Tuesday, April 27, 2010

கொட்டிலை அடையாப் பட்டிமாடு

ஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம்

" போறும் சார், எங்கப் போனாலும் பேசினதையே பேசிகிட்டு,சொல்றதுக்கோ கேக்கறதுக்கோ புதுசா ஒண்ணும் இல்லே. நெஜமா ரிசர்ச் பண்றவங்க யாரும் இப்படி கான்ஃபரன்ஸ்,செமினார்-ன்னு அலையறது இல்லே. பத்து வருஷம் இருபது வருஷம் தபஸ் மாதிரி செய்யணும். வேணான்னாலும் விடறது கிடையாது. யாரோ பணம் குடுக்கறான் என்கிறதுக்காக சும்மாவாச்சும் ஒரு கும்பலைக் கூட்டி அரைச்ச மாவை அரைக்கிறதே ரொம்ப பேருக்கு தொழிலாப் போச்சு. கடைசியிலப் பார்த்தா வெறும் வேஸ்ட் ஆஃப் டைம், டிராவல் அண்ட் எனெர்ஜி.... "

இப்படி சொன்னவர் சாதாரண கல்லூரிப் பேராசியர் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஒரு ஆராய்ச்சியாளர். அவருடைய துறையிலே அவர் ஒரு ஜாம்பவான். அவருடைய பெயரை அழைப்பிதழில் போட்டாலே கருத்தரங்கம் வெற்றி பெற்றுவிடும், கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சுலபமாக திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் அவருடைய பெயரை பயன்படுத்திக் கொள்ள விழைந்த காலம் அது. அவருடையத் துறையில் அவர் ஒரு மிக முக்கியப் புள்ளி. வருடத்தில் ஆறுமாதங்கள் வெளி நாட்டுப் பயணங்களிலேயே கழிந்தது.

பெயரும் புகழும் பெருமளவில் இருந்தும் ஒரு நிலையில் விரக்தி மனதில் புகுந்து கொண்டு விடுகிறது. முன்னேற்றமின்மை என்பது தடையாகத் தெரிகிறது. நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம், இவற்றின் அர்த்தமென்ன என்றெல்லாம் மனம் கேள்வி எழுப்புகிறது.

அரிய ஆய்வுகளில் ஈடுபட்டு தொண்டாற்றும் விஞ்ஞானிகளுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையைப் பற்றி என்ன சொல்வது ?

இந்த நிலையை இராமலிங்க சுவாமிகள் "உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ வீணே சுழன்று மெலிகின்றேன்" என்று மனம் வருத்தப்பட்டு உரைக்கிறார்.

அவரைப் போலவே கபீர்தாஸரும் அர்த்தமின்றி காலம் கழிவதை சுமை எருதுடன் ஒப்பிட்டு சொல்கிறார்.

बनजारे के बैल ज्युं , भरमि फिर्यो चहुंदेस ।
खांड लादि भुस खात हैं, बिन सतगुरु उपदेश ॥


சரக்கு வண்டி மாடு போல், நாற்திசையும் சுற்றித் திரிவரே
சரக்கோ கரும்பு தின்பதோ புல், சத்குரு மொழி நாடாதவரே

மாற்று :

கரும்பை சுமந்துத் திரியினும்,வைக்கோல் தின்னுது எருது
குருமொழி கேளா உலகோர், கழிப்பரே வீணில் பொழுது


பிறவியின் முழு சாரமே குருவைப் பிடித்துக் கொண்டு இறைநாமத்தின் ருசியை அறிவதுதான். ஆனால் பெரும்பாலோர், வைக்கோற்புல் தின்றே வாழ்க்கையைக் கழிக்கும் எருது போல், சாரமற்ற உலகியல் ஆசைகளில் காலத்தை கழிக்கின்றோமே என்கிற பரிதாபத்தினால் கபீர் உரைக்கிறார்.

கபீர்தாஸருடைய கருத்தை விளக்குவது போல் வள்ளலார் பெருமான் பாடுகிறார்.

கானல் இடை நீரும், ஒரு கட்டையில் கள்வனும்
காணுறு கயிற்றில் அரவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்த பித்தளையின் இடையும்
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை
மாயையில் கண்டு வீணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாழ்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள் என்றும் வெளி என்றும்வான்
உலகென்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை
உண்மை அறிவித்த குருவே
தானமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே


சாரமற்ற வைக்கோற் புல்லை வள்ளலாரும் எப்படியெல்லாம் விளக்கி விட்டார்!

மனை, மகவு, உறவுகள், மானம், நிதி, உடல் போன்ற எனது எண்ணங்களெல்லாம் கற்பனையில் தோன்றியவையே. அவை, கானலில் நீர் போலவும், இரவு நேரத்தில் வேலிக் கட்டையை கள்வனாகப் பாவிப்பதும், வழியில் குறுக்கே கிடக்கும் கயிற்றை பாம்பாக நினைத்து அஞ்சுவது போலும் அர்த்தமற்றவைகளாகும். வெறும் கிளிஞ்சலை வெள்ளி என்றும் பித்தளையை தங்கம் என்றும் நினைக்கின்ற அறியாமையைச் சேர்ந்தது ஆகும்.

இறைவன் அருள் என்னும் தங்கத்தின் முன்னே உலக வசியங்களெல்லாம் பித்தளையைப் போன்றதே ஆகும்.

மேலும் அவர் குருவருளை தேடாத கால விரயத்தை கபீரைப் போலவே சொல்லி வருத்தப் படுகிறார்.

காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல் தலைமேல்
பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே! இன்னல் மிகச்சுமக்கும்
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே


தூண் கட்டடத்தின் பாரம் சுமப்பதற்காகவே கட்டப்படுவது. உணர்ச்சியற்றது. கபீர் சொல்லும் எருதுக்காவது சற்று உணர்வுகள்- கஷ்ட சுகங்கள் இருக்குமோ என்னவோ. கல் தூணுக்கு அப்படி எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட உணர்ச்சியற்ற கல்தூணைப் போல வெறும் துன்பங்களை சுமப்பதற்காகவே பிறவி எடுத்து விட்டேனோ? உனது அடியார்கள் சிறப்பைப் போற்றத் தெரியாமல் பொய்களைப் பேசி உலகில் வீணாகக் காலத்தைப் போக்குகின்றேனே என்று வருந்தி சொல்லும் போது ஞானிகளுக்கிடையே உள்ள கருத்து ஒற்றுமை பளிச்சிடுகிறது.

கபீர் சரக்கு இழுக்கும் மாடுக்கு மனிதரின் போக்கை உதாரணம் சொன்னால் இராமலிங்க அடிகள் பட்டி மாடுக்கு ஒப்பிடுகிறார்.

கொட்டிலை அடையாப் பட்டிமாடு அனையேன்
கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
அறவுண்டு குப்பை மேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
நினைத்திடேல் காத்தருள் எனையே


(அட்டில்= சமையற்கட்டு; கங்குல்= இரவு; பூஞை = பூனை நெட்டிலை= நீண்ட வாழை இலை)

பட்டி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் திரிய அனுமதிக்கப்பட்ட இடம். கொட்டிலை போல அங்கே மழை வெயில் பாதுகாப்பு கிடையாது. மாலையானதும் கொட்டிலைச் சேராமல் திரியும் மாட்டை பட்டிக்குள் விரட்டி சேர்ப்பர். ஆகையால் அடங்காமல் திரியும் மாட்டை பட்டி மாடு என்று சொல்லும் வழக்கு வந்தது. கொட்டைகள் பரப்பி... கடையனேன் என்பது அழகாக அலங்கரிக்கப் பட்ட மஞ்சத்தில் சுகம் காண விரும்பும் கடை குணம் உள்ளவன் என்று பொருள்படும். அடுக்களையைச் சுற்றிவரும் பூனையின் குணம் ஒத்தவனாகும் என்னை, குப்பை மேல் வீசி எறியப்படும் எச்சில் இலை போன்றவனாயினும் வேறாக நினைக்காமல் என்னைக் காத்தருள்வாய் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்.

கபீரும் வள்ளலாரும் போன்ற மகான்கள் நம் கால விரயத்தை பலவாறாக சுட்டிக்காட்டி நம்மை இறைவன் பக்கம் திருப்ப விழைகிறார்கள். ஆனால் நம்முடைய புத்தியோ பட்டிமாடு போலவே அலைகிறது.

Monday, April 12, 2010

பதைப்பில் கழியும் இரவுகள்

பஞ்சவடி என்பதாக ஐந்துவகைத் தருக்கள் கொண்ட அந்த தோப்பு மயானத்திற்கு அருகே இருந்தது. பகல் போதில்கூட அணுகப் பயங்கரமாக இருந்த அந்த இடத்தில் கதாதரருக்கு நடுநிசியில் என்ன வேலை இருக்கும்?

பல முறை கதாரரர் அறியாமலேயே அவரை ஹிருதயர் பின்பற்றினார். எனினும் காட்டை நெருங்கப் பயந்து திரும்பி விடுவார். ஒரு நாள் முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு கடைசி வரையில் ‘சின்ன மாமா’வைத் தொடர்ந்தார்.

கதாதரர் புதர்களையும் குழிகளையும் குட்டைகளையும் நெருக்கமான மரங்களையும் கடந்து பஞ்சவடி சேர்ந்தார். மயான பூமியிலிருந்து அவரை மீட்க வேண்டும் என்று எண்ணி அவரை பயமுறுத்துவதற்காக ஹிருதயர் மறைவிடத்திலிருந்து கற்களை விட்டெறிந்தார். ஆனால் கதாதரரோ லட்சியமே செய்யவில்லை. மேரு பர்வதத்தைப் பருக்கைக் கற்களால் அசைக்க முடியுமா என்ன?

நெல்லி மரம் ஒன்றின் அடியை அடைந்தார் கதாதரர்.

இதென்ன கூத்து ? அவர் ஏன் தம் ஆடைகளைக் களைந்துக் கொள்கிறார்?

சின்ன மாமாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன ? ஏன் பூணூலையும்கூடக் கழற்றி விட்டார் !

ஏதோ பெரிய பாரம் நீங்கினாற்போல அமைதியுடன் நெல்லி மரத்தடியில் தியானம் புரிகிறாரே!

ஆகா, அண்ட சராசரங்கள் புரண்டு வந்து மோதினாலும் கவலையில்லை போல், எத்தகைய சாந்தத்துடன் அவர் தியானம் புரிகிறார்!

“மாமா, அதென்ன உங்கள் உடையையும் பூணூலையும்கூட எடுத்துவிட்டு தியானம் செய்தீர்களே! என்று மறுநாள்
தம்மை அடக்க மாட்டாமல் கதாதரரை கேட்டுவிட்டார் ஹிருதயர்.

‘கட்டுகளை எல்லாம் விலக்க வேண்டியதுதானே ! நிர்வாணம் என்று நீ கேலி செய்யலாம். அதுவே மகா நிர்வாணத்திற்கு உதவியாயிருக்கிறது’ என்றார் கதாதரர்.

கதாதரரின் இறைத் தாகத்தை கபீரின் வார்த்தைகளில் சொல்வதானால்,

अनराते सुख सोवना, राते नींद न आय़ ।
ज्यों जल छूटी माछरी, तलफत रैन बिहाय ॥


நித்தம் துயில்சுகம் கொள்வதோ, துயிலவும் இயலாது இரவிலே
மச்சம் நீர்விட்டு விழுந்ததுபோல், பதைப்பில் கழிவன இரவுகளே

[ மச்சம்= மீன் ]
பரமஹம்ஸரைப் போலவே நடுஇரவில் நம்மாழ்வார் திருமாலை நினைந்து கண்விழித்து அமர்ந்திருக்கிறார். அவர் கண்களுக்கு கரிய வானில் பறந்து செல்லும் நாரை தென்படுகின்றது. தன் ஏக்கத்தை ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார். ’பிரிவு நோயாலும் பசலை நோயாலும் அவதிப்படுகின்ற என்னைப் போல் நீயும் திருமாலை நினைந்து வருந்துவதால் உறங்கவில்லையோ’ என்கிற கருத்தை நாயகி பாவத்தை முன்னிறுத்தி பாடுகின்றார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்,
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்,
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே

(ஆயும்= தாயும்; அமருலகம் =தேவலோகம் ; பயலமை= பசலை நோய்)

இறைவன் அருள் கிடைக்கவில்லையே என்ற பதைப்பு தாயின் முகத்தைக் காணத் தவிக்கும் குழந்தையின் பதைப்பைப் போன்றது. நம் அன்பிற்குரியவர்கள் காலாகாலத்தில் வீடு திரும்பாமல் போனால் நம் மனதில் ஏற்படும் பதைபதைப்பை ஒத்தது. அப்போது உறக்கம் கொள்ள முயன்றாலும் உறக்கம் கொள்ள இயலாது. இந்த அனுபவத்தை எல்லா ஞானிகளின் ஆன்மீகத் தாகத்திலும் காண்கிறோம். தாயுமானசுவாமிகளும் பலவாறாய் இந்த பதைப்பைப் பாடுகிறார்.

சொல்லாலே வாய் துடிப்பது அல்லால், நெஞ்சம்
துடித்து இருகண் நீர் அருவி சொரியத் தேம்பிக்
கல்லாலே இருந்த நெஞ்சுங்கல்லால் முக்கட்
கனியே நெக்கு உருகிடவும் காண்பேன் கொல்லோ

தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே

உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான் ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே

நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
பாராதது என்னோ பகராய் பராபரமே


இப்படித்தான் கதாதரரும் அழுதார், அரற்றினார், பித்துப் பிடித்தவர் போல் செயலாற்றினார்.

இரவு கால பூஜை முடிந்த பின்னும் அவருக்கு அமைதி கிடையாது. சுடுகாட்டுக்கே ருத்ர பூமி என்று பெயரளித்த பசுபதியின் பத்தினியாகிய பரமேசுவரியை நினைந்து ,பசித்தக் குழந்தை தாயை எண்ணி எப்படி வறண்ட தொண்டையுடன் கதறுமோ, அப்படி பசித்த உள்ளம் வெடிப்பு வெடிப்பாகப் பிளந்துகொள்ள பவானிக்காக கூவுவார்.

அன்ன ஆகாரமின்றி இளைத்த உடலும் அழுதழுது சிவந்த கண்களுமாகத் தவிக்கும் பட்டாசாரியாரின் போக்கு யாருக்குமே புரியவில்லை.

அவருக்கும் புரியவில்லை.

’தேவி நான் இவ்வாறு மனம் வெந்து மடிந்தும் நீ தரிசனம் தராதது எதனால் என்று எனக்கு புரியவில்லை. இப்படி அவதிப்பட்டிக் கொண்டிருக்க என்னால் முடியாது’ என்று ஒருநாள் இரவு தேவியின் சன்னிதியில் மொழிந்த கதாதரரின் கண்கள் அருகிலிருந்த ஏதோ ஒன்றின் மீது பட்டதும் நிலைத்து நின்றன. உடனே அந்த சிவந்த கண்களில் ஒரு அமைதியும் திருப்தியும் நிறைந்தன.

வாள்! காளியின் சன்னிதியில் தொங்குகிற வாள்!

காளி என் துயரைத் தீர்க்கவில்லை என்றால் இந்த வாள் தீர்க்கட்டும் !

பவதாரிணி உன்னைக் காணாமல் என்னால் உயிர் வாழ முடியாது. இதோ என் உயிரை உன் காலடியிலேயே விடுகிறேன். உனக்கு நான் அளித்த மற்ற நிவேதனங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த ஆத்ம நிவேதனத்தையாவது நீ ஏற்றுக்கொள்’ என்று ஆன்மாவின் அந்தரங்கத்திலிருத்து குழைந்து பேசிய கதாதரர் வெறி பிடித்தார் போல வாளை உருவ ஓடினார்.

அதிசயம் நிகழ்ந்து விட்டது.

ஓடிய பாதம் ஸ்தம்பித்தது.

இத்துணைக் காலம் தத்தளித்த இதயமும் ஸ்தம்பித்தது.

இதென்ன ஆலயத்தில் மின்சார வெள்ளம் பாய்கிறதா ?

இல்லை இது உடலையும் உள்ளத்தையும் மரத்துப் போகச் செய்யும் மின்சாரம் இல்லை.

உடலையும் உள்ளத்தையும் மலர்த்தும் இன்சாரம் அது!

ஆம் ! அதிசயம் நிகழ்ந்தே விட்டது

இனிமையின் சாரமாகிய அம்பிகை அவர்முன் நின்றாள்.

(நன்றி :அறிவுக் கனலே அருட்புனலே : ரா.கணபதி, இராமகிருஷ்ணா மடம்,சென்னை , (2008) ; ISBN 81-7120-490-2 pages 134 - 139)

Picture courtesy : (http://www.rkmrajkot.org)