Monday, August 23, 2010

அழல் எரிக்கும் முளி புல்

பலரும் குருவை அணுகி பலவிதமான காணிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர். சுவாமி ராமாவிடம் மட்டும் கொடுப்பதற்கு ஏதும் இருக்கவில்லை. ” ஐயா இன்று பலரும் தங்களுக்கு காணிக்கைகள் செலுத்திவிட்டனர். என்னிடம் ஏதுமில்லையே ? நான் என்ன கொடுப்பது ?” என்று குருவிடம் கேட்டார்.

 “நீ போய் கொஞ்சம் உலர்ந்த சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டு வா” என்று அவரை அனுப்பி வைத்தார் அவர் குரு. 

அவர் அப்படியே ஒரு பெரிய கட்டு சுள்ளிகளைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைத்து நமஸ்கரித்தார். “உன்னுடைய பழைய வினைகளையெல்லாம் இந்த சுள்ளிகளைப் போல எரிந்து போகும். அவற்றால் எந்த துன்பம் வராது. நான் உன்னருகே இருந்து துன்பம் அணுகாமல் பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி கொடுத்தார் குரு. 

அது போலவே ராமா அவர்களின் ஜாதகத்தின்படி பல பண்டிதர்களால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மரணம் சம்பவிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பினும் அவரது குரு அதை எப்படி மாற்றியமைத்தார் என்பதை அவர் வேறொரு அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். 

 பச்சை மரத்தில் தீ பிடிக்காது. வெறும் புகைதான் மண்டும்.

 உலக விஷயங்களில் ஆர்வம் உள்ள வரையில் நாமும் பச்சை மரம் தான். 

நமக்குள் ஆன்மீகக் கனலை எவ்வளவுதான் வீசி வீசி பற்ற வைக்க முயன்றாலும் புகை போல வெறும் மனக் குழப்பம் மட்டும்தான் மிஞ்சும். 

 குரு அருள்கின்ற மந்திரமும் நாம செபத்தில் தீவிரப் பயிற்சியும் அந்த ஈரத்தை சிறிது சிறிதாக உலர வைக்கிறது. இந்திரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் சக்தியை இழக்கத் துவங்குகின்றன.

 உலர்ந்த சுள்ளியில் அதன் வடிவம் மட்டுமே எஞ்சி நிற்பது போல் சாதகனின் வினைகள் பெயரளவில் ஒட்டிக் கொண்டிருக்கும். அயராத நாம செபத்தில் உலர்ந்து நிற்கும் வினைகளை குரு அருள் முழுவதுமாக சுட்டெரித்து விடும். இதைக் கபீரும் உறுதி செய்கிறார். 

  जबही राम हिरदै धरा, भया पाप का नाश । 
मानो जिनगी आग की, परी पुराने घास ॥ 

  நெஞ்சில் மன்னுவன் இராமன்,பாவம் எல்லாம் ஒழிந்தது 
எஞ்சுமோ தீண்டிய அழலில், முளி புல் யாவும் எரிந்தது 

 மாற்று: 
  உருகிப் போனது தீவினை யாவும், உள்ளுள் இராமன் வந்ததுமே
 கருகிப் போயின முளிபுல் யாவும், கனல்பொறி தீண்டிய பின்னே 
  (மன்னுதல்- நிலைபெறுதல் ; முளிபுல் -உலர்ந்த புல் ) 

 இந்த கருத்தை காலம் காலமாக நமது ஆன்மீக வழிகாட்டிகள் சொல்லி வந்திருக்கின்றனர் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் அஜாமிளன் கதை மூலமும் தெரிய வருகிறது. 

 விதிவசத்தால், நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வழி தவறி இன்ன பாவம் என்றில்லாமல் எல்லா வகைப் பாவங்களையும் இழைத்து மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவன் உயிரைக் கொண்டு செல்ல எமதூதர்கள் அவன் முன்னே தோன்றுகிறார்கள். பயத்தினால் தன் கடைசி மகன் பெயரை " நாராயணா நாராயணா" என்று சொல்லிக் கொண்டே இறக்கிறான் அஜாமிளன். 
 
 உடனே விஷ்ணு தூதர்களும் அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது எமதூதர்களுக்கும் விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் நடக்கிறது. ஏன் அஜாமிளன் உயிரை எமதூதர்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு அவர்கள் சொன்ன உதாரணமும் கபீர் சொல்லும் அதே உதாரணமே.

अज्ञानादथवा ज्ञानादुत्तमश्लोकनाम यत् 
सङ्कीर्तितमघं पुंसो दहेदेधो यथानलः (6.2.18)

 அஞ்ஞானாத் அதவா ஞானாத் உத்தம ஷ்லோக நாம யத்
 சங்கீர்த்திதம் அக்ஹம் பும்ஸோ தஹேத் எத: யதா அனல: 

[ அஞ்ஞானாத்= தெரியாமலோ, அத்வா= அல்லது, ஞானாத் =தெரிந்தோ, உத்தமஷ்லோகா=உத்தமன் புகழ், நாமா=நாமத்தை, யத்= அந்த, சங்கீர்த்திதம் = சொல்லி, அக்ஹம்= பாவத்தை, பும்ஸ:= அவனுடைய, தஹேத் = எரித்துவிடும், எத:= உலர்ந்த புல், யதா= போல, அனல:= நெருப்பு ]

 தெரிந்தோ தெரியாமலோ  அந்த பரம்பொருளின் நாமத்தை சொல்லுபவன் பாவம் உலர்ந்த புல்லை நெருப்பு எரித்துவிடுவது போல் எரிந்து போகும். அவர்கள் மேலும் சொல்கிறார்கள். 

மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது நோயாளிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உரிய முறையில் அதை உட்கொண்டால் அது குணப்படுத்தத்தான் செய்யும். அது போலவே இந்த அஜாமிளன் பாவங்கள் நிறைய செய்திருந்தாலும் அவன் நாராயணனின் பெயரை சொன்னதினால் அவனுக்கு மோட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி எமதூதர்களிடமிருந்து அவனை மீட்கின்றனர். 

 இங்கு எவருக்கும் சற்று குழப்பம் ஏற்படும். அதெப்படி மகனை கூப்பிட்டதும் அதை நாராயணன் தன் பெயராக ஏற்றுக் கொண்டு அவன் கொடிய பாவங்களையும் அழித்துவிடுவானா? அவ்வளவு கூட விவரமில்லாதவனா அவன் ? அப்படியானால் நமது பாவங்களுக்கும் நாம் படும் துன்பங்களுக்கும் அர்த்தமே கிடையாதே !! 

 கதை சொல்லும் ஓட்டத்தில் நிகழ்வுகள் மட்டுமே பெரும்பாலும் சொல்லப்படுகின்றன. அஜாமிளனின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதில் அவனுக்கு தெய்வ சிந்தனை இருக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும் விஷ்ணு தூதர்கள் விவாதத்தின் இடையே சொல்லும் ஒரு விளக்கம் (6.2.7) மூலம் அவன் ”உலர்ந்த புல்லின்” நிலையை அடைந்திருக்கக் கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது. 

अयं हि कृतनिर्वेशो जन्मकोट्यंहसामपि |
यद्व्याजहार विवशो नाम स्वस्त्ययनं हरेः  ||

அயம் ஹி கிருத நிர்வேஷோ ஜன்ம கோடி அம்ஹஸாம் அபி |
யத் வ்யாஜஹார விவாஷோ நாம ஸ்வஸ்தி அயனம் ஹரே:  ||

[அயம்= இவன்(அஜாமிளன்); ஹி =உண்மையாக ; ஜன்மக் கோடி=பல கோடி ஜென்ம; அம்ஹஸாமபி = பாவங்களுக்காக ; கிருத நிவேஷ: = தன்னிரக்கத்தால் வருந்தியவன்; விவாஷ:= கை விடப்பட்ட நிலையில்; நாம ஸ்வஸ்தி அயனம் ஹரே:= முக்திக்காக உயர்ந்த ஹரியின் பெயரை வ்யாஜஹார=உச்சரித்திருக்கிறான். ]

 பல கோடி ஜென்மங்களில் செய்த பாவத்தை எண்ணி அவன்(அஜாமிளன்) தன் கடைசி காலத்தில் வருந்தியிருக்கிறான் என்னும் காரணமே அவன் உலர்ந்த புல் என்கிற நிலைக்கு தயார் செய்திருக்கிறது என்று கொள்ளலாம். அந்நிலையில் தேவையானது தீப்பொறி மட்டுமே.அவன் அறிந்தோ அறியாமலோ அதுவும், இறைவனின் நாமம், மரண நேரத்தில் சேர்ந்து கொள்கிறது. அதனால் முன்வினைகள் யாவும் எரிக்கப்பட்டது. 

 இப்போது இன்னொன்று புரிகிறது. நாமசெபம் இல்லாமலே உலர்ந்த 'கட்டை' அஜாமிளன். ஆனால் நாமசெபம் இல்லாமல் முக்தி கிடையாது போலும். விஷ்ணு தூதர்கள் எமதூதர்களை விரட்டி விட்டு போய்விடுகிறார்கள். 

அஜாமிளன் உயிர்பெற்று எழுகிறான். நாராயணின் பெரும் கருணையை நினைந்து அவன் மனம் போற்றத் தொடங்கியது. அவன் கங்கை கரையை அடைந்து நாமசெபத்திலும் சத்சங்கத்திலும் காலத்தைக் கழித்து இறுதியில் இறைவனின் திருப்பாதங்களை அடைகிறான் என்று கதை முடிகிறது. 

 ஒரு சுற்றறிக்கையோ அல்லது கடிதமோ அரசாங்கத்தாலோ நிறுவனங்களிலிருந்தோ வெளியிடப்பட்டால் அதை செயல்படுத்துவதற்கு தக்க அதிகாரமுள்ள அதிகாரியின் கையொப்பம் இருந்தால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும். பல நேரங்களில் மிகப் பழைய அறிக்கைகளை காலாவதியாகி விட்டது என்று கூட சிலர் தள்ளிவிடத் துணியலாம்.

 துவாபரயுக பாகவதத்தில் சொல்லியுள்ள கருத்து கலியுகத்திலும் செல்லுபடியாகும் என்று கபீர்தாஸர் இந்த ஈரடி மூலம் தம்முடைய ஒப்பத்தை இட்டு உறுதிசெய்துள்ளார்.

Monday, August 16, 2010

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்

பக்குவமுற்ற சீடனை குருவே வந்து ஆட்கொள்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை ஆன்மீகத்தில் வலுவாகவே உண்டு. ஒரு சிலருக்கு இது எதிர்பாராதவிதமாக நடைபெறுவதுண்டு என்றும் பலருக்கு ஆண்டாண்டு காலமாய் தேடியப் பின்னரே வாய்க்கிறது என்றும் அறிகிறோம். எதிர்பாராத விதத்தில் நடைபெறும் போது அதை பிந்தைய சென்மங்களில் செய்த முயற்சியின் தொடர்ச்சி என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது.

எப்படியாயினும் சீடன் பக்குவமுற வேண்டும்.

மேல்தோல் பச்சையாய் இருக்கும் வரை காய். அதில் சற்றே மஞ்சள் காணத் துவங்கும் போது கனியாகிக் கொண்டிருக்கிறது என்கிற குறிப்பு தெரிகிறது. அதைப் பறித்து அரிசி டப்பாவுக்குள்ளோ அல்லது வைக்கோற்புல் கூடைக்குள்ளோ வைத்துப் பழுக்க வைப்பர். இதை மூட்டம் போடுவது என்று சொல்லக் கேள்வி. அதை நல்ல முறையில் செய்வதற்கும் அந்தத் துறையில் தேர்ச்சி இருக்க வேன்டும். குரு ஒருவருக்கே சீடன் கனிந்து கொண்டிருக்கும் பக்குவத்தை முறையாக புரிந்து கொள்ள முடியும்.

பத்திரகிரியார் பாடல் ஒன்று :

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல் லாமறிந்து
குருவையறிந் தேநினைந்து கும்பிடுவது எக்காலம் ?

( தெரிவை terivai : (page 2036) (யாழ். அக.) 4. Appearance, visibility; தோற்றம். (W.) 5. That which is known or ascertained; அறியப்பட்டது )

இதில்காய் கனிந்து கொண்டிருக்கும் நிலையை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ’எல்லாமறிந்த அந்த குரு என்னை அடையும் நாள் எப்போதோ’ என்ற காத்திருக்கும் மன அடக்கத்தையும் காட்டுகிறது.

நல்ல சீடர்களாக அறியப்பட்டவரின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அப்பேற்பட்டப் பக்குவம் என்பது என்ன என்பதை ஓரளவு கண்டு கொள்ளலாம்.

அப்படி ஒரு நல்ல சீடர் சுப்பிரமணியன் என்னும் தமிழ் புலவர். உ.வே. சாமிநாதையர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற தமிழறிஞர்களால் சங்ககால இலக்கியங்களுக்கு நிகரான தமிழ் பாடல்கள் படைக்க வல்லவர் என்று பாராட்டப் பெற்றவர்.

அவரைத் தேடி இரண்டு புத்தகங்கள் அவரது மாமனார் வழியே வந்தடைந்தது. குருவின் திருவுள்ளம் யார் மூலம் செயல்படும் என்பதை யாரும் அறியார். பிற்காலத்தில் தன் மகளை விட்டு விட்டு மனையைத் துறந்து பிட்சாடனம் போவதற்கான வழியை அவரே திறந்து விட்டார்.

அருணாசல ஸ்துதி பஞ்சகம் மற்றும் நான் யார் என்ற தலைப்புடைய புத்தகங்களே அவை. சுப்பிரமணியன் போய் முருகனார் என்ற சீடர் கிடைப்பதற்கு வழி செய்தன.

ஸ்ரீ ரமண பகவானின் மிகப்பிரியமான பக்தருள் ஒருவர் முருகனார். சீடன் என்பதன் இலக்கணத்தை அறிய வேண்டுமென்றால் அது முருகனாரின் வாழ்க்கையை அறிவதே எனலாம்.

சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார் சுப்பிரமணியன். பகவானைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போதெல்லாம் உடனே ஆஸ்ரமத்திற்கு வந்துவிடுவார். ஆனால் திரும்பிப் போகும் போது தேனில் விழுந்த வண்டைப் போல சிக்கித் தவிப்பார்.

கிளம்பிச் சென்றவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து நிற்பார். இதைக் கண்ட பகவான் யாரையாவது அவர் கூடவே அனுப்பி ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வரும்படி செய்வார். அப்படி அனுப்பியும் சில நேரங்களில் ஆஸ்ரமத்திற்கு திரும்புவதுண்டு .

இரயில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தன்னை மறந்த நிலையில் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் உலவிக் கொண்டு இருப்பார். அவரது நிலை பரிதாபமாக இருக்கும். அதன் பின்னர் ரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் வரை கூட இருந்து வழியனுப்புவதை சில நண்பர்கள் வழக்கப்படுத்திக் கொண்டனர்.

அப்பேற்பட்ட மனநிலை வாய்க்காத வரையில், நம்மை ஆன்மீக சாதகர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ அல்லது குரு அருள் இல்லையே என்று ஏங்கவோக் கூட தகுதியுள்ளவர்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஸ்ரீ முருகனார் பகவான் தரிசனத்திற்கு வருவதே ஒரு வினோதம். பகவானைப் பார்த்தமாத்திரத்தில் அவர் உள்ளம் நெகிழ்ந்து உடல் ஒடுங்கி நடை தளர்ந்து விடும். அவரது பார்வை பகவானைத் தவிர வேறெதையும் பார்க்காது. இந்த நெகிழ்வுடன் பகவானைப் பணிந்துவிட்டு ஹாலில் ஒரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பகவானைப் பார்த்த வண்ணம் இருப்பார். அவரது குருபக்தி காலத்தைக் கடந்து நிற்கிறது.

இங்கே கபீர்தாசரின் அனுபவத்தை முருகனாரில் காண்கிறோம்.

गुरु मूरति गति चन्द्रमा, सेवक नैन चकोर ।
आठ पहर निरखत रहे, गुरु मूरति की और ॥


தண்நிலவாம் குருவுருவம் சீடனுக்கு, சகோரமாய் கண்கள் தொடருது
எண்சாமம் நினைவின்றி போகுது, எல்லாம் குருவுருவில் மறந்து

எட்டு ஜாமம் போவது அறியாமல் வேறெந்த சிந்தனையுமின்றி அமர்ந்திருக்க வேண்டுமானால் அது, குரு சீடனுள் தூண்டிவிட்ட மெய்யுணர்வு அனுபவம் ஆகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறு அருள் நோக்கால் தம்மை மறக்க நேரிடும் சீடன், மீண்டும் மீண்டும் அதற்காக ஏங்குவதை சகோர பட்சி, நிலவின் ஒளிக்காக ஏங்குவதை ஒப்பிடுகிறார் கபீர்.

வெறும் நிலவின் ஒளியிலேயே அமிர்தத்தை உண்டு வாழ்வது சகோர பட்சி என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. பிற பறவைகள் போல புழு பூச்சிகளை உண்ணாமால், காய் கனிகளிலும் விருப்பம் கொள்ளாத பட்சி அது.

இது பூவுலக ஆகர்ஷணங்களுக்கு ஆட்படாமல் மிக உயர்ந்த ஆன்ம தத்துவத்திற்காக ஏங்கும் சீடனின் நிலையை குறிப்பிடுவதற்காக சொல்லப்படுவது. குரு அருளுக்கு பாத்திரமாவதே மிகப் பெரிய சாதனையாகும்.

இதற்கானக் காரணத்தை முருகனாரின் பாடல் ஒன்றிலேயே காணலாம். முருகனாரின் திருக்கண்ணோக்கம் (9)

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானைத் தந்நோக்கால்
நோக்குறுவார் நோக்காரா நோக்காதார் நோக்குதலால்
நோக்கரிய நோக்கானை நோக்கலுறிற் றடையாமந்
நோக்கற வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானை :பார்க்கும் பார்வையில் பார்ப்போனாயிருக்கும் உணர்வுருவாயிருந்து, பார்வையினூடே உள்ளத்தில் நுழைந்தானை
தந்நோக்கால் நோக்கு உறுவார் :தன்னை உணரும் மெய் அறிவினால் அன்பர்கள் காண்பார்கள்.
நோக்காரா நோக்காதார் : நிறைந்த பார்வையிலாதார் காண இயலாது.
நோக்கரிய நோக்கானை :பார்பதற்க்கரிய மெய்யறிவு உடையானைக்
நோக்கலுளில் தடையாம் :காண்பதனால் தன்னைக் காண்பதிலுள்ள தடையாயிருக்கும்
அந்நோக்கற : (அந்த நோக்கு அற) அந்த சுட்டறிவு (அகந்தை) அறவே நீங்கும்.
வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ :(அத்தன்மையான) வேங்கடனை கண்டு களித்திருப்போம்.
(வேங்கடராமன் ரமணரின் இயற்பெயர்)

குருவின் அருட்பார்வை தம்மை தரிசிக்கும் அடியார்களின் விழிவழியாக ஊடுருவி சென்று, எழும்பும் அகந்தையை எழுமிடத்திலேயே அழித்து விடும் ஆற்றல் உடையது. அகந்தை அழிந்தால் எஞ்சியிருப்பது மெய்யுணர்வே. இந்த மெய்யுணர்வில் நிலைப்பட்டவர்க்கு தனக்கு அன்னியமாய் எதுவும் தோன்றாது.அப்படிப்பட்ட மெய்யுணர்விற்கு ஏதேனும் தடையிருந்தால் அதை அறவே நீக்குவதே பகவானது அருள் நோக்கு என்று கூறுகிறார்.

குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ

என்று குருவருள் பெற்ற சீடன் நிலையை பட்டினத்து அடிகள் அருட்புலம்பலில் (489) சொல்கிறார். உருவழிக்க வந்தானோ என்பதை தன்னோக்கால் நோக்கு உறுவார் என்ற முருகனாரின் வரிகளால் உண்மை என்று அறியலாம். மெய்யுணர்வை அடைந்த நிலையில் புற உருவின் நினைவை இழப்பவன் சீடன் அன்றோ !

[Thanks for photo courtesy : davidgodman.org ] Muruganar seated on the Verandah


அவ்வாறு அவர் அடைந்த அனுபவத்தை ஒரு சிறிய நிகழ்வு மூலம் அறிகிறோம்.

வேறொரு ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் அவர்களது குருவின் வழிமுறையை பகவான் ரமணரிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களது முறைப்படி குரு சிஷ்யர்களை தினமும் சில ஆயிரம் செபங்களைச் செய்யச் சொல்லி இறுதியில் அதை குருவிற்கு அர்ப்பணம் செய்யச் சொல்லுவாராம். தான் அதைத் தவறாமல் செய்து வருவதாகவும் ரமணாசிரமத்தின் முறை என்ன என்பதையும் தயங்கிய படியே கேட்டார்.

இதைக் கேட்ட பகவான் சிரித்துவிட்டு “ஓஹோ ! அப்படியா! பரவாயில்லையே! குருவிற்கு சிரமில்லாமலே நாமத்தை சிஷ்யர்கள் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்களே ! அவருக்கு நல்ல லாபம்தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முருகனார் வந்தார்.

பகவான் அவரிடம் விஷயத்தைச் சொல்லி “. .அப்புறம் அந்த சிஷ்யருக்கு என்ன மிஞ்சுமோ! அசலை வைத்துக் கொண்டு வட்டியைக் கொடுப்பது போல குருவிற்கு காணிக்கைத் தர வேண்டும். எப்படி இந்த ஏற்பாடு!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்ட முருகனார், “அந்த குரு தேவலையே! முதலையாவது விட்டு வைக்கிறாரே ! வட்டியைத் தானே கேட்கிறார். (பகவானைக் காட்டி) இந்த குருவோ முதலையே விழுங்கி விடுமே! பிறகு வட்டியைக் கொடுப்பதற்கு யார் மிஞ்சி இருக்கிறார்கள்? வட்டியும் முதலும் ஒரு சேர தீர்ந்துவிடும் அப்புறம் என்ன இருக்கிறது " என்று கண்ணீர் மல்க பதில் கூறினார்.

பக்தியின் ஆழத்திலிருந்து வெளியான மிக உயர்ந்த நகைச்சுவை உணர்வு!

பகவானிடமிருந்து புன்முறுவலே பதிலாயிற்று.

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)
அண்ணாமலை ரமணன்

( திருமதி கனகம்மாள் அருளிய நினைவில் நிறைந்தவை என்ற புத்தகத்தில் காணப்படும் விவரங்களை வைத்து எழுதப்பட்டது. இது ஒரு ரமணாசிரம வெளியீடு)

திருக்கண்ணோக்கம் , கடைக்கண்பார்வைக்கு ஞானியர்கள் ஏங்கியதும் இதனால்தானோ! முருகனையே குருவாக அடையப் பெற்ற அருணகிரிநாதரும்

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ

[என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? ]

என்று திருச்செங்கோடு முருகனை நோக்கிப் பாடுகிறார். [ நன்றி :கௌமாரம்]

-------------------

முருகனார் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 தேதி இறைவன்டி சேர்ந்தார். அவரைப்பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்

(பல தவிர்க்க முடியாத காரணங்களால் சற்று காலதாமதமாக இந்த இடுகை வந்துள்ளது. வாசகர்கள் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)