Saturday, August 06, 2022

காக்கையில் காண்பார் அப்பனை

 உலக வாழ்க்கையில்  பெரும்பாலும் நமது பேச்சும்   நடத்தையும்   முரண்படும் போது    நகைப்பிற்கு  இடம் கொடுக்கிறோம். அனைத்து கேலி சித்திரங்களும் -அரசியலாகட்டும், சமூக நடப்புகளாகட்டும்- இந்த முரண்பாட்டை  சுற்றியே  எழுகின்றன.  குழந்தைகள் எதிர்பாராதபோது உண்மைகளை போட்டுடைக்கும் போது  எழும் தர்மசங்கடங்களும் சிரிப்பை வரவழைப்பனவே.

வழிவழியாக  வரும் நம்பிக்கைகளை  அதன் தாத்பரியம் அறியாத மக்கள் கடைபிடிக்கும் போது அறியாத சிறு குழந்தைகள் போல் ஆகி விடுகின்றனர்.  ஒரு நிலையில் அவர்களின் செய்கை மூட நம்பிக்கை என்ற நிலைக்கு  ஆளாகிறது. 

உதாரணத்திற்கு கபீர் ஒரு பாடலில் சொல்வார் "கங்கையில் மூழ்குவது மோட்சம் என்றால் காசியின் எல்லா காகங்களுக்கும்  மோட்சம் சுலபமே"  என்று கேலி செய்வார். 

  இங்கே  அவர் கங்கையின் புனிதத்தைப் பற்றி கேலி செய்வதாகக் கொள்ளக் கூடாது.  ஏனெனில் அவர் ஒரு ஞானி. அவர் கண்டிப்பாக ரிஷி முனிகளின் வாக்கில் தவறு இருப்பதாக சொல்ல மாட்டார். அப்படியானால் அவர் சொல்ல வருவது என்ன?

 இதை விளக்க ஒரு கதை உண்டு. 

பார்வதி தேவிக்கும் இதே சந்தேகம் வந்தது. "கங்கையில் நீராடுபவர்கள் எல்லோருக்கும் பாவங்கள் கரைந்து விடுமா?"  என்று கேட்கிறாள்.  " சரி வா ! அதையும் பரீட்சை செய்யலாம் "  என்று  சொல்லி இருவரும் காசியை அடைந்தனர்.

      சிவன் கங்கை கரையில் ஒரு குஷ்ட ரோகியாய் வேஷம் எடுத்து படுத்திருக்க  பார்வதி  அவன் மனைவியாய் நாடகம் ஆடினர். கங்கைக்கு வருவோர் போவோரையெல்லாம் தன் கணவருக்கு 'பாவங்களை கழுவும்; ;கங்கையில் நீராட உதவ வேண்டுமாறு வேண்டிக் கொண்டாள். நூற்றுக்கணக்கான பேர் அவர்களை பொருட்டாகவே கருதவில்லை. ஒரு சிலர் கேலி செய்து கொண்டே சென்றனர். இன்னும் பலர் உதட்டளவில் அனுதாபம் காட்டினர். ஆனால் யாரும் அவரை நதி வரையில் தூக்கிச் செல்லவோ நீராட்டவோ முன் வரவில்லை.  எங்கோ சென்று கொண்டிருந்த  ஒரு கீழ் நிலை மனிதன் அவர்கள் மேல் அனுதாபம் கொண்டு அந்தரோகியின் கங்கையில் நீராடும் விருப்பத்தை நிறைவேற்றி  அவர்களை வணங்கிச் சென்றான்.

அப்போது சிவபெருமான் தேவியிடம் கூறினார் "இவ்வளவு ஜனங்களில் மோட்சத்தை பெறப் போவது இவன் மட்டுமே.  ஜீவகாருண்யம் இரக்கம் போன்ற பண்புகளுடன் விருப்பு வெறுப்பற்றவன், மேன்மேலும் பாவ செயல்களை செய்யாதவன் இவர்களுக்கு மட்டுமே மோட்சம் சித்திக்கும்.  அநேகம் பேர் இதை ஒரு குருட்டு போக்கில் சித்த சுத்தியின்றி செய்வதால் அவர்களுக்கு எவ்வித பயனும் இருப்பதில்ல. மேலும் சிலர் வெளி பகட்டாகக் காட்டிக் கொள்கின்றனர் " என்று  துவங்கி  உண்மையான பக்தனுக்கு தேவையான குணங்களைப் பற்றி  மிகவும் விஸ்தாரமாக விளக்கியதாக கதை செல்கிறது.

இந்த அடிப்படைத் தகுதியை மக்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கபீர்தாஸ் போன்ற ஞானிகள் இடித்துரைக்கின்றனர்.

அது போன்றே இன்னொரு இடித்துரை கபீர் சொல்வதும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

जिंदा बाप कोई न पुजे,  मरे बाद पुजवाया | 

मुठ्ठी भर चावल  लेके,  कौवे का  बाप  बनाया || 



அப்பனை  வாழ்க்கையில் மதியார், அவர் மரித்த பின்வழி படுவரே |

அங்கை நிறைய  சோறெடுத்து  காக்கையில்  அப்பனைக்  காண்பரே ||

மாற்று :

அப்பன்  வாழும்  போது மதியார், அவர்மரித்த பின்வழி படுவரே |

 அப்பனை காக்கை  யாக்கி, கைநிறைய  அமலை படைப்பரே ||  

{அமலை : வெண்சோறு, சோற்றுத் திரள் )

நம்முடைய முன்னோர்களுக்கு ஈமக்கடன் ( சிராத்தம்) செய்வது என்பது காலங்காலமாக  இருந்து வந்திருக்கிறது.  சங்க இலக்கியங்கங்களிலும்  காலமான முன்னோர்களை 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை தலையானது. 

திருவள்ளுவரும் 

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

என்று அன்றாடக்  கடமைகளில் முதலிடம்  முன்னோர்களுக்குத் தருகிறார்.

படைத்தல் அல்லது நிவேதனம் என்பது நமக்குள்ளே ஒரு பொறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சடங்கு என்பதை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவம் புரியும். நன்றி உணர்ச்சி பெருகும் இடத்தில் மட்டுமே சண்டை சச்சரவுகள் இன்றி அமைதி இருக்கும்.  ஒரு சிறு குடும்பமோ, நாம் சார்ந்த சமூகமோ ,வசிக்கும் நாடோ எதுவானாலும்  நம்முடைய மகிழ்ச்சிக்கும் வளமைக்கும் இந்த நன்றி உணர்ச்சியே அடிப்படையாகிறது. அது மனதில் குடிகொள்ளும்போது சுயநலம் மறைகிறது, விட்டுக் கொடுக்கும் பண்பு வளர்கிறது.

சூரியனுக்கு நன்றி சொல்ல பொங்கல் படைக்கிறோம். சூரியன் வந்து சாப்பிடுகிறானா என்ன என்று கேள்வி கேட்பவர்களுக்கு பரமாச்சாரியர் சொல்கின்ற அழகான பதிலை பாருங்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது சமூகத்திற்கு ஆற்றும் கடன். அதற்காக அவர்கள் மேற்கொண்ட கஷ்ட நஷ்டங்களை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்வதற்கான சடங்கே சிரார்த்தம்.  ஆனால் அவர்களின் முதிய காலத்தில் கவனிக்காமல் புறக்கணித்து முதியோர் இல்லங்களில் தனிமையில் கழிக்கவிட்டு அவர்களின் மரணத்திற்குப் பின் செய்யப்படும் ஈமக் கடனை நன்றி சொல்வதாக பொருள் கொள்ள முடியுமா என்ன? 

இந்த பிரச்சனை இன்று நேற்றல்ல கபீர்தாஸரின் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பது  அவருடைய மேற்கண்ட ஈரடியில் விளங்குகிறது.

கபீர், தயானந்தர், விவேகானந்தர், நாராயண குரு என்று எவ்வளவு சமூக சீர்திருத்தவாதிகள் வந்த போதிலும்  மனிதர்கள் போக்கில் பெரிதாக மாற்றம் தெரிவதில்லை. ஒருவேளை அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகப் போயிருக்குமோ என்னமோ !!