Friday, November 15, 2019

பரோபகாரம் பரமன் வடிவம்



     ’தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்று தமிழ் மூதாட்டி உலகில் எல்லாவற்றைக் காட்டிலும்  மிகப் பெரியது தொண்டர்களின் பெருமை என்று பாடி வைத்தார்.  இறைவன் தன்னை இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வான் ஆனால் தம் தொண்டரை இகழவோ துன்புறுத்தவோ செய்தால் பொறுக்கமாட்டான் என்று அம்பரீசன் பிரகலாதன் போன்றவர்கள் கதைகள் சொல்லி புரிய வைக்கின்றனர் பௌராணிகர்கள்.

தொண்டு நெறி என்பது இறைவனை அடைய ஒரு சுலபமான பாதையாக ஞானிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள். அனைத்திலும் இலங்குபவன் இறைவன். ஆகையால் ஜீவகாருண்யமும் தந்நலமற்ற சேவையும் கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனையாகவே கருதப்படுகிறது. தொண்டு நெறியில் நின்று அடியார்களுக்கு சேவை செய்தவர்கள் ஏராளம். அடியார்களுக்கு இலவச திருவோடு வழங்கிய திருநீலகண்டர், யார் எதைக் கேட்பினும் இல்லையென்னாத இயற்பகை நாயனார், சிவனடியார்களின் ஆடைகளை சலவைசெய்து கொடுப்பதையே சேவையாக செய்த திருக்குறிப்புத் தொண்டரடிகள், பார்வையற்றவராக இருந்தும் திருக்குளத்தை சீரமைத்த தண்டியடிகள், கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதையே தொண்டாக செய்த நமிநந்தியடிகள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.