Wednesday, January 21, 2009

கல்லா மூடர் கருத்தறியார்

புனித தேவனின் திருமொழிகள் புத்தகத்தின் மேல் கையிட்டு சத்தியம் செய்து நான் சொல்கிறேன் - என் தவறை உணர்ந்ததாக உறுதி கூறுகிறேன். என் தவறு அர்த்தமற்ற என் குறிக்கோளினாலும் கர்வத்தாலும் ஏற்பட்டது. பூமியானது சூரியனை சுற்றி வரவில்லை என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்”

மனம் தளர்ந்து, வழக்கு விசாரணையிலிருந்து வெளியேறுகையில் கலீலியோ அருகில் இருப்பவரிடம் கூறியதாக சொல்லப்படுவது Eppur si muove (இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது).


கிபி 1633 ஜூன் 10 ஆம் தேதி இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பிறகு அவருக்கு ஆயுள் முழுவதும் வீட்டுக் காவலில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது. எந்த கட்டுரைகளையும் பிரசுரிக்கவோ, பொதுக் கூட்டங்களிலோ கருத்தரங்குகளில் பங்கு கொள்ளவோ அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

அவர் செய்த தவறு கோப்பர்நிகஸ் என்ற விஞ்ஞானியின் கருத்தை ஏற்று பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற பெரும் உண்மைக்காக வாதாடியதுதான். அது அன்றிருந்த மதக் கோட்பாடுகளுக்கு எதிராக அமைந்தமையால் அதிகாரம் படைத்திருந்த மதகுருமார்கள் தம் விருப்பம் போல் அவரை தண்டிக்க முடிந்தது.

கலீலியோ உரிமைகளுக்காக போராடும் போராளியல்ல. தன் உயிர் கொடுத்து உண்மையை நிலை நாட்டவேண்டிய அவசியமும் இருக்கவில்லை.

உண்மை என்றும் தன் காலிலே தான் நிற்க வல்லது. எனவே மூடர்களுடன் விவாதம் செய்து தன் நாட்களை வீணாக்க விரும்பால் அவர்களின் போக்கிலே சென்று அவர்கள் விரும்பியபடி உறுதி மொழி அளித்து விட்டார்.

அது ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. வீட்டுக்காவலிலே வைக்கப்பட்டிருந்தாலும் மேற்கொண்டு தொலை நோக்குக் கருவி வடிவமைத்தல், கோள்களின் விண்வழி பாதைகள் பற்றி பல ஆராய்சிகளை எஞ்சிய நாட்களில் செய்து அவற்றை எழுதி வைக்கவும் செய்தார். அவர் மறைந்தது 1642 ஜனவரி 8 ஆம் தேதி

என்னே காலத்தின் கட்டாயம் !

அறிவியல் துறையில் அறியப்படும் உண்மைகளை வெளி உபகரணங்களின் மூலம் நிலைநாட்ட இயலுகிறது. ஆனால் ஆன்மீகம் கூறும் உண்மைகளை உணர தத்தம் அனுபவங்களாலேயே தான் முடியும். அந்த அனுபவங்கள் வாய்க்கும் வரை ஆசானின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து சாதனையை தொடரவேண்டும்.

அடிப்படைக் கோட்பாடுகள் எல்லாத் துறையிலும் உண்டு. அவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அத்துறையில் மேற்கொண்டு அறிவை வளர்த்துக் கொண்டு முன்னேற முடியும்.

திரிகோணவிதி கணித முறையை பலரும் அறிவோம். அதன் அறிமுக வகுப்பில் செங்கோண முக்கோணத்தில் sin x, cos x, tan x என்பனவெல்லாம் என்னவென்று விளக்க ஆரம்பிக்கிறார் பாட ஆசிரியர். ஒரு அதிகப் பிரசங்கியான மாணவன் எழுந்து செங்கோணமுக்கோணத்திற்கு மட்டும் ஏன்? பிற வகை முக்கோணக்களுக்கு ஏன் அப்படிப்பட்ட வரைமுறைகளை செய்யக் கூடாது என்று கேட்கிறான். பாவம் ஏனோ ஆசிரியர்க்கு உடனடியாக ஒரு சமாதானமான பதில் தரமுடியவில்லை. அது அப்படித்தான் என்று கூறி உட்காரச் சொல்கிறார். அந்த மாணவனோ விடுவதாயில்லை. அவன் தொடர்ந்து வாதாட ஆரம்பித்ததால் யாவருடைய நேரத்தையும் வீணாக்கினான்.

அங்கே குதர்க்க புத்தியை விட்டு பாடம் கேட்டால் பின்னர் வரும் வகுப்புகளில் பிற வகை முக்கோணங்களையும் முதலில் படித்த பாடத்தின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும் என்ற உண்மை புரிந்திருக்கும்.

அது போலவே ஆன்மீகத்திலும் பலர் எவ்வித முயற்சியும் இல்லாமலே தம் சிற்றறிவைக் கொண்டு சான்றோர்களையும் ஞானிகளையும் ”புத்திசாலித்தனமான” கேள்விகள் கேட்க முற்படுகின்றனர். அத்தகையவர் தொடர்பு சற்றும் பயனில்லை என்கிறார் திருமூலர்.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கவும் கடன் அன்று
கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறியாரே


கல்லாத மூடர் என்று குறிப்பிடுவது உண்மையை ஏற்க விருப்பமில்லாதவர்களை பற்றியதாகும்.

அதை கடைசி வரியில் தீர்மானமாக கல்லாத மூடர் (எனப்படுபவர்), கருத்தறியாரே என்று சொல்வதன் மூலம் அறியலாம். அவர்கள் எழுத்தறிவுள்ளவர்கள் படித்தவர்கள். ஆனால் பொறுப்பற்ற முறையில் தர்க்கம் செய்பவர்கள்.

எனவே தான் கல்லாதார் (எழுத்தறிவு இல்லாதவ்ர்) நல்லராம் என்று படித்தவர்களைக் காட்டிலும் படிப்பறில்லாதவர்களை நல்லவர்கள் என்று போற்றுகிறார். அவர்கள் பிறரை தவறான வழியில் இட்டுச் செல்ல முடியாதல்லவா !

கபீர்தாஸரும் மூடரைப் பற்றி கூறுகிறார். அவர்களுடைய இலட்சணங்கள் என்னென்ன ?

मूरख शब्द न मानई, धर्म न सुनै विचार ।
सत्य शब्द नहीँ खोजई, जावै जम के द्वार ॥


கேளார் மூடர், மேலோர் உரை; தன்ம விசாரம் செய்யார்
தேடார், மெய்பொருள் அருமை; தன்மன் வாயில் சேர்வார்


(தன்மம்=தர்மம்; தன்ம விசாரம்= தர்ம அதர்மங்களை ஆராய்து அறிவது; தன்மன் =யமன்)

’தர்ம தேவதை என்றே யமன் குறிக்கப்படுகிறான். அதனால் தான் எமதர்மன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒவ்வொருவருடைய தர்ம அதர்ம கர்ம வினைகளை அனுசரித்து அவர்களுக்கேற்ற பிறவிகளையும், அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்களையும் முடிவு செய்வதால் அவனுக்கு அந்த பெயர்.

ஒவ்வொருவருக்கும் அவரது கர்ம வினைகளை அனுசரித்து அவர்களுக்கேற்ற பிறவிகளும் வாழ்க்கை முறையும் அமைகிறது.

இது நமதுஆன்மீகத்தின் அடிப்படை கோட்பாடு. இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பிறவித்தளை அறுத்தலைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்கவோ உண்மை அறிந்த ஞானிகளின் கூற்றுகளை புரிந்து கொள்ளவோ முடியும்.

அவற்றை ஏற்க மறுத்து குதர்க்கம் பேசும் மக்களை ”...காணவும் ஆகாது”, “... கேட்கக் கடன் அன்று” என்றார் திருமூலர். ஏனெனில் அவர்கள் மீண்டும் மீண்டும் யமனுடைய பிடியிலே சிக்கித் தவிப்பவர்கள். அவர்களுக்கு விடுதலை வேட்கை யில்லை. அவர்களால் நம்முடைய மனது குழப்பம் அடையுமே தவிர தெளிவு ஏற்படாது.

அவர்கள் ஏன் அப்படி் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை சொல்கிறது நீதிவெண்பா.

கன்மமே பூரித்த காயத்தோர் தம் செவியில்
தன்ம நூல் புக்காலும் தங்காதே - சன்மம் எலும்
புண்டு ச்மிக்கும் நாய், ஊண் ஆவின் நெய் அதனை
உண்டு சமிக்குமோ ஓது.


கன்மமே பூரித்த காயத்தோர் செவியில்= பாவம் நிறைந்த உடம்பை உடையவர் காதில்;
தன்ம நூல் புக்காலும் தங்காதே = புண்ணிய நூற் பொருள் நுழைந்தாலும் தங்காது
சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்
ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ
ஓது = சொல்


ஒரு வகையில் மூடர்களின் போக்கை பிறவி குணம் என்றே சொல்கிறது நீதிவெண்பா. குறிப்பிட்ட நபர்களின் கர்ம வினைகளை ஒட்டியே அவர்களுக்கு ஆன்மீக நாட்டமும் ஞானம் கைகூடுவதும் கூட நடக்க வாய்ப்புண்டு.

இதனால் மூடர்கள் என்று யாரையும் வேற்றுமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் போக்கு அறிந்து முரண்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம் வழியே நாம் போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். நெரிசலான போக்குவரத்து சாலையில் வண்டியோட்டுவது போல. ஏனெனில் சாதகன் போக வேண்டிய பாதை வெகுதூரம்.

பின் குறிப்பு:

मूरख शब्द न मानई, धर्म न सुनै विचार ।
सत्य शब्द नहीँ खोजई, जावै जम के द्वार ॥

மூரக் ஷப்த் ந மானய், தர்ம் ந ஸுநை விசார் |
ஸத்ய ஷப்த் நஹீ கோஜைய், ஜாவை ஜம் கே த்வார் ||

ஷப்த் என்ற வார்த்தைக்கு மேலோர் உரை என்ற வகையில் மேலே பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. பல இடங்களில் ஷப்த் என்ற சொல்லை நாம செபத்திற்கான ‘மந்திரம்’ என்ற வகையிலும் கபீர் கையாண்டு இருக்கிறார். அவ்வகையில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமாயின்

மூடர்கள் மந்திரம் ஒப்பார், கேளார் தன்மம், விசாரம்
தேடார் சத்தியப் பொருளும், போவார் மறலி வாயிலே


(விசாரம் =சத்விசாரம், நற்சிந்தனைகள் ;
மறலி= யமன்)

தர்ம் ந ஸுநை என்றும் ந ஸுநை விசார் என்றும் ”ந ஸுநை” (கேளார்) இடையில் நின்று இருபக்கமும் பொருள் தரும்.

19 comments:

  1. முரண்களுக்கு சிக்கிக் =முரண்களுக்கு"ள்"???????

    கார்ட்டூன் அருமையா இருக்கு, வழக்கம்போல் பொருத்தமான பாடல்களும், அருமையான கருத்தும், கார்ட்டூனை எங்கே இருந்து பிடிச்சீங்க???

    ReplyDelete
  2. //கன்மமே பூரித்த காயத்தோர் செவியில்= பாவம் நிறைந்த உடம்பை உடையவர் காதில்;
    தன்ம நூல் புக்காலும் தங்காதே = புண்ணிய நூற் பொருள் நுழைந்தாலும் தங்காது
    சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்
    ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ
    ஓது = சொல்//

    இதை இங்கே போட்டதும் தான் படிக்க முடிஞ்சது! அவ்வளவு பொடி எழுத்தாப் போட்டிருக்கீங்க! :(

    ReplyDelete
  3. மின்னல் வேகத்தில் வந்து பின்னூட்டமிட்ட கீதா மேடம்

    தவறுகளை சரி பண்ணியாச்சு, நன்றி.

    கார்ட்டூன்; அட சினா- சோனா வை தெரியாதா உங்களுக்கு ? அப்படீன்னா இங்க போய் பாருங்க

    நன்றி

    அப்புறம் கீழே உள்ள Label சினா சோனா வை சுட்டினால் இதுவரை வந்துள்ள எல்லா கார்ட்டூனும் படிக்கக் கிடைக்கும். :))

    ReplyDelete
  4. அருமையான பதிவு!
    விவாதம் இந்த தரம் இல்லை!
    :-))

    ReplyDelete
  5. அடிப்படையைப் புரிஞ்சுக்கவும் அவனருள் வேணும். அவனருளாலே அவன் தாள் வணங்கி...

    //கல்லாதார் நல்லராம்//

    அப்டின்னா நான் ரொம்ப நல்ல பொண்ணு :)

    மற்றுமொரு அருமையான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க திவா,

    பதிவை பாராட்டியதற்கு நன்றி.

    //விவாதம் இந்த தரம் இல்லை!
    :-)) //

    கீதா மேடம் உங்க பின்னூட்டத்த பத்தி சொல்ராறுன்னு நெனக்கிறேன் :))))

    ReplyDelete
  7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிநயா,
    //கல்லாதார் நல்லராம்//

    தாயுமானவரும் அதையேதான் சொல்லியிருக்கிறார்.

    அப்டின்னா நான் ரொம்ப நல்ல பொண்ணு :)

    நல்ல பேர் தேடிக்க இப்படி எல்லாம் வேறெ வழி இருக்கா !:))

    ReplyDelete
  8. அத்தனையும் அருமை

    இதைப் படிக்கும்பொழுது

    ஔவையாரின் குறள்மூலம் தான் நினைவிற்கு வருகிறது.

    கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
    செல்லாத தென்ன செயல்.

    ReplyDelete
  9. //சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்
    ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ
    ஓது = சொல்//

    இது எல்லாம் இன்னும் சின்ன எழுத்திலே தான் இருக்கு! :(((((



    //கீதா மேடம் உங்க பின்னூட்டத்த பத்தி சொல்ராறுன்னு நெனக்கிறேன் :))))//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

    ReplyDelete
  10. நன்றி திகழ்மிளிர்.

    ஔவைக்குறள் எடுத்து காட்டியதற்கு நன்றி. ஆனால் சரியாகப் புரியவில்லை. ஞானவெட்டியான் ஐயா ஒரு தொடர் எழுதி வந்தார். அதன் இணைப்போ அல்லது ஔவைக்குறளுக்கு வேறு ஏதாவது இணைப்போ இருந்தால் தெரிவிக்கவும்.
    நன்றி

    ReplyDelete
  11. ஸாரி மேடம்

    ///எல்லாம் இன்னும் சின்ன எழுத்திலே தான் இருக்கு! :((((( ///

    ஆமாம் HTML கோளாறு. இப்ப சரி பண்ணியாச்சுன்னு நெனக்கிறேன் :)

    ReplyDelete
  12. அருமையான‌ ப‌திவு, உங்க‌ள் ப‌ணி தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  13. நல்வரவு தேனீ,

    கபீரின் வலைப்பூ மணம் இந்த ’தேனீ’யையும் கவர்ந்ததில் ஆனந்தமே. தேன் கொண்டு செல்லுங்கள். மீண்டும் வாருங்கள்.
    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  14. ஆகா, படித்து மிகவும் இரசித்தேன்!

    ReplyDelete
  15. வாங்க ஜீவா

    ரசித்து படித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  16. மின் தமிழ் அன்பர்களை இங்கும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    தேவ்

    ReplyDelete
  17. //மூடர்கள் என்று யாரையும் வேற்றுமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் போக்கு அறிந்து முரண்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம் வழியே நாம் போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். நெரிசலான போக்குவரத்து சாலையில் வண்டியோட்டுவது போல. ஏனெனில் சாதகன் போக வேண்டிய பாதை வெகுதூரம்.//

    மிக உண்மை கபீரன்பன். கண்டும் காணாது நம் வழியில் போயிட்டு இருக்கறது ஒண்ணுதான் நல்லது :-)

    ReplyDelete
  18. வருகைக்கு,பின்னூட்டத்திற்கும் நன்றி தேவராஜன் ஐயா,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரையம்பதி

    ReplyDelete
  19. //அறிவியல் துறையில் அறியப்படும் உண்மைகளை வெளி உபகரணங்களின் மூலம் நிலைநாட்ட இயலுகிறது. ஆனால் ஆன்மீகம் கூறும் உண்மைகளை உணர தத்தம் அனுபவங்களாலேயே தான் முடியும்.//

    வைர வரிகள்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி