Sunday, July 25, 2010

மூப்பெனும் நாய், காலனாம் வேடன்

அரச போகத்தைத் துறந்து உண்மையைத் தேடி புறப்பட்டார் சித்தார்த்தர். பல கடுமையானத் தவமுறைகளை முயற்சி செய்து உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்த நிலையில் வழியில் பாடிக் கொண்டே சென்ற பெண்மணி ஒருவரின் பாடல்வரிகள் அவருக்கு முக்கியப் படிப்பினையை தந்ததாகக் கூறுவர்.

”இசை வேண்டின் யாழில் அதி இறுக்கமானக் கம்பிகளும் கூடாது, இறுக்கமில்லாக் கம்பிகளும் உதவாது. அளவோடு இறுக்கிய கம்பிகளே நயமான இசைத் தரும் கருவியாகும்”

அது மனித உடலுக்கும் பொருந்துவதாகக் கருதி தன் வழிமுறைகளை மாற்றி கொண்டாராம். அரச வாழ்க்கை அவருக்கு இறுக்கமில்லா கம்பியின் நிலை. அது ஞானத்திற்கு இசைவாகாது. பின்னர் உக்கிரமான உடலை வருத்திக் கொள்ளும் தவம். இதுவும் ஞானத் தேடலில் உதவாது. திருமூலர் சொல்வது போல் உபாயமாக உடலைப் பேண வேண்டும். உண்பது உறங்குவது பேசுவது போன்றவற்றில் மிதமானப் போக்கை கைகொண்டால் உடல் நல்ல வழியில் இருக்கும்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே
(திருமந்திரம்)


கபீர் இதே கருத்தை ஒரு இசை சாதனத்தை உவமையாக வைத்துச் சொல்கிறார். உடல் தான் கருவி. ஆன்மா அதை இசைப்பவன். கருவியின் நரம்புகள் சரியான முறையில் பராமரிக்கப் படாவிட்டால் கருவியின் பயன் என்ன ? அதை இசைப்பவனாகிய ஆன்மா அதை விட்டு போய்விட்டால் பாவம் அந்த உடலால் பிறருக்கு பயன் தான் என்ன ?

कबीर जंत्र न बाजई, टूट गये सब तार ।
जंत्र बिचारा क्या करै, चला बजावन हार ॥

கருவியும் இசைக்காது கபீரா, அறுந்துள நரம்புகள் யாவுமே
கருவியும் பாவம் என்செயும், இசைப்பவன் போன பின்னே

அருணகிரியாரும் அந்த பயனற்ற நிலைக்கானக் காரணத்தை விரிவாகவே விளக்குகிறார்.

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி


[ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய
குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு
அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன
வீடாகிய உடலில் நுழைவு பெற்று, ]


இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ... டிடமாயா


[அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும்
சூதான மொழிகள் அதிகமாகி கிளைத்து எழுகின்ற
பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச்
சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க]
,

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்

[உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின்
வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து,இருக்கின்ற
உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் ]


பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ....சடமாமோ

[கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல குரங்குக்
கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள்
அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பயப்படுவதான
இந்த உடலால்ஏதேனும் பயன் உண்டோ? ]

{விளக்கவுரை நன்றி kaumaram.org }

பிறந்த கணத்திலிருந்து நம்மை மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. காலன் என்னும் வேடனுக்கு நம்மை பலமிழக்கச் செய்யும் தந்திரம் மிக நன்றாகவேத் தெரியும். வேடனொருவன் தன்னுடைய நாயை ஏவிவிட்டு முயலை பலமிழக்க செய்வது போல் இரவு பகல் எனும் நாய்கள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வேடன் பிடியில் எப்போது வேண்டுமானாலும் சிக்கிக் கொள்ளலாம். அவன் நாய்கள் துரத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவும் நிற்கலாம். சோர்ந்து போய் கடைசியில் அவன் காலடியிலே தானே விழவேண்டும் !! அப்படி ஒரு உதாரணத்தை கபீர் நமக்கு சொல்லிக்காட்டுகிறார்.

முதுமை விரட்டுது நாயைப் போலே, இளமையாம் முயலோடுது நித்தமே
எமனெனும் வேடனும் எதிரே, இடையில் நீ நாடும் சுகமும் மித்தையே

அந்த வேடத்தினிடத்தில் ஒரு நல்ல குணம் உண்டு. இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கண்டேயர் காலத்தில் அவனுக்கு இடப்பட்டக் கட்டளை.

பதத்தெழு மந்திர(ம்) அஞ்செழுத்(து) ஓதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி(ர்) உண்ண, வெகுண்(டு)அடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே


பஞ்சாட்சர மந்திரத்தை மிகுந்த விருப்பத்தோடு செபிக்கின்ற பெருமையுடைய சிறுவனின் இன்னுயிரைக் காப்பதற்காக மிகுந்த சினத்தோடு எழுந்து, கண்களினின்று இரத்தம் சொரியும் வகையில் எமனை உதைத்துத் தள்ளியப் பெருமை உடையவன். திருக்கடவூரில் உறைபவன். அந்த உத்தமன் திருக்கழலை தொழுவோம் என நாவுக்கரசர் போற்றுகிறார்.

நிலையாமையை நினைவில் நிறுத்தி மரணபயம் வெல்வதற்கு மணிகண்டன் தாளே கதி.

Monday, July 12, 2010

உள்ளவர் சிவாலயம் செய்வர்

மந்திரி ஒருவர் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது. மதுவரசா என்னும் அந்தணரின் பெண்ணுக்கும், ஹரளய்யா என்னும் தாழ்குலத்தவர் மகனுக்கும் திருமணம். அவர்கள் இருவரும், மந்திரியார் நடத்தி வந்த “அனுபவ மண்டப”த்தின் உறுப்பினர்கள். அது சிவனடியார்களுக்கான அமைப்பு. அவர்கள் சிவசரணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அங்கே ஜாதி வேற்றுமைகள் இல்லை. யாவரும் தமக்கென ஒரு தொழில் செய்து பிழைக்கவேண்டும் ஜங்கமர்கள் எனப்படும் ஊரூராய் யாத்திரை செய்யும் சிவனடியார்கள் நலன் பேண வேண்டும். இறைவன் முன்பு யாவரும் ஒன்று என்னும் கொள்கையை ஏற்கும் எவரும் அதில் இணைந்து பணியாற்றலாம்.

இன்றைய நிலையாயிருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவமும் விளம்பரமும் வேறு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் மந்திரியோ அறிவிற் சிறந்தவர் மிக உயர்ந்த சிவனடியார். மன்னரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். போதாதற்கு அனுபவ மண்டபத்தின் செலவுகள் எதுவும் அரசாங்கத்தை எதிர்பார்த்தது அல்ல. அடியார்களின் உழைப்பில் வளர்ந்தது அது. ஆகையால் அது வரை எதிர்ப்புகளில் அதிக வலுவிருக்கவில்லை.

அந்த அமைப்பின் சட்டதிட்டங்கள்படி அந்தத் திருமணம் முழுவதுமாக ஏற்புடையதானது. ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு -முதன் முறையாக ஜாதிவிட்டு ஜாதி- திருமணம் நடந்த பொழுது அது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதில் மந்திரியாரின் எதிரிகளுக்கு பெரும்பங்கு இருந்தது. பலத்த வாத பிரதிவாதங்களுக்குப் பின் அரசன் மந்திரிக்கு அனுபவ மண்டபத்தைக் கலைத்துவிட்டு அரசாங்க அலுவல்களில் கவனம் செலுத்துமாறு ஆணயிட்டான். பதவிக்காக அலைபவரா மந்திரி? பதவியைத் துறந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து சிவசரணர்கள் துன்புறுத்தப்பட்டதும் கொல்லப்பட்டதும் பிஜாலா மன்னனின் ஆட்சிக்கு ஒரு பெரும் களங்கமாகும்.

மனம் உடைந்த மந்திரியார் 'கூடல சங்கம தேவா' நீயேத் துணை யென்று சிவனடியார்களோடு இணைந்து தன் கடைசி காலத்தை கழித்தார்.

கிருஷ்ணா நதியுடன் மலப்பிரபா நதி கூடுமிடம் கூடல சங்கமம்.

(படம் நன்றி : விக்கி பீடியா)

அந்த புரட்சிகரமான மந்திரியின் பெயர் கிராந்தி பஸவேசுவரா ! கி.பி.1132- 1196 (கிராந்தி என்றால் புரட்சி என்று பொருள்)

12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் சாளுக்கியர்கள் ஆட்சியில் பிஜாலா என்பது ஒரு குறுநில அரசு. அதன் தலைநகர் கல்யாண். அந்த சமஸ்தானத்தில் ஒரு மிகப்பெரும் ஆன்மீக ரீதியான சமூகப் புரட்சியை உண்டு பண்ணியவர் பஸவேசுவரர். மேற்குலத்தில் பிறந்திருப்பினும் தன் மனதுக்கு ஒவ்வாமல் போன வழி முறைகளைத் துறந்து பதினாறு வயதிலேயே சிவனடியார்கள் குழுமத்தில் சேர்ந்து குரு சங்கமேசுவரரின் உபதேசம் பெற்றவர். கூடல சங்கமத்தில் பலவருடங்கள் அவர்களுடனே இருந்து ஆன்மீக சாதனை செய்தவர். சிவனே எல்லாமுமாய்க் கண்டவர்.

அரச வாழ்வைத் துறந்து எவ்வகை நிதியமும் இல்லா சிவனடியாருடன் வாழ்வைக் கழித்த பஸவேசுவரர், கபீர்தாஸரின் ஒரு ஈரடியை நினைவூட்டுகிறார். 
 
राम जपत दरिद्रि भला, टूटी घर की छान । 
कंचन मन्दिर जारि दे, जहा न सतगुरु ज्ञान  

வறியவனின் இராமசெபம் நன்று, வசிப்பது(ம்) அவன் ஓட்டைக் குடிசையிலே எரித்தல் தகுமே பொன்மாளிகையும், தம்குரு மொழி செபிக்காது கழித்திடினே 

மாற்று 
இராமனை செபிக்கும் வறியவன் மேலாம், ஓட்டை குடிலேயவன்  வசிப்பிடமே 
எரித்தல் தகுமே  பொன்மாளிகை ஆயினும், குருவழி  நில்லார்தம் வசிப்பிடமே 

பொன்மாளிகை ஆயினும் எரித்து விடு என்று மிகவும் கடூரமாக சொல்லியிருக்கிறாரே என்று தோன்றலாம். ஒரு மாணவன் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளாது தப்பும் தவறுமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தால் அவன் ஆசிரியர் அவனை எப்படி கண்டிப்பார் ?.

“உன் ’நோட்’டை குப்பையில போட்டுக் கொளுத்து

சில ஆசிரியர்கள் வெளித்தோற்றத்திற்கு கண்டிப்பு மிக்கவர்களாகத் தோன்றினாலும் உள்ளே அன்பு தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

உண்மையை எவ்வளவு எடுத்துக் கூறினும் புரிந்து கொள்ளாத மனிதர் போக்கை கண்ட மன உளைச்சலில் கபீர்தாஸ் பொன் மாளிகையானாலும் எரித்து விடுஎன்று சொல்லியிருப்பதாக கொள்ளலாம். அன்புக்குக் குறைவில்லை, உளைச்சலின் வெளிப்பாடு. குருவின் தொடர்பு அல்லது அருள் இல்லாத இடம் பொன்மாளிகையாக இருந்தாலென்ன கோவிலாக இருந்தாலென்ன, அது பயனற்றதே. இதே கருத்தை திருநாவுக்கரசரும் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு 
வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர் செல்வம்
 மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே 
காந்தர் அல்லா ராகில் அங்கமெலாம் குறைந்த அழுகு 
தொழு நோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும் 
கங்கை வார் சடைக்கரந்தார்க் அன்பராகில் 
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரனிடம் நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் உண்டு. அவற்றை வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.(http://sivanarul-sivamayam.blogspot.com/). அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை சங்கநிதி பதுமநிதி என்னும் என்னும் பெருநிதிகள். பல கோடிக்கணக்கான பொன் மதிப்புப்பெற்றவை. அவைகள் கிடைக்கப்பெற்றாலும் மகாதேவருக்கு அவர் அடியவர் இல்லையென்றால் எமக்கு அது தேவையில்லை. அதைவிட இறந்த பசுத்தோலை உரித்துத் தின்னும் புலையரோ அல்லது தொழுநோய் பீடித்தவரானாலும் அவர்களுக்கு சிவனிடத்தில் அன்பு இருந்தால் அவர்களே எமது கடவுள் என்று திருத்தமாகக் கூறுகிறார் அப்பர் பெருமான். 

(கபீருடைய ஈரடிக்கு பொருத்தமான தமிழ் அருளாளர் பாடல் ஒன்றை சிந்தித்துக் கொண்டிருந்தபோது மேற்கண்டப் பாடல் மின்னஞ்சலில் ரத்னமாலைக் குழுமக் கட்டுரை ஒன்றில் வந்த போ்து அவனருள் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்ற வியப்பு ஏற்படுகிறது ) 

 அப்பர் சுவாமிகள் மற்றும் கபீரின் வாக்கை வாழ்ந்து காட்டியவர் பஸவேசுவரர். அடியார்களின் மகிமையை வாழ்நாளெல்லாம் போற்றி வளர்த்தவர். அவருடைய மிகப்பிரபலமானப் பாடல் ஒன்று


  
"உள்ளவரு ஷிவாலயவ மாடுவரு" .

 உள்ளவர்கள் சிவாலயம் செய்வார்கள்
என்னால் செய்ய முடிவதும் என்னே- ஏழைநான் 

என்னுடைய கால்களே தூண்கள் 
தேகமே கருவறை
சிரமே பொற்கலசமாகும் (ஐயா) 
  கூடல சங்கம தேவா கேளய்யா 
ஸ்தாவரத்திற்கு அழிவுண்டு 
ஜங்கமத்திற்கு அழிவில்லை !

(ஜங்கமம் என்பது ஒரு இடத்தில் நில்லாது சிவக்ஷேத்திரம் செல்லும் அடியார்களை குறிப்பது ) 
 என்னுடைய உடலே உனக்கு ஆலயம் என்று சொல்லியிருப்பது உள்ளம் பெருங்கோவில் ஊனடம்பு ஆலயம் என்கிற திருமூலர் பாடலையும் நினைவூட்டுகிறது. 

இறைவனுக்கு மனிதர்களின் பகட்டுத் தேவையில்லை. வைரமுடியோ, பொன்னால் வேய்ந்த ஓடுடைய கூரையோ கேட்கவில்லை. அவன் வேண்டுவதெல்லாம் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. அதனால் தானே மனதால் மிகவும் உழைத்து நீண்ட நாட்கள் கட்டிய பூசலாரின் திருக்கோவிலுக்கு முதலிடம் கொடுத்து தொண்டை மன்னன் கட்டிய கோவில் குடமுழுக்குக்கு வேறு ஒரு நாள் குறிக்குமாறு சொன்னான்.

நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த  

நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் ;நீயிங்கு 

ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் 

என்று கொன்றைவார் சடையார் 

 தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்

ஆம் பூசாலார் தம் உள்ளுக்குள்ளே சிவாலயம் செய்தார். உள்-அவரு சிவாலயவ மாடிதரு.(செய்தார்)என்று பசவேசுவரர் பாடலை சற்று மாற்றிப்பாடினாலும் வெகு பொருத்தமே.

கடவுளின் பக்தியில் தோய்ந்த மகான்கள் சொல்லும் யாவும் சத்தியமாய் நின்றுவிடுகின்றன.

பசவேசுவரைப் பற்றி மேலே தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.