Friday, September 24, 2010

நாட்டியமாடுது மண்ணின் பாவை

காசி மகாநகரத்தில் பெருங்கூட்டம். பெரிய பண்டிதர்கள் குழுமியிருக்கும் அந்த கூட்டத்தில் ரவிதாஸை வாதத்திற்கு அழைத்திருந்தனர். அவன் எவ்வளவோ மறுத்த போதிலும் அவனை அவர்கள் விடுவதாயில்லை. மக்களுக்கு ஆன்மீக உபதேசம் செய்ய அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை நிரூபித்து மக்கள் நடுவே அவன் போலித்தனத்தை வெளிப்படுத்தவே அங்கே கூட்டம்.

”உனக்கு சாளக்கிராம பூஜையின் அருமை தெரியுமா ?”

“தெரியாது. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்த தெய்வம் என் தொழிலை நடத்த உதவும் இந்த கல் ஒன்றுதான்” என்று சொல்லி செருப்புகளைத் தைப்பதற்காக முட்டுக்கு வைத்துக் கொள்ளும் கல்லை காட்டினான்.

”முறையான பூஜை செய்து பக்தியுடன் நீரில் விட்டால் சாளக்கிராமக் கல் மிதக்க வேண்டும்”

“ஆகா! அந்த அற்புதத்தைக் காணச் செய்யுங்கள். இறைவனின் பெருமையை என்னவென்று சொல்வது. அவன் மனம் வைத்தால் எது தான் நடக்காது !” என்று பணிவுடன் பதிலளித்தான் ரவிதாஸ்.

ஆனால் எந்த பண்டிதருடைய சாளக்கிராமக் கல்லும் மிதக்கவில்லை. எல்லாம் நீரில் மூழ்கின. மிதக்காமல் போனதற்கு பலவித சாஸ்திர பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. கடைசியாக ரவிதாஸ் தன்னிடமிருந்த செருப்பு தைக்க உதவும் முட்டுக் கல்லை நீரினுள் இட்டான். எல்லோரது கண்முன்னும் அது மிதந்து நின்றது.

பண்டிதர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.

இப்படிப்பட்ட பண்டிதர்களைக் கண்டு மகான்களுக்கு சிரிப்பு ஒருபுறமும் வருத்தம் ஒரு புறமும் ஏற்படுகிறது. பக்தியும் முக்தியும் அவ்வளவு லேசான விஷயமா? பறவைகள் எல்லாமே அன்னப் பறவையாகிவிடுமா ? மனித உருவில் உள்ளவர்கள் யாவரும் பரஹம்ஸர்களாகி விட முடியுமா?

”கான மயிலாட கண்டிருந்த வான் கோழி ” கதைதான் அந்தப் பண்டிதர்களுடைய கதையும். வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்.

இதை கபீர் நாரைக்கும் அன்னத்திற்குமான உதாரணத்தால் விளக்குகிறார்.

चाल बकुल की चलत है , बहुरि कहावै हंस ।
ते मुक्ता कैसे चुंगे, पडे काल के फंस ॥


நடையிலே நாரை போலே, கருதுவர் தம்மை அன்னமென்றே
கிடைக்குமோ இவருக்கும் முத்தியே, கிடப்பரே காலன் பிடியிலே


காசியிலிருந்து ஹரித்துவாரத்திற்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அந்தணனின் அனுபவம் வித்தியாசமானது. அவனிடம் கங்கா-மாயிக்கு காணிக்கையாக தன் சேமிப்பிலிருந்த சில காசுகளைக் கொடுத்து அவனிடம் ஒரு விண்ணப்பமும் வைத்தார் ரவிதாஸ். “ஐயா கங்கா மாயி கைநீட்டிப் பெற்றுக் கொண்டாலன்றி வேறெவரிடமும் இதை சேர்ப்பிக்க வேண்டாம்”. கால்நடையாய் பலநாட்கள் பயணம் மேற்கொண்ட அந்நாட்களில் அந்தணனுக்கு வேடிக்கையான ரவிதாஸின் வேண்டுகோள் மறந்தே போயிருந்தது.

