Sunday, May 27, 2007

கீழே வந்தவன் திளைத்திருப்பான்

மலையடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் யானைகளின் தொந்தரவு அதிகமாகி விட்ட படியால் அவைகளைத் தடுக்க மின்வேலி அமைத்துக் கொண்டிருந்தனர் சில விவசாயிகள். அதைப்பற்றி கேட்ட பொழுது அவர்கள் சொன்னது "எல்லாம் தண்ணியத் தேடிதாங்க கீழ வருது. மலை மேல தண்ணி கெடச்சதுன்னா அதுங்க மேலேயே சுத்திக்கிட்டு இருக்குமுங்க. மனுசங்க இருக்கிற எடத்துக்கு வராதுங்க " என்றனர். பொறிதட்டினாற் போல
கபீரின் ஒரு தோஹாவுக்கு சட்டென்று விளக்கம் கிடைத்தது.

ऊँचे पानी ना टिके नीचे ही ठहराय
नीचा होय सो भरी पिये, ऊँचा प्यास जाय


ஊன்சே பானீ நா டிகே, நீசே ஹீ டஹராய்
நீசா ஹோய் ஸோ பரீ, ஊன்சா ப்யாஸ் ஜாய்


உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)

முதலில் படித்து மொழி பெயர்த்தபொழுது இது இன்றய நடைமுறைக்கு பொருந்துமா என்ற கேள்வி மனதில் தோன்றியது. தற்காலத்தில் மின் வசதிகள் பெருகிவிட்ட நிலயில் தண்ணீர் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப் படுகிறது.

இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத்தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.

உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?

ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக்கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக்கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப்பாறைகள். அத்தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்கவைத்துக்கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.

கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது நன்றி தெரிவிப்பவர்கள்.(இணைப்பைச் சுட்டவும்). அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோஎளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.


மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.

Saturday, May 19, 2007

கம்பனும் கபீரும்

இறைவனைப் போற்ற, அவனுடைய குணாதிசயங்களை, எத்தனை விதமாக பல காலங்களிலும் பல மகான்களும் பாடியிருக்கின்றனர் ! அவனை (அல்லது அவளை) புராணக்கதைகளுடன் இணைத்து அவரது பராக்கிரமங்களைப் போற்றி மகிழ்வது ஒரு வகை. இதை சகுண உபாசனை (வழிபாடு) என்பர் பெரியோர். அதாவது தமக்குப் பிடித்த வடிவத்திற்கு ஒரு குணத்தைக் கற்பித்து அதிலேயே லயத்து விடுவது. திரையில் பார்க்கும் நமக்குப் பிடித்த நடிகர் நடிகைகள் மேல் அளவு கடந்த ஒரு பிரேமையை வளர்த்துக் கொள்வதும் பின் அவர்களின் பித்தாக மாறுவதும் ஒரு வகையில் சகுண உபாசனைதான். அத்தகைய ஈடுபாடு கடவுளை நோக்கித் திரும்பும் பொழுது பக்தியின் உச்சத்தை பக்தன் அடைகிறான். இது பக்தி மார்க்கம்.

ஆனால் ஞான மார்க்கத்தில் உள்ளோர் அணுகுமுறையே வேறுவிதமாகும். ஆதிசங்கரர் சொல்வது போல நேதி (ந+இதி) "இது அல்ல" என்பதாக ஒவ்வொன்றாக, புலன்களால் அறியப்படுபவற்றை- விலக்கிக் கொண்டே போனால் கடைசியில் எஞ்சியிருக்கும் ஆத்ம உணர்வுதான் மனிதன் அறிய வேண்டிய இறையுணர்வு என்பர். "வாக்கும் மனமும் இல்லா மனோலயம்..." என்று ஔவையார் போற்றும் நிலை அது. அங்கே உருவ வழிபாடு மறைந்து தானே எல்லாமாகி நிற்கும் அத்வைத நிலை கைகூடுமாம். இதற்கு நிர்குண (குணமற்ற) உபாசனை என்று பெயர்.

அத்தகைய உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் அவர்கள் உருவ வழிபாட்டை துறப்பதில்லை. இதுவும் நம் போன்ற சாதாரண மனிதர்களின் முன்னேற்றத்திற்காகவே. மணிவாசகர் இந்த இரண்டு முறைகளையும் இணைத்து வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்று புலன்களால் உணரப்படுவனற்றிலிருந்து ஆரம்பித்து உண்மையுமாய் இன்மையுமாய் என்றும் உரைக்கிறார். அதேபோல் அருணகிரியாரும் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று சகுணத் தன்மையையும் நிர்குணத்தன்மையையும் ஒருங்கே போற்றுகிறார்.

கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் வரும் இறைவணக்கம் இப்படி உள்ளது.
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;
அன்றே என்னின் அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்; உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பிக் குடி வாழ்க்கை ! நமக்கு என்னோ பிழைப்பு ? அம்மா !


இந்தக் கருத்தை அப்படியே கபீரும் ஒரு தோஹாவில் பிரதிபலிக்கிறார்.

एक कह तो है नहीं दॊ कहूं तो गारी
है जैसा तैसा रहे कहे कबीरा बिचारी


ஏக் கஹ் தோ ஹை நஹி, தோ கஹும் தோ காரி
ஹை ஜைஸா தைஸா ரஹே, கஹே கபீரா பிசாரி


ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

(உரையில் = உரை+இல் ; உரைக்க இயலாத)

கம்பனின் அடிகளை நினைவூட்டும் பொருட்டே மொழிபெயர்ப்பிலும் அதே நடை கையாளப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பையும் இங்கே தருகிறேன்.

ஒன்றே என்னில் சரியன்று இரண்டு என்றுரைக்கின் தவறேயாம்
சொல்லற்று உரைப்பான் கபீர்அது என்றும் எதுவோ அதுவேயாம்


இந்த மொழிபெயர்ப்பை எழுதி வைத்து பல மாதங்களுக்கு பின்பே கம்பரின் மேற்கண்டப் பாடலை காண நேர்ந்தது. இரண்டிலும் காணப்பட்ட "ஆம்" என்ற இயைபு மோனையும் 'என்று உரைக்கின்' என்கிற சொல்லாட்சியும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனால் இரண்டிற்குமுள்ள ஒற்றுமையை பலப்படுத்த அடிக்கு இருமுறை 'ஆம்' என்ற இயைபு வரும் வண்ணம் மாற்றியமைத்தேன்.

கம்பர் நான்கு அடிகள் வைத்து சகுணம் நிர்குணம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கடவுளைப் போற்றுகிறார். ஆனால் கபீர் இரண்டாம் அடியிலேயே தன் இயலாமையை தெரிவித்துக் கொள்ளுகிறார்.

"உரையற்ற தொன்றை உரை செய்யும் ஊமர்காள்" என்னும் திருமந்திர அடிகளின் பெருமையை உணர்ந்தவர் போல் அதற்கு மேலும் ஏதாவது சொல்ல முற்பட்டால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது போலாகும் என்று நினைத்தாரோ என்னவோ!

எனக்கு ஒன்றும் தெரியாது ' அது என்றும் எதுவோ அதுவே' என்று முடித்து விட்டார்.

கம்பர் "ஆம்" என்ற வகையில் இறைவனின் எல்லா குணங்களையும் ஏற்றுக் கொண்டு போகிறார். ஆனால் கபீரோ "சரியன்று" "தவறு" என்று எதிர்மறைப் பொருளாய் அணுகுகிறார். இது மேலே சொன்ன "நேதி" வகையைச் சாரும். எப்படிச் சொன்னால் என்ன ? " இருள் இல்லை" என்றாலும் "வெளிச்சம் உள்ளது" என்றாலும் ஒரே நிலையைத்தானே குறிக்கும்.

பிசாரி ( பரிதாபத்திற்க்குரியவன்) என்று கபீரும் 'என்னோ பிழைப்பு அம்மா ' என்று கம்பரும் முடிவினில் காட்டியிருக்கும் ஒரு இயலாமையில் -இறைவனின் பெருமையை சொற்களால் அடக்கமுடியாத் தன்மையை- இருவரின் எண்ண ஒற்றுமையை காணமுடிகிறது.