Friday, March 28, 2008

சிப்பியுள் தாகமோ தாகம்

சுவாதி முத்யம் என்பது பெரும் வெற்றி பெற்ற ஒரு தெலுங்கு திரைப்படம். அதுவே தமிழிலும் சிப்பிக்குள் முத்து என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டதாக நினைவு.

    ஆழ்கடலில் வாழும் சிப்பி சுவாதி நட்சத்திரத்தன்று மேலே வந்து மழை வருவதைக் காத்திருக்குமாம்.அப்படி மழை வந்தால் அதிலிருந்து விழும் துளியிலிருந்து உருவாகும் முத்து மிகவும் ஒளி பொருந்தியதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் என்பது தொன்று தொட்டு இருக்கும் ஒரு நம்பிக்கை. சுவாதி முத்து என்பது மிக விசேஷமானது. 

 இதை உருவகித்து கபீர் சொல்லும் ஒரு ஈரடியை காண்போம். 

  कबीर सीप समुद्र की, रहे प्यास प्यास । 
और बूँद को ना गहे, स्वाती बूँद की आस ॥ 

  கபீர் ஸீப் ஸமுத்ர கீ, ரஹே ப்யாஸ் ப்யாஸ் | 
அவுர் பூந்த் கோ நா கஹே, ஸ்வாதி பூந்த் கீ ஆஸ் ||

சிப்பியுள் தாகமோ தாகம் கபீரா, சிந்துவே ஆயினும் பிறப்பிடம் 
தப்பியும் ஏலுமோ பிற நீர், சோதிமீன் துளிக்கென விண் பார்த்திடும் 

  (சிந்து =கடல்; ஏலுதல் =ஏற்றுக்கொள்ளுதல்; சோதிமீன்= சுவாதி நட்சத்திரம்) 

 கபீர் குறிப்பிடுவது இறைவனின் அருள் மழையை எதிர்பார்த்திருக்கும் பக்தனின் அருள் தாகத்தை. காலையில் அளவுக்கு அதிகமாக வெயில் காய்ந்தால், மதியத்திலோ மாலையிலோ மழை வருதலை எதிர்பார்க்க வைக்கும்.
அது போல் சாதாரண மானுடனை போலல்லாது தீவிர அருள் தாகம் கொண்டவன் விரைவிலேயே இறைவன் அருள் மழையில் நனைவதை கண்டிருக்கிறது உலகம். அதில் அவன் மட்டும் நனைவதில்லை.அவனருகே இருக்கும் அனைவருமே அதில் திளைத்து மகிழும் பாக்கியம் பெறுகிறார்கள். 

 வேறு மார்க்கங்களை விட பக்தி மார்க்கத்தில் இறைவனை அடைந்தவர்களே மிக அதிகம். அவர்களில் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசம் இருந்ததில்லை. அரசனென்றும் ஆண்டியென்றும் கிடையாது. படித்தவனென்றும் படிக்காதவனென்றும் இல்லை. அவர்களின் பரிதவிப்பை அவர்களே அறிவர். அது பிறரால் புரிந்து கொள்ள இயலாத ஒரு நிலை. ஆனால் காலப்போக்கில் அவர் பெருமை மறைந்து விடா வண்ணம் ஒரு சிலருக்கு ஆற்றல் தந்து அவர்களின் மனநிலையை யாவரும் உணரும் வண்ணம் இறைவன் கிடைக்கச் செய்த முத்துகள் தான் பல மொழிகளிலும் இறைந்து கிடக்கும் பக்தி இலக்கியம். 

அந்த பக்த சிரோமணிகள் முத்தைப் படைக்கும் சிப்பிகளைப் போன்ற அரிய பிறவிகள். மிக உயர்ந்த நிலையை அடைய விரும்பும் எவரும் அற்ப ஆதாயங்களுக்காக தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். பொறுமையிலும் சாதனையிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. 

பெரியாழ்வார் மகளிடம் திருமணப் பேச்சை பிரஸ்தாபித்தபோது ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ மாட்டேன்' என்று உறுதிபட உரைக்கும் ஆண்டாள் ‘அவுர் பூந்த் நா கஹே' (தப்பியும் ஏலுமோ பிற நீர்)' என்பதை நினைவுறுத்துகிறார். திருவரங்கனை மனதில் வரித்த பின்னர் அங்கே வேறு பேச்சு இல்லை. ஏனெனில் அவர் முத்துச்சிப்பி. மானிடக் கடலிலே இருந்தாலும் ஒரு தனிப்பிறவி. 

   நாச்சியார் திருமொழியில் நூற்றி நாற்பத்தி மூன்று பாடல்களில் அவர் வெளியிட்ட உள்ளக் குமறல் 'ரஹே ப்யாஸ் ப்யாஸ்' என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ப்யாஸ் என்றால் தாகம். 

 கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை 
புண்ணிற் புளி பெய்தாற் போலப் புறநின்று அழகு பேசாதே 
பெண்ணின் வருத்தமறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே (நா.தி 627) 

 புளி அமிலத்தன்மை வாய்ந்தது. அதை புண்ணில் தேய்ப்பதால் உண்டாகும் எரிச்சல் போலாகுமாம் தோழியர் பகரும் சமாதான உரைகள். 

கண்ணன் இடையில் சுற்றியிருக்கும் பீதாம்பரத்தால் என்னை வருடி என் துன்பத்தை போக்குவீர் என்று பாடுகிறார். 'கண்ணனுடைய தொடர்பு உடைய ஏதாவது ஒரு பொருளாலாவது தன் அருள்தாகம் தணியாதா' என்ற ஏக்கம் வரிகளிலே தெரிகிறது. 

 அருள் தாகத்தில் தவிக்கும் பட்டினத்தாரின் தவிப்பை பாருங்கள். 

தவிப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை அவிப்பரிய தீயாம் என்னாசை தவிர்த்தையிலை (அருட் புலம்பல் :444)
(அவிப்பரிய =அணைக்க இயலாத) 

 அவிப்பரியத் தீ என்கிறார் இறைவன் பால் தாம் கொண்டுள்ள ஆசையை. காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் ஏங்கும் ஏக்கம் இயற்கையின் படைப்புத் தொழில் தொடர்வதற்காக ஏற்பட்டுள்ளது. அது உலக அளவிலே நின்று விடுவது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் வகையைச் சேர்ந்தது. மனித பிறவியை தெய்வ நிலைக்கு உயர்த்தும் சக்தி அதற்கு இல்லை. ஆனால் இறைவனோடு கொள்ளும் காதல் பிறவிப் பிணியை தீர்க்க வல்லது. அந்த தாபம் மனதில் அதிகரிக்கும் அளவு உலக விஷயங்களில் ஈடுபாடு குறைந்து மேல் நோக்கி பயணிக்கிறான் சாதகன். 

கபீர் சொல்வது போல் அப்போது இறையருளைத் தவிர வேறொன்றை ஏற்காத முத்துச் சிப்பியின் பக்குவம் வந்துவிடும்.

14 comments:

  1. பக்தி மூலம் இறையை அடைதல் - சிப்பிக்குள் முத்து.
    அருமையாக இணைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்-- என்று அருமையாக முடித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாங்க குமார்.
    // அருமையாக இணைத்திருக்கிறீர்கள்//

    இணைத்தது கபீரல்லவோ குமார்!

    ReplyDelete
  4. அன்புள்ள ஜீவி,
    நீங்கள் கண்ட வாசகம் செய்தி ஓடை மூலம் படிப்பவர்கள் மட்டுமே காணமுடிவது. அது எல்லா பதிவுகளிலும் வரும். முன்பு அந்த இடத்தில் காப்பிரைட் பற்றிய குறிப்பு இருந்தது. அதை எடுத்துவிட்டு ‘இதை' சேர்த்தேன். அதில் சற்று இடைவெளி சற்று அதிகம் இருக்குமாறு மாற்றி அமைத்து விடுகிறேன். :)
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. சிப்பி ஸ்வாதி நக்ஷத்திர அன்று வரும் மழைத் துளிதனை எதிர்பார்த்து இருப்பது
    ஜீவாத்மா தன்னைத் தான் உணர இருக்கும் நிலை. சுற்றி உள்ள நீர் அனைத்துமே
    அதன் தாகத்தினைத் தீர்க்க வொண்ணாத நிலை. இந்த தாகம் ஏற்பட்ட நிலையில்
    பரவசமான ஞானிகள் கவிஞர் பலர்.
    கபீர் ஈசன் வரும் வழியில் விழிகளை வைத்து ஏங்கும் நிலை இன்னுமொரு தோஹாவிலும் அற்புதமாக உள்ளது.

    நைனோன் அந்தரி ஆவ் தூ, ஜ்யூம் ஹொளன் நைன் ஜேபவூ.
    நொள ஹொளன் தேகேள அவுர் கூம், நொளன் துஜ் தேகூம் தேவு.

    ஈசா ! நீ என் கண்களுக்குள் வந்து விடு. நீ வந்த உடனேயே என் கண்ணின்
    இமைகளை நான் மூடிக்கொள்வேன். ( நீ வந்தபின் ) நானும் வேறு யாரையும்
    பார்க்க விடமாட்டேன். உன்னையும் வேறு யாரையும் பார்க்க விட மாட்டேன்.

    இது ஈசன்பால் கொண்ட பிரேம பாவம்.
    இதே பாவத்தினை பாரதி எப்படித் தன் கவிதையில் கொண்டு வருகிறான் !

    அந்த ஈசனைக் கண்ணனாகக் கண்ணாரக் கண்ட பாரதியோ அவன் வருவதற்கு
    முன்னம் அவனது வேய்ங்குழல் இசைதனைக் கேட்டு நெகிழ்ந்து உருகி பாடுவான்:
    " எங்கிருந்து வருவ தோ? ஒலி
    யாவர் செய்கு வதோ? அடி தோழி !
    குன்றினின்றும் வருகுவதோ = மரக்
    கொம்பினின்றும் வருகுவதோ ? வெளி
    மன்றி ளின்று வருகுவதோ = எந்தன்
    மதி மருண்டிடச் செய்குதடி!
    காட்டினின்றும் வருகுவதோ? நிலாக்
    காற்றைக் கொண்டு தருகுவதோ? வெளி
    நாடினின்று மித்தென்றல் கொணர்வதோ?
    நாதமிஃதென் உயிரை உருக்குதே ! "

    ஒண் பொருளே ! என் உள்ளத்தை உருக்கும் உணர்ச்சியாக நீ ஒளிர்வாயாக !!
    தாயுமானவர் ஏங்கும் நிலை பாரீர்:
    " நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
    பாராத தென்னோ பகராய் பராபரமே..."

