Monday, October 12, 2009

அவரவர் இறையவர் குறைவிலர்

தொழிற்சாலைகளில் பல இயந்திரங்களை இயக்கும் மின்சக்தி மோட்டர்கள் ஏராளமாக வொர்க் ஷாப்பில் கிடப்பில் கிடக்கும். பல வேலை செய்யாது;ஒரு சில ஸ்டாண்ட்‍‍ ‍பை என சொல்லப்படும் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும். வேடிக்கை என்ன வென்றால் எதற்கான ஸ்டாண்ட் பையோ அதற்கான தேவை வராது. வேறு ஏதோ ஒரு மோட்டருக்கான அவசியம் வந்துவிடும். அந்நிலையில் வொர்க் ஷாப்பில் தேடல் துவங்கும்.

சார், இங்கே NGEF-5 H.P. மோட்டர் இருக்குது சார். பொகஞ்சு போனதும் அஞ்சு ஹெச்.பி. தான சார் ?

அது கிர்லோஸ்கர் மோட்டர். என்ன ஸ்பீட் போட்டிருக்கான் பாரு"

ஆவாது சார், இது 2800 . நமக்கு 1440 இல்ல வேணும்.

அதோ அந்த க்ராம்டன் மோட்டர பாருப்பா. அது கூட 5 h.p. தான் நெனக்கிறேன்.

அது பேஸ் ஃபிரேம் (base frame) செட் ஆவாது சார். போறாததுக்கு போனவாட்டி ரீவைண்ட் பண்ணி வந்ததிலேந்து சுகமில்ல சார். அடிக்கடி ட்ரிப் ஆவுது.

அரைமணி முக்கால் மணி தேடிய பிறகு உதவியாளருக்கு ஒரு ஐடியா. "சார், ஒரு கூலிங் டவர் சும்மா தான இருக்கு. அதுல இருக்கிற மோட்டரும் 5, 1440 தான். பேஸ் ஃப்ரேம் கூட செட் ஆயிடும். ஆனா கப்ளர் ஷாப்ட் மட்டும் கடைஞ்சி போட வேண்டியிருக்கும். லேத் க்கு ஆள அனுப்பினா மதியத்துக்குள்ள தயார் பண்ணிடலாம். அப்புறமா ரெண்டு நாள்ல கூலிங் டவருக்கு வேற ஒண்ணு செட் பண்ணிடலாம்"

கொஞ்சம் யோசித்து, “அப்படியா சொல்ற. அதுல கைவைக்க வுடுவாங்களாய்யா? சரி மேனஜர் சார் கிட்ட பேசிப் பாக்குறேன். நீ ஒடனே லேத்துக்கு போன் பண்ணு.”


இது தினசரி வாடிக்கை. பார்ப்பதற்கு இந்த மோட்டர்களெல்லாம் ஒன்று போலவே இருக்கும். ஆனால் அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை நுணுக்கம் அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.

சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.

மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.

குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)

ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

கபீர்தாஸ் மிக எளிமையாக இந்த வேற்றுமையை தினசரி நிகழ்விலிருந்து படம் பிடித்துக் காட்டுகிறார்.

मांगन को भल बोलनो, चोरन को भल चूप ।
माली को भल बरसनो धोबी को भल धूप ॥


இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்


மாற்று :
பிச்சைக்கு உரத்தக் குரல் நன்று, திருட்டுக்கு மவுனமே நன்று
உழுகைக்கு மழையே நன்று, வண்ணாரத் திற்குவெயில் நன்று.


அடிப்படையில் கபீர் குறிப்பிடும் நால்வரது நோக்கமும் வயிற்றுப்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதுதான். ஆனால் அவர்களின் தேவைகளில்தான் எவ்வளவு வித்தியாசம்.

இதன் உட்பொருள் எல்லா சாதகர்களின் நோக்கமும் இறைவனை அடைவது தான் என்றாலும் அவர்களுக்குரிய காலமும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது தான்.

தவசிகள் அனைவருமே ஒரு வகையில் இல்லறத்தாரை சார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்தாம். வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.

இவர்கள் யாவரையுமே அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய விதத்தில் தடுத்தாட்கொண்டு முக்தி அளித்து பெருமை படுத்த தவறவில்லை இறைவன்.

அவரவருக்கான சூழ்நிலைக்கேற்ப கடமைகள் வெவ்வேறானவை. சிறப்பாக கடமை செய்வதிலே கருத்து இருந்தால் ஞானமும் காலாகால‌த்திலே வரும். அவன் இறைச்சி விற்கும் வியாதனாக இருப்பினும் சரி அவனிடத்து செல்ல வேண்டி வழிகாட்டும் இல்லத்தரசியாக இருப்பினும் சரி ஞானவான்களாக திகழ்வார்கள்.

(ரம்யா அவர்கள் ஏற்கனவே இந்த கதையை சுவையாகக் கூறி விட்டிருப்பதால் மீண்டும் இங்கே எழுதுவது அவசியம் இல்லை)

இவ்வாறு பல உதாரணங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை நம்மாழ்வர் தொகுத்து ஒரே பாடலில் சொல்லி விடுகிறார்.

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறை அவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.


ஒவ்வொருவரும் படைப்பிலே மாறுபட்டு இருப்பதையும் அவர்களுக்கான மார்க்கங்கள் வெவ்வேறு என்பதை தமதமது அறிவு அறி வகைவகை என்று அழகாக அடுக்குத் தொடர் இட்டு உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

அறிவு அறி வகைவகை என்பது ஒரே குறிக்கோளுக்கு பல வகை வழிகள் இருப்பதும் ஏற்பு உடையதே என்பதையும் உணர்த்துகிறது.

அவரவர் இறையவர் குறைவிலர்’ என்பதை அதிகம் அறியப்படாத ஒரு தோட்டக்காரன் கதை மூலம் பார்போம்.

ஒரிஸ்ஸாவின் புரீ ஜகன்னாதனிடம் அளவற்ற அன்பு பூண்டவன் மணிதாஸ். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மேலானவன்.யாவரிடமும் இனிமையாக பேசுபவன் உண்மை தவறாதவன். தன் தோட்டத்தில் விளைந்த மலர்களை தொடுத்து அன்புடன் ஜகன்னாதனுக்கு சாற்றி மகிழ்ந்தவன்.

அருளாசையின் விளைவாகப் பணத்தாசை துறந்தவனானதால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதனால் பாட்டு சுலபமாக வந்தது. எப்போதும் இறைவன் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பான். பாடுவது மட்டுமல்ல தன்னை மறந்து ஆடவும் செய்வான். அப்போது அருகே இருப்பவர் யார் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது.

ஒரு முறை ஜகன்னாதரின் சந்நிதி முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பெரும் பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவரை அப்பால் போகச் சொல்லியும் பலன் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் அவனை அறிந்தவர்கள் ஓரளவு முயற்சி செய்து பார்த்தும் அவனுடைய பரமார்த்திக நிலையிலிருந்து விடுபடவில்லை. ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தவில்லை. கடைசியில் கூட்டம் கூடி அவனை அடித்து விரட்டினர்.

சுயநினைவுக்கு வந்த மணிதாஸுக்கு கூட்டத்தினர் மீது கோபம் வரவில்லை. ஜகன்னாதன் மேல் வந்தது. தன்னுடைய பாடல் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போகட்டும், தான் யார் நினைவாக பாடுகின்றனோ அவனுக்கும் கூட பிடிக்கவில்லை போலும்;இல்லாவிட்டால் அவர்களின் நடத்தையை தடை செய்திருப்பானல்லவா? அவர்களை விட்டு அடித்து துரத்தி விட்டதன் மூலம் அவனுக்கும் பிடிக்கவில்லை என்றே ஆயிற்று; இப்படி எல்லாம் நினைத்து கோபம் அதிகமாகி கோவிலை விட்டு வெளியேறி ஒரு மடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். எதுவும் சாப்பிடவில்லை.

புரீ மன்னனுக்கு இரவில் ஜகன்னாதர் கனவில் வந்து “வேந்தனே இன்றைய சாயங்காலப் பூஜை எனக்கு நிறைவளிக்கவில்லை. என் அன்பன் மணிதாஸின் பாடலைக் கேட்கவிடாமல் உன் பிரஜைகள் அவனை அடித்து துரத்திவிட்டனர். அவன் மனவலியால் உணவும் அருந்தாது கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறான். நீ உடனடியாக அவனை அழைத்து வா. இனிவரும் உபன்யாசங்கள் லட்சுமி மந்திரில் நடத்தப் படட்டும். என் அடியார்கள் என் தரிசனத்திலேயே சந்தோஷப்படட்டும்” என்று சொல்லி மறைந்தான். அரசனுக்கு கனவை வெறும் கனவென்று ஒதுக்க முடியவில்லை. உடனே ஆட்களை அனுப்பி மணிதாஸை கண்டு அழைத்து வரும்படி பணித்தான்.

அதே நேரத்தில் மணிதாஸின் கனவில் வந்த பெருமான் அன்புடன் தலையை வருடிக் கொடுத்து “நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குத் தெரியுமா, நான் கூட இன்று சாப்பிடவில்லை. நீ பசித்திருக்கும் போது என்னால் எப்படி சாப்பிட முடியும் ? “ என்று சொல்லி மறைந்தான். கண் விழித்த மணிதாஸின் முன்னால் பிரசாதத் தட்டு நிறைய உணவு இருந்தது. மணிதாஸனும் பசியாறினான்.

அரண்மனையிலிருந்து வந்த பரிவாரம் முழுமரியாதையோடு அவனை அழைத்துச் சென்று ஜகன்னாதன் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்தது. அன்றிலிருந்து மணிதாஸின் பாடல்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. சொற்பொழிவுக்கான அரங்கமும் ஜகன்னாதர் சந்நிதியிலிருந்து லெட்சுமி தேவி கோவிலுக்கு மாற்றப்பட்டது.

இது தோட்டக்காரனுடைய தோட்டத்தில் (அருள் )மழை பெய்த கதை.

அவனே ஒரு பெரும் தோட்டக்காரன். வண்ண வண்ண உலகை நிர்மாணித்து காலாகாலத்தில் மழையும் வெயிலும் தந்து, மவுனமாய் பக்தர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனாகி, அவர்கள் ஆடியும் அரற்றியும் உரத்து அருளுக்காக கூவுவதை வேடிக்கைப் பார்ப்பவன் !!

இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே


வரும் தீபாவளி நன்னாளில் யாவருக்கும் அந்த கண்ணனின் அருள் பெருகுவதாக.

அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

17 comments:

  1. பதிவின் முதல் பகுதி, அப்படியே கொஞ்ச நாள் டி.வி.எஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய நினைவுகளை அள்ளிக் கொடுத்து விட்டது கபீரன்பன் ஐயா! :)

    ஒவ்வொரு மோட்டருக்கும் ஒவ்வொரு ரேட்டிங் இருக்கும்! அதுக்கேற்ற இணைப்பைத் தான் கொடுக்கணும்....என்பதாகட்டும்...

    விவேகானந்தர் இன்னொருவரைத் தொட்டதாக இருக்கட்டும்....

    அவரவர் அப்போது உள்ள ரேட்டிங்கிற்கு ஏற்ற இணைப்பு...

    ஆனால் இணைத்தவுடன் வரும் ஆற்றல் என்னவோ அதே சக்தி தான்! அதையும் குறிப்பிட்டே ஆக வேணும்!

    அதான் ஆழ்வார் அதையும் சேர்த்தே பாசுரத்தில் நுணுக்கமாகச் சொல்லுகிறார்!
    அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை - என்று சொன்னவர்...
    அவரவர் இறையவர் என "அவரை அடைவர்கள்" என்று சொல்லவில்லை! :)
    அவரவர் இறையவர் என "அடி" அடைவர்கள் - என்று முத்தாய்ப்பாகக் காட்டி விடுகிறார்!

    அவரவர் இறையவர் என்று சொன்னாலும்...
    அடைவது என்னவோ "அடிகள் தான்! திருவடிகள் தான்!"

    //இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
    உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்//

    விதம் விதமாக, அனைவரும் உணவைத் தான் பார்க்கணும்! :)
    அருமை! அருமை!
    வாழி கபீர்! வாழி மாறன்!
    வாழ்க சீர் "அடி"யார் எல்லாம்!

    ReplyDelete
  2. //பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று//

    ஹா ஹா ஹா
    பண்டிதருக்கு ஜகன்னாதர் சன்னிதியில் ஜகன்னாதர் அல்லவா உண்டாக வேண்டும்? எரிச்சல் உண்டானால்?? :)

    ஏனென்றால் பண்டிதர் ஜகன்னாதரைப் பின்னிறுத்தினார்! தன்னையும் தன் வழக்க சம்பிரதாயங்களையும் முன்னிறுத்தினார்!
    அதற்குத் தடை ஏற்படுகிறதே என்னும் போது, "எரிச்சல்" ஏற்படுகிறது! ஜகன்னாதர் ஏற்படவில்லை!

    மணிதாஸோ, தன்னையும் தன் பாட்டுக் கோஷத்தையும் பின்னிறுத்தினான்! ஜகன்னாதரை முன்னிறுத்தினான்! அதனால் "எரிச்சல்" வரவில்லை! "அழுகை" வந்தது! ஜகன்னாதருக்கு நம்மைப் பிடிக்கலையோ என்ற "அழுகை" வந்தது!

    பக்த விஜயங்களில், பல கதைகளில், கபீர், துக்காராம், மீரா என்று பலப்பல சம்பவங்களில் காட்டுவது இது ஒன்றே தான்!
    "நம்" உள்ள உகப்புக்கு இருந்து கொண்டால் எரிச்சல் வரும்! :)
    "அவன்" உள்ள உகப்புக்கு இருந்து கொண்டால் எரிச்சல் வராது!

    அவரவர் தமதம அறிவு அறி வகை வகையாய் இருந்தாலும்...
    அந்த வகை வகைகளில்....அவன் உகப்பை முன்னிறுத்தி விட்டால், இனி எல்லாம் சுகமே!

    இவையும் அவையும் உவையும்
    இவரும் அவரும் உவரும்
    எவையும் எவரும் தன்னுளே
    ஆகியும் ஆக்கியும் காக்கும்!

    ReplyDelete
  3. நல்வரவு கே.ஆர்.எஸ்.

    சுவைத்துப் படித்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.

    //அவரவர் இறையவர் என்று சொன்னாலும்...
    அடைவது என்னவோ "அடிகள் தான்! திருவடிகள் தான்!//

    விண்ணையும் மண்ணையும் திருவடிகளாலே அவன் அளந்தபின் அதற்கப்பால் நினைத்துப் பார்க்க அடியவர்களுக்கு ஏதும் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு விட்டார் போலும்.

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே !!

    சுவையான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. //விண்ணையும் மண்ணையும் திருவடிகளாலே அவன் அளந்தபின் அதற்கப்பால் நினைத்துப் பார்க்க அடியவர்களுக்கு ஏதும் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு விட்டார் போலும்//

    இறையவரை அடைவார்கள்-ன்னா எந்த இறையவர், அவரவர் இறையவரா என்றெல்லாம் கேள்வி எழலாம்!
    அவரவர் இறையவரை அடையக் கூட, விதி வழி நிற்கணுமா-ன்னு பேச்சு எழும்!

    அதான் இறையவரை அடைவர்கள்-ன்னு சொல்லாது, "அடி" அடைவர்கள்-ன்னு நிலைத்த பேருண்மையைச் சொல்லி விட்டார்!
    "அடி" அடைவர்கள்-ன்னு சொன்ன பிறகு, எந்த இறையவர், அவரவர் இறையவரா? - என்றெல்லாம் பேச்சே வராது பாருங்க!

    புல், பூண்டு, மனிதர், தேவர், அசுரர் என்று அத்தனை பேர் மேலும் பட்ட, நேயத்தே நின்ற நிமலன் அடி! அனைவருக்கும் பொதுவான "திருவடிகள்"!

    ReplyDelete
  5. gi,

    thanks for manidoss story.

    in all stories or happenings - god conveying to us - faith, true love, pure mind.

    these are basically needed for everybody.

    ReplyDelete
  6. வெகு நிறைவான பதிவு.. லோகாயதமாக ஆரம்பித்து ஆழமான சிந்தனைகளை கிளறும் வண்ணம் எழுதியிருக்கும் விதம் தங்களின் தனித்தன்மை. கண்ணண் அருள் எல்லோர்க்குமாய் நிரம்பட்டும். நன்றி..

    ReplyDelete
  7. //இவையும் அவையும் உவையும்
    இவரும் அவரும் உவரும்
    எவையும் எவரும் தன்னுளே
    ஆகியும் ஆக்கியும் காக்கும்
    அவையுள் தனிமுதல் எம்மான்
    கண்ண பிரான் என் அமுதம்
    சுவையன் திருவின் மணாளன்
    என்னுடைச் சூழல் உளானே.//

    படிக்கப் படிக்க எவ்வளவு இனிமையாகவும், தீர்மானமாகவும், மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது, பாருங்கள்!

    ReplyDelete
  8. ஜகந்நாத தாஸர்களிடையே மணிதாஸ் மாலி ஒப்பற்ற மணிதான்.
    பாகவதத்தில் இடம் பெறும் மாலாகாரரின் தொண்டு பல அடியார்களையும் கவர்ந்துள்ளது
    என்று தெரிகிறது.தமிழகத்தில் அவதரித்த விஷ்ணு சித்தர்,விப்ர நாராயணர்,அநந்தாழ்வான்
    ஆகியோர் தோட்டம் அமைத்துப் புஷ்ப கைங்கர்யம் செய்வதில் சுவை கண்டனர்.

    ”சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு..”
    எம்பெருமானுக்கான போக்ய வஸ்துக்களில் மலர் முக்கிய இடம் பெறுவது ஒரு காரணமாக இருக்கலாம்.

    தேவ்

    ReplyDelete
  9. @கே.ஆர்.எஸ்
    //"அடி" அடைவர்கள்-ன்னு சொன்ன பிறகு, எந்த இறையவர், அவரவர் இறையவரா? - என்றெல்லாம் பேச்சே வராது பாருங்க!//

    :)) நன்றி

    @yrskbalu
    நன்றி பாலு சார்

    @ கிருத்திகா

    ரசித்து படித்ததற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    @ ஜீவி
    //படிக்கப் படிக்க எவ்வளவு இனிமையாகவும், தீர்மானமாகவும், மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது, பாருங்கள்//

    கவிச் சக்கரவர்த்தி கம்பரே போற்றி மகிழும் தமிழ் நம்மாழ்வாருடையது என்னும் போது சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது. நமக்கும் அந்த வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றிதான் சொல்ல முடியும்.

    நன்றி ஜீவி சார்.

    @ தேவராஜன்
    விப்ர நாராயணரையும் விஷ்ணு சித்தரையும் நினைவூட்டியதற்கு நன்றி தேவராஜன் சார்.

    ReplyDelete
  10. தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அருமையான உதாரணம்! அருமையான கருத்துக்கள்!

    ReplyDelete
  12. எதை விட, எதை எழுத?
    அவ்வளவும் முத்துக்கள் ஐயா!

    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும்
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    தங்கள் மேலான பணி தொடரட்டும்!

    ReplyDelete
  13. Thanks & best wishes for Diwali

    @Krishnamurthy sir

    @ T.V. Sir

    and
    @(Mis) Chief Editor sir

    Thanks for your compliments too!

    ReplyDelete
  14. I liked this post very much. Thanks ! :)

    ReplyDelete
  15. //கண்ண பிரான் என் அமுதம் //
    படிக்கவே இனிமையாய் இருக்கிறது. திருவாய்மொழி பாசுரத்திற்கு நன்றி கபீரன்பன் ஐயா.

    ReplyDelete
  16. வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.

    திருநாளைப்போவார் என்ற நந்தனாரும் இந்த வகையைச் சார்ந்தவர்தான்.அவருக்கும் தில்லைக் கூத்தன் எவ்வளவு சிரமத்துக்குப் பின் தரிசனம் கொடுத்து தன்னுடன் இணைத்துக்கொண்டான்.

    ReplyDelete
  17. @ ராதா
    இடுகை தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி

    @ தி.ரா.ச.
    //திருநாளைப்போவார் என்ற நந்தனாரும் இந்த வகையைச் சார்ந்தவர்தான்..//

    சுந்தரசுவாமிகள் சொன்னது :”செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்”

    மிக்க நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி