Tuesday, August 12, 2008

சாதுவின் சகவாசம், சுகந்த வாசம்

நாக் மஹாஷய் -இரண்டாம் பகுதி. முதல் பகுதிக்கு இங்கே

பெரியம்மை தாக்கியிருந்த ஒரு அந்தண சிறுவனை அவனுடைய விதவை தாயார் இறக்கும் தறுவாயில் நாக் மஹாஷயர் வீட்டு வாசலில் தந்து இட்டு
விட்டாள். அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை யாருக்கும் இருக்கவில்லை. இறைவன் திருவுள்ளம் அவன் விரைவிலேயே குணமடைந்தான். அது எப்படி என்று சுரேஷ் மஹாஷயரை வினவியபோது 'அவன் குணமாக்கப் பட்டது' உண்மைதான் ஆனால் எப்படி என்பதை தன்னால் சொல்ல இயலாது என்று கூறிவிட்டார்.

பல சித்த புருஷர்களின் கடைக்கண் பார்வை இப்படி நோய் தீர்க்கும் மருந்தாக செயல் பட்டதை படித்திருக்கிறோம், கேள்விப் பட்டிருக்கிறோம். இதை கபீரும்
சூலத்தால் குத்தப்பட்டு அனுபவிக்கப்பட வேண்டிய பெருவலியும் ஞானியர் அருள் இருந்தால் சிறு முள் குத்திய வலியைப் போல ஒன்றுமில்லாததாகிவிடும்
என்கிறார்.

कबीर दर्शन साधु का, बडे़ भाग दरशाय ।
जो होवै सूली सजा, कांटे ई टरि जाय ॥


ஞானியர் தரிசனம் கபீரா, ஞாலத்தே பெரும் பேறாகும்
சூலம் பாய்ந்த பெருவலியும், முள் தைத்தது போலாகும்

நாக் மஹாஷய் ஒரு பொறுப்புள்ள மகனாக தந்தைக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். ஆனாலும் அவருடைய ஆன்மீகப் போக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டிருந்தது. அதை அவருடைய தந்தையால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறையே வரும் 'அர்த்தோதய யோக' பூஜை வங்காளத்தில் பிரசித்தமானது. இது கிரகண தினத்தன்று செய்யும் வழிபாடு.

அந்நேரத்தில் கங்கையில் நீராடுவது என்பது மிக விசேஷமானது. ஆசார அனுஷ்டானங்களில் ஆழ்ந்த நம்பிக்கை யிருந்த நாக் மஹாஷயரின் தந்தை,
தீனதயாளுக்கு பெரும் ஏமாற்றம். கல்கத்தாவில் இருக்கும் தன் மகன் மூன்று நாட்களுக்கு முன்பே தேவ்போக் (நாக் மஹாஷயரின் ஊர்) வந்துவிட்டானே என்று.

கங்கையில் நீராடி பூஜை செய்து வரக்கூடிய புண்ணியத்தை தவற விட்டு விட்டானே என்ற ஆதங்கத்தில், “உன்னுடைய அனுஷ்டானத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோரும் கங்கா ஸ்நானத்திற்கென இங்கிருந்து கல்கத்தாவிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பொழுது அதை விட்டு இங்கே வந்து விட்டாயே. என்ன பக்தியோ உன்னுடையது. இப்போதும் என்னோடு புறப்படு. நேரம் இருக்கிறது” என்று புண்ணிய நீராடுதலுக்காக ஏங்கினார்.

”கங்கை தாயினிடம் உண்மையான பக்தி இருந்தால் அவளே இங்கு வருவாள். அவளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தந்தைக்கு பதிலளித்தார் மகன்.

