Saturday, December 25, 2021

அவ்வியம் பேசி அறங்கெடுதல்

      இன்று கிருஸ்மஸ் தினம்.  2021 ஆம் ஆண்டும்  நிறைவு பெறப் போகிறது. இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக தளர்ந்து போன உலக மக்கள் சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

   ஓரளவுக்கு இந்த வைரஸ்,  மனிதருக்கு அவர்களுடைய ஆற்றல்களின் எல்லையை சுட்டிக் காட்டியுள்ளது. இயற்கையை வெல்ல வேண்டும் என்னும் போதெல்லாம் அவர்களுடைய தலையில் ஒரு குட்டு வைக்கப்படுகிறது.

மனிதனுக்கு வேண்டியது பணிவு, நன்றியுணர்ச்சி.

இதை அவன் மறக்கும் போது அவன் அழிவை நோக்கிப் பயணக்கிறான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  எப்போது தன்னம்பிக்கை அதிகமாகி ஆணவம் தலையெடுக்குமோ அப்போது இந்த நோய் ஆரம்பிக்கிறது.

இதன் முதல் அறிகுறி பிறரிடம் குறை அல்லது குற்றம் காண்பது. 

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" ஔவையாரின் முது மொழி. 

விவிலியத்தில் இதைப் பற்றிய மிக முக்கியமான எச்சரிக்கை அடிக்கடி மேற்கோள் காட்டப் பெறுகிறது.


 "பிறரை ஒரு விரலால் சுட்டும் பொழுது மூன்று விரல்கள் உன்னை சுட்டுகின்றன என்பதை நினை"

குற்றம் குறைகள் இல்லாதவர் எவரும் இருக்க முடியாது;  தன்னைத் திருத்திக் கொள்ள முயல்பவனுக்கு பிறர் குற்றங்கள் பெரிதாகத் தெரியாது என்பதே இதன் மூலம் சொல்லப்படுகிறது.

மேலும் ஜீஸஸ் சொல்லுவார்.

" ஒருவரை ஒருவர் எடை போட்டு குற்றங் காணாதீர். கடவுளின் ஆணைகளை பின்பற்றுவோர் எவரும் பிறர் குறைகளை பேசுவதில்லை. அது அந்தக் கடவுளின் ஆணையையே, கடவுளையே, குற்றம் சொல்வதாகும். எப்போது குற்றங்களை பேசுகிறீர்களோ அப்போதே அவன் ஆணையை மீறினவர்கள் ஆவீர்கள். கடவுள் ஒருவரே சட்டம் இயற்ற வல்லவர் தீர்ப்பும் சொல்லக் கூடியவ்ர். இதில் நீங்கள் யார் உடனிருப்பவர்களை குறை சொல்ல? " (மத்தேயு 7:1)

" .......நீ பிறரை குற்றம் பார்க்காவிட்டால் கடவுளும் உன் குற்றங்களை பொருட்படுத்தமாட்டார். பிறரை மன்னித்து விடு. கடவுளும் உன்னை மன்னிப்பார். பிறருக்கு  தானம் செய். உன்னுடைய அளவையிலேயே பலமடங்கை திருப்பி அவர் அளிப்பார் " ( ல்யூக் 7-37-38)

 இதே கருத்தை கபீரும் தம்முடைய ஈரடி ஒன்றில் உரைக்கிறார்.

दोस पराए देखि करि, चला हसन्‍त हसन्‍त |
अपने याद न आवई, जिनका आदि न अंत  ||

பிறன்தன் குறைகள் பேசி எள்ளி எள்ளி  நகைப்பரே | 

மறந்தும் தம் குறை நினையார், அதற்கு ஆதி யந்த மிலையே ||

இந்த உண்மையை உணர்ந்த  ஆன்மீக அருளார்கள் தம்மை எப்போதும் உயர்த்தி கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் இறைவனை முழுதும் நம்பி இருப்பவர்கள். அவனுடைய படைப்பில் குற்றம் குறைகள் இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை. ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் அந்த கடவுளின் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்னும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். 

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி  ( 308)  

என்று அருட்பிரகாச வள்ளலார் தம் தகுதி இன்மையை அருட்பெருஞ்சோதி அகவலில்  பாடுகிறார்.

அப்படி இருந்தும் அவன் ஆட்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்பதையும் நினைந்து போற்றுகிறார்.

கூற்று உதைத்து என்பால் குற்றமும் குணம் கொண்டு 

ஆற்றன் மிக்கு அளித்து அருட்பெருஞ்சோதி 

என்று இறைவனின் பெருங்கருணையை போற்றுகிறார்.

பணிவுடையவனையே  இறைவன் எப்போதும் இறைவன் விரும்புகிறான்.  அதனால் தான் மாணிக்கவாசகருக்கும் தானே ஒரு வேதியர் வடிவில் வந்து அவருக்காக திருவாசகத்தை எழுதி அருளினார். சுமார் முப்பது பாடல்களில் தன்னை நாயினும் கடையனாக பாவித்து தனக்கு அருள் செய்த சிவன் பெருமையை பாடுகிறார்.

நாயிற் கடைபட்ட நம்மையும் ஒரு பொருட்படுத்து

தாயிற் பெரிதும்  தயாவுடைய தம்பெருமான் 

மாயப்பிறப்பு அறுத்தாண்டான் என் வல்வினையின்

வாயிற் பொடி அட்டி பூவல்லிக் கொய்யாமோ -   ( திருப்பூவல்லி )

ஒருவன் தன்னுடைய நிறைகுறைகளை ஆராயத் தலைப்பட்டால் , கபீர் சொல்வது போல் முடிவில்லா குறைகளே அதிகம் காணப்படும்.  விளைநிலத்தில் தோன்றும் களைகள் போன்றவை அவை. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.

 வினைப்புலமாகிய இப்பிறவியில், களைகளை களையக் களைய மீண்டும் மீண்டும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கும், இந்த களையும் முயற்சியில் பணிவு உள்ளம் கொண்டவன் மட்டுமே ஈடுபட்டிருப்பான். அவனுக்கு பிறரது  குறைகளை பேச நேரம் ஏது?

அம்முயற்சியின் பயனாக அவன் மீது எல்லையில்லாக் கருணை கொண்டு -வள்ளல் பெருமான் சொல்வது போல் - அவனுடைய குற்றங்களையும் குணமாகவே கொண்டு இந்த மாயப் பிறப்பை அறுத்து அவனை ஆட்கொள்ள முன் வருகிறான் இறைவன்.

செய்யக்கூடாதவற்றை பட்டியலிடும் போது திருமூலர் சொல்வது அவ்வியம் பேசாதீர் என்பதே.  அவ்வியம் என்றால் பிறரது குற்றங் குறைகளை அலசுவது. அதனால் செய்கின்ற அறங்கள் போய் பாவம் வரும் என்கிறார்.

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்

வெவ்வியனாகி பிறர்பொருள் வவ்வன்மின்

செவ்வியனாகிச் சிறந்துண்ணும் போது ஒரு

தவ்விக் கொடுண்மின் தலைபட்ட போதே  - திருமந்திரம் 

பிறரைப் பற்றி புறங்கூறி பாவத்தை தேடிக் கொள்ளாதீர்கள்.

தீய குணம் கொண்டு பிறர் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்

உண்ணும் போது மற்றவர்கட்கு கொடுத்து உண்ணும் நல்ல பண்பை பேணுங்கள்

இவற்றை செய்தால் நீங்கள் நலமாக வாழ்வீர்கள். பிறருக்கு நன்மை செய்தால் இறைவன் நமக்கு நன்மை செய்கிறார்- இதுவே உலக நியதி.

அனைவருக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.


 





Saturday, July 24, 2021

சத்குருவிடம் சரணாகதி

 இன்று குரு பூர்ணிமை. (24 ஜூலை 2021)

குருவின் பெருமைகளை போற்றாத ஞானிகளே இருக்க முடியாது. கபீரின் குருபக்தியையையும்  நாம் பல கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். 

இன்றைக்கும்    ஒரு ஈரடியில்  அவர் கூறுவதைப் பார்ப்போம்.

यह तन विष की बेलरी , गुरु अमृत की खान  |

सीस दिये जो गुर मिलै, तो भी सस्ता जान     ||

இந்த உடல் ஒரு விஷப்பை. இதனுள்  மதம், மாச்சரியம், காமம், லோபம்  போன்ற  நச்சுப் பொருட்கள் நிரம்பி உள்ளன.  ஆனால் ஞானியோ  ஒரு அமிர்த சுரங்கம்.  அவர் அந்த விஷங்களையெல்லாம்  எல்லாம் நீக்கக் கூடிய மருந்து வைத்திருக்கிறார். அவர் மட்டும் அருள் செய்வாரானால் உன்னுடைய உயிரையும்  (தலையையும்) அவரிடம் ஒப்படைத்து விடு. அப்படி ஒரு குரு கிடைப்பதற்கு நீ கொடுக்கும்  அந்த விலை கூட மிக மிக மலிவே என்பதை உணர்ந்து கொள் என்கிறார், கபீர்தாஸ். 

கபீர்தாசரைப் போலவே நாமசெபத்தின்  பெருமையை  மகாராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் எடுத்துச் சொல்லி  மக்களை நல்வழி படுத்திய  பிரசித்தமான ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தவர்  ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம சைதன்யர். அவர்  கோண்டாவாலே என்ற ஊரை சேர்ந்தவராதலால் கோண்டாவாலேகர்  என்றும் அறியப்படுகிறார். 

அவரைப்பற்றி  மேலும் அறிய  இணைய தளத்தின்  இணைப்பில்  காணலாம் 

சுவாமி பிரம்ம சைதன்ய மஹராஜ் -கோண்டாவாலேகர்  (19-02-1845 ; 23-12-1913)   அவருடைய  சொற்பொழிவு ள் அடங்கிய புத்தகத்திலிருந்து  இன்றைய தேதியில்  தரப்பட்டிருக்கும்  கட்டுரையின்  தமிழாக்கம் . இதை இந்த வருடத்து குரு வாணியாகக் கொள்வோம்.

நிபந்தனையற்ற சரணாகதி

      வாழ்க்கை நடத்துவதற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் யாராவது தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் வருமானம் உள்ளது என்று சொன்னது உண்டா ?  உண்மையில் கிடையாது.  நான் கேட்பதெல்லாம் முடியாத இலட்சியத்திற்காக கஷ்டப்படுபவர்கள், கடவுளுக்காக -ஆனந்த வாரியாக திகழ்பவரை - அடைய ஏன் கஷ்டப்படக்கூடாது?

 தபஸ்விகள் சொன்ன மார்க்கத்தில்  ஒரு சரியான முயற்சி செய்து பார்.  ஒரு சத்குருவை கண்டு திடமான நம்பிக்கையுடன் அவர் சொல்லும் சாதனையை செய்.  சத்குருவை ஸ்தூல  வடிவில் சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  குருவும் கடவுளும் வேறல்ல.  அவர் சொல்லி வைத்திருக்கும் சாதனை பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்து வர வேண்டும். அது கண்டிப்பாக கடவுளிடம் இட்டுச் செல்லும். எந்த சத்குருவும்  சொல்லும் ஒரே பயிற்சி நாமஸ்மரணை ஆகும். அதை முழு மனத்துடன் விடாது பழக வேண்டும். எவர் உண்மையாக முயற்சிக்கிறாரோ அவருக்கு முன்னேற படிகள் தாமாக கைகூடும். உண்மையான சாதகன் கர்த்தா பாவனை  இல்லாமல் சத்குருவிடம் முழு சரணாகதி அடைந்து சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பான்.

இறைவனுக்காக தணியாத ஆர்வம் இருப்பது மிகப் பெரிய கொடுப்பினை. அப்பேர்ப்பட்ட உண்மையான சாதகனை காணும் சத்குரு பெரு மகிழ்ச்சி அடைவார். ஸ்ரீராமச்சந்திரர் வசிஷ்டரை அணுகியபோது அத்தகைய மகிழ்ச்சி  வசிஷ்டருக்கு ஏற்பட்டது.

எல்லா தபஸ்விகளும் தத்தம் குரு சொன்ன வழியை கடைபிடித்து தமது இஷ்ட தேவதா வடிவங்களில் சாட்சாத்காரம் அடைந்தவர்களே. அதனால் நாமும் நாமஸ்மரணையில் ஆழ்ந்து விட வேண்டும்.  தன் குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும்போது விளையாடி மகிழும் தந்தை அது அழ ஆரம்பிக்கும் போது அதன் தாயிடம் ஒப்படைக்கிறான். அவளும் பல விதமாக அதை சமாதானப்படுத்தி அதன் மனக்குறையை போக்குகிறார். தபஸ்விகள் தாயைப் போலே. கடவுளும் தந்தையைப் போல் நடந்து கொள்கிறார்.

பனிக்கட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து விடு பின் எஞ்சுவது எதுவுமில்லை. தபஸ்விகள் அன்பே வடிவானவர்கள். கடவுளின் பிரேமை வடிவே அவர்கள். அவர்களுடன் சத்சங்கம் கொள்வதே முக்திக்கான ராஜபாட்டை. அவர்கள் சொற்படி நடப்பதே சத்சங்கம் என்பதின் முழு பொருளாகும். அதன் பயன் என்னவென்றால் பக்தனின் மனது பரிசுத்தம் ஆகிவிடும்.

---------------------------------------------------------------------------------------
 இப்போது  கபீரின்  ஈரடியை தமிழில்  காண்போம் 

நச்சுப்  பையாம்  இத்தேகம் , வற்றா அமிழ்தமே  குருகாண் |
சிரம் தருவதால் குரு கிட்டின் , அவ்விலையும்  மலிவே  காண் ||

கபீர், குருவின் ஞான இருப்பை ஒரு சுரங்கத்திற்கு உவமையாக்கியிருக்கிறார் . தமிழாக்கத்தில்  அதை வற்றாத ஊற்றுக்கு ஒப்பிட்டிருக்கிறேன். 

சத்சங்கத்தை  ஒரு சாயி பஜனுடன் நிறைவு செய்வோம் . வாசகர்கள் அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்  என்று பிரார்த்திக்கிறேன்