Saturday, January 27, 2007

மாயா மாயை மரியா மனம்

மாயையைப் பற்றிய பதிவு என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அருகில் கணிணியில் வேலைசெய்து கொண்டிருந்த சகபணியாளர் ஏதோ பிரச்சனை காரணமாக வேறொருவரிடம் ஒரு 'கமெண்ட்' அடித்தார்.

'கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'. அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது. ஆனால் அதுவே மாயையைப் பற்றி ஆரம்பிக்க நல்லத் தொடக்கமாகத் தோன்றியது. மேற்கண்ட பழமொழியை என் பள்ளி நண்பன் அடிக்கடி விளையாட்டாக நாய்களின் மீது கல் விட்டெறிந்து கூறக் கேட்டிருக்கிறேன். வெகு நாட்களுக்குப் பின் ராமகிருஷ்ண விஜயத்தில் அதன் விளக்கத்தைப் படித்த பிறகுதான் அது ஒரு Murphys Law அல்ல என்பது புரிந்தது.

கல்லால் ஆன ஒரு நாயைப் பார்க்கும் பொழுது கல்லைப் பற்றிய சிந்தனை மனதில் வருவதில்லை. நாயின் உருவமைப்பு கண் காது இவற்றின் தத்ரூபமான வேலப்பாடு இவற்றில் நம் கவனம் செல்கிறது.அதுவே அதை வடிவமைத்த சிற்பி அத்தகைய சிற்பம் வடிக்கத் தேவையான கல்லின் குணாதிசயங்கள், பரிமாணம் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி விளக்கிக் கூறும் பொழுது மனம் நாயை மறந்து விட்டு கல்லைப் பிடித்துக் கொள்கிறது. இதைப் புரிய வைக்கும் வகையில் எழுந்த திருமந்திரப் பாடல்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
.................................. (2289)
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைத்தது பொன்னணி பூடணம்
........................................ (2290)


மரத்தில் செதுக்கப்பட்ட யானையை ரசிக்கும் போது மரத்தின் குணாதிசயங்களைப் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதிலை. அது போல ஒரு நகையைப் போற்றும் போது அதன் வேலைப்பாடுகளைப் போற்றுவோமே அன்றி அதன் தரத்தைப் பற்றி கவனம் கொள்வதில்லை. அதுவே பொன்னின் மாற்று சற்றுக் குறைவாக இருந்தாலும் அதை உடனே நிராகரிக்கத் தயங்க மாட்டோம்.ஏனெனில் அவ்வேளை நம் கவலை பொன்னின் தரம். யாருக்கு வேண்டும் வேலைப்பாடு! ஆகையால் நாம் எடை போடும் எதுவும் நமது மனத்தளவில் எழும் உணர்சிகளே. இது தான் மாயையின் பிடி போலும். மாயையை விவரித்து பலர் பலவிதமாக கூறினாலும் உண்மையில் அதை புரிந்து கொண்டவர் எத்தனை பேர்? ஆனால் கபீரைப் போல எளிமையாக இதை விளக்கியவர் இல்லை எனலாம். கபீர் மாயையைப் பற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம்.

माया माया सब कहैं माया लखै न कॊय
जॊ मन सॆ ना ऊतरॆ, माया कहिए सॊय


மாயா மாயா ஸப் கஹை, மாயா லகை ந கோய்
ஜோ மன் ஸே நா ஊத்ரே, மாயா கஹியே ஸோய்


மாயை மாயை யென்பர், அறிவா ரில்லை மாயையை
மாயை யாவது அதுவே மனம்விட்டு அகல மறுப்பதுவே


மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது மாயை. "யா மா : ஸா மாயா" என்று வட மொழியில் விளக்கம் கூறுவர். (யா- எது; மா-மாற்றம் அடைவதோ; ஸா -அது; மாயா- மாயை).