அந்த நாளும், கிரஹண முகூர்த்தமும் நெருங்கியது. கைலாஷ் போஸ், ஸ்ரீமதி ஹரகாமினி (மனைவியின் சகோதரி) மற்றும் பல அடியவர்கள் தேவ்போக் மனையில் அந்நேரத்தில் இருந்தனர். அப்போது ஹரகாமினி ஈசானிய மூலையில் ஒரு வெடிப்பு தோன்றி முற்றத்துள் ஒரு நீரூற்று குபு குபுவென ஓசையுடன்
பெருகி வருவதை கவனித்து யாவரையும் அழைத்தார். அறைக்குள் அமர்ந்திருந்த நாக் மஹாஷயர் வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் ”மா! தேவி, கங்கா!!
பாவங்களைத் தொலைப்பவளே” என்று பலவாறாகத் துதித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். சிறிது நீரை அள்ளி தலையில் பக்தியுடன் தெளித்துக் கொண்டார். வீட்டிலிருந்த அனைவரும் அந்நீரிலே புனித நீராடினர். விஷயம் பரவி அப்பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் அங்கே குழுமி விட்டனர். ஜெய் கங்கா ஜெய் கங்கா என்ற கோஷம் எங்கும் எதிரொலித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீர் சிறிது சிறிதாகக் குறைந்து நின்று போனது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி நாக் மஹாஷயர் எப்போதும் பேசியதே கிடையாது. யாராவது மிக வற்புறுத்திக் கேட்டாலும் ‘ஒன்றுமில்லாததை பெரிது படுத்துகிறார்கள்' என்று தட்டிக் கழித்து விடுவாராம்.

ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் பல கோவில்-குளங்களையோ, புனித நீராடலையோ தேடிசெல்லும் அவசியமில்லை. அவர்கள் உள்ளேயே எல்லாம் சங்கமம்.

அதைத்தான் கபீர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

मथुरा, काशी द्वारिका, हरिद्वार, जगन्नाथ ।
साधु संगति हरि भजन बिन, कछु न आवै हात ॥


அரித்வாரம் சகன்னாத்தும், மதுரா, துவாரகை, காசியும் ஏனோ
அரிசெபமும் சத்சங்கம் இன்றி, அவனும் பிடிக்குள் வருவனோ

(அரித்வாரம்=ஹரித்வார், சகன்னாத்=புரீ, ஜகன்நாத், அரிசெபம்= ஹரி ஜெபம் அவனும் =இறைவனும்)

இறைவன் அருளைப்பெற அவன் அடியவரை பிடித்துக் கொள். உண்மையான ஞானியின் தரிசனமும் சத்சங்கமும் இல்லாத தீர்த்த யாத்திரை போன்ற மற்ற
எல்லாமுயற்சிகளும் பெரிய பலனை தந்துவிடாது. பக்தியில் ஆழமிருந்தால் அங்கே உடனே இருப்பான் இறைவன். இதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் கபீர்.

கங்கையின் வரவு கூட தன் தந்தையின் ஏக்கத்தை போக்குவதற்காக ஒரு ஞானி சொன்ன வாக்கு பொய்த்து விடக்கூடாது என்பதற்காக இறைவன் திருவுள்ளம் கொண்டான் என்பதாகக் கொள்ள வேண்டுமே அன்றி அவருக்கு தன் சித்தியை பிரதர்சனம் செய்யும் எண்ணம் அல்லவென்று புரிந்து கொள்ள வேண்டும்.

தேவ்போக்கில் கங்கை வந்தது பற்றி பின்னொரு நாளில் விவேகானந்தரிடம் சிலர் குறிப்பிட போது 'ஞானிகளின் சங்கல்பத்தால் ஆகாததும் உண்டோ. அவர்கள் சங்கல்பித்தால் முக்தியும் கிட்டும்' என்று பதிலுரைத்தாராம்.

(இதே போல ஒரு தீண்டத்தகாதவனுக்கு ஆதரவு தந்ததால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்ட ஸ்ரீதர் அய்யாவாள் என்ற பெரும் மஹானும் தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை பெருகச் செய்த நிகழ்ச்சி தமிழ் நாட்டில் உண்டு. அதை ஆசார்யஹ்ருதயத்தில் காண இருப்பதால் அதை விட்டுவிடுவோம். )

அன்னை சாரதா தேவி பேலூர் நீலாம்பர் பாபுவின் தோட்டத்தில் தங்கியுள்ளார் என்பதை அறிந்து அவரை தரிசித்து வர சக்ரவர்த்தி என்பவர் துணையோடு நாக்
மஹாஷயர் கிளம்பினார். அன்னைக்கென சிவப்பு சரிகை உள்ள ஒரு துணியும் கொஞ்சம் இனிப்பும் வாங்கினார். படகில் செல்லும் பொழுது ஒரு குழந்தையின்
குதூகலம் அவரிடமிருந்தது. கரையிறங்கியதுமே, அன்னையை தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவரை பேரானந்தத்தில்ஆழ்த்தியது. சுவாமி பிரேமாநந்தர் அவரை அன்னையிடம் அழைத்துச் சென்றார். பரவசமென்னும் காற்றில் அலைக்கழிக்கப்படும் சருகு போல தள்ளாடி அன்னையின் முன் போய் சேர்ந்தார்.

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த பின்னும் ஆனந்த பரவசம் அவரை ஆட்கொண்டிருந்தது. “ஓ! அய்யனை விட அன்னைக்குத்தான் எத்தனை கருணை” என்று சொல்லிச் சொல்லி சந்தோஷத்தில் திளைத்தார். பிரேமானந்தர் அதற்கானக் காரணத்தை விளக்கினார். நாக் மஹாஷயர் கொண்டு சென்றிருந்த இனிப்புகளை சாரதாமணி தேவியார் விரும்பி சுவைத்ததும் அவருக்கு தன் கையாலே பிரசாதம் வழங்கியதுமே அதற்கு காரணம்.

சாதாரண லௌகீக ரீதியில் பார்க்கும் பொழுது இரு அன்பர்கள் சந்தித்துக் கொள்வதில் ஒருவர் தின்பண்டம் வாங்கிச் செல்வதும் மற்றவர் தேநீர் சிற்றுண்டி தந்து உபசரிப்பதும் சகஜம் தான். ஆனால் அதையெல்லாம் மீறிய ஒரு ஆனந்தம் தந்தது எதுவென்றால் அன்னையின் அருளும் அதை போற்றத் தெரிந்த மனநிலையும் தான்.

அத்தகைய ஒரு மனநிலையைத் தான் கபீர்தாஸர் ஒரு ஈரடியில் ஆச்சரியப்பட்டு உரைக்கிறார். உயர்ந்த மனங்கள் சேரும் போது அங்கு உலக விசாரங்கள் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றுக்கு இடமில்லை. அங்கு பரிமாறிக் கொள்ளப்படுவது உயர் நிலை ஆனந்தம் மட்டுமே.

कबीरा संगत साधु की, ज्यो गन्धी की बास ।
जो कुछ गन्धी दे नहीं, तो भी बास सुबास ॥


சுகந்த வாசம் போலாகும், கபீரா சாதுவின் சகவாசம்
சுகந்தம் தந்ததே துமில்லை, பின்னும் ஏதோ உல்லாசம்

'ஜோ குச் கந்தீ தே நாஹி' என்பது கண்கள் அறியும் வண்ணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை குறிப்பதாகும். காற்றிலே கலந்து வரும் மணம் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது போல சாதுக்களின் முன்னிலையில் காணும் ஆனந்தம் மனதால் மட்டுமே உணரக் கூடியது.

6 comments:

  1. ஆஹா. நாக் மஹாஷயர் அவர்களைப் பற்றிப் படிக்கத் திகட்டவில்லை. கபீரின் வரிகளை பொருத்தமான நிகழ்வுகளுடன் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.

    //இறைவன் அருளைப்பெற அவன் அடியவரை பிடித்துக் கொள். உண்மையான ஞானியின் தரிசனமும் சத்சங்கமும் இல்லாத தீர்த்த யாத்திரை போன்ற மற்ற எல்லா முயற்சிகளும் பெரிய பலனை தந்துவிடாது. பக்தியில் ஆழமிருந்தால் அங்கே உடனே இருப்பான் இறைவன்.//

    இதைப் படிக்கையில் ஏனோ ஆறுதலாய் இருக்கிறது :)

    ReplyDelete
  2. நீங்கதான் பர்ஸ்ட் கவிநயா!

    இப்போது உங்கள் பின்னூட்டம் வந்தபோது யூ ட்யூபில் O.S சுந்தர் அவர்களின் பாண்டுரங்க பஜன் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆமாம் தொழில்நுட்ப வளர்ச்சி சத்சங்கத்தை எளிமையாக்கி விட்டது என்று சொல்லலாம்.
    நன்றி

    ReplyDelete
  3. நல்ல கருத்து. மாகான் நினைத்தால் எல்லாம் செய்ய முடியும். சதசிவ பிரும்மேந்திரரும் இப்படித்தான் சிறுவர்களை தோளில் அமரச்செய்து அமராவதியில் முழ்கி காசியில் கங்கயில் எழுவாரம் பின்பு அவர்களை மறுபடியும் நெருருக்கு கொண்டு வந்து விடுவாரம்.கங்க தரங்க துரங்கே என்ற பாடலும் உண்டு. இன்றும் தீபாவளியன்று கலை 4.40 =6.00 வரை கங்கை எல்லார் வீட்டிலும் வருகிறாள் நரகாசுரன் வரத்தின் படி.

    ReplyDelete
  4. நம் பாடத்திட்டத்தில் தியரி, செய்முறை என அமைத்திருப்பதுபோல் கபீரின் அருள்வாக்கைப் பின்புலமாகக் கொண்டு, நாக மஹாசயரின் சரிதத்தை எடுத்துக் காட்டியுள்ளது நல்லதோர் உத்தி.

    ”(உலகியலாரின் மனங்கவரும்) மொழிகளின் பால் ஈர்க்கப்பட்ட மனமும் , புலனுகர்வு, அதற்கான செல்வத்தைச் சேர்ப்பது இவற்றில் நாட்டமும் கொண்ட மாந்தரின் புத்தி பரமாத்ம தத்வத்தில் நிலை பெறுவதில்லை.” (கீதை 2/44)

    இதற்கு மாறாக, உண்மையான ஸாதகரிடமும், ஸித்த புருஷர்களிடமும் புலனுகர்வு (போகம்),
    பொருளாசை இவற்றில் அறவே நாட்டம் இல்லாதிருப்பதால் பரமாத்ம தத்வத்தில் வெகு இயல்பாகவே அறிவு நிலை கொண்டு விடுகிறது.

    கீதை கூறும் இவ்வரிய உண்மையை இப்பதிவு மிகவும் எளிமையாக, இனிமையாக விளக்கி விட்டது.

    ஓர் உண்மையான ஸாதகன் வாழும் சூழலில் தூய்மையும், அமைதியும் தானாகவே குடிகொண்டு விடுகிறது என்பதை ஸ்வாமி ராம்ஸுக தாஸின் ‘ஸாதக ஸஞ்ஜீவநி’ பல இடங்களில் விவரித்துள்ளது.

    நாக மஹாசயரின் தூய வாழ்க்கையும் அதை உறுதி செய்வதாகவே அமைந்திருக்கிறது.
    தேவ்

    ReplyDelete
  5. வாங்க தி.ரா.ச.
    // மாகான் நினைத்தால் எல்லாம் செய்ய முடியும் //

    உண்மை உண்மை உண்மையன்றி வேறில்லை.
    சதாசிவ பிரம்மேந்திரரின் நெரூர் சமாதிக்குச் சென்று அப்புனித மண்ணை கொண்டுவரும் பாக்கியம் சமீபத்தில்தான் கிடைத்தது.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நன்றி தேவராஜன்.

    //ஸ்வாமி ராம்ஸுக தாஸின் ‘ஸாதக ஸஞ்ஜீவநி’ பல இடங்களில் விவரித்துள்ளது.//

    யாவரும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம். தனிப்பதிவாகவோ அல்லது விவரமான பின்னூட்டமாகவோ இடுங்களேன்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி