Friday, September 04, 2009

தேடுகின்றலை தெருவுதோறலறிலை

குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது.

விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது. கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவ்வளவுதான். அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது. சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது.

இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி.

ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது.

இதை கவனிக்கும் ஞானிகளுக்கு மக்களை நல்வழி படுத்த வேண்டிய நல்லெண்ணம் ஏற்படுகிறது.

“நீ அப்படியிருக்க வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் “ என்றெல்லாம் உபதேசம் சொன்னால் ‘இவன் யார் சொல்வதற்கு’ என்ற எண்ணம் மேலோங்கும். அதற்கு பதிலாக “என்னால் நல்லவிதமாக நடந்து கொள்ள முடியவில்லையே ! நல்லவிதமாக பேசத் தெரியவில்லையே” என்று யாராவது சொல்லிக் கொண்டால் சொல்லப்படுவது என்ன என்பதையாவது கவனிப்பார்கள். அப்படி மாணிக்கவாசகர் சொல்லிய பாடல் ஒன்று.

ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு
அன்பிலை என்புருகி
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமல்ர்
சூடுகிறதுமிலை சூட்டுகின்றதுமிலை
துணையிலி பிண நெஞ்சே
தேடுகின்றிலை தெருவுதோறலறிலை
செய்வதொன் றறியேனே


இவரைப் போலவே கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதரும் புத்தி உரைக்கிறார்.

சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே

(புந்தி கிலேசம்= அறிவில் ஏற்படும் மயக்கம் ; காயக்கிலேசம்= உடலைப் பற்றிய ஈடுபாடு)

ஒருவருடைய பிறவி கடைத்தேற என்னென்னத் தேவையோ அவற்றில் ஈடுபாடு இன்றி காலத்தைக் கழிக்கிறார்களே என்ற கழிவிரக்கம் இவர்களைப் போலவே கபீர்தாஸருடைய பல பாடல்களிலும் காணப்படுகிறது.

राम नाम जाना नहीँ, लागी मोटी खोर ।
काया हांडी काठ की, ना वह चढै बहोर ॥


இராம நாமம் அறியலையே, நாடா பேதமை புரியலையே
காட்டம் போல் காயமிதே, உலைக்குள் போனால் மீளாதே

(நாடா பேதமை = இறைவனை நாடாத அறிவின்மை; காட்டம்= காஷ்டம், விறகு; காயம்=உடல்; உலை= அடுப்பு )

கபீர், மனித உடலை விறகுக்கு ஒப்பிடுகிறார் . சிலவகை மரங்கள் வெறும் அடுப்பெரிக்க மட்டுமே பயன்படும். அவைகளின் காயோ பழமோ பயன்படுவதில்லை. அவைகளில் பறவைகளும் கூடுகட்டி வாழ்வதில்லை. முள் நிறைந்த அம்மரங்களை வெட்டி வந்து விறகாய் எரிப்பது ஒன்றே அவைகளால் கிடைக்கும் பயன்.

உலகத்தில் பெரும்பாலோர்க்கு இறைவழியில் நாட்டமின்றி குப்பை மேட்டு நாய் போல வாழ்நாள் போய்விடுகிறது. ”அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ? ஐயோ நாட்டமில்லாமல் தினங்கள் போய்கொண்டிருக்கின்றனவே” என்ற கவலையோ ஏக்கமோ தோன்றுவதுமில்லை. கடைசியில் அவர்களுடைய பிறவி விறகின் கதையாக முடிகிறது.

மாயையை உண்மை என்று நம்பி இறையருளை இழந்து, இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் தவிக்கும்நிலையைப் பற்றி கபீர் மேலும் சொல்கிறார்.

रामनाम कडआ लगै, मीठा लागै दाम ।
दुविधा में दोऊ गये, माया मिली न राम॥


இராம நாமம் கசக்குதே, இகமாய லோகமும் இனிக்குதே
இராமனோ மாயையோ அத்தே! இரண்டு மின்றிப் போகுதே

(அத்தன்=கடவுள் : அத்தே =கடவுளே -நிராசையின் வெளிப்பாடு)

மனதுக்கு இனிக்கின்ற விஷயங்களையும் கசக்கின்ற விஷயங்களையும் அருணகிரியார் பட்டியலிட்டு கபீரைப் போலவே முக்திக்கான தஞ்சத்தை தேடுகிறார்.

பால் என்பது மொழி; பஞ்சு என்பது பதம்; பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.

படிக்கின் றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு
மிடிக்கின்றிலை பரமாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே.


(இவையிரண்டையும் சீர்காழி கோவிந்தராசன் குரலில் உணர்ச்சி பூர்வமாய் கீழுள்ள இணைப்பில் கேட்கலாம். மின்னஞ்சலில் படிப்போரும் ரீடரில் படிப்பவர்களும் இதற்காக வலைப்பக்கம் வர வேண்டி இருக்கும் )

Get this widget | Track details | eSnips Social DNA


மனிதன் வாழ்நாள் வீணாவதைப் பற்றி கபீர்தாஸருடைய மிகப் புகழ்பெற்ற பாடல் - இசைக் கலைஞர்கள் பலரும் விரும்பிப் பாடும் பாடல் “பீத் கயே தின் பஜன் பினா” என்பதாகும். பிரபல கஜல் பாடகர் ஜகதித்சிங் அவர்கள் குரலில் பாடலை கேட்டு அனுபவியுங்கள். பாடலை தொடர்வதற்கான வரிவடிவமும் அதற்கான பொருளும் தரப்பட்டுள்ளன.

Get this widget | Track details | eSnips Social DNA


बीत गये दिन भजन बिना रे . பீத் கயே தின் பஜன் பினா ரே
भजन बिना रे, भजन बिना रे .. பீத் கயே தின் பஜன் பினா ரே
(தினங்கள் போகின்றனவே அவனைத் துதியாமலே, ;ரே என்பது விளித்தல்)

बाल अवस्था खेल गवांयो . பால் அவஸ்தா கேல் கவாயோ
जब यौवन तब मान घना रे .. ஜப் யௌவன் தப் மான் கனா ரே
(வேடிக்கையும் விளையாட்டும் குழந்தை பருவத்தை கவர்ந்தது
இளமை பருவம் கர்வத்தி்ல் கழிந்தது)


लाहे कारण मूल गवाँयो . லாஹே காரண் மூல் கவாய்
अजहुं न गयी मन की तृष्णा रे .. அஜ்ஹு ந கயீ மன் கீ த்ருஷ்ணா
(பேராசை என்பது மூலத்தை கவர்ந்து சென்றது
ஆயினும் வேட்கையின் தாகம் விடவில்லை)

(மூலம் என்று குறிப்பிடப்படுவது இறைவனுடனான பிணைப்பு )

कहत कबीर सुनो भई साधो . கஹத் கபீர் ஸுனோ பாயி ஸாதோ
पार उतर गये संत जना रे பார் உதர் கயே ஸந்த் ஜனா ரே
(அன்பர்களே கபீர் சொல்வதை கேளுங்கள்.
வேட்கை விட்டவரே இறை அன்பர் ஆயினர்)


கீழுள்ள இணைப்பில் ‘பாரத் ரத்னா’ பண்டிட் பீம்ஸேன் ஜோஷி அவர்கள் பாடியிருக்கும் இதே பாடலை கபீர்தாஸரின் வாழ்க்கை சித்திரங்களுடன் காணலாம்.


பஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரரும் இதே கருத்தை தானே வலியுறுத்துகிறார்.

பாலஸ்தாவத் க்ரீடாஸக்தா; தருணஸ்தாவத் தருணீஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: பரே ப்ருஹ்மணி கோ அபி ந ஸக்த:


பாலபருவத்தில் விளையாட்டில் கவனம். தருண வயதில் பெண்ணின் மோகம்; முதுமையோ கவலையில் போகுது. ஆனால் பரபிரம்மத்திற்காக ஆசைப்படுவோர் இல்லை.


ஞானிகள் யாவரும் ஒன்றையே மொழிகின்றனர். கேட்பதற்கு தான் நமக்கு மனம் வேண்டும்.
____________________________________________

இந்த பதிவுடன் கபீரின் கனிமொழிகள் வலைப்பூ மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது. கபீர்தாஸரின் விருப்பமும் வாசக அன்பர்கள் தருகின்ற உற்சாகமுமே இதை நடத்தி வருகிறது என்றால் மிகையாகாது. அன்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காணும் இடுகைகளை சிறப்பிக்கும் வகையில் பல ஒலி ஒளி கோப்புகளை வலையேற்றிருக்கும் வலைப்பக்க- முகம் தெரியாத- நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி.

28 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

மூன்று ஆண்டுகளாகக் கபீரின் மொழிகளைத் தமிழில் தண்டு, உழைத்திருக்கும் உங்களுக்கு அல்லவோ நாங்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டும்!

ஹிந்தி எதிர்ப்பு என் பள்ளிபருவ நாட்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்ததால், ஹிந்தி படிக்க நாட்டமில்லை.

தேட நாட்டமும் இல்லாததால்,அந்த மொழியில் இருக்கும் வளங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இருந்ததில்லை.

கபீர்தாசரின் ஈரடி தோகேக்களை, முதல் தடவையாக உங்களுடைய வலைப் பக்கங்களில் தான் படித்து, கொஞ்சம் அதில் தோய்ந்து உருகவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது!

வந்தனம், ஐயா!

கபீரன்பன் said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்,

தலைப்பில் இருந்த பிழையை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

//ஹிந்தி எதிர்ப்பு என் பள்ளிபருவ நாட்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்ததால், ஹிந்தி படிக்க நாட்டமில்லை.//

நானும் அதே தலைமுறையை சேர்ந்தவன் தான். பிழைப்பு என்று வரும் போது எல்லாம் தானே சரியாகி விட்டது :)

தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி

Lalitha said...

congrats anna.... u r doing a wonderful job... keep on writing...

ஜீவி said...

//சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனை...//

இப்படி 'இலேன்' போட்டால் நாம் எவ்வளவு போடவேண்டியிருக்கும் என்று யோசனையாய் போய்விட்டது..
மூன்று ஆண்டு நிறைவு என்று
முத்துப் போல பதிவைப் போட்டு
மனசை சந்தோஷத்தில் நிறைத்து விட்டீர்கள். உங்களது அடக்கமான நிறைவான சேவைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் அது குறைவாகத் தெரியப்படுத்திய மாதிரியே தெரிகிறது.

மிக்க அன்புடன்,
ஜீவி

Boston Bala said...

வாழ்த்துகள் & நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மகான் கபீருக்கும், கபீர் தாசர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

மூன்றாண்டு நிறைவு என்பது நிறைவான பயணம்!
இன்பம் போய்ச் சேரும் இடத்தில் மட்டுமில்லை! பயணத்திலும் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் வலைப்பூ இது! அதற்கும் அடியேன் இன்னொரு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் கபீரன்பன் ஐயா!

//ஞானிகள் யாவரும் ஒன்றையே மொழிகின்றனர்.//

ஆம்! ஏகம் சத்யம்!

//கேட்பதற்கு தான் நமக்கு மனம் வேண்டும்//

அறிதல் என்று பார்த்தால் பொன் மொழிகளைப் பலரும் "அறிவோம்"! ஆனால் "உணர்தல்" என்று வரும் போது தான்...அதுக்குத் தான் மனம் வேண்டும்!

//நாய், அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது//

இந்த நாய்க் குணம் பற்றி நன்கு அறிந்து தான், "நாயேன்" என்றார்கள்!
மாடேன், பூனையேன், கழுதையேன்-ன்னு எல்லாம் சொல்லாம....
"நாயேன்" என்ற சொன்னதின் தாத்பர்யம்! நாய் இயல்பாகவே நல்ல பிராணி தான்! நன்றி உள்ளது தான்! ஆனால் இந்த "அலையும்" குணம்?

அதான்...
வேயேய் மாபொழில் சூழ்
விமலச் சுனை வேங்கடவா
"நாயேன்" வந்து அடைந்தேன்
நல்கி எனை ஆட்கொண்டு அருளே!

இராம நாமம் அறியலையே, நாடா பேதமை புரியலையே என்று...கபீர் சொல்வதைப் போல, நாய் ஒவ்வொரு முறையும் அலைந்து வீணில் வரும் போது தான், "உணர" வேணும்!

நாயேன் வந்து அடைந்தேன்,
கபீரின் வலைப் பூவிற்கு!

கபீரன்பன் said...

சகோதரி லலிதா,
நல்வரவு. தங்களுக்கு கபீர் வலைப்பக்கம் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. அடிக்கடி வரவும். :)

கபீரன்பன் said...

//இப்படி 'இலேன்' போட்டால் நாம் எவ்வளவு போடவேண்டியிருக்கும் என்று யோசனையாய் போய்விட்டது///

உண்மைதான் ஜீவி ஐயா,

ராமகிருஷ்ண ஐயர் என்ற சுதந்திர போராட்ட வீரர் -காங்கிரசில் காமராஜருக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் மிக நெருங்கியவர். அவர் ஒருமுறை என்னிடம் சொன்னது;
“நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தினசரி கணக்காக வைத்து சரி பார்க்காவிட்டாலும் பரவாயில்லை வருஷத்துக்கு ஒரு தடவையாவது பார்க்கணும். பத்து வருஷத்துக்கு ஒரு தடவை பார்க்கிறோமா என்பதும் சந்தேகமே”

உங்கள் வரிகள் அவருடைய அறிவுரையை நினைவூட்டியது. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

கபீரன்பன் said...

வாருங்கள் பாலா,

வாழ்த்துகளுக்கு நன்றி. தங்கள் அன்னையாரின் ஆசிகளையும் பெற்றுத் தாருங்கள். :) அவருடைய எழுத்துகளை விரும்பிப் படிப்பவன் நான்.

மிக்க நன்றி

கபீரன்பன் said...

வருக கே.ஆர்.எஸ்,

///இன்பம் போய்ச் சேரும் இடத்தில் மட்டுமில்லை! பயணத்திலும் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் வலைப்பூ இது///

பயணத்தை இனிமையாக்கியதன் பங்கு தங்களைப் போன்ற வாசகர் தாமே. அதற்கு கடமைப்பட்டவன் நான். நன்றி

நாயின் குணத்தைப் பற்றி கம்பர் சொல்லியிருப்பதை திவாகர் அவர்கள் வம்சதாரா என்கிற வலைப்பூவில் சுவைபட சொல்லியிருக்கிறார்.

http://vamsadhara.blogspot.com/2008/06/blog-post_06.html”

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

[hyper link 'http' tag ஐ ஏனோ ஏற்க மறுக்கிறது ப்ளாகர் :( ]

திவா said...

மூன்றாண்டு உழைப்பிற்கு நன்றிகள்! வாழ்க!
வயசில இளைஞர்ன்னு ஏனோ நினைத்து கொண்டு இருந்தேன். நம்ம வயசுதான் போல!

(Mis)Chief Editor said...

ஐயா! தங்களை நான் தேடி வந்தது எதேச்சையாகத்தான்.

இந்த ஆசிரியர் திருநாளில் தங்களின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

தங்கள் நலனுக்காக எல்லாம் வல்ல ஸாயியையும் / மகா பெரியவரையும் மனமார வேண்டுகிறேன்.
வளர்க உமது பணி!

கபீரன்பன் said...

வாருங்கள் தி.வா அண்ணா,

வாழ்த்துக்கு நன்றி. உங்களை இளைஞர் இல்லை என்று யார் சொன்னது? எழுபது வயதுக்காரரை கேட்டுப்பாருங்கள் :))))

கபீரன்பன் said...

தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நல்வரவு

//தங்களை நான் தேடி வந்தது எதேச்சையாகத்தான் //

நல்ல விஷயங்கள் யாவும் தற்செயலாகத்தான் நடக்கின்றன. பாருங்கள், உங்களுடைய நட்பு எனக்கும் பிறருக்கும் கிடைத்துள்ளது :)

தங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி

yrskbalu said...

gi,

கபீர்தாசரின் ஈரடி தோகேக்களை, முதல் தடவையாக உங்களுடைய வலைப் பக்கங்களில் தான் படித்து, அதில் தோய்ந்து உருகவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது!

நாங்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டும்!

உங்களது அடக்கமான நிறைவான சேவைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் அது குறைவாகத் தெரியப்படுத்திய மாதிரியே தெரிகிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

மனதுக்கு இனிக்கின்ற விஷயங்களையும் கசக்கின்ற விஷயங்களையும் அருணகிரியார் பட்டியலிட்டு கபீரைப் போலவே முக்திக்கான தஞ்சத்தை தேடுகிறார்

ஞானிகள் எல்லோரும் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள். சொல்லும் முறை வேறாக இருந்தாலும் சொல்லும் கருத்து ஒன்றுதான்.மஹாகவியும் "மையுறு வாள்விழியாரையும்பொன்னையும், மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே" என்கிறார். ஆயிரம் நாட்களைக் கடந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலும் வாழப்போகும் கருத்துக்களைச் சொல்லும் கபீரன்பன் நீடுழி வாழ்க

(Mis)Chief Editor said...

தங்களுடைய கருத்தினால்
உந்தப்பட்டு, கவரப்பட்டு
என் வலையில் பதித்துள்ளேன்....

http://bakthicafe.blogspot.com/2009/09/blog-post.html

கபீரன்பன் said...

@ பாலு சார்
பாராட்டுகளுக்கு் மிக்க நன்றி.

@ திராச ஐயா

//ஆயிரம் நாட்களைக் கடந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலும் வாழப்போகும் கருத்துக்களைச்,,,,,,///

தங்கள் ஆசீர்வாதம் மிகப்பெரியது.நன்றி. கருத்துகளெல்லாம் ஆயிரம் ஆண்டு கடந்து நிற்கும் /நிற்கப்போகும் வள்ளுவர் திருமூலர் சங்கரர்,தாயுமானவர்,கபீர் போன்றவ்ர்களுடையது. இந்த வலைப்பக்கம் அவற்றைக் கட்டித் தொகுக்கும் நார் போலே. அவ்வளவுதான்.

தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி

@ எடிட்டர் சார்,

தங்களுக்கு நாயின் உதாரணம் இவ்வளவு தூரம் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. அதற்காக தங்கள் வலைப்பூவில் விசேஷ இடம் கொடுத்து பெருமைபடுத்தியதற்கு நன்றி

ஜீவா (Jeeva Venkataraman) said...

இன்னொரு வருடமும் கடந்தது, இங்கே மட்டுமே இனிப்பாய் இருக்குது.
நன்றிகள் பலப்பல.

கீதா சாம்பசிவம் said...

மூன்று வருடங்களாய்த் தொடர்ந்து பல அரிய பதிவுகளைத் தந்தமைக்கு வாழ்த்துகள். அனைத்தையும் ஒரு கோப்பாகத் தொகுத்துக் கொடுத்தால் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது படித்து ஆனந்திக்கலாம். இயலுமா? மூன்றாம் முறையாகப் பின்னூட்டம் போட முயன்று வெற்றினு நம்பறேன்! :)))))))))

மனமார்ந்த நல்வாழ்த்துகள். கபீரின் கனிமொழிகளை மேலும் காணும் ஆவலுடன் காத்திருக்கேன்.

கபீரன்பன் said...

நல்வரவு ஜீவா,

ரொம்ப நாளைக்கப்புறம்...:) இன்னும் கபீர் இடுகைகளில் சுவை குன்றவில்லை என்று அழுத்தமாய் சொல்லியிருப்பது பெரும் ஆறுதலாய் உள்ளது. எனக்கும் பலமுறை அந்த சந்தேகம் வந்ததுண்டு.சுவைக் குன்றாமல் அவன்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

கபீரன்பன் said...

கீதா மேடம் வருக
//அனைத்தையும் ஒரு கோப்பாகத் தொகுத்துக் கொடுத்தால்.... படித்து ஆனந்திக்கலாம். இயலுமா? //

அதெப்படி மூக்கிலே வேர்த்திருக்கு !
இப்போ அந்த வேலைதான் நடந்துகிட்டிருக்கு :))

//கபீரின் கனிமொழிகளை மேலும் காணும் ஆவலுடன் காத்திருக்கேன்//

உங்களைப் போன்றவர்கள் ஆசி. என் பாக்கியம். நன்றி நன்றி

கவிநயா said...

வழக்கம் போல் சுவையாக தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். எடுத்துக் காட்டிய ஒவ்வொரு பாடலும் அருமை. நிறைவான மூன்று வருடங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளுடன், மென்மேலும் சிறப்பாகத் தொடர்வதைக் காணவும் ஆவலுடன்...மிக்க நன்றியுடன்...

Life Lessons from a Late Bloomer said...

Wow! What a blessing to come to your blog!! I should thank the editor, otherwise I would have never known that such a treasure exists!

eppadi tamizh lla type pannaradhu nnu theriyalaiaye!!!

கபீரன்பன் said...

நன்றி கவிநயா,அன்பான வாழ்த்துகளுக்கு.
//மென்மேலும் சிறப்பாகத் தொடர்வதைக் காணவும் ஆவலுடன்..//

நடத்திச் செல்பவன் அவனருள் துணை புரியட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.

கபீரன்பன் said...

நல்வரவு சுமி ராமமூர்த்தி,
தங்கள் வரவுக்கு வழிகோலிய 'எடிட்டர்' க்கு நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கபீர் வலைப்பூ தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

தமிழ் தட்டச்சு பற்றி தனி மடல் தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

அடிக்கடி வரவும்.
நன்றி

Ashwinji said...

மிகப்பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள். இறையருள் உங்களை வழி நடத்த வேண்டுகிறேன்.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

கபீரன்பன் said...

நல்வரவு அஷ்வின் ஜி

//...இறையருள் உங்களை வழி நடத்த வேண்டுகிறேன் //

தங்கள் பாராட்டுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.