Saturday, June 28, 2008

வனமெல்லாம் சிம்மத்தின் வசம்

எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர், ஒரு பெண்மணி. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத்துறையில் வைஸ் பிரசிடெண்ட். மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை விஷயமாக வெளியூர் பயணம் தான். அண்டை வீடே ஆனாலும் சந்தித்துக் கொள்வது வாரத்தில் ஓரிருமுறைதான்.

ஒருநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்வேளை, அவர் வாசலில் அறிமுகம் இல்லாத சிலரோடு மிகவும் காராசாரமான விவாதம் செய்வது கேட்டது. அருகே சென்று விவரம் கேட்டபோது அவர்கள் வீடு தேடி வந்து வசூல் செய்ய முற்படும் கிரடிட் கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. வந்தவர்களின் நடத்தையும் பேச்சும் மிக தரக்குறைவாக இருந்தது.

பிரச்சனை என்னவென்றால் இரண்டு மாதங்களுக்கான தவணைக் கட்டப்படவில்லை என்பது தான்.

பாவம் அவர். தன்னுடைய அலுவலக உதவியாளரை நம்பி விட்டிருந்த வேலை, செய்யப்படாமல் விடுபட்டிருந்ததால் வந்த வினை.

இவர், 'முழு விவரமும் தெரிந்து கொண்டு பிறகு கட்டச் சொல்கிறேன்' என்றால் வந்தவர்கள் அதற்கு ஒப்புக் கொள்வதாக இல்லை.

“சீ ! ஏதோ ஒரு மாசம் விட்டுப் போச்சுனா இப்படிதான் ஆள அனுப்பிச்சு ஸீன் கிரியேட் பண்ணனுமா? கேக்குறதலையும் ஒரு டீஸென்ஸி வேண்டாம். கூண்டாவை வச்சு வசூல் பண்றாங்க. கார்டு வேண்டாம்னாலும் நூறு தடவை ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து கால்ல விழுந்து கெஞ்ச வேண்டியது. எப்பவோ ஒரு சின்ன தப்பு நடந்தா இப்படி அசிங்கப்படுத்தறது. முதல்ல இந்த கார்டை கேன்ஸல் பண்ணச் சொல்றேன்” என்று பொருமிக் கொண்டே சென்றார்.

இப்பொழுதெல்லாம் வங்கிகள் வெளியார் துணையோடு( out sourcing) தவணைகளை வசூலிக்கின்றனராம்.

அதனால் வந்த தரக்கேடு இது.

கடன் வாங்காத வரையில் ஒருவன் ராஜா. ஏதேனும் காரணத்தால் வண்டிக்காகவோ, வீட்டிற்காகவோ கடன் வாங்கி தவணை செலுத்துவதில் இடர் ஏற்பட்டால் கடன் கொடுத்தவரின் ஏச்சுகளை கேட்டு மனம் துன்பப்படுகிறது.

இந்த மாயையும் அப்படித்தான். முதலில் நம்மைச் சுற்றி ஒரு சுகமான உலகை சிருஷ்டிக்கிறது. மயக்கம் நீடிக்கிறது. தவறுகள் ஏற்படுகின்றது. பின்னர் திரை சிறிது சிறிதாக விலகி தன் கோர சொரூபத்தை காட்டுகிறது. ஏனிப்படி என்றால் ”எல்லாம் நீயே வரவழைத்துக் கொண்டது” என்று பதில் வருகிறது. என்ன விசித்திரம் இந்த உலகம்! எனவேதான் கவிஞனுக்கு கோபம் உண்டாகிறது. பாரதியின் சீற்றத்தைப் பாருங்கள்.

என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!- நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே
உணர் -மாயையே
................
நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே- சிங்கம்
நாய் தர கொள்ளுமோ
நல்லரசாட்சியை -மாயையே

ஞானிகளுக்கு இத்தகைய சஞ்சலங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் உலகை நாடக மேடையாகக் காண்பதால் சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து செல்லக் கூடிய காட்சிகள் என்பதை அறிவார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனின் சாட்சாத்காரம் ஒன்றுதான்.

ஒரு சிங்கத்தை தன்சொற்களால் பசப்பி புவனம் என்கிற பாழ் கிணற்றிலே தள்ளப் பார்க்கும் முயல் போல மாயையின் லீலையே மற்றவையெல்லாம் என்பதை அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். எனவே கபீர் நமக்கு பழக்கமான கதையை சொல்லியே இதை புரிய வைக்கப் பார்க்கிறார்.

अकिल बिहूना सिंह, ज्यौं गया ससा के संग ।
अपनी प्रतिमा देखि के, कियो तन के भंग ॥


அகில் பிஹூனா ஸிம்ஹ், ஜ்யோவ் கயா ஸஸா கே ஸங் |
அப்னீ ப்ரதிமா தேகி கே , கியோ தன் கே பங்க் ||


வனமெலாம் சிம்மத்தின் வசம், சென்றது செவியன் சொல்வசம்
மனம்மருளும் பிம்பத்தின் வசம், பின் இல்லை தேகம் அதன்வசம்

(செவியன்= முயல்)

எதற்கும் அஞ்சாத சிங்கத்திற்கும் மன மயக்கம் ஏற்பட்டு புத்தி தடுமாறுகிறது. அந்த தடுமாற்றத்திற்கு காரணம் பொய்யை உண்மையென நம்பியதே காரணம். உலகில் வாழ்க்கை நடத்தும் பொழுது நமக்கு பலவகையான தடுமாற்றங்கள். எது நல்லது, எது கெட்டது என்று புரியாத நிலை. இறைவனே யாவும் என்ற விவேகத்தை உறுதியாகப் பற்றி கொள்ளத் தெரியாத மடமை.

ஆகையால் சிங்கத்தை போல சுதந்திரமாக தலைநிமிர்ந்து நடைபோட வேண்டிய மனிதன் ஆடுகளைடையே வளர்ந்த சிங்கக்குட்டி போல மந்தையோடு நடை போடுகிறான். மே... மே என்று ஆடுகளைப் போலவே கையாலாகதவன் போல் கத்தித் திரிகிறான்.

அப்போது, சிங்கம் போன்று, தன்னை உணர்ந்த குரு வந்து “ நீ ஆடு அல்ல சிங்கம்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். கர்ஜிக்க கற்றுக் கொடுக்கிறார். அப்படி ஒரு கர்ஜனையை இங்கே கேளுங்கள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே யெந்நாளும் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற்சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே

(நடலை=பொய்மை; ஏமாப்பு = மகிழ்ந்திருத்தல்; மீளா ஆளாய்= எந்நாளும் அடிமையாய் ; கொய் மலர் = புதிதாக மலர்ந்த மலர்; குறுகினோமே=அடைந்தோமே)

சமணத்தைத் துறந்து சைவநெறியை தழுவிய நாவுக்கரசரை விசாரிக்கும் பொருட்டு அரசன் அழைப்பு அனுப்புகிறான். அழைப்பை ஏற்க மறுத்த அப்பர் பெருமான் கூறிய பாடல் இது.

அந்த தன்னம்பிகை எங்கிருந்து வந்தது? இறைவனே எல்லாம் என்ற மனத்தெளிவே காரணம். வேறொன்றையும் எதிர்பார்க்காத மனப்பக்குவம்.

அத்தகைய மனத்தெளிவு நமக்கும் வந்துவிட்டால் முயலிடம் அகப்பட்ட சிங்கம் போல் அவதிப்பட வேண்டியதில்லை. எதற்கும் அஞ்சாத சிங்கமாய் இவ்வுலகில் சுற்றி வரலாம்.

Tuesday, June 10, 2008

தன்னை விழுங்கும் தற்பரம்

பாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். பாண்டுரங்கனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடியாதவராயிருந்தார்.

ஒருநாள் ஞானதேவர், அவர் கோவிலுக்கு போவதையும் அங்கேயே பழியாக கிடப்பதையும் கேலி செய்தார். பிறவி ஞானியான ஞானதேவருக்கு தன்னுடைய தம்பி** அடுத்த நிலைக்கு முயற்சி செய்யாமல் த்வைதத்திலே கட்டுண்டு இருப்பது வேடிக்கையாக இருந்தது போலும்.

“இது என்ன நியாயம் விட்டலா! உன் பெருமை தெரியாதவர்கள் என்னை கேலி செய்வதன் பொருள் என்ன? நான் உண்மை உணராதவனாம், ஞானதேவன் சொல்கிறான். அவனுக்கு நீயே புரிய வை “ என்று முறையிட்டு அழுதார் நாமதேவர்.

