Saturday, July 12, 2014

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள  இன்றைய பலப் பிரச்சனைகள் தலையெடுக்காமலே போயிருக்கும். இதை புரிந்து கொள்வதற்குத் தான் எத்தனை விதமான மனத்தடைகள். எப்பொழுதெல்லாம் சுயநலம் குறுக்கே வருகிறதோ அப்போதெல்லாம் உள்ளத்தில் மாசு ஏறி தூசி படிந்த இரும்பு போல அன்பெனும் காந்தத்தினால் ஈர்க்கப்படும் தன்மையை இழந்து நிற்கிறது. ஆனாலும் இறைவன் அருள் இருந்தால் நம் பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று நம்பி கோயில் குளம் என்று பல தீர்த்தங்களுக்கு போய் வருகிறோம். இன்னும் சிலர் பலவிதமான யோக முறைகளைக் கற்று மன இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள முயல்கிறார்கள். இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக மனித வர்க்கத்தை பீடித்திருக்கும் நோய்.

மகான்களுக்கும் சித்தர்களுக்கும் இது நகைப்பிற்கான காரியம் என்று தோன்றுகிறது. திருமூலர் வரிகளில் காண வேண்டுமானால்

இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டோ அறியில்?
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனைப் புறம்பு என்று அரற்றுகின்றாரே !
( அவன் -இறைவன்; இவன் -சீவன்)  -2650

சிவவாக்கியரோ நமது முட்டாள்தனத்தைப் பார்த்து அடா புடா என்று திட்டித் தீர்க்கிறார் .

கோயிலாவது ஏதடா, குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
 (குலாமர் -அடிமைகள், பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்கள்)

இவர்களைப் போலவே கபீர்தாஸரும் தீர்த்தங்களை நாடித் திரிவோர்க்கு ஒரு உபதேசம் செய்கிறார்.

भावै जाओ बादरी, भावै जावहु गया ।
कहै कबीर सुनो भाई साधो, सब ते बडी दया ॥
பதரிக்குத்தான் போவீரோ அன்றி கயைக்குத்தான் போவீரோ
எதற்கு சோதரா! கபீருரைக் கேள், தயைக்கு மேல் ஒன்று உண்டோ?

பதரிநாத் கேதார்நாத் கயை காசி போன்ற புண்ணியத்தலங்களில் கடவுளை தேடி வழிபடுவதை விட நம் உள்ளத்துள்ளே தயை என்கிற ஒரு குணம் குடிகொண்டுவிட்டால் போதும். அப்போது இறைவனே அங்கு குடி வந்து விடுவான் என்கிறார் கபீர்.

மனதில் சிலருடைய கஷ்டங்களைப் பார்க்கும் போது இரக்கம் தோன்றலாம். அவர்களுக்கு உதவிட முன்வரலாம்.  அது தயை ஆகுமா? அதில் நான் உதவுகிறேன் என்கிற எண்ணம் கலந்து விட்டால் அது வெறும் இரக்கம் என்ற அளவில் நின்று போகிறது. சமீபத்தில் நண்பர் ஒருவர் தமது பால்ய சினேகிதனுக்கு அறுவை சிகிச்சைக்காக (சற்று  பெரிய அளவில்) பொருளுதவி செய்தார். அது அவருக்கு மிக்க மகிழ்ச்சியளித்ததாகவும் சொல்லினார். அவருடைய நிலைமையில் நம்மை வைத்துக் கொண்டால் நமது  பால்ய சினேகிதன் அல்லது நெருங்கிய உறவு அல்லாத ஒருவருக்கு இதே போன்று உதவி செய்ய முன் வருவோமா? உடனே நமது மனது “ அப்படி ஆரம்பிச்சா அவ்வளவுதான்! எவ்வளவு பேருக்கு செய்ய முடியும்? பொழுது விடிஞ்சு பொழுது போனா யாருக்காவது ஆபரேஷன், பணத்தேவை இருந்து கொண்டே தான் இருக்கும் அதுக்காக எல்லோருக்கும் செய்ய முடியுமா? அவங்கவங்க தலையெழுத்துப்படி நடக்கும்’  என்று ஒரு சமாதானத்தை எழுப்பி அந்த இரக்கம் என்கிற உணர்வை தலையெடுக்க விடாமல் செய்து விடும்.  

இந்த தயை என்ற குணத்தை கண்டு கொள்வதெப்படி? எப்போதெல்லாம் நம் உணர்வுகள் பிறர் உணர்வுகளோடு ஒத்த உணர்வுடன் செயல் படுகிறதோ அப்போது அதை தயை

என்று கூறலாம். இரமணர் ஒரு முறை “ யாரோ என் கையை வெட்டறாப் போல இருக்கே” என்று சொன்னாராம். அப்போது தோட்டத்தில் எங்கோ ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனாராம். அந்த ஒத்த உணர்வு சகல சீவன்களையும் உள்ளடக்கியது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று இராமலிங்கர் வாடியது போல அது . இறைவன் படைப்பில் எல்லா நிலைகளிலும் விரவி நிற்பது.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சித்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ

என்று மனிதருள்ளே இறைவன் குடி கொண்டிருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறார். ஒத்துணர்வு உடைய உள்ளங்களே இறைவனின் கோவில்.

தயை என்கிற உணர்வின் முழுப்பரிமாணம் அறிய வேண்டுமானால் மகாபாரதத்தில் திரௌபதியின் பாத்திரத்தின் மூலம் அறியலாம். தர்மத்திற்குப் புறம்பாக நடு நிசியில் அவளுடைய ஐந்து புத்திரர்களையும் வஞ்சகமாகக் கொன்ற அசுவத்தாமனை தேடிப் பிடித்து வந்து அவளது காலடியில் தள்ளி அவள் கண்முன்னேயே பழி தீர்க்க முயல்கிறான் பீமன். துச்சாதனின் இரத்தத்திற்காக பதிமூன்று ஆண்டுகள் காத்திருந்தவள் திரௌபதி. அவளே இப்போது பழிவாங்கும் மன நிலையில் இருக்கவில்லை. அவளுடைய துக்கம் அளவு கடந்து பொங்கி வருத்தினாலும் அசுவாத்தமனை கண்ட மாத்திரத்தில் அவளுக்கு அவனுடைய தாயார் கிருபியின் நினைவு  வருகிறது. “வேண்டாம் அவனை கொல்லாதீர்கள். நான் அனுபவிக்கின்ற துன்பத்தை அவனுடைய தாயாருக்குக்கும் தர என் மனம் ஒப்பவில்லை. அவளும் என் போல தன் மகனை இழந்து வாழ்நாளெல்லாம் வாடுவது முறையாகாது. மேலும் உங்களுக்கெல்லாம் குருவான துரோணாச்சாரியரின் மகன். அதனால் அவனை மன்னித்து விட்டு விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதுவே ஒத்துணர்வுக்கு சிறந்த உதாரணம் ஆகும்.

Compassion என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த தயை உள்ளம் பழி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. இறைவன் அதனாலேயே குடி கொள்ள விழைகிறான். The heart full of compassion is the temple of God என்பார் ஸ்ரீ சத்ய சாயி.

         [ படத்தில் எழுதியுள்ளதைப் படிக்க படத்தை சுட்டவும்.] 
இந்த தயை என்கிற அடித்தளம் அமைந்து விட்டால் பின்னர் ஆன்மீக வளர்ச்சி என்பது மிக எளிதாகிறது என்பதையும் கபீர் வலியுறுத்துகிறார்.
दया का लच्छन भक्ति है, भक्ति से होवै ध्यान ।
ध्यान से मिल्ता ञान है, यह सिद्धान्त उरान ॥
தயையின் இலட்சணம் பக்தி, பக்தியால் வருமே தியானம்
தியானம் கூட்டுமே ஞானம், சித்தாந்தம் இதுவே பிரமாணம்

இன்று குரு பூர்ணிமை. இந்நன்னாளில் மகான்களின் வாக்கை நினைவு கூர்ந்தால் நன்மை பயக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை எழுதியுள்ளேன். தயை உணர்ச்சி பெருகி எதிர்மறை எண்ணங்கள் அகற்றி இறைவனுடைய கோவிலாக மாற்ற இராமலிங்கர், திருமூலர், கபீர், சிவவாக்கியர், சாயி போன்ற குருமார்களின் அருளை வேண்டுவோம்.