Friday, March 28, 2008

சிப்பியுள் தாகமோ தாகம்

சுவாதி முத்யம் என்பது பெரும் வெற்றி பெற்ற ஒரு தெலுங்கு திரைப்படம். அதுவே தமிழிலும் சிப்பிக்குள் முத்து என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டதாக நினைவு.ஆழ்கடலில் வாழும் சிப்பி சுவாதி நட்சத்திரத்தன்று மேலே வந்து மழை வருவதைக் காத்திருக்குமாம்.அப்படி மழை வந்தால் அதிலிருந்து விழும் துளியிலிருந்து உருவாகும் முத்து மிகவும் ஒளி பொருந்தியதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் என்பது தொன்று தொட்டு இருக்கும் ஒரு நம்பிக்கை. சுவாதி முத்து என்பது மிக விசேஷமானது.

இதை உருவகித்து கபீர் சொல்லும் ஒரு ஈரடியை காண்போம்.

कबीर सीप समुद्र की, रहे प्यास प्यास ।
और बूँद को ना गहे, स्वाती बूँद की आस ॥


கபீர் ஸீப் ஸமுத்ர கீ, ரஹே ப்யாஸ் ப்யாஸ் |
அவுர் பூந்த் கோ நா கஹே, ஸ்வாதி பூந்த் கீ ஆஸ் ||


சிப்பியுள் தாகமோ தாகம் கபீரா,
சிந்துவே ஆயினும் பிறப்பிடம்

தப்பியும் ஏலுமோ பிற நீர்,
சோதிமீன் துளிக்கென விண் பார்த்திடும்


(சிந்து =கடல்; ஏலுதல் =ஏற்றுக்கொள்ளுதல்; சோதிமீன்= சுவாதி நட்சத்திரம்)

கபீர் குறிப்பிடுவது இறைவனின் அருள் மழையை எதிர்பார்த்திருக்கும் பக்தனின் அருள் தாகத்தை.

காலையில் அளவுக்கு அதிகமாக வெயில் காய்ந்தால், மதியத்திலோ மாலையிலோ மழை வருதலை எதிர்பார்க்க வைக்கும்.அது போல் சாதாரண மானுடனை போலல்லாது தீவிர அருள் தாகம் கொண்டவன் விரைவிலேயே இறைவன் அருள் மழையில் நனைவதை கண்டிருக்கிறது உலகம். அதில் அவன் மட்டும் நனைவதில்லை.அவனருகே இருக்கும் அனைவருமே அதில் திளைத்து மகிழும் பாக்கியம் பெறுகிறார்கள்.

வேறு மார்க்கங்களை விட பக்தி மார்க்கத்தில் இறைவனை அடைந்தவர்களே மிக அதிகம். அவர்களில் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசம் இருந்ததில்லை. அரசனென்றும் ஆண்டியென்றும் கிடையாது. படித்தவனென்றும் படிக்காதவனென்றும் இல்லை. அவர்களின் பரிதவிப்பை அவர்களே அறிவர். அது பிறரால் புரிந்து கொள்ள இயலாத ஒரு நிலை. ஆனால் காலப்போக்கில் அவர் பெருமை மறைந்து விடா வண்ணம் ஒரு சிலருக்கு ஆற்றல் தந்து அவர்களின் மனநிலையை யாவரும் உணரும் வண்ணம் இறைவன் கிடைக்கச் செய்த
முத்துகள் தான் பல மொழிகளிலும் இறைந்து கிடக்கும் பக்தி இலக்கியம். அந்த பக்த சிரோமணிகள் முத்தைப் படைக்கும் சிப்பிகளைப் போன்ற அரிய பிறவிகள்.

மிக உயர்ந்த நிலையை அடைய விரும்பும் எவரும் அற்ப ஆதாயங்களுக்காக தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். பொறுமையிலும் சாதனையிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. பெரியாழ்வார் மகளிடம் திருமணப் பேச்சை பிரஸ்தாபித்தபோது ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ மாட்டேன்' என்று உறுதிபட உரைக்கும் ஆண்டாள் ‘அவுர் பூந்த் நா கஹே' (தப்பியும் ஏலுமோ பிற நீர்)' என்பதை நினைவுறுத்துகிறார். திருவரங்கனை மனதில் வரித்த பின்னர் அங்கே வேறு பேச்சு இல்லை. ஏனெனில் அவர் முத்துச்சிப்பி. மானிடக் கடலிலே இருந்தாலும் ஒரு தனிப்பிறவி. நாச்சியார் திருமொழியில் நூற்றி நாற்பத்தி மூன்று பாடல்களில் அவர் வெளியிட்ட உள்ளக் குமறல் 'ரஹே ப்யாஸ் ப்யாஸ்' என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ப்யாஸ் என்றால் தாகம்.

கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணிற் புளி பெய்தாற் போலப்
புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தமறியாத
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே (நா.தி 627)

புளி அமிலத்தன்மை வாய்ந்தது. அதை புண்ணில் தேய்ப்பதால் உண்டாகும் எரிச்சல் போலாகுமாம் தோழியர் பகரும் சமாதான உரைகள். கண்ணன் இடையில் சுற்றியிருக்கும் பீதாம்பரத்தால் என்னை வருடி என் துன்பத்தை போக்குவீர் என்று பாடுகிறார். 'கண்ணனுடைய தொடர்பு உடைய ஏதாவது ஒரு பொருளாலாவது தன் அருள்தாகம் தணியாதா' என்ற ஏக்கம் வரிகளிலே தெரிகிறது.

அருள் தாகத்தில் தவிக்கும் பட்டினத்தாரின் தவிப்பை பாருங்கள்.

தவிப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
அவிப்பரிய தீயாம் என்னாசை தவிர்த்தையிலை (அருட் புலம்பல் :444)
(அவிப்பரிய =அணைக்க இயலாத)

அவிப்பரியத் தீ என்கிறார் இறைவன் பால் தாம் கொண்டுள்ள ஆசையை.

காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் ஏங்கும் ஏக்கம் இயற்கையின் படைப்புத் தொழில் தொடர்வதற்காக ஏற்பட்டுள்ளது. அது உலக அளவிலே நின்று விடுவது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் வகையைச் சேர்ந்தது. மனித பிறவியை தெய்வ நிலைக்கு உயர்த்தும் சக்தி அதற்கு இல்லை. ஆனால் இறைவனோடு கொள்ளும் காதல் பிறவிப் பிணியை தீர்க்க வல்லது.

அந்த தாபம் மனதில் அதிகரிக்கும் அளவு உலக விஷயங்களில் ஈடுபாடு குறைந்து மேல் நோக்கி பயணிக்கிறான் சாதகன். கபீர் சொல்வது போல் அப்போது இறையருளைத் தவிர வேறொன்றை ஏற்காத முத்துச் சிப்பியின் பக்குவம் வந்துவிடும்.

Wednesday, March 19, 2008

பிறப்பென்னும் பேதமை- விதிகாணும் உடம்பு

தில்லியில் கல்காஜி அருகே உள்ள பஹாய் மந்திர் செல்வோர்கள் பலர் இதை கவனித்திருக்கக் கூடும். தியான மண்டபத்தை சுற்றி உள்ள அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டிகளில் கண்ணாடி போன்று இருக்கும் நீர் அடியில் நூற்றுக்கணக்காக நாணயங்கள் தென்படும். இதே போல் கங்கையிலும் பல நீர் நிலைகளிலும் மக்கள் நாணயங்களை வீசுவதைப் பார்த்திருக்கிறேன். புனித தலங்களின் நீர் நிலைகளில் இப்படி மனதில் எதையாவது வேண்டிச் செய்வார்களாம்.

அப்படிப்பட்ட வரம் தரும் கிணறு ஒன்று. அதில் புது தம்பதியினர் தம் காணிக்கை செலுத்தி வேண்டிக்கொண்டனர். “நீ என்ன வேண்டிக்கொண்டாய் ?” என்று கேட்டான் கணவன்.

“ஏழேழு பிறவிகளிலும் நீங்களே கணவனாக வாய்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். நீங்கள் ? என்று பதில் கேள்வி போட்டாள் மனைவி. “இதே என் கடைசி பிறவியாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்” என்றான் கணவன்.

மனைவியின் பிக்கல் பிடுங்கல் தாங்க முடியாத கணவனின் வேண்டுதலாக நகைச்சுவைக்காக சொன்னாலும் பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.

தாயுமானவர் கூற்றின்படி சொல்ல வேண்டுமானால்

....மெய்ஞான சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு
தூங்க வைத்தவர் ஆர்கொலோ
தந்தைதாய் முதலான அகிலப் பிரபஞ்சம்
தனைத் தந்தது எனது ஆசையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்காலமதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
...... (பரிபூர்ணானந்தம் -7)

(பரமார்த்தம் =பரம அர்த்தம், உட்பொருள்)

சோற்றுத் துருத்தி என்று இந்த உடலை வருணிக்கிறார் தாயுமான சுவாமிகள். இதை நிலையானதாகக் கருதி உண்பதும் தூங்குவதுமாக மெய்ஞானத்தைப் பற்றிய சிந்தையின்றி பொழுதை கழிக்கிறேனே; இந்த உடலை எடுப்பதற்கு காரணம் என்று நான் எதையெதையெல்லாம் நொந்து கொள்வது என்று பரிதவிக்கிறார்.

இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

मैं अपराधी जन्म का, नख-सिख भरा विकार ।
तुम धाता दुःख भंजना,मेरी करो सम्हार ॥


மேன் அபராதி ஜன்ம் கா, நக்-ஸிக் பரா விகார் |
தும் தாதா து:க் பஞ்சனா, மேரீ கரோ ஸம்ஹார் ||


பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை
தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்

(மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)

'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.

அருணகிரிநாதரும் கந்தரனுபூதியில் இதைப் போன்றே

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ ...25

('மெய்யே என'= உண்மையானது என்று; உகந்து =மிக்க விருப்புடன்)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?.....27

(மின்னே நிகர் = மின்னலைப் போன்று தோன்றி மறைவது)

பாழ்வாழ்வெனும் இப்படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ .... 31

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய் .....35

என்று பலவாறாக பிறவியெனும் பிணிக்கானக் காரணத்தை எண்ணியெண்ணி கந்தனிடம் முறையிடுகிறார்.

'விதி காணும் உடம்பை விடா வினையேன்' என்பதில் “மே அபராதி ஜன்ம் கா” என்று சொல்லும் கபீரின் கருத்தொற்றுமை நன்கு விளங்குகிறது.

வித்திலிருந்து மரமும் பின்னர் அதிலிருந்து பலநூறு வித்துகளும் மீண்டும் அவற்றிலிருந்து மரங்கள் உற்பத்தியாவதும் தொடர் நிகழ்ச்சி போல உடல் எடுத்ததன் காரணமாய் வினைபுரிதலும் பின்னர் அவ்வினைகளே அடுத்தடுத்து பிறவிகளுக்கு காரணமாய் அமைவதையும் 'வெவ்வினை' என்று உரைக்கிறார் அருணகிரியார்.

தலைப்பட்டார் தீரத்துறந்தார் ;மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் .....348

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு ..........358

'மயங்கி வலைப்பட்டார்' என்பதிலும் 'பிறப்பென்னும் பேதமை'என்பதிலும் வள்ளுவர் அறியாமையில் சிக்கித்தவிப்பவர்கள் நிலையை சொல்வது போலவே கபீரும் 'நக்-ஸிக் பரா விகார்' என்று உணர்த்துகிறார். பரா விகார் என்பது 'மன விகாரங்கள் நிறைந்த' என்று பொருள்படும்.

'கதி காண மலர்கழல் என்று அருள்வாய்'என வேண்டும் அருணகிரி போல் 'மேரீ கரோ ஸம்ஹார்' என்று விடுதலைக்காக இறைஞ்சுவதிலும் கபீர், ஞானிகளின் கருத்து ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறார்.