Thursday, November 19, 2009

உடமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

சக்கிலியன் ஸைமன் குடிசையின் முன்னே பெரிய கோச் வண்டி வந்து நின்றது

மூன்று குதிரைகளால் இழுக்கப்பட்ட ஸ்லெட்ஜ்-கோச்சில் அந்த வட்டாரத்தின் மிகப் பெரும் சீமான் ஸைமனின் குடிசைக்கு முன்னே வந்து நின்ற போது ஸைமனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. குடிசையின் தாழ்வான கதவில் தலையை குனிந்து உள்ளே வந்த அவனைப் போன்ற ஒரு ஆகிருதி, தேககாந்தியை ஸைமைன் கண்டதில்லை. பின்னாலேயே அவன் வேலைக்காரனும் உடன் வந்து நின்றான்.

அவன் பேச்சும் போக்கும் ஆணையிடுவது போன்று இருந்தது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப் பட்ட மிக விலையுயர்ந்த பதப்படுத்திய தோலைக் காட்டி ’இது போல் தோலைக் கண்டிருக்கிறாயா’ என்று கேட்டான். ஸைமன் இல்லையென்று தலையசைத்தான். ’இதன் விலை தெரியுமா உனக்கு?’ என்று மிரட்டுவது போலக் கேட்டான். ’இருபது ரூபிளாக்கும்’ என்றதும் ஸைமன் வாயடைத்து நின்றிருந்தான்.

நடக்கும் போது சுருக்கங்கள் விழாது, ஒரு வருடத்துக்கு உழைக்கக்கூடிய,
குதிகால் உயரம் உள்ள முழுக்காலணிகளை தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று சீமான் கேட்டான். ஸைமன் மைக்கேலைப் பார்த்தான். மைக்கேல் கனவானைப் பார்க்கவில்லை. அவன் பின்னாலிருந்த சுவர் மூலையை உற்று நோக்கி கொண்டிருந்தான். திடீரென்று அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. முகத்தில் ஒரு புதிய ஒளி தோன்றியது.

”என்ன தயார் செய்ய முடியுமா?” என்று சீமானின் குரல் அதிகாரத் தொனியில் வினவியது. ”கண்டிப்பாக செய்து தருகிறேன்” என்று மைக்கேலின் சம்மதம் இல்லாமலே சொன்னான் ஸைமன். “நினைவிருக்கட்டும், அதில் சுருக்கங்கள் வரக்கூடாது. சரியாகத் தைக்காமல் பின்னால் ஏதேனும் பிரச்சனை வந்தால் உங்களை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன்” என்று சொல்லியவாறே தன் ஒரு காலை நீட்டினான். உடனே அவனது வேலைக்காரன் அவனது காலணியை விலக்கினான். சீமான் குளிருக்காக அணிந்த கால் உள்ளுறையும் மிக விலையுயர்ந்தது என்பது தெரிந்தது. ஸைமன் அவன் பாதங்களை ஒரு தாளில் வரைபடமாக பதிவெடுத்துக் கொண்டான்.

சீமானின் மிடுக்கான பேச்சும் தோற்றமும் ஸைமனுக்கும் அவன் மனைவிக்கும் மிரட்சியை உண்டு பண்ணியது. அவன் திரும்பி வெளியே செல்ல எத்தனித்த போது நிமிர்ந்த தலை குனிய மறந்ததால் வாயில் நிலையில் மோதிக் கொண்டது. தலையைத் தேய்த்தவாறு மீண்டும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே கோச் வண்டியில் ஏறி சென்றான் அந்த சீமான்.

