Thursday, January 03, 2019

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்


என்னுடைய பள்ளி ஆசிரியர்  அடிக்கடி சொன்ன ஒரு கதை.

நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழுதோ இருட்டிக் கொண்டிருந்தது.  இருப்பினும் வண்டி மாடுகளைப் பூட்டச் சொல்லி அவர் சாப்பிட்டு கிளம்பினார்.  அசைந்தாடிக் கொண்டு பாதையில் வண்டி கிளம்பியதுமே அவருக்கு தூக்கம் கண்ணை சுழற்றி உறங்கிப் போனார்.  மாடுகள் பழக்கப்பட்ட பாதையில் போகும் குணம் உடையவையாதலால்  இது வழக்கமான பழக்கம் தான்.
வெகு நேரம் கழித்து-விடியும் நேரத்தில்-கண் திறந்து பார்த்த போது வண்டி அவருடைய  வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த அவருடைய  செக்கை சுற்றிக் கொண்டிருந்தது.   அதிர்ந்து போன அவருக்கு அப்போது தான் புரிந்தது வேலைக்காரன் தவறுதலாக செக்கு மாடுகளை வண்டி மாடுகளுக்கு பதிலாக பூட்டி விட்டான் என்று.  அவை தம் வழக்கப்படி செக்கை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. இனி அவர் ஊர் போய் சேருவது எப்போது ?
இதையே பழக்க தோஷம் என்போம்.  ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியவில்லையே என்று கவலைப்படும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த பழக்க தோஷம் அல்லது  விஷய வாசனைகளே காரணம்.

தியானத்தில் அமர்கின்ற போது மனம் உள்முகமாகாமல் இங்குமங்குமாகத் திரிவது இந்த பழக்க தோஷத்தால் தான். இதனால் தான் அஷ்டாவக்ர கீதையில் ஜனகருடைய முதல் கேள்விக்கே அஷ்டாவக்கிரர்  “புலன்களை உள்முகமாக்காத வரையில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது” என்பதை அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார். 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் எழுமையும் ஏமாபுடைத்து என்று  வள்ளுவரும் புலன்கள் வெளிமுகமாகத் திரிவதை விட்டு தற்காப்பிற்காக ஆமை தன் தலை கால்கள் யாவற்றையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல் நாம் புலன்களை வெளிக்கவர்ச்சிகளிலிருந்து காத்துக் கொள்ள உள்முகமாக்க வேண்டும் என்கிறார்.

மனதை வெற்றிடமாக்க முடியாது. காற்றில்லாத வெற்றிடத்தை உருவாக்குவது எப்படி சிரமமோ அதை விடவும் பல மடங்கு கடினமானது எண்ணங்களற்ற  மனதை உருவாக்குவது. ஆனால் நிர்விகல்ப சமாதி என்பதே எண்ணங்களற்ற மனது. அதாவது மனம் இறந்த நிலை.  தூக்கத்தின் போது ஒவ்வொரு நாளும் மனம் ஆன்மாவில் ஒடுங்குகிறது. அதையே விழிப்புணர்வில் அடைய முடியுமானால் அதுவே இறை நிலை. இதை தாயுமானவர் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?  என போற்றுகிறார். இது ஆன்மாவில் மனம் கரைந்து போன நிலை அல்லது ஜீவாத்மா பரமாத்வாவுடன் ஐக்கியமாதல் என்கின்றனர்.

இதற்குப் பரிந்துரைக்கப்படும் வழிகள் பெருவாரியாகப் பார்த்தால் முதலாவது சத்சங்கம்,  இரண்டாவது நாம செபம். 

சத்சங்கம்  என்பது வெளிமுகமானாலும் ஒரு வரையறையுடைய எண்ணப் போக்கினை உருவாக்குகிறது. இது அணையில் நீர் தேக்கப்பட்டு ஒரு கட்டுப்பாட்டுடன்  வெளிப்படும் போது எழும் மின் ஆற்றல் போல சாதகனுக்குள் ஒரு ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதனால் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் பல நல்ல காரியங்களில் மனம் ஈடுபடுகிறது.  ஒவ்வொரு முறையும் கேளிக்கை உல்லாச எண்ணங்களில் மனம் ஈடுபடும் பொழுதும் அது தன் ஆற்றலை இழக்கிறது. இது விரையமாகும் நீரைப் போன்றது.
சத்சங்கத்திலேயே இருப்பினும்  ஒரு அபாயம் சாதகனை எதிர்நோக்கியிருக்கிறது.  அது மாயையின் விளையாட்டு.
 நல்ல காரியங்களில் ஈடுபடும்போது பலருடைய பாராட்டும் தேடி வரும். அப்போது அதை தன்னுடைய தனித் திறமையால் ஆனது என்று மனது சாதகனை நினைக்க வைத்து ஏமாற்றுகிறது. அதன் விளைவாக ’கர்த்தா பாவம்’ அவனுள் குடியேறி அவனுடைய சாதனை இறைவனை தேடுவதை விட்டு புகழைத் தேடுகின்ற மாய வலையில் சிக்கிக் கொள்ளும்.            

இதைத் தவிர்க்கவே நாமசெபத்தை ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.  Habit is like a rope- a thread every day and finally we cannot break it.  இது நாமசெபத்திற்கும் பொருந்தும்.

நாமசெபம் என்பது மிக மிக எளிமையான பயிற்சி.  அது இறை சிந்தனையில் நம்மை கட்டிப்போடுவதால்  நம்முள் கர்த்தா பாவம்  தலையெடுக்காத வண்ணம் பாதுகாக்கிறது.  நடப்பதெல்லாம் அவனுடைய செயல், நான் வெறும் அவனுடைய கருவி மட்டுமே என்கிற உண்மை உறுதி படுகிறது.
ஆனந்தாஸ்ரமத்தின் பாப்பா ராமதாஸ் சொல்வாராம்                சிதையூட்டப்பட்டு சாம்பாலாகி நிற்கும் நம் ஆணவத்தின் மேல் நாம் நிற்கவேண்டும்.” அப்படி முற்றிலுமாக நம் ஆணவம் அழிய வேண்டும்.

 நாமசெபத்தை விடாமல் கை கொள்பவருக்கு காலப்போக்கில் ’நான்’ என்கிற எண்ணம் சிறிது சிறிதாகக் கரைந்து எல்லாம் அவனே என்ற உணர்வு தலையெடுக்கும்.   இந்த நிலையை கபீர்தாஸர் ஒரு அழகிய உதாரணத்தின் மூலம் படம் பிடிக்கிறார்.

चली जो पुतली लौन की, थाह सिंधु का लेन 
आपहू गली पानी भई, उलटी काहे को बैन 

ஆழம் அறிய கடலில்  குதித்தது உப்பின் பதுமை  
ஆழம் உரைப்பவர் எவரே  கடலுள் கரைந்ததே பதுமை

அப்படி நாமசெபத்தில் கரைந்து போனவர்தான் யோகி ராம்சூரத்குமார்.
காஸர்கோடு ஆனந்தாஸ்ரமத்தில் பப்பா ராமதாஸ் சுவாமிகளிடம் உபதேசம் பெற்று திருவண்ணாமலையில் தன் வாழ்நாளையெல்லாம் இந்த உலகம் உய்வதற்காக வாழ்ந்த அந்த மகானின் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும்  டிசம்பர் முதல் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

குருஅருளால் அவருடைய தனித்துவம் ( ego) எப்படி மறைந்தது என்பதை அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.

இந்தப் பிச்சைக்காரன், 1952ம் வருடம்... சுவாமி பப்பா ராம்தாஸைத் தரிசித்த தருணத்தில், செத்துப் போய்விட்டான். சுவாமி பப்பா ராம்தாஸ், இவனைக் கொன்றுபோட்டார். அதற்குப் பிறகு... இங்கே எதுவும் இல்லை. எவரும் இல்லை. அவருடைய தாமரை போன்ற பாதங்களைக் கெட்டியாக நான் பற்றிக் கொண்டேன். அப்படிப் பற்றிக் கொண்டதால், இத்தனை பெரிய செயல், அழகாக நிகழ்ந்தது’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமார் அருளியிருக்கிறார்.
  சுவாமி பப்பா ராம்தாஸை, தன் குருவாக வரித்துக் கொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அவரே எல்லாமும்... குருவே சகலமும் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதி, அவரை இன்னும் இன்னும் குருவிடம் நெருங்கச் செய்தது.    


                                              
ராம் ஸுரத்குமார் பற்றி ஏற்கனவே  அன்பர் YRSK பாலுஎன்னும் பாலசந்தர் அவர்கள் இந்த வலைதளத்தில் நம் யாவரிடமும் பகிர்ந்து கொண்டுள்ளது அனுபவித்து படிக்க வேண்டிய ஒன்று. 

பப்பா ராமதாஸரின் அருளுரைகளும், சாதகர்களுக்கான கேள்வி பதில்களும் ஆனந்தாஸ்ரமத்தின் வலை தளத்தில் இலவச மென்புத்தகங்களாக  தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

நமக்குக் கிடைத்திருக்கும் மனிதப் பிறவி ஒன்றின் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும். இதை வீணாக்கக்கூடாது என்பதையும் கபீர் அறிவுறுத்துகிறார்.

आज कहे हरी कल भजुंगा, काल कहे फिर काल ।
आज कालके करत ही, अवसर जासी चाल ॥

நாளை தொழுவே னென்று உரைப்பா யின்று, நாளை மறுபடி நாளையாச்சு நாளை நாளை என்று தள்ளியே   நாட்க ளெல்லாம் வீணாய்ப் போச்சு

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் யாவரும் நாமஸ்மரணையில் ஈடுபட்டு யோகியார் ராம்சூரத் குமார் போன்ற யோகிகள் குருமார்களின் அருளுக்குப் பாத்திரமாவோம். 
--------------------------------------------------------------------------
தலைப்பில் உள்ள நாழிஅப்பும் நாழி உப்பும் என்பது சிவவாக்கியர் பாடல்.  ஹரியும் ஹரனும் ஒருவருள் ஒருவராய் (உப்பும் நீரும் போல) இருக்கின்றனர் இதை அறியாமல் வேற்றுமை பேச முற்படுவது பேதமை எனக் கூறும் பாடல். சிவவாக்கியர், கபீர் காட்டியுள்ள அதே உதாரணத்தை வேறொரு கருத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.