Wednesday, September 26, 2007

இருளில்லா ஒரு புவி

கவிஞர்கள் தாம் படித்த பல விஷயங்களை பல விதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். கண்ணதாசன் அவர்கள், ஷேக்ஸ்பியரின் வரிகள் தந்த உந்துதலால் தோன்றிய பாடல் தான் "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே .." என்று ஒரு தேன்கிண்ணம் நிகழ்சியில் சொன்னதாக நினைவு. 

 இன்னொரு பழைய திரைப்படப் பாடல். எங்க பாப்பா படத்தில் சுசீலா அவர்களின் இனிய குரலில் மனதில் தங்கிய இசை.

ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
ஒரு அன்னை தந்தது
ஒன்று காவல் கொண்டது
ஒன்று கண் வளர்ந்தது ...

கண் வளர்தல் என்பது துயிலுதலை குறிப்பதாகும். ஒரு பறவை துயிலும்போது மற்றொன்று காவல் புரிகிறது ! ஜீவாத்மா இறையுணர்வு இல்லாத போதும் அதைக் காப்பது எப்போதும் விழித்திருக்கும் பரமாத்மா என்னும் பறவை. திரைப்படத்தில் இந்த வகையில் பொருள் படுத்தாவிட்டாலும் இந்த பதிவுக்கு பொருத்தமான வரிகள் இவை. மேற்கண்ட உதாரணம் முண்டக உபநிஷத்தில் வருகிறது. அதைப் பின்னர் பார்ப்போம்.

கபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.

साई पडे दिन बीतबै, चक्वी दीन्ही रोय ।
चल चक्वा वा देश को, जहाँ रैन न होय ॥

ஸாயி படே தின் பீத்பை சக்வி தீன்ஹி ரோய்
சல் சக்வா வா தேஷ் கோ, ரைன் ந ஹோய்

இறையே! இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி
பொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி

(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)


சக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாபவிமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது? ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக்கொள்கிறது சக்வி.

கபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.


விநாயகர் அகவலில் ஒளவையாரும் அதையே தான் வேண்டுகிறார்.   

" வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தன்னில் 
  தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து 
 இருள் வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன 
அருள் தரும் ஆனந்தத்தை அழுத்தி என் செவியில் 
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே  அருள் வழி காட்டி  
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவினுக்கணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி .....

அந்த பரஞானம் சித்தித்த பின்னர் அங்கே பேச்சில்லை மனமும் இல்லை.
பகலில்லை  இருளில்லை . ஓங்காரத்தின் சத்தம் தரும் ஆனந்தம் எல்லா அல்லலையும்  போக்கவல்லது. அதுவே சிவம். அணுவைக்காட்டிலும் நுட்பமானது அது என்றெல்லாம்  அவன் அருள் தரும் ஞானத்தை   போற்றுகிறார்.

    உலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ்ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப்பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாதபோது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.

ஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.

அதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.

இந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்

.............தமியனேற்கு அருள் தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு......
.....................................................யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்
என்சிந்தைக்கும் வெகுதூரம், நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி
எங்குநிறை கின்ற பொருளே (6)

________________________________________

இந்த பதிவுடன் இவ்வலைப்பூ தனது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மிகப்பொறுமையுடன் வாசித்து வரும் அன்பர்கள் யாவர்க்கும் கபீரின் அருள் மழைப் பொழியட்டும். அவனிச்சை இருக்கும் வரையில் இது தொடரும். மேலும் மாற்றங்கள் விரும்பினால் தனி அஞ்சலிலோ பின்னூட்தத்திலோ தயவுசெய்து தெரிவிக்கவும்.

Thursday, September 20, 2007

பாரதியும் கபீரும் -பாகம்-2

போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவிலும் கபீர் மற்றும் பாரதியின் கருத்தொற்றுமைகளை சிலவற்றைப் பார்ப்போம்.

துறந்தார் பெருமை பற்றி சொல்லுகையில் கபீர் இப்படிச் சொல்லுகிறார்.

अब कोई चाहत नहीं, तो चिन्ता नहीं ।
चिन्ता नही तो मन पर कोई भार नहीं ॥

அப் கோயி சாஹத் நஹீ, தோ சிந்தா நஹீ
சிந்தா நஹீ தோ, மன் பர் கோயீ பார் நஹீ

வேட்கைக ளில்லை இனிமேல், அதனால் கவலையும் இல்லை
கவலைகள் போனபின் மனதில், அழுத்தும் சுமைகளும் இல்லை

வியாதிகள் பலவுக்கும் காரணம் மன அழுத்தம் அல்லது கவலைகளின் பெருஞ்சுமை. எதையாவது சாதிக்க அல்லது சம்பாதிக்க வாழ்க்கையில் ஓய்விலா ஓட்டம். சில கூடிவரும். பல கூடாமல் போகும். கூடாதவற்றை நினைத்து காலம் முழுதும் மனம் அழுது புலம்பும். மனித வர்க்கத்துக்கே உரித்தான இம்மாயையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பலரும் பல காலமாக சொல்லி வருகின்றனர். பாரதியாரும் குள்ளச்சாமி புகழில் தாம் பெற்ற உபதேசத்தை இப்படி உரைக்கிறார்.

மற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.

"தம்பிரானே; இந்த தகைமை என்னே ?
முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ
மூட்டை சுமந்திடுவதென்னே ? மொழிவாய் " என்றேன்

புன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:
"புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே
இன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்.
...............................
எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா !
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் ;

கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள் என்பதை எவ்வளவு ஆணித்தரமாக பாரதியார் உணர்த்துகிறார்.

Less Luggage More Comfort. ஆசைகளை விட்டு விட்டால் சுமைகள் குறைந்து விடும். அப்படி ஆசையைக் கடந்தவர்கள் நிலை என்ன ? அவர்களை ஷாஹ்-இன்-ஷாஹ் என்கிறார் கபீர்.

चाह गयी चिन्ता मिटी, मनवा वेपरवाह ।
जिन को कुछ ना चाहिये वो ही शहन्शाह ॥

சாஹ் கயீ, சிந்தா மிடீ, மனுவா வேபர்வாஹ்
ஜின் கோ குச் நா சாஹியே வோ ஹீ ஷாஹ்-ன்-ஷாஹ்

இச்சையும் போச்சு, கவலையும் போச்சு, லேசாச்சு மனமே
எச்சுமையும் இல்லாதவனே, பூவில் கோலோச்சும் கோனே

(பூவில் = பூமியில்; கோன்= சக்ரவர்த்தி)

ஷாஹ்-இன்-ஷாஹ் என்பது அரசர்களுக்கு அரசன் என்று பொருள் படும். எல்லாவித ஆசைகளையும் துறந்தவன் யாரிடமும் அடிமைத்தனம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவனை விட சுதந்திரமானவன் கிடையாது. ஆனால் அரசர்களின் அரசனுக்கு அடிமைத்தனம் இல்லாவிட்டாலும் அரசாட்சியின் பொறுப்புகளோடு அவனுக்கு வரும் கவலைகளுக்கு முடிவு கிடையாது. ஆகையால் கவலையற்ற துறவி அரசனை விட மேம்பட்டவனாகிறான். இதே கருத்தை பாரதியின் வரிகளிலே காண்போம். அவரும் இரண்டே வரிகளில் இந்த கருத்தை அடக்கி விடுகிறார்.

ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)

’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன? தவமா ! பாரதி ஏளனம் செய்கிறார்.

சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)

தவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)

இறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்.

पोथी पढ़- पढ़ जग मुआ, पंडित भया न कोय ।
ढ़ाई आखर प्रेम का, पढै़ सो पंडि़त होय ॥

போதி பட்-பட் ஜக் முவ்வா, பண்டித் பயா ந கோய்
டாய் ஆகர் ப்ரேம் கா, படை ஸொ பண்டித் ஹோய்

(ஆகர்=அக்ஷர் அல்லது அட்சரம் என்பதன் திரிபு)

அளப்பிலா நூல்பலக் கற்றே, ஆன பண்டிதர் இலையே
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே

ஹிந்தியில் டாய் (4ஆவது ட). -என்றால் இரண்டரை. ப்ரேம் என்ற வார்த்தைக்கு தேவையான எழுத்துக்கள் அல்லது மாத்திரை காலங்கள் இரண்டரையாகும். எவனொருவன் இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் அறிந்தவனாகிறானோ அவனே உண்மையில் எல்லாமறிந்த பண்டிதன். இரண்டரை எழுத்துகளுக்குள் அடங்கிய இந்த ரகசியத்தை விட்டு மலை மலையாய் சாத்திரங்களை கரைத்துக் குடித்தும் உண்மையறியாமல் இவ்வுலக மக்கள் மடிகின்றனரே (ஜக் முவ்வா) என்று கபீர் வருந்துகிறார்.

அன்பே உலகின் இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சுருதி. சங்கீத கலைஞனுக்கு தம்புராவில் சுருதி கூட்டியதுமே எப்படி மனம் அதிலேயே லயித்து விடுமோ அது போல ஞானிகளின் இறையுணர்வு, அன்பிலேயே கரைந்து நிற்பதாகும். இராமகிருஷ்ணர் இதை பாவசமாதி என்பார். அந்நிலையில் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது. எல்லாம் சக்தி மயம்.

செய்க தவம் ! செய்க தவம் ! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்- வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு (விநாயகர் நான்மணி மாலை)

Sunday, September 09, 2007

பாரதி எதிரொலிக்கும் கபீர்

மகாகவி பாரதியார் சிலஆண்டுகள் காசி மகாநகரத்திலேயே வாழ்ந்து வடமொழியிலும் ஹிந்தியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பினும் கபீர்தாஸ் பற்றிய குறிப்பு அவருடைய எழுத்துகளில் எங்கும் காணப்படவில்லை. இது என் தேடுதலில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம். யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும்.

சில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.

வேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு.

இவ்விருவரின் கவிதை வரிகளுக்கிடையே கண்ட ஒருமித்த சில கருத்துகளைப் பார்ப்போம். காலத்தால் ஐநூறு வருடங்கள் இடைவெளி இருப்பினும் அழியாத உண்மைகள் அவரவர்களுக்குரிய தனித்தன்மையோடு வருகிறது.

गोता मारा सिंधु में, मॊती लाये पैठि ।
वह क्या मोती पायेंगे, रहे किनारे पैठि ॥

கோதா மாரா சிந்து மே, மோதி லாயே பைடி
வஹ் க்யா மோதி பாயேங்கே, ரஹே கினாரே பைடி
(சிந்து = கடல், மோதி =முத்து)

ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து
(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயத்தல்)

கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.

கபீர் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைக்கவில்லை ஆனால் சிந்திக்கும் வகையில் கருத்தை முன் வைக்கிறார். ஆனால்கரையோரம் அமர்ந்து கதைப்பேசும் மக்களை பார்க்கையில் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது பாரதிக்கு. இந்திய சுதந்திரப்போரில் பயந்தாங்கொள்ளிகளின் நிலைக்கண்டு பொறுமுகிறார். சுதந்திரம் என்னும் ஒரு உயர் லட்சியத்திற்காக செயல்படாமல் உதட்டளவிலே அனுதாபம் காட்டித் திரிவோரை வேறெப்படி கடிந்துகொள்ள இயலும்.

கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி- கிளியே
நாளில் மறப்பாரடீ (நடிப்பு சுதேசிகள்)

கேட்போரையும் படிப்போரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும் வாசகங்கள்.

நிலயாமைப் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா !

हाथों परबत फाड़ते, समुन्दर घूट भराय ।
ते मुनिवर धरती गले, का कोई गरब कराय ॥

கையால் மலையும் பெயர்ந்தது, குடிகையுள் கடலும் அடைந்தது
வையங் காணா சாதனை, யிவர்கர்வமும் அடங்கும் மண்ணிடை

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥

மரித்தான் உரோகியும், வைத்யனும் மரித்தான், மரிப்பரே யாவரும்
மரியான் என்றும் கபீரனும் இராமநாமத் துணைக்கொண்ட பின்னே

மாற்று; (பிற்சேர்க்கை -09/02/08)

பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரு மொருநாள்
தனையாள் இராமன் மந்திரம் சொல்லும், கபீரனுக் கில்லை இறுநாள்

(பிணியாள்= நோயுற்றவன்; தீர்த்தவன்= நோய்த் தீர்த்தவன், மருத்துவன்;
தனையாள்= தன்னை ஆளும்; இறு நாள்=முடிவுநாள்)


நிலையற்ற இவ்வுலகில் வியாதியுள்ளவரும் அவர்களைக் காப்பாற்ற முயலும் வைத்யனும் இறந்து போகின்றனர். அனைத்து உயிர்களுமே ஒருநாள் மறைய வேண்டியனதான். இதிலிருந்து விதிவிலக்கே கிடையாது. கைலாய மலையை கையால் தூக்கிய ராவணனோ அல்லது தன் கமண்டலத்துள் கடலையே அடக்கிய அகஸ்திய முனிவரோ இந்த முடிவிலிருந்து தப்ப இயலவில்லை. எனவே எத்தகைய கர்வம் ஆயினும் அதுவும் ஒரு நாள் மண்ணிலே முடிந்து போகும்.

ஆனால் அமரத்துவம் என்பது இறைவனின் நாமத்தை மீண்டும் மீண்டும் செபிக்கும் போது சித்த சுத்தி ஏற்பட்டு அதன் மூலம் அடையப் படுகிறது. அந்நிலையில் தூல உடலின் உணர்வு போய் பேருணர்வு ஒன்றுதான் எஞ்சியிருக்குமாம். கபீர் தமக்கு இராமநாமத் துணை யிருப்பதால் தனக்கு மரணமே இல்லை என்று அறிவிக்கிறார். இதே கருத்து பாரதியின் எழுத்தில் எப்படி வெளிப்படுகிறது பார்ப்போமா ?

முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார்
.............
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்;
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமனுஜனும் போனான்.
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்.

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான்
மடிந்தாலும் பொய் கூறேன். மானுடர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்
( சொற்களிலே என்ன ஒரு அழுத்தம், தன்னம்பிக்கை)
நாணத்தை, கவலையினத்தை, சினத்தை, பொய்யை
அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்.
மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை.


இவ்வுலகில் இறக்காதவர்கள் யார்? இராமன், கண்ணன் புத்தன் ஏசுவிலிருந்து ராமானுஜன் வரை பட்டியல் போட்டுக்காட்டுகிறார். ஆனால் தனக்கு மட்டும் மரணமில்லை என்றுரைக்கிறார்.

நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. கபீர் நேரடியாக செய்ய வேண்டிய காரியத்தை சொல்லி விட்டார். ஆனால் பாரதி செய்வதற்கான காரணங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார்.

மனித குலத்திற்கு பல்வேறு வழிகளிலும் நோய்க்கான காரணங்களையும், தீர்வுக்கான மருந்துகளையும் இம்மகான்கள் போலவே பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். நமக்குத்தேவை அவர்களின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கை.

இதை எழுத ஆரம்பித்த நோக்கம் செப்டம்பர் 11, பாரதியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியாக ஒரு பதிவு இருக்கட்டுமே என்பதுதான். மேலும் பல ஒற்றுமைகளை அவ்வப்போது காண்போம்.

Saturday, September 01, 2007

தண்மையில் பெருகும் கங்கை

இனிய பேச்சினால் உலகையே வெல்லலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமாக கைக்கூடுவதில்லை. எல்லா சந்தர்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது. குறைந்த பட்சம் கடுஞ்சொற்களை தவிர்க்க முயலவேண்டும். ஏனெனில் நல்ல பெயரை சம்பாதித்துக்கொள்வதற்கு பல காலம் பிடிக்கும். ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்ளும்.

