Thursday, October 07, 2010

அழலை நாடும் விட்டில் பூச்சி

அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே சிறிது நேரம் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக எதையும் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. வழக்கம்போல் மனம் ஒன்று விட்டு ஒன்று பற்றித் திரிந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் மூன்று சிறுமிகள் ஏதோ பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்ட பின் முதல் எண்ணம் என் குழந்தைகளின் குழந்தைப் பருவம்- அவர்கள் விளையாட்டு, எவ்வளவு வேகமாக வருடங்கள் உருண்டு போய்விட்டன என்பன போன்றன. அடுத்து, எங்களுக்கு நினவில் அழியாமல் இருக்கும் அவர்களின் பல விளையாட்டுகள், கேள்விகள்.

அவை எதுவும் அவர்களுக்கு சற்றும் நினைவில் இல்லை.

வயது ஏற ஏற நோக்கமும் விருப்புகளும் மாறிக் கொண்டே போய்விட்டன. நாம் கடந்து வந்த பாதையும் அது தானே என்பதும் கூடவே நினைவுக்கு வந்தது. நம்முடைய குறும்புகள் வால்தனம், பொய் சொல்லி சிக்கிக் கொண்டது எல்லாம் நம் பெற்றோர்கள் சொல்லித்தானே நாம் அறிகிறோம் என்பதை நினைக்கும் போது இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்ற கேள்வி கூடவே எழுந்தது.

அடுத்து, மனம் மீராவின் வாழ்க்கை வரலாறுக்கு தாவியது.

சாமானியர்களுக்கான இந்த விதி ஏன் ஆண்டாள் மீரா போன்ற பக்தைகளின் வாழ்வில் செயல்படுவதில்லை என்ற எண்ணமும் எழுந்தது. கிருஷ்ணனே உன் கணவன் என்று விளையாட்டாக தன் தாய் கூறியதை நம்பிய அந்த சிறுமி மீராவின் மனம், காலப்போக்கில் ஏன் அதை மறக்கவில்லை ? அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது கூட அவளுடைய தாத்தா சாமர்த்தியமாக செய்ய வேண்டியிருந்தது. “நீ உன் கணவனுக்கு நல்ல முறையில் சேவை செய்தால் அவன் மூலமாகவே கிருஷ்ணன் காட்சியளிப்பான்” என்று நம்பிக்கை ஊட்டினார்.

அதை முழுவதுமாக நம்பி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள். போஜராஜன் அவளுடைய கிருஷ்ண பக்திக்கு எந்த தடையும் விதிக்கவில்லை மிகப் பெரிய மனதுடைய கணவனின் அன்பும் ஆதரவும் இருந்ததால் அரண்மனை சாதுக்களும் சன்னியாசிகளும் சர்வ சுதந்திரமாக வந்து போகும் இடமாகிவிட்டது.

கணவனின் பாட்டி, பக்த ரவிதாஸின் சேவகி. அதனால் சிறு பெண்ணான மீராவிற்கு ரவிதாஸின் தரிசனமும் மந்திர உபதேசமும் கிட்டியது என்றும் சொல்லப்படுகிறது. பல பாடல்களில் அவள் தன் குரு ரவிதாஸ் என்பதை வெளிப்படுத்தியிருப்பதும் தெரிகிறது.

गुरु मिलिया रैदासजी , दीनी ज्ञान की गुटकी || என்றும் मीरा ने गोविन्द मिलिया जी , गुरु मिलिया रैदास என்றும் रैदास संत मिले मोहि सतगुरु , दीन्ही सुरत सहदानी என்பதாகவும் ரைதாஸ், ரவிதாஸ் என்று தன் குருவிற்கு நன்றியை பாடல்களில் தெரிவிக்கிறார்.


(picture courtesy: Divya 's blog : My Musings)

அரண்மனை தர்ம சத்திரம் போல் மாறி விட்டதால் கணவன் வீட்டாரின் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதை தவிர்க்க அன்பான கணவன் அவளுக்காக தனியாக ஒரு கோவிலே கட்டி கொடுத்தான். மீராவின் சாதுக்களுடான சத்சங்கம் இடம் மாற்றம் பட்டது.

இப்போது எதிர்ப்பு வேறு விதமாய் திரும்பியது. “அவள் அரண்மனையியில் இருப்பதே இல்லை. துர்கா பூஜையில் பங்கேற்பதில்லை. அகால நேரங்களில் மந்திருக்கு போகிறேனென்று ’யாரையோ’ சந்திக்க போய்வருகிறாள்” இத்யாதி. சோதனை போல கணவனும் முகலாயருடனான போரில் மிகுந்த காயம் அடைந்து மூன்று வருடங்கள் நோயினால் வாடி இறந்து போய்விட்டான். எல்லாம் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களில் நடந்தேறிவிட்டது. மீராவின் வயது அப்போது இருபத்தி மூன்று.

கணவனின் மறைவுக்குப் பிறகு அரண்மனை நரகமாகியது. சித்தூருக்கு அரசனாக பொறுப்பேற்ற மைத்துனன் அரண்மனை பெண்டிரின் பேச்சைக் கேட்டு மீராவை தம் குலத்திற்கே களங்கமாக நினைக்க ஆரம்பித்தான். பூஜைக்கான பூக்குடலையில் விஷப்பாம்பு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணனின் அருளால் பாம்பு பூஜிக்கத் தக்க சாளக்கிராம கல்லாக மாறியது. இவள் மாயக்காரி என்ற பயம் பற்றிக் கொண்டது பொறாமைகாரர்களுக்கு. தம் கண் எதிரிலேயே விஷம் குடிக்கசெய்தனர். விஷம் அமிர்தமாயிற்று. ராணாவின் கோபம் தலைக்கேறியது. கை வாளை உருவியது. ஆனால் ஒருப் பெண்ணை -அரண்மனையின் மூத்த மருமகளை -கொல்வது ஒரு ரஜபுதனுக்கு அவமானம் அல்லவோ !

உருவிய வாளுடன் “நீங்கள் ஏன் ஒரு ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து செத்து போகக் கூடாது ?” என்று சினந்து கூறினான்.

ஏ மாதவா எனக்கு உன்னைத்தவிர யாருண்டு
மீனாகி உன் சரணங்களை ஸ்பரிசித்திருக்கலாம்;
குயிலாகி நீ மாடு மேய்க்கும் போது உன்னைப் பாடி மகிழ்விக்கலாம்;
ஒரு முத்தாக இருந்தால் உன் மார்பில் தவழும் மாலையில் ஒளிர்ந்திருக்கலாம்.
எனக்கு இது எதுவும் வாய்க்கவில்லையே.
உன்னை அடைவதும் எப்படி?
எப்போதும் உன்னோடு இருப்பதும் எப்படி?

என்றெல்லாம் கரைந்து ஏங்குபவளுக்கு ராணா சொன்ன வழியே சரியெனப் படுகிறது. அதுவே கிருஷ்ணனின் அருகில் அழைத்துச் செல்லுமானால் ஏன் உயிரை விடக்கூடாது? ராணாவின் சினத்தின் மூலம் தன்னை கிருஷ்ணனே அழைக்கிறானோ என்றெல்லாம் தோன்றி நீரில் குதித்து உயிரைவிட துணிகிறாள் மீரா.

அவளுடைய நிலை, விளக்கு ஒளி கவர்ச்சியில் தன்னை மாய்த்துக் கொள்ளும், விட்டில் பூச்சியைப் போலே.

பொதுவாக உலகக் கவர்ச்சியின் ஈர்ப்பிற்கு ஆளாபவர்களை விட்டில் பூச்சி போலே என்று சொல்வதுண்டு. சிந்திக்கும் சக்தியின்றி ஆசையின் வலையில் விழுந்து அழிவடைவதை குறிப்பது. ஆனால் இங்கே பக்தனுக்கு பரமாத்மனிடத்தில் ஏற்படும் ஈர்ப்பையும் விட்டில் பூச்சிக்கே கபீர்தாசர் ஒப்பிடுகிறார். ஏனென்றால் அதீத பக்தியினால் தான் என்னும் எண்ணம் முற்றிலுமாய் அழிந்து பக்தனுக்கு பரமன் ஒருவனே தெரிகிறான்.

सुमिरन सो मन लाइये, जैसे दिप पतंग ।
प्राण तजे छिन एक में, जरत न मोरै अंग ॥


மனமொன்றி செபத்தில் நிலைத்திடு, அழல்நாடும் விட்டிலைப் போலே |
கணமொன்றி லுயிரே போயினுமது, பொரிந்திட அஞ்சுது இல்லையே ||

(பொரிதல் -கருகுதல் தீய்தல்)

இதே கருத்தை மீராவும் தன் பாடல் ஒன்றில் வெளிப்படுத்துகிறாள்.

If you want to offer love
Be prepared to cut off your head
And sit on it.

Be like the moth,
Which circles the lamp and offers its body.

Be like the deer, which, on hearing the horn,
Offers its head to the hunter.
Be like the fish
Which yields up its life
When separated from the sea.
Be like the bee,
Entrapped in the closing petals of the lotus.

Mira's lord is the courtly Giridhara.
She says: Offer your mind
To those lotus feet.
( இதன் மூலப்பாடல் தெரிந்திருந்தால் அதன் இணைப்பை தயவு செய்து தெரிக்கவும். ஆங்கில பொழிபெயர்ப்பு மட்டுமே கிடைத்தது)

உயிரைத் துச்சமாகக் கருதி துறக்கத் துணிந்தவளை கிருஷ்ணனே தடுக்கிறான். “நீ பிருந்தாவனத்துக்கு போ” என்ற உத்தரவும் கொடுக்கிறான். பல பெரும் இறையன்பர்களின் தொடர்பு அவள் மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் கண்ணனை சேர முடியாத மானுடப் பிறவி பெரும் துன்பமாகத் தெரிகிறது.

भवनपति तुम घर आज्यो हो ।
புவன பதியே வீடு விரைந்திடு
बिथा लगी तन मँहिने म्हारी तपत बुझाज्यो हो ॥
என்னைப் பீடித்திருக்கும் தாபம் உன்னால் அணையட்டும்
रोवत रोवत डोलता सब रैन बिहावै हो ।
அழுதழுது இரவெல்லாம் புரளுகிறேன்
भूख गई निदरा गई पापी जीव न जावै हो ॥
பசியில்லை தூக்கமில்லை பாவி ஜீவன் போவதுமில்லை
दुखिया कूँ सुखिया करो मोहि दरसण दीजै हो ।
துயரம் போக்கி ஆறுதல் தர எனக்கு தரிசனம் கொடு
मीरा ब्याकुल बिरहणी अब बिलम न कीजै हो ॥

வாடும் மீராவின் வேதனை தீர்க்கக் காலம் கடத்தாதே

இப்படி மீராபாயின் இறை ஏக்கத்தின் உச்சியில் வெளிப்பட்ட பாடல்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு இன்று பக்திக் களஞ்சியமாகத் திகழ்கிறது. இறைவனுடைய அடிகமலங்கள் அவ்வளவு சுலபமாக எட்டப்படுவதில்லை என்பதும் அவரது ஏக்கம் மிகுந்த வரிகளால் புலனாகிறது.

இதன் அடுத்த பகுதி விரைவில் ...... அதுவரை

எம் எஸ் அம்மாவின் குரலில் மீரா பஜன் ஹரி தும் ஹரோ பஜனை கேட்டு அனுபவியுங்கள்.

हरि तुम हरो जनकी भीर ।
द्रौपदीकी लाज राखी तुरत बढ़ायो चीर ॥
भगत कारण रूप नरहरि धर् यो आप सरीर ।
हिरण्याकुस मारि लीन्हों धर् यो नाहिन धीर ॥
बूड़तो गजराज राख्यो कियौ बाहर नीर ।
दासी मीरा लाल गिरधर चरणकँवलपर सीर ॥





ஓ ஹரி, ஜனங்களின் துக்கம் களைந்திடு; காலம் கடத்தாமல் திரௌபதிக்கு சீரை தந்து மானம் காத்தாய் ; நர-ஹரி ரூபத்தில் பிரகலாதனைக் காப்பாற்றினாய் ; இரண்யகசிபுவை வதம் செய்த தீரன் ; கஜராஜனை நீரினின்று வெளியே இழுத்தாய் ; அடிமை மீரா பணிவேன் உனது தாமரைப் பாதங்களை .

----------------------------------------------

இந்த பதிவுடன் தனது ஐந்தாவது வருடத்தில் இந்த வலைப்பூ அடி எடுத்து வைக்கிறது என்பதோடு இன்னுமொரு விசேஷம். !! கூகிளின் கணக்குப்படி இது நூறாவது இடுகை. அதன் பின்பலம் எல்லாம் வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது. பொறுமையாகப் படித்து தனி மடலிலும் பின்னூட்டங்களிலும் உற்சாகமூட்டி வரும் அனைத்து ஆத்திக அன்பர்களுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

இதையொட்டி அடுத்த இடுகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும். :)))

அனைவருக்கும் சிறப்பான நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு அம்பிகை அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

8 comments:

  1. எம்.எஸ் அவர்களின் இனிய பாடலுக்கு நன்றி.

    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ஐந்தாவது வருடத்தில் உங்கள் வலைப்பூ அடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள்!

    அடுத்து உங்கள் முக்கிய அறிவிப்பை எதிர்ப்பார்க்கிறேன்.

    உங்களுக்கும்,நவராத்திரி வாழ்த்துக்கள்!

    எல்லோருக்கும் அம்பிகை அருள் புரியட்டும்.

    ReplyDelete
  2. நூறாம் இடுகைக்கும் ஐந்தாம் ஆண்டு விழாவுக்கும் ஒருசேர வாழ்த்துக்கள் கபீரன்பன் ஐயா!

    //அழலை நாடும் விட்டில் பூச்சி// = நாங்க தானோ? :)
    நாங்க = "விட்டல்" பூச்சி
    உங்க பதிவு = ஞான அழல்!

    ReplyDelete
  3. //நீங்கள் ஏன் ஒரு ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து செத்து போகக் கூடாத?//

    //கரைந்து ஏங்குபவளுக்கு ராணா சொன்ன வழியே சரியெனப் படுகிறது. அதுவே கிருஷ்ணனின் அருகில் அழைத்துச் செல்லுமானால் ஏன் உயிரை விடக்கூடாது?//

    //உயிரைத் துச்சமாகக் கருதி துறக்கத் துணிந்தவளை கிருஷ்ணனே தடுக்கிறான். “நீ பிருந்தாவனத்துக்கு போ” என்ற உத்தரவும் கொடுக்கிறான். பல பெரும் இறையன்பர்களின் தொடர்பு அவள் மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் //

    //இப்படி மீராபாயின் இறை ஏக்கத்தின் உச்சியில் வெளிப்பட்ட பாடல்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு இன்று பக்திக் களஞ்சியமாகத் திகழ்கிறது//

    - இதற்குத் தானோ?
    - இத்தனை அடியார்களின் களிப்புக்காக, அவள் ஒருத்தியின் ஏக்கமும் தவிப்பும்!!!
    - மீரா, இன்னுமொரு நூற்றாண்டு இரு!
    இல்லையில்லை! வேணாம்! நீ கண்ணன் கழல் இன்பத்தில் காலமெல்லாம் இரு!

    ReplyDelete
  4. நல்வரவு கோமதி மேடம்,

    வாசிப்புக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    நவராத்திரி வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வருக ரவிஷங்கர்,

    //நாங்க = "விட்டல்" பூச்சி
    உங்க பதிவு = ஞான அழல்! //

    முதல் வரி சரி, நீங்க விட்டல் அடியார்கள்.

    இரண்டாவது அவ்வளவு பொருத்தமில்லை :)
    என் பதிவு-மிஞ்சிப் போனா- ஒரு கை காட்டி மரம். அவ்வளவுதான் :))

    வருகைக்கும் அன்புக்கும் நன்றி

    ReplyDelete
  6. ஒரு வலைப்பதிவோ, அல்லது வேறு எந்த வடிவமாக இருக்கட்டும், ஐந்து வருடங்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல! ஒரு குறிப்பிட்ட, துறையை மட்டும் எடுத்துக் கொண்டு, அதைவிட்டு வேறெங்கும் கவனம் சிதறிவிடாமல், ஒரு வாசிப்பு அனுபவத்தை, தானும் அனுபவித்து வாசிக்க வருகிறவர்களுக்கும் கொடுப்பது என்பதே ஒரு பெரிய கொடுப்பினை புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.

    நூறு என்ற எண்ணிக்கைகூடத் தன்னளவில் பிரமாதமானது அல்ல! ஆனால், நூறும், முத்துக்களைத் தேடிக் கோர்த்து வைத்த முத்துமாலையாக இருக்கும்போது அந்த நூறுக்குத் தனி மரியாதை கிடைக்கிறது. அதன் மதிப்பும், வெறும் எண்ணிக்கையைத் தாண்டி, அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுவதாகவும் ஆகிறது.

    1965 களில் ஹிந்தி ஒழிக என்ற கூச்சலில் கவரப்பட்டு, ஹிந்தி படிக்காமல் போன ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்காமல், எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற பாரதியின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் காலம் கடந்த பிறகு தான் எனக்கு ஒருவாறாகப் புரிந்தது.

    கபீர்தாசரைப் பற்றிய விவரங்களை, ஈரடியாக எளிமையான மொழியில் சொன்ன ஆன்மீக அனுபவங்களை, உங்களுடைய மொழிபெயர்ப்பில் தான் படித்து தெரிந்துகொள்கிற வாய்ப்புமே எனக்குக் கிடைத்தது. ஒரே நேரத்தில் பத்து இருபது விஷயங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு,அப்படிப் பேசுவதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை என்று தெரிந்துமே பேசவும் எழுதவும் என்னைப்போல எத்தனையோ பேர் இருக்கிறோம். ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது தெரிந்துமே காலித் தகர டப்பாவில் சத்தம் அதிகமாக எழுப்ப முடிவதுபோல கூத்தாடுகிற வேலைதான் அது.

    வெய்யிலில் களைத்து வருகிறவனுக்குக் குளிர் நிழல் தருகிற மரம்போல கபீரின் கனிமொழிகள் தளம் இருக்கிறது! உங்களுடைய சிரத்தையும் , கபீரின் எளிய வார்த்தைகளில், மிகப்பெரிய வாழ்வியல் உண்மைகளைச் சொல்ல முடிகிற திறமும் சேர்ந்து ஒரு அற்புதமான களம் இங்கே உருவாக்கி இருக்கிறது. இறைவனின் கருணை இந்த முயற்சியை மேலே மேலே முன்னெடுத்துச் செல்லத் துணை புரியட்டும்!

    ReplyDelete
  7. வணக்கம் கிருஷ்ணமூர்த்தி சார்,

    //..வெறும் எண்ணிக்கையைத் தாண்டி, அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுவதாகவும் ஆகிறது//

    மிகவும் உண்மை.
    நாலாயிர திவ்வியப் ப்ரபந்தத்தில் பத்தே பாடல்கள்தான் திருப்பாணாழ்வாருடையது.

    உணர்ச்சிகளின் குவியலாக வெளிப்பட்டிருக்கும் தங்கள் பாராட்டுரைகளுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி