Friday, September 24, 2010

நாட்டியமாடுது மண்ணின் பாவை

காசி மகாநகரத்தில் பெருங்கூட்டம். பெரிய பண்டிதர்கள் குழுமியிருக்கும் அந்த கூட்டத்தில் ரவிதாஸை வாதத்திற்கு அழைத்திருந்தனர். அவன் எவ்வளவோ மறுத்த போதிலும் அவனை அவர்கள் விடுவதாயில்லை. மக்களுக்கு ஆன்மீக உபதேசம் செய்ய அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை நிரூபித்து மக்கள் நடுவே அவன் போலித்தனத்தை வெளிப்படுத்தவே அங்கே கூட்டம்.

”உனக்கு சாளக்கிராம பூஜையின் அருமை தெரியுமா ?”

“தெரியாது. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்த தெய்வம் என் தொழிலை நடத்த உதவும் இந்த கல் ஒன்றுதான்” என்று சொல்லி செருப்புகளைத் தைப்பதற்காக முட்டுக்கு வைத்துக் கொள்ளும் கல்லை காட்டினான்.

”முறையான பூஜை செய்து பக்தியுடன் நீரில் விட்டால் சாளக்கிராமக் கல் மிதக்க வேண்டும்”

“ஆகா! அந்த அற்புதத்தைக் காணச் செய்யுங்கள். இறைவனின் பெருமையை என்னவென்று சொல்வது. அவன் மனம் வைத்தால் எது தான் நடக்காது !” என்று பணிவுடன் பதிலளித்தான் ரவிதாஸ்.

ஆனால் எந்த பண்டிதருடைய சாளக்கிராமக் கல்லும் மிதக்கவில்லை. எல்லாம் நீரில் மூழ்கின. மிதக்காமல் போனதற்கு பலவித சாஸ்திர பூர்வமான விளக்கங்கள் தரப்பட்டன. கடைசியாக ரவிதாஸ் தன்னிடமிருந்த செருப்பு தைக்க உதவும் முட்டுக் கல்லை நீரினுள் இட்டான். எல்லோரது கண்முன்னும் அது மிதந்து நின்றது.

பண்டிதர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.

இப்படிப்பட்ட பண்டிதர்களைக் கண்டு மகான்களுக்கு சிரிப்பு ஒருபுறமும் வருத்தம் ஒரு புறமும் ஏற்படுகிறது. பக்தியும் முக்தியும் அவ்வளவு லேசான விஷயமா? பறவைகள் எல்லாமே அன்னப் பறவையாகிவிடுமா ? மனித உருவில் உள்ளவர்கள் யாவரும் பரஹம்ஸர்களாகி விட முடியுமா?

”கான மயிலாட கண்டிருந்த வான் கோழி ” கதைதான் அந்தப் பண்டிதர்களுடைய கதையும். வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்.

இதை கபீர் நாரைக்கும் அன்னத்திற்குமான உதாரணத்தால் விளக்குகிறார்.

चाल बकुल की चलत है , बहुरि कहावै हंस ।
ते मुक्ता कैसे चुंगे, पडे काल के फंस ॥


நடையிலே நாரை போலே, கருதுவர் தம்மை அன்னமென்றே
கிடைக்குமோ இவருக்கும் முத்தியே, கிடப்பரே காலன் பிடியிலே


காசியிலிருந்து ஹரித்துவாரத்திற்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அந்தணனின் அனுபவம் வித்தியாசமானது. அவனிடம் கங்கா-மாயிக்கு காணிக்கையாக தன் சேமிப்பிலிருந்த சில காசுகளைக் கொடுத்து அவனிடம் ஒரு விண்ணப்பமும் வைத்தார் ரவிதாஸ். “ஐயா கங்கா மாயி கைநீட்டிப் பெற்றுக் கொண்டாலன்றி வேறெவரிடமும் இதை சேர்ப்பிக்க வேண்டாம்”. கால்நடையாய் பலநாட்கள் பயணம் மேற்கொண்ட அந்நாட்களில் அந்தணனுக்கு வேடிக்கையான ரவிதாஸின் வேண்டுகோள் மறந்தே போயிருந்தது.

ஹரித்வாரத்தில் ஹர்-கி-பாடியில் கங்கையினுள் கால் வைத்ததுமே கங்காதேவி ரவிதாஸின் காணிக்கையை பெற்றுக் கொள்ள இரண்டு கைகளையும் வெளியே நீட்டினாள். அது மட்டுமல்லாது கங்கை அன்னை இரண்டு தங்க வளையல்களைக் கொடுத்து ரவிதாஸிடம் சேர்க்கும்படி கூறினாள். ஆனால் பேராசை பிடித்த அந்தணனோ ஊர் திரும்பியதும் அதை ஹரித்வாரத்து விசேஷ நகையாக அரசனிடம் கொடுத்து பரிசுகளை பெற்றுச் சென்றான். ரவிதாஸிடம் விஷயத்தை சொல்லவே இல்லை.

அந்த அந்தணன் விரைவிலேயே மீண்டும் தாழ்குலத்தவனாகிய ரவிதாஸரின் வாசலை அடையும் நிலை ஏற்பட்டது. வளையல்களைக் கண்டு மெச்சிய ராணி மேலும் சிலவற்றை அது போலவே தந்து கொடுக்கும்படி ஆணையிட்டாள். கங்கா மாயியை இப்போது வரச் செய்வது எப்படி? கலங்கிப் போனான் அந்தணன்.

ரவிதாஸரை அடைந்து நடந்தவற்றையெல்லாம் கூறி தன்னை மன்னிக்கக் கோரினான். தன்னை எப்படியாவது அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற பலவிதமாக வேண்டிக் கொண்டான். அவன் நிலை கண்டு ரவிதாஸருக்கு இரக்கம் உண்டாயிற்று.

“ இதோ இந்த தொட்டியினுள் உள்ள நீரை உற்றுப் பார்த்துக் கொண்டு இரும்” என்று சொல்லினார். அந்த தொட்டி, செருப்பு தைப்பதற்கு முன் சருமத்தை ஊற வைக்கப் பயன்படும் தொட்டி. அதனுள்ளே கலங்கிய தோல் வர்ணம் கொண்ட அழுக்கு நீர் காணப்பட்டது. நம்பிக்கையோடு அதை உற்றுப்பார்க்க ஆரம்பித்தான் அந்தணன். ரவிதாஸ் தன் வேலையில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே நீரின் அடியில் இரண்டு வளையல்கள் மினுக்க ஆரம்பித்தன. அதையெடுத்துக் கொடுத்து அந்தணனை வழி அனுப்பிவைத்தார் ரவிதாஸ். உண்மை பக்தனுக்காக கங்கை அவனுடைய தொழில் செய்யும் தொட்டியிலேயே எழுந்தருளினாள்.

ரவிதாஸின் பக்தர்கள் அனேகர். ஆனாலும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. மேவார் ராணி ரவிதாஸின் சேவகி. அவருடைய வறுமையை நீக்க ஏதேதோ பரிசுகளை அனுப்பியது உண்டு. அவற்றை மனதாலும் தீண்டவில்லை ரவிதாஸ்.

தன் வறுமையை வறுமையாக நினைக்கவில்லை. உலகத்திலே மிக சிறந்த பொக்கிஷமாக காமதேனுவாக இராம நாமம் இருக்கையில் வேறென்ன வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது.

கல்லை மிதக்கச் செய்தது இலகிமா சித்தி எனப்படும் இது சித்தபுருஷர் தம் இச்சைபடி லேசாக்கி விடுவது. கங்கையின் அருளை தன் தொட்டியில் காட்டிய சித்திக்கு பிராப்தி என்று பெயர். விரும்பியதை விரும்பிய இடத்தில் அடைவது.

இவ்வகையில் சகல சித்திகள் பெற்றிருக்கும் தன்னலமற்ற பக்தனின் நிலையை கபீர்தாஸ் படம் பிடிக்கிறார்.

जाकी गांठी राम है, ताके है सब सिद्धि ।
कर जोडी ठाढी सबै, अष्ट सिद्धि नव निद्धि ॥


செல்வம் எல்லாம் இராமனே, சித்தி யெல்லாம் அவனதே
சேவிக்கும் குவிகரத் துடனே, அட்ட சித்தியும் நவநிதியுமே


[அஷ்ட சித்திகள் =அனிமா, கரிமா,மஹிமா,லகிமா,பிராப்தி,பிரகாம்யா,ஈசத்வம், வசித்வம்]

இறைவன் அடியவர்களின் வாசலில் அஷ்ட சித்தியும் நவ நிதியும் கைகட்டி ஏவல் புரியக் காத்திருக்கும் என்று கபீர் சொன்னதை ரவிதாஸரின் வாழ்க்கையில் உண்மையெனக் காண்கிறோம் . இதையொட்டி இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுவதுண்டு.

அவருடைய பக்தர் ஒருவர், ரவிதாஸுக்கு ரசவாதக்கல் ஒன்றைக் கொடுத்து அவர்தம் வறுமையை போக்கிக் கொள்ளுமாறு வேண்டினாராம். ரசவாதக்கல் செப்பை தங்கமாக மாற்ற வல்லது. “அதை அந்த ஓலைக்கு அடியில் சொருகி வை” என்று பதிலளித்தாராம். சில மாதங்கள் கழித்து அந்த பக்தர் வந்த போது அந்தக் கல் அதே இடத்தில் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனாராம். நவநிதியும் அவர் காலடியிலேயே கிடந்தாலும் மனம் சலனம் அடையாத பக்தர் அவர்.

சீக்கியரின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் ரவிதாஸின் நாற்பத்தியொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இங்கே காண்போம்


[picture courtesy : www.indiapicks.com ]

चमरटा गांठी न जनई |
लोगु गठावै पनही ||

குரடன் அறியான் செய்முறை
குவலையர் வேண்டுவர் மிதியடி

आर नही जिह तोपउ |
नही रांबी ठाउ रोपउ ||

தைத்திட இல்லை துன்னூசி
பொத்திட இல்லை கைக்கத்தி

लोगु गंठी गंठी खरा बिगूचा |
हउ बिनु गंठी जाइ पहूचा ||

பொத்திப் பொத்திப் போவார் வீணாய்
பொத்தாமலே அறிவேன் அவனை

रविदासु जपै राम नामा |
मोहि जम सिउ नाही कामा ||

ரவிதாஸன் செபிப்பான் ராம நாமமே
காலன் கவலையும் அவனுக்கிலையே

குரடன்= சக்கிலியன் :
துன்னூசி = செருப்பு தைக்கப் பயன்படும் பெரிய ஊசி
பொத்து -தல் : 4.To
mend, patch, botch, as baskets or bags; தைத்து மூட்டுதல். 5.
To stitch; தைத்தல். இலையைப் பொத்திப் போடு. 6. To hide, conceal; மறைத்தல்.


உலகில் மக்களின் மனதில் பலப்பல விசித்திரமான ஆசைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் யாராலும் நிறைவேற்ற முடியாது. அதை உட்பொருளாக வைத்து தன் தொழிலை முன்னிலைப்படுத்தி ”செய்முறை அறியேன், தேவைப்படும் உபகரணங்களான துன்னூசியோ கத்தியோ இல்லை; ஆயினும் இவர்கள் வேட்கை அடங்காது மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறார்களே” என்று குறிப்பிடுகிறார்.

गांठी என்பதற்கு தைப்பது, சரிபார்த்தல்- mend- என்று பொருளாம். பொத்துதல் என்பதற்கும் அந்த இரண்டு அர்த்தங்களும் பொருந்தி வருகிறது. செருப்பை மீண்டும் மீண்டும் சரி பார்த்து அணிந்தாலும் அது தேயத்தானே போகிறது. நாட்கள் தேய்வது போல் செருப்பும் தேய்கிறது. இறைவனை அறிய முயலாமல் செல்லும் நாட்களெல்லாம் வீணான நாட்கள். அவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. இறைசெபத்தால் தான் அந்த நிலையை அடைந்து விட்டபடியால் தனக்கு மரணம் இல்லை என்று சொல்கிறார் ரவிதாஸர்.

உலகில் நாம் காண்பதெல்லாம் வெறும் பொம்மலாட்டம் என்ற பொருளில் அவர் சொல்லியிருக்கும் இந்தப் பாடலும் பிரபலமானது.

माटि के पुतरा कैसे नचतु है
देखे देखे सुनै बोलै दउरिओ फिरतु है
जब कुछु पावै तब गरबु करतु है
माइआ गई तब रोवनु लगतु है
कहि रविदास बाजी जगु भाई

நாட்டியம் ஆடுது மண்ணின் பாவை;
பார்க்குது கேட்குது பேசுது
இப்படி அப்படி ஓடவும் செய்யுது
நெனச்சது கெடச்சா உடனே துள்ளுது
கெடச்சது போனா அம்மா! அழுவுது
ஐயோ பாவம்;
சொல்லுறேன் கேளு
எல்லாமே வெறும் நாடக மாச்சு
ரவிதாசு எனக்கு புரிஞ்சு போச்சு


[இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் முழுக்கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. சாமானியர்களோடு பழகி சாமானியராய் அவர் வாழ்ந்ததால் சாமானியன் மொழியில் மொழியாக்க முயற்சி.]

இந்த காயம் மண்ணால் ஆனது தானே அதனால்தான் மண்ணில் முடிகிறது. நாமெல்லோரும் இறைவனின் கையில் பொம்மைகள். அவன் சூத்திரதாரி. அறியாமை நம்மில் இருக்கும்வரை நமக்கு ஆட்டம் ருசிக்கிறது. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.

ரவிதாஸை, மாபெரும் கிருஷ்ண பக்தையான மீராவின் குரு என்றும் சொல்வர். ராஜா பீபா வும் இவரிடம் ஞானோபதேசம் வேண்டி நின்றார். பீபாவும் ஒரு தலைசிறந்த பக்தர்.

மகான்களின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாலே சத்சங்க பலன் உண்டு. வரும் பதிவுகளில் இவர்களைப் பற்றி மேலும் காண்போம்.

17 comments:

  1. வாங்க முத்துலெட்சுமி மேடம்,

    நன்றிக்கு நன்றி :))

    ReplyDelete
  2. நல்வரவு மங்கை,

    பாராட்டுகளுக்கு {ரெண்டு தடவை அருமை போட்டா பன்மைதானே :)))}

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. நான்கு வருடம் பூர்த்தி ஆனதுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் கபீரின் சிறப்பை எடுத்துச் சொல்ல இறை அருளை வேண்டுகிறோம், அதை நாங்கள் படிக்கவும் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. வருக கீதா மேடம்,

    //மேன்மேலும் கபீரின் சிறப்பை எடுத்துச் சொல்ல இறை அருளை வேண்டுகிறோம் //

    ரொம்ப சரி. 'அருள்'(பாட்டரி) சார்ஜர் அவன்தான். அவன் சார்ஜ் செய்யிற வரைக்கும் தான் இந்த பொம்மையும் ஆடும் பாடும் :))

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. உங்கள் பதிவும் நாட்டியம் தான் ஆடுது!...
    ஆனால் மனதில்! :)
    ரவிதாசன் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  6. //வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்//

    மிகவும் உண்மை!
    நஹி நஹி ரக்ஷதி "டுக்ருஞ் கரணே"!

    ஞானத் தேடல் = ஞானம் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான்!
    கர்மத் தேடல் = கர்மம் செய்யும் சக்தி இருக்கும் வரை தான்!

    அவன் தேடல் = அவன் இருக்கும் வரை-ன்னு சொல்லீற முடியுமா? :)

    அதான்
    * சாதனங்களைப் பற்றிக் கொள்ளாது
    * அவனையே பற்றிக் கொண்டனர்
    * சாதனத்தைப் பின்னிருத்தி, அவனை முன்னிருத்திக் கொண்டனர்!

    கபீர்தாசர், துளசிதாசர், ரவிதாசர் என்று தாச நாமாக்கள் தொடரட்டும்! வாழ்த்துக்கள் கபீரன்பன் ஐயா!
    (சின்னப் பையன் தான்!இருந்தாலும், பதிவைப் படிச்சிட்டு வாழ்த்தணும் போல இருந்துச்சி! வாழ்த்திட்டேன்! :)

    ReplyDelete
  7. வாங்க கே.ஆர்.எஸ்,

    //சின்னப் பையன் தான்!இருந்தாலும், பதிவைப் படிச்சிட்டு வாழ்த்தணும் போல இருந்துச்சி! வாழ்த்திட்டேன்! :)//

    ரவி(ஷங்கர்)தாஸர் குழாம் ரொம்ப பெரிசு. அதனாலே கண்டிப்பா வாழ்த்தலாம். தப்பே இல்லை.:))))

    பெரியவங்க சின்னவங்க எல்லாம் எண்ணத்தால அமையறதுதானே.

    பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  8. கண்ணீர் பெருகியது

    ReplyDelete
  9. அருமையாக கதை சொல்கிறீர்கள்.படிக்க ஜாலியா இருக்கு. :-)

    ReplyDelete
  10. நல்வரவு மீனா மேடம்,

    மிகவும் மனம் ஒன்றி படித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க ராதா,

    //படிக்க ஜாலியா இருக்கு. :-)//

    சுவாரசியமாக இருக்கும் எதுவும் ஜாலியாகத்தானே இருக்கும். மகான்களின் வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது.

    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

    ReplyDelete
  12. பொம்மலாட்டம் நடக்கது நூல் அவன் கையில் என்பார்கள்.

    நாட்டியமாடுது மண்ணின் பாவை”

    பாடல் நல்லா இருக்கு.

    ஆட்டிவைத்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா!

    அருமையான பதிவு,தொடர்ந்து எழுதுங்கள்.

    கபீரின் கனி மொழிகள் படிக்க ஆவலாய் உள்ளது.

    உங்கள் பதிவை படிக்க வைத்த முத்துலெட்சுமிக்கு நன்றி.

    ReplyDelete
  13. நல்வரவு கோமதி மேடம்,

    முத்துலெட்சுமி மேடத்தின் நம்பிக்கை பொய்யாகாமல் பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி :)

    //கபீரின் கனி மொழிகள் படிக்க ஆவலாய் உள்ளது.//

    இடுகைகளை அஞ்சலிலும் பெறலாம். ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதும். தானே தேடி வரும்.

    இருவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.

    மனதில் நிறைந்த பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. நல்வரவு இராஜராஜேஸ்வரி,

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி