கங்கைக்கரை ரிஷிகேசத்தில் ஒரு சாது வசித்து வந்தார். தினமும் மதியம் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்து வந்து கங்கை நதி அருகே அதன் அழகை ரசித்துக் கொண்டு உணவை உட்கொள்வது வழக்கம். ஒருநாள் அந்த சாது வேறொரு சாதுவுடன் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார். ஒரு பெரியவர் காரணம் கேட்ட பொழுது தான் தினமும் அமர்த்து உணவு உட்கொள்ளும் பாறை மேல் இன்னொரு சாது வந்து அமர்ந்து விட்டாரென்றும் தனக்கு அதே இடம் வேண்டும் என்று காரணம் காட்டினார்.
“ அப்பா உலகத்தைத் துறந்தேன் என்று பெண்டாட்டி பிள்ளைகளை எல்லாம் விட்டு இங்கே வந்தது இந்த கற்பாறையைக் குறித்து சண்டை போடவா ? இதுவா துறவிக்கு அழகு?” என்று இடித்துரைத்து அவரை அனுப்பினார் அந்த பெரியவர். சுவாமி சிவானந்தர் சொல்லிய கதை இது.
பொதுவாக சாதுக்கள் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது எனும் கொள்கை தொன்றுதொட்டு சொல்லப்படும் கருத்து. இதற்கானக் காரணங்கள் பலவாக இருக்கலாம். ஒரே இடத்தில் இருப்பதால் அந்த சூழ்நிலையை ஒட்டி மனதில் பிடிப்பு ஏற்பட்டுவிடும். பிடிப்பு என்றாலே களிம்பு ஏறியது போலத்தானே ! அதைத் தேய்த்து சுத்தம் செய்வதே பெரிய வேலையாகப் போய்விடும்.
பரதருக்கு மான் குட்டி மேல் ஏற்பட்ட பிடிப்பின் விளைவை பாகவதத்தில் படித்திருக்கிறோம். ஆன்மீக முன்னேற்றத்தில் இவை பெரும் தடையாக அமையக்கூடும்.
இதற்கு முற்றிலும் மாறான ஒரு நிகழ்ச்சியை நான் நேரில் கண்டுள்ளேன்.
தில்லி-ஹாபூர் நெடுஞ்சாலையில் சுமார் இருபது கி.மீ பயணித்த பின்னர் என் தொழிற்சாலைக்கு காஜியாபாத் கான்பூர் நெடுஞ்சாலையில் தினமும் பாதை மாறிச் செல்ல வேண்டியிருந்தது. அந்தத் திருப்பத்தில் ஒரு ஜுலை மாதத்தில் நெடுஞ்சாலையை ஒட்டிய நடைப்பாதையில் ஒரு இளைஞன் தொடர்ந்து சில நாட்களாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். காலை ஏழரை மணியில் அவன் எங்கிருந்தானோ அதே இடத்தில் மாலை ஆறரை மணியிலும் அமர்ந்திருந்தான். பல நாட்கள் தலைமை அலுவலகத்திற்கு மதியம் தில்லி வரவேண்டிய நேரங்களிலும் உக்கிரமான வெய்யிலை பொருட்படுத்தாது அங்கேயே அமர்ந்திருக்கக் கண்டேன். எப்போதும் ஒரே உடை, ஒரு பேண்ட், ஒரு ஷர்ட். ”யாரு எக்கேடு கெட்டுப் போனா என்ன” என்கிற வகையில் ஒரு அசட்டையான பார்வை.
என் அலுவலக நண்பர்கள் அவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பவனாக இருக்கலாம் என்றனர். வீட்டீல் சண்டைப் போட்டுக் கொண்டு வந்திருப்பவனாக இருக்கக்கூடும் என்றனர். எனக்கு என்னவோ அதெல்லாம் பொய் என்பது போல இருந்தது.
நாட்கள் உருண்டன. அவன் நிலையில் மாற்றம் இருக்கவில்லை. ஒரு சில மாலைகளில் ரிக்ஷாகாரர்களோ சிறுவர்களோ அவனுடன் பேசிக் கொண்டிருப்பதை காணமுடிந்தது. அவனுக்கு அங்கேயே உடை மாற்றி விடுவதையும், சவரம் செய்து விடுவதையும் கண்டிருக்கிறேன். அவன் ஏன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான், ஏனப்படி அமர்ந்திருக்கிறான் என்பது புரியவில்லை. நிமிடத்திற்கு ஒரு வாகனம் மேலும் கீழுமாக அதிவேக கதியில் விரைந்து கொண்டிருக்கும் நெடுஞ்சாலை எதற்காக ? யாரோ அவனுடைய நித்திய தேவைகளைக் கவனித்து கொண்டனர் என்பது புலனாயிற்று.
வானமே கூரை என்று அவன் இரவு பகல் அங்கேயே இருந்தான் என்பது ஓரிரு நாட்கள் இரவில் நேரமான பொழுதில் வீடு திரும்பும் போது கூட துணைக்கு எவெருமின்றீ அங்கேயே அமர்ந்திருப்பது கண்டு உறுதியாயிற்று.
காரை நிறுத்தி அவனருகில் சென்று விசாரிக்கத் துணிவு வரவில்லை. ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. வடநாட்டின் விறைக்கும் குளிர் சாமானியர்களான எங்களை வாட்டிக்கொண்டிருந்தது. அவன் மட்டும் அங்கேயே இருந்தான். யாரோ கொடுத்திருந்த குளிர் பாதுகாப்பான ஆடைகளைத் தவிர வேறு மாற்றம் தெரியவில்லை. அடர்ந்த மூடுபனி காலத்தில் ஒரு ஆள் மட்டுமே அமரக் கூடிய சிறிய ப்ளாஸ்டிக் கூடாரம் ஒன்றினுள் காலை வேளைகளில் அமர்ந்திருப்பான்.
எவ்விதமான பூஜையோ தியானமோ செய்ததாகத் தெரியவில்லை. எவ்வித மதச் சின்னமும் அணிந்திருக்கவில்லை. என் மனதில் ஏனோ அவன் ஒரு ஆன்மீக சாதகனாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவனுக்கு எந்த குரு என்ன வகையான ஆணையிட்டிருந்தாரோ கண்டிப்பாக அந்த சாதனையில் தீவிரமாக இருந்தான் என்று தோன்றியது.
குளிர் குறைந்து மார்ச் மாதத்தில் வசந்த நவராத்ரியும் வந்தது. ஒரு வருடம் பூர்த்தியாகுமா எனபதைக் காண ஆவலாக இருந்த நிலையில் ஒரு நாள் திடீரென்று மறைந்து விட்டான். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் அசையாமல் திறந்த வெளியில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது என்பது லேசான காரியமா என்ன ?
பின்னர் சுவாமி ராமா வின் Life with Himalayan Masters என்ற புத்தகத்தில் இப்படி ஒரு சாதனை முறை இருப்பதையும் அதற்கு அஜகர விருத்தி என்பது பெயர் என்றும் அறிந்து கொண்டேன். மலைப்பாம்பு போல ஒரே இடத்தில் கிடப்பது.
பாகவத புராணத்தில் விருஷப மன்னன் தன் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்து விட்டு வனம் சென்றான். பல வருடங்கள் ஆடையுடனோ அது இல்லாமலோ தேக உணர்வு இன்றி திரிந்து வந்தவன் தன் கடைசி காலத்தில் இந்த அஜகரவிருத்தியை கை கொண்டானாம். எப்படி மலைப்பாம்பு உணவைத்தேடி செல்லாது தான் இருந்த இடத்தில் கிடைக்கும் இரையைத் தின்று படுத்துக் கிடக்குமோ அப்படியே கிடப்பது. இயற்கைக் கடன்கள் கழிப்பதும் அங்கேயே ! அதாவது தேக உணர்வில்லாத நிலையில் அவை தம்போக்கில் தாம் வெளியேறியன. ஆனால் அவைகளினால் எந்த துர்நாற்றமும் எழாது. மாறாக அவன் அமர்ந்த இடத்தினின்று பல மைல் தூரத்திற்கு நறுமணம் காற்றில் பரவியதாம் !!
”ஒருவன் ஏழையாயினும் தன் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள எண்ணக்கூடாது. இந்த ஆத்மா உடலோடு ஒட்டியிருக்க என்ன வேண்டுமோ அவ்வளவிலே அவன் முயற்சிகள் நிற்க வேண்டும். எப்படி ஒரு மலைப்பாம்பு தான் இருக்கும் இடத்திலேயே வரும் இரையைத் தின்று கிடக்குமோ அப்படி ஆசைகளைத் துறந்தவன் கிடக்கவேண்டும்” (பாகவதம் 7.15.15)
சாதுக்கள் ஓரிடத்தில் நிலையாயிருந்து வழிகாட்டுவது அவசியம் என்று கபீர் குறிப்பிடுகிறார்.
बहता पानी निरमला, जो टुक गहिरा होय ।
साधु जन बैठा भला, जो कुछ साधन होय ॥
பாயும் புனலது நிர்மலமே, ஆழ்நிலை நீரும் அங்கனமே |
சாது நிலைப்பதும் அவசியமே, சாதனை நிறைவில் சாத்தியமே ||
ஓடும் நீரில் அழுக்குகள் தங்காது என்று சொல்வர். இதற்கு விஞ்ஞான ரீதியாக இன்று விளக்கங்கள் உண்டு. வேகமான நீரோட்டத்தின் போது அதில் பிராணவாயு அதிக அளவில் கலந்து அழுக்குகளை (chemical oxygen demand ) சுலபமாக ஆக்ஸீகரணம் செய்து விடுகிறது.
அது போல ஒருவர் ஒரே இடத்தில் நில்லாது தொடர்ந்து இறை செபத்தில் மனதை நிறுத்தி பயணம் செய்து கொண்டிருந்தால் இறை செபம் எனும் ஆக்ஸீகரணி மனதை சுத்தமாக வைத்திருக்கும். சிறிய வகையில் மனதைத் தாக்கும் அழுக்குகள் அதிவிரைவில் இறை சிந்தனையாலும் செபத்தாலும் வெளியேற்றப்படும். இதனால்தான் சன்யாசிகள் ஓரிடத்தில் ஓரிரவுக்கு மேல் தங்ககூடாது என்ற வழக்கத்தை வைத்தனர் போலும். பூரண ஞானம் அடைந்த பின்னர் புறவுலகின் தாக்கங்கள் அவர்களை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. அதனால் அவர்கள் ஒரே இடத்தில் தங்குவதால் அவர்களுடைய மகிமைக்கு குந்தகம் எதுவும் விளைவதில்லை.
[ மிகவும் ஆழமான நீர் நிலைகளில் மீன்கள், ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரைத்தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால் அங்கிருக்கும் நீரும் மிகவும் தூயதாக பயன்பாட்டுக்கு உரியதாக இருக்கும். இது அந்த கால நிலை ஒட்டி சொல்லப்படுவது. இன்று போல் அன்று மாசுப் பிரச்சனைகள் இந்த அளவில் இருக்கவில்லை. அதனால் ஞானிகளின் பரிசுத்த நிலை ஆழமான நீருக்கு ஒப்பிடப்படுகிறது.]
சற்று வேறொரு கோணத்தில்-இன்றைய சூழ்நிலையை ஒட்டி- சிந்திப்போம்.
ஓசோன் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜன் தன்னுடைய இயல்பான இரட்டை அணுக்கள் அல்லாமல் மூன்று அணுக்கூறாகத் திகழும். இந்த நிலையில் அதன் சுத்திகரிக்கும் தன்மை அபாரம். மிக மிக நுண்ணிய அளவிலேயே அது பலமடங்கு அழுக்குகளை ஆக்ஸீகரணம் செய்ய வல்லது. கடைகளில் விற்கப்படும் நீர் புட்டிகளில் "Ozonated water" என்கிற வாசகத்தைக் காணலாம். அழுக்கு நீரை சுத்திகரிக்க வல்லது. அதிலிருந்து எழும் துர்நாற்றங்களுக்கு காரணமான வேதிப் பொருட்களையும் நுண்ணுயிர்களையும் அறவே அழித்து விடக்கூடியது.
இந்த ஓசோன் நிலையற்றது. மிகக்குறுகிய கால அளவிலேயே அது தன் மூன்றாம் அணுவை இழந்து மீண்டும் ஆக்ஸிஜனாக மாறிவிடும். இயற்கையில் இடி மின்னல் போன்றவைகளால் உற்பத்தியாகி வாயு மண்டலத்தில் மேற்பகுதியில் இந்த ஓசோன் அதிக அளவில் சேமிக்கப்படுகிறது. கதிரவனின் ஒளியில் வரும் அல்ட்ரா வையலட் கதிர்களை அது தடுத்து அதனால் பூமிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
சாதாரண மக்களாகிய நாம் இறைவன் திருநாமம் சொல்லிக்கொண்டு ஓரளவு மனதை நம்மளவில் சுத்தமாக வைத்துக் கொள்ள முயன்றாலும் சாக்கடை நீர் போல ஏதோ ஒரு வகையில் உற்பத்தியாகி வெளியேறிக் கொண்டிருக்கும் அழுக்குகளை சுத்திகரிக்க வேண்டிய அவசியம் நேர்கிறது.
அப்போது ஒசோன் போல் செயல் படுபவர்கள் நம்மிடையே வாழும் ஞானிகள்.
அவர்கள் ஓசோன் உற்பத்தி மையமாக விளங்குகிறார்கள். சில சமயங்களில் ஆக்ஸீகரணத்தாலும் சில சமயங்களில் தடுப்பாற்றலாலும் மக்களுக்கு வரும் துன்பங்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். நம்முடைய அன்றாட கர்மங்களிலிருந்து எழும் மனமாசுகளை சுட்டெரிக்கிறார்கள்.
அப்படி ’ஓசோன்’’ உற்பத்தியாளரான பின்னர் அவர்கள் ஊர் ஊராகத் திரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை எந்த மாசும் அணுகக்கூட முடியாது. அப்போது அவர்கள் ஒரு இடத்திலேயே இருந்து கொண்டு மக்களை நல்வழிப்படுத்தலாம்.
அதைத்தான் கபீர்தாஸ் சாதனை நிறைவில் சாத்தியமே என்று சொல்கிறார்.
அப்படி சாதனை புரிந்து நம்மிடையே வாழ்ந்த மகான் பூண்டி சுவாமிகள். ரிஷப மன்னனைப் போலவே அஜகர விருத்தியை செய்து காட்டியவர். செய்யார் ஆற்றுக்கரையில் கலசப்பாக்கம் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுத் திண்ணையை தன் நிலையாகக் கொண்டிருந்தார். யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. அன்பர்கள் விருப்பப்பட்டதை அவர் அனுமதித்தால் அவருக்கு ஊட்டி விடலாம்.
விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் ஞானியரைப் பற்றிச் சொல்லியிருப்பதற்கு இலக்கணமாகத் திகழந்தவர்.
Sometimes a fool, sometimes a sage, sometimes possessed of regal splendour; sometimes wandering, sometimes behaving like a motionless python, sometimes wearing a benignant expression; sometimes honoured, sometimes insulted, sometimes unknown – thus lives the man of realisation, ever happy with Supreme Bliss.
அகால நேரத்தில் -இரவில்- வந்திறங்கிய ஒரு பக்தர் தன் அவசரம் கருதி மகானை தரிசிப்பதற்காக திரைச்சீலையை விலக்கிய போது அங்கே சுவாமிகளுக்கு பதிலாக ஒரு மலைப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டு பயந்து போனாராம். சித்த புருஷர்களின் போக்கை யாரே அறிவார் ?
அவருக்கு காணிக்கையாக வந்த எந்தப் பொருளுமே -பழங்கள் உட்பட- அருகே ஒரு அறைக்குள்ளே போடப்பட்டன. எதுவுமே அழுகி துர்நாற்றம் தந்ததில்லை. அருகே ஈ மொய்க்கவும் இல்லை. அவ்வளவு சுத்தம். அவர் குளித்தது இல்லை உடைமாற்றிக் கொண்டதில்லை. தன்னைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ”ஓசோனாக” அவர் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த பொழுது மனிதர்களின் வழி முறைகள் அவருக்கு தேவை இருக்கவில்லை போலும். அவரைப்பற்றிய விவரங்கள் பல வலைப்பக்கங்களில் கிடைக்கின்றன.
ஆனந்தவிகடன் வாரப் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியரான பரணீதரன் (ஸ்ரீதர் ) அவர்களின் பூண்டி சுவாமிகள் பற்றிய கட்டுரையை முருகன் பக்தி என்கிற வலைப்பக்கத்தில் காணலாம். அவர் வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு அபூர்வ சலனப்படமும் காணக்கிடைத்தது. அம்மகானை தரிசித்து மகிழுங்கள்.
(வலையேற்றிய நண்பருக்கு நன்றி)
இன்று- ஜ்யேஷ்ட பூர்ணிமை தினம்- கபீர் ஜயந்தி என்று வாசக அன்பர் திரு ராகவன் அஞ்சல் அனுப்பி உள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றி. தலயாத்திரை செல்வது, புண்ணிய நீராடல், சாது தரிசனம் எல்லாவற்றிலும் உயர்ந்தது குருவை அண்டி வணங்குவது. அவ்வாறு குரு அருள் பெற யாவருக்கும் கபீர்தாஸரும் பூண்டி சுவாமிகளும் மற்றும் எல்லா தபஸ்விகளும் அருள் செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன் அவரது இன்னொரு ஈரடியையும் மனதில் கொள்வோம்.
तीरथ न्हाये एक फल, साधु मिले फल चार ।
सतगुरु मिले अनेक फल, कहैं कबीर विचार ॥
தீர்த்த நீராடில் பலன் ஒன்று, சாதுவின் தரிசனம் தரும் நான்கு |
சத்குரு தொழுதால் பன்மடங்கு, கபீரா உணர்ந்திடு இதை நன்கு ||
அவனே பரமும் அவனே குருவும்
அவனே அகிலம் அனைத்தும்- அவனேதாம்
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு
நான் அவனாய் நிற்பது எந்நாள் - தாயுமானவர்
Saturday, June 26, 2010
Tuesday, June 08, 2010
அடியவர் குடியே மேற்குடி
அலைபேசிகள் என்னும் மோக அலை உச்சத்தில் இருந்த போது பல தொழில்நுட்ப விஷயங்கள் நமக்கு புரியவே பல நாட்கள் ஆயின. சக ஊழியர் ஒருவருக்கு அழைப்பு வரும் போது அவருடைய அலைபேசியிலிருந்து ’கான்டா-லகாஆஆ’ என்கிற புகழ் பெற்ற ஹிந்தி ஆல்பம் பாட்டு ஒன்று கேட்கும். அந்த பாட்டு ஆரம்பிப்பதே உச்சஸ்தாயில்தான். திடீர் திடீரென்று அந்த பாட்டு அலுவலகத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு வரும் போது வேடிக்கையாகவும் பல சமயங்களில் எரிச்சலாகவும் இருக்கும்.
ஒருமுறை அவரை நான் எங்கிருந்தோ அழைக்க நேர்ந்த போது, அழைப்பை அவர் ஏற்கும் வரை காயத்ரி மந்திரம் கேட்டது. ”என்னப்பா இது அந்த முள் குத்ற பாட்டு எங்கே ? பாட்டை மாத்திட்டியா ?” என்று கேட்டேன். அவருக்குப் புரியவில்லை.
”எப்பவுமே கான்டா-லகா தானே வரும் இப்போ காயத்ரி மந்திரம் வருதே” என்று கேட்டு என் அஞ்ஞானத்தை வெளிப்படுத்தினேன். அவர் சத்தம் போட்டு சிரித்து ‘சார் அந்த பாட்டு எனக்கு ரிங் டோன். காயத்ரி மந்திரம் உங்களுக்கு ’காலர் ட்யூன்’ என்று என் அஞ்ஞானத்தை போக்கினார்.
மனிதர்கள் மனம் மட்டும்தான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் என்பதை கேட்டிருந்தோம். இப்போது நம்முடைய கைப்பேசிகளும் கூட செய்யக்கூடும் என்பதை புரிந்து கொண்டேன்.
இந்த காலர் ட்யூனை முதலில் செய்து காட்டியவர் ஜானாபாய். ஆம், அதுவும் அவர் கேட்கச் செய்தது கபீர்தாஸரை !
ஜானாபாய் நாமதேவரின் வீட்டுப் பணிப்பெண். அவரை விட சில வருடங்கள் மூத்தவர். நாமதேவரை அன்புடன் ஊட்டி வளர்த்தவர். பின்னால் நாமதேவரையே தன் குருவாகக் கொண்டு பாண்டுரங்கன் மகிமையில் கரைந்து போனவள்.
கபீர்தாஸ் தலயாத்திரையின் போது ஞானதேவர், நாமதேவர், போன்ற மகான்களைக் கண்டு மகிழ்ந்து உரையாடினார். அப்போது ஜானாபாய் பற்றி கேள்வியுற்றார். விட்டலனிடத்தில் அவருக்கிருந்த பக்தியை யாவரும் மெச்சினர். எழுத்தறிவில்லா அப்பெண்மணியின் பக்தி ரஸம் சொட்டும் அபங்க் பாடல்களை சிலர் பாடிக்காட்டினர்.
கபீருடைய ஆர்வம் மிக அதிகமாயிற்று. அவர் இருக்கும் கிராமத்தை விசாரித்துக் கொண்டு சென்றார். அக்கிராமத்தை நெருங்கும் போது வயலில் இரு பெண்மணிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஜானாபாயைப் பற்றி விசாரித்தார். ஒருவள் ”நான் தான் அது, சற்று பொறுங்கள்” என்று சொல்லி தன் சண்டையைத் தொடர்ந்தாள்.
கபீர் எதிர்பார்த்து வந்ததோ ஒரு அமைதியே வடிவான இறைவன் நாமத்தில் ஆழ்ந்திருந்த ஒரு பெண்மணி. இவளோ வெய்யிலில் ஒரு கையில் சாணத்துடன் இங்கிதமில்லாத முறையில் நடந்து கொள்கிறாளே என்று நினைத்தார். [நாம் தேடிவந்த ஜானாபாய் வேறொருவராக இருக்குமோ என்றும் நினைத்தாரோ என்னவோ].
சண்டையின் சாரம், அங்கு காய்ந்து கொண்டிருந்த சாண வரட்டிகள் யார் யாருடையது என்பதே. வாக்குவாதம் முற்றிய நிலையில் கபீரை பஞ்சாயத்து செய்யச் சொல்லி அவள் முறையிட்டாள்
“ ஐயா, இவள் நான் காயப் போட்டிருந்த வரட்டிகளின் மேல் தன் வீட்டு சாணத்தைப் பூசி தன்னுடையது என்கிறாள் இது அடுக்குமா ?”
கபீர் எதிர் கேள்வி போட்டார் “ எப்படி உன்னதென்று சொல்ல முடியும் ? ”
உடனே கீழே குனிந்து ஒரு வரட்டியை உடைத்து அவரிடத்தில் கொடுத்தாள் “ காதிலே வச்சுப் பாத்து நீங்களே சொல்லுங்க “
காதருகில் கொண்டு சென்றதுமே caller tune போல அதிலிருந்து விட்டலா விட்டலா விட்டலா என்ற செபமந்திரம் கேட்டது. பின்னர் அவள் கொடுத்த வேறொரு துண்டை வைத்துப் பார்த்ததில் ஏதும் கேட்கவில்லை. கபீருக்கு ஜானாபாய் சண்டையின் நியாயம் மட்டுமல்ல அவளுடைய அளவிறந்த பக்தியும் புரிந்தது.
ஒருகணமும் விட்டலனின் நாம செபத்தை மறவாத அவளுடைய மனஒருமை அவள் உழைப்பில் உருவான அந்த வரட்டிகள் ஒவ்வொன்றிலும் ஒலித்தது.
பிறப்பால் மிகவும் தாழ்ந்த குலம், ஆனால் பக்தியில் இமயத்து சிகரம். அவளை வணங்கினார் கபீர்.
कबीर कुल सोई भला, जा कुल उपजै दास ।
जा कुल दास न ऊपजै, सो कुल आक पलास ॥
அடியவர் பிறக்கும் குடியே, கபீரா, என்றும் மேற்குடி
அடியவ ரில்லாக் குடியோ, குடியல்ல எருக்கஞ்செடி
(அர்கா அல்லது ஆக் -Calotropis gigantea -என்பது தமிழில் எருக்கம் ஆகும்)
குலத்தால், இறைவன் நம் பக்தியை எடைபோடுவதில்லை. நம் அரசாங்கங்களைப்போல் இட ஒதுக்கீடு எதுவும் அவன் செய்வதில்லை. கலப்படமில்லாப் பக்தியை காணும் போது அவனே சிக்கிக் கொள்கிறான். ஜானாபாயிடம் அவன் பட்டப் பாட்டை அவளுடைய பாடலிலேயே பாருங்கள்.
பண்டரிபுரக் கள்வனைப் பிடித்தேன்
நான், கழுத்தில் ஒரு வடத்தைப் போட்டு
பண்டரிபுரக் கள்வனைப் பிடித்தேன்
சிறைக்கூடமாக்கி என் நெஞ்சை -அதில்
அடைத்து விட்டேன் அவனை
உள்ளே அடைத்துவிட்டேன் - (பண்டரிபுர)
ஒரு மந்திரத்தால் கட்டினேன்
அவன் திவ்யக் கால்களில் விலங்கிட்டேன்
நான் விலங்கிட்டேன்; (பண்டரிபுர)
ஸோஹம் என்கிற சவுக்கால்
அடித்தேன், அடித்தேன் -விட்டலன்
போதும் போதும் என்று கெஞ்சும் வரை.
மன்னித்து விடு என்னை மன்னித்து விடு
விட்டலா மன்னித்துவிடு
ஜானியின் உயிருள்ள வரை முடியாது
உன்னை விட முடியாது
குருபக்திக்கும் ஜானாபாய் சிறந்ததொரு எடுத்துக் காட்டாய் விளங்கினார். அவருடைய பாடல்களில் நாமயாசி தாஸி (நாமதேவின் அடிமை) என்கிற முத்திரையைக் காணலாம். பண்டரிபுரத்தில் பிறப்பதும் நாமதேவருக்கு சேவை செய்வதுமே அவளுக்கு எல்லாப் பிறவியிலும் வேண்டியிருந்தது.
எத்தனைப் பிறவி வருகினும் - விட்டலா
எனக்கு இரண்டு வரம் மட்டும் கொடுத்து விடு
பண்டரிபுரத்தில் பிறக்கவேண்டும்-நான்
பிறந்து நாமதேவன் பணி செய்யவேண்டும்
பன்றியோ பறவையோ பூனையோ நாயோ
எப்பிறவி வாய்க்கினும் பண்டரியில்
நாமதேவன் பணி செய்து கிடக்க வேண்டும்.
நாமதேவன் அடிமை நான் கேட்பதற்கு வேறில்லை
இவ்விரண்டு வரம் மட்டும் கொடுத்து விடு -விட்டலா
ஜானாபாய்க்கு வயதாகி தள்ளாமையில் வருந்தும் போது பாண்டுரங்கனே பணிப்பெண் வடிவில் வந்து அவள் தேவைகளை கவனித்துக் கொண்டான் என்பர். அதை அவள் ஒரு பாடல் மூலம் வெளிப்படுத்துகிறாள்.
போதும் போதும்; இந்த சம்சாரம்
உன் கடனை நான் தீர்ப்பதும் எப்படி ?
அரியவன் நீ, ஏன் என்னோடு
அரைத்தும் இடித்தும் உழைக்கிறாய் ?
ஓ பிரபு
பெண்ணாய் வந்து என்
அழுக்காடையும் துவைக்கிறாய்
நீர் மொண்டு வருவதிலும்
சாணத்தை உன்னிரு கைகளில்
அள்ளுவதிலும் பெருமிதம்தான் என்ன ?
விட்டலா !
உன் தாள்களில் இடம் கொடு
நாமதேவனின் தாசி
ஜானி யின் முறையிது
நிஜமாகவே பாண்டுரங்கன் வந்து பணிவிடை செய்தானா அல்லது பணிவிடை செய்த பெண்மணியில் பாண்டுரங்கனைக் கண்டாளா என்பது என் போன்ற மூர்க்கர் செய்யும் ஆராய்ச்சி. ஆனால் அவனுடைய நினைவில் உடல் உணர்வே மறந்து விட்டேன் என்பது தான் உண்மை என்கிற பொருளில் ஜானாபாயின் பாடலை ஒன்றைஆஷா போன்ஸ்லே குரலில் கேட்டும் கண்டும் அனுபவியுங்கள். ( Thanks to Youtube friend)
எந்தக் குழந்தையும் தன்னுடைய பிடியிலிருந்து போய்விடகூடாது என்பதற்காக இறைவன் தன் தூதுவர்களை எல்லா வகை மக்களிடையேயும் பிறக்க வைக்கிறான். சிலர் சங்கரர் போல பண்டிதராய் வந்து வழிகாட்டலாம். சிலர் மீராவைப் போல அரச குடும்பங்களில் பிறந்திருக்கலாம். வேறு சிலர் கபீர் போலவும் ஜானாபாய் போலவும் எழுத்தறிவில்லாதவர்களாய் வந்து அவனது நாடகத்தை நடத்திக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தாஸர்கள் சேரும் சத்சங்கம் ஒன்றுதான். ஆகவே இறைவன் நாமத்தை செபிக்கும் யாவரும் உயர்குலம் என்று கபீர் சொல்கிறார்.
கடவுளுடைய நாம செபத்தை விடாது செய்பவர்கள் தங்கள் சமூகத்திற்காக வேறெதுவும் செய்ய வேண்டாம். அவர்கள் மக்களிடையே வாழ்வதே பல தீய சக்திகளை விரட்டி விடும். மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை உருவாக்கும். அவர்கள் மூலம் இறைவன் காலர்-ட்யூனாகவோ ரிங்டோனாகவோ நம்முடன் தொடர்பு அறுந்து போகாமல் பார்த்துக் கொள்கிறான்.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கங்காதரன் வாழ்க்கையையும் படித்துப் பாருங்கள். கபீரின் கூற்று எவ்வளவு உண்மை என்பது புலனாகும்.
-----------------------------------------------------------
ஒரு குறிப்பு : நாமதேவர் மற்றும் ஞானதேவர் கபீரை காசியில் சந்தித்ததாகவும் சொல்லப்படும் செவி வழி கதைகள் உண்டு. ஆனால் இவர்கள் வாழ்ந்த காலம் சரித்திர ஆசிரியர்கள் படி வெகுவாகவே வேறு படுகிறது. ஆரம்பத்தில் சொல்லப் பட்ட நிகழ்வில் வந்தவர் கபீராக இருக்கமுடியாது என்று கருதுவோர் அவரை வேறொரு மகான் என்று வைத்துக் கொள்ளவும். இந்த நிகழ்வு பல வலைப்பக்கங்களில் காணக்கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வலைப்பக்கம் இங்கே தெலுகு பக்தி டாட்காம்

ஜானாபாயின் பாடல்கள் மஹாராஷ்ட்ர கிராமத்து மக்களிடையே மிகவும் பிரபலம். நெல்குத்தும் போதும் மாவரைக்கும் போதும் அலுப்பு இன்றி வேலை செய்ய அவளது பாடல்களை பாடிக் கொண்டே செய்வார்களாம். அதற்குக் காரணம் அப்பாடல்கள் பிறந்த சூழ்நிலையே ஜானாபாய் அந்த வேலைகளை செய்யும் போதுதான். அதனால் இயற்கையாக அவை அந்த சூழ்நிலையிலேயே தழைத்து மக்களிடையே பிரபலமாயின.
குருபக்திக்கும் ஜானாபாய் சிறந்ததொரு எடுத்துக் காட்டாய் விளங்கினார். அவருடைய பாடல்களில் நாமயாசி தாஸி (நாமதேவின் அடிமை) என்கிற முத்திரையைக் காணலாம். பண்டரிபுரத்தில் பிறப்பதும் நாமதேவருக்கு சேவை செய்வதுமே அவளுக்கு எல்லாப் பிறவியிலும் வேண்டியிருந்தது.
எத்தனைப் பிறவி வருகினும் - விட்டலா
எனக்கு இரண்டு வரம் மட்டும் கொடுத்து விடு
பண்டரிபுரத்தில் பிறக்கவேண்டும்-நான்
பிறந்து நாமதேவன் பணி செய்யவேண்டும்
பன்றியோ பறவையோ பூனையோ நாயோ
எப்பிறவி வாய்க்கினும் பண்டரியில்
நாமதேவன் பணி செய்து கிடக்க வேண்டும்.
நாமதேவன் அடிமை நான் கேட்பதற்கு வேறில்லை
இவ்விரண்டு வரம் மட்டும் கொடுத்து விடு -விட்டலா
ஜானாபாய்க்கு வயதாகி தள்ளாமையில் வருந்தும் போது பாண்டுரங்கனே பணிப்பெண் வடிவில் வந்து அவள் தேவைகளை கவனித்துக் கொண்டான் என்பர். அதை அவள் ஒரு பாடல் மூலம் வெளிப்படுத்துகிறாள்.
போதும் போதும்; இந்த சம்சாரம்
உன் கடனை நான் தீர்ப்பதும் எப்படி ?
அரியவன் நீ, ஏன் என்னோடு
அரைத்தும் இடித்தும் உழைக்கிறாய் ?
ஓ பிரபு
பெண்ணாய் வந்து என்
அழுக்காடையும் துவைக்கிறாய்
நீர் மொண்டு வருவதிலும்
சாணத்தை உன்னிரு கைகளில்
அள்ளுவதிலும் பெருமிதம்தான் என்ன ?
விட்டலா !
உன் தாள்களில் இடம் கொடு
நாமதேவனின் தாசி
ஜானி யின் முறையிது
நிஜமாகவே பாண்டுரங்கன் வந்து பணிவிடை செய்தானா அல்லது பணிவிடை செய்த பெண்மணியில் பாண்டுரங்கனைக் கண்டாளா என்பது என் போன்ற மூர்க்கர் செய்யும் ஆராய்ச்சி. ஆனால் அவனுடைய நினைவில் உடல் உணர்வே மறந்து விட்டேன் என்பது தான் உண்மை என்கிற பொருளில் ஜானாபாயின் பாடலை ஒன்றைஆஷா போன்ஸ்லே குரலில் கேட்டும் கண்டும் அனுபவியுங்கள். ( Thanks to Youtube friend)
அந்த வகை பக்தியில்லாத இந்த பிறவி எந்த குலத்தில் பிறந்திருந்தால்தான் என்ன ? எருக்கஞ்செடி போல் பிறந்து மடியும் வகையில் தானே போகிறது.
எந்தக் குழந்தையும் தன்னுடைய பிடியிலிருந்து போய்விடகூடாது என்பதற்காக இறைவன் தன் தூதுவர்களை எல்லா வகை மக்களிடையேயும் பிறக்க வைக்கிறான். சிலர் சங்கரர் போல பண்டிதராய் வந்து வழிகாட்டலாம். சிலர் மீராவைப் போல அரச குடும்பங்களில் பிறந்திருக்கலாம். வேறு சிலர் கபீர் போலவும் ஜானாபாய் போலவும் எழுத்தறிவில்லாதவர்களாய் வந்து அவனது நாடகத்தை நடத்திக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தாஸர்கள் சேரும் சத்சங்கம் ஒன்றுதான். ஆகவே இறைவன் நாமத்தை செபிக்கும் யாவரும் உயர்குலம் என்று கபீர் சொல்கிறார்.
கடவுளுடைய நாம செபத்தை விடாது செய்பவர்கள் தங்கள் சமூகத்திற்காக வேறெதுவும் செய்ய வேண்டாம். அவர்கள் மக்களிடையே வாழ்வதே பல தீய சக்திகளை விரட்டி விடும். மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை உருவாக்கும். அவர்கள் மூலம் இறைவன் காலர்-ட்யூனாகவோ ரிங்டோனாகவோ நம்முடன் தொடர்பு அறுந்து போகாமல் பார்த்துக் கொள்கிறான்.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கங்காதரன் வாழ்க்கையையும் படித்துப் பாருங்கள். கபீரின் கூற்று எவ்வளவு உண்மை என்பது புலனாகும்.
-----------------------------------------------------------
ஒரு குறிப்பு : நாமதேவர் மற்றும் ஞானதேவர் கபீரை காசியில் சந்தித்ததாகவும் சொல்லப்படும் செவி வழி கதைகள் உண்டு. ஆனால் இவர்கள் வாழ்ந்த காலம் சரித்திர ஆசிரியர்கள் படி வெகுவாகவே வேறு படுகிறது. ஆரம்பத்தில் சொல்லப் பட்ட நிகழ்வில் வந்தவர் கபீராக இருக்கமுடியாது என்று கருதுவோர் அவரை வேறொரு மகான் என்று வைத்துக் கொள்ளவும். இந்த நிகழ்வு பல வலைப்பக்கங்களில் காணக்கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வலைப்பக்கம் இங்கே தெலுகு பக்தி டாட்காம்
Subscribe to:
Posts (Atom)