Saturday, September 23, 2006

அன்பே சிவம்

தம் வாழ்நாள் முழுவதும் இறை இன்பத்தில் முற்றும் மூழ்கியவராய் இருந்தார் கபீர். அவரது தோஹாக்களில் காணப்படும் எளிமை பெரிதும் திருமூலரின் திருமந்திரத்தை ஒத்துள்ளது. படிப்பறிவில்லா பாமரனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவர் சொல்லிய ஈரடி ஒன்று இதோ:

अखत कहानी प्रॆम की कुछ कही न जाय
गूंगे कॆरी सरकरा बैटे मुस्काय

அகத் கஹானி ப்ரேம் கீ குச் கஹி ந ஜாய்
கூங்கே கேரி ஸர்கரா பைடே முஸ்காய்

எப்படி சருக்கரையை தின்ற ஊமையால் அதன் சுவையை விவரிக்க இயலாதோ அதைப் போன்றே இறைவனின் சிந்தனையில் ஒன்றிவிட்டவருக்கு அதன் இன்பத்தை எடுத்து இயம்ப முடியாது என்னும் உண்மையை சுலபமான உவமை மூலம் புரிய வைத்து விட்டார் கபீர்.
ஞானிகளின் மொழிகள் எல்லாக் காலத்தும் எல்லா தேசத்தும் ஒன்றேயாகும். மேற்கண்ட உண்மையை திருமூலரும் அழகாக சொல்லுகிறார்.

உரையற்ற தொன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்ற தொன்றை கரை காணலாகுமோ
திரையற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு
புரையற் றிருந்தான் புரிசடையோனே


இறையின்பம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்னும் அனுபவத்தை அகத் கஹானி என்று கபீரும் உரையற்றதொன்று என்று திருமூலரும் சிலாகிக்கின்றனர்.

கபீர் கையாண்டிருக்கும் ஊமையின் உதாரணத்தை பத்திரகிரியாரும் கையாளுகிறார்.

ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பமதை
நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவது எக்காலம் ?

இனி கபீரின் ஈரடியை தமிழில் முயற்சிப்போம்.

அன்பெனும் பேரமுதை உரை செய்வார் யாரே
கன்னலின் தித்திப்பில் முறுவலித்தான் ஊமையே
(கன்னல்; கரும்பு)

மாற்று :

அன்பெனும் பேரமுதை உரை செய்வார் யாரே
அக்காரத் தித்திப்பில் முறுவலிப்பான் ஊமையே

(அக்காரம் :சருக்கரை, வெல்லம்)

உலகமே ஒரு சந்தை

உலகமே ஒரு சந்தை

தான் நெய்த துணிகளை சந்தையில் விற்பனை செய்தல் கபீருக்கு வாழ்க்கையின் ஓர் நிர்பந்தம். அப்படி செய்யும் பொழுது புத்திசாலியான வியாபாரி என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறார் இந்த வரிகளில்.

कबीरा खडा बजार मॆं मांगॆ सबकी खैर
न काहूं सॆ दोस्ती न काहूं सॆ वैर

கபீரா கடா பாஜார்மே மாங்கே சப் கா கெய்ர்
ந காஹ்உ சே தோஸ்தி ந காஹ்உ சே வைர்


சண்டை குணமுள்ள வியாபாரியிடம் யாரும் ஒதுங்கி செல்லுவர். அதி தோழமையுடன் பழகினாலோ அளவுக்கு அதிகமான சலுகை கோறுவர். இது இன்னொரு வகை இடையூறு. இதை கபீர் ஒரு வியாபாரி என்ற முறையில் பொருள் கொண்டால் மேற்பார்வைக்கு தெரியும் உண்மை.

இதையே அவரது உயர்ந்த ஆன்மீக நிலையை மனதில் வைத்துப் பார்த்தால் ஆழமான இன்னோர் உண்மையும் புலனாகும். இந்த உலகமே ஒரு சந்தைக் கடை. இங்கு வரும் நாம் ஒவ்வொருவரும் பெற விரும்பும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அளவிற்கு அதிகமான பாசமும் அல்லது வெறுப்புணர்ச்சியும் தான் காரணம். இதை ஒதுக்கி வாழத்தெரிந்தாலே எல்லோருக்கும் அமைதிகிட்டும் என்ற உண்மையை உணர்த்துகிறார் கபீர்.
சந்தையில் நின்றான் கபீர் சந்ததம் வாழ்த்தி இவ்வையம்
சந்ததம் நாடிலன் நட்பு, சந்ததம் விலக்குவான் வயிரம்
(வயிரம் : பகை)