Monday, October 25, 2010

கே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்

சிறப்பு இடுகை -1 ( இங்கே சுட்டவும் ) -தொடர்ச்சி


புதிரா புனிதமா : கபீர்

வணக்கம் மக்களே!
புதிரா புனிதமாவில் வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை!
நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க!
இருந்தாலும், வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் தேடல் கூட வாழ்த்துக்கள்! விடைகளை ஒவ்வொன்னாப் பார்க்கலாமா?

1. கபீரைப் போலவே இந்த நாயன்மார்! இவரும் ஒரு நெசவாளர்? யார் இவர்? = நேச நாயனார்!

சிறந்த சிவனடியாரான இவர், அடியார்களுக்கு ஆடை தைத்துக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்தார்! அன்னதானம் எல்லாரும் பண்ணறது தான்! ஆனால் ஆடைதானம் என்று மானங் காக்கும் தொண்டினை அன்றே செய்த நல்ல உள்ளம்!

Other Choices-இல் அமர்நீதி நாயனார், உங்களைக் குழப்பவென்றே கொடுத்தது! :)
அதான் எப்பமே பண்ணுவியே-ங்கிறீங்களா? ஹா ஹா ஹா! குழம்பிக் கிடைக்கும் தெளிவு தான் ரொம்ப நாள் நிக்கும்! Water "fills" only in empty glass :)
அமர்நீதி நாயனார் ஈசனுக்குக் கோவணம் காத்துக் கொடுத்தவர்! ஆனால் நெசவாளர் அல்ல!
தண்டியடிகள் பார்வையற்றர் - இருந்தும் குளம் கட்டுவித்து, தண்ணீர்த் தாகம் தீர்த்தவர்!
திருநீலகண்டர் குயவர்! மனைவியிடம் அல்லாது இன்னொரு இடத்தில் லேசு மாசாக நடந்ததற்கு, மனைவியின் சத்தியத்தால் மனைவியிடமே நெருங்காது, காலமெல்லாம் ஒழுக்கம் காத்து நின்றவர்!

2. கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்? = குரு அர்ஜூன் தேவ்

குரு நானக் முதல் சீக்கிய குரு! கபீரின் சமகாலத்தவர் என்றும் சொல்வார்கள்!
குரு கோவிந்த் சிங் கடைசி குரு!
குரு அர்ஜீன் தேவ் தான் ஐந்தாம் குரு! நடுவாக உதித்தவர்! இவரே தனக்கு முன்பிருந்த குருக்களின் வாய்மொழிகளை எல்லாம் திரட்டி, குரு கிரந்த சாகிப் என்று எழுதுவித்தவர்!

பின்னாளில் இதர குருக்களின் வாசகமும் இதில் ஒவ்வொன்றாகச் சேர்ந்தது! 10 சீக்கிய குருக்கள் அல்லாது 15 மகான்கள் (பகத்) சொன்னதும், இதில் இடம் பெற்றுள்ளது!

அதில் ஒன்று தான் கபீரின் பீஜக்!
இராமானுச வழிவந்த இராமனந்தரின் வாசகமும் குரு கிரந்த் சாகிப்பில் உண்டு!


3. கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்? = இராமானந்த தீர்த்தர்

இவரே கபீரின் மானசீக குரு!
கபீர் வளர்ப்பால் முஸ்லீம் என்பதால், சுற்றி இருந்த சில அக்ரஹார சீடர்கள் விலக்க, அவமானப்பட்ட கபீர், அழுது கொண்டே கங்கைப் படித்துறையில் படுத்துறங்கி விட்டார்!

விவரம் அறியாத இராமானந்தர், யாரோ இரண்டு வீர புருஷர்கள் (இராம-இலக்குவன்) தன் மடத்தை விட்டுப் போவதாக விடிகாலைக் கனவு கண்டு,
ஐயோ, பாகவத அபச்சாரம் (அடியார் பழித்தல்) நடந்து விட்டது போலிருக்கே என்று பதறி,

இதர வகுப்பாரை விசாரிக்க, உண்மை அறிந்து, எதற்கு கபீரை விரட்டினீர்கள் என்று மற்றவர்களைக் கடிந்து கொண்டார்!
உடனே கங்கைக் கரையில் குளிக்கப் போகும் போது, படியில் கால் வைக்க, அது கபீரின் மேல் பட்டு விட..."சீதாராம்" என்று இராமானந்தர் அலற, கபீர் எழுந்து வணங்க, அதுவே தாரக மந்திர உபதேசம் ஆயிற்று! கபீர் சீடர் ஆனார்!

4.

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்
என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி...
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;" என்று துவங்கும் ஒரு பெரும் தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ? = கம்பர்

கம்ப ராமாயணம் - கடைசிக் காண்டமான யுத்த காண்டத்தின் முதல் பாட்டு!

ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா!

சான்சே இல்ல-ல்ல? கம்பன் கவியே கவி! என்னமா நச்-ன்னு சொல்றாரு! உளதென்று உரைக்கின் உளதேயாம்! அப்படியே நம்மாழ்வார் பாசுரம் போலவே இல்ல? = உளன் எனில் உளன்!
பின்னாளில் கண்ணதாசன் இதைத் தான் எழுதினாரு! = உண்டென்றால் அது உண்டு!


5. கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

கபீர் + தாசர் = Great (Allah) + Servant = சிறப்பானவரின் அடிமை!
அல்லாஹ் என்னும் இறைவனின் திருப்பெயர்களுள், 37ஆம் திருநாமமாக, திருக்குர்ஆனில் வருவது கபீர் என்ற நாமம்!


6.கபீரின் சொந்த ஊர் எது? = காசி (வாரணாசி)

காசியில் வாழ்ந்த நெசவாளத் தம்பதிகள் (இணையர்கள்) நீரு-நீமா என்பவர்களின் பிள்ளையே கபீர்!
பிறப்பால் இந்து, முதல் மூன்று வருணத்துக்குள் பிறந்தவர் என்றெல்லாம் சில சாதி அபிமானிகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பார்த்தனர்!
கபீர் பிரபலமாகி விட்டார் அல்லவா! வள்ளுவரை மதத்துக்குள் அடைப்பது போலத் தான், கபீரை அடைக்கப் பார்த்தார்கள் போலும்! ஆனால் கபீர் இரு மதங்களின் மூட வழக்கங்களையும் போலியான சாஸ்திர-சம்பிரதாயங்களையும் சேர்த்தே தான் எதிர்த்தார்!

7. கபீரின் சமாதி எங்கு உள்ளது? = மகர், கோரக்பூர்

பண்டிதர்களால் காசியை விட்டுத் துரத்திய பின், கபீரின் இடம் இதுவானது!
பலரும் மகர் பாவப்பட்ட ஊர் என்று பேச, இறக்கும் தருவாயில் காசியில் இறந்தால், எவ்வளவு பாவியானாலும் ஸ்டெரெயிட் மோட்சம் என்று குறுக்கு வழிக் கால்குலேஷன்களைச் சொல்ல...
அதை மறுக்க நினைத்த கபீர், கோரக்பூர் அருகிலுள்ள இந்த மகரிலேயே சமாதியானார்! இன்றும் சமாதிக் கோயில் உள்ளது!


8. கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது!
வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!
இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக் கொடுத்தனர்? = சிக்கந்தர் லோதி

பல வெற்றிகள் கண்டு, இறுதியில் குவாலியர் மகாராஜா மான் சிங்கிடம் தோற்றுப் போன சிக்கந்தர் லோடியே இவர்! சமயப் பொறையாளர் அல்லர்! இன்று தில்லியில் உள்ள Lodi Gardens இவரின் சமாதியே!

கபீர், போலியான சாஸ்திர-சம்பிரதாய வழக்கங்களை நையாண்டி செய்து பாடுவதால், பொத்துக் கொண்டு வந்து விட்டது பல பேருக்கு!
கோள் சொல்லுதல் பாவம் என்பது தான் சாஸ்திரம்! ஆனால் கபீர் மேலுள்ள வெறுப்புக்காக, சாஸ்திரத்தை மீறத் துணிந்தனர்கள், அதே சாத்திரம் பேசுவோர்! அது தான் வேடிக்கை! :)

மேலும் சுன்னத் போன்ற சில சடங்குகளைப் பற்றியும் கபீர் பாடியதால், இவர்களும் சேர்ந்து போட்டுக் கொடுக்க, சிக்கந்தர் லோடியோ கபீர் பார்ப்பதற்கு முஸ்லீம் பெரியவர் போல இருந்ததால் விட்டு விட்டான்! ஈஸ்வர-அல்லா தேரே நாம் என்று சொன்ன துறவியின் உயிரை எடுத்த அவன், கபீரை மட்டும் கொல்லாது, ஊரை விட்டு மட்டும் அகன்று விடுமாறு சொல்லி விட்டான்! கபீரும் காசியை விட்டு, கோரக்பூர் சென்று தங்கலானார்!


9. கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா? அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா? = இல்லை!

கபீர் சைவ உணவு-அசைவ உணவு என்று எதையும் குறித்தோ, விலக்கியோ சொல்லவில்லை! ஜீவ காருண்யம் என்னும் உயிர்கள் பால் கருணை என்பது மட்டுமே பாடியுள்ளார்! அதையே சீக்கியர்களும் புலால் மறுத்தலாகத் தங்கள் நூலில் கொண்டுள்ளார்கள்!

10. இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?" - சொன்னது யார் ? = இயேசு பிரான்!

ஏழு ரொட்டித் துண்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்த மாயச் செயலினாலும்,
பின்பு பெத்செடாவில் பார்வையற்றவனைப் பார்க்க வைத்த பின்பும், சீடர்களிடம் தன் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே பேசும் போது, இயேசு பிரான் இவ்வாறு சொல்கிறார்!

இது புனித பைபிள் வாசகம்!
For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? Or what shall a man give in exchange for his soul? - Mark 8:36, Matthew 16:26
உலக ஆசையின் களிப்புக்காக பலதை விலை கொடுக்கலாம்! ஆனால் ஆன்மாவையே விலை கொடுத்து விட்டால்? அது லாபமா? நட்டமா?
- இது இயேசுபிரான் காட்டும் நமோ (எனதில்லை) என்னும் ஆன்ம சிந்தனை! அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்! அடைய நின்றனரே!

உஷ்ஷ்ஷ்...அப்பாடா...பதில் சொல்லியாச்சி பத்துக்கும்! என் பரிசு எங்கே?
---------------------------------------------------
பதில் சொல்லப்படாத ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமே!

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?


கே.ஆர்.எஸ் எவ்வளவுதான் தன்னை " மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது!, மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன்! :) சொல்லிக்கொண்டாலும் அவரால் தன்பெயரினுள்ளேயே கபீரை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை மறுக்க முடியாதே !

Kannabiran Ravishankar ஐ கொஞ்சம் மாற்றிப் போடுங்கள்
Kabirannan Ravishankar வருகிறதா இல்லையா !!! :))))
-------------------------------------------
வாசகர்களை கவரும் வகையில் ஒரு நல்ல இடுகையை தந்து இந்த வலைப்பூவை சிறப்பித்த கே.ஆர்.எஸ் வாழி வாழி.

தங்கள் எழுத்துப்பணி எப்போதும் போல் சிறப்பாகத் தொடரட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கபீர் வலைப்பூ வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி.

--------------------------

அடுத்து வரப்போவது யாரு ??????


Friday, October 22, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1

ஆசிரியர் அறிமுகம் :

இந்த இடுகையின் விருந்து ஆசிரியர் பலரும் மிக நன்கு அறிந்த ஒரு வலைப்பதிவாளர்.

அவரை நான் கபீரண்ணன் என்று அழைப்பது உண்டு. :))
அவருடைய வலைப்பூ கபீரின் கனிமொழிகள் வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர் என்பது மட்டுமல்ல, எழுதும் திறத்திலும் அவர் என்னை விட கைத்தேர்ந்தவர். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தீர்த்து விடுவார்.

தற்போது பழந் தமிழிலக்கியங்களில் திருமால் பற்றிக் காணப்படும் குறிப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் தனித்தனியாக பதிந்து வருகிறார்.

இவைகளினால் நம் இதிகாசகங்கள் எவ்வளவு தொன்மையானது என்பதும் இந்நாட்டு மக்களின் மனதில் எப்படி இரண்டறக் கலந்து உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மிக நல்ல திறனாய்வு.

இயல்பான பேச்சு வழக்கைப் பயன்படுத்தி அதில் நகைச்சுவை இழையோடும் வகையில் கருத்துகளை வழங்கும் திறமைதான் அவருக்கு மிகப்பெரும் வாசகர் வட்டத்தைத் தேடித் தந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

தமிழ்மணம் நடத்திய சிறந்த ஆன்மீக இடுகைக்கான போட்டியில் பெரும்பாலோர் வாக்குகளைப் பெற்று பரிசைத் தட்டிச் செல்பவர் என்பதே அதற்கு சான்று.

அவருடைய வலைப்பூவின் பெயர் மாதவிப்பந்தல். (The cat is out of the bag !!!)இதைத் தவிர இவர் பங்கேற்கும் பிற வலைப்பூக்கள் முருகனருள், ஆச்சார்ய ஹ்ருதயம், அம்மன்பாட்டு. இவை நானறிந்தவை, அறியாதவை எவ்வளவோ ! :)

ஆம், அன்பர்களே, வெகுவான வாசகர்களின் அபிமானம் பெற்ற

கே.ஆர்.எஸ் என்னும் Kannabiran Ravishankar

இந்த சிறப்பு இடுகை வழங்குகிறார்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று உடனடியாக ஒரு இடுகையை தயாரித்து சிறப்பு ஆசிரியராக ஒரு பதிவு வழங்க கே.ஆர்.எஸ். முன்வந்திருப்பது கபீர் வலைப்பூவின் அதிருஷ்டம் . 2007 ஆம் வருடத்திலிருந்தே இவர் நடத்திவரும் புதிரா -புனிதமா கேள்வி பதில் பாணியில் இம்முறை கபீரை எடுத்துக் கொண்டிருக்கிறார். வாசகர்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாறுதலாக இருக்கும்.

அவருக்கு மனமார்ந்த நன்றி. இது வெறும் கேள்வி பதில் அல்ல, அவர் ஆசிரியர் மட்டும் அல்ல. இது ஒரு சின்ன போட்டி அதற்கு அவர் நடுவரும் கூட. போட்டி மற்றும் பரிசு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனி கே.ஆர். எஸ் பேசுவார்.

கபீர் என்பவர்...

கவிஞரா? ஆன்மீகவாதியா?
தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
சாஸ்திர விற்பன்னரா?
சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
கபீரின் தோஹா என்னும் ஈரடி இந்திக் குறள் தொடர்ந்து இந்தப் பதிவில் பரிமளிக்கத் தான் போகிறது!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர் மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல! அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!


Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!

முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் மிக விரும்பும் வலைப்பூவில்! இதோ!

புதிரா? புனிதமா?? = கபீர்!


1

கபீரைப் போலவே இவரும் ஒரு நெசவாளி ? யார் இவர்?

அ) திருநீலகண்டர்

ஆ) நேச நாயனார்

இ) அமர்நீதி நாயனார்

ஈ) தண்டி அடிகள்

2

கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன! சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில்! இதைத் தொகுத்தது யார்?

அ) குரு ராம் தேவ்

ஆ) குரு கோவிந்த் சிங்

இ) குரு நானக்

ஈ) குரு அர்ஜூன் தேவ்

3

கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்?

அ) துளசி தாசர்

ஆ) ஜெய தேவர்

இ) இராமனந்த தீர்த்தர்

ஈ) துக்கா ராம்

4

ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;"
என்று துவங்கும் ஒரு தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ?

அ) சேக்கிழார்


ஆ) நம்மாழ்வார்


இ) பாரதியார்


ஈ) கம்பர்


5

கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

அ) சிறப்பானவரின் பக்தர்

ஆ)கடவுளின் அடிமை

இ) சிறப்பானவரின் அடிமை

ஈ) கடவுளின் காதலர்

6

கபீரின் சொந்த ஊர் எது?

அ) காசி

ஆ) கயா

இ) கோரக்பூர்

ஈ) கோலாப்பூர்

7

கபீரின் சமாதி எங்கு உள்ளது?

இவ்வளவு பெரிய மகானின் உடல் மீது இந்து முஸ்லீம் பிரச்சனை எழ, துணியை விலக்கிய போது, ரோஜாக்கள் மட்டுமே இருந்தன என்பது வழக்கு! ஒரு பகுதி ரோஜாக்களை எரித்தார்கள்! இன்னொரு பகுதி ரோஜாக்களைப் புதைத்தார்கள்! இன்றும் சமாதியில், அடக்கமான இடம்/சாம்பலான இடம் என்று இரண்டுமே உள்ளது!

அ) மகர், கோரக்பூர்

ஆ) காசி (வாரணாசி)

இ) பத்ராச்சலம்

ஈ) பண்டரிபுரம்


8

கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை! இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது! வெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது!

இரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக கொடுத்தனர்?

அ) காசி மகாராஜா

ஆ) குவாலியர் மகாராஜா மான்சிங்

இ) சிக்கந்தர் லோதி

ஈ) அவுரங்கசீப்

9


கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா? அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா?


அ) ஆம்


ஆ) இல்லை

10

இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். "What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"சொன்னது யார் ?

அ) ஏசுபிரான்
ஆ) முகம்மது நபிகள்
இ) புனித தாமஸ்
ஈ) இக்னேஷியல் லயோலா


எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கும் முதல் இரண்டு வாசகர்களுக்கு பரிசு உண்டு.

ராமகிருஷ்ண ஆசிரமத்தின் வெளியீடுகளில் (online e-store ) ரூ 250 மதிப்பிற்கு புத்தகங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவிற்குள்- ரா.கி.மி கட்டுதிட்டங்களுக்குட்பட்ட விலாசத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் விடைகள் -இந்திய நேரப்படி 24 ஆம்தேதி மாலை 6 மணிக்குள் -பின்னூட்டப்பெட்டி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

எவையேனும் தவறு என்று கருதி மாற்று விடைகளை அளித்தால் பின்னர் இடும் பின்னூட்ட சமயமே கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தகுதியான காரணங்கள் இருந்தால் பரிசுத் தொகை இருவருக்கும் மேற்பட்ட பேர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படலாம். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

பங்கேற்கும் அனைவருக்கும் கூட ஒரு பரிசு உண்டு. அது பின்னர் தெரிவிக்கப்படும்.
---------------------------------------------------------------------

இப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?

Wednesday, October 13, 2010

கண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி

மனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள்.

" நீ வேணுமானா போயிட்டு வா. எனக்கு அங்க யாரையும் தெரியாது." இது கணவனின் அணுகுமுறை. நிர்பந்தத்தை அனுசரித்து தனியாக போவதா வேண்டாமா என்று மனைவி முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

சிறிது நாட்கள் கழித்து, கணவரது அதிகாரிக்கு பிரமோஷன் பார்ட்டி. தம்பதி சமேதராய் வர அழைப்பு.

"உங்க பாஸ்... நீங்க போகணும். நானெதுக்கு? நாளைக்கு பேரண்ட்ஸ்-மீட்டிங். பார்ட்டிக்கெல்லாம் வந்தா காலைல வேலையாகாது. என்னால முடியாது ".

"ஆமா பப்லுவோட ப்ளே-ஹோம் பேரண்ட்ஸ் மீட்டிங் தான் ரொம்ப இம்பார்டண்ட்-டாக்கும் ! எல்லாம் வெறும் சாக்கு" சீறினான் கணவன்.

"அன்னிக்கி நீங்க மட்டும் நித்யா வீட்டுல கூப்பிட்ட போது வந்தீங்களா? எனக்கும் உங்க ஆபீஸ்காரங்க யாரையும் தெரியாது. அங்க வந்து சும்மா வெத்து சிரிப்பு சிரிச்சுகிட்டு பொழுது போக்க முடியாது " என்பது மனைவியின் தீர்மானமான பதில்.

உண்மையில் இருவரும் இரண்டு சந்தர்பங்களிலும் 'தம்மை' முன் வைக்காது வாழ்க்கைத் துணையின் சந்தோஷத்திற்காக செயற்பட்டிருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகி இருக்கும். ஆனால் இங்கே அன்பு வளர வேண்டிய தருணங்கள் அன்பு உடைவதற்கு காரணமாகி விடுகின்றன.

இப்படியான எண்ணங்கள் கணவன் மனைவி என்று மட்டுமல்லாமல் சகோதர சகோதரியரிடையே, பெற்ற தாய் தந்தையரிடையே நீயா நானா என்னும் ஏட்டிக்கு போட்டியாய் நிதானமாக வேர்விட்டு, அன்பெனும் மாளிகையின் அஸ்திவாரத்தை விரிசல் அடையச் செய்கிறது.

மனிதர் மனம் தனக்கு முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு போவதற்கு விரும்புவதில்லை. நாம் சந்திக்கப் போகும் தருணங்கள் நம்முடைய சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தராது என்று நினைத்தால் அதை தவிர்க்கவே விரும்புகிறோம். சுயகௌரவம் என்ற பெயரின் பின்னால் ஒளிந்து கொள்ளும் இந்த கர்வம் அல்லது ஆணவமே ஆன்மீக முன்னேற்றத்தை தடுக்கும் பெரிய திரை ஆகும்.

அதனால்தான் கபீர்தாஸர் ’அன்பெனும் மாளிகைக்குள் வரவேண்டுமானால் உன்னுடைய சுயகௌரவத்தை விட்டு வா’ என்று அறிவுறுத்துகிறார். இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகிறது. அங்கே கர்வம் என்பதற்கு இடமே இல்லை.

कबीर यह घर प्रेम का, खाला का घर नाहीं ।
सीस उतारे हाथि करि, सो पैसे घर माहीं ॥


பக்தர்தம் இல்லமிது, கபீரா, அத்தையின் இல்லம் போலவன்று
பக்திக்கு சிரம்தாழ்ந்து பணிந்திடு, பக்தருக்கே உண்டு யிடமிங்கு


மாமியார் வீட்டுக்கு மருமகன் வருகிறாரென்றால் பலத்த வரவேற்பு உபசாரம் எல்லாம் இருக்கும். எல்லா மனிதருக்கும் தம்மை பாராட்டி சீராட்டினால் மனதுக்கு உவகை அளிக்கும். அது வெறும் அற்ப மகிழ்ச்சி. அது இறைபக்தி தரும் மகிழ்ச்சிக்கு ஈடாக முடியாது. இறைபக்தி வேண்டுமானால் யானையை பழக்குவது போல மனதையும் பழக்க வேண்டும்.

எந்த சாதனைக்கும் உழைப்பு வேண்டும். பக்திக்குத் தேவை மன ஒருமை. அதுவும் ஒரு உழைப்புதான். அதற்கும் கஷ்டப்பட வேண்டும். இறைவன் நாமத்தை சொல்லிச் சொல்லி மனமாசுகளை கழுவ வேண்டும். தானெனும் இறுமாப்பை ஒழிக்க வேண்டும். இவை யாவும் மன உழைப்பில்லாமல் கூடுவது சாத்தியமல்ல. இது மாமியார் வீட்டிற்கு போவது போன்ற சுலபமான செயல் அல்ல என்று கபீர் வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.

மனதைப் பழக்குவதற்கு அதில் தேர்ந்த அடியவர்களுடன் சத்சங்கம் கொள்ள வேண்டும். அவர்களிடையே ஏழை பணக்காரர் இல்லை. மேற்சாதி-கீழ்சாதி, அரசன்-ஆண்டி போன்ற வேறுபாடுகள் போன்ற எதுவும் இருக்காது. இணக்கமாக அவர்களுடன் பழகி அவர்களின் சேவையில் ஈடுபட்டால் சமபாவனையுடன் யாவரையும் கண்டு பழகும் திறமை கைகூடும். அப்படி கிருஷ்ணரின் பக்தியில் தோய்ந்திருந்த மீராவை "தான்" என்கிற மனப்பான்மை அண்ட முடியவில்லை. அதை எப்படி துறந்து விட்டார் என்பதை அவர் பாடல் ஒன்றில் காணலாம்.

அவருள் கிருஷ்ணனுக்கான பக்தி ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை ?

मेरे तो गिरधर गोपाल दूसरो न कोई ॥
கிரிதர கோபாலனன்றி வேறொருவர் என் பதி ஆகார்
जाके सिर मोर मुकुट मेरो पति सोई ।
மணிமுடியும் பீலியும் சிரந்தரித்த அவனே பதி
अंसुवन जल सीचि सीचि प्रेम बेलि बोई ।
கண்ணீரால் பிரேமையெனும் கொடி வளர்த்தேன்
अब तो बेल फैल गई आणंद फल होई ॥
கொடி படர்ந்து பரப்புது ஆனந்தம் இப்போது

तात मात भ्रात बंधु आपनो न कोई ॥
தாய் தந்தை, சோதரன், பந்து என என்னவர் இல்லை எவரும்
छांडि दई कुलकी कानि कहा करिहै कोई ।
குலப் பெருமை விட்டொழித்தேன், யார் என்ன(கேடு)செய்வர் ?
संतन ढिग बैठि बैठि लोकलाज खोई ॥
அடியாரோடு அமர்வேன் நாணம் ஏதுமில்லை யெனக்கு
चुनरी के किये टूक ओढ लीन्ही लोई ।
முக்காடு விலக்கினேன் முரட்டாடை தரித்தேன்
मोती मूंगे उतार बनमाला पोई ॥
முத்துச்சரத்தை விட்டு வனப்பூச்சரம் அணிந்தேன்
दूध की मथनियां बडे प्रेम से बिलोई ।
அதி பிரேமையுடன் கடைந்தேன் பாலை
माखन जब काढ़ि लियो छाछ पिये कोई ॥
வெண்ணெய் கிடைத்த பின் கடை-நீர் அருந்துவர் யாரோ?
भगति देखि राजी हुई जगत देखि रोई ।
பக்தரைக் கண்டு எனக்கு பேருவகை, உலகோரைக் காணப் பெருகுது கண்ணீர்
दासी मीरा लाल गिरधर तारो अब मोही

அடிமை மீரா வேண்டினள் கிரிதரா, கடைத்தேற்று என்னையே

[பண்டிட் ரவிஷங்கர் இசையமைப்பில் வாணி ஜெயராம் அவர்களின் மதுரமான குரலில் இந்த பாடலை கேளுங்கள்].

mere_tho_giridhar....


மீரா பல தேசங்களையும் சுற்றி துவாரகையை அடைந்தார். ராணாவின் அரசாட்சி பல சோதனைகளுக்கு உள்ளாகியது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மீராவிற்கு இழைத்த துரோகமே காரணம் என்று கருதி மன்னிப்புக் கேட்டு மீண்டும் தன் ராஜ்ஜியத்திற்கு வந்து விடும்படி தானே சென்று வேண்டிக் கொண்டான். அழைப்பை மறுத்து விடுகிறார் மீரா. காலமெல்லாம் கண்ணனின் நினைவிலேயே அவள் காலம் கழிக்க முடிவு செய்து விட்டாள்.

जो तुम तोडो पियो मैं नही तोडू।
நீ கைவிட்டாலும் அன்பே ! நான் உன்னை விடமாட்டேன்
तोसु प्रीत तोडी कृष्ण कोन संग जोडू
உன் அன்பை விட்டு கிருஷ்ணா வேறு யாரிடம் செல்வேன் ?
तुम भये तरुवर मैं भई पखिया।
மரங்களானால் நீ, பறவையாவேன் நான்
तुम भये सरोवर मैं तोरी मछिया॥ जो०
சரோவரம் ஆனால் நீ, மீனாவேன் நான்
तुम भये गिरिवर मैं भई चारा।
மலையானால் நீ, நான் புல்லாவேன் .
तुम भये चंद्रा मैं भये चकोरा॥ जो० (ஜோ தும்)
நிலவானால் நீ நான் சகோரம் ஆவேன்
तुम भये मोती प्रभु हम भये धागा।
முத்து ஆனால் நீ, கோர்க்கும் சரடாவேன்
तुम भये सोना हम भये स्वागा॥ जो०
தங்கம் நீயானாய், நகையாவேன் நான் (ஜோ தும்)
मीरा कहे प्रभु ब्रजके बाशी।
மீராவின் முறை கேளாய், விரஜ்(தேச) வாசியே
तुम मेरे ठाकोर मैं तेरी दासी॥ जो०॥
நீ எனது தலைவன் நான் உன் அடிமை

இந்த பாடலையும் வாணிஜெயராமின் குரலில் கேளுங்கள். ஒலிநாடா மூலம் இந்தப் பாடலைக் கேட்டுக்கேட்டு நாடாவே தேய்ந்து விட்டது !:))
Get this widget | Track details | eSnips Social DNA


ஏமாற்றத்துடன் திரும்பிய ராணா சில பக்தர்களை அழைத்து எப்படியாவது மீராவை மீண்டும் சித்தோர் ராஜ்யத்திற்கு அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டான். அவர்களும் துவாரகையை அடந்து அவரது சத்சங்கத்தில் பங்கேற்று சில நாட்கள் அங்கேயே தங்கி தமது விண்ணப்பத்தை அவரிடம் வைத்தனர். மீராவின் முடிவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. பெரும் ஏமாற்றமடைந்த அவர்கள் கடைசி முயற்சியாக “ தாங்கள் ஊர் திரும்பாவிடில் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம்” என்று சொல்லி அவரை சம்மதிக்கச் செய்ய முயன்றனர். மிகவும் தர்மசங்கடமாயிற்று மீராவுக்கு. ’தன்னால் அடியவர்களுக்கு துன்பம் ஏற்படுவதா? ’

”நாளை காலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள் “ என்று அவர்களை வேண்டிக் கொண்டார். அவர்களும் இரவை சந்தோஷமாகக் கழித்தனர். ஆனால் மறுநாள் காலையில் மீரா எங்கும் காணப்படவில்லை. துவாரகநாதர் கோவிலைத் திறந்தால் அங்கே கிருஷ்ணனின் விக்கிரகத்தின் மீது மீராவின் ஆடையின் ஒரு பகுதி காணப்பட்டது. கண்ணனை நினைந்து நினைந்து அவனுடனேயே இரண்டறக் கலந்து விட்டார் என்பதை அந்த துண்டு வஸ்திரம் சூசகமாகத் தெரிவித்தது போலும்.

மீராவின் பக்தி மிக அசாதாரணமானது. ஆண்கள் அதிகாரம் மண்டியிருக்கும் ஒரு கலாசாரத்தில் தனியாகப் போராடி தன் பிரிய தெய்வமான கிருஷ்ணனுடன் அவள் இணைந்த பக்தி எவ்வளவு நூற்றாண்டுகள் ஆயினும் பக்தர்களுக்கு நம்பிக்கை விளக்காகும். அதனை கபீர்தாஸ் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்

भक्ति महल बहु ऊंच है , दूरहि ते दरशाय ।
जो कोई जन भक्ति करे, शोभा बरनि न जाय ॥


வெகு உயரம் பக்தியெனும் கோபுரம், வெகுதூரத்திலும் தரிசனம் தருமே
வெகுவாய் பக்தியில் திளைப்போர்க்கு, அகலாது அது தரும் விம்மிதமே
(விம்மிதம் = Admiration, அதிசயம் )

உயரமான கோபுரத்தை மீராவின் அளவற்ற பக்தி என்று வைத்துக்கொண்டால், தூரத்து காட்சி என்பதை நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் அவர் புகழ் என்கிற காட்சியாகக் கொள்ளலாம். மனதில் பக்தி நிறைந்தவர்களுக்கு அவருடைய பக்தி இன்றும் விம்மிதம் தருவதை எவரும் மறுக்க முடியாது.


மீராபாய் மந்திர் : நன்றி indianetzone.com

மீராவைப் பற்றி அறிந்து கொள்ள சில நல்ல வலைத்தளங்கள்.
http://miramadhurya.vndv.com/
http://www.chittorgarh.com/
http://www.freeindia.org/biographies/greatdevotees/mirabai/page4.htm

---------------------------------------------------------------------------

என் கணக்கிற்கு இது நூறாவது பதிவு. இடையே ஒரு பதிவு தேன்கூடு திரட்டி தொடங்கிய கல்யாண் அவர்களின் மறைவிற்காக அஞ்சலி இடுகையாக -கட்டுரை வடிவில்லாமல் -வெளியிடப்பட்டது. அதனால் கூகிள் கணக்கிற்கும் எனக்கும் சற்று வேறுபாடு :)

அறிவிப்பு :
கபீர் வலைப்பூவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பின்னூட்டங்களை -அவர்களே களைத்து போகும் அளவுக்கு- இட்டு உற்சாகமூட்டி வந்த சில
பெரும் வலைப்பதிவு ஆசிரியர்களுக்கு எப்படி கைம்மாறு செய்யமுடியும் என்று யோசித்திருந்தேன்.

பெரும்பான்மையான வாசகர்கள் ரீடரிலோ நேரடி அஞ்சலிலோ படித்து விடுவதால் பல பின்னூட்டங்களில் கிடைக்கும் நல்ல கருத்தாடல்களை தவற விடுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

அதனால், ஏன் அவர்களைக் கொண்டே சில கட்டுரைகளை இடச்செய்து சிறப்பு விருந்தினர் இடுகைகளை அளிக்கக் கூடாது எனத் தோன்றியது.

நேரடி இடுகையாக -சிறப்புப் பதிவாக -வரும்போது அவர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரு முழுப்பதிவாக எல்லோராலும் படிக்கப் பெறும். அவர்கள் தத்தம் பாணியிலே மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என்பதையும் வாசகர்கள் அறிவர்.

ஒரு சிலரிடம் தொடர்பு கொண்ட போது மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து இவ்வலைப்பூவை பெருமைபடுத்தி உயர்த்த முன் வந்துள்ளனர். இன்னும் சிலரோடு தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுரைகளின் மையக்கருத்து கபீரின் கருத்துகளாகவே இருக்கும்.

பல அன்பான வாசகர்கள் தனிமடலில் எழுதியும் தொலைபேசி மூலமும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அவர்களும் எழுத முன்வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். விவரங்கள் உதவி வேண்டினால் தனி மடலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

கபீருடனும் பிற மகாத்மாக்களுடனுமான நமது பயணம் அவர்களின் அருளால் இனிதாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். நன்றிThursday, October 07, 2010

அழலை நாடும் விட்டில் பூச்சி

அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே சிறிது நேரம் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக எதையும் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. வழக்கம்போல் மனம் ஒன்று விட்டு ஒன்று பற்றித் திரிந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் மூன்று சிறுமிகள் ஏதோ பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்ட பின் முதல் எண்ணம் என் குழந்தைகளின் குழந்தைப் பருவம்- அவர்கள் விளையாட்டு, எவ்வளவு வேகமாக வருடங்கள் உருண்டு போய்விட்டன என்பன போன்றன. அடுத்து, எங்களுக்கு நினவில் அழியாமல் இருக்கும் அவர்களின் பல விளையாட்டுகள், கேள்விகள்.

அவை எதுவும் அவர்களுக்கு சற்றும் நினைவில் இல்லை.

வயது ஏற ஏற நோக்கமும் விருப்புகளும் மாறிக் கொண்டே போய்விட்டன. நாம் கடந்து வந்த பாதையும் அது தானே என்பதும் கூடவே நினைவுக்கு வந்தது. நம்முடைய குறும்புகள் வால்தனம், பொய் சொல்லி சிக்கிக் கொண்டது எல்லாம் நம் பெற்றோர்கள் சொல்லித்தானே நாம் அறிகிறோம் என்பதை நினைக்கும் போது இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்ற கேள்வி கூடவே எழுந்தது.

அடுத்து, மனம் மீராவின் வாழ்க்கை வரலாறுக்கு தாவியது.

சாமானியர்களுக்கான இந்த விதி ஏன் ஆண்டாள் மீரா போன்ற பக்தைகளின் வாழ்வில் செயல்படுவதில்லை என்ற எண்ணமும் எழுந்தது. கிருஷ்ணனே உன் கணவன் என்று விளையாட்டாக தன் தாய் கூறியதை நம்பிய அந்த சிறுமி மீராவின் மனம், காலப்போக்கில் ஏன் அதை மறக்கவில்லை ? அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது கூட அவளுடைய தாத்தா சாமர்த்தியமாக செய்ய வேண்டியிருந்தது. “நீ உன் கணவனுக்கு நல்ல முறையில் சேவை செய்தால் அவன் மூலமாகவே கிருஷ்ணன் காட்சியளிப்பான்” என்று நம்பிக்கை ஊட்டினார்.

அதை முழுவதுமாக நம்பி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள். போஜராஜன் அவளுடைய கிருஷ்ண பக்திக்கு எந்த தடையும் விதிக்கவில்லை மிகப் பெரிய மனதுடைய கணவனின் அன்பும் ஆதரவும் இருந்ததால் அரண்மனை சாதுக்களும் சன்னியாசிகளும் சர்வ சுதந்திரமாக வந்து போகும் இடமாகிவிட்டது.

கணவனின் பாட்டி, பக்த ரவிதாஸின் சேவகி. அதனால் சிறு பெண்ணான மீராவிற்கு ரவிதாஸின் தரிசனமும் மந்திர உபதேசமும் கிட்டியது என்றும் சொல்லப்படுகிறது. பல பாடல்களில் அவள் தன் குரு ரவிதாஸ் என்பதை வெளிப்படுத்தியிருப்பதும் தெரிகிறது.

गुरु मिलिया रैदासजी , दीनी ज्ञान की गुटकी || என்றும் मीरा ने गोविन्द मिलिया जी , गुरु मिलिया रैदास என்றும் रैदास संत मिले मोहि सतगुरु , दीन्ही सुरत सहदानी என்பதாகவும் ரைதாஸ், ரவிதாஸ் என்று தன் குருவிற்கு நன்றியை பாடல்களில் தெரிவிக்கிறார்.


(picture courtesy: Divya 's blog : My Musings)

அரண்மனை தர்ம சத்திரம் போல் மாறி விட்டதால் கணவன் வீட்டாரின் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதை தவிர்க்க அன்பான கணவன் அவளுக்காக தனியாக ஒரு கோவிலே கட்டி கொடுத்தான். மீராவின் சாதுக்களுடான சத்சங்கம் இடம் மாற்றம் பட்டது.

இப்போது எதிர்ப்பு வேறு விதமாய் திரும்பியது. “அவள் அரண்மனையியில் இருப்பதே இல்லை. துர்கா பூஜையில் பங்கேற்பதில்லை. அகால நேரங்களில் மந்திருக்கு போகிறேனென்று ’யாரையோ’ சந்திக்க போய்வருகிறாள்” இத்யாதி. சோதனை போல கணவனும் முகலாயருடனான போரில் மிகுந்த காயம் அடைந்து மூன்று வருடங்கள் நோயினால் வாடி இறந்து போய்விட்டான். எல்லாம் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களில் நடந்தேறிவிட்டது. மீராவின் வயது அப்போது இருபத்தி மூன்று.

கணவனின் மறைவுக்குப் பிறகு அரண்மனை நரகமாகியது. சித்தூருக்கு அரசனாக பொறுப்பேற்ற மைத்துனன் அரண்மனை பெண்டிரின் பேச்சைக் கேட்டு மீராவை தம் குலத்திற்கே களங்கமாக நினைக்க ஆரம்பித்தான். பூஜைக்கான பூக்குடலையில் விஷப்பாம்பு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணனின் அருளால் பாம்பு பூஜிக்கத் தக்க சாளக்கிராம கல்லாக மாறியது. இவள் மாயக்காரி என்ற பயம் பற்றிக் கொண்டது பொறாமைகாரர்களுக்கு. தம் கண் எதிரிலேயே விஷம் குடிக்கசெய்தனர். விஷம் அமிர்தமாயிற்று. ராணாவின் கோபம் தலைக்கேறியது. கை வாளை உருவியது. ஆனால் ஒருப் பெண்ணை -அரண்மனையின் மூத்த மருமகளை -கொல்வது ஒரு ரஜபுதனுக்கு அவமானம் அல்லவோ !

உருவிய வாளுடன் “நீங்கள் ஏன் ஒரு ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து செத்து போகக் கூடாது ?” என்று சினந்து கூறினான்.

ஏ மாதவா எனக்கு உன்னைத்தவிர யாருண்டு
மீனாகி உன் சரணங்களை ஸ்பரிசித்திருக்கலாம்;
குயிலாகி நீ மாடு மேய்க்கும் போது உன்னைப் பாடி மகிழ்விக்கலாம்;
ஒரு முத்தாக இருந்தால் உன் மார்பில் தவழும் மாலையில் ஒளிர்ந்திருக்கலாம்.
எனக்கு இது எதுவும் வாய்க்கவில்லையே.
உன்னை அடைவதும் எப்படி?
எப்போதும் உன்னோடு இருப்பதும் எப்படி?

என்றெல்லாம் கரைந்து ஏங்குபவளுக்கு ராணா சொன்ன வழியே சரியெனப் படுகிறது. அதுவே கிருஷ்ணனின் அருகில் அழைத்துச் செல்லுமானால் ஏன் உயிரை விடக்கூடாது? ராணாவின் சினத்தின் மூலம் தன்னை கிருஷ்ணனே அழைக்கிறானோ என்றெல்லாம் தோன்றி நீரில் குதித்து உயிரைவிட துணிகிறாள் மீரா.

அவளுடைய நிலை, விளக்கு ஒளி கவர்ச்சியில் தன்னை மாய்த்துக் கொள்ளும், விட்டில் பூச்சியைப் போலே.

பொதுவாக உலகக் கவர்ச்சியின் ஈர்ப்பிற்கு ஆளாபவர்களை விட்டில் பூச்சி போலே என்று சொல்வதுண்டு. சிந்திக்கும் சக்தியின்றி ஆசையின் வலையில் விழுந்து அழிவடைவதை குறிப்பது. ஆனால் இங்கே பக்தனுக்கு பரமாத்மனிடத்தில் ஏற்படும் ஈர்ப்பையும் விட்டில் பூச்சிக்கே கபீர்தாசர் ஒப்பிடுகிறார். ஏனென்றால் அதீத பக்தியினால் தான் என்னும் எண்ணம் முற்றிலுமாய் அழிந்து பக்தனுக்கு பரமன் ஒருவனே தெரிகிறான்.

सुमिरन सो मन लाइये, जैसे दिप पतंग ।
प्राण तजे छिन एक में, जरत न मोरै अंग ॥


மனமொன்றி செபத்தில் நிலைத்திடு, அழல்நாடும் விட்டிலைப் போலே |
கணமொன்றி லுயிரே போயினுமது, பொரிந்திட அஞ்சுது இல்லையே ||

(பொரிதல் -கருகுதல் தீய்தல்)

இதே கருத்தை மீராவும் தன் பாடல் ஒன்றில் வெளிப்படுத்துகிறாள்.

If you want to offer love
Be prepared to cut off your head
And sit on it.

Be like the moth,
Which circles the lamp and offers its body.

Be like the deer, which, on hearing the horn,
Offers its head to the hunter.
Be like the fish
Which yields up its life
When separated from the sea.
Be like the bee,
Entrapped in the closing petals of the lotus.

Mira's lord is the courtly Giridhara.
She says: Offer your mind
To those lotus feet.
( இதன் மூலப்பாடல் தெரிந்திருந்தால் அதன் இணைப்பை தயவு செய்து தெரிக்கவும். ஆங்கில பொழிபெயர்ப்பு மட்டுமே கிடைத்தது)

உயிரைத் துச்சமாகக் கருதி துறக்கத் துணிந்தவளை கிருஷ்ணனே தடுக்கிறான். “நீ பிருந்தாவனத்துக்கு போ” என்ற உத்தரவும் கொடுக்கிறான். பல பெரும் இறையன்பர்களின் தொடர்பு அவள் மனதுக்கு ஆறுதல் அளித்தாலும் கண்ணனை சேர முடியாத மானுடப் பிறவி பெரும் துன்பமாகத் தெரிகிறது.

भवनपति तुम घर आज्यो हो ।
புவன பதியே வீடு விரைந்திடு
बिथा लगी तन मँहिने म्हारी तपत बुझाज्यो हो ॥
என்னைப் பீடித்திருக்கும் தாபம் உன்னால் அணையட்டும்
रोवत रोवत डोलता सब रैन बिहावै हो ।
அழுதழுது இரவெல்லாம் புரளுகிறேன்
भूख गई निदरा गई पापी जीव न जावै हो ॥
பசியில்லை தூக்கமில்லை பாவி ஜீவன் போவதுமில்லை
दुखिया कूँ सुखिया करो मोहि दरसण दीजै हो ।
துயரம் போக்கி ஆறுதல் தர எனக்கு தரிசனம் கொடு
मीरा ब्याकुल बिरहणी अब बिलम न कीजै हो ॥

வாடும் மீராவின் வேதனை தீர்க்கக் காலம் கடத்தாதே

இப்படி மீராபாயின் இறை ஏக்கத்தின் உச்சியில் வெளிப்பட்ட பாடல்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு இன்று பக்திக் களஞ்சியமாகத் திகழ்கிறது. இறைவனுடைய அடிகமலங்கள் அவ்வளவு சுலபமாக எட்டப்படுவதில்லை என்பதும் அவரது ஏக்கம் மிகுந்த வரிகளால் புலனாகிறது.

இதன் அடுத்த பகுதி விரைவில் ...... அதுவரை

எம் எஸ் அம்மாவின் குரலில் மீரா பஜன் ஹரி தும் ஹரோ பஜனை கேட்டு அனுபவியுங்கள்.

हरि तुम हरो जनकी भीर ।
द्रौपदीकी लाज राखी तुरत बढ़ायो चीर ॥
भगत कारण रूप नरहरि धर् यो आप सरीर ।
हिरण्याकुस मारि लीन्हों धर् यो नाहिन धीर ॥
बूड़तो गजराज राख्यो कियौ बाहर नीर ।
दासी मीरा लाल गिरधर चरणकँवलपर सीर ॥

ஓ ஹரி, ஜனங்களின் துக்கம் களைந்திடு; காலம் கடத்தாமல் திரௌபதிக்கு சீரை தந்து மானம் காத்தாய் ; நர-ஹரி ரூபத்தில் பிரகலாதனைக் காப்பாற்றினாய் ; இரண்யகசிபுவை வதம் செய்த தீரன் ; கஜராஜனை நீரினின்று வெளியே இழுத்தாய் ; அடிமை மீரா பணிவேன் உனது தாமரைப் பாதங்களை .

----------------------------------------------

இந்த பதிவுடன் தனது ஐந்தாவது வருடத்தில் இந்த வலைப்பூ அடி எடுத்து வைக்கிறது என்பதோடு இன்னுமொரு விசேஷம். !! கூகிளின் கணக்குப்படி இது நூறாவது இடுகை. அதன் பின்பலம் எல்லாம் வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது. பொறுமையாகப் படித்து தனி மடலிலும் பின்னூட்டங்களிலும் உற்சாகமூட்டி வரும் அனைத்து ஆத்திக அன்பர்களுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

இதையொட்டி அடுத்த இடுகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும். :)))

அனைவருக்கும் சிறப்பான நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு அம்பிகை அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.