம நோக்கினரே


உள்ளன்பு இல்லாத ஒருவன் நம்மை அணுகும் பொழுது சில சுயநல நோக்கம் இருக்கும் என்பதை யாவரும் அறிவோம். ஆனால் ஏதுமில்லா துறவியை அணுகினான் என்றால் அது அவருக்கு மாசு கற்பிக்கும் நோக்கமே பெரும்பாலும் கொண்டிருக்கும்.

புத்தருடைய வாழ்வில் ஒரு நிகழ்வு. புத்தரின் அமைதியான குணத்தை உடைத்து அவரது இன்னொரு முகத்தை காண்பிப்பதாக ஒருவன் சூளுரைத்து அவர் பிட்சைக்கு போகும் வழியில் நிற்கிறான் ஒருவன். புத்தரும் அமைதியாக வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, துறவி என்ற பெயரில் ஊரில் உள்ளவர்களை கூட்டி தனக்கு ஒரு சீடர் குழாமை உருவாக்கி மேலும் பல சோம்பேறிகளை உருவாக்குபவன் என்றெல்லாம் ஏசுகிறான். எல்லாவற்றையும் அமைதியாக நின்று கேட்டுக் கொள்கிறார். பதிலேதும் கூறவில்லை. ஆனால் அவனை விட்டு விலகிச் செல்லவும் இல்லை. ஏசத் தொடங்கியவன் மேலும் பல அபாண்டமான குற்றங்களை அடுக்கிக் கொண்டே போனான். புத்தரின் நிலயில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. சுற்றிலும் கூட்டம் சேரத்தொடங்கியது. ஒரு நிலையில் ஏசியவனுக்கு கோபம் அதிகமாகியது. "இவ்வளவு திட்டியும் உனக்கு சற்றும் உரைக்கவில்லையா ?" என்று கேட்கிறான். பேச வேண்டிய தருணத்தைப் புரிந்து கொண்டார் புத்தர்.

"அன்பரே ஒருவர் உமக்கு கொடுக்கும் பொருள் உமக்கு தேவையில்லை என்றால் அது யாருக்குச் சொந்தம் ?" என்று வினவினார்.

" ஏன் அது அவனுக்குத்தான் சொந்தம் " என்று பதிலளித்தான் ஒன்றும் புரியாதவனாக.

"இப்பொழுது நீர் சொன்ன எதையும் எனக்கென நான் கருதவில்லை. ஆகையால் எனக்கு பதில் கூற அவசியமுமில்லை" என்று சொல்லி விட்டு சென்றார்.

சூளுரைத்தவன் செய்வதறியாது நின்றான். ஞானியர்கள் சமநோக்கினராக இருக்க எப்படி இயல்கிறது எனில் அவர்களது அளப்பற்ற கருணையேயாகும்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)

(கண்ணோடி = இரக்கம் கொள்ளுதல்)

தண்டிக்கப் படவேண்டிய குற்ற இயல்புகள் உள்ளவரிடத்தும் கருணை உள்ளங்கொண்டு இரக்கத்துடன் பொறுத்துக் கொள்ளும் பண்பே தலைசிறந்தது என்று உரைப்பார் திருவள்ளுவரும்.

சமநோக்குடைய சான்றோர் எவரிடமும் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாது, பகைமையும் இல்லாது வாழ்நாட்களை கழிப்பர்

இதையே ஏற்கனவே பதிக்கப்பட்ட ஒரு தோஹாவில் கபீர் சொல்கிறார்.

சந்தையில் நிற்பான் கபீரன் சந்ததம் வாழ்த்தி இவ்வையம்
சந்ததம் வேண்டிலன் நட்பு, சந்ததம் விலக்குவான் வயிரம் .