Tuesday, March 23, 2010

துணையாய் நெஞ்சம் துறப்பிப்பான்

பழனி தைப்பூசத் திருவிழா. தரிசனம் முடிந்து, ஊர் திரும்ப வேண்டி பேருந்திற்காகக் காத்திருப்போர் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பேருந்தைக் கண்டதும் முண்டியடித்து ஏறுவோர் நெரிசலில் சிக்கித் திகைத்தார் ஒரு பெரியவர். எப்படியோ கூட்டமே அவரை உள்ளே தள்ளி விட்டது. அமர ஒரு இருக்கையும் கிடைத்தது. அநத அமளியில் அவருடைய பணப்பை எங்கேயோ தவறி விட்டது. அதை அவர் கவனித்துக் கொள்ளவே இல்லை. அவருடைய அதிருஷ்டத்திற்கு நடத்துனர் கையில் அது கிடைத்தது. அவர் சத்தம் போட்டு “யாராவது பர்ஸ்-ஸ தவற விட்டுடீங்களா பாத்துக்குங்க” என்று அறிக்கை விட்டார்.

தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்து பர்ஸ் இல்லாததைக் கண்ட பெரியவர் அது தன்னுடையது என்று கோரினார். “பெரியவரே உங்களுதுதான் என்கிறதுக்கு ஏதாவது அடையாளம் சொல்லுங்க.”

“அது தோல் பர்ஸ்-ங்க்க, உள்ளே முருகன் படம் இருக்கும்”

“ஐயா, எல்லாரோட பர்ஸ்-ஸும் தோலுதான். பழனியில எத்தனையோ பேர் பர்ஸ்-லேயும் முருகன் படம் இருக்கத்தானே செய்யும். வேற ஏதாவது அடையாளம்..உங்க படமோ குடும்பத்துல யார் படமாவது வச்சிருக்கீங்களா ? “

” ஒரு காலத்துல சுருட்டை முடி அடர்ந்த மீசையோட இருந்த என்னோட படத்தை வச்சிருந்தேன். கலியாணம் ஆனப்புறம் என் பொஞ்சாதி போட்டோவை வச்சிருந்தேன். குழந்தைங்க வந்தப்புறம் அவங்களோட போட்டோ கொஞ்ச நாளைக்கு இருந்திச்சு. அவங்க யாரும் இப்போ என்னோட இல்லை. பிஸனஸ்-ல கடன் வாங்கி நஷ்டமாயிடுச்சு. நான் பிரயோசனமத்தவன்னு அவ கோவிச்சுக்கிட்டு கொழந்தைகள கூட்டிக்கிட்டு ஊருக்கு போயிட்டா. இப்போ வளர்ந்த குழந்தைகளும் என்னை கண்டுகிறதில்லை. எல்லாம் போயி என்னப்பன் முருகன் மட்டும் தான் எனக்குங்கிற நெசம் தெரிஞ்சு போனதினால வேற எவரோட படமும் வச்சுகிறது இல்லே” என்று பதில் சொன்னார் பெரியவர்.

மறு கேள்வி கேட்காமல் நடத்துனர் அவருடைய பணப் பையை திருப்பிக் கொடுத்தார்.

(சமீபத்தில் வாசித்த ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல்)

வாழ்க்கை ஒரு இரயில் பயணம் போலே. நமக்கு வந்துள்ள உறவுகள் எல்லாம் சகப் பிரயாணிகள் மாதிரி. சிறிது காலம் உடன் இருப்பார்கள், அவர்களுடைய இலக்கு வந்ததும் பாதை மாறி வெவ்வேறு திசைகளில் பயணம் தொடர்வார்கள் என்றெல்லாம் படிக்கின்றோம். கபீர்தாஸர் இதே கருத்தை படகில் ஒன்றாக பயணம் செய்பவர்களை மையமாக வைத்து சொல்கிறார்.

अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥


தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது


மாற்று :
என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே


வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.

“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே”

இதே கருத்தை திருநாவுக்கரசர், கபீர் சொல்வது போல் உறவுகள் அர்த்தமற்றவை என்று ஆரம்பித்து ”இவையெல்லாம் மாயமே அவற்றில் மகிழ்ச்சி கொள்ள ஏதும் இல்லை” என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.

தந்தை ஆர் தாய் ஆர் உடன் பிறந்தார்
தாரம் ஆர், புத்திரர் ஆர், தாந்தாம் ஆரே
வந்தவாறு எங்கனே, போம் ஆறு ஏதோ?
மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய
என்று எழுவார்க்கு இரு விசும்பிலிருக்கலாமே


[தாய் ஆர் உடன்பிறந்தார் என்பதில் தாய் ஆர் என்றும் ஆர் உடன்பிறந்தார் என்றும் வரும் : போம் ஆறு= உலகை விட்டு போகும் வழி : வாளரவு =கொடிய அரவம்: திகழ்மதி=குளிர்ச்சி பொருந்திய சந்திரன்]

உறவுகள் என்னும் மாயத்தைக் கடந்து செல்ல வேண்டுமானால் இறைவன் நாமத்தை இடைவிடாது சிந்திக்க வேண்டும் என்பதை அப்பர் பெருமான் அறிவுறுத்துகிறார்.

இறைவன் நாமத்தை ஏத்தினால் முக்தி நிலை கண்டிப்பாக உண்டு என்பதை வாழ்ந்து காட்டிய மகான்கள் எத்தனை எத்தனையோ. ஏன் ஆதி கவி வால்மீகியின் வாழ்க்கையை விடவா உதாரணம் தேவை ?

வழிப்பறிக் கொள்ளைக்காரன் ரத்னாகரன் வால்மீகியானதும் விடாத ராம செபத்தினால்தானே !

”உன் பாவங்களை பங்கு போட்டுக் கொள்ள விரும்புவார்களா உன் குடும்பத்தினர். கேட்டு வா” என்ற நாரதரின் கேள்வி அவனது வாழ்க்கையையே மாற்றி விட்டது.
வழிப்பறி மூலம் வந்த செல்வத்தை அனுபவிக்கத் துடித்த குடும்பத்தினர் எவரும் அவனுடன் அதற்கான பாவத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை.

தந்தை தாய் மனைவி மக்கள் என்ற உறவுகள் எல்லாம் சுயநலத்தின் அடிப்படையில் நிற்பவையே என்பதை அந்தக் கணத்திலே புரிந்து கொண்டான். வைராக்கியம் பிறந்தது. அந்த மகரிஷி நாரதரையே சரணடைந்தான் ரத்னாகரன். நாரதரும் அவருக்கு ராம மந்திரம் உபதேசித்துச் சென்றார்.

எழுத்தறிவில்லாக் கொள்ளைக்காரன் தன் மீது கரையான் புற்று வளர்கின்ற நிலையிலும் தேக நினைவு இன்றி ராமநாமத்தில் மூழ்கிப் போனான். அதன்பின் அவனுக்கு எல்லாமே இறைவடிவம் ஆயிற்று. வால்மீகி முனிவர் அதனால் உலகுக்கு கிடைத்தார்.

அத்தனையும் இறைவடிவம் என்று உணர்ந்த பின்னர் உறவுகள் கூட அவன் வடிவே. முன் சொன்னத் தேவாரப் பாடலில் இவர் யார், அவர் யார் என்று வினவியவ திருநாவுக்கரசர் இறைவனிலேயே எல்லா உறவுகளையும் கண்டு அவனே எல்லாமாக இருப்பவன் என்றும் வேறொரு சமயம் அவனை ஏத்துகிறார்.

அப்பன் நீ அம்மை நீ அய்யனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ மணி நீ இம்முத்து(ம்) நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே


[ஏறூர்ந்த செல்வன் = நந்தி மீதமர்ந்த சிவபெருமான்]

இறைவனுடைய அருள் துணையால் மட்டுமே நெஞ்சம் துறத்தலையும் கைகொள்ள முடியும் என்பதை ’துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ’ என்று சொல்லிக் காட்டுகிறார் அப்பர் பெருமன்.

அப்படி அவனுடைய அருள் சித்தித்து விட்டால் மனிதனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதை திருமழிசை ஆழ்வாரும் போற்றிச் சொல்கிறார்.

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்,
ஒத்து ஒவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே !


“முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்” என்ன அழகான சொற்கோவை ! அப்படி அவன் ஆட்கொண்டு நம்முள் மேவுவதால் தான் துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ என்றும் போற்றப்படுகிறான் இறைவன.

சருக்கரை எந்த மொழியில் எந்த பெயரிட்டு அழைத்தாலும் தித்திக்கவே செய்யும். கடவுளின் நாமப் பெருமையும் அப்படிப்பட்டதே.

இறைவனை உள்ளே புகவிடு. அவன் நினைவிலேயே ஆனந்தம் கொள். உறவுகள் எல்லாம் தானே இற்று விழுந்து விடும். இது இயல்பான முன்னேற்றம்.

ஒரு சிலருக்கு ரத்னாகரன் போல் உறவுகள் மேலெழும் வெறுப்பே கூட இறைவன் பால் சிந்தையை திருப்பக் கூடும்.

தன்னை நோக்கிய மனிதரின் பயணத்தின் இலக்குகளை எவரெவருக்கு எவ்வகையில் நிர்ணயத்துள்ளானோ, அந்த இறைவனே அறிவான்.

Thursday, March 11, 2010

சிற்றெரும்பு கொள்ளும் சருக்கரை

கடவுள் ஏன் மனிதனின் கையில் அகப்பட மாட்டேன் என்கிறான் ? அகப்பட்டால் தன்னையும் மனிதன் சீர்திருத்த ஆரம்பித்து விடுவானோ என்கிற பயம் கூட காரணமாயிருக்கலாம் ! :-)

இந்தக் கருத்தை மையமாக வைத்து திரைப்படங்களில் நகைச் சுவை காட்சிகள் பலவும் வெளி வந்திருக்கின்றன.

சாணக்கியன் பிரம்மனுடைய படைப்பிலேயே சீர்திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறார்.

பிரம்மனுக்கு சரியாக எடுத்துச் சொல்பவர்கள் இல்லை போலும் ! தங்கத்திற்கு நறுமணம் வைக்க மறந்து விட்டான்; கரும்பிற்கு கனி கிடையாது; சந்தன மரத்திற்கு அழகிய் பூ கிடையாது ; படித்தவர்களுக்கு செல்வம் கிடையாது; அரசனுக்கு நீண்ட ஆயுள் கிடையாது (சாணக்கிய நீதி 9 :3)

சாணக்கியன் சொல்ல வந்தது என்னவென்றால் குறையில்லாத பொருள் என்று உலகத்தில் கிடையவே கிடையாது; பிரம்மனுடைய படைப்பில் கூட குறைகள் உண்டு பாருங்கள் என்று வேடிக்கையாக சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இந்த குறை மனிதனுடையதா, பிரம்மனுடையதா ?

ஒருவேளை மனிதனின் பேச்சைக் கேட்டு தங்கத்திற்கு அருமையான வாசம் ஒன்றை பிரம்மன் கொடுத்தான் என்று வைத்துக் கொள்வோம்.

என்ன நடக்கும் ?

தென் ஆப்பிரிக்கத் தங்கம் வெனிசுலாவில் கிடைக்கும் தங்கத்தைக் காட்டிலும் நறுமணத்தில் உயர்ந்தது. அதை விடவும் உக்ரேனில் வெட்டியெடுக்கப்படும் தங்கத்தின் நறுமணம் இன்னமும் உயர்ந்தது என்றெல்லாம் தங்கத்தில் தரம் பிரிக்கத் துவங்குவான்.

சாதாரண மரப்பொம்மைக்கு சந்தன எண்ணெய் தடவி சந்தன விக்கிரகமாக ஏமாற்றுவதுபோல சந்தையில் நறுமணம் குறைந்த தங்கத்திற்கு வாசம் பூசி உயர்ந்தவகை தங்கமாக விற்பனை செய்யவும் முற்படுவான்.

இதனால் தங்கத்தில் ஒரு புது விதமான குறை புகுந்து விட்டது. தாம் ஏமாறாமல் இருக்க அதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியவர்கள் ஆகிவிட்டனர் மனிதர்கள்.

