Tuesday, June 10, 2008

தன்னை விழுங்கும் தற்பரம்

பாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். பாண்டுரங்கனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடியாதவராயிருந்தார்.

ஒருநாள் ஞானதேவர், அவர் கோவிலுக்கு போவதையும் அங்கேயே பழியாக கிடப்பதையும் கேலி செய்தார். பிறவி ஞானியான ஞானதேவருக்கு தன்னுடைய தம்பி** அடுத்த நிலைக்கு முயற்சி செய்யாமல் த்வைதத்திலே கட்டுண்டு இருப்பது வேடிக்கையாக இருந்தது போலும்.

“இது என்ன நியாயம் விட்டலா! உன் பெருமை தெரியாதவர்கள் என்னை கேலி செய்வதன் பொருள் என்ன? நான் உண்மை உணராதவனாம், ஞானதேவன் சொல்கிறான். அவனுக்கு நீயே புரிய வை “ என்று முறையிட்டு அழுதார் நாமதேவர்.

“போகட்டும் விடு குழந்தாய். நீ ஒரு காரியம் செய். பக்கத்து ஊரிலே விசோபகேசன் என்ற ஞானி இருக்கிறான். அவனை கண்டு வா. உனக்கு வழி அவன் சொல்வான்” என்று அவனை தேற்றினான் பாண்டுரங்கன்.

கண்களில் நீர் பெருகியது நாமதேவருக்கு. தனக்கு பிரியமான விட்டலனை பிரிந்து செல்வதா? நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே. ”நீயே எனக்கு எல்லாம் ஆக இருக்கும் போது எனக்கு வேறு யாரும் தேவையில்லை. உன்னை பிரிந்திருக்கமுடியாது என்னால்“ என்று தேம்பி அழுகிறார்.

புதிதாக பள்ளிக்கு சேர்ந்த குழந்தை தாயை விட்டு பிரிய மனமில்லாமல் அழுது ஊரை இரண்டு பண்ணுமே அது போல் இருந்தது அவர் நிலை.

அவரை தட்டிக் கொடுத்து “கவலைப்படாதே. கொஞ்சநாள் தான். சீக்கிரமே வந்துவிடலாம். போய் வா” என்று பாண்டுரங்கன் அவருக்கு தைரியம் சொல்லி அனுப்புகிறான். அழுது கொண்டே ”டா-டா” சொல்லும் குழந்தையை போல இஷ்டமில்லாமல் பண்டரிபுரத்தை விட்டு கிளம்பிச் சென்றார் நாமதேவர்.

மூன்றாம் நாள் விசோபகேசனின் கிராமத்தை அடைந்தார். கிராமத்தாரை விசாரித்தப் பொழுது ஊருக்கு வெளியே உள்ள சிவாலயத்தில் வசித்து வருவதாக தெரிந்தது. பாண்டுரங்கனே மெச்சிய அம்மனிதனை பார்ப்பதற்கு நாமதேவரின் ஆர்வம் அதிகரித்தது. ஆலயத்தை அடைந்த பொழுது அது திறந்து கிடந்தது.
உள்ளே யாரும் தென்படவில்லை. சுற்றி வந்த பின்னரும் கண்ணில் எவரும் தென்படவில்லை.

கர்ப்பகிருகம் ஒன்றுதான் பாக்கி. உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி தந்தது அவர் கண்ட காட்சி.

ஒரு வயதான மனிதன் தன் இரண்டு கால்களையும் சிவலிங்கத்தின் மேல் வைத்து தரையில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டார். “ஹே பாண்டுரங்கா! என்ன அபசாரம்! இதைக் காண்பதற்கா என்னை அவசரமாக அனுப்பி வைத்தாய்” என்று நினைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்த மனிதனை தொட்டு எழுப்பினார் நாமதேவர். அந்த வயதான மனிதர் கண்விழித்து தன்னை தொந்தரவு செய்வதன் அவசியம் பற்றி விசாரித்தார்.

“தொந்தரவா? நீர் என்ன காரியம் செய்திருக்கிறீர். தூங்குவதற்கு வேறிடம் இல்லையா? கால்களுக்கு காலணை வேறில்லையா.? கர்ப்பக்கிருகமும் சிவலிங்கமும் தானா கிடைத்தது ? வேறு இடம் பார்த்து தூங்கூம் போம்” என்று விரட்டினார்.

“அப்பா, நீயே பார்த்து சிவனில்லாத இடமாக என்னை திருப்பி விடு. கையாலாகாத முதியவன் நான்” என்று வேண்டுகோள் விடுத்தார் அந்த பெரியவர். மனதில் எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது நாம தேவருக்கு. அவரது கால்களை இரண்டு கைகாளாலும் பற்றி சிவலிங்கத்திற்கு எதிர்புறமாக திருப்பி
வைத்தார்.

அட இது என்ன !! முதியவரின் கால்கள் தரையில் படும் முன்பே காலணையாக அங்கொரு சிவலிங்கம் முளைத்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார் நாமதேவர். சந்தேகமில்லை.இது இரண்டாவது தான். அதற்கு முன்பு அங்கு இருக்கவில்லை. இரண்டு நான்காயிற்று, நான்கு எட்டாயிற்று.

இன்னும் வைப்பதற்கு இடமேது?

கடைசியில் தன் தலை மேலேயே சுமப்பது, அங்குமா சிவலிங்கம் முளைக்க முடியும் என்ற எண்ணத்தோடு தன் தலைமேல் வைத்துக் கொண்டார். அம்முதியவரின் கால்கள் தலையில் பட்டதுமே மின்னல் போல் பரஞ்சோதி உடல் முழுதும் பரவியது. எங்கும் நீக்கமற நிறைகின்ற இறைவனின் ஒளி வெள்ளத்தை தன்னுள்ளும் கண்டு கொண்டார்.

”இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்”

என்று மாணிக்க வாசகர் பாடிய பரவசம் புரிந்தது நாமதேவருக்கு. அந்த முதியவர்தான் தான் தேடிவந்த விசோபகேசர் என்ற உண்மையும் புரிந்தது.

விசோபகேசரின் கால்களில் விழுந்து ”எனக்கு ஞானத்தை புகட்டுங்கள். என் பிரியன் பாண்டுரங்கன் தங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறான்” என்று வேண்டிக்கொண்டார். ”உனக்கு என்ன தெரிய வேண்டுமோ அது தெரிந்தாகிவிட்டது. நீ திரும்பலாம்” என்று உத்தரவு கொடுத்தார் குரு.

திரும்பும் வழியில் காணும் காட்சி யாவற்றிலும் இறைவன் அழகை கண்டு ஆனந்தித்தார். குருவின் திருவடிகள் செய்த மாயம். புல்லிலும், மரத்திலும், மலரிலும், மலையிலும், உள்ளிலும் வெளியிலும் எங்கும் எதிலும் பாண்டுரங்கனே என்பதை கணக்கணமும் உணர்ந்து பரவசமானார்.

ஊர் திரும்பியபின் பாண்டுரங்கனைக் காண ஆவலுடன் ஓடவில்லை. தன் வீட்டிலேயே அந்த ஆனந்த நிலையில் அடைந்து கிடந்தார். மூன்றும் நாட்கள் ஆகியும் பாண்டுரங்கனை தேடிப் போகவில்லை.

நான்காவது நாள், அந்த ரங்கனுக்கே பொறுக்கவில்லை. நாமதேவர் வீட்டு கதவை தட்டினான். ”குழந்தாய் கதவைத் திற. நான் தான் உன் பாண்டுரங்கன். உன்னைக் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை”

கதவருகே வந்து நின்ற நாமதேவர் கதவை திறக்காமலே சொன்னார். “விட்டலா! எவ்வளவு பெரிய தந்திரசாலி நீ. உன்னை விட்டால் வேறு கதியில்லை என்று நான் நம்பியிருக்கும்படி செய்து வைத்திருந்தாயே. உன் மாயம் இனி என்னிடம் செல்லாது. எனக்குள்ளே நீயும் உனக்குள்ளே நானும் இருக்கும் போது உன்னைத் தேடி வேறு வரவேண்டுமோ? அதற்கு வேறு யாரையாவது பார்”.

தன் அறியா குழந்தை நல்ல பாடத்தை புரிந்து கொண்ட போது மகிழ்ச்சி அடையும் தாய் போல் பாண்டுரங்கனும் தன் பக்தனின் புதிய ஞானத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்றான்.
( ஆதாரம் Chinmaya vidyalaya ;Tarangini-6, ( 2001) Chinmaya Mission Trust, Mumbai )

**
பிற்சேர்க்கை : 26/06/08
நாமதேவரும் ஞானதேவரும் உடன் பிறந்தவர்கள் அல்ல. ஐந்து வருடங்கள் ஞானதேவர் மூத்தவர். பல காலம் இருவரும் சேர்ந்து தல யாத்திரை மேற்கொண்டனர் )
.

நாமதேவரும் கபீரும் சமகாலத்தவர். ஞானதேவரும் நாமதேவரும் காசிக்கு விஜயம் செய்த போது கபீரின் சிறப்பு விருந்தினராக இருந்தனர் என்றும் சொல்வதுண்டு. இப்போது நாமதேவரின் மேற்கண்ட அனுபவத்தை கபீரின் வரிகளில் பார்ப்போம்.

जब मैं था तब हरि नही, अब हरि है मैं नही ।
सब अंधियारा मिटि गया, जब दीपक देख्या मांहि ॥


ஜப் மே தா, ஹரி நஹி, அப் ஹரி ஹை, மே நஹி
ஸப் அந்தியாரா மிடி கயா, ஜப் தீபக் தேக்யா மாம்ஹி


நானிருந்த போது அரியில்லை, அரிவந்த பின்னே நானில்லை
வானில் சுடர்வந்த பின்னே, இருளின் சுவ(டு) என்ப(து) இல்லை

(சுடர் =சூரியன் : நானிருந்த போது = நான் என்ற ஆணவ மலம் இருந்த போது : அரி =ஹரி, இறைவன்)

மாற்று :
நானிருந்த போது அரியில்லை, அரிவந்த பின்னே நானில்லை
நாடகம் முடிந்தது, ஒளிவந்த பின்னே இருளங்கு இல்லை

“நாடகம் முடிந்தது” என்ற வகையில் கபீர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இதை படித்ததும் சுவாமி சித்பவானந்தர் கூறிய ஒரு உதாரணம் நினைவுக்கு வந்ததால் தோஹாவுக்கு முதல் மொழி பெயர்ப்பாக இதை எழுதி வைத்திருந்தேன்.

அந்த உதாரணம் இங்கே.
திரைப்பட அரங்கில் தங்களை மறந்து கதாபாத்திரங்களோடு கதையில் ஒன்றி போனவர்கள் எல்லாம் படம் முடிந்து விளக்குகள் போடப்பட்டதும் தம் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். அது போலவே ஆன்மா தன் சுத்த தத்துவத்தை மறந்து வினைகளின் வலையில் சிக்கி உலக அரங்கில் திரியும் போது
அவனுடைய நாடகம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அது தன் இயல்பை உணர்ந்த கணமே உலகம் கனவு போலாகி விடுகிறது என்கின்றனர் ஞானிகள். ஞானம் என்ற சூரியன் உதித்த பிறகு அஞ்ஞானம் என்ற இருளுக்கு இடமேது ?

அதே அனுபவத்தை அருணகிரிநாதர்

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ ?
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே. ---(க.அனுபூதி 28)

என்று தற்பரத்தில் தான் கரைந்த ஆனந்தத்தை உரைக்கிறார்.

அந்த நிலை பேரானந்த நிலையாகுமாம். அங்கே இருளில்லை ஒளியில்லை, கீழ் மேல், முன்பக்கம் பின்பக்கம் போன்ற எவ்வித வரையறைகளுக்கும் உட்படாத ஓர் உன்னத உணர்வு நிலை. அந்த ஆனந்த நிலையிலேயே எப்போதும் இருக்க தாயுமானாவர் எங்கும் நிறைகின்ற பரம்பொருளை வேண்டுகிறார்.
............
முன் பின்னொடு கீழ்மேல் நடுப்பக்கம்
என்னாமல், முற்றும் ஆனந்த நிறைவே
என் நிலைமையாய் நிற்க
இயல்புகூர் அருள் வடிவம்
எந்நாளும் வாழி வாழி
இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி
எங்கும் நிறைகின்ற பொருளே ( எ.நி.பொ. -10)

உடலைப் பெற்று உடல் உணர்வோடு வாழ்ந்திருக்கிற நிலை இகம் எனப்படுகிறது. உடல் உணர்வைக் கடந்து ஆத்மபோதத்தில் திளைத்திருப்பது பரம் எனப்படுவதாகும். இவை இரண்டில் எந்த நிலையில் ஜீவன் இருப்பினும் அது பரமாத்மாவுக்கு புறம்பாவதில்லை. எனவேதான் 'இகபரம் இரண்டிலும் உயிருக்கு உயிராய்' என்று போற்றுகிறார் தாயுமானவர்.

பக்தியில் முற்றிய அனைவருக்குமே இந்நிலை எட்டக்கூடியது தான் என்பது ஏசுவின் சீடரான செயிண்ட் பால் என்பவர் சொல்லிய கருத்துகள் மூலமும் அறிகிறோம்.
(ஒவ்வொரு வரியையும் நிறுத்தி நிதானமாக படித்து கருத்தை உள்வாங்கிக் கொள்ளவும்.)

I live, yet not in me.
Only when
I become as nothing
Can God enter in
and
no difference between
his life and mine
remains outstanding
(St.Paul)

16 comments:

Radha Sriram said...

அருமை அருமை.........வேறு என்ன சொல்ல??

கவிநயா said...

நாமதேவர் கதை எனக்கு மிகப் பிடித்தது. வெகு அருமையாக எழுதுகிறீர்கள்! நன்றி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

என்ன சொல்லுவது, கற்றேன், கற்றேன், கண்டறியாதவன் பற்றி, பற்ற வேண்டியவன் பற்றி.

கபீரன்பன் said...

வருக ராதா அவர்களே
அருமை என்று இரண்டு முறை சொல்லிவிட்டீர்களே அதுவே போதும்.

(I apologize for not able to type SRIRAM in Tamil. Can some one give the key-map for SRI in phonetic -unicode ? I tried S+r+l as given in Baraha and shRi Shri sHri and variety of combination in NHM writer. Nothing worked. I don't like to write ச்றீ :(

கபீரன்பன் said...

பாராட்டுகளுக்கு நன்றி கவிநயா. மீண்டும் வருக :)

கபீரன்பன் said...

வாங்க ஜீவா.
உண்பது அதே அரிசியும் பருப்பும் ஆனாலும் ருசிப்பதற்கு சில பொருட்களை சேர்க்க வேண்டியிருப்பது போல மகான்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சொல்லப்படும் ஒரே உண்மைக்கு தனித்தனி சுவையை அளிக்கின்றன. உணவு உடலுக்கு ஊட்டம். மகான்களின் வாழ்க்கையும் மொழிகளும் ஆன்மாவுக்கு ஊட்டம்.

sury said...

//அந்த நிலை பேரானந்த நிலையாகுமாம். அங்கே இருளில்லை ஒளியில்லை, கீழ் மேல், முன்பக்கம் பின்பக்கம் போன்ற எவ்வித வரையறைகளுக்கும் உட்படாத ஓர் உன்னத உணர்வு நிலை.//

கபீர் இதனை மிகவும் அற்புதமாக எடுத்துரைப்பார்:


chaand nahin sooraj nahin hathaa na vo Omkar
thahan kabeera raamjan ko jaane sansaar
dharthi gagan pavanai nahin hOth nahi thithi bhaar
thab hari kE harijan huthai, kahai kabeer vichaar

ja dhin kirtham saa hatha, nahi haat nahin bhat
hatha kabeera santh jan jin dekha owghat ghatai
nahin haat nahin bat hai, nahin dharthi nahin dheer
asankya yugh parle gaya, tab hi kahai kabeer
pavan nahin paani nahi, nahi dharthi aakaas
Ek niranjan Dev kaa, kabeera dhas-khavas Sa.ka.63-4.

அங்கு பூமியும் இல்லை, வானம் இல்லை, நீர் இல்லை,
காற்று இல்லை, திதி இல்லை, கிழமை இல்லை, சந்திரன்
இல்லை, சூரியன் இல்லை, எல்லா அறிந்தவற்றிற்கும்
அப்பால், எல்லாவற்றையும் விட விசித்திரமாக இருக்கிறது.
கால நேர கட்டுத்தளை இல்லை, கடந்த காலம் எதிர்காலம்
இவை இரண்டிற்கும் வித்தியாசமும் இல்லை. எதை நாம்
பல லக்ஷக்கணக்கான யுகங்களுக்கு முதலே இருக்கும் விஷயம்
என்கிறோமோ அது அங்கு நிதர்சனமாக இருக்கிறது. எதை
பல கோடி கல்பங்க்ளுக்குப் பின்னே நடக்க உள்ளது என
நினைக்கிறோமோ அது முன்பாக ப்ரத்யக்ஷமாக உள்ளது.
அங்கு சாஸ்வத நிலை உள்ளது. நமது பார்வையினால்,
அவ்வுலகின் நிலையை அளவிடுவதில் நமக்கு தேர்ச்சி இல்லை.
அப்படிப்பட்ட முடிவில்லாத எல்லையற்ற தேச கால பின்னங்களுக்கு
அப்பாற்பட்ட தேஜோமயமான ஒளிப்பிழம்பு உலகத்தை நாம்
எப்படி புரிந்து கொள்வோம் ?

நமக்கு அறிந்ததின் வழியே அறியாத ஒன்றை அறிவது அவ்வளவு
எளிதா என்ன ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

sury said...

//I apologize for not able to type SRIRAM in Tamil. Can some one give the key-map for SRI in phonetic -unicode ? I tried S+r+l as given in Baraha and shRi Shri sHri and variety of combination in NHM writer. Nothing worked. I don't like to write ச்றீ :(//

kindly follow this;
Shift capital S
release shift. type r
then again shift cap I
you get it.
ஸ்ரீ
Except to realize Brahman, everything around is never
impossible.
subbu rathinam
thanjai.

கபீரன்பன் said...

ஸ்ரீ சுப்புரத்தினம் சார்,
இப்போது ஸ்ரீ- ன் ரகசியம் புரிந்தது.

நன்றி.

கபீரன்பன் said...

சுப்புரத்தினம் ஐயா,
நல்வரவு.
///chaand nahin sooraj nahin hathaa na vo Omkar
thahan kabeera raamjan ko jaane sansaar ........
///

கபீரின் இன்னுமொரு பொருள் பொதிந்த கவிதை தந்தமைக்கு நன்றி.

கிருத்திகா said...

உண்மைதான் எங்கும் நிறைந்த தற்பொருளை தன்னுள் உணர்ந்து கொள்வதுதானே பக்தி ஆனாலும் அதுவும் நம் கையிலா உள்ளது தெய்வமாய் தன்னை உணர்த்தினால் ஒழிய நம்மால் புரிந்து கொள்ளவும் முடியுமா.... அதுவரை இது போன்ற நல்ல கருத்துக்களை வாசித்திருந்து விழிபோடு காத்திருத்தல் மட்டுமே முடியும். மிக்க நன்றி...

கபீரன்பன் said...

வருக கிருத்திகா .

//....விழிப்போடு காத்திருத்தல் மட்டுமே முடியும் //

ரொம்ப சரியாக சொன்னீர்கள். பசித்திருக்கும் உயிருக்கெல்லாம் உணவளிக்கவல்லவன் விழித்திருக்கும் பக்தனுக்கு அருள் அளிக்காமலா போய்விடுவான் ?
நன்றி

R.DEVARAJAN said...

கபீரன்பரே,
வணக்கம். பதிவுகள் வெகு அருமை. நாம தேவர் ஞான தேவரின் உடன் பிறந்தவர் என்று படித்ததாக நினைவில்லையே!
பதிவுகள் சிறந்த ஆன்மிக அனுபவத்தைத் தருகின்றன.
ஸத் ஸங்கம் என்றும் தொடர வேண்டும்.
தேவராஜன்

கபீரன்பன் said...

வருக தேவராஜன்.
தவறை சுட்டிக்காடியதற்கு நன்றி. ஞானதேவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். அவர்கள் அனைவருமே ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை எட்டியிருந்தனர் என்று படித்திருக்கிறேன். அதனால் எழுந்த குழப்பம் அது.
தவறுக்கு வருந்துகிறேன் :(

தங்களது பின்னூட்டம் கண்ட பிறகு வலையில் தேடினேன். விடை கிடைத்தது. நாமதேவரும் ஞானதேவரும் உடன் பிறந்தவர்கள் அல்லர்.

எனக்கு கிடைத்த விவரம்

In course of time, four children were born to Vittalpanth and Rukmabai—Nivritti in 1273 A.D., Jnanadev in 1275 A.D., Sopan in 1277 A.D. and Muktabai in 1279 A.D. (three sons and a daughter). Nivritti is regarded as an incarnation of Siva, Jnanadev as an incarnation of Hari, Sopan of Brahma and Muktabai of Sarasvati

அவர்களை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே உள்ள இணைப்பு உதவும்.

http://www.dlshq.org/saints/jnanadev.htm

வேளராசி said...

”இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்.தருமபுரம் சுவாமிநாதன் அவர்களது குரலில் இந்த பாடலையும்,அன்றே எந்தன் ஆவியும் உடலும் பாடலையும் இரவு நேரத்தில் கேட்டால் மிக அற்புதமாக இருக்கும்.

கபீரன்பன் said...

நல்வரவு வேளராசி

தருமபுரம் சுவாமிநாதன் அவர்களது குரலில் ..............கேட்டால் மிக அற்புதமாக இருக்கும்

அற்புதமான பல தேவார, திருவாசகப் பாடல்கள் கீழ்கண்ட இணைப்பில் கேட்டு மகிழலாம்.
http://www.thevaaram.org/index.php

நன்றி