Thursday, December 18, 2008

ஈரக் கம்பளம் சுமையதிகம்

உப்பு வியாபாரி ஒருவன் தன் கழுதை மேல் உப்பு மூட்டையை ஏற்றி ஊர் ஊராகச் சென்று உப்பு விற்று வருவது வழக்கம்.

ஒருநாள் வழியிலே ஒரு ஓடையை கடக்க வேண்டியிருந்தது. கடக்கும் போது அடி சறுக்கி கழுதை நீரில் விழுந்தது. உப்பெல்லாம் நீரில் கரைந்து முதுகில் இருந்த பாரமெல்லாம் காணாமல் போயிற்று. வியாபாரியோ தன் கெட்ட நேரத்தை நொந்து கொள்கையில் கழுதைக்கு பெரும் ஆச்சரியம், கொஞ்ச நேரத்திலேயே பெரும் சுமை மாயமானதைப் பற்றி. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அப்பாதையில் போகையில் அதே ஓடை. இம்முறை வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்தது. வெற்றி ! வெற்றி!! இம்முறையும் சுமையெல்லாம் மாயம்.

அடுத்தடுத்து சில முறை இது தொடர்ந்து நிகழவே வியாபாரிக்கு கழுதையின் தந்திரம் புரிந்தது. அவன் கழுதையை ஒரு வண்ணானுக்கு விற்று விட்டு வேறு ஒரு கழுதையை வாங்கி வியாபரத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

கழுதை அறியுமோ சுமையின் தரம். வண்ணான் தன் துணி பொதியை ஏற்றிக்கொண்டு அதே ஓடைக்குச் சென்றான். துவைப்பதற்கு சரியான இடம் தேடி ஓடையில் நடத்திச் சென்றான். கழுதைக்கு மட்டில்லா மகிழ்ச்சி. புது எஜமானனிடத்தும் தன் புத்திசாலித்தனத்தை நம்பி கால் இடறியது போல் நீரில் விழுந்தது. நீர் பொதியில் புகுந்ததும் பொதியின் பாரம் கூடியது. எத்தனை முயற்சித்தும் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. வண்ணானும் விடுவதாயில்லை. அதை கோலினால் புடைக்க ஆரம்பித்தான்.நேரமாக ஆக பாரம் கூடிக்கொண்டே போனது. கழுதையோ அடி வாங்கி துவண்டு போனது.

கபீரின் ஒரு ஈரடி மேற்கண்ட கதையை நினைவு படுத்தியதால் கதையை முதலில் சொல்லிவிட்டேன். கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இப்போது ஈரடியை பார்ப்போம்.

अति हठ मत कर बावरे, हठ से बात न होय |
ज्यूं ज्यूं भीजे कामरी, त्यूं त्यूं भारी होय ||


அதிப் பிடிவாதம் வேண்டா,வாதத்தில் இல்லை சமாதானம்
நனைதல் கூடக் கூடவே, கம்பளம் தன் சுமையும் கூடும்

மாற்று :
வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்

மிக எளிமையான உதாரணம். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. கழுதைக்கு வந்த மயக்கத்தை போல நமக்கும் அறிவு மயக்கம் வந்துவிட்டால் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே மெச்சிக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் அதைப் போலவே அஞ்ஞானிகளாகி விடுகிறோம். அப்போது கீழிருப்பவர்கள் வாயை அடக்குகிறோம். மேலிருப்பவரோடு விவாதம் செய்வதோ தட்டிக் கழிப்பதோ செய்கிறோம்.

ஏதோ ஒரு வகையில் வாதம் முடிவுக்கு வந்த பின்னரும் பலநாட்களுக்கு மனதிற்குள்ளே அதே வாத பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருப்போம்.‘அப்படி பேசாது இப்படி சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ’ என்று உள்ளுக்குள்ளே உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும். இதை கம்பளத்தில் ஈரம் ஊறியது போல மனம் இந்த வாதப் பிரதிவாதங்களில் ஊறுகிறது என்ற வகையில் ஒப்பிடுகிறார் கபீர்.

இப்படி மனம் சதா ..நானே சரி... நானே சரி ..என்ற எண்ணத்தில் ஊறும் போது உண்மை நிலையை உணர தவறி விடுகிறது.

ஈரமான கம்பளியை யாராவது போர்த்திக் கொள்ள முடியுமா? குளிர் நேரத்தில் கூட அதை யாரும் சீந்த மாட்டார்களே. அது போல பிறர் நம்மை தள்ளி வைத்து விடுகிறார்கள்.

வீண் விவாதங்களால் மனக்கசப்பு வளர்கிறது. அன்பு முறியும் அபாயம் ஏற்படுகிறது. பொதுவாக இது யாவருக்கும் பொருந்தும்.

நிறைகுடம் தளும்பாது, Empty wagons rattle the most என்றெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம். மனமுதிர்ச்சி இல்லாதவர்களே விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

உண்மையை உணர்வதற்கு விவாதங்கள் தேவையில்லை.அமைதி காத்தால் போதும்.
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த
முற்றுணர்வோர் ஒன்று மொழியாரே- வெற்றி பெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும் பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி. (நீதி வெண்பா-35)

(ஆன்று அமைந்த முற்று உணர்வோர்= கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்)


அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். மனதின் போக்கைக்குறித்து குருவிடம் இவ்விதம் பிரார்த்திக்கிறார்.
.......
......
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து
ராவண ஆகாரமாகி
இதயவெளி எங்கணும் தன்னரசு நாடு செய்து
இருக்கும் இதனொடு எந்நேரமும்
வாங்காநி லா அடிமை போராட முடியுமோ
மௌன உபதேச குருவே
மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்
மரபில் வரு மௌன குருவே .


மௌனத்தின் அருமையை உணர்ந்தவர் அவர். ஆதலால் பலவிதமான தர்க்கங்களில் ஈடுபடும் பண்டிதர்களின் போக்கைக் கண்டு இன்னொரு பாடலில் பரிகாசம் செய்கிறார்.

பூதலயமாகின்ற மாயையை முதல் என்பர் சிலர்
பொறிபுலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர்
கரண முடிவென்பர் சிலர், குணம்
போன இடமென்பர் சிலபேர்,
நாதவடிவென்பர்,சிலர் விந்துமயமென்பர் சிலர்
நட்ட நடுவே இருந்த
நாமென்பர் சிலர்; உருவமாம் என்பர் சிலர்
நாடில் அருவென்பர் சிலபேர்,
பேதமற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர்
பேசில் அருளென்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட சூனியம் அதென்பர் சில பேர்
பிறவுமே மொழிவர்;இவையால்
பாதரசமாய் மனது சஞ்சலப்படுமல்லால்
பரம சுக நிட்டை பெறுமோ
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே.


உலகிலே நாம் வந்திருக்கும் காரியம் ”பரமசுக நிட்டை பெறுதல்”. அதை விட்டு விட்டு சிருஷ்டியின் குண விசேஷங்களை பல்வேறு விதமாக ஆராய்ந்து தர்க்கம் செய்வதால் மனதுக்கு சஞ்சலம் மட்டுமே எஞ்சுகிறது. பாதரசம் சிந்தினால் அதை பிடித்து எடுக்க முடியாது. தெர்மாமீட்டரை உடைத்தவர்களுக்கு அது தெரியும். நாலாப்பக்கமும் சிதறி ஓடும் அதை மீண்டும் பிடித்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பல்வேறு விவாதங்களால் மனமும் அதைப் போலவே சிதறி ஓடுகிறது.

மன ஒருமையில்லாது போனால் எந்த காரியமும் கை கூடாது. மன ஒருமைக்கு மௌனம் சாதனம்.அதற்கு வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது ஆரம்பப் பாடம்.

ஆரம்பப்பாடம் சரியாக இருந்தால்தானே பின்னால் கற்கப் போவது நிற்கும். இல்லாவிட்டால் கதையில் வந்த கழுதையை போல அவஸ்தையை அனுபவிக்க வேண்டியிருக்கும்

Friday, December 05, 2008

மரணமில்லா பெரு வாழ்வு

இந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான்.

தனக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற அவனை அந்த சாது ’உன் வழியே நீ போ’ என்று சர்வ சாதாரணமாகக் கூறியதைக் கேட்டதும் கோபத்துடன் வாளை உறுவி அவரை கொல்ல எத்தனித்தான். அவரோ எவ்வித சலனமும் இல்லாமல் “எனக்கு மரணம் இல்லை.நான் ஆத்மாவில் உறைபவன்” என்று பதிலுரைத்தார். அவரது தன்னம்பிக்கையும் பயமற்ற நிலையும் மாவீரனுடைய கோபத்தையும் பணிய வைத்தது.

தக்ஷசீலத்தின் மன்னன் போரஸ்-ஸுடன் நடந்த போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அலெக்ஸாண்டரின் படைபலம் வெகுவாக குன்றி விட்டிருந்தது. மாஸிடோனியாவிலிருந்த கிளம்பிய படையில் கால் பாகமே எஞ்சியிருந்தது. அவனுக்கு மிகவும் அத்யந்தமாக இருந்த குதிரையும் இறந்து விட்டது. தன் உயிர் நண்பன் ஒருவனை இழந்தது போல் துக்கம் அவனை வாட்டியது. எல்லோருடைய வற்புறுத்தலின் பேரில் படைகளை திருப்பினான் அலெக்ஸாண்டர்.

வழியில் பெர்ஷிய மன்னன் சமாதியிருந்த நினைவு மண்டபத்தைக் கடக்க நேர்ந்தது. அதிலிருந்த வாசகம்;

“நான் தான் சைரஸ்.இந்த பெரும் பெர்ஷிய ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவன். நீங்கள் யாராயிருப்பினும்,எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இதோ,என்னை மூடியிருக்கும் இந்த மண்ணை மட்டுமாவது எனக்காக விட்டு வையுங்கள் “

அரசும் புகழும் எவ்வளவு நிலையற்றது என்பதை அறிந்த அலெக்ஸாண்டர் மனம் மிகவும் கலங்கியது.

அந்த தினங்களில் இந்தியாவிலிருந்து அலெக்ஸாந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பல அறிஞர்களும் அவனுடன் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் (அவர் பெயரை Calnus-என்கிறது ஆங்கில குறிப்பு) தன் இறுதி தினம் வந்ததைப் புரிந்து கொண்டு ஒரு சிதையை மூட்டச் சொன்னார். தனக்குரிய இறுதி சடங்குகளை தானே செய்து தன் கிரேக்க நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “மன்னனிடம் சொல்லுங்கள்.விரைவிலேயே பாபிலோனில் சந்திப்போம்” என்று அவர்களிடம் சொல்லி அமைதியாக சிதையில் அமர்ந்து நெருப்போடு கலந்து போனார்.

பலமாதங்கள் தொடர்ந்த பயணத்தில் மேன்மேலும் துர்சகுனங்கள் காணப்பட்டன. முன் கோபத்தால் அலெக்ஸாண்டர் தன் நெருங்கிய நண்பனையே மதியிழந்து கொன்றுவிட்டான். அதை நினைத்து வருந்தி நாளெல்லாம் உணவும் நீரும் இன்றி அழுது கொண்டிருந்தான்.

எப்போதுமே வெற்றிகளுக்கு நாயகனாக இருப்பினும் அலெக்ஸாண்டர் மனம் துன்பத்தால் வாடியது. அளவுக்கு அதிகமாகக் குடித்தான். பாபிலோனை அடைந்தபோது அவனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டது. பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வைத்தியங்கள் பலனளிக்காமல் கி.மு 326 ஜூன் 10ஆம் தேதி அவன் மரணமடைந்தான்.

பஞ்சாப்-சாதுவின் தீர்க்கமும், சைரஸ்ஸின் வாசகமும், சிதை புகுந்த அறிஞனின் அமைதியான மரண வரவேற்பும், நண்பனைக் கொன்றதும் அவனுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னுடைய சவ அடக்கத்தின் போது சவப்பெட்டிக்கு வெளியே கைகள் இரண்டும் ஆகாயத்தை பார்த்தவாறு வெளியே தெரியட்டும் என்றும் “இந்த மாவீரன் கடைசியில் கொண்டு சென்றது எதுவும் இல்லை என்பதை யாவரும் அறிந்து கொள்ளட்டும்” என்றும் சொல்லியிருந்தானாம் அலெக்ஸாண்டர்.

சைரஸ்ஸைப் போலவும் அலெக்ஸாண்டரைப் போலவும் வந்து சென்றவர்கள் எத்தனையோ பேர். மரண தேவனின் பிடியிலிருந்து தப்பியவர் எவருமில்லை.

மனிதப்பிறவி தரப்பட்டிருகும் நோக்கத்தை மறந்து வாழ்நாளில் அவர்கள் போடுகின்ற ஆட்டம் ஞானிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. கபீரின் வரிகளிலே சொல்வதானால்,

चहूँ दिस ठाढ़े सूरमा,हाथ लिये तलवार ।
सबही यह तन देखता, काल ले गया मार ॥


நாற்புரம் காத்தனர் வீரர், கையில் ஏந்திய வாளொடு
பார்த்து நின்றனர் பாரோர்,பிராணன் போனது நமனொடு

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி.

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)

மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு உழக்கு அன்னம்,சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே. மேலும் சொல்கிறார் ஔவையார்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். (நல்வழி -15)

உபாயம் இதுவே மதியாகும்! எதுவே? சிவாய என்று சிந்தித்திருப்பதே அறிவுள்ள செயலாகும். விதியை மாற்ற நினைக்கும் எந்த முயற்சியிலும் ’விதியே மதியாகிவிடும்’. அதாவது விதியினுடைய வழியே ஓங்கி நிற்கும். இதை விளக்கும் ஒரு சுஃபி கதை.

காலிஃப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் போது மரணதேவனின் தூதன் நின்றிருந்தான். “உனக்கு என்ன வேலை ?”என்று வினவினான் காலிஃப். ”இன்றைய பொழுதே உன் நண்பனுக்கு கடைசி தினம்”என்று பதில் வந்தது. கவலை கொண்ட காலிஃப் அரண்மனைக்குத் திரும்பி நண்பனை அழைத்து தன்னுடைய சிறந்த குதிரையை அளித்து ’மாலைக்குள் பாக்தாத் போய்விடு’ என்று விரட்டினான். மீண்டும் பூங்காவிற்கு வந்த போது தூதன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.”மாலை வரை காத்திருக்க வேண்டுமா ?”என்றான் காலிஃப். “அவனுக்கு மரணம் பாக்தாத்தில் அல்லவோ! அவனுக்காக பாக்தாத்தில் இன்னொரு தூதன் காத்திருக்கிறான். அவன் இன்னமும் இங்கேயே உள்ளானே என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்” என்று சொல்லி மறைந்தான் தூதன். விதி காலிஃபாவின் மதியுள் புகுந்து வென்றுவிட்டது. விதியே மதியாகிவிட்டது !

ஆனால் கடவுளையே நம்பினவர்க்கு இந்த கவலை இல்லை. தன்னையே எக்காலும் சிந்தித்திருந்த மார்க்கண்டேயனுக்காக கூற்றுவனையும் எட்டி உதைத்த சிவனை போற்றி தாயுமானவரும் மரணபயம் பக்தனுக்கேது என்று பாடுகிறார்.

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப்
பார்க்கின் அன்பெர்க்கென்ன பயங்காண் பராபரமே

(மறலி=எமன்) - பராபரக்கண்ணி 128

பரமனை சிந்தித்திருப்பதே சிறந்த வழி என்று ஔவை சொன்னதும் அதனாலேயே. கபீரின் கருத்தும் அதுவே

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥


பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரும் ஒருநாள்
தனையாள் இராம மந்திரம் செபிக்கும் கபீரனுக் கில்லை இறுநாள்


(தீர்த்தவன்= பிணி தீர்த்தவன் ; இறுநாள்= மரண நாள்)

அப்படி இடைவிடாது சிந்தித்து இருக்கும்போது மரணமற்ற நிலை தானே வந்தெய்துகிறது. எப்படி நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வித சிரமும் இல்லாமல் கொடியிலிருந்து தானே பிரிந்து விடுமோ அதுபோல் இறைப் பற்றில் பழுத்த ஜீவனும் உலகப்பற்றை விட்டு பரமனடி சேர்கிறது. எல்லோராலும் அறியப்பட்ட மிருத்யுஞ்ஜெய மந்திரத்தின் சாரமும் அதுவே.

மிருத்யுஞ்செயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். ஆர்வமுள்ளவர்களுக்காக மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्द्धनम्
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தநான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


ஊர்வாருகம் +இவ என்பது ’வெள்ளரிப்பழத்தைப் போல’ என்று ஒரு பொருள் வரும். ஊர்வ +ஆரூகம் என்று பிரித்துக் கொண்டால் பெரும் வியாதி என்று இன்னொரு பொருள் கிடைக்கும். இந்த காரணத்தினால்தான் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளவர்களுக்காக பிறர் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊர்வ ஆரூகம் இவ பந்தனான் (பெரும் வியாதி போன்றத் தளை) என்பது பிறவிப் பிணியை குறிப்பதாகக் கொள்ளலாம். அப்போது அமிர்தம் அளித்து மோக்ஷத்தை அளி என்ற கோரிக்கை வியாதியஸ்தர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக யாவருக்கும் பொருந்தும்.