Wednesday, May 19, 2010

பேச்சால் வளருது ஏச்சு

வங்காளத்தில் நவத்வீபம் சர்வகலாசாலையில் பண்டிதர்களின் திறமை சோதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிர்வாக இயல் படிப்பிற்காக அலைமோதும் கூட்டம் போல அன்று (அதாவது 2-6-1900) வடமொழி பாண்டித்திய அங்கீகாரம் பெறுவதற்காக நாடெங்கிலுமிருந்து பண்டிதர்கள் குழுமியிருந்தனர். அவர்களுள் ஒருவர் கணபதி முனி . முக்கிய தேர்வு பொறுப்பில் இருந்தவர் வங்காளத்தைச் சேர்ந்த அம்பிகா தத்தர். வங்காளத்தில் அவரை அறியாத பண்டிதரே கிடையாது எனலாம்

முதல் கோணல் முற்றும் கோணல் என்பர்.

அவரை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் சென்ற அன்பரிடம் அம்பிகா தத்தரின் காதில் விழும்படியாகவே “யாரிந்த பெரியவர் ?” என்று கேட்டார் கணபதி முனி.

தத்தரும் சிரித்துக் கொண்டே ஒரு கவிதை வடிவில் ‘கவுட பாகத்திலிருந்து வந்திருக்கும் ஆசுகவி அம்பிகா தத்தன் யான்’ என்று சொல்லி நிறுத்தினார். இப்போது கணபதி முனியின் முறை. கவிதைக்கு கவிதையிலே பதில் சொல்ல வேண்டும்.[கவுடதேசம் வங்காளத்தில் ஒரு பகுதி]

“நீரோ அம்பிகையின் தத்தர், நானோ அவள் புத்திரன் கணபதி, தட்சிணத்தவன், கவி பாடுவதில் திறமையுள்ளவன்”
என்று சிறிதும் யோசிக்காமல் பதில் கவி சொன்னார். தத்தர் என்றால் வளர்ப்பு மகன் என்றும் பொருள் கொள்ளலாம். என்ன இருந்தாலும் தத்து மகன் சொந்த மகனைவிட ஒரு மாற்று குறைவு தானே !

கவிதையிலேயே பொருள் விடுவிக்கும் சமஸ்யங்கள் (புதிர்கள்) ஆரம்பித்தது

“ மருமகள் மாமனாரை இச்சித்து முந்தானை விலக்கினாள், ஆனால் கற்பில் தவறாதவள் அவள்....” ?????

“ சந்திரனை முத்தமிடும் எறும்புகள் .....“????

“ வருடத்தில் ஒரு நாள் சிவன் முகம் பார்க்காத பார்வதி...???’’

எல்லாப் புதிர்களுக்கும் சமத்காரமாக கவிதையிலேயே பதில்களை சொல்லிக் கொண்டு வந்த போது நடுவிலே ஸார்வசாம் என்பதற்கு பதிலாக ஸர்வேசாம் என்று சற்று வார்த்தைகள் மாறி விழுந்தன கணபதி முனிக்கு. உடனே திருத்திக் கொண்டு தொடர முற்படுகையில் அம்பிகா தத்தர் குறுக்கிட்டார்.

”கவிதை அருமை, உரையும் அருமை பேச்சிலே மட்டும் குழறல் ஏன்? தாரா வை வழிபட மறந்தனையோ” என்று குத்தலாக கேட்டார். அது கணபதி முனிக்கு மனவருத்தத்தை அளித்தது. ஆனால் அம்பிகா தத்தர் சொன்ன அந்த கவிதையிலே ஒரு இலக்கணப் பிழை இருந்தது.

அந்தப் பிழையை சுட்டிக்காட்டி கணபதி முனி பதிலடி கொடுத்தார். இப்போது அம்பிகா தத்தர் தன் நடுநிலை தவறினார்.

“பெருமை வேண்டாம் யானையே,[ஆனை முகத்தான்] யானையின் மூளையைத் தின்ன சிங்கம் [அம்பிகையின் வாகனம்] காத்திருக்கிறது “ என்று பொருள் வருமாறு தன்னை சிங்கமாகவும் கணபதிமுனியை யானையாகவும் இடித்துரைத்தார். அதிலும் ஒரு இலக்கணப் பிழை.

தட்சிணத்து கவி விடுவதாயில்லை

”காகமே! மாமரத்தில் அமர்வதானால் வாயை மூடிக்கொண்டு இரு. அப்போதாவது மக்கள் உன்னை குயில் என்று நினைக்கக் கூடும் “ என்று இன்னொரு பாடலில் சூடாக பதில் சொன்னார். யானையும் சிங்கமும் போய் குயிலும் காகமும் வந்தன.

தத்தருக்கு கோபம் எல்லை மீறியது.

”அடே ! மின்மினிப் பூச்சியே இரவில் மட்டும் தானே உன் மினு மினுப்பெல்லாம் “.

பறவைகளை விட்டு பூச்சி அளவுக்கு இறங்கி விட்டார். விடுவாரா கணபதி!

“ வீட்டுக்குள்ளே மட்டும் தானே விளக்கு ; வெளியில் வந்தால் காற்றால் அலைகழிக்கப்பட்டு அணைவது தானே அதன் இயல்பு “

”பட்டர்களெல்லாம் [தென்னிந்திய அந்தணர்கள்] குடித்துவிட்டு உல்லாசமாய் கணிகையரோடு விழுந்து கிடப்பவர்கள்”

“ கவுடர்களெல்லாம் மீன் ருசிக்காக செல்வத்தையும் வாழ்வையும் தொலைப்பவர்கள்”

உவமான உவமேயங்கள் தேய்ந்து நேரடியான பரஸ்பர தாக்குதலுக்கு இறங்கி விட்டனர் பண்டிதர் இருவரும்.

இந்த நிலையை படித்தபோது கபீரின் ஈரடி ஒன்று நினைவுக்கு வந்தது.

आवत गारी एक है, उलटत होय अनेक ।
कहैं कबीर नहीं उलटिये, वही एक की एक ॥


ஏச்சு ஒன்று பாய்ந்தது, எதிர்பேச்சால் அது பலவானது
பேச்சு வேண்டாம் கபீரா, போகட்டும் தனிமை யிலது


மாற்று
ஏச்சு வருவதோ ஒற்றையாய், எதிர்பேச்சால் வளருது பலவாய்
பேச்சால் பயனில்லை கபீரா, போகட்டும் விடு அதைத் தனியாய்


மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த பேச்சு என்கிற வரம் முறை தவறி பயன்படுத்தப்படுவது போல வேறெந்த கரணமும் இல்லை என்றே கூறலாம். இதனால் வருகின்ற இடர்கள்தான் எத்தனை எத்தனை !!.

வாதங்களில் தனது வாதமே கடைசியாக இருக்கவேண்டும், அடுத்தவனின் வாயை அடைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசத்துடன் பலரும் விடாது வார்த்தைகளை வளர்த்துக் கொண்டே போவர். நேரம் செல்லச் செல்ல பொருள் குறையும், கோபம் அதிகமாகும். அத்தகையவர்களின் போக்கை நாலடியார் சித்தரிக்கிறது.

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்; -கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்பது அறியார்
பல உரைக்கும் மாந்தர் பலர்
.

[சொற்றாற்றுக் கொண்டு = சொற்களை ஆயுதமாகக் கொண்டு; சுனைத்தெழுதல் காமுறுவர் =வம்பு சண்டைக்கு போவதை விரும்புதல் ; செலவுரைக்கும் ஆறு= மனதில் பதிய வைக்கும் வகை ]

பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற ஆதங்கத்தில், அவசரத்தில், கோபத்தில் பேசப்படும் அதிகமான எதிர்பேச்சுகள் அர்த்தமற்றவைகளாக முடிகின்றன. அத்தகைய நேரங்களில் மௌனத்துடனோ அல்லது ஒரு மென்மையான மறுப்புடனோ நிறுத்திக் கொள்ளவோ தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாலடியாரின் பார்வையில் சொல்வதானால் தோற்பது அறிய வேண்டும்.

அதற்குத் தேவையானது அவசியமற்ற பேச்சில் ஆர்வமின்மை. இரண்டாவதாக எப்போது பேச்சு அனாவசியாமான திசையில் திரும்புகிறது என்பதை கண்டு கொள்ளும் விவேகம். இது இரண்டும் இருந்து விட்டால் மௌனத்தின் அருமை தானே புரிய ஆரம்பிக்கும். மௌனம் கூடாவிட்டால் இறை செபம் வாய்க்காது. இறைசெபம் இல்லாமல் இறையருள் வாய்க்காது.

பரமஹம்ஸ தேவர், கபீரின் இந்த கருத்தை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்குவார்.

கங்கையில் படகு ஒன்றில் சில போக்கிரிகள் குடித்துவிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீரோட்டத்தில் மிதந்து வந்த ஒரு காலியான படகு அவர்களுடைய படகுடன் மோதியது. அதில் மட்டும் யாரேனும் இருந்திருந்தால் சண்டை மூண்டிருக்கும். யாரும் இல்லாது போனதால், அங்கே இவர்களின் கும்மாளம் மட்டுமே தொடர்ந்தது. அது போல் நம்முள் அகங்காரம், கோபம் என்ற பயணிகள் இல்லாமல் போனால் எந்த மோதலிலும் ஏச்சுகளினால் நம் அமைதி கெடுவதில்லை.

கணபதி முனியை அங்கேயே விட்டுவிட்டீர்களே ! அவருடைய சொற்போர் என்ன ஆச்சு என்று வாசகர் நினைப்பது புரிகிறது.

மீன் சுவையை குறிப்பிட்டதுமே வங்கத்து அம்பிகா தத்தருக்கு முகம் மலர்ந்து விட்டது. அதிலும் கணபதி முனி அந்த கவிதையில் சொற்களை கையாண்ட விதம் அவருடைய வடமொழிப் புலமையை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு உயர்த்தி விட்டது. அம்பிகா தத்தர் எழுந்து சென்று அவரைத் தழுவிக் கொண்டார். இருவரும் பரஸ்பரம் வாக்கு வாதத்திற்காக வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

கணபதி முனி அவர்களுக்கு பதினான்கு பண்டிதர்கள் ’காவ்யகண்ட கணபதி சாஸ்திரி’ என பட்டம் கொடுத்து கையெழுத்திட்ட சர்வகலாசாலையின் அங்கீகாரமும் கிடைத்தது.

சரி, அந்த மூன்று புதிர்களுக்கும் என்ன விடை என்று கேட்க நினைப்பதும் புரிகிறது. கணபதிமுனி அளித்த விடைகளை கீழே தருகிறேன்

” மருமகள் மாமனாரை விரும்பி முந்தானை விலக்கினாள், ஆனால் கற்பில் தவறாதவள் அவள்....” ?????

பீமனின் மனைவியான ஹிடும்பை புழுக்கம் அதிகரித்ததன் விளைவாக காற்று வாங்குவதற்காக தன் மேலாடையை விலக்கினாள். [வாயுதேவன் பீமனின் மானசிக தந்தை ஆதலால் ஹிடும்பைக்கு மாமனார் முறை ஆகவேண்டும்].

“ சந்திரனை முத்தமிடும் எறும்புகள் .....“????

தட்சணின் யாகத்தில் பார்வதி தீக்குளித்தாள் என்று அறிந்த சிவன் மயங்கி விழுகிறான். அப்போது அவன் முடியிலிருக்கும் பிறைசந்திரன் பூமியை தொடுகிறது. அந்நிலையில் அங்கே ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் சந்திரனை முத்தமிட்டன.

“ வருடத்தில் ஒரு நாள் சிவன் முகம் பார்க்க மறுக்கும் பார்வதி...???’’

விநாயக சதுர்த்தியன்று சந்திரனைக் கண்டால் அபவாதம் வரும் என்பதால் பிறை சூடிய சிவன் முகத்தை காண மறுக்கிறாள் பார்வதி.

அனைத்து புதிர்களுக்கும் ஆசுகவியாய் கவிதையிலேயே பதில் சொல்லி சபையோரை வியப்பில் ஆழ்த்தினார் கணபதி முனி.


[படம் : நன்றி ஷ்யாம், பிகாஸா வெப் ஆல்பம்]

பிற்காலத்தில் நாயனா என்று யாவராலும் அழைக்கப்பட்ட கணபதி முனி பகவான் ரமணருடைய அன்புக்கு பாத்திரமான சிஷ்யர். வேத சாஸ்திரங்களை பிழையற கற்றறிந்த அவருக்கு ரமணர்தான் ஞானகுரு. ஆனால் இவர் ரமணாஸ்ரமத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து கடுந்தவம் புரிந்தார். குடும்ப பொறுப்பை நிர்வகிக்க சில காலம் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பணியாற்றினார். அப்போது மாணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு தூண்டினார் என்று பலரும் குற்றம் சாட்டினர். போலீஸ் கண்காணிப்பும் இருந்தது.

ஆனால் அவரது போராட்ட முறை ஆன்மீக வழியானது. அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சமஷ்டி மந்திர செபத்தாலேயே ஆங்கிலேயரது ஆட்சியை நீர்த்துப் போக செய்ய முடியும் என்று நம்பினார். பல மாணவர்களுக்கு இது பற்றி சந்தேகம் எழுந்தது.

அவர்கள் ஒருமுறை அவரை அணுகி தம் சந்தேகத்தை தெரிவித்தனர். அப்போதுதான் தம் செபத்தை நிறைவு செய்திருந்த கணபதி முனி தம் கண்களை மூடிக்கொண்டார். சற்றும் எதிர்பாராத விதமாக மாணவர்களில் ஒருவன் உரத்தக் குரலில் அவரது செப மந்திரத்தை சொல்லத் தொடங்கினான். யாவரும் ஆச்சரியத்துடன் அவனை கவனிக்கத் தொடங்கினர். கண்களை மூடிக் கொண்டு அவன் உலக நினைவு இல்லாதவனாய் செபத்தை சொல்லிக் கொண்டிருந்தான்.

கணபதி முனி தம் கண்களைத் திறந்ததும் அவன் சொல்வதும் நின்று விட்டது. அது மட்டுமன்றி தான் என்ன சொன்னேன் என்பதும் அவனுக்கு நினைவிருக்கவில்லை.

சங்கல்பத்துடன் செபிக்கப்படும் மந்திரம் எதிராளியின் உள்ளத்தில் புகுந்து மாற்றத்தை செய்ய வல்லது என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. அப்படி நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒரு முனைப்புடன் செபிக்கத் தொடங்கினால் விடுதலையும் சாத்தியமே என்பது கணபதிமுனி அவர்களின் எண்ணம். அதற்காக அவர் கொடுத்த மந்திரம் ”உமாம் வந்தேமாதரம்”

மந்திரத்திற்கு இந்த சக்தி இருப்பதனால்தான் ஞானிகள் பேசுவதில் ஈடுபாடு கொள்வதில்லை. தமது மௌனமான செபத்தினாலேயே தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றனர்.

கபீர் சொன்னது போல் பாய்ந்து வரும் ஏச்சு வலுவிழந்து வீழ்ந்து போகிறது.

{இந்தக் கட்டுரை Dr. G.Krishna அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் Ganapathi Muni என்ற அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டது. இது ஒரு தனியார் பிரசுரம். இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட மின் புத்தகம். இணைய இணைப்பு நினைவில்லை. மன்னிக்கவும். }

Friday, May 07, 2010

சந்தேகிக்கு உண்டோ சுகம் ?

சுயநலம் என்கிற எஜமானனின் நாய் போன்றது சந்தேகம் என்னும் குணம். அதனால்தானோ என்னவோ அதிகம் சந்தேகப் படுபவர்களுக்கு சந்தேகப்பிராணி என்று சொல்கிறார்கள் !

சிலருக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம். யார் எது பேசினாலும் செய்தாலும் அதில் உள்நோக்கம் ஒன்றைத் தேடுவார்கள். அப்படி செய்யும் போது பத்தில் ஒன்றோ இரண்டோ சரியாகப் போய்விடும். உடனே - ஜோதிடர்கள் போல-அதையே தம் திறமைக்கு சான்றாக சொல்லிக் கொண்டு மேன்மேலும் தம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களிலும் சந்தேகப் பார்வை கொண்டு விமரிசனங்கள் தருவார்கள்.

வேலை செய்யும் அலுவலகங்களில் அதிகாரிகளின் போக்கிற்கும் சொற்களுக்கும் தமது கற்பனையைச் சேர்த்து தாங்களும் பயந்து அடுத்தவர்க்கும் பீதி கிளப்பி விடுவார்கள். இதனால் தம் நிம்மதியையும் இழந்து அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பார்கள். சில அவசரக்குடுக்கைகள் அவ்விதமான ஹேஷ்யங்களை நம்பி வார்த்தைகளை உளறிக் கொட்டி சங்கடத்தில் ஆழ்வதும் உண்டு.

இந்த சந்தேகம் என்னும் குணம் மிகப்பெரும் ராமாயணக் காவியத்திற்கே அடிப்படையாகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் நம்பி மோசம் போயினர். கௌரவர்களின் வஞ்சக எண்ணங்களே அதில் விரவி வருகிறது. ஆனால் ராமாயணத்தில் முக்கியத் திருப்பங்கள் எல்லாமே சந்தேக மனப்பான்மைக்கு உள்ளானவர்கள் உருவாக்கியவைதாம். அடிப்படையில் நல்லவர்கள் ஆனால் சந்தேகத்திற்கு பலியாகி தமக்கும் பிறருக்கும் தீமை வரவழைத்துக் கொண்டனர்.

ஒரு வகையில் ராமாயணத்தை “சந்தேகக் காவியம்” என்று கூட சொல்லலாம்.

முதலில் கைகேயின் சந்தேகம்.

பின்னர் லக்ஷ்மணனுக்கு பரதன் மேல் ஏற்பட்ட சந்தேகம்.
[நல்ல வேளை ராமன் உடனிருந்ததனால் ஒரு அபத்தமான போர் தவிர்க்கப் பட்டது].

வாலிக்கு தன் தம்பி சுக்ரீவன் ஏமாற்றி விட்டதாக வந்த சந்தேகம்.

சீதைக்கு லக்ஷ்மணன் மேல் வந்த சந்தேகம்.

கடைசியாக விபீஷண்ன் மேல் ராவணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்.

இராவணன் நல்லவனா ? ஆணவம் நிறைந்தவன் ஆயினும் பல சிறப்பான குணங்கள் கொண்டவன் என்று போற்றப்படுபவன்.

”என் கண்முன்னே நிற்காதே போய்விடு” என்று பொங்கும் சினத்துடன் கூறினாலும் விபீஷணனையும் அவனைச் சார்ந்தவரையும் அவன் சிறையில் அடைக்காது விட்டானே, அது அவனுக்கு விபீஷணன் மேல் இருந்த நன்மதிப்பையும் அன்பையும் அல்லவா குறிக்கிறது !

ஆயவன் வளர்த்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும்நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ


[நம் பகைவருடன் நட்பு கொள்ள விழையும் நீ ,தன்னை வளர்த்த தந்தை இரணியன் உடலை திருமால் பிளக்கும் போது மகிழ்வுற்ற பிரகலாதனுக்கு, நிகர். தன் அழிவுக்கு விபீஷணனே காரணமாவன் என்பதை குறிப்பால் உணர்த்துதல்]

அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தனை ; பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்மையோ


என்றெல்லாம் கம்பர் சொல்லும் போது ராவணனுக்கு தன் தம்பி, எதிரிகளுடன் சேர்ந்து இன்னல் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்திருந்தது. ஆயினும் தன்னம்பிக்கை மிகுந்து, வானரக் கூட்டத்தோடு வந்திருக்கும் மனிதன், தன் வலிமைக்கு முன் ஏதும் செய்ய இயலாது என்கிற துணிவில் அவனை உயிரோடு தப்பிக்க விட்டான் என்பதும் புரிகிறது.

அண்ணன் தம்பி உறவு முற்றிலுமாக முறிந்து விட்டது.

வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையேயான மனப்பிளவும் வாலியின் அளவற்ற பலமும், ஆணவமும், சுக்ரீவன் தன் அரசையும் மனைவியையும் கபடமாகப் பறித்துக் கொள்ள செய்த சதி என்ற சந்தேகமுமே காரணமாயின.

மனம் நெருங்கியவரோடு ஏற்படும் பிளவு மனவேதனையைத் தருவதாகும். கபீர்தாஸரின் வரிகளில் சொல்வதானால்;

मेरे मन में परि गई, ऎसी एक दरार ।
फाटाफटिक पषान ज्यूं , मिलै न दूजी बार ॥


குடிகொண்டது ஐயம் என்னுள், உடைந்தது மனமும் இரண்டாய்
வெடித்தப் பாறையைப் போன்றே, ஒட்டாது மீண்டும் ஒன்றாய்


மாற்று
வெடித்தது ஐயம் என்னுள், பிளந்தது மனமும் அங்கே
வெடித்தப் பாறை போலே, இரண்டு ஒன்றாவது எங்கே

ஒருவருள் சந்தேகம் ஏன் தலையெடுக்கிறது என்றால் தம்முடைய தன்னலத்திற்கு ஏதேனும் பங்கம் வந்துவிடுமோ என்ற கவலையே முக்கிய காரணமாக இருக்கும்.

பல சமயங்களில் மனதில் ஏற்படும் பீதியின் காரணமாகவும் மனதில் சந்தேகக் குணம் புகுந்து கொள்கிறது.

சீதையின் மனதில் சந்தேகம் தலை தூக்காமலிருந்திருந்தால் லக்ஷ்மணனுடையக் காவலில் பத்திரமாக இருந்திருப்பாள். மாரீசனின் பொய் குரலை நம்பி பீதி அடைந்த போது லக்ஷ்மணன் கூறிய தைரியமான வார்த்தைகள் அவளுக்கு சமாதானம் தரவில்லை.

பயத்தின் உச்சியில் சிந்திக்கும் திறனிழந்து, அந்த உத்தம குணத்தானை ஏசி, பிறன்மனை நயத்தலாகிய வஞ்சக எண்ணம் கொண்டவன் என்று மாசுடைய உள் நோக்கங்களைக் கற்பித்து அவனுக்கு பெரும் மன வேதனையை உண்டாக்கி விடுகிறாள். வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்கே மனவேதனை தரும் குற்றச்சாட்டுகள் அவை.

அந்நிலையில் லக்ஷ்மணனின் மனது எப்படியிருந்திருக்கும் ? காதிலே ஈட்டியைக் கொண்டு துளைத்தது போலிருந்தது என்று வால்மீகி சொல்கிறார்.

[அதனால் தானோ என்னவோ கம்பராமாயணத்தில் கம்பர் அந்த குற்றச் சாட்டுகளை தவிர்த்து சீதையின் பெருமையை குறையாத வண்ணம் பாதுகாக்க முனைந்தார் போலும்].

धरती फाटै मेघ मिलै, कपडा फाटै डौर ।
तन फाटै को औषधि, मन फाटै नहीं ठौर ॥


வெடித்த மண்ணுக்கு மழையுண்டு, விரிந்த கிழிசலுக்கு தையலுண்டு
வெடித்த புண்ணுக்கு மருந்துண்டு, உடைந்த மனதுக்கு என்னவுண்டு ?


கபீர்தாஸரின் இந்த ஈரடிக்கு பொருத்தமான இன்னொரு காட்சியும் ராமாயணத்தில் வெகு முன்பே வந்து விடுகிறது.

கைகேயின் வரங்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தசரத சக்ரவர்த்தியின் உடைந்த மன நிலையை கம்பர் சொல்லும் போது

வீழ்ந்தான், வீழா வெந்துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா அக்கடலுக்கு ஓர் கரை காணான்
சூழ்ந்தான் துன்பம் சொற் கொடியாள் சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான்.


[கொடியாள் சொல்கொடு நெஞ்சம் போழ்ந்தாள்= கொடியவள் கடும் சொற்கள் கொண்டு நெஞ்சைப் பிளந்தாள்; புலர்கின்றான் =வாடுகின்றான் ]

கடுஞ் சொற்களை கொண்டு மன்னனின் மனதைப் பிளந்த அதே கைகேயிதான் சற்று முன்வரைக் கூட ராமன் மேலிருக்கும் பேரன்பினால் மந்தரையை ”அறிவற்றவளே நீதி அல்லாதவற்றை சொல்கின்ற உனது புன்மையான நாவை துண்டிக்காமல் விட்டு விடுகிறேன், இங்கிருந்து போய்விடு ” என்று கடிந்துரைத்தாள்

போதி என் எதிர் நின்று; நின் புன்பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன் ; புரம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய்
ஆதி, ஆதைன் அறிவு இலி அடங்குதி என்றாள்.


ஆனால் அத்தகையவள் மனதிலே மந்தரை விதித்த சந்தேகமெனும் விதை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

கோசலை தன்னையும் தன் மகனையும் தள்ளி வைத்து விட்டால் தசரதனின் காலத்திற்குப் பின்னால் தங்களுடைய நிலை என்னாகுமோ என்கிற சந்தேகம் கைகேயியை முறையற்ற வரங்களை கேட்க வைத்தது.

அன்றும் இன்றும் என்றும் சந்தேகமென்னும் நோய் மனிதர்களை தொடர்ந்து பீடித்து வருகிறது.

அரசியல், பதவிப் போராட்டங்களில் பயன்படுத்தப்படும் பிரித்தாளும் சூழ்ச்சி இந்த சந்தேகக் குணத்தை வைத்தே நடத்தப்படுவது. அது பஞ்ச தந்திரங்களிலே ஒன்று.

ஔரங்கசேப் மன்னனின் மிகப் பெரும் பலவீனமாகக் கருதப்பட்டது இந்த சந்தேகக் குணந்தான். அதனால் அவன் இழைத்த அநீதிகள் தான் எத்தனை. பெற்ற தந்தை ஷாஜஹானை எட்டு வருட காலம்- சாகும்வரையில் -சிறை வைத்திருந்தான். உடன் பிறந்தவனும் அரசுக்கு உரியவனும், சிறந்த பண்புகளுடையவனுமான தாரா ஷுகோ-வை அவமானப்படுத்திக் கொலை செய்தான். அவனைத் தவிர இன்னும் இரு சகோதரர்களையும் கொன்று தன் அதிகாரத்தை நிலை நாட்டினான். தன் மகன் பகதூர் ஷா வையும் சில காலம் சிறை வைத்திருந்தான்.

இவையெல்லாம் குடும்பத்துள்ளே நடைபெற்ற அநீதிகள். முகலாய ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமானதே ஔரங்கசேப்-பின் முறையற்ற ஆட்சிதான் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

சந்தேகக் குணம் உடையவர்களின் கையில் அதிகாரம் இருந்தால் பொறுப்பற்றவர்களாகி விடுகிறார்கள். அது அழிவுக்கு வழிகோலும். அதிகாரம் அற்றவர்களானால் கவலையுற்று நோய் வயப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு சந்தோஷம் என்பது கிடையாது.

அதனால்தான் பகவத்கீதை (4-40)

ந அயம் லோக: அஸ்தி , ந பர: , ந ஸுகம், ஸம்ஷய ஆத்மன:

’சந்தேகிகளுக்கு இவ்வுலகத்திலும் பர உலகத்திலும் சுகம் என்பது கிடையாது' என்று அறுதியிட்டு சொல்கிறது.

சந்தேகிகளாக இருந்து மனக்கஷ்டத்திற்கு உள்ளாவதை விட, நம்பி மோசம் போனவர்களாகி கஷ்டப்படுவது எவ்வளவோ மேல். பாண்டவர்களுக்கு கண்ணனுடைய துணை இருந்தது போல நம்பியவர்கள் பக்கம் இறைவன் துணை எப்போதும் இருக்கும். அவர்கள் கடவுள் நம்பிக்கையால் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மனோதைரியம் பெற்று அறம் வ்ழுவி நடப்பதில்லை.

அவ்வகை மனோ தைரியம் இல்லாதவ்ர்கள் தான் சந்தேக புத்தி உடையவராகி, தம் புத்திசாலித்தனத்தினாலேயே எல்லாவற்றையும் எதிர்கொள்ள எத்தனிக்கிறார்கள். அப்போது இறைவன் தூர நின்று வேடிக்கைப் பார்க்கிறான். ஆகவே சந்தேகிகள் இறைவன் மேல் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அது உண்மையான பக்தியாக இருப்பதில்லை.