Thursday, October 09, 2008

கற்றவர் படும் பாடு

நமக்கு இருக்கும் கல்வியறிவே நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாய் விடுகிறது என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றுகிறது. அது இறைவனிடமிருந்து நம்மை தூர விலக்கி வைத்து விடுகிறது. அதனால் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன என்பதை உணர முடியாத அளவுக்கு ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறது.

அதன் முக்கிய காரணம் அன்பு அறிவை விட மேலானது என்பதை மறந்து போவதே. அன்பின் அடிப்படையில் அல்லவோ இறைவன் உலகை இயக்குகிறான்.

ஆற்றோரம் நடந்து செல்லும் இரண்டு மெத்தப் படித்த அறிஞர்களிடையே ஒரு உரையாடல்

முதல் நபர் : ”ஆற்றில் மீன்கள் எவ்வளவு ஆனந்தமாக நீந்துகின்றன

இரண்டாம் நபர் : “நீ என்ன மீனா ஆனந்தம் என்பதை சொல்ல ?”

முதல் நப்ர் : “நீ என்ன நானா? எனக்குத் தெரியும் தெரியாது என்று சொல்ல

( நன்றி : இராமகிருஷ்ண விஜயம் ஜூன் 2008)

சாதுர்யமான பேச்சுகளின் மேலுள்ள நாட்டத்தால் நம் சந்தோஷத்தை எப்படி இழந்து விடுகிறோம் என்பதை சுட்டிக்காட்டும் துணுக்கு அது.

கூடவே நாம் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் அன்னியமாகி எப்படி அன்பை இழந்து விடுகிறோம் என்பதையும் காட்டுகிறது.

இப்படிப்பட்ட புத்தியுள்ளவர்கள் தம்மைச் சுற்றி ஒரு சிறு உலகை படைத்துக் கொண்டு அதிலேயே ஆனந்தம் காண்பார்கள். அவர்களுடைய உள்ளம் ஒரு மூடிய கதவு. அங்கே புதிய கருத்துகளுக்கோ பரிமாற்றங்களுக்கோ வகையில்லை.

அவர்கள் பெரும் சாதுக்களையோ ஞானிகளையோ அணுகும் போதும் அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதில்லை. அவர்களின் நிலை பற்றி கபீர் சொல்வது

साधु शब्द समुद्र है, जामे रतन भराय ।
मन्द भाग मुटठी भरै, कंकर हाथ लगाय ॥


சாது என்பவன் சமுத்திரம், கிடைக்கும் அங்கே இரத்தினம்
மூடரோ விரும்பிக் கொள்வர், கை நிறைய கல்லும் மண்ணும்.

கடலுக்குச் சென்றவன் அங்கே கிடைக்கூடிய முத்து ரத்தினத்தைப் பற்றி கவலைப் படாமல் வெறும் கல்லையும் மண்ணையும் அள்ளி வருபவன் போலே, பெருமளவிலான மக்கள் ஞானிகளையோ சாதுக்களையோ வெறும் மேற்போக்காகக் கண்டு அல்லது கேட்டு அவர்களைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபாடு கொள்வர். அந்த விமரிசனங்களால் ஆகப் போவது ஒன்றும் இல்லையென்றாலும் பலர் அதில் ஈடுபடுவதன் மூலம் அற்ப மகிழ்ச்சி கொள்கின்றனர். இதைப் பற்றி ஞானிகளும் கவலைப் படுவதில்லை.

இப்போது உண்மையிலே இழந்தவன் யார்? இழந்தது என்ன ?

திறந்த உள்ளம் இல்லாமல் குறைகாணுவதில் ஈடுபட்ட மனம், தான் என்னும் எண்ணத்திலே திளைத்திருக்கிறது. அதனால் அது இழந்தது ஆன்மீக முன்னேற்றம்.

அப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களை தவிர்க்கவே ஞானசம்பந்தர் உபதேசிக்கிறார்.

நீ நாளும் நன்னெஞ்சே நினைக் கண்டாய், யாரறிவார்
வா நாளும் சா நாளும் - சாய்காட்டு எம் பெருமாற்க்கே
பூ நாளும் தலைசுமப்ப புகழ் நாமம் செவி கேட்க
நா நாளும் நவிந்தேற்ற பெறலாமே நல்வினையே.

(சாய்காட்டுப் பெருமான்= திருச்சாய்க்காடு என்னும் தலத்தில் இருக்கும் சிவன்)

ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் !

அப்படியானால் போலிகளுக்கிடையில் அசலைக் கண்டறிவது எப்படி ?

அண்மையில் நெருங்கிய உறவினரோடு மைசூர் அருகே புதிதாக உருவாகி வரும் ஒரு ஆசிரமத்தை கண்டுவரச் சென்றோம். உறவினர் தேவி உபாசகர். வயதில் மிகப் பெரியவர், ஆழ்ந்த பக்தி உடையவர். சாதுக்கள் என்றாலே வயதைப் பொருட்படுத்தாமல் காலில் விழுந்து ஆசி கோருபவர்.

எதிர்பாராத விதமாக ஆசிரம அதிபதியின் தரிசனமும் அன்று கிடைத்தது. அவர் ஆசிரம திட்டங்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் எப்படி இறைவனே அதற்கான தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதையும் கூறினார். எல்லாம் முடிந்து வீடு திரும்புகையில் பலமான சர்ச்சை. அவர்களுக்கு பணம் எவ்வாறு வருகிறது, இந்த படாடோபம் அவசியம்தானா, கள்ளப் பணத்தை ஒளிக்கும் வழியிது இப்படி பலவாறான பேச்சு எங்களிடையே ஏற்பட்டது.

அப்போது அந்த பெரியவர் சொன்னது
”மனசுக்கு ஒட்டினா திரும்பவும் போங்க. இல்லேன்னா விட்டுங்க. கடவுளோட சித்தத்தில ஒரு சில காரியங்களை ஒரு சிலரை வச்சு ஏதோ ஒரு வகையில நடத்தணும்-னு இருக்கும். அதைப் புரிஞ்சுக்க நம்மால முடியாது.

அவதூறான பேச்சினால் அவங்களை நாம மாத்த முடியாது.
ஆனால் கடவுளின்
பார்வையில் நம்மை நாமே தாழ்த்திக்கிறோம் என்பது மட்டும் நிஜம்.
காலப்போக்கிலே
நல்லது நிற்கும்,அல்லாதது அடிச்சிகிட்டு போயிடும்.
நாம பேசி என்ன பிரயோசனம்?”


நம்முடைய பகுத்தறிவிற்கு கடிவாளம் எங்கே இருக்கிறது என்பதை அவர் நன்றாகச் சுட்டிக் காட்டினார் என்றே நினைக்க வேண்டியிருந்தது.

தங்களை மகான்களாகக் காட்டிக் கொண்டவர்கள் பலரும் எந்த மகிமையும் இல்லாமலே மறைந்து விட்டனர்.

அதே சமயம் எந்த மகானைத்தான் சமூகம் எள்ளி நகையாடாமல் விட்டிருக்கிறது?

உண்மையான மகாத்மாவுக்கு சமூகத்தின் அங்கீகரிப்பால் ஆவது ஒன்றும் இல்லை.

ஆகையால் இவற்றை பற்றி நாம் செய்யும் எந்த ஒரு தீர்மானமும் நடுநிலைமை இல்லாமல் போய்விடும். நடு நிலைமை இல்லாத சொற்களால் செயல்களால் கெடுதல் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.

கண்டிப்பாக சாதகனின் நோக்கம் அதுவல்ல. அப்படியானால், பெரியவர் சொன்னது போல வாய்மூடி மௌனியாக யாவும் இறைவன் செயல் என்றிருப்பதே உத்தமம்.

அப்பப்பா ! இந்த ஆராய்ச்சி செய்யும் மனதினால் எவ்வளவு சிக்கல்கள்.

படிப்பறிவற்ற எளிய மனம் படைத்தவனுக்கு நம்பிக்கையின் பலத்திலேயே இறைவன் காட்சி கிட்டும். ஆனால் அறிவினால் வரும் ஆராயும் மனப்பான்மை, நம்பிக்கையின் மூலம் எழும் விசுவாசத்தை தகர்த்து முதலுக்கே மோசம் உண்டாக்குகிறது. மகான்களின் முன்னிலையில் இத்தகைய குதர்க்க புத்தியோடு போனால் நாம் மூடர்கள் தாமே. எனவே மூடர்கள் என்று கபீர் சொல்வதில் தவறேதும் இல்லை.

வாசலில் செருப்பை கழற்றிவிட்டு கோவிலுக்குள் செல்வது போல் ஆன்மீகத்தை அணுகும்போது அறிவு தரும் ஆணவத்தை கழற்றிவிட்டு உள்ளே புக வேண்டும். செருப்பு காலுக்கு தரும் பாதுகாப்பு வெளியே வீதிக்கு மட்டுமே. அதுபோல் அறிவு தரும் பாதுகாப்பு வெளி உலக விவகாரங்களுக்கு மட்டுமே. இறை உலகத்திற்கு உள்ளே தேவைப்படுவது நம்பிக்கை ஒன்றே.

எவ்வளவு நாள் வாழ்ந்திருப்போம் எப்போது மரணம் வருமோ தெரியாது. சிவனே என்று அவன் புகழைக் கேட்டு, பாடி அர்ச்சித்தாலே நல்வினை பெருகி அவனடி சேரலாமே பின்னெதற்கு வீணாக உன்னைப் பற்றிய எண்ணங்களிலே உழல்கிறாய் என்று சம்பந்த பெருமான் மனதுக்கு (நமக்கு) செய்யும் உபதேசமும் அந்த நம்பிக்கையை பலப்படுத்தவே.

இங்கு அன்பே பிரதானம். அதனால் அதில் வெற்றி நிச்சயம்.

யாவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்

9 comments:

  1. அருமையான, நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய செய்தி. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ரொம்ப அழகாக சொல்வார் - மாம்பழம் சாப்பிட வந்தவன் அந்த வேலையை கவனிக்காமல், இருக்கிற மரத்தையும் கிளையையும் இலையையும் பற்றி தெரிந்து கொள்வதால் என்ன ஆகப் போகிறது என்று. Ignorance is bliss :)

    நன்றிகளுடன் விஜயதசமி வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. மிகவும் உண்மையான வார்த்தைகள். நாம் இப்படித்தான் நம் அறிவுக்குப்பைகளை பைகளில் சேர்த்து வைத்துக்கொண்டே உண்மையான இரத்தினம் கிடைக்கும் போது கூட இந்த குப்பைகளோடு ஒப்புமை படுத்தியே வீணடித்துக்கொள்கிறோம். திருவண்ணாமலையில் சித்தியான கடவுளின் குழந்தை அடியார்க்கு நல்லான், தன்னை வெறும் பைத்தியக்காரன் என்றும் பிச்சைக்காரன் என்றும் கூறிக்கொண்டே இந்த மானுடத்திற்கு மிகப்பெரும் வழிகாட்டுதல்களை விட்டுச்சென்றிருக்கிறார். ஆனாலும் அங்கும் எங்கும் எதைப்பற்றியும் விமர்சிக்கவும் அங்கு தன் அறிவுக்குப்பையை அள்ளித்தெறிக்கவும் ஆட்களுண்டு... என்ன செய்ய மீண்டும் மீண்டும் வாசித்து இருத்திக்கொள்ளவேண்டிய பதிவு. நேற்றுதான் எங்கேயோ வாசித்தேன்.. அறிந்துகொள்வது மட்டுமே அறிவாகிவிடாது...மிக்க நன்றி... மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. வருக கவிநயா,

    //மாம்பழம் சாப்பிட வந்தவன் அந்த வேலையை கவனிக்காமல்....//

    அவன் அனுப்பி வைச்ச வேலையை புரிஞ்சுக்காததாலே வருகிற குழப்பம்தானே இதெல்லாம் :)

    நன்றி

    ReplyDelete
  4. வாங்க கிருத்திகா

    //கடவுளின் குழந்தை அடியார்க்கு நல்லான், தன்னை வெறும் பைத்தியக்காரன் என்றும் பிச்சைக்காரன் என்றும் கூறிக்கொண்டே இந்த மானுடத்திற்கு மிகப்பெரும் வழிகாட்டுதல்களை விட்டுச்சென்றிருக்கிறார் //

    என் ஆர்வத்தை தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

    //மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

    கருத்துப் பறிமாற்றத்திற்காக இருப்பது தானே பின்னூட்டம். அதில் நீளம் என்ன கணக்கு. மன்னிப்பெல்லாம் எதற்கு ! :)
    தொடர்ந்து சொல்லுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  5. பதிவிற்கு மிக்க நன்றி. அருமையான கருத்துக்கள், மிக எளிய, விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அளித்ததற்கு நன்றி.

    இதே கருத்தைதான் கோவி அவர்களின் இன்றய பதிவின் பின்னூட்டத்தில் சொல்ல நினைத்தேன், சரியாக சொல்லமுடியவில்லை.

    ReplyDelete
  6. நல்வரவு கர்மா,

    தங்களுக்கு பதிவு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுடைய வலைப்பூவும் கண்டேன். ஆன்மீகத்தில் தங்களுக்கு இருக்கும் நாட்டம் கண்டு மகிழ்ச்சி. அடிக்கடி வந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  7. திரு தேவராஜன் அவர்கள் சாய்க்காடு என்பது மயானம் என்ற பொருளில் வராது அது திருச்சாய்க்காடு தலத்தில் உள்ள இறைவனை குறிப்பதாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. தவறு திருத்தப்பட்டுவிட்டது. அவர் மேலும் சொல்லியுள்ளது

    இறைவனை நாவினால் நவின்றேத்துவதை ஆழ்வார்களும் பல இடங்களில் பாடியுள்ளனர். ( ஏத்துதல் - புகழ்தல் )

    ”தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா !
    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்வதர்சிந: !!”

    எனும் கீதா ச்லோகத்திற்கான விரிவுரையில் ஸ்வாமி ராம் ஸுக தாஸ் அவர்கள் திறந்த மனத்துடனேயே ஞானியரை அணுக வேண்டும் என்பதை மிகத்தெளிவாகவும், விரிவாகவும் அருளியுள்ளார்கள்.
    பல்வேறு ஸந்தர்பங்களில், பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய, பல்வேறு புலங்களையும், மொழிகளையும் சார்ந்த மெய்யடியார்கள் ஒரே குரலில் பேசியுள்ளமை வியப்பையே தருகிறது.

    தேவ்


    நன்றி தேவராஜன் அவர்களே

    ReplyDelete
  8. /அதுபோல் அறிவு தரும் பாதுகாப்பு வெளி உலக விவகாரங்களுக்கு மட்டுமே. இறை உலகத்திற்கு உள்ளே தேவைப்படுவது நம்பிக்கை ஒன்றே.//
    சத்தியமான வார்த்தைகள்.
    சமீபத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் பெரிய பாடகர் ஒருவர் பற்றி பேச்சு வந்தது. அவரது ஈகோ பெரிதாக வெளிப்படுகிறது என்பது நண்பரின் வாதம். அவர் செய்யும் சின்னச்சின்ன விஷயங்களையும், பெரிதாக்கி, அவை அப்பாடகரின் ஈகோவின் வெளிப்பாடுதான் என்றார் நண்பர். அவர் சொல்லுவது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதைப்பற்றி பேசுவதால், நமக்கென்ன பயன்?. ஏதுமில்லை.

    ReplyDelete
  9. வருக ஜீவா.

    //அவை அப்பாடகரின் ஈகோவின் வெளிப்பாடுதான் என்றார் நண்பர். அவர் சொல்லுவது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதைப்பற்றி பேசுவதால், நமக்கென்ன பயன்?. ஏதுமில்லை //

    எனக்குப் பிடித்த ஒரு ஆங்கில மேற்கோள் ஒன்று,

    Great men discuss Ideas;
    the mediocre discuss Events;
    the lowly discuss about Others

    நீங்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு சந்தர்பத்திலும் உரையாடல்களின் போக்கை கண்டறிய இதை உரைக்கல்லாக பயன்படுத்திக்கொள்வேன். இதனால் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கலாம். இது மகான்களின் விஷயத்திற்குப் பொருந்தாது. சாதாரண லௌகீக விவகாரங்களுக்கு மட்டுமே. :)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி