Monday, December 28, 2009

புலத்தைத் தின்னும் புள்ளினம்

கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியான ஞாயிறு மலரில் கல்லறைத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.அதில் ஒவ்வொரு மதத்திலும் இறுதி சடங்குகளின் முறைகள் அவற்றின் உட்பொருள், அத்தொழிலில் அவர்களது வருமானம், மனநிலை போன்றவற்றை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.

இசுலாமியர்களின் கல்லறைப் பெட்டியில் அடிப்பக்கம் இருக்காது என்பது எனக்கு ஒரு புது தகவலாக இருந்தது. அதற்கு சொல்லப்படும் காரணம் மண்ணிலிருந்து வந்தவர்கள் மண்ணுடனே போக வேண்டும் என்பதாகும்.



[படத்தை சொடுக்கினால் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்.]

ஒருவேளை இதனால்தான் ”மாட்டீ கஹே கும்பார்-கோ” என்று கபீர் மண் பேசுவது போல் குறிப்பிட்டிருந்தாரோ!

குயவன் கைமண் கூறும், பிசைமின் பிசைமின் இன்று
கூடிய விரைவில் உம்மை,பிசைவேன் பிசைவேன் என்று


[இது ஏற்கனவே விளக்கப்பட்ட ஈரடி. அதைப் படிக்க இங்கே சுட்டவும்]

படைப்புத் தொழிலை குயவனுக்கு உதாரணமாக்கி சொல்லாத மொழிகளோ சமயமோ இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் மண்ணிலிருந்தே மனிதனுடைய தொழில் திறனும் கலைத்திறனும் வெளிப்படத் துவங்கியது.

நாம் யாவரும் அறிந்த கடுவெளிச் சித்தரின் பாடல் வரிகள்-

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி (நந்தவனத்தில்)


இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சீவாத்மா தனக்கென ஒரு உடல் வேண்டி பத்து மாதங்கள் கர்ப்பவாசமிருந்து உடலை பெற்று உலகில் வந்து சேர்கிறது. வந்த பின்போ வந்த வேலையை மறந்து புலனின்பங்களில் காலத்தைக் கழிக்கிறது. இறக்கும் தருவாயில் தவம் செய்து உய்யாமல் போனேனே என்ற வருத்ததுடன் உயிர் பிரிவதை ’போட்டுடைத்தாண்டி’ என்ற நையாண்டி செய்கிறார் சித்தர்.

இதையே கபீர்தாஸரும் சொல்கிறார்

आछें दिन पाछे गये, गुरु सों किया न हेत ।
अब पछितावा क्या करै, चिडियां चुग गई खेत ॥


கழிந்தன களியாட்டத் தினங்கள், குருவடி கண்டு கனிந்திலரே
கழிவிரக் கத்தால் பயனுமேது, புலத்தைப் புள்ளினம் தின்றனவே

(புள்ளினம் -பறவைகள்)

வேலையாள் ஒருவனை வயலில் காவல் காப்பதற்காக நிலத்தின் சொந்தக்காரன் அனுப்பி வைக்கிறான். அவனோ சீட்டாடுவதும், தின்பதும் பின்னர் ஒரு தூக்கமும் போடுவதாகக் காலத்தை கழித்தால் வயலில் விளைந்த தினையை பறவைகள் தின்று தீர்ப்பதில் ஆச்சரியம் ஏது?

நம் முற்பிறப்பின் நல்வினைகள் பொருட்டு மீண்டும் அவற்றை பாதுகாத்து பெருக்கிக் கொள்வதற்காக இறைவன் உடலைக் கொடுத்து அனுப்பி வைக்கிறான். வந்த பின்போ செல்வம், புகழ், பதவி போன்றவற்றை தேடும் கூத்தாட்டத்தில் வாழ்க்கையை கழித்தால் அது நம் பொறுப்பற்ற தன்மையைத் தானேக் குறிக்கும்.

இறைவனை நினைந்து உருகும் ஒரே கடமைதான் தலையாயது. அதை அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் உபதேசிக்கிறார்.

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே

(இதண் =பரண் )

சுனைகளிடத்தும் அருவித் துறைகளிடத்தும், பசுமையான தினைப் புனத்திலும், பரணிடத்திலும் வள்ளிக்கு அருள் செய்யும் பொருட்டு திரிபவனே ! மனைவி மக்கள் என்று இல்லற வாழ்க்கையில் மயங்கிக் கிடப்பது தகுமோ ? (எமது) வினைகள் ஓடும் படி விரட்டும் வேலாயுதத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன்.

’குருவாய் வரும் குகன்’ தினைப்புலம் காத்த வள்ளியை அவள் தீராத பக்தியைக் கண்டு ஆட்கொண்டதன் உட்பொருளை நம்முடைய ’வினைப்புலம்’ காக்கச் சொல்வதன் மூலம் கபீர்தாஸரும் நமக்கு நினைவூட்டுகிறார்.

பிரார்த்தனைகள் மூலம் நம்முள் விளையும் ஆன்மீகப் பயிரை உலகவாழ்க்கை ஒட்டிய எண்ணங்களாம் பறவைகள் தின்று விடாமல் இருக்க குருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கபீர் அறிவுறுத்துகிறார்.

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டு எல்லாமறிந்து
குருவை அறிந்தே நினைத்துக் கும்பிடுவது எக்காலம் ?

- பத்திரகிரியார் ஞானப் புலம்பல்

இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்.

சிலர் ஹரி ஹரி என்றும் சிலர் ராம் ராம் என்றும், துர்கா, காளி, சாயி, அல்லா, நானக்,புத்த மஹாவீர் என்று எந்த பேரைச் சொல்லி பாடினாலும் புள்ளினம் ஓடிடும், இறை இன்பம் தேடி வரும்.

Koyi Bole.mp3

( நன்றி: ஸ்ரீநிவாஸ் குழுவினரின் பஜன் )

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு -2010- வாழ்த்துகள்

13 comments:

  1. //இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத்திற்கு ஒப்பிடப்படுகிறது.//

    யோசித்துப் பார்க்கையில் பூத்துக் குலுங்கும் வெவ்வேறு வகைத்தான விசித்திரங்களின் அற்புத மேன்மை புலப்படுகிறது. ஆம்! நந்தவன ஒப்பீடலனின் அருமை தெரிந்து புரிபடுகிறது.

    ReplyDelete
  2. //'வினைப்புலம்'//

    கபீரன்ப! கைகொடுங்கள்!
    வெகு அருமையான வார்த்தைப் பிரயோகம்!

    ReplyDelete
  3. //இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்.//

    claps!

    ReplyDelete
  4. நன்றி ஜீவி சார்,

    //...வெகு அருமையான வார்த்தைப் பிரயோகம்! //

    எங்கோ படித்ததுதான். வாரியார் சுவாமிகளா ரா.கணபதியா, தாயுமானவரா வேறு யாராவதா என்பது உடனே நினைவுக்கு வரமாட்டேன் என்குது. உதாரணங்கள் ஆகட்டும் வார்த்தை பிரயோகங்கள் ஆகட்டும் எல்லாமே எப்போதோ எங்கோ கேட்டவையோ அல்லது படித்தவையோ ஆகி இருக்கும். எழுதுகின்ற நேரத்தில் அவனருளால் நினைவூட்டப்படுகின்றன போலும்.

    ஆழ்ந்து படித்து பாராட்டுகிறீர்கள். மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நன்றி

    ReplyDelete
  5. Yet another beautiful article.
    //இறைவனை நினைந்து உருகும் ஒரே கடமைதான் தலையாயது.//
    I keep forgetting this often. :)

    ReplyDelete
  6. நல்வரவு ராதா,

    //I keep forgetting this often. :)//

    நீங்கள் மட்டுமல்ல, நானும் உண்டு ;நம்மைப் போல் வெகுவான பேர்களும் உண்டு! :))

    பாராட்டுகளுக்கு நன்றி

    ReplyDelete
  7. gi.,

    i wish you happy new year.

    may god gives more courage and everything for you - for writing more articles ,other mahans articles
    also.

    you are the one of role model for others for sharing the knowledge to others .

    i praying my guru yogiramsuratkumar
    to support you for this god work.

    may my guru bless you .

    ReplyDelete
  8. நல்வரவு YRSKபாலு சார்,

    தங்கள் பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி

    ReplyDelete
  9. தங்களுக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள், கபீரன்ப!
    பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

    ReplyDelete
  10. ஜீவி ஐயா,

    நினைவு படுத்திக் கொண்டு மீண்டும் வந்து பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லியிருக்கும் தங்கள் அன்பு நெகிழ வைக்கிறது.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் 2010 மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!

    மீண்டும் ஒரு அருமையான இடுகை.

    வந்த வேலையைக் கவனிப்பது பற்றி நீங்கள் பேசுகையில் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதும் நினைவுக்கு வருகிறது -மாம்பழம் சாப்பிட தோப்புக்கு போனால் அந்த வேலையை மட்டும் கவனி; எத்தனை மரம் எத்தனை இலை, எத்தனை கிளை, என்று தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று.

    ReplyDelete
  12. "இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்."
    உண்மைதான்.. நாம ஜெபத்தின் அருமையே அதுதானே..கண்ணில் நீர்கசிய கழியும் ஒவ்வொரு நொடியும் நம் காத்திருப்பின் நீளங்களை குறைத்து விடாதோ...

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிருத்திகா :)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி