Thursday, June 01, 2017

ஆனையை விழுங்கிய ஆடு


   வட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு  முன்  இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். பாமினி சுல்தான்கள் அரசாட்சியில் பல பகுதிகளும் இருந்ததால் கணிசமான இசுலாமிய ஜனத்தொகையும் காணப்பட்டது. அங்கே கோவிந்தபட்டர் என்ற ஞானி எதற்கும் கவலைப்படாதவராய் ஜாதி பேதம் பார்க்காது அழைத்தவர் இல்லங்களுக்கெல்லாம் சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று தன்மனம் போன போக்கில் திரிந்து வந்தார்.



 ஒருமுறை கோவிந்த பட்டர் சில அந்தணர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியே தந்தையுடன் சென்று கொண்டிருந்த சிறுவன் ஷெரீஃபாவை அழைத்து “உன்னுடைய தந்தை யார்?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் எல்லோருக்கும் நகைப்பு. சிறிய ஊர். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். குறிப்பாக ஷெரீஃபை எல்லோரும் அறிவர். இமாம் தவமிருந்து வெகு காலத்திற்கு பின் பிறந்த மகன். ஆனால் ஷெரீஃபாவின் பதில் அவர்கள் எதிர்பாராதது.

 “இதென்ன கேள்வி ? உமது தந்தைதான் எமது தந்தையும்” என்றான். “சபாஷ்ஷெரீஃபா! மண் நன்றாக உள்ளது விதை கண்டிப்பாக நன்கு முளைக்கும். “ஓ ! இமாம். இவனை என் பொறுப்பில் விட்டு விடு. இனி இவன் என் மகன்” என்றார் கோவிந்த பட்டர்.

 இசுலாமியர்கள் பார்வையில் காஃபிர் எனக் கருதப்படும் ஒரு ஹிந்துவுக்கும், மிலேச்சர்கள் என ஹிந்துக்களால் கருதப்படும் ஒரு இசுலாமியருக்கும் இடையே ஒரு பலமான குரு சிஷ்யர் உறவு ஏற்பட்டு இன்றும் பேசப்படுகிறது.

இது கபீர்தாஸ் அவர்களின் பார்வையில் வெகு இயற்கையான ஒன்று. குருவானவர் சிஷ்யனின் மனப்பக்குவத்தை பார்க்கிறாரேயன்றி அவன் பிறந்த ஜாதியையோ குலத்தையோ அல்ல. அதை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக கூறுகிறார் பாருங்கள்.

निगुरा ब्राह्मण नहिं भला, गुरुमुख भला चमार ।
देवतन से कुत्ता भला ,नित उठि  भूँके  द्वार ॥

குருவில்லா பார்ப்பனனால் பயனில்லை, குருவறிந்த செம்மா னாலுண்டு கருங்கல் சிலையினும் நாய்மேலாம், குரைத்திடும் வாசலின் முன்னின்று

செம்மான் என்றால் செருப்பு தைக்கும் சக்கிலியன். பிறவியில் உயர்ந்த அந்தணரை விட, தெய்வ வேட்கை மிகுந்த சக்கிலியனே குருவின் பார்வையில் உயர்ந்தவன். அடுத்த வரியில் எப்படி நம் செயல்கள் ஜீவனுள்ளவைகளாக பிறருக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதை பேசாத தெய்வ சிலையை காட்டிலும் காவலுக்கு நிற்கும் நாய் மேலாகும் என்று இடித்துரைக்கிறார்.

நம்பிக்கையின்றி ஏதோ வாழ்க்கையை ஓட்ட, ஒரு பிழைப்புக்காக, அறியாமையில் செய்யப்படும் விக்கிரக ஆராதனையால் பிரயோசனம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு நாய்க்கு அன்னமிட்டால் அது வீட்டையாவது காவல் காக்குமே என்கிற உண்மையை எடுத்துரைக்கிறார் கபீர்.

இது தீவிர பக்தியால் சகுண உபாசனையால் கல்லிலே காளியைக் கண்ட பரமஹம்ஸர் போன்ற பக்தர்களுக்கு இது பொருந்தாது.

யாரிந்த ஷெரீஃப் ?

அவரை சிஷுநாள ஷெரீஃப் என்று கர்நாடகத்தில் போற்றுகிறார்கள். 1819 ல் சிஷுநாளஹால என்னும் சிறிய கிராமத்தில் இமாம் சாஹேப்க்கு மகனாகப் பிறந்தார். அந்த ஊரில் ஹஜ்ரேஷா க்வாத்ரி என்ற இசுலாமியப் பெரியவர் இருந்தார். இவருக்கு இரண்டு மதங்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அவரே பலருக்கும் லிங்காதயர்கள் பாணியில் லிங்க தீக்ஷை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம் பக்தி கொண்டவர் ஷெரீஃபின் தந்தை இமாம். அவரும் குருவழி பின்பற்றி இருமதங்களுக்கும் பேதம் பாராட்டாது தன் மகன் ஷெரீஃப் க்கு ராமாயணம் மகாபாரதம், அல்லமப் பிரபு சரித்திரம் போன்றவற்றை சொல்லிக் கொடுத்தார்.

கோவிந்தபட்டரின் வழிகாட்டுதல் எப்போதும் அவருக்கு இருந்தது.

ஷெரீஃப் சிறிது காலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு திருமணம் செய்விக்க பெற்றவர்கள் முயற்சித்த போது குருவின் ஆலோசனை வேண்டினார். “மழை வருவதால் காற்றும் வானமும் நனைந்து போகுமா என்ன?” என்று இல்லறத்திற்கு அனுமதியளித்தார் கோவிந்தபட்டர். அவருக்கு ஒரு மகளும் பிறந்து சிறிது காலத்திற்குப் பின் மனைவியும் மகளும் காலனடி சேர்ந்தனர்.
அதன் பின் அவர் தன்னை முழுவதுமாக இறைத் தொண்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டு விட்டார். அவரை, லிங்காயதரின் சிவ தத்துவங்கள், நிலையாமை இவை வெகுவாக ஈர்த்தது.

அவருடைய தத்துவப் பாடல்கள் கிராம மக்களின் பேச்சுவழக்கில் அமைந்ததால் யாவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அவர் கன்னட மொழியின் முதல் இசுலாமியக் கவி. அவர் உருது மொழியிலும் சில பாடல்களை பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. மக்களின் பேச்சு வழக்கிலேயே உயர்ந்த தத்துவங்களை சொன்னதால் அவரை கர்நாடக கபீர் என்று போற்றுகின்றனர்.
ஆவுடையக்காள், ஜனாபாய் பாடல்கள் போலவே இவரது தத்துவமும் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை பின்னி பிணைத்து மறக்க முடியாதவையாகி விட்டன. அவருடைய ”கோடகன கோழி நுங்கித்தோ” என்னும் பிரபலமான பாடலை என் வழியில் மொழிபெயர்க்க முயற்சித்திருக்கிறேன்.


                                (படத்தை சொடுக்கி முழு பாடலையும் படித்துக் கொள்ளவும்)



கன்னட மொழியில் ‘நுங்கு’ என்றால் முழுங்கு என்று பொருள். ஷெரீஃப் இந்த பாடலில் அதை, இழப்பது, நிலையானது, வெற்றி பெறுவது, என பல பொருள்களில்- பயன்படுத்துகிறார்

கோடகன் என்றால் குரங்கு. இது மனிதனுடைய சஞ்சல புத்தியை குறிப்பதாகும். தீவிர சாதனையில் ஈடுபட்டவரைப் பற்றி ராமகிருஷ்ணர், அடைக்காக்கும் கோழி பாதி கண்களை மூடிய கிறக்கத்தில் நாளெல்லாம் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பதை ஒப்பிடுவதுண்டு. இதை புத்தரின் தியான மார்க்கத்திலும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். சஞ்சலபுத்தியுடைய ‘குரங்கு’ மனது, அடைக்காக்கும் கோழியைப் போல நிலைபெற்றுவிட்டால் அது கோழி குரங்கை விழுங்கியதாகத்தானே பொருள் !

யானை தற்பெருமையையும் கர்வத்தையும் குறிக்க வந்தது.ஆடு எளிமையையும் தன்னடக்கத்தையும் குறிப்பது. குருஅருள் வேண்டுபவனுக்கு தன்னடக்கம் வேண்டும். அங்கே தற்பெருமைக்கு இடமில்லை. அதனால் குரு அருளைப் பெற்ற ஷெரீஃப்க்கு ஆடு யானையை விழுங்கியதாகிறது.
வீட்டிற்கு பூசப்படும் சுண்ணாம்பு நிலையற்றது. பார்க்க அழகாக இருக்கும் வர்ணப்பூச்சை, கட்டிடத்தை விலை பேச வரும் யாரும் பொருட்படுத்துவதில்லை. அதனுடைய சுவர் எவ்வளவு உறுதியானது என்பதையே பார்க்கின்றனர். மழையையும் வெயிலும் தாங்குவது சுவரே. குருவும் அது போல் சீடனின் மனஉறுதியை பார்க்கிறாரே அல்லாது அவனுடைய செல்வத்தையோ, அறிவுத் திறமையையோ பார்த்து மெச்சுவதில்லை. இதனால் சுவர் சுண்ணாம்பை விழுங்கியதாகிறது.

மூன்றாவதாய் வரும் நாட்டியக்காரியின் உதாரணத்தில் அவள் தன்னை மறந்து தாளக்கதிக்கு ஏற்றவாறு நாட்டியம் ஆடும் போது அவள் நினைவெல்லாம் அந்த லயகதியிலே உள்ளது போல் இறைவனின் நாமத்தில் நம்மை நாமே இழக்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.மறைந்த ஸ்ரீமதி சுப்புலக்ஷ்மி அவர்கள் ஒருமுறை “பாட ஆரம்பிக்கும் வரைதான் தயக்கம். ஆரம்பித்த பின் என்னை மறந்து விடுவேன்” என்று சொல்லியதாக நினைவு. சிறந்த நடிகர்கள் கதாபாத்திரத்தினோடு ஒன்றி சுயத்தை இழப்பது போல கடவுளின் நினைவு பரமஹம்ஸர், சைதன்யர் போன்ற பக்தர்களை விழுங்கி விடுகிறது.

அடுத்து, ஷெரீஃப், உரல் ஆட்டுக்கல் போன்றவற்றை வைத்து உதாரணங்கள் தருகிறார்

உலக்கையும் குழவியும் சலனத்தை குறிக்கின்றன. திரை நிலையானது அதன் மேல் விழும் பிம்பங்கள் சலனமுடையவை. காட்சியின் முடிவில் திரை மட்டுமே எஞ்சுகிறது.  சலமும் அசலமும் சேர்வதாலே எதுவும் முழுமை பெறும். உலக்கை மற்றும் குழவி இயக்கத்திற்கு அவற்றை தாங்கும் உரலும் கல்லுமே முழுமை கொடுப்பதால் உரலும் கல்லும் அவைகளை விழுங்கியதாக சொல்கிறார்.
அரைக்கப்பட்ட மாவு பிட்டாகவோ பணியாரமாகவோ மாற்றப்பட்டு உணவாகிறது. மனிதரை ஒவ்வொரு கணமும் மரணம் விழுங்கிக் கொண்டிருக்கிறது. பயணத்திற்கு தேவையான எரிபொருளை வாகனம் விழுங்க விழுங்க தூரம் குறுகி இலக்கை எட்டுகிறோம். எரிபொருள் தூரத்தை விழுங்குகிறது. உடலென்னும் இவ்வாகனமும் ஆகாரத்தை விழுங்கி நாட்களை கழிக்கிறது. அது காலன் நமக்களித்த எரிபொருள். அது விழுங்கும் நாட்களை நாம் முறையாக பயன்படுத்தி ஆன்மீகத்தில் முன்னேறி பிறவா நிலை எய்த வேண்டும். இல்லா விட்டால் தவறான பாதையில் பயணித்து எரிபொருளை தீர்த்தவன் போலாவோம். அப்போது அந்த உணவே நம்மை விழுங்குவதாகத் தானே பொருள் கொள்ள வேண்டும்.

தாயுமானவர் சொல்வது போல் சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு தூங்க வைத்தவர் ஆர் கொலோ என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது.

இதைத்தான்,அரைக்கப்பட்ட மாவு, கிழவியையே விழுங்குகிறது என்று ஷெரீஃப் சிந்திக்க வைக்கும் வகையில் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும் உழவு மாடுகள், நெசவுத் தறி என்பது போன்ற உதாரணங்களுடன் சொல்லிக் கொண்டே போய் கடைசியில் மலை போன்ற குரு கோவிந்தரின் திருவடிகள் அஞ்ஞான குகையில் சுற்றித் திரிந்த எறும்பைப் போன்ற தன்னையும் விழுங்கியது என்று முடிக்கிறார்.

அவருடைய குருபக்தி அபாரமானது. கபீர் எப்படி குருவின் அவசியத்தை போற்றுகிறாரோ அதே போல் சிஷுநாள ஷெரீஃபாவும் போற்றுகிறார். குரு பக்தி ஒன்றே போதும் சாதகனைக் கடைத்தேற்ற என்பதை எல்லா ஞானிகளும் தம் அனுபவத்தில் உணர்ந்து உபதேசிக்கின்றனர்.
அவருடைய குருபக்தியை உணர்த்தும் பாடல் இதோ:


                                  (படத்தை சொடுக்கி பெரிதுசெய்து படிக்கவும்)









6 comments:

  1. மக்களின் பேச்சு வழக்கிலேயே உயர்ந்த தத்துவங்களை சொன்னதால் அவரை கர்நாடக கபீர் என்று போற்றுகின்றனர். //
    கோவிந்தபட்டரை அறியதந்தமைக்கு நன்றி.

    கர்நாடக கபீரைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
    ந்னறி.

    ReplyDelete
  2. ”கோடகன கோழி நுங்கித்தோ” என்னும் பிரபலமான பாடலை என் வழியில் மொழிபெயர்க்க முயற்சித்திருக்கிறேன். /
    கர்நாடக கபீர் பாடிய பாடலுக்கு விரிவான விளக்கம் அருமை.

    ReplyDelete
  3. //குரு பக்தி ஒன்றே போதும் சாதகனைக் கடைத்தேற்ற என்பதை எல்லா ஞானிகளும் தம் அனுபவத்தில் உணர்ந்து உபதேசிக்கின்றனர். //

    குரு பக்திதான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு போக முடியும்.
    அருமை.

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்வரவு கோமதி மேடம்,

    ரசித்துப் படித்திருக்கிறீர்கள். பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. கர்நாடக கபீர் பற்றிய புதிய தகவல்கள் தந்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. நல்வரவு சிவகுமாரன்

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி