Thursday, August 20, 2009

நல்லோர் நாடும் மோனநிலை

கிராமத்திலே உறவினர் குடும்பத்தில் ஒரு விசேஷம். அழைப்பை ஏற்று பரிவார சமேதராகி யாவரும் போனோம். திறந்த மனதுடன் அங்குள்ளவர் சிலர் வீடுகளிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.(அங்கே லாட்ஜ்-க்கு எங்கே போவது) இரண்டு நாட்களும் ஊரே திரண்டு தம் வீட்டு விழாவைப் போலவே எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொண்டது மகிழ்ச்சியை தந்தது. இந்த கூட்டு முயற்சியில் மிகப் பெரும் பங்கு விருந்து தயாரிப்பதிலும், பரிமாறுதலு தான். கடைசியில் எல்லாமே வயிற்றைப் பற்றிய கவலைதானே !

ஊர் பெண்மணிகள் ஒன்றாய் திரண்டு கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல், அண்டை எதிர் வீடுகளில் இலை போட்டு, இலை எடுப்பது போன்ற காரியங்களை கவனித்துக் கொண்டனர். ஆண்கள் சமைப்பதற்கும் பரிமாறுதலுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கறிகாய் நறுக்கும் காலத்தில் பல பக்தி பாடல்கள் பாடுவதும், பல சமையற்கலை நுணுக்கங்களை விவாதிப்பதும் கலகலப்பாயிருந்தது. ஆனால்உள்ளே சமயலறையில் ஓரிருவரே நின்று அடுப்பைக் கவனித்துக் கொள்வதும், தயாராகும் உணவின் பக்குவத்தைக் கண்காணிப்பதுமாக அமைதியாக வேலை நடந்து கொண்டிருந்தது.

விழா முடிந்து விடைபெறுகையில் ’சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று யாவரும் தனித்தனி்யேப் பாராட்டினர்.

பிரமாதம் என்று பாராட்டும் பொழுது அது தனிமனிதன் அனுபவத்திலிருந்து வருகிறது. ஆனால் அதில்தான் எத்தனை பேர்களுடைய பங்களிப்பு இருக்கிறது ! இது நடைமுறையில் நமது அனுபவம்.

ஞானமார்க்கத்திற்கும் இது வெகுவாகவே பொருந்தும். சத்சங்கங்களில் பல வழிகளைப் பற்றிய தர்க்கமுண்டு, ஞானிகளின் அனுபவங்கள் பற்றி சர்ச்சை யுண்டு. இவை கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல் போன்ற ஆரம்ப நிலை முனைப்புகள். பின்னர் குருவை அடைந்து அவரிடம் பெறும் வழிகாட்டுதல் உபதேசம் சமையலறைப் போல ஓரிருவருக்கே உரிய இடம் ஆகும். சமைத்த பொருளின் கடைசியாக ருசித்த அனுபவம் தனி ஒருவனுடையதாகவே இருக்கிறது. அந்த அனுபவம் ஆழ்ந்த மோனத்தில் பெறுவது.

இந்த வெவ்வேறு நிலைகளை கபீர்தாஸரும் உறுதி செய்கிறார்.

चर्चा करु तब चौहटे, ज्ञान करो तब दोय ।
ध्यान धरो तब एकिला, और न दूजा कोय ॥


பலர்கூடின் தருக்கம் செய்மின், இருவரானால் ஞானத்தில் தேர்மின்
தனிமையில் தியானம் செய்மின், வேறெவரும் வேண்டா தெளிமின்

(சௌஹட் என்றால் நாற்சந்தி. பலரும் கூடும் இடம் என்று கொள்ளலாம்)

மாற்று :

தருக்கத்திற் குத்தேவை நால்வர், தேடுகின்ற ஞானத்திற் கிருவர்
பரமோ னத்திற்கு ஏகாந்தமே, தேவையு மில்லை இன்னொருவர்


சத்சங்கம் கூடி பலநல்வழிகளை விவாதித்து பரிசீலிப்பது ஆரம்ப முனைப்புகள்.
பிறகு குருவும் சீடனுமாகி இருவரே பகிர்ந்து கொள்ளும் ஞானத்தேடல். அதன் அடுத்த கட்டமாக ’பேசுவதால் பயனில்லை அனுபவத்தால் அறி’ என்பதைக் காட்டும் தியான மார்க்கம். இங்கே முன்னேற்றம் என்பது அவரவர் முயற்சியைப் பொறுத்தே அமையும். ஒருவருக்காக இன்னொருவர் எப்படி உண்ண இயலாதோ அப்படி குரு காட்டிய வழியில் தனியனாகவே பயணத்தை நடத்த வேண்டும் என்று கபீர் உணர்த்துகிறார்.

அறிந்ததை -அல்லது கற்றதை -உள்வாங்கி உண்மையை அறியும் அந்த பயிற்சி தனிமையிலே தியானத்திலே செய்ய வேண்டியது. பாரதியாரும் குள்ளச்சாமி தனக்கு தரும் உபதேசமாக அதைக் குறிப்பிடுகிறார்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே; பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுள் தன் விம்பங்காட்டி,
”அறிகொலோ!” எனக்கேட்டான். அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான், யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன் கை காட்டி எனக்குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்’
“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்” என்றான்
.

பேசுவதில் பயனில்லை என்பதை தாயுமானசுவாமிகளும் உணர்த்துகிறார்.

நேராயம் மௌன நிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர் தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையும் மனக்கல்


(நாவால் கரையும் = இறைவன் புகழை செபித்தல்; திரையுந் திரையுநதி சென்னியனை = அலைபொங்கும் கங்கையை தன்னுள் அடக்கியவன்)

கல்போன்ற மனதை கரைக்க வல்லது இறைவன் நாமம். அதற்குத் தேவை முழு சரணாகதி பக்குவம். அதனையே ”தேடுகின்ற ஞானத்திற் கிருவர்” என்று குருவின் அவசியத்தை கபீர் உரைக்கிறார். குரு கிருபை இருந்துமே பரமோனம் சுயமுயற்சி இல்லாமல் கைகூடாது என்பதையும் தாயுமானவர் பாடுகிறார்

எல்லாமே மோன நிறை எய்துதலால் எவ்விடத்தும்
நல்லோர்கள் மோன நிலை நாடினார் -பொல்லாத
’நான்’ என இங்கொன்றை முளைக்க விட்டு இங்கு
ஏன் அலைந்தேன் மோன குருவே.


‘நான் என ஏன் அலைந்தேன்’ என்னும் பிரச்சனைக்கு முடிவு ’மௌனமே’ ஆகும். பேசினால் தர்க்கம் வருகிறது. தர்க்கத்தில் ’நான்’ தலையெடுக்கிறது. அதன்பின்னும் அது மனதை விட்டு அகலாமல் களைச் செடி போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. களையெடுத்தல் தியான நிலையில் மட்டுமே சாத்தியம்.

ஆரம்பத்தில் தியான முயற்சிகள் சுய பரிசோதனைக் களமாக இருப்பினும் நாளாவட்டத்தில் களைகள் போன பரிசுத்த நிலையில் இறைவன் பால் அன்பு மிகுத்து ’காதலாகி கசிந்து கண்ணீர் மல்க’ வைக்கும்.

மோனத்திலேதான் உண்மையான பக்தியும் ஞானமும் மலர்கின்றன. அது கைகூடாதவரை சாதகனின் முயற்சிகள் எல்லாம் விசாரமாகத்தான் இருக்குமே ஒழிய் அனுபவமாக இருக்காது. அதை சுட்டிக்காட்டத்தான் பராபரக்கண்ணியிலும் தாயுமானவர் தன் விண்ணப்பத்தை முன் வைக்கிறார்

மோனந்தரு ஞானமூட்டி எனக்கு வட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே


தியானத்தை தனிமையில் செய் என்ற கபீரின் உபதேசத்தை கடைபிடித்த சிறுவனின் கதையைக் காண்போம்.

நன்றி : தினமலர் (28/12/2008) - வைரம் ராஜகோபால்

பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்குச் சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். "எங்கே போகிறாய்? எதற்காகப் போகிறாய்?' என்று கேட்டு விட்டு, "தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே! நீ சிறுவனாயிற்றே. இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்குப் போ...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், "தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!' என்று பிடிவாதமாகச் சொன்னான் துருவன்.

துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணனின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசம் செய்தார் நாரதர். "இனி, நீ தவம் செய்ய ஆரம்பிக்கலாமே...' என்றார் நாரதர்.

"அது, சரி... நான் ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!' என்றான் துருவன்.

"ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர்.

"தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசித்தீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்குத் தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்!' என்றான் துருவன்.

நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும் விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

Friday, August 07, 2009

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.

முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)

நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?

இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.

भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥


அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )

அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.

சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.

ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

(பட உதவி madhumurali.org :நன்றி)

எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.

Strange are the ways of God !