“போகட்டும் விடு குழந்தாய். நீ ஒரு காரியம் செய். பக்கத்து ஊரிலே விசோபகேசன் என்ற ஞானி இருக்கிறான். அவனை கண்டு வா. உனக்கு வழி அவன் சொல்வான்” என்று அவனை தேற்றினான் பாண்டுரங்கன்.

கண்களில் நீர் பெருகியது நாமதேவருக்கு. தனக்கு பிரியமான விட்டலனை பிரிந்து செல்வதா? நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே. ”நீயே எனக்கு எல்லாம் ஆக இருக்கும் போது எனக்கு வேறு யாரும் தேவையில்லை. உன்னை பிரிந்திருக்கமுடியாது என்னால்“ என்று தேம்பி அழுகிறார்.

புதிதாக பள்ளிக்கு சேர்ந்த குழந்தை தாயை விட்டு பிரிய மனமில்லாமல் அழுது ஊரை இரண்டு பண்ணுமே அது போல் இருந்தது அவர் நிலை.

அவரை தட்டிக் கொடுத்து “கவலைப்படாதே. கொஞ்சநாள் தான். சீக்கிரமே வந்துவிடலாம். போய் வா” என்று பாண்டுரங்கன் அவருக்கு தைரியம் சொல்லி அனுப்புகிறான். அழுது கொண்டே ”டா-டா” சொல்லும் குழந்தையை போல இஷ்டமில்லாமல் பண்டரிபுரத்தை விட்டு கிளம்பிச் சென்றார் நாமதேவர்.

மூன்றாம் நாள் விசோபகேசனின் கிராமத்தை அடைந்தார். கிராமத்தாரை விசாரித்தப் பொழுது ஊருக்கு வெளியே உள்ள சிவாலயத்தில் வசித்து வருவதாக தெரிந்தது. பாண்டுரங்கனே மெச்சிய அம்மனிதனை பார்ப்பதற்கு நாமதேவரின் ஆர்வம் அதிகரித்தது. ஆலயத்தை அடைந்த பொழுது அது திறந்து கிடந்தது.
உள்ளே யாரும் தென்படவில்லை. சுற்றி வந்த பின்னரும் கண்ணில் எவரும் தென்படவில்லை.

கர்ப்பகிருகம் ஒன்றுதான் பாக்கி. உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி தந்தது அவர் கண்ட காட்சி.

ஒரு வயதான மனிதன் தன் இரண்டு கால்களையும் சிவலிங்கத்தின் மேல் வைத்து தரையில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டார். “ஹே பாண்டுரங்கா! என்ன அபசாரம்! இதைக் காண்பதற்கா என்னை அவசரமாக அனுப்பி வைத்தாய்” என்று நினைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்த மனிதனை தொட்டு எழுப்பினார் நாமதேவர். அந்த வயதான மனிதர் கண்விழித்து தன்னை தொந்தரவு செய்வதன் அவசியம் பற்றி விசாரித்தார்.

“தொந்தரவா? நீர் என்ன காரியம் செய்திருக்கிறீர். தூங்குவதற்கு வேறிடம் இல்லையா? கால்களுக்கு காலணை வேறில்லையா.? கர்ப்பக்கிருகமும் சிவலிங்கமும் தானா கிடைத்தது ? வேறு இடம் பார்த்து தூங்கூம் போம்” என்று விரட்டினார்.

“அப்பா, நீயே பார்த்து சிவனில்லாத இடமாக என்னை திருப்பி விடு. கையாலாகாத முதியவன் நான்” என்று வேண்டுகோள் விடுத்தார் அந்த பெரியவர். மனதில் எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது நாம தேவருக்கு. அவரது கால்களை இரண்டு கைகாளாலும் பற்றி சிவலிங்கத்திற்கு எதிர்புறமாக திருப்பி
வைத்தார்.

அட இது என்ன !! முதியவரின் கால்கள் தரையில் படும் முன்பே காலணையாக அங்கொரு சிவலிங்கம் முளைத்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார் நாமதேவர். சந்தேகமில்லை.இது இரண்டாவது தான். அதற்கு முன்பு அங்கு இருக்கவில்லை. இரண்டு நான்காயிற்று, நான்கு எட்டாயிற்று.

இன்னும் வைப்பதற்கு இடமேது?

கடைசியில் தன் தலை மேலேயே சுமப்பது, அங்குமா சிவலிங்கம் முளைக்க முடியும் என்ற எண்ணத்தோடு தன் தலைமேல் வைத்துக் கொண்டார். அம்முதியவரின் கால்கள் தலையில் பட்டதுமே மின்னல் போல் பரஞ்சோதி உடல் முழுதும் பரவியது. எங்கும் நீக்கமற நிறைகின்ற இறைவனின் ஒளி வெள்ளத்தை தன்னுள்ளும் கண்டு கொண்டார்.

”இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்”

என்று மாணிக்க வாசகர் பாடிய பரவசம் புரிந்தது நாமதேவருக்கு. அந்த முதியவர்தான் தான் தேடிவந்த விசோபகேசர் என்ற உண்மையும் புரிந்தது.

விசோபகேசரின் கால்களில் விழுந்து ”எனக்கு ஞானத்தை புகட்டுங்கள். என் பிரியன் பாண்டுரங்கன் தங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறான்” என்று வேண்டிக்கொண்டார். ”உனக்கு என்ன தெரிய வேண்டுமோ அது தெரிந்தாகிவிட்டது. நீ திரும்பலாம்” என்று உத்தரவு கொடுத்தார் குரு.

திரும்பும் வழியில் காணும் காட்சி யாவற்றிலும் இறைவன் அழகை கண்டு ஆனந்தித்தார். குருவின் திருவடிகள் செய்த மாயம். புல்லிலும், மரத்திலும், மலரிலும், மலையிலும், உள்ளிலும் வெளியிலும் எங்கும் எதிலும் பாண்டுரங்கனே என்பதை கணக்கணமும் உணர்ந்து பரவசமானார்.

ஊர் திரும்பியபின் பாண்டுரங்கனைக் காண ஆவலுடன் ஓடவில்லை. தன் வீட்டிலேயே அந்த ஆனந்த நிலையில் அடைந்து கிடந்தார். மூன்றும் நாட்கள் ஆகியும் பாண்டுரங்கனை தேடிப் போகவில்லை.

நான்காவது நாள், அந்த ரங்கனுக்கே பொறுக்கவில்லை. நாமதேவர் வீட்டு கதவை தட்டினான். ”குழந்தாய் கதவைத் திற. நான் தான் உன் பாண்டுரங்கன். உன்னைக் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை”

கதவருகே வந்து நின்ற நாமதேவர் கதவை திறக்காமலே சொன்னார். “விட்டலா! எவ்வளவு பெரிய தந்திரசாலி நீ. உன்னை விட்டால் வேறு கதியில்லை என்று நான் நம்பியிருக்கும்படி செய்து வைத்திருந்தாயே. உன் மாயம் இனி என்னிடம் செல்லாது. எனக்குள்ளே நீயும் உனக்குள்ளே நானும் இருக்கும் போது உன்னைத் தேடி வேறு வரவேண்டுமோ? அதற்கு வேறு யாரையாவது பார்”.

தன் அறியா குழந்தை நல்ல பாடத்தை புரிந்து கொண்ட போது மகிழ்ச்சி அடையும் தாய் போல் பாண்டுரங்கனும் தன் பக்தனின் புதிய ஞானத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்றான்.
( ஆதாரம் Chinmaya vidyalaya ;Tarangini-6, ( 2001) Chinmaya Mission Trust, Mumbai )

**
பிற்சேர்க்கை : 26/06/08
நாமதேவரும் ஞானதேவரும் உடன் பிறந்தவர்கள் அல்ல. ஐந்து வருடங்கள் ஞானதேவர் மூத்தவர். பல காலம் இருவரும் சேர்ந்து தல யாத்திரை மேற்கொண்டனர் )
.

நாமதேவரும் கபீரும் சமகாலத்தவர். ஞானதேவரும் நாமதேவரும் காசிக்கு விஜயம் செய்த போது கபீரின் சிறப்பு விருந்தினராக இருந்தனர் என்றும் சொல்வதுண்டு. இப்போது நாமதேவரின் மேற்கண்ட அனுபவத்தை கபீரின் வரிகளில் பார்ப்போம்.

जब मैं था तब हरि नही, अब हरि है मैं नही ।
सब अंधियारा मिटि गया, जब दीपक देख्या मांहि ॥


ஜப் மே தா, ஹரி நஹி, அப் ஹரி ஹை, மே நஹி
ஸப் அந்தியாரா மிடி கயா, ஜப் தீபக் தேக்யா மாம்ஹி


நானிருந்த போது அரியில்லை, அரிவந்த பின்னே நானில்லை
வானில் சுடர்வந்த பின்னே, இருளின் சுவ(டு) என்ப(து) இல்லை

(சுடர் =சூரியன் : நானிருந்த போது = நான் என்ற ஆணவ மலம் இருந்த போது : அரி =ஹரி, இறைவன்)

மாற்று :
நானிருந்த போது அரியில்லை, அரிவந்த பின்னே நானில்லை
நாடகம் முடிந்தது, ஒளிவந்த பின்னே இருளங்கு இல்லை

“நாடகம் முடிந்தது” என்ற வகையில் கபீர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இதை படித்ததும் சுவாமி சித்பவானந்தர் கூறிய ஒரு உதாரணம் நினைவுக்கு வந்ததால் தோஹாவுக்கு முதல் மொழி பெயர்ப்பாக இதை எழுதி வைத்திருந்தேன்.

அந்த உதாரணம் இங்கே.
திரைப்பட அரங்கில் தங்களை மறந்து கதாபாத்திரங்களோடு கதையில் ஒன்றி போனவர்கள் எல்லாம் படம் முடிந்து விளக்குகள் போடப்பட்டதும் தம் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். அது போலவே ஆன்மா தன் சுத்த தத்துவத்தை மறந்து வினைகளின் வலையில் சிக்கி உலக அரங்கில் திரியும் போது
அவனுடைய நாடகம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அது தன் இயல்பை உணர்ந்த கணமே உலகம் கனவு போலாகி விடுகிறது என்கின்றனர் ஞானிகள். ஞானம் என்ற சூரியன் உதித்த பிறகு அஞ்ஞானம் என்ற இருளுக்கு இடமேது ?

அதே அனுபவத்தை அருணகிரிநாதர்

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ ?
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே. ---(க.அனுபூதி 28)

என்று தற்பரத்தில் தான் கரைந்த ஆனந்தத்தை உரைக்கிறார்.

அந்த நிலை பேரானந்த நிலையாகுமாம். அங்கே இருளில்லை ஒளியில்லை, கீழ் மேல், முன்பக்கம் பின்பக்கம் போன்ற எவ்வித வரையறைகளுக்கும் உட்படாத ஓர் உன்னத உணர்வு நிலை. அந்த ஆனந்த நிலையிலேயே எப்போதும் இருக்க தாயுமானாவர் எங்கும் நிறைகின்ற பரம்பொருளை வேண்டுகிறார்.
............
முன் பின்னொடு கீழ்மேல் நடுப்பக்கம்
என்னாமல், முற்றும் ஆனந்த நிறைவே
என் நிலைமையாய் நிற்க
இயல்புகூர் அருள் வடிவம்
எந்நாளும் வாழி வாழி
இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி
எங்கும் நிறைகின்ற பொருளே ( எ.நி.பொ. -10)

உடலைப் பெற்று உடல் உணர்வோடு வாழ்ந்திருக்கிற நிலை இகம் எனப்படுகிறது. உடல் உணர்வைக் கடந்து ஆத்மபோதத்தில் திளைத்திருப்பது பரம் எனப்படுவதாகும். இவை இரண்டில் எந்த நிலையில் ஜீவன் இருப்பினும் அது பரமாத்மாவுக்கு புறம்பாவதில்லை. எனவேதான் 'இகபரம் இரண்டிலும் உயிருக்கு உயிராய்' என்று போற்றுகிறார் தாயுமானவர்.

பக்தியில் முற்றிய அனைவருக்குமே இந்நிலை எட்டக்கூடியது தான் என்பது ஏசுவின் சீடரான செயிண்ட் பால் என்பவர் சொல்லிய கருத்துகள் மூலமும் அறிகிறோம்.
(ஒவ்வொரு வரியையும் நிறுத்தி நிதானமாக படித்து கருத்தை உள்வாங்கிக் கொள்ளவும்.)

I live, yet not in me.
Only when
I become as nothing
Can God enter in
and
no difference between
his life and mine
remains outstanding
(St.Paul)