ஹரித்வாரத்தில் ஹர்-கி-பாடியில் கங்கையினுள் கால் வைத்ததுமே கங்காதேவி ரவிதாஸின் காணிக்கையை பெற்றுக் கொள்ள இரண்டு கைகளையும் வெளியே நீட்டினாள். அது மட்டுமல்லாது கங்கை அன்னை இரண்டு தங்க வளையல்களைக் கொடுத்து ரவிதாஸிடம் சேர்க்கும்படி கூறினாள். ஆனால் பேராசை பிடித்த அந்தணனோ ஊர் திரும்பியதும் அதை ஹரித்வாரத்து விசேஷ நகையாக அரசனிடம் கொடுத்து பரிசுகளை பெற்றுச் சென்றான். ரவிதாஸிடம் விஷயத்தை சொல்லவே இல்லை.

அந்த அந்தணன் விரைவிலேயே மீண்டும் தாழ்குலத்தவனாகிய ரவிதாஸரின் வாசலை அடையும் நிலை ஏற்பட்டது. வளையல்களைக் கண்டு மெச்சிய ராணி மேலும் சிலவற்றை அது போலவே தந்து கொடுக்கும்படி ஆணையிட்டாள். கங்கா மாயியை இப்போது வரச் செய்வது எப்படி? கலங்கிப் போனான் அந்தணன்.

ரவிதாஸரை அடைந்து நடந்தவற்றையெல்லாம் கூறி தன்னை மன்னிக்கக் கோரினான். தன்னை எப்படியாவது அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற பலவிதமாக வேண்டிக் கொண்டான். அவன் நிலை கண்டு ரவிதாஸருக்கு இரக்கம் உண்டாயிற்று.

“ இதோ இந்த தொட்டியினுள் உள்ள நீரை உற்றுப் பார்த்துக் கொண்டு இரும்” என்று சொல்லினார். அந்த தொட்டி, செருப்பு தைப்பதற்கு முன் சருமத்தை ஊற வைக்கப் பயன்படும் தொட்டி. அதனுள்ளே கலங்கிய தோல் வர்ணம் கொண்ட அழுக்கு நீர் காணப்பட்டது. நம்பிக்கையோடு அதை உற்றுப்பார்க்க ஆரம்பித்தான் அந்தணன். ரவிதாஸ் தன் வேலையில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே நீரின் அடியில் இரண்டு வளையல்கள் மினுக்க ஆரம்பித்தன. அதையெடுத்துக் கொடுத்து அந்தணனை வழி அனுப்பிவைத்தார் ரவிதாஸ். உண்மை பக்தனுக்காக கங்கை அவனுடைய தொழில் செய்யும் தொட்டியிலேயே எழுந்தருளினாள்.

ரவிதாஸின் பக்தர்கள் அனேகர். ஆனாலும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. மேவார் ராணி ரவிதாஸின் சேவகி. அவருடைய வறுமையை நீக்க ஏதேதோ பரிசுகளை அனுப்பியது உண்டு. அவற்றை மனதாலும் தீண்டவில்லை ரவிதாஸ்.

தன் வறுமையை வறுமையாக நினைக்கவில்லை. உலகத்திலே மிக சிறந்த பொக்கிஷமாக காமதேனுவாக இராம நாமம் இருக்கையில் வேறென்ன வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது.

கல்லை மிதக்கச் செய்தது இலகிமா சித்தி எனப்படும் இது சித்தபுருஷர் தம் இச்சைபடி லேசாக்கி விடுவது. கங்கையின் அருளை தன் தொட்டியில் காட்டிய சித்திக்கு பிராப்தி என்று பெயர். விரும்பியதை விரும்பிய இடத்தில் அடைவது.

இவ்வகையில் சகல சித்திகள் பெற்றிருக்கும் தன்னலமற்ற பக்தனின் நிலையை கபீர்தாஸ் படம் பிடிக்கிறார்.

जाकी गांठी राम है, ताके है सब सिद्धि ।
कर जोडी ठाढी सबै, अष्ट सिद्धि नव निद्धि ॥


செல்வம் எல்லாம் இராமனே, சித்தி யெல்லாம் அவனதே
சேவிக்கும் குவிகரத் துடனே, அட்ட சித்தியும் நவநிதியுமே


[அஷ்ட சித்திகள் =அனிமா, கரிமா,மஹிமா,லகிமா,பிராப்தி,பிரகாம்யா,ஈசத்வம், வசித்வம்]

இறைவன் அடியவர்களின் வாசலில் அஷ்ட சித்தியும் நவ நிதியும் கைகட்டி ஏவல் புரியக் காத்திருக்கும் என்று கபீர் சொன்னதை ரவிதாஸரின் வாழ்க்கையில் உண்மையெனக் காண்கிறோம் . இதையொட்டி இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுவதுண்டு.

அவருடைய பக்தர் ஒருவர், ரவிதாஸுக்கு ரசவாதக்கல் ஒன்றைக் கொடுத்து அவர்தம் வறுமையை போக்கிக் கொள்ளுமாறு வேண்டினாராம். ரசவாதக்கல் செப்பை தங்கமாக மாற்ற வல்லது. “அதை அந்த ஓலைக்கு அடியில் சொருகி வை” என்று பதிலளித்தாராம். சில மாதங்கள் கழித்து அந்த பக்தர் வந்த போது அந்தக் கல் அதே இடத்தில் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனாராம். நவநிதியும் அவர் காலடியிலேயே கிடந்தாலும் மனம் சலனம் அடையாத பக்தர் அவர்.

சீக்கியரின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் ரவிதாஸின் நாற்பத்தியொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இங்கே காண்போம்


[picture courtesy : www.indiapicks.com ]

चमरटा गांठी न जनई |
लोगु गठावै पनही ||

குரடன் அறியான் செய்முறை
குவலையர் வேண்டுவர் மிதியடி

आर नही जिह तोपउ |
नही रांबी ठाउ रोपउ ||

தைத்திட இல்லை துன்னூசி
பொத்திட இல்லை கைக்கத்தி

लोगु गंठी गंठी खरा बिगूचा |
हउ बिनु गंठी जाइ पहूचा ||

பொத்திப் பொத்திப் போவார் வீணாய்
பொத்தாமலே அறிவேன் அவனை

रविदासु जपै राम नामा |
मोहि जम सिउ नाही कामा ||

ரவிதாஸன் செபிப்பான் ராம நாமமே
காலன் கவலையும் அவனுக்கிலையே

குரடன்= சக்கிலியன் :
துன்னூசி = செருப்பு தைக்கப் பயன்படும் பெரிய ஊசி
பொத்து -தல் : 4.To
mend, patch, botch, as baskets or bags; தைத்து மூட்டுதல். 5.
To stitch; தைத்தல். இலையைப் பொத்திப் போடு. 6. To hide, conceal; மறைத்தல்.


உலகில் மக்களின் மனதில் பலப்பல விசித்திரமான ஆசைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் யாராலும் நிறைவேற்ற முடியாது. அதை உட்பொருளாக வைத்து தன் தொழிலை முன்னிலைப்படுத்தி ”செய்முறை அறியேன், தேவைப்படும் உபகரணங்களான துன்னூசியோ கத்தியோ இல்லை; ஆயினும் இவர்கள் வேட்கை அடங்காது மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறார்களே” என்று குறிப்பிடுகிறார்.

गांठी என்பதற்கு தைப்பது, சரிபார்த்தல்- mend- என்று பொருளாம். பொத்துதல் என்பதற்கும் அந்த இரண்டு அர்த்தங்களும் பொருந்தி வருகிறது. செருப்பை மீண்டும் மீண்டும் சரி பார்த்து அணிந்தாலும் அது தேயத்தானே போகிறது. நாட்கள் தேய்வது போல் செருப்பும் தேய்கிறது. இறைவனை அறிய முயலாமல் செல்லும் நாட்களெல்லாம் வீணான நாட்கள். அவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. இறைசெபத்தால் தான் அந்த நிலையை அடைந்து விட்டபடியால் தனக்கு மரணம் இல்லை என்று சொல்கிறார் ரவிதாஸர்.

உலகில் நாம் காண்பதெல்லாம் வெறும் பொம்மலாட்டம் என்ற பொருளில் அவர் சொல்லியிருக்கும் இந்தப் பாடலும் பிரபலமானது.

माटि के पुतरा कैसे नचतु है
देखे देखे सुनै बोलै दउरिओ फिरतु है
जब कुछु पावै तब गरबु करतु है
माइआ गई तब रोवनु लगतु है
कहि रविदास बाजी जगु भाई

நாட்டியம் ஆடுது மண்ணின் பாவை;
பார்க்குது கேட்குது பேசுது
இப்படி அப்படி ஓடவும் செய்யுது
நெனச்சது கெடச்சா உடனே துள்ளுது
கெடச்சது போனா அம்மா! அழுவுது
ஐயோ பாவம்;
சொல்லுறேன் கேளு
எல்லாமே வெறும் நாடக மாச்சு
ரவிதாசு எனக்கு புரிஞ்சு போச்சு


[இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் முழுக்கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. சாமானியர்களோடு பழகி சாமானியராய் அவர் வாழ்ந்ததால் சாமானியன் மொழியில் மொழியாக்க முயற்சி.]

இந்த காயம் மண்ணால் ஆனது தானே அதனால்தான் மண்ணில் முடிகிறது. நாமெல்லோரும் இறைவனின் கையில் பொம்மைகள். அவன் சூத்திரதாரி. அறியாமை நம்மில் இருக்கும்வரை நமக்கு ஆட்டம் ருசிக்கிறது. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.

ரவிதாஸை, மாபெரும் கிருஷ்ண பக்தையான மீராவின் குரு என்றும் சொல்வர். ராஜா பீபா வும் இவரிடம் ஞானோபதேசம் வேண்டி நின்றார். பீபாவும் ஒரு தலைசிறந்த பக்தர்.

மகான்களின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாலே சத்சங்க பலன் உண்டு. வரும் பதிவுகளில் இவர்களைப் பற்றி மேலும் காண்போம்.

Saturday, September 11, 2010

சேற்றைக் கழுவும் பிரவாகம்

சிறியவனுக்கு குளியலறையில் 'அர்ச்சனை' நடக்கிறது. "எவ்வளவுதான் சோப்பும் ஷாம்பூவும் தேய்க்கிறது? அந்த ' பன்டி' யோட விளையாடப் போகாதேன்னு சொன்னா கேட்டாதானே ! ஊர்ல இருக்கிற சேத்தெயெல்லாம் பூசி அனுப்பியிருக்காளே". [Bunty அவனுடைய,ஏழு வயது நண்பியின் செல்லப் பெயர்.] சின்னவனோ அழுகையும் கோபமுமாக ஏதேதோ காரணங்களைக் கூறிக் கொண்டே இருப்பான். வீடெல்லாம் வர்ண அலங்கோலம்.


வட நாட்டில் வசிக்கும் பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வந்தாலே பயம். அவர்கள் பயன்படுத்தும் வர்ணங்கள் யாவும் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்ற கவலை வேறு. அலுவலகத்தில் உலர் பொடி வர்ணங்கள் மட்டுமே பயன்படுத்த வேன்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதை சுத்தம் செய்து கொள்வதில் சிரமம் அதிகம் இல்லை. 

    ஆனால் தண்ணீரில் கலந்து ஒருவர் மீது ஒருவர் இறைத்துக் கொள்ளும் வர்ணங்களுண்டே அது அழியாத கோலங்களே ! உச்சக்கட்டத்தில் வர்ணங்களும் நீரும் தீர்ந்து விட்டாலும் கீழே உள்ள சேற்றை அள்ளிப் பூசி விளையாட்டுத் தொடரும். அன்றணிந்திருந்த உடுப்புகளை அத்தோடு மறக்க வேண்டியது தான். போறாத குறைக்கு நம் தோலின் மீதுள்ள வர்ணங்கள் மறைய இரண்டு மூன்று நாட்களாவது ஆகும்.

 ஒரு வகையில் நம்முடைய உலக வாழ்க்கையும் சேறு பூசிக்கொள்ளும் விளையாட்டுதான். அதனால்தானோ என்னவோ, மனம் பக்குவப்பட்ட சான்றோர்களுக்கும் ஞானிகளுக்கும் இந்த சேற்றைப் பூசிக் கொள்ளும் விளையாட்டு போதுமென்ற எண்ணம் வந்து ஒதுங்குகிறார்கள். பெரும்பாலோர் இதுவே மகிழ்ச்சிக்குரிய ஆட்டம் என்று மேன்மேலும் அதில் ஈடுபாடு கொள்கிறார்கள். 

       விவிலியத்தில் கடைசி கட்டம். Last supper எனப்படும் அந்த இறுதி விருந்தின் நடுவே ஏசு எழுந்தார். தன் மேலங்கியைக் கழற்றி இடுப்பிலே ஒரு துண்டை சுற்றிக் கொண்டார். ஏனமொன்றில் நீர் ஏந்தி ஒவ்வொரு சீடரின் கால்களை கழுவி துண்டினால் துடைத்து விட்டார். பீட்டரின் அருகே கால்களைக் கழுவ வந்த பொழுது ”என்னுடைய கால்களை தாங்கள் கழுவுவது முறையன்று. நான் அதை ஏற்க முடியாது” என்று மறுத்தான். 
 “அப்படியானால் நீ என்னில் ஒருவன் அல்ல” என்று ஏசுபிரான் சொன்னதும் ”தேவரே!அப்படியானால், கால் மட்டுமல்ல என்னுடைய கைகள் தலை எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறேன்” என்று அவரை பணிந்து அவருடைய சேவையை பெற்றுக் கொள்ள முன்வந்தான். 

 ”குளித்திருக்கும் ஒருவனுக்கு கால்களை மட்டும் சுத்தம் செய்தால் போதும். நீ சுத்தமானவன். ஆனால் உங்களில் ஒவ்வொருவரும் (சுத்தமானவர்) அல்ல” என்று சொன்னார். அது தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகும் ஜூடாஸை பற்றி மறைமுகமான குறிப்பு. 

 ”உங்களுக்கு நான் செய்ததன் பொருள் புரிந்ததா? என்னை ஆசான் என்றும் தேவன் என்றும் அழைக்கிறீர்கள். அது சரியே. என்னை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்களும் ஒருவரின் கால்களை மற்றொருவர் கழுவி விட வேண்டும். உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன். எந்த ஊழியனும் அவன் தலைவனை விட பெரியவனாக முடியாது. அப்படியே இறைதூதனும் இறைவனைவிட பெரியவனாக முடியாது.” என்று சொல்லிக்கொண்டே தம் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். 

    இந்த நிகழ்ச்சிக்கு இருவிதமான விளக்கங்கள் உண்டு. முதலாவது சீடர்கள் ஒவ்வொருவரிலும் இறைவனையேக் காண வேண்டும். அடியவர்கள் கால்களை கழுவுதன் மூலம் கடவுளின் சேவை செய்வதாகவே பாவிக்க வேண்டும். இதனால் மனிதரை ஆட்டுவிக்கும் அகந்தை அழியும். அதையே ஏசு 'என்னை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிடுகிறார். 

     இன்னுமொரு விளக்கம்: மனிதர்கள் இறைவனின் கால்கள். எப்படி வீதியிலே திரியும் போது கால்களே அதிக அளவில் அசுத்தமடையுமோ அப்படி உலக விஷயங்களில் ஈடுபடுவதால் மனம் அசுத்தமடைகிறது. பிற எல்லா உறுப்புகள் சுத்தமாக இருப்பினும் கால்கள் சுத்தமில்லாவிட்டால் வீட்டிற்குள் நுழைய எப்படி அனுமதி இல்லையோ அப்படி மனம் சுத்த மில்லாதவனுக்கு இறைவனுடைய வீட்டிலும் அனுமதி கிடையாது. இறைவன் பெயரே அதை கழுவுகின்ற தண்ணீர். பிற சீடர்களின் கால்களை மற்றொருவர் கழுவுவதன் மூலம் இறைவன் பெயரால் சீடர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து மனம் சுத்தமடைந்து அவனைச் சேரவேண்டும் என்பதாக கூறப்படுகிறது. 

குற்றங் குறைய, குணம் மேலிட அருளை 
உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே    (தாயுமானவர்) 

 ’அருளை உற்றவர்’ குரு ஆவார். மனிதரை உய்விப்பதற்காக உலகில் மனித வடிவில் வலம் வரும் தேவ தூதர்கள். அவர்களின் அருள் நம்முடைய பாவங்களை நொடியில் கழுவி விடும். அதுவும் பல சென்மங்களாக சேர்ந்திருக்கும் வினை மலங்களையும் அடித்து செல்லும் பிரவாகமாக வரும்.

 இப்படி ஒரு கருத்தை தமது ஈரடியில் கபீர்தாஸர் வலியுறுத்துகிறார். 

कुमति कीच चेला भरा, गुरु ग्यान जल होय । 
जनम जनम का मोरचा, फल में डारे धोय ॥ 
அஞ்ஞான சகதியில் சீடன், ஞான மூர்த்தி குருவேநீர் | 
சென்ம சென்மாந்திர சேர்க்கை, கணத்தில் கழுவுது காணீர் || 

 மாற்று 
புரண்டு வந்தான் சீடன் சேற்றில், குருவின் ஞானம் ஆகுது நீர் | 
திரண்ட சென்மாந்திர அழுக்கு, கணத்தில் போகுது பாரீர் || 

  நமது தேசத்தில் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் "...விட்டுத் தலைமுழுகியாச்சு" என்ற சொல்லாடலைக் காண்கிறோம். இந்த தலை முழுகலைத் தான் கிருஸ்துவ மதமும் Babtize என்கிறது. 

 பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக்கோரி பழைய வாழ்க்கையைத் தலைமுழுகித் தொலைத்து இறைவன் மீது முழு நம்பிக்கையுள்ளவராக மாறுவதை குறிக்க வந்த சொல் அது. "BAPTIDZO" என்கிற கிரேக்க மொழி சொல்லுக்கு முழுகி எழுதல் என்ற பொருளாம். 

பிற்காலத்தில் 'முழுகும்' வழக்கம் மறைந்து புனித நீரை மேலே தெளித்துக் கொள்வது மூலமாக ,ஞானஸ்நானம் என்பதாக மாறி யிருக்கிறது. ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை ஏசு பிரானே நிகோடெமஸ் என்கிற பண்டிதனுக்கு உரைக்கிறார். "ஒரு உண்மையை சொல்வேன். மீண்டும் பிறக்காமல் இறைவன் சாம்ராஜ்ஜியத்தினுள் யாரும் பிரவேசிக்க முடியாது"

