Saturday, December 25, 2021

அவ்வியம் பேசி அறங்கெடுதல்

      இன்று கிருஸ்மஸ் தினம்.  2021 ஆம் ஆண்டும்  நிறைவு பெறப் போகிறது. இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக தளர்ந்து போன உலக மக்கள் சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

   ஓரளவுக்கு இந்த வைரஸ்,  மனிதருக்கு அவர்களுடைய ஆற்றல்களின் எல்லையை சுட்டிக் காட்டியுள்ளது. இயற்கையை வெல்ல வேண்டும் என்னும் போதெல்லாம் அவர்களுடைய தலையில் ஒரு குட்டு வைக்கப்படுகிறது.

மனிதனுக்கு வேண்டியது பணிவு, நன்றியுணர்ச்சி.

இதை அவன் மறக்கும் போது அவன் அழிவை நோக்கிப் பயணக்கிறான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  எப்போது தன்னம்பிக்கை அதிகமாகி ஆணவம் தலையெடுக்குமோ அப்போது இந்த நோய் ஆரம்பிக்கிறது.

இதன் முதல் அறிகுறி பிறரிடம் குறை அல்லது குற்றம் காண்பது. 

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" ஔவையாரின் முது மொழி. 

விவிலியத்தில் இதைப் பற்றிய மிக முக்கியமான எச்சரிக்கை அடிக்கடி மேற்கோள் காட்டப் பெறுகிறது.


 "பிறரை ஒரு விரலால் சுட்டும் பொழுது மூன்று விரல்கள் உன்னை சுட்டுகின்றன என்பதை நினை"

குற்றம் குறைகள் இல்லாதவர் எவரும் இருக்க முடியாது;  தன்னைத் திருத்திக் கொள்ள முயல்பவனுக்கு பிறர் குற்றங்கள் பெரிதாகத் தெரியாது என்பதே இதன் மூலம் சொல்லப்படுகிறது.

மேலும் ஜீஸஸ் சொல்லுவார்.

" ஒருவரை ஒருவர் எடை போட்டு குற்றங் காணாதீர். கடவுளின் ஆணைகளை பின்பற்றுவோர் எவரும் பிறர் குறைகளை பேசுவதில்லை. அது அந்தக் கடவுளின் ஆணையையே, கடவுளையே, குற்றம் சொல்வதாகும். எப்போது குற்றங்களை பேசுகிறீர்களோ அப்போதே அவன் ஆணையை மீறினவர்கள் ஆவீர்கள். கடவுள் ஒருவரே சட்டம் இயற்ற வல்லவர் தீர்ப்பும் சொல்லக் கூடியவ்ர். இதில் நீங்கள் யார் உடனிருப்பவர்களை குறை சொல்ல? " (மத்தேயு 7:1)

" .......நீ பிறரை குற்றம் பார்க்காவிட்டால் கடவுளும் உன் குற்றங்களை பொருட்படுத்தமாட்டார். பிறரை மன்னித்து விடு. கடவுளும் உன்னை மன்னிப்பார். பிறருக்கு  தானம் செய். உன்னுடைய அளவையிலேயே பலமடங்கை திருப்பி அவர் அளிப்பார் " ( ல்யூக் 7-37-38)

 இதே கருத்தை கபீரும் தம்முடைய ஈரடி ஒன்றில் உரைக்கிறார்.

दोस पराए देखि करि, चला हसन्‍त हसन्‍त |
अपने याद न आवई, जिनका आदि न अंत  ||

பிறன்தன் குறைகள் பேசி எள்ளி எள்ளி  நகைப்பரே | 

மறந்தும் தம் குறை நினையார், அதற்கு ஆதி யந்த மிலையே ||

இந்த உண்மையை உணர்ந்த  ஆன்மீக அருளார்கள் தம்மை எப்போதும் உயர்த்தி கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் இறைவனை முழுதும் நம்பி இருப்பவர்கள். அவனுடைய படைப்பில் குற்றம் குறைகள் இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை. ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் அந்த கடவுளின் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்னும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். 

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி  ( 308)  

என்று அருட்பிரகாச வள்ளலார் தம் தகுதி இன்மையை அருட்பெருஞ்சோதி அகவலில்  பாடுகிறார்.

அப்படி இருந்தும் அவன் ஆட்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்பதையும் நினைந்து போற்றுகிறார்.

கூற்று உதைத்து என்பால் குற்றமும் குணம் கொண்டு 

ஆற்றன் மிக்கு அளித்து அருட்பெருஞ்சோதி 

என்று இறைவனின் பெருங்கருணையை போற்றுகிறார்.

பணிவுடையவனையே  இறைவன் எப்போதும் இறைவன் விரும்புகிறான்.  அதனால் தான் மாணிக்கவாசகருக்கும் தானே ஒரு வேதியர் வடிவில் வந்து அவருக்காக திருவாசகத்தை எழுதி அருளினார். சுமார் முப்பது பாடல்களில் தன்னை நாயினும் கடையனாக பாவித்து தனக்கு அருள் செய்த சிவன் பெருமையை பாடுகிறார்.

நாயிற் கடைபட்ட நம்மையும் ஒரு பொருட்படுத்து

தாயிற் பெரிதும்  தயாவுடைய தம்பெருமான் 

மாயப்பிறப்பு அறுத்தாண்டான் என் வல்வினையின்

வாயிற் பொடி அட்டி பூவல்லிக் கொய்யாமோ -   ( திருப்பூவல்லி )

ஒருவன் தன்னுடைய நிறைகுறைகளை ஆராயத் தலைப்பட்டால் , கபீர் சொல்வது போல் முடிவில்லா குறைகளே அதிகம் காணப்படும்.  விளைநிலத்தில் தோன்றும் களைகள் போன்றவை அவை. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.

 வினைப்புலமாகிய இப்பிறவியில், களைகளை களையக் களைய மீண்டும் மீண்டும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கும், இந்த களையும் முயற்சியில் பணிவு உள்ளம் கொண்டவன் மட்டுமே ஈடுபட்டிருப்பான். அவனுக்கு பிறரது  குறைகளை பேச நேரம் ஏது?

அம்முயற்சியின் பயனாக அவன் மீது எல்லையில்லாக் கருணை கொண்டு -வள்ளல் பெருமான் சொல்வது போல் - அவனுடைய குற்றங்களையும் குணமாகவே கொண்டு இந்த மாயப் பிறப்பை அறுத்து அவனை ஆட்கொள்ள முன் வருகிறான் இறைவன்.

செய்யக்கூடாதவற்றை பட்டியலிடும் போது திருமூலர் சொல்வது அவ்வியம் பேசாதீர் என்பதே.  அவ்வியம் என்றால் பிறரது குற்றங் குறைகளை அலசுவது. அதனால் செய்கின்ற அறங்கள் போய் பாவம் வரும் என்கிறார்.

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்

வெவ்வியனாகி பிறர்பொருள் வவ்வன்மின்

செவ்வியனாகிச் சிறந்துண்ணும் போது ஒரு

தவ்விக் கொடுண்மின் தலைபட்ட போதே  - திருமந்திரம் 

பிறரைப் பற்றி புறங்கூறி பாவத்தை தேடிக் கொள்ளாதீர்கள்.

தீய குணம் கொண்டு பிறர் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்

உண்ணும் போது மற்றவர்கட்கு கொடுத்து உண்ணும் நல்ல பண்பை பேணுங்கள்

இவற்றை செய்தால் நீங்கள் நலமாக வாழ்வீர்கள். பிறருக்கு நன்மை செய்தால் இறைவன் நமக்கு நன்மை செய்கிறார்- இதுவே உலக நியதி.

அனைவருக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.