பலர் தம்மிடம் உள்ள எரிச்சல் மனப்பான்மையை நினைத்தே எரிச்சல் அடைவர். உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாதபோது வெளிவரும் வார்த்தைகளும் கட்டுக்குள் இருப்பதில்லை. பின்னர் அதை எண்ணி வருத்தப்படுவர்.

இந்த பலவீனத்தை எதிர்கொள்வது எப்படி?

எல்லோரையும் நேசி.

சுலபமான வழி ஆனால் மிகக் கடினமான பயிற்சி; போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுதல் போல.

பச்சை விளக்கைக் காண்பதற்கும் முன்பே புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல் சீறிப் பாயும் வாகனங்கள். அவற்றின் இடையே வளைந்து நெளிந்து நுழையும்- பலரது பொறுமையையும் சோதிக்கும்- இருசக்கர முச்சக்கர வாகனங்கள். ஒரு சிறு தவறு,எங்கே யாரால் என்று தெரியவில்லை, நடந்து விடுகிறது. பின்னால் ஒரு பெரிய இடிச்சத்தம். நமது வண்டி ஒரு குலுக்கு குலுங்கி முன்னால் தள்ளப்படுகிறது. மிகுந்த அதிர்ச்சியுடன் கீழே இறங்கி பின்னாலிருந்து இடித்த ஓட்டுனரிடம் வாக்குவாதம் துவங்குகிறோம். அவன் சொல்லும் காரணங்கள் மேலும் கோபத்தைக் கிளறுகிறது. அதே சமயம் அவ்வண்டியின் பின்னிருக்கையில் இருந்து ஒருவன் இறங்கி ’டேய் சொங்கி’ என்று உரிமையுடன் கூவுகிறான். கோபம் அவன்பால் வெடிப்பதற்கு பதிலாக அந்த நொடியிலே ஒரு அன்யோன்யம் வந்துவிடுகிறது. ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த பெயரை, பால்ய சிநேகிதன் அடையாளம் காட்டிய உடனேயே சந்தோஷத்தில் ஈகோ, கோபமெல்லாம் மாயம். பழைய அன்பிற்கு அவ்வளவு சக்தி. ’சரி, காப்பீட்டில் வண்டியை சரி பார்த்துக்கொள்ளலாம்’ என்று சுலபமாக சமாதானமாகி விஷயத்தைப் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறோம்.

வாழ்க்கைப் பாதையிலும் நிலைமை இதேதான். முன்னேறத் துடிக்கும் ஒரு சிலருடைய வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அல்லது வேறு சிலருக்கு நமது வேகம் ஒரு பிரச்சனை. வீட்டிலும் வெளியிலும் உரசல்களும் வாக்வாதங்களும் அன்றாட வாடிக்கை ஆகிவிடுகின்றன. அந்த நேரங்களில் நாம் ஒரு’சொங்கி’ யாக, அன்யோன்யத்தை அடையாளம் காட்டுபவராக இருந்தால் எவ்வளவு இனிமையாகி விடும் நம் உறவுகள். அதை வளர்த்துக் கொள்ளவே இனிமையான சொற்களை பயன்படுத்த பெரியவர் யாவரும் சொல்லி வைத்துள்ளனர். வாக்கிலே இனிமை கொண்டவர்களை உலகில் யாவருமே தம்மவராக பாவிப்பர். கபீர் தரும் உதாரணம் இதோ;

कागा काको धन हरै, कोयल काको देत ।
मीठा शब्द सुनाय के, जग अपनो करि लेत ॥


காகா காகோ தன் ஹரை, கோயல் காகோ தேத்
மீடா ஷப்த் ஸுனாய் கே, ஜக் அப்னோ கரி லேத்
.

காகம் கவர்ந்த நிதியமேது, இவர்க்கு தந்துதவிய குயிலுமேது
மோகம் கொள்வர் உலகோரும், குரலில் குயிலுக் கிணையேது

(அப்னோ கரி லேத் என்பது ’தம்முடையதாக பாவிப்பது’. அதாவது தங்கள் குரல் வளத்தை குயிலுக்கு இணையாக்கி பெருமை கொள்வர் என்று புரிந்து கொள்ளலாம்)

எவருடைய செல்வத்தையும் எந்த காக்கையும் தூக்கிக் கொண்டு போகவில்லை. எந்த குயிலும் வந்து ’இந்தா நீ வைத்துக்கொள் ’ என்று எவ்வித பணமுடிப்பும் உலகத்தவர்க்கு கொடுக்கவில்லை. ஆயினும் உலகத்தவர் குயிலையே போற்றுதலுக்கான ஒரு பொருளாக கொண்டுள்ளனர். அதற்கு காரணம் அதன் குரலினிமைதான். மனதை வருத்தாத அதன் இனிமை ’...அங்கு கத்தும் குயிலோசை -சற்றே வந்து காதிற் படவேணும்’ என்று கவிஞனையும் பாட வைக்கிறது. கேட்போரின் மனம் வருந்தாமல் பேசக் கற்றுக் கொண்டால் உலகோர் யாவரும் நம் சுற்றத்தாரே.

சிவபிரகாச சுவாமிகள் வேறொரு உதாரணத்தின் மூலம் இதே கருத்தை வலியுறுத்திகிறார்.

இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)

பொன்னாலான வளையல்கள் அணிந்த பெண்ணே ! உப்பு நீரும் நல்லநீரும் அருகருகே காணப்படும் இந்த விந்தையான உலகம் இனிய சொற்களுக்கே மகிழுமேயல்லாது கடுஞ்சொற்களுக்கல்ல. கதிரவனின் அனல் கதிர்களுக்கு பொங்காத கடல் சந்திரனின் குளிர்ச்சியான கதிர்களுக்கு பொங்கி எழும்.

வெறும் கடலை பொங்கி எழச் செய்யும் வல்லமை மட்டுமல்ல மலையையும் உடைத்தெறியும் சக்தி குளிர்ச்சிக்கு உண்டு என்பதை கபீர் இன்னொரு தோஹாவில் விளக்குகிறார்.

कुटिल वचन नहीं बोलिये शीतल बैन ले चीन्हि ।
गंगा जल शीतल भया, परबत फो़डा तीन्हि ॥


குடில் வசன் நஹி போலியே ஷீதல் பைன் லே சீன்ஹி
கங்கா ஜல் ஷீதல் பயா, பர்பத் ஃபோடா தீன்ஹி


வலிதரும் வன்சொல் எதற்கு, வழிதரும் இன்சொல் உண்டு
கங்கையும் தண்மையின் பெருக்கு, பொடித்திடும் பர்வத மங்கு

(தண்மை = குளிர்ந்த, பெருக்கு = நீர் பெருக்கு, பர்வதம்= மலை)

கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி இருக்கும் நீர், மலைகளிலே உள்ள குளிர்ச்சியால் மழையாகவோ உறைபனியாகவோ மாறி ஓர் உயர்நிலையை அடைகிறது. அந்த உயர்ச்சியே அதற்கு ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுக்கிறது. கீழிறங்கி வருகையில் மலையில் உள்ள பாறைகளை தகர்த்துக்கொண்டு செல்லும் ஆற்றலை அது பெறுகிறது. அது போல் ஒருவர் சொல்லும் குளிர்ச்சியான உரைகள் கேட்பவர் மனதில் சஞ்சலத்தையும் கோபத்தையும் களைந்து, ம(ற)றைந்திருக்கும் விவேகத்தை ஒரு நிலைநிறுத்தி அதற்கு ஒரு சரியான செயலாற்றலைத் தருகிறது. களையப்பட்ட கோபமும் பொறுமையின்மையும் தான் துகளான பாறைகள்.

’கங்கையும் தண்மையின் பெருக்கு’ என்பது கங்கை நதி என்பதே இயற்கையில் குளிர்ச்சி யின் விளைவாக உருவானதுதான் என்பதை குறிக்க வந்துள்ளது.

கங்கைக் கரை வாசியாதலால் கபீர் மறவாமல் கங்கைக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். ஆனால் அவர் சொன்னதில் உள்ள உண்மை எல்லா நீர் பெருக்குகளுக்கும் பொருந்தும்.