    இந்த ஏக்கம் எப்போது என்னுள் வருமோ அப்போது பிரும்ம ஸாயுஜ்யம்
    ஸத்யம்.
    வலையுலகத்தில் ஒரு தீபமாக ஒளிவிடும் கபீரான் ஒரு வழிகாட்டி.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  6. அருட்தாகம் - அருளாளர்களில் விவரிப்பில் அழகாய் மலர்ந்துள்ளது.

    ReplyDelete
  7. நன்றி சூரி ஐயா. நீங்கள் படிக்கும் பதிவுகள் யாவற்றையும் மெருகேற்றுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே தான். இன்னும் ஒரு முறை இங்கே சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.
    தங்கள் ஆசீர்வாதம் தொடரட்டும்.

    ReplyDelete
  8. வருக ஜீவா,
    //அருட்தாகம் மலர்ந்துள்ளது//
    அது கபீரின் தேன்மொழி. அதை தேனீ விரும்பியதில் வியப்பில்லை.
    நன்றி

    ReplyDelete
  9. முத்துகள் தான் பல மொழிகளிலும் இறைந்து கிடக்கும் பக்தி இலக்கியம். அந்த பக்த சிரோமணிகள் முத்தைப் படைக்கும் சிப்பிகளைப் போன்ற அரிய பிறவிகள்
    உண்மையான வார்த்தைகள்.முத்தானதும்கூட.கபீரின் ஓவ்வொரு அரிசியிலும் உண்பவனின் பெயர் எழுதி இருக்கும் என்றவரிகளை விளக்கமுடியுமா/

    ReplyDelete
  10. நன்றி தி.ரா.ச

    உங்கள் கேள்விக்கு முடிந்தவரையில் பதில் சொல்கிறேன்.
    दाने दाने पर लिखा होता है खाने वाले का नाम ।
    தானே தானே பர் லிகா ஹோதா ஹை கானே வாலே கா நாம்

    "தினைத் தினையிலும் உண்பவன் பெயர் எழுதி வைக்கப் பட்டிருக்கும்"

    இது ஹிந்தியில் இருக்கும் ஒரு பழமொழி. இதை கபீர் பயன்படுத்தியுள்ளாரா என்பது தெரியாது.

    இதன் பொருள், ஒருவருக்கு எது கிடைக்க வேண்டும் என்று உள்ளதோ அது கிடைத்தே தீரும்;அதற்கு உண்ணும் உணவு கூட விதிவிலக்கல்ல.

    எதிர்பாராது ஒருவர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து உணவு உட்கொள்ள நேர்ந்தால் இந்த பழமொழியை வடநாட்டில் சொல்லி மகிழ்வர்.அதே போல் விருந்துக்கு வருவேன் என்று சொல்லி முடியாமல் போனாலும் இதை சொல்லி சமாதானம் செய்து கொள்வது உண்டு.

    எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். அலுவல் விஷயமாக மதுரை போயிருந்த பொழுது தில்லி அலுவலகத்திலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது.என்னுடைய மேற்பார்வையில் எங்கள் நிறுவனம் பெற்றிருந்த தர சான்றிதழுக்காக சேர்மன் அளவில் கொண்டாட்ட விருந்து ஒன்று நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு ஆகியுள்ளதென்று புறப்பட்டு வரச்சொல்லினர். என்னால் புறப்பட முடியாமல் போனது மட்டுமல்லாமல்
    குறிப்பிட்ட நாளில் அந்த இரவு வேளையில் சந்தர்ப வசத்தால் எனக்கு வழக்கமாக கிடைக்கும் உணவு கூட கிடைக்க வழியில்லாமல்
    பசித்துக் கொண்டிருந்தேன் !!

    பின்னர் இதை அலுவலகத்தில் சொன்னபோது என் தோழர் மேற்ச் சொன்ன அந்த பழமொழியை சொல்லிக் காண்பித்தார் :)

    ReplyDelete
  11. நன்றி மிகவும் நன்றி

    ReplyDelete
  12. பின்னூட்டங்களும் அருமை, பதிவும் அருமை! சிப்பிக்குள் முத்து!

    ReplyDelete
  13. அருமை. பக்தியில் சுவாதி முத்தாகும் நாள் என்றோ?

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    கீதாமேடம், கவிநயா.

    பழைய பதிவுகளைத் தேடி படிக்கிறீர்கள்.மிகவும் நல்லது.
    ஏனெனில் கபீரின் கருத்துகள் என்றும் பழமையாகாமல் புதுமையாகவே இருக்கும் ! :)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி