Showing posts with label கபீர்தாஸ். Show all posts
Showing posts with label கபீர்தாஸ். Show all posts

Thursday, October 31, 2024

"ஸப் கா மாலிக் ஏக் ஹை "

 சென்ற பதிவில் ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில்  குறிப்பிடப்பட்டிருந்த காட்கே மஹராஜின் வரலாற்றைக் கண்டோம்.

இந்த பதிவில், அதே புத்தகத்தில் வாரிஷ் அலி ஷா என்னும் மற்றுமொரு மஹானின் அவதாரக் குறிப்பும் அவரைப் பற்றிய தகவல்கள் எப்படி உண்மையாகியுள்ளன என்பது பற்றியும் பார்ப்போம்.

சரிதாம்ருதத்தின் 45 ஆவது அத்தியாயத்தில் திசீலா என்ற ஊரில் ஒரு இசுலாமிய குரு சாயிநாத் என்ற பெயரில் அவதரிக்கப் போவதையும் .அவருக்கு வெங்குசா என்னும் பெரியவர் இந்து மதத்தின் குருவாகவும் முஸ்லீம் மத குருவாக வாரிஷ் அலி ஷா என்பவரும் வருவார்கள் என்றும் ஸ்ரீபாதர் தெரிவிக்கிறார். [அதே சமயத்தில் தான் சுவாமி சமர்த்தராக அவதரிப்பதாகவும் சாயிநாதனுக்கு தன்னுடைய சக்தியை மாற்றம் செய்து தன் அவதாரத்தை நிறைவு செய்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்]



 ஷிரடி சாயி சரிதத்தை பார்க்கும் போது அவர் ஒரு இசுலாமிய தம்பதியரால் நான்கு வயது வரை வளர்க்கப்பட்டு பின்னர்  நான்காம் வயதிலிருந்து 16 ஆம் வயது வரை  வெங்குசா என்றழைக்கப்பட்ட கோபால் ராவ் தேஷ்முக் என்பவரின் அரவணைப்பில் ஆன்மீகப் பயிற்சி பெற்றார் என்றும்  தெரிய வருகிறது.   தினமலர்  வலைத்தள இணைப்புக்கு  சுட்டவும்

இதில் சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ள கணிப்பில் குரு வெங்குசா பற்றிய பகுதி நிஜமாகியிருப்பது தெரிகிறது.

1851 -இல் முதன் முதலாக ஷிரடியில் ஒரு வேப்பமரத்தடியில் ஆழ்ந்த தவ நிலையில் உள்ள இளைஞனாக காட்சியளித்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

அதன் பின் 1854 முதல் 1858 வரை அவருடைய இருப்பிடம் வாழ்க்கைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 1858 -ல் ஒரு திருமண கோஷ்டியுடன் ஷிரடிக்கு வந்தவர் அங்கேயே தங்கி விட்டார் என்பது அவருடைய சரிதத்தில் உள்ளது.

இதிலிருந்து அந்த நான்கு அல்லது ஐந்து வருட கால இடைவெளியில் சாயிபாபாவிற்கு வாரிஷ் அலி ஷா வின் தொடர்பு ஏற்பட்டு இசுலாமிய வழிமுறைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கிறது என்று அனுமானிக்க முடிகிறது.

 ஆனால் இந்த முஸ்லீம் குரு ஹாஜி வாரிஷ் அலி ஷா (1817-1905 ) பற்றி நான் எதுவும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அவரைப் பற்றிய தேடல் துவங்கியபோது முதலில் கண்ணில் பட்டது விக்கிப்பீடியா ( தரவு பக்கம்) அவருடைய பாட்டனார், ஈரான் பிரதேசத்திலிருந்து லக்னௌ அருகே தேவா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். இன்று அது ஒரு முக்கிய யாத்திரைத் தலமாக இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் விளங்குகிறது.

    அவர் ஒரு சுஃபி மார்க்கத்தில் ஆன்மீகத்தின் -அன் அல் ஹக் எனப்படும் (அஹம் பிரம்ஹாஸ்மி)- உச்சத்தை எட்டியிருந்த ஒரு மகான் என்பது தெரிய வந்தது.

   தமது இரண்டாம் வயதில் தந்தையை இழந்த அவர் அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பிற குழந்தைகள் போலல்லாமல் அமைதி மிக்கவராய் காணப்பட்டார். ஐந்து வயதில் குரான் படிக்க ஆரம்பித்த அவர் இரண்டே வருடங்களில் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார். உயர் கல்வியை லக்னௌ நகரில் உறவினர் வீட்டிலிருந்து கற்றார். அரபு, பாரசீக மொழிகளில் அற்புத தேர்ச்சி பெற்று சமய போதனைகளையும் விளக்கங்களையும் பண்டிதர்களே வியக்கும் வண்ணம் கொடுக்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றி சீடர்கள் சேர ஆரம்பித்தனர். 1838 -இல் அவர் புனித  ஹஜ் பயணம் மேற்கொண்டார். எவரையும் உடன் அழைத்துச் செல்ல மறுத்து பாத யாத்திரையாக ஆக்ரா ஜெய்பூர், வழியாக மும்பை அடைந்தார். மும்பையிலிருந்து ஜெத்தா வரையிலுமான பயணத்தை கப்பலில் கடந்தார்.

மீண்டும்  கால்நடையாகவே மெக்கா மெதினா  எகிப்து, துருக்கி, ஜெர்மனி இங்கிலாந்து வரை பயணம் செய்தார் என்பதும் தெரிய வந்தது. இந்த பயணத்தில். சுமார் பதினான்கு ஆண்டு காலம் பலமுறை ஹஜ் யாத்திரை செய்து ஆன்மீக வழிகாட்டினார்.   

துருக்கி ஆட்டோவான் அரசர், ஜெர்மனியில் பிஸ்மார்க், இங்கிலாந்து அரசி விக்டோரியா முதலியோர்களை சந்தித்ததாக சொல்லும் போது அவருக்கு அக்காலத்திலிருந்த மதிப்பை அறிய முடிகிறது.

பீர் (Pir) எனப்படும் இசுலாமிய குரு மிகுந்த எளிய வாழ்க்கை வாழ்பவனாகவும், நாளைக்கென எதையும் சேர்த்து வைக்காதவனாகவும் அனைவரையும் சமகண்ணோட்டத்துடன் நடத்த வேண்டுமென்பதிலும் அவர் மிகுந்த கவனுத்துடன் நடைமுறையில் கடைபிடித்தார்.  அவரது வாழ்க்கையை கவனித்த ஆங்கில சரித்திர ஆசியர்கள் “ஹாஜி வாரிஷ் அலி ஷா  ஜீஸஸ் போன்றே ஒரு தூய இறை தூதர்” என்று போற்றுகின்றனர்.

விக்கிபீடியா பக்கத்தில் ஹாஜி வாரிஷ் அலி ஷா வின் பெரிய சீடர்களின் பட்டியலில் ஷிரடி சாயிபாபாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கபீர்தாஸ், வாரிஷ் அலி ஷா மற்றும் சிரடி சாயிபாபா மூவருமே இந்து-இசுலாமிய மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட உழைத்த பெரும் ஞானிகள். அவர்களின் உபதேசங்களிடையே பெரும் ஒற்றுமையை காணலாம். 

கபீர்தாஸரின் அறிவுரைகள் எப்படி ‘ ஹாஜி வாரிஷ் அலி ஷா’ வின் உபதேசங்களுடன் பொருந்தி வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள். (https://sufinama.org/poets/haji-waris-ali-shah/quotes )

1)  Not a breath should he pass without the remembrance of God

काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं |
सास-सास सुमिरन करॊ,और यतन कुछ नाहिं ||  ( Kabir)
நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு  |
மூச்சிலும் செபிநாமம், முயல்வதற் கில்லை வேறெதுவும்  ||

2)  Distance does not count in love, I am with you even if you are at a distance of thousands of miles

कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर ।
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर ॥

பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்

(அகோரமணி, இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை. தவறாமல் படிக்கவும். 

https://kabeeran.blogspot.com/2012/02/blog-post.html )

 

3)  It is no use going to Kaaba for those who cannot see God here

मोको कहाँ ढूढे रे बन्दे?    என்னைத் தேடுவதும் எங்கே
मैं तो तेरे पास में         
நானிருப்பதோ உன் அருகே

ना तीर्थ में ना मूर्त में      தீர்த்தங்களிலோ மூர்த்தங்களிலோ இல்லை
ना एकान्त निवास में       
தனிமைத் தேடும் ஏகாந்தத்தில் இல்லை

ना मंदिर में ना मस्जिद में   கோவிலிலோ, மசூதியிலோ  இல்லை
ना काबे कैलास में           
காபாவிலோ கைலாயத்திலோ இல்லை  

मैं तो तेरे पास में           நானிருப்பதோ உன் அருகே

4)  A true faqir never wants anything

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं ।

धन का भूखा जो फिरै, सो  तो साधू नाहीं ॥

அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை |

பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை ||

 

தன்னைத் தேடி வந்த பக்தரிகளிடையே எவ்வித பாகுபாடும் வாரிஷ் அலி காட்டவில்லை. யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. அவரவர் மதநம்பிக்கைகளையே கடைபிடிக்கச் சொன்னார். ஏனென்றால் இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அதனையே “சப் கா மாலிக் ஏக் ஹை” என்று ஷிரடி பாபாவும் மீண்டும் மீண்டும் சொன்னார்.

இன்று தீபாவளித் திருநாள். அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைக்கட்டும் என்பதை நினைவுபடுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழா. ஆனால் அதர்மமே தர்மத்தின் போர்வை போர்த்துக் கொண்டு எப்படி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மது விற்பனையையும் ( லக்ஷ்மி பூஜை என்ற பெயரில்)  சூதாட்டமும் நடைபெற வைக்கிறது என்பதை ஒரு போலீஸ் அதிகாரி நம் தேசத்து மக்களின் அறியாமை கண்டு மனம் வெதும்புகிறார்.

அவர் பெயர் ஷைலஜாகாந்த் மிஷ்ரா, உத்திரபிரதேசத்தில் DGP ஆக பணியாற்றியவர்

கபீரும், ஹாஜி வாரிஷ் அலியும், ஷிரடி சாயி போதிக்கும் சர்வமத சம்மத கருத்துகளை அந்த அதிகாரி குரான், வேதம் மற்றும் பைபிள் மேற்கோள்கள் மூலம் அழகாக எடுத்துரைக்கும் போது என்று தான் இந்த உலகம் திருந்தப்போகிறது என்ற ஆதங்கம் மேலோங்குகிறது.

இவ்வுலகின் போக்கை நிர்ணயிப்பவன் அவன். மணிவாசகப் பெருமான் சொல்வது போல் “ நன்றே செய்வாய் பிழைசெய்வாய், நானோ இதற்கு நாயகமே “ என்று தான் ஆறுதல் தேட வேண்டியிருக்கிறது.

இரமண பகவானின் “ உன்னைத் திருத்திக் கொள், உலகம் தானே சரியாகும்” என்பதின் கருத்தாழத்தை பிடித்துக் கொண்டால் இந்த தீபாவளியின் பயன் அடைந்ததாகக் கருதலாம்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Sunday, July 21, 2024

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே

 திருமலதாஸ் என்பவன் ஒரு சலவைத் தொழிலாளி. 

இது சுமார் 700 ஆண்டுகள் பழைய சரித்திரம்.  ( click here for details )

அவனுடைய பேறு  ஸ்ரீபாத  ஸ்ரீவல்லபரின் குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.  தொடர்பு மட்டுமல்ல  அவருடைய அருளும் இருந்தது. 

அதன் பயனாக முதிர்ச்சி அடைந்திருந்த அவனுடைய ஞானம், சங்கர்பட்டிடம் தன்னுடைய அடுத்த பிறப்பின் ரகசியத்தை வெளியிட்டது. அதுவும் ஸ்ரீபாதரால் அவருக்கு தெரியப்படுத்தப் பட்டதே.

அதை  ஸ்ரீபாத சரிதாம்ருதத்தின் கீழுள்ள பக்கங்களில் காணலாம். ( while reading on mobile screen click on the image to expand for better readability)

  


ஸ்ரீபாதரின் சரிதாம்ருதத்தை மொழி பெயர்க்கும் போதே ' யாரிந்த காட்கே மஹராஜ்' என்ற எண்ணம் எழுந்தது.  அந்த சரிதாம்ருதத்தில் வந்த  பல கூற்றுகள்  வித்யாரண்யர், ராமலிங்க சுவாமிகள்,  சிவாஜி, சமர்த்த ராமதாஸர் ராகவேந்திரர், ஷிரடி சாயி போன்றவர்களின் வருகைகள் முன் கூட்டியே சொல்லப்பட்டு அவைகள் நிஜமானதைக் கண்டு  இந்த காட்கே மஹராஜ் பற்றியும் அறிய ஆவல் எழுந்தது.

இணையத்தேடலின் போது ஒரு பெரும் பொக்கிஷமே கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் மஹாராஷ்ட்டிரத்தில் நன்கு அறியப்பட்ட பெரும் சீர்திருத்தவாதி. 

  அமராவதி பகுதியில் ஷேண்காவ் என்ற கிராமத்தில் வண்ணாரக் குலத்தில் பிறந்தவர். இயற் பெயர் தேபூஜி  ஜிங்ராஜி  ஜானோர்கர்.  தீண்டாமை, வறுமை போன்ற காரணங்களால்  முறையான எழுத்தறிவு பெற முடியாவிட்டாலும் கிராமத்து சிறுவர்களை சேர்த்துக் கொண்டு பஜன் மண்டலி அமைத்து விழாக் காலங்களில் கீர்த்தனங்கள் செய்வதில் சுற்றுப்புற வட்டாரங்களில் மிகவும்  பிரபலமானார்.

அவர் பிறந்தது  பிப்ரவரி 23, 1876

குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட அவருடைய தந்தையை இளவயதிலேயே இழந்த அவருள்  சமுதாய மாற்றத்திற்கான அவசியம் ஆழப்பதிந்தது.

பதினெட்டு வயதில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமானார். 
தாய்மாமனுடன் விவசாயத்தில் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றிய போதும் தன் கீர்த்தனங்களை நிறுத்தவில்லை.  அவரது 29 வது வயதில் ஒரு  கடன் பத்திர மோசடி மூலம் தன் நிலத்தையும் இழக்க நேர்ந்த போது எழுத்தறிவுக் கல்வியின் அவசியம் புரிந்தது. அதற்கெனவே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு குடும்ப வாழ்வை துறந்தார்.

ஊர் ஊராக சென்று தனி மனித விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். கையில் எப்பொழுதும் ஒரு விளக்குமாறு,  தலைமேல் கவிழ்க்கப்பட்ட -உடைந்த -மண் ஓடு (காட்கே- Gadge).  இதுதான் அவருடைய அடையாளங்கள். (தற்கால மொழியில் சொல்வதானால் 'பிராண்ட் இமேஜ்' ).

ஒரு கிராமத்தை அடைந்ததும் தெருவுகளையும்,  சாக்கடைகளையும் சுத்தம் செய்ய ஆரம்பிப்பார். உடன் சேர்ந்து கொள்பவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப் படுவதில்லை. யாரேனும் உணவளித்தால் மண் ஓடு பிட்சை பாத்திரமாகும்.  மாலையில் கீர்த்தனங்கள். இடையிடையே கேள்வி பதில் பாணியில் சீர்திருத்தக் கருத்துகள். இவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அடுத்த நாள் மற்றொரு கிராமம்.

அவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஈடுபாடு கொள்ளவில்லை. ஆனால் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நலிந்தவருக்கும் வறியவர்களுக்கும் சேவை செய்வதில் அக்கறை காட்டினார். 

அவர் கபீரைப் போலவும் வள்ளலாரைப் போலவும் தெய்வத்தை உயிருள்ள ஜீவனில் கண்டார். கல்லில் காணவில்லை.  அவருடைய கீர்த்தனங்களில்  நாமதேவரின் அபங்கங்களும்  கபீரின் தோஹாக்களும்  மிக அதிகமாக இடம் பெற்றன.  


கபீர் சொல்வது போல பேசாத சிலைகளை விட நடமாடும் ஆத்மாக்களிடையே இறைவனைக் காண்பாய் என்பதை அவர் நடைமுறையில் செய்து காட்டினார்.

कबीर जेता आतमा , तेता सालिगराम  | 
बोलनहारा पूजिये,  नहीं पाहन सो काम ||

நேரடி மொழி பெயர்ப்பு
கபீர், ஜீவித ஆத்மா அதுவே சாளக்கிராமம் |
உயிரோட்டத்தைத் தொழு, கற்பூசனைகள் ஆகாது||

மிகச் சுருக்கமாக கூறப்பட்டுள்ள கபீரின் ஈரடிக்கு சற்றே விளங்கும் வகையில் நீளமான தமிழ் மொழி பெயர்ப்பு :

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே, இத்தேகமே சாளக்கிராமம்,  கபீரா |
மன்னுயிரில் அவனை வணங்கு,  மூர்த்தி பூசனை எதுவும் பயன் தரா  ||

[ அகம் = குடியுள்ள வீடு ;  சாளக்கிராமம் = கண்டகி நதியில் கிடைக்கும் திருமாலின் அம்சம் உள்ள விசேஷமானக் கல் '; மன்னுயிர் =உலகில் உள்ள உயிர்கள் ; மூர்த்தி பூசனை = விக்கிரக ஆராதனை.]

தொன்று தொட்டு சாளக்கிராம கற்களை பூஜை அறையில் வைத்து பூஜிப்பது  நம் நாடெங்கும் உள்ள வழக்கம். பெருமாள் உள்ள கல் புனிதமானால், அவனே குடியிருக்கும் ஜீவன்கள் இன்னும் எத்தனை புனிதமானவை !! அவற்றிற்கு செய்யப்படும் சேவை நிஜத்தில் பெருமாளுக்கே செய்த பூஜையாகும் என்பதை இந்த தோஹாவில் கபீர் வலியுறுத்துகிறார்.

காட்கே மஹராஜ் மூட நம்பிக்கைகளை வெறுத்தார். ஆனால் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. அவருடைய கீர்த்தனங்களில் மிகவும் பிரபலமானது " கோபாலா கோபாலா தேவகி நந்தன கோபாலா "  என்பதாகும்.

விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காட்கே மஹராஜரினுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மானவ சேவையே  மாதவன் சேவை  என்பதில் அவர் குறியாக இருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தையும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதிலும்,  யாத்திரிகர்களுக்கு அன்ன சத்திரங்கள், மருத்துவ மனைகள், கோசாலைகள், தொழுநோயாளிகளின் சிகிச்சை கூடம், அபலையர் நலிவுற்றோர் இல்லம் கட்டுவதில் செலவிட்டார்.
ஏழைகளோடு ஏழையாகவே வாழ்ந்தார்.

அவருடைய வாழ்க்கையை இன்னொரு கபீரின் ஈரடி அழகாக படம் பிடிக்கிறது.

दीन  गरीबी  बंदगी  साधून  सौं   आधीन  | 
ताके  संग  मैं यौं  रहूं , ज्यौं पानी संग  मीन  || 

விழைவேன் ஏழையின் எளிமை, செய்வேன் சாதுவிற்கு பணிவிடை |
மகிழ்வேன் அவர்தம்  உறவில்,  திளத்திருக்கும் மீன்போல் நீரிடை  ||

மீனுக்கு நீரில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அப்படி  சத்சங்கத்தில், சாதுக்களுக்கு பணிவிடை செய்யவும் எளிய மக்களுடன் கூடியிருப்பதுமே தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்ற கபீர் வரிகளுக்கு மஹராஜ் இலக்கணமாகத் திகழ்ந்தார். 

பண்டரிபுரத்தில்  அவர் கட்டிய சத்திரத்தை  டாக்டர் அம்பேத்கரின்  People's Education Society க்கென நன்கொடையாக கொடுத்து விட்டார். அம்பேத்கரும் அவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒருவர் செயலை மற்றொருவர் போற்றினர். தனது கீர்த்தன சொற்பொழிவுகளில் அடிக்கடி அம்பேத்கர் அவர்களின் கல்வியையும், உழைப்பையும் மேற்கோள் காட்டி ஒவ்வொரு சிறுவனும் அவர் போல் முன்னுக்கு வர வேண்டும்  என்பதை வலியுறுத்துவார். 

பாடத்திட்டத்தில் தொழிற் கல்விக்கு  அதிமுக்கியத்துவம் கொடுத்தார். இதனால் தன்னம்பிக்கை உள்ள  இளைய தலைமுறை பெருகியது.  அவர் மஹாராஷ்ட்ராவில்  நிறுவிய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களில் 36 கல்விக் கூடங்கள்  அடங்கும்.

டாக்டர் அம்பேத்கர் 06/12/1956 -ல் இயற்கை எய்திய போது  பெரிதும் துக்கமடைந்தார் மஹராஜ்.  சரியாக இரண்டு வாரங்களில் ( 20/12/1956) மஹராஜும் இறைவனடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது எண்பது. அவர் டாக்டர் அம்பேத்காரை விட பதினைந்து வருடங்கள் மூத்தவர். இருப்பினும் அவர் கீர்த்தனங்களின் போது  அம்பேத்கரை கடவுளுக்கு சமமாக மதித்தார். தன்னை ஒரு போதும் முன்னிறுத்திக்  கொள்ளவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதியான காட்கே மஹராஜுக்கு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது  கொடுத்து அந்த விருதிற்கு பெருமை சேர்த்தது இந்திய அரசு.   

1983-ல் நாக்பூர் பல்கலைகழகத்திலிருந்து பிரித்து  "சந்த் பாபா காட்கே அமராவதி பல்கலைகழகம்" என்ற பெயரில் புதிய பல்கலைகழகத்தை துவக்கினர்.  ஆனால் காட்கே மஹராஜோ தன் மரணத்திற்குப் பின் தனக்கு சமாதி, சிலை வைப்பது எதுவும் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். 

எந்த ஒரு தன்னலமற்ற சேவையும் காலத்தால் போற்றப்பட வேண்டும். அடுத்து வரும் தலமுறைகளை நல்வழியில் நடத்த அவை வழிகாட்டும் என்பதை வைத்து பார்க்கையில் மஹராஜின் வார்த்தைகள் மீறப்பட்டதாக நினைக்க வேண்டியதில்லை. திருவள்ளுவர் கூறுவது போல் 
  
நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது  புத்தேள் உலகு   

ஒருவன் நிலவுலகத்தில் நிலையான புகழ் தரும்  செயல்களை செய்வானாயின் தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டும் சிறந்தவரை விரும்பாது. 

இன்று ( 21-07-2024) குரு பூர்ணிமை. காட்கே மஹராஜ் போன்ற கர்மயோகிகளை போற்றி நினைப்பதும் குரு வந்தனையாகும்.  அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்.

ஜெய் குருதேவ்.

Saturday, December 30, 2023

நாகமொன்றை மண்ணால் செய்தே ...

இயற்கையில் நமக்கு புரியாத புதிர்கள் ஏராளம். அவற்றிற்கெல்லாம்  விடைகாண இயலாது. ஆனால் மனிதர்களின் செயல்களுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவைகளும் பல சமயங்களில் அர்த்தமின்றி செய்யப்படும் போது- குறிப்பாக சமய வழக்கங்களில் - மூட நம்பிக்கையாகிறது. 

நாக பஞ்சமியன்று  பாம்புப் புற்றினுக்கு பால் ஊற்றுவது நம் நாடெங்கும் பரவலாகக் காணப்படுவது. பால் குடிக்காத பாம்பிற்கு எதற்குப் பால்?  பல வருடங்களாக என்னைக் குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு விஞ்ஞான ரீதியான  விளக்கம் ஒன்று  கறையான் புற்றுகளை பற்றி எழுதும் போது  எனக்கு தோன்றியது.  அதை  கட்டுரையின் கடைசியில் காண்போம். 

இந்த நம்பிக்கை உள்ளவர்களின் நடத்தை அவர்களின் நிஜ வாழ்க்கைக்கு முரணாகப் போகும் போது சான்றோர்களின் நகைப்பிற்கு ஆளாகிறார்கள்.

கபீர்தாஸ்  இதை இப்படி கேலி செய்கிறார்'

माटी का एक नाग बनाके, पूजे लोग लुगाया ।

जिन्दा नाग जब घर में निकले, ले लाठी धमकाया ।।

நாகமொன்றை மண்ணால் செய்தே உலகோர் செய்வார் பூசை |

நாகமோ உயிருடன் அகம் புகுந்தால் தடியால் விழுமே பூசை ||

( அகம் = இல்லம் ; பூசை என்பதற்கு பலத்த அடி என்ற பொருளும் உண்டு) 

இங்கே நம்பிக்கை வேறு நடப்பு வேறு என்பது வெளிப்படை.  இந்த இடைவெளி பெரிதாகும் போது நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை ஆகிறது.

இதே கருத்தை கர்நாடகத்தில் பக்தி புரட்சி  செய்த பஸவேசுவரர்  "கல்ல நாகர கண்டரே"  என்னும் பாடலில் சொல்லியிருக்கிறார்.  இவர் 400 வருடங்கள் கபீர்தாஸருக்கும்  முந்தயவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (1134- 1196 )

ಕಲ್ಲ ನಾಗರ ಕಂಡರೆ ಹಾಲನೆರೆಯೆಂಬರು,
ದಿಟದ  ನಾಗರ ಕಂಡರೆ ಕೊಲ್ಲೆಂಬರಯ್ಯಾ 
ಉಂಬ ಜಂಗಮ ಬಂದಡೆ ನಡೆಯೆಂಬರು 
ಉಣ್ಣದ  ಲಿಂಗಕ್ಕೆ ಬೋನವ ಹಿಡಿಯೆoಬರಯ್ಯಾ
ನಮ್ಮ ಕೂಡಲಸಂಗನ ಶರಣರ ಕಂಡು 
            ಉದಾಸೀನವ ಮಾಡಿದಡೆ 
ಕಲ್ಲ  ತಾಗಿದ ಮಿಟ್ಟಿಯಂತಪ್ಪರಯ್ಯಾ     ।।

 நாகம் கல்லானால் பாலை அதன் மேல் சொரிவார் 

நாகம் உயிர்த்து வந்தால் உடனே அதைக் கொல்வார் 

உன்னத அடியார்களிடம்  பாராமுகம் கொள்வார்

உண்ணாத லிங்கத்திற்கு நிவேதனம் படைப்பார்.

கூடல சங்கம தேவா 

உன் பக்தரை உதாசீனம் செய்வோரெல்லாம் 

மண்கட்டி  பாறையில் மோதியது போலாவார் 

இந்த பாடல் சிவனடியார்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. 

அவர்கள்,மன உறுதியில்,  பாறையைப் போன்றவர்கள். வெளியுலக ஏற்றத் தாழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை.  அவர்களின் பெருமை அறியாதவர்கள் மண்கட்டி போன்றவர்கள். அந்த சிறுமதியாளர்கள் தாம் செய்யும் உதாஸீனத்தால் பாதிப்பு தங்களுக்கே என்பதை அறியாதவர்கள். எப்படி மணற்கட்டியை  பாறை மேல் வீசினால் தூள்தூளாகிப் போகுமோ அது போன்றே அஞ்ஞானிகள் சான்றோர்களுக்கு செய்யும் அவமதிப்பால் தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்கின்றனர் என்பதே இதன் மையக்கருத்து.

 ஆன்மீகத்தின் முதற்தேவை மன அடக்கம் அடுத்த கட்டம் சாது சத்சங்கம். தற்பெருமையால் மன அடக்கம் குன்றும் போது தவறுகள் பெரிதாகும் வாய்ப்பு அதிகம். அப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது. இதனால் நஷ்டம் நமக்கே ஒழிய சாதுக்களுக்கு ஒன்றுமில்லை. அதைத்தான் மண் உருண்டை உதாரணத்தின் மூலம் மிகவும் நாசூக்காக பஸவேசுவரர் சொல்லியிருக்கிறார்.

------------------------------------------------------------------------------

என் சிற்றறிவுக்கு எட்டியபடி :

பாம்பின் (கறையான்) புற்றிற்கு பாலூற்றுவது ஏன்? 

மக்குத்திம்மன் பதிவு ஒன்றில் 'கறையான் புற்றில் பாம்பு' பற்றி டிவிஜி யின் பாடலை (#371) மொழி பெயர்த்திருந்தேன். அப்போது அந்த புற்றுகளை அவைகள் எப்படி அமைக்கின்றன என்பதைப் பற்றி பல கட்டுரைகளை படிக்க நேர்ந்தது.  முக்கியமாக மண்துகளை பிணைக்கும் அவற்றின் உமிழ்நீர் ஒரு சிறப்பான ரசாயனத்தன்மை கொண்டது. எப்படி சிலந்தியின் வலை அதன் உமிழ்நீரால் பின்னப்படுகிறதோ அதேபோல் கறையான் எறும்புகள் தம்முடைய உமிழ்நீரால் கூட்டை கட்டுகின்றன. அந்த ரசாயனத்தின் தன்மை என்னவெனில் மழைக் காற்று இவற்றை தாக்கு பிடிக்கும் அளவு உறுதியானது மட்டுமின்றி அந்த கூட்டைச் சுற்றி பிற வகை தாவிரங்கள்  பெரிய அளவில் எதுவும் தலையெடுக்காமல் தடுக்கும். ஏனெனில் அவற்றின் வேர் கூட்டை அடைந்தால் அவைகளின் பாடு பெரும்பாடு ஆகிவிடும். அதனால் புற்றுகள் மிகுந்த பகுதி வறண்டு கள்ளிச் செடிகளும் முட்புதர்களுமாக காணப்படுகின்றன.  நாளடைவில் இப்புற்றுகளில் அடியில் உள்ள குளிர்ச்சி காரணமாக பாம்புகள் குடி புகுகின்றன. அதனால் அவை பாம்பு புற்று ஆகிவிடுகின்றன.

இயற்கை விவசாயத்தை பரிந்துரைப்போரின் முக்கிய கவனமெல்லாம் மண்ணை வளப்படுத்தும் பாக்டீரியாக்களை மண்ணில் அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு பசுந்தாள் உரம் அதிகம் மண்ணில் சேர்த்து  யூரியா போன்ற ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரசாயன உரங்கள் நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கு விஷம் போன்றவை.

இப்போது வீட்டுத் தோட்டத்திலோ விவசாய நிலத்திலோ ஒரு கறையான் புற்று காணப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அவைகளின் பெருக்கத்தை தடைசெய்ய அல்லது நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க பால் தயிர் போன்ற புரதம் கூடிய திரவங்களை மண்ணில் சேர்த்தால்  அவைகள் விரைவாக செயல்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாட்டை துரிதப்படுத்தும்.  இதனால் தாவரங்களுக்கு வேண்டிய ஊட்டச் சத்து கிடைக்க வழி பிறக்கும். புற்றுக்கு பால்  ஊற்றுவதன் காரணம் இதுவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

இதை ஒருவகை soil reclamation என்று கூட சொல்லலாமோ !

இது என்னுடைய மேலோட்டமான புரிதல். இதில் எவ்விதமான ஆன்மீக உள்ளுணர்வும் கிடையாது. 

ஆனால் சர்ப்ப வழிபாட்டில் கண்டிப்பாக ஆழமான பொருள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ சத்குருவின்  வார்த்தைகளில் கேளுங்கள்.

Wednesday, December 27, 2023

நாமம் தோய்ந்த மூச்சு

 இன்று திருவாதிரை( 27-12-2023)

விறகு வெட்டியான சேந்தனாரின் பக்திப் பெருமையை தில்லை பெருமான் உலகறியச் செய்த நாள்.  அவருடைய எளிய வீட்டிற்கே சிவனடியாராகச் சென்று அவர் படைத்த களியை விரும்பி ஏற்று களிக்கு  திருவாதிரைக் களி என்று ஏற்றம் கொடுத்த நாள். களிநடனம் புரிபவன் களியில் களி கண்டான்.

பின்னர் அவரை பல்லாண்டு பாடும்படி பணித்து அதன் பின் தேரோட்டம் தடையின்றி சென்றதாக அவருடைய வரலாறு சொல்கிறது.

அப்போது அவர் பாடிய "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்" என்று தொடங்கி " பல்லாண்டு கூறுதுமே" என்று முடியும் பதிமூன்று பாடல்களும் ஒன்பதாம் திருமுறையாக சைவத் திருமுறை பகுப்பில் போற்றப் படுகிறது.

என்னிடத்தில் இருக்கும் தமிழ் வேதத் திரட்டிலிருந்து ஒருமுறை அதைப் படித்து விட்டு என்னுடைய திருவாதிரை வழிபாட்டை  நிறைவு செய்த திருப்தியில் வேறு சில பக்கங்களைப் புரட்டினேன். 

அப்போது  மணிவாசகப் பெருமானின் "யாத்திரைப் பத்து" கவனத்தைக் கவர்ந்தது.  அதில் நான்காவது பாடலில் 'அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடுமின் விளையாட்டை....' என்ற வரிகள் ஏனோ என்னை தடுத்து நிறுத்தியது.

இப்போது நான் செய்து கொண்டிருக்கும் தோத்திரம் எல்லாமே வெறும் விளையாட்டு தானோ?  எனக்கு சேந்தனாரைப்போலவும் பிற அடியார்களைப் போலவும் பக்தி எப்போது வரும்?  

'செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான் பொடி சேர்  மேனி புயங்கன் தன் பூவார் கழற்கே'  என்று அவர் நமக்கு உறுதி மொழி அளித்தாலும் நமக்கு அதற்கான தகுதி வேண்டாமோ! 

அத்தகுதியை அடைந்த மாணிக்கவாசகர் அத்தகைய பக்தர்களின் நிலையை வருணிப்பதை பார்ப்போம். 

நல்காது ஒழியான் நமக்கு என்று உன்
நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா
வணங்கா மனத்தால் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி
அருளாய் என்னை உடையானே.  ( கோயில் மூத்தத் திருப்பதிகம் )

( மல்கா என்பதை மல்கி என்றும்  வாழ்த்தா என்பதை வாழ்த்தி என்றும் குழறா என்பதை குழறி என்றும் வணங்கா என்பதை வணங்கி என்றும் பொருள் கொள்ள வேண்டும் )

இறைவனிடம் ' உன் நாமம் பிதற்றி' என்று சொல்லும் போது அடியார்கள் அதைத் தவிர வேறொன்றையும் நினைக்கவோ பேசவோ மாட்டார்கள் என்பது புரிகிறது.  அடுத்து வரும் வரிகள் அத்தகைய பக்தர்களின் உடல் மற்றும் மனநிலையை விவரிக்கின்றன.

அவர் சொல்லும் எந்தத் தகுதியும் என்னிடம் இல்லை என்பதை உணரும் போது ஏனிந்த நிலைமை என்று ஆராயத் தோன்றுகிறது.  "அகலவிடுமின் விளையாட்டை" என்று  அவர் போதிப்பதை கடைபிடிக்காததால் வரும் விளவுதான் என்கிற காரணமும் புரிகிறது.

கபீர்தாஸரின் ஈரடி ஒன்று இதை உரைகல் போல மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

सांस  सुफल सो  जानिये ,जो सुमिरन में जाय | 

और सांस यौं ही गये , करि करि बहुत उपाय  || 

இதன் பொருள் "நீ விடுகின்ற மூச்சு பயனுள்ளதாயிற்று இறைநாமத்துடன் கூடிவந்தால்.  இல்லாவிடில்  ஏதேதோ வெளிவிவகாரங்களினால் வீணாய் போய்விட்டது. "

யத் யத் கர்ம கரோமி  தத் தத் அகிலம் சம்போ தவ ஆராதனம் என்று சிவ மானஸ ஸ்துதியில் சொல்வது போல்  அவனுடைய நினைவாகவே என் கடமைகளை செய்கின்றேனா என்றால் இல்லையென்பதே உண்மை.

ஒருநாளைக்கு மனிதர்களின் சுவாசம் 21000 முறை நடைபெறுகிறதாம். கபீர் சொல்வது போல் 21000 முறையும்  கடவுள் சிந்தனையோடிருந்தால் கண்டிப்பாக சேந்தனாரைப் போலவோ மாணிக்கவாசகர் போலவோ அந்த உயர் நிலையை அடையலாம்.  ஆனால் உலக நடப்பில் மனம் உழன்று அது சாத்தியமின்றி நம்மை அலைகழிக்கிறது

தமிழில் மொழி பெயர்ப்பு

நாமம் தோய்ந்த மூச்சோ ? நாளெல்லாம் நல்லதாச்சு |

நாமம் சேராத மூச்சோ ?  பொழுதெல்லாம் வீணாய் போச்சு ||

2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து கொண்டிருக்கிறது.

புதிய வருடத்திலாவது சற்று முன்னேறுவதற்கான சத்சங்கங்களைத் தேடிப் பிடிப்போம்.

அனைவருக்கும் குரு அருளும் இறையருளும் பெருகட்டும்.

Thursday, July 16, 2020

மனம் வெளுக்க வழியுண்டு

  எல்லோரையும் எல்லாக் காலத்தும் திருப்தி செய்ய இயலாது. அது வீடாகட்டும் வியாபாரமாகட்டும் அல்லது முக்கிய பொறுப்புள்ள அதிகாரம் ஆகட்டும் நம்மைச் சுற்றி அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்போது பலரிடமும் ஏச்சுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை எதிர் கொள்வது எப்படி.? 
வீட்டளவில் குடும்பத்தலைவன் கண்டிப்புக் காட்டி பிறர் வாயை அடக்கி விடலாம். அவனே அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்பவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு எதிர்பார்ப்பைவிட குறையும் போது நிர்வாகத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது அவர் விளக்கப் பேச்சைக் கேட்பவரும் உண்டு ஏற்காமல் ஏசுபவரும் உண்டு. வாங்கிய பொருளில் குற்றம் காணும் போது தயாரித்த கொழிலகம் எங்கோ இருக்க வேறொரு மூலையில் சர்வீஸ் அதிகாரி நுகர்வோரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார். இது யாவருக்கும் உள்ள அன்றாடப் பிரச்சனை.
 
சென்ற வருடம் மாணவர்களுடனான கலந்துரையாடலில் நமது பிரதமரிடம் கடினமாக உழைக்கும் அவர் புத்துணர்ச்சியோடு காணப்படுவதின் ரகசியம் என்ன என்ற கேள்வியை ஒரு மாணவன் எழுப்பினான். ‘நான் தினமும் மருந்து சாப்பிடுவதில்லை நிறைய வசவுகளை சாப்பிடுகிறேன் ( “கோலி நஹி, பஹுத் காலி காத்தா ஹூ” ; கோலி என்றால் மாத்திரை காலி என்றால் வசவு ) என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே வேடிக்கையாக பதில் சொன்னார். 

இந்த எதிர்ப்புகள் தான் ஒருவரின் சுய சோதனைக்கு வாய்ப்பாகும்.

.நிர்வாக மேலாண்மைப் பற்றி பேசும் போது திரு நாராயணமூர்த்தி, ஒரு தலைவர் எப்படி தம்மை மேன்மை படுத்திக் கொள்ளமுடியும் என்றால் அவர் தன் எதிர் தரப்பு வாதங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்.
இந்த சுய சோதனைக்காவே கபீரும் எதிராளிக்கிடையே உன் கூடாரத்தை அமைத்துக் கொள் என பரிந்துரைக்கிறார்.

निंदक नियरे राखिये, आँगन कुटी छवाय |
बिन पानी बिन साबुन, निर्मल करे सुभाव ||

நிந்தனை செய்வார் தம்மை அண்டை வீடாய் கொள்வீர்  
நீரில்லை சவுக்கா ரமில்லை உம்மனம் வெளுக்கக் காணீர்

 தேச நிர்வாகம் தொழில் நிர்வாகம் மட்டுமல்லாது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அது மிக மிக அவசியமானது.  ஆனால் முதற்படியாக அதை செவிமடுத்துக் கேட்க வேண்டும். சொல்லப்படும் குற்றங்களில் உள்ள நிறைகுறைகளை ஆராய வேண்டும். சொல்பவரின் தரம் மேலும் உள்நோக்கம் போன்றவற்றை கவனித்து தத்தமது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். 

பொறாமையாலும் சுயநலத்தாலும் எழும் எதிர்ப்புக்களை பொதுநலம் கருதி  விலக்கிவிட்டு காரியமே கண்ணாக வேண்டும். சொல்வது எளிது செய்வது சுலபமல்ல என்று தோன்றலாம். அதற்கு மனோபலம் வேண்டும். 

இந்த மனோபலத்தை இறைவனைப் பிடித்துக் கொண்டால் பெறலாம் என்பதை பல அடியவர் வாழ்க்கையில் இந்த தேசம் கண்டிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் மகாராஷ்ட்ராவின் சக்குபாய். அவள் கதையையும் பார்ப்போம்.
 
சக்குபாயின் ஊருக்கு பண்டரிபுரத்திற்கு செல்லும் யாத்திரிகர்கள் வந்து இருக்கிறார்கள். ஊரே திரண்டு அவர்களின் தேவையை கவனித்துக் கொள்கிறது. அந்த சேவையில் சக்குபாய்க்கும் சிறிது பங்கு கிடைத்தது. சிறுவயது முதலே விட்டலினடத்து ஈர்ப்பு இருந்ததால் அவளுக்கும் அவர்களோடு சேர்ந்து பண்டரிபுர தரிசனம் செய்ய மிக்க ஆசை.ஆனால் வீட்டின் நிலைமை அதற்கு இடம் கொடுக்காது எனத் தெரியும். கணவன் அனுமதித்தாலும் மாமியார் அனுமதிக்க மாட்டாள். 

அவள் மாமியாரை ஊரே ராட்சசி என்றது. சற்றும் ஈவு இரக்கமற்றவள். வாயில் வரக் கூடாத வார்த்தைகள் சரளமாக மழைப் போல் பொழியும். வாயுடன்  கைகளும் இணைந்து வேலை செய்யும். 

அவளுடைய கணவனே அவள் முன்பு பெட்டிப் பாம்பு. மகனோ தாய் சொல்லை தட்டாதபிள்ளை. போறாத குறைக்கு இருவரும் கஞ்ச மகா பிரபுக்கள். 
மொத்தத்தில் சக்குபாய் அந்த வீட்டில் எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு அடிமை. மாமியாரின் பல கொடுமைகளுக்கும் இடையே அவளைத் தாங்கி நின்றதே அவள் செய்து வந்த  விட்டலுனுடைய செபம் தான். 

சிறுமியாக தோழிகளுடன் தெருவில் மணல் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ‘விட்டல பக்தர்’ அதைத் தெரியாதவர் போல் மிதித்து இடித்து விட்டார். அவளுடைய துக்கத்தையும் கோபத்தையும் போக்க அவளுக்கு பாண்டுரங்கனின் சிறு விக்கிரகம் கொடுத்து அவன் நாமாவை விடாமல் செபித்தால் அவனையே பிடித்து விடலாம் என்று சமாதானப்படுத்தி சென்றார். (சிலர் தம்பூரா என்று சொல்கின்றனர்)

வளமான மண்,  பக்தி விதையை விட்டலன் ஊன்றிவிட்டான். சக்குபாயின்  உயிர் தெய்வமானான் பாண்டுரங்கன். பன்னிரண்டு வயதில் மணமாகி புக்கத்திற்கு வந்த போதும் அவள் பாண்டுரங்கனை விடவில்லை. அதுவே பல சமயங்களில் அவளை குற்றம் சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளவும் காரணமாயிற்று.

அந்த யாத்திரிகர் குழுவில் கபீரும் நாமதேவரும் இருந்ததாகக் கேள்வி. எப்படியாயினும் அடியார்கள் கூட்டத்தில் இணைவதே இன்பம் தானே. சக்குபாய்க்கு  வீட்டிற்கு செல்ல மனமே இல்லை.
நாம சங்கீர்த்தனத்தில் தன்னை மறந்தாள். பண்டரிபுரத்திற்கான யாத்திரை விவரங்களை விசாரித்தாள். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வீடு அல்லோலகல்லமாகியது.  கணவன் அவளை வந்து இழுத்துச் சென்றான். இவள் எங்கே அவர்களுடன் சென்று விடுவாளோ என்ற பயத்தில் மாமியாரும் கணவனும் அவளை ஒரு தூணில் கட்டிப்போட்டு படுக்கச் சென்றனர். 
 
உடலும் மனமும் துவண்டு போயிருந்த சக்குபாய் முன் கண்ணன் தோன்றினான். அவளைத் தேற்றி “கவலைப்படாமல் நீ போய்  யாத்திரை முடித்துக் கொண்டுவா. உன்னிடத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபயம் அளித்தான். அடுத்த வினாடி கட்டப்பட்டக் கயிறுள் கண்ணனும் வெளியே சக்குபாயுமென்று இடம் மாறினர். 

பண்டரிபுரத்தில் பக்தியில் சக்குபாய் தன்னை மறந்திருந்த நேரத்தில் தன் பக்தைக்காக அவள் மாமியாரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு அவள் வடிவில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தான் விட்டலன். இறைவன் இருக்கும் இடத்தில் வெறுப்பு வளருமோ? சிறிது சிறிதாக வீட்டாரின் போக்கில் மாற்றம் காணத் துவங்கியது. காரணம் அறியாமல் அவளை நேசிக்கத் தொடங்கினர்.    

அவ்வேளையில் யாத்திரைக்கு சென்றிருந்த அவ்வூர்காரர்கள் பாம்பு கடித்து சக்குபாய் பண்டரிபுரத்தில் உயிர் இழந்தாள் என்று துக்கமான செய்தியை கொண்டு வந்தபோது “இதென்ன அவள் எங்கே பண்டரிபுரம் போனாள் ?” என்ற வியப்போடு அவளைத் தேடினால் அதுவரை அவள் வடிவில் செயலாற்றிக் கொண்டிருந்த விட்டலன் மாயமாகிவிட்டான்.

ருக்மிணி தேவியின் அருளால் சக்குப்பாய் உயிர் பெற்று  திரும்பி வந்ததும் வீட்டார் மனம் திருந்தியதும் மீதம் உள்ள கதை. [விருப்பமுள்ளவர்கள் காணொளியில் காணலாம். ]

சக்குபாய் கதை அக்காலத்தில் மிகப்பிரபலமான நாடகக் கதையாகத் திகழ்ந்தது. பொறுமையும் பக்தியும் ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை அவள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம். 

அவள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்ட போதும் தனக்கு கேடு செய்பவர்க்கும் அவள் நல்லதையே வேண்டினாள். அதற்கான மனோபலம்    அவள் பற்றியிருந்த நாமஸ்மரணையால் கிடைத்தது. அதன் மூலம் அவளுடைய மனம் மிகவும் பரிசுத்தமாய் இருந்தது. அப்படிப்பட்ட தூய உள்ளத்தை கடவுள் தன் இல்லமாக குடி கொள்வதை யாவருக்கும் அறிவிக்கவே அவன் இவ்வகை பக்தர்களைக் கொண்டு  நாடகம் ஆடுகிறான். 

இராமலிங்க வள்ளலார் இந்த நிலைமையை இறைவனுடனான நட்பு என்னவகை  மாற்றங்களை விளைவித்தது என்பதை அருட்பெருஞ்சோதி அகவலில் எழுதுகிறார்.

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்டு 
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே

செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த 
குற்றமும் குணமாகக் கொண்ட என நட்பே
 
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நன் நட்பே  (1180)

(செற்றம்=பகைமை ;எள்ளுறு நெய் = எள்ளில் உள்ள எண்ணெய்; பேய் உலகோர் =மனம் பக்குவப்படாத உலகத்தவர்)

இதையே வேறொரு கண்ணோட்டத்தில் சொல்வதானால் மிகக் கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையில் நம்மை  இறைவன் வைத்திருப்பதே நம் அந்தரங்க சுத்திக்கென்று கொள்வதானால் அதை ஆன்மீக சாதனையின் ஒரு அங்கமாகக் கருதலாம். அப்படி ஒரு சாதனைக்காகவே கபீர்,  எதிர்பாளரைக் கண்டு விலகாது அவர்கள் நடுவே வசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்கிறார்.

Thursday, January 03, 2019

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்


என்னுடைய பள்ளி ஆசிரியர்  அடிக்கடி சொன்ன ஒரு கதை.

நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழுதோ இருட்டிக் கொண்டிருந்தது.  இருப்பினும் வண்டி மாடுகளைப் பூட்டச் சொல்லி அவர் சாப்பிட்டு கிளம்பினார்.  அசைந்தாடிக் கொண்டு பாதையில் வண்டி கிளம்பியதுமே அவருக்கு தூக்கம் கண்ணை சுழற்றி உறங்கிப் போனார்.  மாடுகள் பழக்கப்பட்ட பாதையில் போகும் குணம் உடையவையாதலால்  இது வழக்கமான பழக்கம் தான்.
வெகு நேரம் கழித்து-விடியும் நேரத்தில்-கண் திறந்து பார்த்த போது வண்டி அவருடைய  வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த அவருடைய  செக்கை சுற்றிக் கொண்டிருந்தது.   அதிர்ந்து போன அவருக்கு அப்போது தான் புரிந்தது வேலைக்காரன் தவறுதலாக செக்கு மாடுகளை வண்டி மாடுகளுக்கு பதிலாக பூட்டி விட்டான் என்று.  அவை தம் வழக்கப்படி செக்கை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. இனி அவர் ஊர் போய் சேருவது எப்போது ?
இதையே பழக்க தோஷம் என்போம்.  ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியவில்லையே என்று கவலைப்படும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த பழக்க தோஷம் அல்லது  விஷய வாசனைகளே காரணம்.

தியானத்தில் அமர்கின்ற போது மனம் உள்முகமாகாமல் இங்குமங்குமாகத் திரிவது இந்த பழக்க தோஷத்தால் தான். இதனால் தான் அஷ்டாவக்ர கீதையில் ஜனகருடைய முதல் கேள்விக்கே அஷ்டாவக்கிரர்  “புலன்களை உள்முகமாக்காத வரையில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது” என்பதை அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார். 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் எழுமையும் ஏமாபுடைத்து என்று  வள்ளுவரும் புலன்கள் வெளிமுகமாகத் திரிவதை விட்டு தற்காப்பிற்காக ஆமை தன் தலை கால்கள் யாவற்றையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல் நாம் புலன்களை வெளிக்கவர்ச்சிகளிலிருந்து காத்துக் கொள்ள உள்முகமாக்க வேண்டும் என்கிறார்.

மனதை வெற்றிடமாக்க முடியாது. காற்றில்லாத வெற்றிடத்தை உருவாக்குவது எப்படி சிரமமோ அதை விடவும் பல மடங்கு கடினமானது எண்ணங்களற்ற  மனதை உருவாக்குவது. ஆனால் நிர்விகல்ப சமாதி என்பதே எண்ணங்களற்ற மனது. அதாவது மனம் இறந்த நிலை.  தூக்கத்தின் போது ஒவ்வொரு நாளும் மனம் ஆன்மாவில் ஒடுங்குகிறது. அதையே விழிப்புணர்வில் அடைய முடியுமானால் அதுவே இறை நிலை. இதை தாயுமானவர் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?  என போற்றுகிறார். இது ஆன்மாவில் மனம் கரைந்து போன நிலை அல்லது ஜீவாத்மா பரமாத்வாவுடன் ஐக்கியமாதல் என்கின்றனர்.

இதற்குப் பரிந்துரைக்கப்படும் வழிகள் பெருவாரியாகப் பார்த்தால் முதலாவது சத்சங்கம்,  இரண்டாவது நாம செபம். 

சத்சங்கம்  என்பது வெளிமுகமானாலும் ஒரு வரையறையுடைய எண்ணப் போக்கினை உருவாக்குகிறது. இது அணையில் நீர் தேக்கப்பட்டு ஒரு கட்டுப்பாட்டுடன்  வெளிப்படும் போது எழும் மின் ஆற்றல் போல சாதகனுக்குள் ஒரு ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதனால் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் பல நல்ல காரியங்களில் மனம் ஈடுபடுகிறது.  ஒவ்வொரு முறையும் கேளிக்கை உல்லாச எண்ணங்களில் மனம் ஈடுபடும் பொழுதும் அது தன் ஆற்றலை இழக்கிறது. இது விரையமாகும் நீரைப் போன்றது.
சத்சங்கத்திலேயே இருப்பினும்  ஒரு அபாயம் சாதகனை எதிர்நோக்கியிருக்கிறது.  அது மாயையின் விளையாட்டு.
 நல்ல காரியங்களில் ஈடுபடும்போது பலருடைய பாராட்டும் தேடி வரும். அப்போது அதை தன்னுடைய தனித் திறமையால் ஆனது என்று மனது சாதகனை நினைக்க வைத்து ஏமாற்றுகிறது. அதன் விளைவாக ’கர்த்தா பாவம்’ அவனுள் குடியேறி அவனுடைய சாதனை இறைவனை தேடுவதை விட்டு புகழைத் தேடுகின்ற மாய வலையில் சிக்கிக் கொள்ளும்.            

இதைத் தவிர்க்கவே நாமசெபத்தை ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.  Habit is like a rope- a thread every day and finally we cannot break it.  இது நாமசெபத்திற்கும் பொருந்தும்.

நாமசெபம் என்பது மிக மிக எளிமையான பயிற்சி.  அது இறை சிந்தனையில் நம்மை கட்டிப்போடுவதால்  நம்முள் கர்த்தா பாவம்  தலையெடுக்காத வண்ணம் பாதுகாக்கிறது.  நடப்பதெல்லாம் அவனுடைய செயல், நான் வெறும் அவனுடைய கருவி மட்டுமே என்கிற உண்மை உறுதி படுகிறது.
ஆனந்தாஸ்ரமத்தின் பாப்பா ராமதாஸ் சொல்வாராம்                சிதையூட்டப்பட்டு சாம்பாலாகி நிற்கும் நம் ஆணவத்தின் மேல் நாம் நிற்கவேண்டும்.” அப்படி முற்றிலுமாக நம் ஆணவம் அழிய வேண்டும்.

 நாமசெபத்தை விடாமல் கை கொள்பவருக்கு காலப்போக்கில் ’நான்’ என்கிற எண்ணம் சிறிது சிறிதாகக் கரைந்து எல்லாம் அவனே என்ற உணர்வு தலையெடுக்கும்.   இந்த நிலையை கபீர்தாஸர் ஒரு அழகிய உதாரணத்தின் மூலம் படம் பிடிக்கிறார்.

चली जो पुतली लौन की, थाह सिंधु का लेन  ।
आपहू गली पानी भई, उलटी काहे को बैन  ॥

ஆழம் அறிய கடலில்  குதித்தது உப்பின் பதுமை  
ஆழம் உரைப்பவர் எவரே  கடலுள் கரைந்ததே பதுமை

அப்படி நாமசெபத்தில் கரைந்து போனவர்தான் யோகி ராம்சூரத்குமார்.
காஸர்கோடு ஆனந்தாஸ்ரமத்தில் பப்பா ராமதாஸ் சுவாமிகளிடம் உபதேசம் பெற்று திருவண்ணாமலையில் தன் வாழ்நாளையெல்லாம் இந்த உலகம் உய்வதற்காக வாழ்ந்த அந்த மகானின் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும்  டிசம்பர் முதல் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

குருஅருளால் அவருடைய தனித்துவம் ( ego) எப்படி மறைந்தது என்பதை அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.

” இந்தப் பிச்சைக்காரன், 1952ம் வருடம்... சுவாமி பப்பா ராம்தாஸைத் தரிசித்த தருணத்தில், செத்துப் போய்விட்டான். சுவாமி பப்பா ராம்தாஸ், இவனைக் கொன்றுபோட்டார். அதற்குப் பிறகு... இங்கே எதுவும் இல்லை. எவரும் இல்லை. அவருடைய தாமரை போன்ற பாதங்களைக் கெட்டியாக நான் பற்றிக் கொண்டேன். அப்படிப் பற்றிக் கொண்டதால், இத்தனை பெரிய செயல், அழகாக நிகழ்ந்தது’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமார் அருளியிருக்கிறார்.
  சுவாமி பப்பா ராம்தாஸை, தன் குருவாக வரித்துக் கொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அவரே எல்லாமும்... குருவே சகலமும் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதி, அவரை இன்னும் இன்னும் குருவிடம் நெருங்கச் செய்தது.  ”  


                                              
ராம் ஸுரத்குமார் பற்றி ஏற்கனவே  அன்பர் YRSK பாலுஎன்னும் பாலசந்தர் அவர்கள் இந்த வலைதளத்தில் நம் யாவரிடமும் பகிர்ந்து கொண்டுள்ளது அனுபவித்து படிக்க வேண்டிய ஒன்று. 

பப்பா ராமதாஸரின் அருளுரைகளும், சாதகர்களுக்கான கேள்வி பதில்களும் ஆனந்தாஸ்ரமத்தின் வலை தளத்தில் இலவச மென்புத்தகங்களாக  தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

நமக்குக் கிடைத்திருக்கும் மனிதப் பிறவி ஒன்றின் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும். இதை வீணாக்கக்கூடாது என்பதையும் கபீர் அறிவுறுத்துகிறார்.

आज कहे हरी कल भजुंगा, काल कहे फिर काल ।
आज कालके करत ही, अवसर जासी चाल ॥

நாளை தொழுவே னென்று உரைப்பா யின்று, நாளை மறுபடி நாளையாச்சு நாளை நாளை என்று தள்ளியே   நாட்க ளெல்லாம் வீணாய்ப் போச்சு

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் யாவரும் நாமஸ்மரணையில் ஈடுபட்டு யோகியார் ராம்சூரத் குமார் போன்ற யோகிகள் குருமார்களின் அருளுக்குப் பாத்திரமாவோம். 
--------------------------------------------------------------------------
தலைப்பில் உள்ள நாழிஅப்பும் நாழி உப்பும் என்பது சிவவாக்கியர் பாடல்.  ஹரியும் ஹரனும் ஒருவருள் ஒருவராய் (உப்பும் நீரும் போல) இருக்கின்றனர் இதை அறியாமல் வேற்றுமை பேச முற்படுவது பேதமை எனக் கூறும் பாடல். சிவவாக்கியர், கபீர் காட்டியுள்ள அதே உதாரணத்தை வேறொரு கருத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

Monday, July 02, 2018

கொடுப்பதே திரும்பி வரும்


  அமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம். 1892-ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற்றா குறைவால் படிப்பைத் தொடருவது சிரமமாக இருந்தது. ஒரு இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டினால் என்ன என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியது.   
   அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த  பியானோ கலைஞர் இக்னேஸி ஜே. படேரெஸ்கி என்பவரை அணுகினர். அவருடைய மேனஜர், ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 2000 டாலர்கள் கண்டிப்பாகக் கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு ஒப்புக் கொண்டு தேவையான விளம்பர வேலைகளில் இறங்கினர்.  அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி நன்றாக நிறைவேறினாலும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மொத்தம் வசூலானத் தொகை 1600 டாலர்களே.

Friday, May 05, 2017

மாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ

  கடந்த முப்பது வருடங்களில் குறைந்தது பத்து முறையாவது குடி பெயர்ந்தாயிற்று. வெவ்வேறு ஊர்கள், வீடுகள், பலவிதமான அனுபவங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. அது என்னோடு சேர்ந்து வரும் பழைய குப்பைகள். ஒவ்வொரு முறை வீட்டைக் காலி செய்யும் போதும் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் இவற்றைத் தூக்கிப் போட மட்டும் மனம் ஒப்புக் கொள்வதே இல்லை. கல்லூரி நாட்களில் எழுதிய ரெகார்டுகள், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ஆராய்ச்சி குறிப்புகள் இத்யாதி. கூகிள் இல்லாத காலமாதலால் நூலகங்களைச் சுற்றி அவைகளை சேகரிக்க பட்டபாடு மனதில் நிழலாடும். மூன்று அலமாரி புத்தகங்கள், பழைய கெசட்டுகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பலவீனத்தை அறிந்து தான் இப்பொழுதெல்லாம் கண்காட்சிகளுக்கு போவதேயில்லை. அதனால் இன்னமும் குப்பை தான் சேரும் என்பது என் கருத்து.

   நம்முடைய மனமும் இப்படித்தான் விஷய குப்பைகளை போட்டு நிறைத்து கொள்கிறது.

Wednesday, October 05, 2016

குழலுடைந்தால் எழுமோ நாதம்?

முதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை.  ஒன்றல்ல இரண்டு.

ராபர்ட் கிரேவ்  என்பவரின்  ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நல்ல தத்துவத்தை போதிப்பதாக  எனக்குப்பட்டது. அந்த பகுதியை மட்டும் சுமாராக மொழிபெயர்த்த வரிகள் :

பனித்துளி ஒன்று தன்னுள் அடக்கியது
மலையும் வனமும், விசும்பும் கடலும்
பருவம் ஒட்டி பல்விதமாய் காட்டியது
ஆனால்
விலையிலா வைரத்தில்  அவை யாவும்
சிதர்ந்ததே எத்திக்கும்  மின் மினி ஒளியாய்
ஒருங்கி ணைத்து காண்பவர் இலர்
இயற்கையின் அழகை எல்லாம்.

’வழியிருந்தால் கடுகுள்ளே மலையை காணலாம்’ என்பது நிஜமோ இல்லையோ பனித்துளியின் பிரதிபலிப்பில் மலையையும் வானத்தையும் காண்பது என்னவோ நிஜம். ஆனால் வைரமோ ஒளிக்கூறுகளை சிதைத்து ஜொலிக்குமே அன்றி ஒரு முழு மையான பிரதிபலிப்பைக் கொடுக்காது.
இப்போது அதே பனித்துளியையும் வைரத்தையும்  மையமாகக் கொண்ட ஒரு கதை

புல் தரையில் அதிகாலை வேளை மெல்ல ஊர்ந்து வந்தது ஒரு புள்ளி வண்டு.  யாரோ தவற விட்டிருந்த ஒரு கண்ணைப் பறிக்கும் வைரக்கல்லைப் பார்த்ததுமே அது பெரிய இடத்தை சேர்ந்த சம்பந்தம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வணக்கம் போட்டது.



( கபீர் வலைப்பூவுக்கென  பிரத்யேகமாக ஃபோட்டோஷாப்-பில்  தயாரிக்கப்பட்ட படம்)

அதுவும் அதை ஒரு நமட்டு சிரிப்புடன் அதை ஏற்று கொண்டது.  சற்று மேலே ஒரு செடியின் கிளை நுனியில் பனித்துளிகள்  சூரிய ஒளியை  அழகாக  வெளிக்காட்டின.  “ அவரும் தங்களுக்கு உறவோ? “ என்று வினவியது வண்டு.  “அது வெறும் நீர். இன்னும் சிறிது நேரத்தில் காற்றில் ஆவியாகி விடும்.”  என்று ஏளனமாக பதிலளித்தது வைரம். ஏனெனில் பெரிய மனிதர்கள் அதைப் போற்றி பொக்கிஷமாக காத்து நிற்பராதலால்  தவற விட்டிருப்பவர்கள் சற்று நேரத்தில் தன்னைத் தேடி வருவர் என்பது அதற்குத் தெரியும். அப்போது தனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையும் எண்ணி செருக்குக் கொண்டிருந்தது.

பனித்துளி அமைதியுடன் இருந்தது.  அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த வானம்பாடி பறவை  அந்த வைரத்தை ஒரு கொத்து கொத்தி துப்பியது. “ இது வெறும் கல் என் தாகம் தீர்க்கப் பயன்படாது” என்று சொல்லிக் கொண்டே தத்தித்  தத்தி, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தது.
“ நண்பனே என்னால் உன் தாகம் தீருமெனில் என்னை ஏற்றுக் கொள்” என்றது பனித்துளி.  வானம்பாடியும் தாகம் தீர்ந்து சந்தோஷமாய் பறந்தது. 

சிறிது நேரத்தில் அங்கு வந்த கால்நடைகளின் காலில் மிதிபட்டு மண்ணுக்குள் அழுந்தி  யார் கண்ணிலும் படாமலே ஒரு பயனுமில்லாமலே புதையுண்டு போனது அந்த வைரக்கல்.

இது இறுமாப்பின் இறுதி நிலை.  மனிதநிலைக்கும் இறை நிலைக்கும் இடையே உள்ள திரை இது தான். இது நம்முள் தோற்றமெடுப்பதற்கு காரணம் வேண்டியதில்லை.  நாரதர் போன்ற தேவர்களே கூட தன்னிலும் சிறந்த பக்தரில்லை’ என்ற மயக்கத்திற்கு ஆளாவதுண்டு என்று பரமஹம்சரின் கதைகள் கூறுகின்றன.

இராவணன் போன்ற சிறந்த சிவபக்தன் இல்லை. அவனுக்கும் அந்த இறுமாப்பு வந்தபோது   கயிலாய மலையையே பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை தன் சுண்டு விரலால் அடக்கினார் சிவனார் என்பது நாயன்மார்களால் பெரிதும் போற்றப் படுகிறது.  ஞானசம்பந்தர் பெருமான் திருவையாற்று தியாகராஜரைப் போற்றும் போது
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்….
என்று பாடுகிறார்.

மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த…

என்று நாவுக்கரசர் தில்லை சிவனை போற்றும் போது குறிப்பிடுகிறார்.
இப்படி  சைவ இலக்கியம் முழுவதும்  இந்நிகழ்ச்சி, பலவேறு  பாடல்களில், இறுமாப்பினால் வரும் இடரை உணர்த்த எடுத்துக்காட்ட வருகிறது.

இதனை கபீரும் எளிமையாகச் சொல்கிறார். எவ்வளவு எளிமையான வரிகள்.


तिमिर गया रवि देखते ,कुमति गई गुरु ज्ञान  ।
सुमति गई अति लोभ ते ,भक्ति गई अभिमान ।। 

கதிரவன் கண்டு காரிருள் விலகும் , கெடுமதி ஓடும் குரு ஞானம் கண்டு மதி,நெறி தவறும் பேராசை கொண்டு, பக்திநெறி போகும் பெருமிதம் கண்டு

மாற்று:-

1.       இருளும் போச்சு இரவியைக் கண்டே  மருளும் போச்சு குருஞானம் கண்டே
பெருநெறியும் போச்சு பேராசை கொண்டே, பக்தியும் போச்சு இறுமாப்பு  கொண்டே

 [ குமதி- சுமதி ( कुमति- सुमति) அஞ்ஞானி மற்றும் நல்வழி அறிந்தவர் என்று கொள்ள வேண்டும்]

சத்குரு என்பவர் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கியவர். பனித்துளிகள் சூரியனின் வரவைக் காத்திருப்பது போல அவரும் இறைக்காட்சிக்காக காத்து கிடப்பவர். இடையிலே அருள் தாகம் கொண்டு வரும் ஆன்மீக அடியார்களின்  தாகத்தையும் தீர்க்க வல்லவர்.  உலகிற்காக தன்னையும் தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்.  அடக்கம் உள்ள இடத்தில் தான் ஞானம் வரும்.

ஆனால்  மனிதரை ஏதேனும் ஆசை பீடிக்கும் பொழுது  சத்குரு சொல்லும் நன்னெறிகள் மறைந்து போய் இறுமாப்பு குடி கொள்ளும்.  அதனால் நமது ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் மிக்க கவனம் கொள்ள வேண்டும். 

அடக்கம் இருக்கும் போது மட்டுமே குருவை கண்டால்  இருக்கும் கொஞ்ச நஞ்சம் குறைகளும் விலகிடும்.  இல்லாவிட்டால் குரு அருகிலேயே இருந்தாலும்  ஞானம் வராது அதைப்பற்றியும் கபீர் சொல்வதை  கடைசியில் பார்ப்போம்.

கபீர் குறிப்பிடும் பேராசை  என்பது தன் தகுதிக்கு மீறிய  ஆசை. அப்படி ஆசையின் வலையில் வீழ்ந்தவன் பற்றிய ஒரு கதை

தேவதத்தன் பகவான் புத்தரின் நெருங்கிய உறவினன். அவரை அடைக்கலம் புகுந்து அவரது சீடன் ஆனவன். மன்னன் பிம்பசாரனின்  மகன் அஜாதசத்ருவின் அசையா நம்பிக்கை பெற்று அவனுக்கு குரு போல விளங்கியவன்.  புத்தரிடத்தில் பிம்பசாரனுக்கு  இருந்த அபார மதிப்பும் கௌரவமும்  கண்டு அவன் மனதில்  தானும் ராஜ குரு ஆகவேண்டும்  என்கிற பேராசையை உருவாக்கியது.

புத்தரை அணுகி தன்னை தலைவனாக்கும்படி கேட்டுக் கொண்டான். புத்தரோ ’அது ஒருவர்  இன்னொருவருக்கு கொடுத்து வருவதல்ல.  உழைப்பினாலும் முயற்சியினாலும் தகுதி வரும் பொழுது தானே வருவது’ என்றுரைத்த நல்லுபதேசம் அவன் புத்தியில் ஏறவில்லை

அஜாத சத்ருவை தன் கைப்பாவையாக்கிக் கொண்டு பிம்பசாரனை சிறையில் அடைக்கச் செய்கிறான்.   மூன்று முறை  கௌதமபுத்தரை, தன்னுடைய குருவையே, கொலை செய்ய முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கிறான். 

பிற பிக்ஷுக்கள் புத்தரிடம் தம் கவலையை தெரிவித்த போது “ ஒருவருடைய உயிரை இன்னொருவர் பறிக்க முடியாது. அவரவர் வாழ்நாள் முடியும் வரையில் பூமியில் இருக்கத்தான் வேண்டும். ஆகையால் இதைப் பற்றிய கவலையை விடுங்கள்”  என்று மரணத்தைப் பற்றிய கவலையின்றி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அன்பின் நெறியிலே  பிம்பசார மன்னனையும் அவன் ராஜ்ஜியத்தையும் திருப்பிய புத்தராலே கூட தன் நெருங்கிய சீடனை திருத்த முடியவில்லை.  இப்போது குற்றம் எங்கே? 

இதை கபீர் இன்னொரு ஈரடியிலே  திருத்த முடியாத, முயற்சி இல்லாத சீடனுக்கு ஒப்பிடுகிறார்.

गुरु बिचारा क्या करे,  सिक्खहि माहिं चूक।

भावे त्यों परबोधिये , बास बजाये फूँक ॥

சீடனில்  உள்ளது தோசம், குருவும் என்செய்வார் பரிதாபம் 
பாடம் எப்படி சொல்லியும், குழலில் எழவில்லை சுகநாதம் 

தேவதத்தன் ஒரு  உடைந்த குழல்.   திருத்த முடியாத சீடன். ஏனெனில் பேராசையினால் நன்னெறி அவனை  விட்டு விலகியது. 

எப்பேர்பட்ட குருவுக்கு இப்படி ஒரு சீடனா என்று  நாம் வியக்கிறோம். ஆனால் நிழலில்லாமல் ஒளியின் அழகு தெரிவதில்லை.  ஆகையால் இறைவன்  பெரியார்களின் பெருமையை உலகுக்கு புரிய வைக்க கூடவே தேவதத்தன் போன்றவர்களையும் அனுப்புகிறானோ என்னவோ ! 

[  फूँक  என்பதற்கு ஊதுதல் அல்லது வாயால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இந்த ஈரடிக்கு பரவலாக உடைந்த குழலில் இசை வராது என்ற அடிப்படையில் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் குழலிசையை முயன்றவன் என்ற அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவெனில்  மூச்சை முறையாக குழல் வழியே செலுத்தத் தெரியாதவனுக்கும் இசை வராது. வெறும் புஸ் புஸ் என்று காற்றுதான் வரும். அதை குருவானவர் சொல்லிக் கொடுத்தாலும் மாணவனின் சுயமுயற்சி யில்லாமல் முன்னேற முடியாது. கபீர் இந்த ஈரடியில் குழல் உடைந்தது என்ற வகையில் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வில்லை. ஆகவே குழலில் குற்றமில்லை, குருவில் குற்றமில்லை மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம் என்ற வகையில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ] 

Robert Grave's original lines
..........
The dew-drop carries in its eye
Mountain and forest, sea and sky,
With every change of weather;
Contrariwise, a diamond splits
The prospect into idle bits
That none can piece together.