இப்படியாக எல்லாவற்றிலும் குறை காணும் சுபாவமும் சந்தேகமும் உடைய மனிதர்கள் மனித வடிவில் இருக்கும் ஞானியர்களிடையேயும் தம் குருவிடமும் குறை காண்பதிலோ சந்தேகப்படுவதிலோ ஆச்சரியம் இல்லைதான்.

கபீர்தாஸுக்கும் அதைப் பற்றித் தெரியும். அதற்கு தீர்வாக அவர் தரும் உதாரணம் ம்னதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.

मिसरी बिखरी रॆत में, हस्ती चुनी न जाय
किडी. ह्वै करि सब चुनै, तब साहिब कू पाय

சருக்கரை சிதர்த்தது மண்ணிலே, பிரிக்க ஒண்ணாது குஞ்சரமே
பொறுக்கிச் செல்லும் சிற்றெரும்பே, பொறுமை வேண்டும் குருமுன்பே


குற்றம் குறைகளுடன் கூடியதே மனித உலகம். அவர்கள் நடுவே பிறந்த பின் குருவானவர்க்கும் அவைகளின் தாக்கம் இருக்கவே செய்யும். சில அவர்களின் பழக்க வழக்கங்களில் இருக்கலாம், சில அவர்களோடு பிறந்த குணநலன்களில் தெரியலாம்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார் விவேகானந்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் யாரும் புகைபிடிக்ககூடாது என்ற விதி இருந்தது. இதை அறியாத விவேகானந்தர் விருந்து முடிந்த பின்னர் பையிலிருந்த புகைக்குழாயை வெளியே எடுத்து புகையிலை நிரப்பி, பற்ற வைத்து புகை பிடிக்கத் தொடங்கினார்.பலரும் அதிர்ந்து போயினர். வீட்டின் எஜமானி இவர் புகைபிடிப்பதை கண்ட போது “சுவாமிஜி புகைப்பிடிப்பதற்காக மனிதன் படைக்கப் பட்டிருந்தால் கடவுள் தலையில் ஒரு புகைபோக்கியையும் சேர்த்தே படைத்திருப்பான்” என்றார் கிண்டலாக.

”அதனால் என்ன அதை படைப்பதற்கான மூளையை கொடுத்தாயிற்றே என்று சும்மாவும் இருந்திருக்கலாம்” என்று பதட்டப்படாமல் பதிலளித்தார் சுவாமிஜி. யாவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.

அப்பொது அருகே இருக்கும் சாமானியர் எவருக்கும் 'என்ன இது!ஐம்புலன்களை வென்றவர் என்று நாம் நினைப்பவர் இப்படி புகையிலைக்கு அடிமையாயிருக்கிறாரே. இவர் உண்மையிலேயே மகான் தானா அல்லது கெட்டிக்கார பேச்சாளர் மட்டும்தானா?' என்ற சந்தேகம் எழுந்திருக்கலாம். பலரும் அவரை விட்டு விலகியும் இருக்கலாம்.

இப்படிப்பட்ட புற நிகழ்ச்சிகளால் விவேகானந்தர் உள்ளே பெற்றிருந்த ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ள முடியாது. பலரும் வெறுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததன் காரணமாக அவரது ஆத்மஞானம் குறைவும் படாது.

இதைப் பற்றி சுவாமி சிவானந்தர் மிகத் தெளிவாக உரைக்கிறார்.

A true disciple is concerned only with the Divine Nature of the Guru. The Guru’s actions as man is not the disciple’s concern. He is totally oblivious of it. To him, the Guru is Guru even if he acts unconventionally. Always remember that the nature of a saint is unfathomable. Judge him not.
Measure not his divine nature with the inadequate yardstick of your ignorance. Criticise not your Guru’s action which is done on universal vision.
- Swami Sivananda


பல ஞானிகளின் விசித்திரப் போக்கைப் பற்றி படித்தும் கேட்டும் இருக்கிறோம். சில பைத்தியக்காரத்தனமாய் கூடத் தோன்றும். பின்னாளில் அவர் செய்கையின் காரணம் புரியும் போது முக்காலும் அறிந்த ஞானியாக போற்றப் படுகிறார்.

மணலில் சேர்ந்திருக்கும் சர்க்கரையைப் போன்றவர் குரு. நமது பெரும் அறிவாற்றலின் அளவு கொண்டு அவர்களைப் பற்றி எடைபோட முயன்றால் நாம் யானையை ஒத்தவர்கள் ஆவோம். நமக்கு நம் அறிவின் மேல் உள்ள அபார நம்பிக்கை யானையை போன்ற அகங்காரத்தை குறிப்பதாகும்.

பொதுவாக மனிதர்கள் ஏதேனும் மனதுக்கு பிடித்து விட்டால் எப்பாடு பட்டாவது அதை அடைய முயற்சி மேற்கொள்கின்றனர். சாணக்கியன் சொல்லும் தாழம்பூ உதாரணத்தை பார்ப்போமே.

தாறுமாறான வளர்ச்சி, தின்பதற்கு பழங்கள் கிடையாது, தாழம்பூ புதர்களுக்கிடையே வசிக்கும் பாம்புகள். பூவைப் பறித்து முடியில் சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டால் கைகளைத் துன்புறுத்தும் முட்கள் நிறைந்த இலைகள், சரி சுலபமாகவாவது அணுக முடியுமா என்றால் அதுவும் இல்லை. ஆனாலும் அதன் நறுமணத்தால் கவரப்பட்டு தாழம்பூவை விரும்பி அடைகின்றனர் மக்கள். ஒரே ஒரு சிறப்பு தன்மை இருந்துவிட்டால் கூட போதும், பல குறைகளையும் மறக்க மனிதர்கள் தயங்குவதில்லை.(சாணக்கிய நீதி 17:21)

லோகாதாய பார்வையில் பல குறைகளுடையவராய் காட்சியளித்த போதிலும் ஞானியர்களின் சிறப்பு, இறையுணர்வை அனுபவிக்கும் ஒரு காரணத்தினாலேயே ஒளிர்விடுகிறது.

சுவாமி சிவானந்தா சொல்வது போல நம்முடைய அளவு கோல்கள் அவர்களிடத்தில் எடுபடாது. அவர்களை எடை போட்டு ஏற்றுக் கொள்வேன் என்பது சராசரி மனிதருக்கு முடியாது. அவர்கள் அருள் வேண்டுமானால் எப்படிப்பட்ட சிரமம் ஆனாலும் அவர்களை தேடி சரணடைவதுதான் ஒரே வழி. அதற்கான மார்க்கம் கபீர் சொன்னது போல் எறும்புகளாக வேண்டும். நம் அகந்தை குறுகித் தொலைய வேண்டும். மண்ணைப் பார்க்காது சருக்கரைத் துகள்களையே காணும் திறமை பழக வேண்டும்.

நாம் வேண்டுமானால் உப்புக்கும் சர்க்கரைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாந்து போகலாம். ஆனால் எறும்புகளை ஏமாற்ற முடியாது. மனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன. நல்லதையும் கெட்டதையும், அசலையும் போலியையும் பிரித்தறியும் விவேகத்தைப் பெருக்கிவிடுகின்றன. பேசுபவரின் வார்த்தை ஜாலங்களில் மயங்காது அவர்களின் உள்ளத்தை ஊடுருவி உண்மையை புரிந்து கொண்டுவிடக்கூடிய ஆற்றலைப் பெற்று விடுகின்றன.

அந்த ஆற்றல் கைவரப் பெற்ற பின் உண்மையான குருவை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் ஏதும் உண்மையான சாதகனுக்கு இருக்க முடியாது.

இல்லாவிட்டால் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல நாமும் நம் அஞ்ஞானத்தை நம் மேலே வீசிக் கொண்டு அந்த ஆனந்தத்திலேயே திளைத்திருக்கலாம்.

யானைக்கு மண்ணையும் சர்க்கரையையும் பிரித்தெடுக்கும் திறமையை பிரமன் கண்டிப்பாகத் தரப் போவதில்லை. அது போல் அகந்தை உடையவர்க்கு குரு அருளும் கூடப்போவதில்லை.