ஆகவே தான் மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலக வாழ்க்கையையும் மாயை என்பர். மனிதனின் மனமும் நிலைக் கொள்ளாமல் ஒன்றை விட்டு ஓன்றைப் பற்றிக் கொண்டு தடுமாறுகிறது. மனதைப் பிடித்தாட்டும் புலன் வழிப்போக்கு இருக்கும் வரையில் மாயை என்பது ஒழிவதில்லை. மனம் மரிக்காத வரையில் அதன் ஆட்டம் தொடரும். இந்த ஆட்டத்தை ஒழிக்க இயலாதவர் போல் தாயுமானவர் இறைவனை இறைஞ்சுவார் " எல்லாமும் வலம் இந்த மனமாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ?"

மாயையின் இருப்பிடமே மனிதனின் மனம் தான். அதனால் தான் கபீர் அதை சுய சோதனை மூலம் கண்டு கொள்ள சுலபமான வழி உபதேசிக்கிறார். எது நம் மனதை விட்டு அகல மறுக்கிறதோ அதுவே மாயை.

அதே சுயசோதனையையே திருமூலரும் பரிந்துரைக்கிறார்.

மன மாயை மாயை, இம் மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்ற ஒன்றும் இல்லை
பினை மாய்வதில்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்திருப்பது தத்துவம் தானே (2956)


பொருள் : மனதின் கற்பனையே மாயையாம். அது மயக்கம் அளிக்கும் (அஞ்ஞானத்தில் தள்ளி விடும்). அந்த மனமயக்கம் போன பின் வேறொன்றும் இல்லை. அதற்கு மேல் மாய்வதற்கு ஏதும் இல்லை. வீண் பேச்சு எதற்கு? ஆன்ம தத்துவம் என்பது தன்னை (தன் எண்ண ஓட்டங்களை) கவனித்திருந்து அடங்கியிருப்பதே ஆகும்.

மனமுதிர்ச்சி பெற்றவரின் மனநிலை எத்தகையது என்பதை எடுத்துக்காட்ட ஒரு பழமையான கதை. உலக வாழ்க்கையைத் துறந்து ஒரு தம்பதியர் காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாதையில் ஒரு பொன்னால் ஆன மூக்குத்திக் கிடந்தது. அதைக்கண்டால் எங்கே மனைவியின் மனதில் சஞ்சலம் உண்டாகி விடுமோ என்றெண்ணி காலினால் மண்ணை தள்ளி அதை மூடுகிறான் கணவன். பின்னால் வந்து கொண்டிருந்த மனைவி அதைக் கண்டு வருத்தமடைகிறாள். மெல்லிய குரலில் கணவனை கேட்டாள் "இன்னுமா மண்ணிற்கும் பொன்னிற்கும் வித்தியாசம் தெரிகிறது ?"

மாயையை வென்ற பெண்மணி அவள். ஏனென்றால் பொன் எனும் மாயை அவள் மனதை விட்டு அகன்று விட்டிருந்தது.

माया मरी न मन मरा, मर मर गए शरीर
आशा तृष्णा न मरी कह गए दास कबीर


மாயா மரீ ந மன் மரா, மர் மர் கயே ஷரீர்
ஆஷா த்ருஷ்ணா ந மரீ, கஹ் கயே தாஸ் கபீர்

மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


மாயையால் பீடிக்கப் பட்ட மனது, தான் நினைத்ததை அடையும் வரை நம்மைப் படாத பாடு படுத்தி விடுகிறது. பல நேரங்களில் நாம் செய்யக் கூடாதனவற்றையும் செய்யச் சொல்லி துன்புறுத்துகிறது. இந்த துன்பத்தை தாயுமானவர்

ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்,
மோசம் வரும் இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கான
நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற்
கொடுமை பற்றி நிற்பர் அந்தோ
தேசு பழுத்தருள் பராபரமே நிராசை
இன்றேல் தெய்வமுண்டோ


என்று பாடுகிறார். பெருங்காற்றில் சிக்கிக் கொண்ட இலவம் பஞ்சு படும் பாட்டை போல நமது மனம் மட்டுமல்ல தேகமும் உழன்று ஓய்ந்து போய் விடுகிறது. ஆனாலும் நிராசை என்ற வேகத்தடை இல்லாததால் மீண்டும் மீண்டும் பல்வேறு ஆசையிலே சிக்கி தவிக்கின்றோம். இதையே கபீர் தீர்க்க முடியாத தாகம் என்று உவமித்துச் சொல்கிறார்.

எளிமையான கபீரின் ஈரடிகளுக்கு இத்தனை விளக்கங்கள் அவசியமா? இல்லைதான். ஆயினும் நமக்கு மனதுக்கு பிடித்தமான ஒரு குழந்தையையோ அல்லது தெய்வ உருவத்தையோ அலங்கரித்து அழகு பார்ப்பதில் ஓர் ஆசை. இதுவும் அந்த மாயையின் ஆட்டம் தான்.

Thursday, January 18, 2007

உள்ளுள் உறைபவன் ஈசன்

கபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந்து கர்மவினைகளின் கோட்பாட்டையும் ஒருங்கே வலியுறுத்தியவர் அவர். கடவுள் ஒருவனே என்றாலும் அவன் எங்கோ வெளியே தனியாக அமர்ந்து ஆட்சி செய்யவில்லை. ஒவ்வொரு ஜீவனிலும் அந்த இறைசக்தியே இலங்குகிறது. முயற்சி செய்வோருக்கு தன்னுள்ளேயே அனுபவ பூர்வமாக உணரக்கூடிய அத்வைத நிலையையும் அவர் அடைந்திருந்தார். இக்கருத்துகளை எதிரொலிக்கும் கபீரின் ஈரடிகளைப் பார்க்கும் முன், தமிழ் நாட்டு ஞானியர் சிலர் இதையே எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

சிவ வாக்கியர் பாடல் ஒன்று

காண வேண்டும் என்று கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்ற அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமாகுமே


(தாணு =நிலைபேறு, தூண் ; மெய்யுளே தரித்தல் = உடம்புள்ளே உணர்தல் )

பூரண மாலையில் பட்டினத்தடிகள் சொன்னது :

எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே (733)

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீயிருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே (712)

இறைவனை "கண்ணின் மணி" என்பது சம்பந்தர் தேவாரம் :

கண்ணிடை மணி ஒப்பாய்,பழத்தினில் சுவையொப்பாய்
பண்ணிடை தமிழ் ஒப்பாய் கடுவிருள் சுடரொப்பாய்
......

இப்பொழுது கபீரின் எண்ண ஓட்டம் இவர்களோடு எந்த அளவிற்கு இணைந்து போகிறது என்பதைக் காணலாம்.

ज्यॊं नैनन मॆं पूतली, त्यॊं मालिक घर माँहि
मूर्ख लॊग न जानिए , बाहर ढूढ़्त जाँहि


ஜ்யோன் நைநன் மேன் பூத்லீ, த்யோம் மாலிக் கர் மாஹி
மூர்க் லோக் ந ஜாநியே பாஹர் டூம்டத் ஜான்ஹி


கண்ணிடை மணி போலும் உள்ளிடை உறைவான் பரமன்
மண்ணிடை அலைவனே எங்கும் தேடி கருதறியா பாமரன்

जैसॆ तिल मॆ तैल है चक्मक मॆ आग
तॆरा साँइ तुझ मॆ है जाग सकॊ तॊ जाग


ஜைஸே தில் மேன் தைல் ஹை, சக்மக் மேன் ஆக்
தேரா ஸாயி துஜ் மே ஹை, ஜாக் ஸக் தோ ஜாக்


எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் உறை தழலே
உள்ளுள் உறைவான் ஈசன் விழிப்பரோ உணர்வில் இவரே


(சிக்கி முக்கி = ஒரு வித கல். காய்ந்த சருகுகளை சேர்த்து இரண்டு கற்களை ஒன்றுக்கொன்று உரசும் பொழுது தீப்பொறி உண்டாகி அவை தீப்பிடித்துக்கொள்ளும். ஆதிகாலத்து "Leaf Lighter" உள் உள் = உள்ளத்தினுள்ளே )

அடடா எங்கே நம் திருமூலரைக் காணோம் என்று கவலைப் பட வேண்டாம். அவர் சொல்லாத எதையும் யாரும் புதிதாக சொல்லி விட முடியாது. இந்த உடலை இறைவன் கொடுத்திருப்பதே தன்னை உணரத்தான் என்பதைக் கூறும் ஒரு திருமந்திரம்

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே


(உறு பொருள் = மேன்மையான பொருள் : உத்தமன் = இறைவன் : ஓம்புதல் = போற்றுதல்)

"கபீரின் பக்தி என்னும் வைரமணியை தமிழ் என்னும் பரிதியில் காட்டி, திருமூலர், ஔவை, வள்ளுவர், அருணகிரி தாயுமானவர்,பட்டினத்தார், பாரதி போன்ற பல்வேறு வண்ண பிரிகைகளை கண்டு மகிழலாம் என்றால் மிகையில்லை" - (நன்றி; திருமதி உஷா காமேஷ்வரனின்-தனி மடல்)

Wednesday, January 10, 2007

அஞ்ஞானிகளின் அல்லல்கள்

வாழ்க்கையில் நாம் எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்ளாமலே இருந்து விடுகிறோம். இதனால் நமக்கு பெரிய இழப்போ இல்லையோ கண்டிப்பாக உலகுக்கு ஒரு இழப்பும் இல்லை. இன்னொரு விதத்தில் சொல்வதானால் "அறியாமையின் ஆனந்தத்தில்" நாம் பெரும்பாலும் இருந்து விடுகிறோம். Bliss of Ignorance என்பார்களே அப்படி. பிரச்சனை எப்போதென்றால் அரைகுறை ஆர்வம் காரணமாக நாமும் சும்மா இருக்காமல், சும்மா இருப்பவனையும் இழுத்துவிட்டு செய்வதறியாமல் முழிப்போமே அப்பொழுது தான். இந்த ஆர்வக் கோளாறு கடவுள் விஷயத்தில் மிக அதிகமாகவே உண்டு. இந்த வியாதி மிக மிகப் பழமையானது என்றும் பெரியவர்களின் கருத்துகளிலிருந்து தெரிகிறது. கபீர்தாஸரின் சில வேடிக்கை வரிகளைப் பார்ப்போம்.

आगॆ अन्धा कूप मॆं दूजा लिया बुलाय
दॊनॊं डूबॆ बापुरॆ, निकसॆ कौन उपाय

ஆகே அந்தா கூப் மேன், தூஜா லியா புலாய்
தோனோ டூபே பாபுரே, நிக்ஸே கௌன் உபாய்


வாவியுள் அந்தக னொருவன் வாவென்பான் வேறொ ருவனை
பாவிகள் இருவரும் மூழ்குவர் வெளியேறும் வழியும் எங்ஙனை

(அந்தகன் = குருடன் வாவி = கிணறு : பாவிகள் என்பதை பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று பொருள் கொள்க)

இதையே சற்று திருமூலரின் வழியில் கூறுவதானால் கீழ்கண்டவாறு சொல்லலாம்.

குருடனுக்கு குருடன் வழிகாட்டி குறுக்கே வந்தது கூபமடி
இருவரும் விழுவர் அம்மாடி வெளியேறும் வழியு
முண்டோடி
(கூபம் = கிணறு )

திருமந்திரத்தின் மூலப் பாடல்கள் இதோ. கபீரின் கருத்துகள் திருமூலரோடு எவ்வளவு அழகாக ஒத்துப் போகின்றன என்பதை இங்கே காண்கிறோம்.

குருடருக்கு கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகியே (2048)


குருட்டினை நீக்கும் குருவனைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழுமாறே (1680)


போலிகள் எக்காலத்தும் உண்டு. அவர்களைப் பிரித்தறிவதே ஒரு வித சாதனை தான். அது சாதகனுள் உண்மையான முயற்சி இல்லாமல் கைவராது. மிகப் பெரும் ஞானிகள் தனிமை விரும்பிகளாகவே இருப்பர். ஜட்ஜ் சுவாமிகளை குருவாய் கொள்வதற்கு அவர் பின்னாலேயே சுற்றுவாராம் கிருஷ்ணமூர்த்தி. அவரை அருகே வரவிடாமல் கற்களை எடுத்து எறிவாராம் ஜட்ஜ் சுவாமிகள். வெகு காலம் பின்பே சாதகனுடைய வைராக்கியத்தைக் கண்டு அவருக்கு குருவாகி வழிகாட்டினார். பிற்காலத்தில் அச்சீடனே சேந்தமங்கலம் ஸ்வயம்பிரகாச சுவாமிகளாக போற்றப்பட்டார். ஆகையால் ஆரம்ப கால சாதனை, தினையையும் பதரையும் பிரித்தறிவதிலே கழிக்க வேண்டிய ஒன்று புரிகிறது.


ज्ञानि कॊ ज्ञानि मिलै रसकी लूटम लूट
ज्ञानि अज्ञानी मिलै, हॊवै माथा फूट


ஞானி கோ ஞானி மிலை, ரஸ்கீ லூடம் லூட்
ஞானி அஞ்ஞானீ மிலை, ஹோவை மாதா பூட்

ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்
ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்

ஞான ரசக் கொண்டாட்டத்தை முதலில் பார்ப்போம். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா" என்ற பாடல் கர்நாடக இசையிலே மிக பிரபலமான பாடல். ஆபோகி ராகம். இயற்றியவர் நந்தனார் சரித்திரம் செய்த கோபாலகிருஷ்ண பாரதி. அவர் மாயவரத்திலிருந்து திருவையாற்றை அடைந்து தியாகரஜரின் வீட்டை அடைகிறார். இன்னாரென்று முகமன் சொல்லிக் கொள்ளும் முன்பே, மாயவரம் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்தில் 'கோபால கிருஷ்ண பாரதியை தெரியுமா?' என்று அவரிடமே கேட்டாராம் தியாகராஜர்! அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கியே மேற்கண்ட பாடலை இயற்றியதாக வரலாறு. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் அறிஞர்கள் இவரது பாடல்களில் யாப்பிலக்கண விதிகளே கிடையாது என்று முடிவு சொல்லிவிட்டிருந்தனர் . தியாகரஜருக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவர் உள்ளம் தன்னைப் போன்ற இறை நாட்டமுள்ள இன்னொரு உள்ளத்தை கண்டதில் உவகை கொண்டது. அங்கே ஒரு போட்டிக் கவிஞரென்ற பொறாமையோ அல்லது சிவனை போற்றும் பாடலாயிற்றே என்ற அலட்சியமோ இல்லாமல் அப்பாடலை போற்றி கொண்டாடினாராம் ராமனை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தியாகராஜர். அந்த கொண்டாட்டத்தின் பயனாகத்தான் தமிழ் இசையுலகுக்கு ஒரு இறவாப் பாடல் கிடைத்தது. இறைவனைப் பற்றிய எந்த ஒரு சிந்தனையும் ஆனந்தம் அளிப்பதாகவே இருக்கும். அதுவே ஞானிகளின் போக்கு

ஆனால் அஞ்ஞானிகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்து கூறமுடியாது. அதனால் வரும் சிரநோவுகளும் பலவிதம்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கதை ஒன்று. மதம் பிடித்த யானை ஒன்று தெருவில் வேகமாக வந்து கொண்டிருந்தது. மேலிருந்த பாகன் எல்லோரையும் ஒதுங்கச் சொல்லிக்கொண்டே அங்குசத்தால் அதை வழிக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்தான். ஒரு பெரும் குருவுடைய சீடனுக்கு குருவின் மொழிகள் அந்நேரத்தில் ஞாபகத்திற்கு வருகிறது. "இவ்வுலகமே பிரம்ம மயம். எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது பிரம்மமே. எதுவும் பிரம்மத்திற்கு புறம்பானதல்ல". ஆகையால் இந்த யானையும் பிரம்மம் ;நானும் பிரம்மம். இதையறிந்த என்னை இந்த யானை ஒன்றும் செய்யாது என்று எண்ணிக் கொண்டே வழியிலேயே நின்றிருந்தான் அச்சீடன். ஆனால் அந்த யானைக்கு பிரம்மத்தைப் பற்றித் தெரியாததால் அந்தச் சீடனைத் தூக்கி வீசி எறிந்து விட்டு தன் வழியே போயிற்று. உடலெல்லாம் காயத்துடன் குருவை அடைந்த சீடன் தன் நிலைச் சொல்லி புலம்பினான். குருவின் வார்த்தைகளில் தான் வைத்த நம்பிக்கை வீணாயிற்று என்றான். குரு சிரித்தார். "அடே மூடா ! யானை என்ற 'பிரம்மம்' உன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த அதே நேரத்தில் மேலே அமர்ந்திருந்த பாகன் என்ற 'பிரம்மம்' ஒதுங்கச் சொன்னதை நீ புரிந்து கொள்ளவில்லையே ! உன்னை விட யானையைப் பற்றி அவனல்லவோ அதிகம் அறிவான். உன் துன்பத்திற்கு காரணம் உன் அரைகுறை அறிவே" என்று சொல்லிப் புரிய வைத்தார். ஆகையால் இத்தகைய நிலைமையை 'பாழும் சிரநோவுத் திண்டாட்டம்' என்று கபீர் வருணிப்பதில் வியப்பில்லை.

कबीरा संगति साधु की हरै और की व्याधि
संगति बुरी असाधु की, आठॊं पहर उपाधि

கபீரா சங்கதி ஸாது கீ, ஹரை ஔர் கீ வ்யாதி
சங்கதி புரீ அஸாது கீ, ஆடௌன் பஹர் உபாதி


சாதுவின் இணக்கம் கபீரா, களையும் ஈனோர் வியாதி
சாது அல்லாரோடு ஆயின் விளயும் எண்சாம உபாதி
(எண்சாமம் : எட்டு சாமப் பொழுது, ஒரு தினம் ; உபாதி : துன்பம்,சங்கடம் )

இறையருள் பெற்ற மகான்கள் கர்ம வினைகளை அனுசரித்து மக்களின் துயர் தீர்ப்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராகவேந்திரர், ஏசு இன்னும் பலரும் பிணி தீர்ப்பது மட்டுமன்றி இறந்தவர்களை உயிர்ப்பித்ததையும் படிக்கிறோம். ஏசுபிரான் சொல்வதைப் போல் மந்தை ஆடுகளை ஒரு நல்வழியில் அழைத்துச் செல்லும் மேய்ப்பவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் நம்மை ஆடுகளாகக் கருதாது தெய்வ நிலைக்கு உயர்த்தும் முயற்சியில் இறைவனில் நமது நம்பிக்கையை வளர்ப்பதற்காக ஈடுபட்டு செய்யும் ஒரு சிறிய இடை நிலையே அது. ஆனால் அவர்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அதை பெரும்பாலும் நாம் செயல்படுத்துவதோ அல்லது சிந்திப்பதோ கூட இல்லை.

வாழ்வில் நாம் சந்திக்கும் சிலரை 'அழுமூஞ்சி' என்று கண்டு ஒதுங்குவோம். காரணம், யாராவது கிடைத்தால் போதும் அவர்கள் தம் சோகக் கதையை தொடங்கி விடுவார்கள். நமக்கே இந்த நிலைஎன்றால் தேடி வரும் அனைவருமே ஒரு சோகக் கதையோடு வந்தால் சாதுக்களின் கதி என்னாவது? அத்தகைய பெரிய ஞானிகளை அணுகும் போது ஆன்மீக முன்னேறத்திற்காக இல்லாமல் குறுகிய வட்டத்துள் தம் சொந்தப் பிரச்சனகளைப் பற்றியே பேசுவர் உலகோர். இது மனத்தளவில் அவர்களுக்கு எவ்வளவு சங்கடம் உண்டு பண்ணும் என்ற நினப்பும் இருப்பதில்லை. ஆயினும் அவர்கள் பெரும் கருணையாளர்களாக தம்மை தேடி வந்தவரின் மன அமைதிக்காக துன்பம் துடைக்கும் வடிகால்களாக செயல்படுகிறார்கள். நமது (மன)வியாதிகளை களைவதில் அவர்கள் உபாதிகளை ஏற்றுக் கொள்கின்றனர்.