       "வயதான மனிதன் மீண்டும் எப்படிப் பிறக்க முடியும்? தாயின் கர்ப்பத்தில் புகுந்து வருவது கண்டிப்பாக இயலாத காரியம்" என்று பதிலளித்தான் நிகோடெமஸ். ”இது உண்மை. நீரினாலும் ஆவியினாலும் (spirit) பிறப்பிக்கப்படாத ஒருவன் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை சேர முடியாது. ஊன், ஊனுக்கு பிறப்பளிக்கிறது. ஆவி, ஆவிக்கு பிறப்பளிக்கிறது. ஆகையால் 'நீவிர் மீண்டும் பிறக்க வேண்டும்' என்று நான் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைய வேண்டாம். தன் போக்கில் காற்று வீசுகிறது. அதன் சத்தம் மட்டுமே கேட்கிறது. அது எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்பதை உம்மால் கூற இயலாது. அது போல (ஒவ்வொருவருள்ளும் உறையும்) ஆவியும் ஆவியிலிருந்து வருவதே (John 3:3) 
[புனித நீர் நிலைகளில் மூழ்கி எழும்போது பூமித்தாயின் வயிற்றிலிருந்து வெளி வருகின்ற பாவனையுடன் புதிய பிறப்பாகக் கருதப்படுகிறது. இது தேகத்தை ஒட்டிய பாவங்களைக் கழுவுதலாகும். அதன் பின்னர் குருவின் உபதேசம் ஆன்மா ஆன்மாவிற்கு அளிக்கின்ற புது பிறப்பாகும்.] 

    நம் தேசத்தில் குருகுலம் செல்லும் முன் மாணவன் இரண்டாவது பிறப்பாக கருதப்படும் உபநயன சம்ஸ்காரத்தால் ஆன்மீக நெறியில் பயணம் செய்ய தகுதியுடையவனாகப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறான். இருப்பினும் இல்லற தர்மத்தில் ஈடுபட்டு தம் கடமைகளை ஆற்றும் போது பலவிதமான மாசுகளால் மீண்டும் மீண்டும் அவன் மனம் பாதிக்கப்படுகிறது. இது வீதியில் திரியும் கால்கள் அசுத்தமடைவதைப் போன்றது. 

    அகங்காரம் என்னும் ஆணவ மலம் முக்கியமாக அழிய வேண்டும். அதைப் போக்கிக் கொள்ள சான்றோர்களின் உறவை நாடி இருக்க வேண்டும். அப்போது மனம் சுத்தம் அடைந்து- ஏசு குறிப்பிடுவது போல் கால்களை கழுவிக் கொண்டு- இறைவனை அணுகும் வாய்ப்பாகும். கிழக்கோ மேற்கோ அடிப்படை நெறி ஒன்றுதான் என்பது இதிலிருந்து புலனாகிறது. 

     உலகமெனும் சேற்றில் அமிழ்ந்து போகாமல் தன்னை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் அருணகிரியார் தன் குருவான முருகனைக் கொண்டாடுவதும் அதனால்தானே. 

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சம் என்னும் 
சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ்சடா (அ)டவிமேல் 
ஆற்றை, பணியை இதழியை அம்புலியின் 
கீற்றைப் புனைந்த பெருமான் குமரன் கிருபாகரனே (கந்தர் அலங்காரம்) (பணி= பாம்பு : இதழி= கொன்றை மலர்) 

 மனம் நொந்து பரம்பொருளின் கருணை வேண்டி நின்றால் நொடிப் பொழுதில் துயரைத் துடைக்க வல்லவன் அவன் என்பதற்கு அருணகிரியாரின் வாழ்க்கையே சான்று.

ஞானமுதல்வனாம் விநாயகனின் பெருமை பேசும் நாள் இன்று. அவனருள் யாவருக்கும் பொங்கி பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

  Let us draw near to God with a sincere heart in full assurance of faith, having our hearts sprinkled to cleanse us from a guilty conscience and having our bodies washed with pure water (Heb:16-22)