மைக்கேல் ஸைமனிடம் வந்து சேர்ந்து சில வருடங்கள் ஓடி விட்டிருந்தன. அவன் வந்து சேர்ந்த விதமே விசித்திரம். மைக்கேல் அவசியமின்றி பேசுவதே இல்லை. எவ்வளவு தேவையோ அவ்வளவே பேசினான். அவன் முகத்தில் வருத்தமோ சந்தோஷமோ கண்டதில்லை. மூன்றே தினங்களில் பல வருட அனுபவமுள்ள ஒரு சக்கிலியன் ஒப்ப வேலையைக் கற்றுத் தேர்ந்தான். அவனுடைய திறமையில் முழு நம்பிக்கை உடையவனாய் இருந்தான் ஸைமன். சீமான் விட்டுச் சென்ற தோல் துண்டை எடுத்து மைக்கேல் வெட்ட ஆரம்பித்தான். ஆனால் மேற்கொண்டு அவன் அதை செருப்பாக தைத்துக் கொண்டிருந்தான். பாதங்களை மூடும் முழுக் காலணியாக வடிவமைக்கவில்லை.

ஒருபுறம் அவன் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஸைமன் அவன் போக்கிற்கே விட்டு விட்டான். மைக்கேலின் எந்த முடிவும் தவறாக இருக்காது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். அன்று மாலைக்குள்ளாகவே மீண்டும் அந்த குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த வேலைக்காரன் சீமான் கொடுத்த அந்த தோலை திருப்பி தரும்படி சீமாட்டி பணித்ததாகவும் அந்த தோலில் சீமானின் காலளவுக்கு ஒரு செருப்பு போதுமென்றும் கூறினான்.

ஸைமனின் ஆச்சரியம் எல்லை கடந்தது. ஏனிந்த மாற்றம் என்று வினவினான். போகும் வழியிலேயே சீமான் உயிர் துறந்ததாகவும் அவனுடைய பிணந்தான் வீடு சென்று இறங்கியதாகவும் சொல்லிய வேலைக்காரன் இப்போது தேவைப்படும் செருப்பு அவருடைய இறுதி யாத்திரைக்கு எனவும் தெரிவித்தான். தயாராக இருந்த செருப்பையும் மிச்சம் இருந்த தோல் பகுதிகளையும் சுருட்டிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் ஸைமன்.


WHAT MEN LIVE BY ? [மனிதர் வாழ்வது எதனால் (நிர்ணயிக்கப்படுகிறது)? ] எனப்படும் லியோ டால்ஸ்டாயின் கதையிலிருந்து ஒரு பகுதியே மேலே படித்தது. இக்கதையில் மைக்கேல் ஒரு தேவதூதன். கடவுளின் ஆணை ஒன்றை மீறியதற்காக பூமியில் மூன்று கேள்விகளுக்கு விடையறிந்து வர அனுப்பப்பட்டவன். அந்த மூன்று கேள்விகள்:

1) What dwells in men ? -- மனிதருள் நிறைந்திருப்பது எது ?

2) What is not given to him ?- அவர்களுக்கு அளிக்கப்படாதது எது ?

3) What men Live by ? -மனி்தர் வாழ்வது எதனால் ?

இரண்டாவது கேள்விக்கான விடையை அந்த சீமானின் வருகை மூலம் அறிந்து கொண்டதாலே அவன் முறுவலித்தான்.

யாருக்கு எப்போது எது தேவை என்பதை கடவுள் மட்டுமே அறிவான். ”தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது”. அந்த சீமானின் வாழ்க்கை மூலம் மைக்கேல் தெரிந்து கொண்ட விடை இது.
{முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடை ’அன்பு’ என்பது கதையோட்டத்தில் விளக்கப்படுகிறது.}
சில நிமிடங்களிலே உயிர் போகப் போகின்றத் தருணத்திலும் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உழைக்கக்கூடிய காலணிகளை கேட்க்கும் சீமானைப் போன்றவர்களே உலகத்தோர் என்பதை மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளார் டால்ஸ்டாய் அவர்கள். இதுவே நிலையாமை.

’உலகத்திலேயே மிக ஆச்சரியம் தரும் விஷயம் யாது?’ என்கிற யக்ஷனுடைய கேள்விக்கு தருமபுத்திரர் கொடுத்த விடையும் நாம் யாவரும் அறிந்ததே. தினம் தினம் இறப்பவர்களை கண்முன்னே கண்டு கொண்டே இருப்பினும் நாம் மட்டும் சாஸ்வதம் என்கிற வகையில் செயல்படும் மனிதரை விட வேறு என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

திருமூலர் இந்த நிலையாமையை நாடகப் பாணியில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு வரியிலும் ஒரு காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே


[அடப்பண்ணி= உணவை சமைத்து ; அடிசில் = சமைக்கப் பட்ட உணவு; மடக்கொடி =இளம் மனைவி ; இறை= சிறிது]

நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைவன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

[கடைமுறை =இறுதி முறையாக ; நம்பி= தலைவன்; நடக்கின்ற வாறே= நடந்து போகும் விதம்]

தில்லியில் ஒரு மிகப் பெரும் நிறுவனம், பத்து மாடி கட்டிடம் (Corporate Office) ஒன்றை, மூன்று வருட காலத்தில் கட்டியது. அதன் சேர்மனாக இருந்தவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து அவரது இளைய சகோதரர் புதிய கட்டிடத்தில் சேர்மனாகப் பதிவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகி தேதியும் குறிப்பிடப்பட்டு திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவிட்டன. சேர்மனுக்கான அலுவலகம் பலருடைய உழைப்பால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. ஆயின் இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் பதவியேற்க வேண்டிய அந்த இளைய சகோதரர் மாரடைப்பால் திடீரென்று காலமானார். அப்போது நிறுவனத்தில் நிலவிய ஏமாற்றத்தை சொல்லி முடியாது.

அத்தகைய சோக நிகழ்ச்சிகளைக் காணும் போது கபீர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மை சுரீரென்று் உறைக்கிறது.

कबीरा गर्व न कीजीयॆ, ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना, ऊपर जम्सी घास

செருக்கு வேண்டா கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ!, காலன் கிடத்தும் இடங் கண்டு


(புல் முளைக்கும் என பொருள்வரும் ’ஜம்ஸி காஸ்” என்று கபீர் சொல்லியிருப்பது எதுகை அமைப்புக்காக எருக்கு முளைப்பதாக மாறியுள்ளது )

காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகுக்கு வேண்டியவற்றை சேர்த்தாகி விட்டது. குடும்பத்தினருக்கும் இன்னொரு தலைமுறைக்கு வேண்டியது இருக்கிறது.

தேவைகளை சுருக்கிக் கொள்ளத் தெரிவதில்லை. ஒன்று தொட்டு ஒன்று, எதன் காரணமாகவோ அது வளர்ந்து கொண்டே போகிறது. எதையோ பற்றிக் கொண்டு எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில் இவையெதும் உடன் வரப்போவதில்லை, தெரியும். உடன் வரக் கூடியதை சம்பாதிக்க மனம் ஈடுபடுவதில்லை. ’காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்பதன் பொருள் தெரிந்தும் மனதுள் இறங்குவதில்லை. அது தன் போக்கில் இழுத்துக் கொண்டே போகிறது. அப்போது அது சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகள்தான் எத்தனை எத்தனை! அதை அதிவீரராம பாண்டியர் வரிகளில் பார்ப்போம்.

உடமையும் வறுமையும் ஒரு வழிநில்லா

குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ் சாலை அடையினும் அடைவர்

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்

குன்றத்தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

எழுநிலை மாடம் கால்சாய்ந்துக்குக்
கழுதை மேய் பாழாகினும் ஆகும்


[ நண்ணுதல் = சேர்தல்; அறக்கூழ் சாலை= தர்ம சத்திரம் ]

காலன் எவருக்கும் தனி மரியாதை கொடுப்பதில்லை. அரண்மனை வாசமிருக்கும் மன்னனும்,வெளியே திரியும் பிச்சைக்காரனும் அவன் புத்தகத்தில் ஒன்றே.

அதனால் இடையே ஏற்படும் பலவிதமான செருக்குகள் இறுதியில் அர்த்தமில்லாமல்போய்விடுகிறது . குலச் செருக்கு,செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு,அதிகாரச் செருக்கு இப்படி பலவாறாக நம்மை ஆட்டிப் படைக்கும் மாயை ஒரே கணத்தில் அவற்றை ஏதுமில்லாமலும் செய்து விடுகிறது.

இப்படி எத்தனைத் தினங்கள் (அல்லது பிறவிகள் )கழியப் போகின்றன. மனதிற்கு இவைகளிலுள்ள நிலையாமை ஏன் புரியாமல் போகிறது? இதை குறிப்பிடும் வகையிலும் கபீர் சொல்லும் இன்னொரு ஈரடி:

क्या करियॆ क्या जॊडिये, थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


அற்ப வாழ்வு அவனியிலே, அலைவ தென்ன அடைந்த தென்ன
சொற்ப தினமே போயின யாவும், தனம் திவரம் கிருகம் தேகம்

( திவரம்= தேசம், ராஜ்யம் )

இந்த மனம் இறைவன் பெயரில் இருக்கும் சுகத்தை அறியாததனால் தானே இப்படிக் கிடந்து உழலுகி்றது.

அவன் தான் இந்த சக்கரச் சுழலுக்கு அச்சு. வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் ஈ, பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப குலுங்கிக் குலுங்கி பயணம் செய்யும். அது மெள்ள நகர்ந்து அச்சாணியை அணுகுமளவும் ஆட்டம் குறைந்து கொண்டே போகும். கடைசியில் அச்சாணியிலே அமர்ந்து விட்டால் பாதையின் மேடு பள்ளங்கள் அதை பாதிக்காது.

ஆகவே பரம சுகம் தரும் கடவுளின் நாமத்தைப் பிடித்துக்கொள். இறைவனுக்கு அருகே செல்வதற்கு அதுவே வழி. இல்லாவிட்டால் காலன் வாயிலில் மீண்டும் மீண்டும் புகுவதே வேலையாகிவிடும். இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது என்று எச்சரிக்கிறார் கபீர்.

कबीर सब सुख राम है, औरहि दुख की रासी ।
सुर नर मुनि अरु असुर सुर, पडे काल की फांसि ॥


இராம நாமமே பரமசுகம் கபீரா, மற்றன வெல்லாம் துன்பமயம்
தேவ முனிவரும் நராசுரரும், சேர்வரே கடையில் காலன்வயம்

( நராசுரர்= நரர்+அசுரர்)


புரந்தரதாஸருக்கும் அதே கருத்து. ராம ராமா என்னிரோ என்கிற அவருடைய பாடல் ஒன்றை சமீபத்தில் சிருங்கேரி சென்றிருந்த போது நண்பர் ஒருவருடைய மகள் இப்பாடலை பாடக் கேட்டு மனது உருகியது. அதன் ஒலிப்பதிவு இங்கே தரப்பட்டுள்ளது.
[Cam coder -ல் பதிவு செய்தபடியால் சில குறுக்கீட்டு உரையாடல்கள் இடையிடையே கேட்கும். மன்னிக்கவும். சில நல்ல விஷயங்களுக்காக சில அல்லல்களைப் பொறுத்துக் கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்
:) ]

சிறுமியின் பெயர் ரம்யா. எளிதாக புரியும் வார்த்தைகள்தான், ஆயினும் மொழி பரிச்சயமில்லாதவர்கள் பாடலைத் தொடர அதன் பொருள் கீழே தரப்பட்டுள்ளது. ’என்னிரோ’ என்றால் சொல்லுங்கள் என்று பொருள் படும்.
sringeri.mp3


கட்டிய மனைவியும் கூட வர மாட்டார் ;ராம ராமா என்று சொல்லுங்கள்.
தன்னவர் என்று வளர்க்கப்பட்ட மக்களும் தன்னவர் ஆவதில்லை; ராம ராமா என்று சொல்லுங்கள்.
நிலம், கால்நடை தான்யம் தனம் யாவும் விட்டு செல்வனவே; ராம ராமா என்று சொல்லுங்கள்.
கெட்ட சம்ஸாரம் இது, சுகம் என்பது கிஞ்சித்தும் இல்லை ராம ராமா என்று சொல்லுங்கள்.
சிருஷ்டியில் முதல்வனான புரந்தர விட்டலனை மறவாது
ராம ராமா என்று சொல்லுங்கள்.
நரஜென்மம் என்பது ஸ்திரமில்லை, அந்த கோமளாங்கன் நாமம் அந்த (கடைசி)வேளைக்கு வராது. ராம ராமா என்று சொல்லுங்கள்.

இப்போதிலிருந்தே இறைவன் நாமத்தை செபித்து பழகாவிட்டால் கடைசி நேரத்தில் அது துணைக்கு வராது என்பதையும் புரந்தரதாஸர் குறிப்பிட்டு சொல்கிறார்.

நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.

21 comments:

  1. //காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.//

    உங்கள் பதிவு என்னை உண்மைக்கு இழுத்து செல்கிறது. பகிர்தலுக்கு நண்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் ஸ்ரீராஜ்

    //உங்கள் பதிவு என்னை உண்மைக்கு இழுத்து செல்கிறது //

    :))

    வேடிக்கையைப் பாருங்கள். அந்த ’உண்மைக்கு’ மகான்களெல்லாம் நூற்றுக் கணக்கான வருடங்களாக நம்மை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எளியவன் என்னுடைய பதிவுக்கு அதற்கான பெருமையை கொடுத்து விட்டீர்கள். எல்லாம் அவன் செயல். :)

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. எப்பவும் சொல்லாட்டியும் இப்போ சொல்லிக்கறேன். :-)
    ராமா ராமா ராமா !
    ~
    Radha

    ReplyDelete
  4. நல்ல பதிவு. மிக்க நன்றி!

    ReplyDelete
  5. @ Radha :

    //எப்பவும் சொல்லாட்டியும் இப்போ சொல்லிக்கறேன். :-) ///

    நானும் சேர்ந்துக்கிறேன் :)) ராமா ராமா ராமா. மிக்க நன்றி

    @ தி.வா. :

    வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  6. எவ்வளவு நல்ல விசயங்கள்,
    திருமூலர் பாடல்கள்,
    அருமை, அருமை ! தொடர்க உமது இறைப்பணி !

    ReplyDelete
  7. அற்புதம்!

    துக்கங்களை நினைத்து மனவேதனையில் இருக்கும் போது, மருந்தென ஒரு பதிவு.

    நமஸ்காரம்.

    ReplyDelete
  8. அன்பின் அய்யா,
    இரண்டு வரிகள் உண்மையைப் போட்டு உடைக்கும் படி உள்ளன. மிக்க நன்றி

    ReplyDelete
  9. another good article for rama nama jabam.

    you are doing nama mala very beautifully.

    you can publish book under name of rama nama mahimai or like that.

    ReplyDelete
  10. //நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.//

    எல்லாரும் சேர்ந்து வந்தாலும் நம்ம கல் நெஞ்சு கரையணுமே! :(

    "வீடுவரை உறவு,
    வீதி வரை மனைவி,
    காடு வரை பிள்ளை,
    கடைசிவரை யாரோ!"

    ReplyDelete
  11. //தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது//

    அற்புதம்!

    உங்கள் பதிவுகள் எத்தனை படித்தாலும் நீங்கள் செய்திகளைக் கோர்த்துத் தரும் அழகு ஒவ்வொரு முறையும் புதிது போல் வியப்பூட்டுகிறது!

    //நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.//

    உண்மைதான் :(

    ReplyDelete
  12. hmm, the post as always is awesome, this time it so reminds me of my personal experience. My father had planned to wear his new shirt on his wedding anniversary day, absolutely not knowing he was to die on the day before. yup, he never got to wear that new shirt! today is his anniversary, and the truth behind each and every word of yours is so powerful, so powerful. Who could dare question the fickleness of life? the ones who realize it and accept it with all graciousness are the wise ones like all the great saints and Gurus you mention, and the rest who live in denial, hmm oh well like me, are the ones who chase life like a passel of fools.

    Thank You so much for sharing the wisdom with us! Even if not now, the more I continue to read all the good ones, the truth might one day sink in, hopefully that day is not far away, in the next couple of births probably? :)

    ReplyDelete
  13. அன்புள்ள கபீரன்ப,

    பல தடவைகள் படித்து விட்டேன். இந்தப் பதிவு என் உள்ளத்தில் கிளப்பும் வினாக்கள் எக்கச்சக்கம். வாழ்வது என்பதே அவன் ஏற்பாடாக இருக்கையில்..'எதற்காக?' 'ஏன்?'எப்படி?' என்று ஆரம்பித்த யோசிப்பு, மென்மேலும் வினாக்களைத் தொடுத்துக் கொண்டு தவிக்கிறது.

    யோசிக்களை மனத்தில் கிளப்பிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி. 'ஆத்மாவைத் தேடி'யில் அவவப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  14. ஸைமன் மைக்கேல் நிகழ்வுகள் போலவே எங்கள் குடும்பத்திலும் நடந்திருக்கிறது.

    எனது தந்தை பிரபல வழக்கறிஞராக திருச்சியில் பணியாற்றி வந்த காலமது. 1960 வாக்கில் அவர் மூட்டு வியாதியால்
    அவதியுற்றார். அதன் மிகையால் பல நாட்கள் அவர் கோர்ட்டுக்குச் செல்ல முடியவில்லை. படுத்தவாறே அவர் தம்
    கட்சிக்காரர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருப்பார்.

    ஒரு நாள் எங்கள் கிராமத்திலிருந்து ஒரு பெரிய நிலச்சுவான் தார் அவரது கேசுக்காக வந்திருந்தார். என் தந்தையோ
    அடுத்த நாள் தன்னால் கோர்ட்டுக்கு வர இயலாது எனவும் அதற்காக வாதிடும் பொறுப்பினை இன்னொரு சக வக்கீலிடம்
    ஒப்படைத்திருப்பதாகவும் சொன்னார்.

    திரும்பிச்செல்கையில் அந்த நிலச்சுவான் தார், என் அண்ணனையும் என்னையும் அருகில் அழைத்து, உங்கள் அப்பாவைப்பார்த்தால்
    இன்னும் ஒரு வாரம் தான் இருப்பார் போல் தோன்றுகிறது என்று சொல்லிவிட்டுச் சென்றார். நாங்கள் அவர் சென்றபிறகு
    அப்பாவிடம் இதைச் சொன்னபொழுது, அவர் நகைத்தார். அவர் நகைப்பின் பொருள் எங்களுக்கு புரியவில்லை.

    சொல்லிச் சென்றவர் நல்ல திடகாத்திரமாகத்தான் இருந்தார். ஆயினும், அடுத்த சில நாட்களில் அவர் திடீரென காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது.
    எங்கள் தந்தை அப்பொழுது சொன்னார்:

    கோர்ட்டுகளின் காலண்டர் காலாண்டுக்குத் தெரிந்துவிடும். ஆனால்,
    காலனின் காலண்டரை கண்டவரும் உண்டோ ?

    தொடர்ந்தார்....

    " நெரு நல் உளன் ஒருவன், இன்று இல்லை என்னும்
    பெருமை உடைத்து இவ்வுலகு "

    எனும் வள்ளுவன் கூற்று பொய்க்குமோ ?

    இன்னும் வருவேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  15. @ vetrimagal

    @ bxbybz

    @ Kesavan

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. @ சுப்புரத்தினம் சார்

    //காலனின் காலண்டரை கண்டவரும் உண்டோ //

    என்ன ஒரு சத்தியமான வார்த்தைகள் !!

    கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  17. @ Sumi

    //....absolutely not knowing he was to die on the day before. yup, he never got to wear that new shirt! //

    தங்களது தந்தையின் வாழ்க்கையில் நடந்திருப்பது, மேலே சுப்பு ரத்தினம் ஐயா கூறியுள்ளது போல ‘ காலனின் காலண்டரை யார் அறிவார் ?’ என்ற வரிகளை நினைவூட்டுகிறது.

    வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  18. @ ஜீவி

    //ஆத்மாவைத் தேடி'யில் அவவப்போது பகிர்ந்து கொள்கிறேன்//

    கண்டிப்பாக . வாசகர்கள் காத்திருக்கிறோம். நன்றி.

    ReplyDelete
  19. @ கவிநயா,

    பதிவு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுரைகளுக்கு நன்றி.

    @yrskbalu

    //another good article for rama nama jabam. //

    யோகி ராம்சூரத்குமாரின் ஆப்தருக்கு ராமநாம மகிமை பிடித்திருப்பது ஆச்சரியமில்லை :) நன்றி

    @ கீதா மேடம்

    //வீடுவரை உறவு,,,,//

    இந்த பாட்டு பிரபலமான காலத்தில் அதை முணுமுணுக்கும் பொதெல்லாம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். அதனால்தான் பதிவில் சேர்க்கவில்லை :)))

    மிக்க நன்றி

    ReplyDelete
  20. ஹனுமத் ஜயந்தி அன்று தங்களின் பதிவை படிக்க நேர்ந்தது பாக்கியமே!

    உண்மைதான். காலன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!
    தன் வேலையைக் காலத்தே செய்வதால் தானோ என்னவோ 'காலன்' என்கிற பெயர் பொருத்தமாயிருக்கிறது!

    நீங்கள் 'தருமர்' கதையையும் இணைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அந்தணர் ஒருவர் 'தானம்' வேண்டி வர், தருமர் 'நாளை தருவதாய்'ச் சொல்ல, பீமன் முரசு கொட்டி 'தருமர் காலனை வென்று விட்டார்' என்று கூவும்போது, தருமருக்குத் தவறு புரிகிறது!

    கூற்றுவன் பற்றிய சில தமிழ்ப்பாடல்களை எனது நண்பர்களின் பதிவில் காணலாம்.

    http://tulitamil.blogspot.com/2009/12/blog-post_11.html
    http://tulitamil.blogspot.com/2009/12/blog-post_07.html

    எனது பெற்றோர்களின் உயரிய பழக்கங்களில் ஒன்று - 'நாளை செய்ய வேண்டிய ஒன்றை' இன்று யோசித்து, முடிவு எடுக்கும்போது 'பொழச்சு கெடந்தா நாளைக்கு முடிச்சுடலாம்!' என்று சொல்வது!

    அருமை கபீரன்பர் (ஒருமையில் விளிக்க மனதில்லை ஐயா!) அவர்களே!, தொடரட்டும் உமது உன்னதப் பணி!

    -பருப்பு ஆசிரியர்

    ReplyDelete
  21. வருக பருப்பு ஆசிரியர் அவர்களே,

    தங்கள் நண்பரின் தமிழ் துளி வலைப் பக்கத்தை பரிந்துரைத்ததற்கு நன்றி. துளிகள் கற்கண்டாக இனிக்கின்றன.

    //நீங்கள் 'தருமர்' கதையையும் இணைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.//

    எழுதுகின்ற நேரத்தில் நினைவுக்கு வருவதை குறிப்பிடுகிறேன். தாங்கள் குறிப்பிட்ட கதையும் இன்னொரு சந்தர்பத்தில் பயன்படும் :). நினைவு படுத்தியதற்கு நன்றி.

    //'பொழச்சு கெடந்தா நாளைக்கு முடிச்சுடலாம்!'//

    பற்றற்ற மனப்பான்மையை வலுப்படுத்தும் முறைகளை நம் நாட்டில் பெரியவர்கள் எப்படியெல்லாம் நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள் என்று எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி