Thursday, December 18, 2008

ஈரக் கம்பளம் சுமையதிகம்

உப்பு வியாபாரி ஒருவன் தன் கழுதை மேல் உப்பு மூட்டையை ஏற்றி ஊர் ஊராகச் சென்று உப்பு விற்று வருவது வழக்கம்.

ஒருநாள் வழியிலே ஒரு ஓடையை கடக்க வேண்டியிருந்தது. கடக்கும் போது அடி சறுக்கி கழுதை நீரில் விழுந்தது. உப்பெல்லாம் நீரில் கரைந்து முதுகில் இருந்த பாரமெல்லாம் காணாமல் போயிற்று. வியாபாரியோ தன் கெட்ட நேரத்தை நொந்து கொள்கையில் கழுதைக்கு பெரும் ஆச்சரியம், கொஞ்ச நேரத்திலேயே பெரும் சுமை மாயமானதைப் பற்றி. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அப்பாதையில் போகையில் அதே ஓடை. இம்முறை வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்தது. வெற்றி ! வெற்றி!! இம்முறையும் சுமையெல்லாம் மாயம்.

அடுத்தடுத்து சில முறை இது தொடர்ந்து நிகழவே வியாபாரிக்கு கழுதையின் தந்திரம் புரிந்தது. அவன் கழுதையை ஒரு வண்ணானுக்கு விற்று விட்டு வேறு ஒரு கழுதையை வாங்கி வியாபரத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

கழுதை அறியுமோ சுமையின் தரம். வண்ணான் தன் துணி பொதியை ஏற்றிக்கொண்டு அதே ஓடைக்குச் சென்றான். துவைப்பதற்கு சரியான இடம் தேடி ஓடையில் நடத்திச் சென்றான். கழுதைக்கு மட்டில்லா மகிழ்ச்சி. புது எஜமானனிடத்தும் தன் புத்திசாலித்தனத்தை நம்பி கால் இடறியது போல் நீரில் விழுந்தது. நீர் பொதியில் புகுந்ததும் பொதியின் பாரம் கூடியது. எத்தனை முயற்சித்தும் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. வண்ணானும் விடுவதாயில்லை. அதை கோலினால் புடைக்க ஆரம்பித்தான்.நேரமாக ஆக பாரம் கூடிக்கொண்டே போனது. கழுதையோ அடி வாங்கி துவண்டு போனது.

கபீரின் ஒரு ஈரடி மேற்கண்ட கதையை நினைவு படுத்தியதால் கதையை முதலில் சொல்லிவிட்டேன். கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இப்போது ஈரடியை பார்ப்போம்.

अति हठ मत कर बावरे, हठ से बात न होय |
ज्यूं ज्यूं भीजे कामरी, त्यूं त्यूं भारी होय ||


அதிப் பிடிவாதம் வேண்டா,வாதத்தில் இல்லை சமாதானம்
நனைதல் கூடக் கூடவே, கம்பளம் தன் சுமையும் கூடும்

மாற்று :
வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்

மிக எளிமையான உதாரணம். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. கழுதைக்கு வந்த மயக்கத்தை போல நமக்கும் அறிவு மயக்கம் வந்துவிட்டால் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே மெச்சிக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் அதைப் போலவே அஞ்ஞானிகளாகி விடுகிறோம். அப்போது கீழிருப்பவர்கள் வாயை அடக்குகிறோம். மேலிருப்பவரோடு விவாதம் செய்வதோ தட்டிக் கழிப்பதோ செய்கிறோம்.

ஏதோ ஒரு வகையில் வாதம் முடிவுக்கு வந்த பின்னரும் பலநாட்களுக்கு மனதிற்குள்ளே அதே வாத பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருப்போம்.‘அப்படி பேசாது இப்படி சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ’ என்று உள்ளுக்குள்ளே உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும். இதை கம்பளத்தில் ஈரம் ஊறியது போல மனம் இந்த வாதப் பிரதிவாதங்களில் ஊறுகிறது என்ற வகையில் ஒப்பிடுகிறார் கபீர்.

இப்படி மனம் சதா ..நானே சரி... நானே சரி ..என்ற எண்ணத்தில் ஊறும் போது உண்மை நிலையை உணர தவறி விடுகிறது.

ஈரமான கம்பளியை யாராவது போர்த்திக் கொள்ள முடியுமா? குளிர் நேரத்தில் கூட அதை யாரும் சீந்த மாட்டார்களே. அது போல பிறர் நம்மை தள்ளி வைத்து விடுகிறார்கள்.

வீண் விவாதங்களால் மனக்கசப்பு வளர்கிறது. அன்பு முறியும் அபாயம் ஏற்படுகிறது. பொதுவாக இது யாவருக்கும் பொருந்தும்.

நிறைகுடம் தளும்பாது, Empty wagons rattle the most என்றெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம். மனமுதிர்ச்சி இல்லாதவர்களே விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

உண்மையை உணர்வதற்கு விவாதங்கள் தேவையில்லை.அமைதி காத்தால் போதும்.
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த
முற்றுணர்வோர் ஒன்று மொழியாரே- வெற்றி பெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும் பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி. (நீதி வெண்பா-35)

(ஆன்று அமைந்த முற்று உணர்வோர்= கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்)


அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். மனதின் போக்கைக்குறித்து குருவிடம் இவ்விதம் பிரார்த்திக்கிறார்.
.......
......
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து
ராவண ஆகாரமாகி
இதயவெளி எங்கணும் தன்னரசு நாடு செய்து
இருக்கும் இதனொடு எந்நேரமும்
வாங்காநி லா அடிமை போராட முடியுமோ
மௌன உபதேச குருவே
மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்
மரபில் வரு மௌன குருவே .


மௌனத்தின் அருமையை உணர்ந்தவர் அவர். ஆதலால் பலவிதமான தர்க்கங்களில் ஈடுபடும் பண்டிதர்களின் போக்கைக் கண்டு இன்னொரு பாடலில் பரிகாசம் செய்கிறார்.

பூதலயமாகின்ற மாயையை முதல் என்பர் சிலர்
பொறிபுலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர்
கரண முடிவென்பர் சிலர், குணம்
போன இடமென்பர் சிலபேர்,
நாதவடிவென்பர்,சிலர் விந்துமயமென்பர் சிலர்
நட்ட நடுவே இருந்த
நாமென்பர் சிலர்; உருவமாம் என்பர் சிலர்
நாடில் அருவென்பர் சிலபேர்,
பேதமற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர்
பேசில் அருளென்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட சூனியம் அதென்பர் சில பேர்
பிறவுமே மொழிவர்;இவையால்
பாதரசமாய் மனது சஞ்சலப்படுமல்லால்
பரம சுக நிட்டை பெறுமோ
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே.


உலகிலே நாம் வந்திருக்கும் காரியம் ”பரமசுக நிட்டை பெறுதல்”. அதை விட்டு விட்டு சிருஷ்டியின் குண விசேஷங்களை பல்வேறு விதமாக ஆராய்ந்து தர்க்கம் செய்வதால் மனதுக்கு சஞ்சலம் மட்டுமே எஞ்சுகிறது. பாதரசம் சிந்தினால் அதை பிடித்து எடுக்க முடியாது. தெர்மாமீட்டரை உடைத்தவர்களுக்கு அது தெரியும். நாலாப்பக்கமும் சிதறி ஓடும் அதை மீண்டும் பிடித்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பல்வேறு விவாதங்களால் மனமும் அதைப் போலவே சிதறி ஓடுகிறது.

மன ஒருமையில்லாது போனால் எந்த காரியமும் கை கூடாது. மன ஒருமைக்கு மௌனம் சாதனம்.அதற்கு வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது ஆரம்பப் பாடம்.

ஆரம்பப்பாடம் சரியாக இருந்தால்தானே பின்னால் கற்கப் போவது நிற்கும். இல்லாவிட்டால் கதையில் வந்த கழுதையை போல அவஸ்தையை அனுபவிக்க வேண்டியிருக்கும்

26 comments:

  1. //வீண் விவாதங்களால் மனக்கசப்பு வளர்கிறது. அன்பு முறியும் அபாயம் ஏற்படுகிறது. பொதுவாக இது யாவருக்கும் பொருந்தும்.//


    கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகங்கள்.
    அன்பு முறிதல் மட்டுமல்ல; ஆரோக்கியமும் கெடுகிறது.

    பொருள் பொதிந்த கட்டுரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அப்பா!!!!!!!!! சொல்லமுடியாத மன நிறைவும், அமைதியும்!!! வார்த்தைகள் வரலை, நன்றி.

    ReplyDelete
  3. நல்வரவு ஜீவி ஐயா

    //ஆரோக்கியமும் கெடுகிறது //

    சரியாகச் சொன்னீர்கள். ஒன்றுக்கு ஒன்று சங்கிலி விளைவுகள் (செயின் ரியாக்‌ஷன்)தானே.

    வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி

    ReplyDelete
  4. கீதா மேடம் வருகைக்கு நன்றி.

    //..வார்த்தைகள் வரலை.//

    இந்த கட்டுரைக்கு அவ்வளவு தகுதி இருக்கான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. இல்லே ஏதேனும் உ.கு. தா? :))

    நீங்க எப்படி சொன்னாலும் ஆசீர்வாதம்தான். நன்றி

    ReplyDelete
  5. //ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். .......சிருஷ்டியின் குண் விசேஷங்களை பல்வேறு விதமாக ஆராய்ந்து தர்க்கம் செய்வதால் மனதுக்கு சஞ்சலம் மட்டுமே எஞ்சுகிறது. //

    மிக உண்மை...


    //கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வாசகங்கள்.
    அன்பு முறிதல் மட்டுமல்ல; ஆரோக்கியமும் கெடுகிறது.

    பொருள் பொதிந்த கட்டுரைக்கு மிக்க நன்றி.//

    ரிப்பீட்டே!!!

    மிக அழகான இடுகை, எப்போதும் போல கலக்கிட்டீங்க..மிக்க நன்றி.

    ReplyDelete
  6. சுப்பு ரத்தினமே ! சும்மா இரு!

    சுற்றம், உற்றம் யாவையும் சுமையே !
    கற்றதும் சுமையே நீ பெற்றதும் சுமையே

    "கதையில் வந்த கழுதை"யும் நீயே !!
    கரும வினையென சுமப்பாய் இனியே.

    ReplyDelete
  7. //இல்லே ஏதேனும் உ.கு. தா? :))//

    ஸ்மைலியைப் பார்த்து ஆறுதல் அடைந்தாலும் கொஞ்சம் வருத்தம் தான். மற்றபடி என்னுடைய இந்தப் பின்னூட்டம் உங்களோட எல்லாப் பதிவுகளுக்குமே. அதையும் குறிப்பிட்டிருக்கலாமோ??? குறிப்பிடவில்லை. என் தவறு. :(

    ReplyDelete
  8. நல்வரவு மதுரையம்பதி,

    பாராட்டுகளுக்கு நன்றி. மீண்டும் வருக. :)

    ReplyDelete
  9. நல்வரவு சுப்புரத்தினம் ஐயா,

    //கற்றதும் சுமையே நீ பெற்றதும் சுமையே
    கரும வினையென சுமப்பாய் இனியே//

    தங்கள் பின்னூட்டத்தில் யாவருக்கும் பொருந்தும் ஒரு அழகிய ஈரடி கிடைத்தது. மிக்க நன்றி

    ReplyDelete
  10. கீதா மேடம்!

    நானும் அந்த கழுதை மாதிரி மயக்கத்தில மாட்டிக்கக் கூடாது இல்லையா. அதனாலே என் தலையில நானே குட்டிக்கிறதுக்காக எழுதினது அது. அதுக்கு போயி ...

    //....கொஞ்சம் வருத்தம் தான்//

    ஸாரி. உங்களுக்கு பெரிய மனசு. அதனாலே ஒரு தடவை பெரிசாவே மன்னிச்சுடுங்க.

    //..மற்றபடி என்னுடைய இந்தப் பின்னூட்டம் உங்களோட எல்லாப் பதிவுகளுக்குமே//

    இப்படி சொல்லியாச்சுன்னு இனிமே எட்டிப்பாக்காம இருந்திடாதீங்க. தவறாம வாங்க :)))

    ReplyDelete
  11. கதையும் உவமையும் நெஞ்சில் நின்றது!

    கழுதையைப்போல் அன்றாடம்
    ஆசைவலையில் சிக்கி நல் அறிவிழந்து,
    பாசம் வளரும் பாங்கில் மயங்கி,
    மோசம் போகும் எம்
    வேஷம் கலைவது எப்போ,
    வேடிக்கை போவது எப்போ!

    //வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
    வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்//
    மாற்றே பிடித்தது.

    வாதம் வளர்ந்தால் பிடிவாதம்,
    வாதம் தந்திடாது சமாதானம்,
    வேண்டாமே வீண்வாதம் - சுமையாம்
    நனைந்த கம்பளம் தனை நினை.

    வெண்பா வடிவில்:
    வாதமும் நாளும் வரிசையாய் நந்துமாம்
    ஆதலால் சாந்தம் அகலும் - நிதமும்
    நினைவில் கொள்வாய் - சுமையாய் குமையும்
    நனைந்திட்ட கம்பள மாம்.

    ReplyDelete
  12. நன்றி ஜீவா

    நல்ல வெண்பா முயற்சி. வாழ்த்துகள்.

    //வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
    வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்//
    மாற்றே பிடித்தது.


    இந்த ஈரடியின் உயிர் நாடி “ज्यूं ज्यूं भीजे कामरी, त्यूं त्यूं भारी होय ”
    ”எத்தனைக் கெத்தனை கம்பளம் நனையுமோ,அத்தனைக் கத்தனை பாரியாகும்” (பாரி’யாதல்= எடை கூடுதல்)

    மொழிபெயர்ப்பில் அந்த உணர்வை முழு அளவில் கொண்டுவர முடியவில்லை என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  13. //எத்தனைக் கெத்தனை கம்பளம் நனையுமோ,அத்தனைக் கத்தனை பாரியாகும்//
    ஆ, அப்படியா ஐயா. அதுவும் நல்ல, முக்கியமான குறிப்பே. ஈற்றடியில் எல்லாக் குறிப்பையும் சாறாகப் பிழிந்து சாரத்தினைச் சொல்வது கடினமே. அங்கேதான் கபீர் திகழ்கிறார்!

    பல அடிகளில் என்னைப்போல் எல்லோரும் எழுதலாம்:
    வாதம் சேர்க்க வாதம் வளரும்

    வாதம் வளர சாந்தம் அகலும்

    எத்தனை வாதம் அத்தனை பாரம்

    எத்தனை ஈரம் அத்தனை பாரம்

    அடடா, கம்பளம் சுமை அதிகமாகுதே
    அல்லல் யாவும் புடைக்கிறதே

    அறியாப் பேதை கேட்பேனோ கபீரனை.

    ReplyDelete
  14. // எத்தனைக் கெத்தனை கம்பளம் நனையுமோ,அத்தனைக் கத்தனை பாரியாகும்” //

    கம்பளம் நனைய நனைய, கனக்கும் உடல் அழுத்தும்.

    ReplyDelete
  15. ஜீவா
    தங்களது ஆர்வம் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    தாங்கள் எழுதிய முதல் நான்கு வரிகளை எண்சீர் ஈரடியாகக் கொள்ளலாம். (குறள் வெண் செந்துறை அமைப்பில் அடிக்கு நான்கு சீர்கள் குறையாமல் எத்தனை சீர்கள் வேண்டுமானாலும் வரலாம். இரண்டு அடிகளும் சமச்சீராக இருக்க வேண்டும்.) மூலத்தில் சொல்லப்படாததால் கடைசி மூன்று அடிகளை விட்டு விடலாம்.

    மொழிபெயர்ப்பு என்பது மொழியின் கட்டுப்பாடுகளை அனுசரித்து மூலக்கவிதையின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும் என்பது என் அணுகுமுறை. அந்த கவிஞர் சொல்லாதவற்றை மொழி பெயர்ப்பாளர் சொல்வதாகவும் ஆகி விடக்கூடாது.

    இப்போது-தங்களுக்கு பிடித்திருந்த- இடுகையில் சொல்லப்பட்ட மாற்று மொழிபெயர்ப்பை பார்ப்போம்

    ///வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
    வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்///

    மூலத்தில் முதல் வரி
    अति हठ मत कर बावरे, -ஆத்தி! ரொம்பப் பிடிவாதம் செய்யாதே

    (பாவ்ரே ! என்பது ஆச்சரியத்தை குறிக்கும் சொல். அதற்கு இணையாக ஆத்தி! என்னும் செட்டிநாட்டு வழக்கைச் சொல்லலாம்)

    हठ से बात न होय - பிடிவாதத்தால் பேச்சு பயன் தராது

    இதில் ”வாதம் வளர்க்கும் பிடிவாதம்” என்று பொருள் தரும்படியாக கபீர் சொல்லவில்லை. ஆனால் அது யாவரும் அறிந்த உண்மை. ஏற்கனவே சொன்னபடி இரண்டாம் அடியிலும் அவருடைய சொற்பிரயோகம் வரவில்லை என்றும் தோன்றியது. அதனால்தான் அதை சரியான மொழி பெயர்ப்பு என்று மனம் ஒப்பவில்லை.
    ஆனால் தனியாகப் படிக்கும் பொழுது வார்த்தைகள் எளிமையாக அமைந்திருக்கிறது என்று தோன்றியதால் அதை ’மாற்று’ என்னும் அந்தஸ்துடன் எழுதி வைத்தேன்.

    வாசகராகிய தங்களுக்கு அது பிடித்திருப்பது கண்டு, எழுதியது வீண் போகவில்லை என்று தோன்றுகிறது. மிக்க நன்றி

    ReplyDelete
  16. நன்றி சுப்புரத்தினம் ஐயா

    //கம்பளம் நனைய நனைய, கனக்கும் உடல் அழுத்தும் //

    போர்த்துக் கொள்வது இருக்கட்டும் வெய்யிலில் காயப் போடுவதற்கே பெரும் சிரமம். தில்லி குளிரில் சிறுகுழந்தைகளின் ”இரவு போக்கில்” பெரியவர்கள் படும்பாடு பட்டவர்களுக்கே தெரியும் :))

    ReplyDelete
  17. சரியான நேரத்தில் வந்த பதிவுன்னு தோணுது.
    மனசு நிறைகிறது.

    ReplyDelete
  18. நன்றி திவா

    வரவிற்கும் கருத்து சொன்னதற்கும்.

    //சரியான நேரத்தில் வந்த பதிவுன்னு தோணுது. //

    விவாதம் எங்கேயாவது நடந்து கொண்டிருக்கிறதா என்ன ? :))

    ReplyDelete
  19. //மிக எளிமையான உதாரணம். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது.//

    அருமையான கருத்து

    இதைப் படித்தப் பொழுது

    நித்யானந்தரின் வரிகள் தான்
    நினைவிற்கு வருகிறது

    பக்கவாதம் உடலை மாத்திரம் தான்
    மூடமாக்கும்.

    பிடிவாதம் உடல், உள்ளம் இரண்டையும் மூடமாக்கும்

    ReplyDelete
  20. வருக திகழ்மிளிர்

    மிக அற்புதமான நித்தியானந்தரின் வரிகளை எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  21. ஆத்தி! அருமையாச் சொல்லீட்டீகளே!

    பேசாமல் இருப்பதே பேரின்பம்னு ஒருமுறை கவிதை எழுதினேன். அது நினைவுக்கு வருது. மௌனத்தைப் பழகிக் கொண்டால் மற்றதெல்லாம் தொடரும் போலும்.

    சுப்புதாத்தா வரிகளையும் திகழ்மிளிர் எடுத்துக்காட்டிய வரிகளையும் ஜீவாவின் வரிகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
  22. சும்மா இருக்கீயளா கவிநயா ,,ஏன் லேட்டு? வந்துடீயளே ரொம்ப சந்தோஸம்.

    (தி.மோ. ஜில் ஜில் ரமாமணி ஸ்டலில் படித்துக்க்கொள்ளவும் )

    //பேசாமல் இருப்பதே பேரின்பம்னு ஒருமுறை கவிதை எழுதினேன்.//

    இதுவரை பதிந்த மாதிரி தெரியலியே. சீக்கிரம் பதியவும்.

    நன்றி

    ReplyDelete
  23. "அப்படி பேசாது இப்படி சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ’ என்று உள்ளுக்குள்ளே உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும். இதை கம்பளத்தில் ஈரம் ஊறியது போல மனம் இந்த வாதப் பிரதிவாதங்களில் ஊறுகிறது என்ற வகையில் ஒப்பிடுகிறார் கபீர்.

    இப்படி மனம் சதா ..நானே சரி... நானே சரி ..என்ற எண்ணத்தில் ஊறும் போது உண்மை நிலையை உணர தவறி விடுகிறது."
    உண்மைதான் நான் சரி, நான் மட்டுமே சரி என்பதான நினைப்பு நம்மை நம் சுற்றம் மற்றும் நட்பு வட்டத்தில் இருந்து பிரித்து எரிந்து விடும். தேவையற்ற வாதப்பிரதிவாதங்களையும் இதையே செய்கிறது... நன்றி மனதால் வெறும் கல்வியறிவாகவே வைத்துள்ள இவ்விஷயங்களை மீண்டும் அசைபோட வைக்கிறது தங்கள் பதிவு. நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வருக கிருத்திகா

    //,,,இவ்விஷயங்களை மீண்டும் அசைபோட வைக்கிறது தங்கள் பதிவு. நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் //

    திரும்பத் திரும்ப அசை போட்டால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்(மனசுக்குள்) இறங்கும். அதனால் தானே ’சத்சங்கம் செய்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

    அந்த வகையில் இந்த பதிவு உதவியிருந்தால் எழுதிய பயன் அடைந்து விட்டது :)
    பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
    புத்தாண்டு வாழ்த்துகள் .

    ReplyDelete
  25. வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
    வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்..//

    அருமை.

    //திரும்பத் திரும்ப அசை போட்டால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்(மனசுக்குள்) இறங்கும். அதனால் தானே ’சத்சங்கம் செய்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியவர்கள்//

    உண்மை.

    ReplyDelete
  26. நல்வரவு காேமதி மேடம்
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி