Friday, March 27, 2009

சிங்கார மடந்தையர் ..தீநெறி

நன்னெறியில் வாழ்க்கை அமைத்துக் கொள்வோர்க்கு ஆன்மீக முன்னேற்றம் எளிதாகும்.அதற்கு பாதையில் தவிர்க்க வேண்டிய வழிமுறைகளை சுட்டிக்காட்டுவதை பெரியோர்கள் தம் கடமையாகக் கருதுகின்றனர்.

அவற்றில் முற்றும் துறந்தவரையும் சிரமப்படுத்துவது பெண் ஆசை. இதைப்பற்றி ஞானிகள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். மனிதர்களுக்கு அதனால் ஏற்படும் மனசஞ்சலத்தையும் கண்டு இரங்குகின்றனர்.

பொய்யெல்லா மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும் வண்ணம்
ஐயன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே


என்று மாணிக்கவாசகர் பெண்ணாசையில் வீழாமல் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கிறார்.

மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா


மங்கையரது மீதுள்ள ஆசையினால்,உள்ளமானது தீயில் இட்ட அரக்கைபோல் உருகுகிறது.அவர்கள் உருவிலே எமன் உயிரை கவருகிறான் என்று பட்டினத்து அடிகளும் மனிதனுக்குண்டான தவிப்பை வெளிப்படுத்துகிறார்.

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசு என்றொழிவேன்...
........

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரந்தருவாய்....


என்று கந்தரனுபூதியில் அருணகிரியார் தீராத உடலிச்சையை பழிக்கிறார்.ஆனால் இயற்கையில் அதற்கு ஒரு முக்கிய இடமுண்டு.அதனால் அதை நொந்து கொள்ள முடியாது.

நொந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதன் பின்னே கட்டுக் கடங்காமல் திரிய துவங்கும் மனதைத்தான். (மட்டூர்குழல் மங்கையர் என்பதும் சிங்கார மடந்தையர் என்பதும் பொது மகளிரை குறிக்க வந்தன என்பார் வாரியார் சுவாமிகள்).

அப்படி அருணகிரியார் திரியத் தலைப்பட்ட போது உற்றார் உறவினராலும் பெற்ற தாயாராலும் வெறுக்கப்படுகிறார். பின்னர் தீராதப் பிணியால் பீடிக்கப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தலைப்படுகிறார். முருகன் இச்சை வேறு விதமாக இருந்ததால் அவர் மூலம் தித்திக்கும் திருப்புகழ் தமிழுக்கு கிடைத்தது.

அவரைப் போலவே சிரமப்பட்ட இன்னுமொரு பக்தன் பில்வமங்கள்.

பில்வமங்களுக்கு கணிகை சிந்தாமணியின் பிரிவை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. வெளியே இருட்டில் இடியும் மின்னலுமாக மழை பெய்து கொண்டிருந்தாலும் துணிந்து அவளை நினைந்து வீட்டை விட்டு வெளியேறினான்.போகும் வழியிலோ ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீரில் இறங்கி கடக்க முயன்றவனுக்கு பத்திரமாகப் பிடித்துக் கொள்ள ஒரு கட்டை கிடைக்கிறது. அடுத்த கரையை சேரும் போது அவனுக்கு புரிகிறது,அது கட்டையல்ல மிதந்து வந்த பிணம் என்று. மோகம் கண்ணை மறைத்திருந்தது.

எட்டி நடைபோட்டு அவள் வீட்டை அடைகிறான். மதில் போன்ற சுவர். ஏறிக் குதிப்பது என்று முடிவு செய்து அங்கு தொங்கிய கொடியை பிடித்தபடி ஏறினான். அவன் பிடித்திருந்தது கொடியல்ல ஒரு நீளமான பாம்பு. அதுவும் அவனுக்கு துச்சமானது.

கதவைத் தட்டி தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்புகிறான். கதவை திறந்தவளுக்கு குப்பென்ற பிணவாடை. பில்வமங்களின் நிலையைக் கண்ட அவளுக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. அவனோ தான் அவளுக்காக மேற்கொண்ட சிரமத்தை விவரித்தான்.

சிந்தாமணியின் உள்ளத்தில் வேறு விதமான எண்ணம் ஓடியது.இது என்ன பைத்தியக்காரத்தனம் இப்படியும் அழிந்து போகின்ற உடல் மேல் ஒரு மோகமா!

”இப்படி இந்த அழிகின்ற உடல் மீது இருக்கும் பிரேமையில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது அந்த கிருஷ்ணன் மீது வைத்திருந்தால் ஜன்மமே கடைத்தேறி விடுமே” என்று ஆழ்ந்த பச்சாதாபத்தில் அவனுக்கு அறிவுரை சொன்னாள்.

இறைவனின் திருவுளம் அவள் வார்த்தைகள் மூலம் செயல்பட்டது. அவளுடைய மன ஆழத்திலிருந்து வந்த சத்திய வார்த்தைகள் அவனுடைய மோகத்திரையை கிழித்து விட்டு அறிவுக்கண்ணை திறந்தது.

பில்வமங்கள் போய் லீலாசுகர் கிடைத்தார். கிருஷ்ண கானாம்ருதத்தில் முதல் பாடலிலில் முதல் வந்தனமே அவளுக்குத்தான். பிறகுதான் அவருடைய குரு சோமகிரியை குறிப்பிடுகிறார்.

"चिन्तामणिर्जयति सोमगिरिर्गुरुर्मे"

”சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர்குருர்மே
ஷிக்ஷாகுருஷ்ச பகவான் ஷிகிபிஞ்சமௌளி”

விலைமகள் சிந்தாமணிக்கு அமரத்துவம் தந்து விட்டார்.

பில்வமங்களைப் போலவோ அருணகிரியாரைப் போலவோ வரும் சான்றோர்கள் தமது பூர்வ ஜன்மத்தின் நல்வினைகள் காரணமாகத் தடுத்தாட்கொள்ளப் படுகின்றனர். அவர்களது வாழ்க்கை மூலம் இறைவன் தவிர்க்க வேண்டிய இச்சைகளை உலகுக்கு காரணங்களோடு எடுத்துச் சொல்கிறான்.

ஆனால் மருளில் சிக்கியிருக்கும் சாதாரண மனிதனின் மனது இவர்கள் சரித்திரத்தை மறந்து விடுகிறது.

வெறுப்பு ஏற்படும் வகையில் உதாரணங்களை சொல்லி வைத்தால் அது தவிர்க்க வேண்டிய விஷயங்களைப் பற்றிய இச்சை மனதில் ஏற்படாமல் அதை விட்டு விலகிச் செல்வதற்கான வழி பிறக்கும். அப்படி ஒரு உத்தியை கபீர் கையாளுகிறார்.

கபீரின் கூற்றைக் கேளுங்கள்

परनारी की याचना, जो लहसुन की खान ।
कोने बैठे खाइये , प्रगट होये निदान ॥


பரத்தையரில் தேடிய பரவசம்,உள்ளி ருசித்தது போலாம்
பரம ரகசிய மாயினும்,பைய வெளிவரும் அதன் வீச்சம்


(உள்ளி=பூண்டு, வீச்சம்=துர்வாசனை )

அஜீரணத்தால் அவதிப்பட்ட ஒருவன் வைத்தியனை அணுகினான். உண்மையையில் அவனுக்கு மருந்து தேவையில்லை. தேவை நாவடக்கம். ஒரு நாள் உபவாசம். சொன்னால் புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் பேர்வழி அல்ல. அப்போது அவன் கையில் ஒரு மருந்தை கொடுத்து சாப்பிட அரைமணி நேரம் முன் இந்த மருந்தை சாப்பிடு. இதை சாப்பிடாமல் உணவு உண்பது கூடாது. ஆனால் ஒன்று மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை மட்டும் நினைக்காதே என்று சொல்லி வைத்தியன் மருந்து கொடுத்தானாம்.

வீட்டிற்கு போய் ஒவ்வொரு முறை மருந்தை கையில் எடுக்கும் போதும் கருங்குரங்கு கண்முன்னே வந்தது.எப்போது மருந்து சாப்பிட்டு பின் எப்போது சாப்பாடு சாப்பிடுவது? இப்படியே நாளெல்லாம் பட்டினியில் கழிந்தது.அவன் அஜீரணமும் ஒழிந்தது.

அதே நுணுக்கத்தைத் தான் கபீரும் இங்கே கையாண்டு இருக்கிறார்.மனம் தவறான வழியில் திரும்பும் போது கண்முன்னே பூண்டும் அதன் வீச்சத்தால் முகம் சுழிப்பவர் முகங்களும் வந்து ஒரு தடையாக செயல்படும்.

ஏன் எப்போதும் பெண்ணாசை என்றே குறிப்பிடுகிறார்கள்? ஆணாசையென்று ஏன் குறிப்பிடப் படுவதில்லை ?

ஞானியர்கள் எப்படி பொருள் சொல்வரென்றால்,புவியில் பிறப்பெடுத்திருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆன்மீக ரீதியில் பெண்ணே! இறைவன் ஒருவனே ஆண். அவன் இச்சைகளுக்கு அப்பாற்பட்டவன்.ஆகவே தான் சிருஷ்டியின் தொடரோட்டத்திற்காக ஏற்பட்டிருக்கும் எல்லா வகை உடலிச்சையும் பெண்ணாசையிலே அடங்கும்.

குறிப்பாக மனித வர்க்கத்தை, பிற ஜீவராசிகளை விட, இது அதிகம் ஆட்டிப் படைப்பதால் அதை பற்றி கவலைப் பட வேண்டியிருக்கிறது.

இதை இன்னொரு ஈரடியில் கபீர்தாஸ் விளக்குகிறார்.

कामी कुत्ता तीस दिन्, अन्तर होय उदास ।
कामी नर कुत्ता सदा, छह रितु बारह मास ॥

விரகம் முப்பது நாளாம் கூரனுக்கு,விட்டுத் தொலைக்கும் பின்னே
விரகத்தில் நரனோ சதாகூரன்,பருவம் ஆறும் பன்னிரு மாதமுமே


(விரகம்=காமம்; கூரன்= நாய் ; ஆறு பருவங்கள்= பின்பனி, இளவேனில், முதுவேனில், கார்,கூதிர், முன்பனி)

எப்படி 24 x 7 பாணியில் சொல்லிவிட்டார்! இனப்பெருக்க காலத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைவதை போல(மனதில்) அலைகிறார்கள் சதாகாலமும் என்பதை உணர்த்த ”காமீ நர் குத்தா சதா” (நரனோ சதாகூரன் )என்று இரண்டாம் வரியில் வேறு வகையில் நாய்களின் போக்கோடு ஒப்பிடுகிறார்.

இந்த போராட்டம் தனிமனிதன் தன்னுள்ளே நடத்தும் தனிமை பயணம். மஹாத்மாக்களின் வாக்குகள் வழிகாட்டும் விளக்குகள் போல. விளக்கை பற்றிக்கொள்வது அவரவர் விருப்பம்.

Monday, March 09, 2009

மாசற்றார் வன்சொல் இனிது

ஒருவகையில் உலகத்தோர் யாவரும் இனிப்பு வியாதியால் அவதிப்படுபவர்கள்தான். 
இரத்தத்தில் இனிப்புச் சத்து அளவு கூடும் பொழுது அது பல வியாதிகளுக்கு ஆரம்பமாக சொல்லப்படுகிறது. சுரக்கும் இன்சுலின் அளவு சரியாக இல்லாவிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதில்லை.

 அதைக்கட்டுக்குள் வைப்பதற்கு மருத்துவர் சொல்லும் வழிமுறைகளோ வேப்பங்காயாக கசக்கிறது. ”பிறந்தவன் எல்லாம் சாகத்தான் வேண்டும்.நல்லா சாப்பிட முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? வர்றது வரட்டும்.நான் அதைப்பத்தி (சர்க்கரை கட்டுபாடு)எல்லாம் கவலைப்படுவதில்லை” என்று சக வியாதியஸ்தன் சொல்லும் வரட்டு தத்துவம் இனிக்கிறது. 

 சிறுவர்களுக்கு கார்டூன் படமோ, கம்ப்யூட்டர் கேம்ஸோ இனிக்கிறது; வீட்டுப்பாடம் செய்ய கசக்கிறது. 

 வாலிப வயதில் பருவம் செய்யும் கோளாறுகள் இனிக்கிறது; வீட்டில் பெரியவர் சொல்லும் புத்திமதி கசக்கிறது. 

 அலுவலகத்தில் மேலதிகாரியை கரித்துக் கொட்டுவது இனிக்கிறது;நம் தவறுகளை அவர் சுட்டிக்காட்டுவது கசக்கிறது. 

 அரசியலை விவாதிப்பது இனிக்கிறது ; ஆன்மீகம் பற்றி கேட்கக் கசக்கிறது 

 சத்சங்கம் கூடும் பொழுதும் கூட- ஒரு சுவாமிஜியை இன்னொரு சுவாமிஜிக்கு ஒப்பிடுவது இனிக்கிறது; தத்தம் குறைகளை எண்ணிப்பார்க்க கசக்கிறது. 

 இப்படி மனம் பலவிதமான ’இனிப்பைத்’ தேடித் தேடிப் பற்றிக் கொள்கிறது. அதனால் வரக்கூடிய தீங்குகளை எண்ணிப் பார்க்க மறுக்கிறது. 

 இதை கபீர் இப்படி உரைக்கிறார்

  मीठा सब कोई खात है,विष है लागे धाय ।
 नीम ना कोई पीवसी, सब रोग मिट जाय ॥ 

  இனிப்பை யாவரும் விரும்புவர், விடமாய் மாறுது பின்னாலே 
 வேம்பை விரும்புவர் இல்லை,பிணியாவும் நீங்குது அதனாலே 

 மாற்று : 

  தின்பார் தெவிட்டாமல் தித்திப்பு, தீங்கு தொடர்வது தெரியார் 
  தின்பதற்கு கசந்திடும் வேம்பு, தீர்க்கும் பலபிணி அறியார்

நமது பிறப்பை நல்ல முறையில் நடத்திச் செல்வது நமக்குள்ள நல்லொழுக்கங்கள் தான். ஒழுக்கமும்,சத்சங்கமும் வைராக்கியத்தை வளர்க்கின்றன. அவை நல்லமுறையில் நம்முள்ளே வேர் கொண்டிருந்தால் நம் மனது எவ்வளவு தான் ஆசையெனும் காற்றால் அலைகழிக்கப்பட்டாலும் நிலை பெயராது உறுதியாக எதிர்கொள்ள முடியும். 

 இல்லாவிட்டால், தாயுமானவர் சொல்வது போல்,”ஆசையெனும் பெருங்காற்றூடு இலவம் பஞ்சு எனவும் மனது அலையும்..”. இலக்கு இல்லாமல் வாழ்நாளெல்லாம் திரிந்து கெடுதலை உண்டு பண்ணிக் கொள்ளும். தெளிந்த வைராக்கியம் தான் இன்பத்தை நாடும் நம் இச்சைகளைக் கட்டுப்படுத்தும் ”இன்சுலின்”. அதை தொடர்ந்து கடைப்பிடித்தால் உரிய நேரத்தில் உடன் நின்று நம்மை பல இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றும். 

  நாகமஹாஷயரைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவருடைய தந்தை தீனதயாள் உலக வாழ்க்கையின் பற்றை நீக்கியிருக்கவில்லை. பரம ஏழை ஆனாலும் மிகுந்த ஒழுக்கம் உடையவர். சாதுக்களின் சத்சங்கத்தைப் போற்றியவர். அவர் வேலை செய்து வந்த பால்ஸ் கம்பெனியாரிடம் மிகுந்த நாணயமான ஊழியர் என்ற பெயர் பெற்றிருந்தவர். அவர் ஒருமுறை வியாபார விஷயமாக சரக்கை நாராயண கஞ்ச்-க்கு படகில் கொண்டு செல்லும் போது அந்தி சாய்ந்தது.படகை ஒரு ஓரமாக நிறுத்தச் சொல்லி இரவை அங்கே காட்டினருகே கழித்தார். அதிகாலையில் காலைக் கடன்களுக்காக காட்டுக்குள்ளே சென்றார். விளையாட்டாக மண்ணைக் கீறி கொண்டு சென்றவர் கண்களில் ஒரு நாணயம் தென்பட்டது. மண்ணை சற்றே விலக்கி இன்னும் அகழ்ந்து பார்த்தார்.ஒரு பானை நிறைய புராதன தங்க நாணயங்கள்.அவருடைய மூச்சே நின்று விடும் போலாயிற்று. ஒரு சில கணங்கள் சுதாரித்துக் கொண்டு ஒரே ஓட்டமாக சென்று படகை அவிழ்த்து பயணத்தை தொடருமாறு படகோட்டியை அவசரப்படுத்தி, விரைவாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

”பணத்தாசை என்னை சிறிது சிறிதாக ஆட்கொள்வதை உணர்ந்தேன். அதனால்தான் மனசஞ்சலம் தீவிரம் அடையுமுன் அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டேன்.அது எந்த அந்தணனுக்கு சொந்தமாயிருந்ததோ! அந்தணனுடைய சொத்தை அடைவதால் வரும் பாவம் என்னை சேருமே என்ற கவலை பிடித்துக் கொண்டது”என்றார். 

 அவருடைய மனக்கட்டுப்பாடு அவரை எவ்வளவு பெரிய சங்கடங்களிலிருந்து காப்பாற்றியதோ இறைவனே அறிவான். ஆனால் அவருடைய ”வைராக்கியம் என்கிற “இன்சுலின்” வேண்டிய நேரத்தில் வேலை செய்து இச்சையை கட்டுக்குள் வைத்ததென்னவோ உண்மை. 

 மனம் ஈடுபட விழையும் ஒரு செயலை யாராவது தடுக்கும் பொழுது கசப்புணர்ச்சி ஏற்படுகிறது.ஆனால் வேகத்தடைகள் சாலையில் அவ்வப்போது தேவைப்படுவது போல நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்கையை நெறிப் படுத்தும் கட்டுபாடுகள் அவசியம். 

 வள்ளுவரும் இடித்துரைக்கும் பெரியவர்களின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
  இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே 
  கெடுக்கும் தகைமை யவர் ? (447) 

  தவறு செய்யும் போது கடிந்துரைத்து அறிவுரை கூறும் சான்றோர்கள் துணையுடைய மன்னனை அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர் எவருமில்லை. 

 மேற்பார்வைக்கு அவர்களுடைய மொழி கடுமையாக தெரிந்தாலும் அது மிகுந்த அன்பினாலும் உரிமையாலும் வரும் வெளிப்பாடு.

 ஈசன், தன்னைக் காலால் உதைத்த கண்ணப்பனுக்கே அருளினான்.மலர் கணை தொடுத்த மன்மதனை கண்ணாலேயே சுட்டெரித்தான். இந்த அழகான உண்மையை பொருத்தி இக்கருத்தை சொல்கிறார் சிவபிரகாச சுவாமிகள். 

   மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது 
   ஏனையவர் பேச்சுற்ற இன்சொல் பிறிது என்க-
    ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் 
    ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு 

 வேப்ப மரத்து இலை,பூ மற்றும் எண்ணெய் பல மருத்துவ சக்திகள் உடையவை. நீரிழிவு நோயை குறைக்க உதவும் பாகற்காயும் கசக்கிறது. 

 கசப்பின் தன்மையே குணம் தருவது. இனிப்பின் தன்மை கேடு விளைவிப்பது.உடல்நலக் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாமல் ஆன்மீகக் கண்ணோட்டத்துடனும் அதே உண்மையாகும். 

 எனவே தான் கபீர்,வைராக்கியம் சத்சங்கம் போன்றவை ஆரம்பத்தில் கசந்தாலும் அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்ள பரிந்துரை செய்கிறார்.ஏனெனில் அவற்றிற்கு நம் பிறவி பிணிதீர்க்கும் சக்தி உள்ளது. 

 ஞானிகளின் பார்வை சாதாரண உலக நடப்புகளையும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம். அழகம்மையார் ரமணருக்கு பிடிக்குமே என்று அப்பளம் இடுவதற்காக உளுந்து,பிரண்டை சீரகம் எல்லாம் சேகரித்தார். அப்பளமிடுவதற்கு மகனை உதவிக்கு அழைக்கிறார். 

அந்த ஞானிக்கோ அதில் விருப்பமில்லை.அப்போது அவர் ஞான-அப்பளம் இடுகிறார். 

 ’நான்’எனும் உளுந்தை ‘யார்’ என்ற விசாரமான திரிகையில் அரைத்து, சத்சங்கம் என்னும் பிரண்டை ரசத்தோடு சமம்-தமம் என்பதான சீரகத்தையும் மிளகையும் கூட்டி......ஞான அக்னியில் கொதிக்கும் சுத்தப்பிரம்ம் என்னும் நெய்யில் பொரித்து தானே பிரம்மமாகும் அப்பளத்தை புசிப்பாய் என்று சுவையான ஞான அப்பளத்தை நமக்காக தருகிறார். 

 இதோ அந்த ஞானப்பாடலை கேட்டும் படித்தும் அனுபவியுங்கள். (இதை வலையேற்றிய அன்பருக்கு நன்றி)