Monday, December 27, 2010

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7

ஆசிரியர் அறிமுகம்

பள்ளி நாட்களிலும் கல்லூரி பருவத்திலும் படிக்கும் ஆர்வம் மிக இருந்தும் கதைகள், நாவல்கள் போன்றவை பல காரணங்களால் என் மனதை ஈர்க்காமலே இருந்தது. எழுதுபவர்களுக்கும் பிரசுரிப்பவர்களுக்கும் பணம் ஈட்ட இது ஒரு வழி என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

இந்த எண்ணம் இன்று மாறிவருகிறது. சமூகக் கதைகளில் மனதை பாதித்தவை என்று சொல்லக்கூடிய அளவில் எதுவும் இல்லாமல் போனதற்கு என் தேர்ச்சி இன்மை காரணமே ஒழிய படைப்புகள் இல்லாமல் போகவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

சில அற்புதப் படைப்பாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். நவீன இலக்கியங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதெல்லாம் வலையுலகுக்கு வந்த பின்பு பூவனத்தில் படித்து அறிந்து கொண்டேன். விந்தன் முதல் பாலகுமாரன் வரை பல பெரும் எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பிண்ணணியை மட்டுமல்லாது அவர்களின் கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிலாகித்து அவர்களின் பன்முக பரிமாணங்களை சுவைபட கூறப்பட்டுள்ள பாங்கை படித்த பின்னர் தான் எழுத்துலகைப் பற்றிய என் தவறான கணிப்புகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன்.

அந்த மாற்றத்திற்கு காரணமானவர் திரு ஜீவி அவர்கள்
.

அவருடைய எழுத்துலகப் பயணம் 1957 லேயே துவங்கியது என்று ஒருமுறை படித்ததாக நினைவு. அவருடைய வலைப்பூவை பற்றி அவரது சொற்களாலே அறிய வேண்டுமென்றால் “ வலைப்பூ 'பூவனம்' ஒரு சிற்றிதழ் போல. இலக்கியம், ஆன்மிகம், தற்சார்புக் கட்டுரைகள் என்று தேர்ந்தெடுத்த உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகையைப் புரட்டுவது போல இருக்கும்”.


இது எவ்வளவு உண்மை என்பதை அறிய பூவனத்தில் அவர் இடுகைகளிலிருந்து ஒரு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.


"
உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி" ஐந்திணை ஐம்பதிலிருந்து அன்பிற்காக தியாகம் செய்யும் பாடல் ஒன்று (மாறன் பொறையனார் பாடல்) கதை வடிவில் ஆரம்பித்து இலக்கியச் சுவையுடன் முடிகிறது. பிறர்க்காக வாழும் வாழ்க்கையே சிறப்பு என வலியுறுத்தும் புறநானூற்றுச் சுவை தரும் இடுகை என ஒன்று.

இலக்கியத்தமிழ் மட்டுமல்ல இசைத் தமிழும் இவரது பூ வனத்தில் உண்டு. கலைமகள் முதல் முருகன் வரை பாடல்கள் இயற்றி மகிழ்பவர் திரு ஜீவி.
அழகன் முருகன் (மணிரங்கு), சிவன் (கல்யாணி), உப்பிலியப்பன்(ராகமாலிகை) என பட்டியல் பெரிது.

ஜீவி அவர்களின் கவிதைகளை படிப்பவர்களுக்கு அவருடைய நுண்மையான கவனிப்பும் அதை யதார்தத்தில் பகிர்ந்து கொள்ளும் திறனும் வியக்க வைக்கும்.
கிழிசல் என்ற கவிதை உழைக்கும் வர்க்கத்தில் தம் மனப் போராட்டத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் கணவன் மனைவி பற்றிய ஒரு அன்பு மயமான சொற்சித்திரம். இருப்பது என்ற தலைப்பில் ”இருப்பது இல்லாதது” பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் மிக சுவையானவை மட்டுமல்ல வெகுநேரம் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை.
..............
அது இருக்கையிலேயே
அதன் இல்லாமையும்
பழக்கப்பட்டுப் போயின்
இருப்பின் மகத்துவமும்
இல்லாது போகலாம்
இப்படியாக இல்லாமையின்
வெறுமையில்
இருப்பின் இழத்தலை
வென்று கடக்கலாம்
..................
எல்லாவற்றினும் மேலாக அவருக்கு முக்கியமானது அவரது ஆன்மீகத் தேடல். அது
மனஓசையாக பூவனத்தின் முதல் இடுகையிலேயே வெளிவந்தது.
............
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.


அந்த தேடல் விரிந்து “
ஆத்மாவை தேடி “ என்னும் ஒரு கருத்தரங்கப் பகிர்வாக மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்த கருத்துக் களமாக பல படிமங்களில் இரண்டு பாகமாக எண்பது இடுகைகளுக்கும் மேலாக பெருகி ஒரு அறிவு களஞ்சியமாக திகழ்கிறது. இப்படி ஒரு தொடரை எழுத வேண்டுமென்றால் அவரது வாசிப்பு எவ்வளவு அகலமும் ஆழமும் உடையது என்பதை எண்ணி எண்ணி மனம் வியக்கிறது.
கடைசியாக ஜீவி அவர்களின் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை. அவைகளிலே தீய எண்ணம் உடைய கதாபாத்திரங்களையே காணமுடியாது. யாவரும் அன்பு மயமானவர்கள். பிறருக்காக விட்டுக் கொடுப்பவர்கள். சந்தர்ப்ப வசத்தால் ஒரு தர்மசங்கடமான நிலை தலையெடுக்கும் அல்லது சந்தேகம் தோன்றக்கூடிய வாய்ப்பு எழும். பின்னர் கதிரவனைக் கண்ட பனிபோல் அவை எப்படி அன்பினால் கரைந்து போய்விடும் என்ற வகையிலேயே பொதுவாக இருக்கும்.

அன்பு மயமான ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும்?


கார்த்திகை தீபத் திருநாளன்று எழுதப்பட்ட கபீரின் வலைப்பூவுக்கான இக்கட்டுரைக்கு
அகல்விளக்கு அற்புதம் என்று தலைப்பிட்டு அன்பின் பெருமையை பேசவிருக்கிறார். வாசகர்கள் சார்பாக திரு ஜி. வெங்கடராமன் அவர்களை வணங்கி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இனி ஜீவி ஐயா .......
------------------------------------------------------------------------

அகல் விளக்கு அற்புதம்

ஆரம்பத்தில் மகான் கபீர் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வடக்கில் வாழ்ந்த ஓர் ஆன்மீகப் பெரியவர் என்கிற மட்டில் அன்பர் கபீரன்பனின் 'கபீரின் கனிமொழிகள்' வாசிப்பு தொடர்ந்தது. பிடிப்பு ஏற்பட ஏற்பட இடுகை போட கொஞ்சமே காலம் தாமதமானாலும் நாளாவட்டத்தில் இன்னும் ஏன் அடுத்த பதிவு போடக்காணோம் என்று ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்திற்குக் காரணம் இருந்தது.

இந்தண்டை அந்தண்டை பராக்கு பார்க்காமல் ஒரு தவம் போல பதட்டப்படாமல், நிதானமாய் மகான் கபீரின் பன்முக தரிசனத்தை அவர் கொடுத்த பொழுது இந்தப் பதிவுக்கு வருவது, வந்து வாசிப்பது, வாசிக்க ஏங்குவது இதெல்லாம் வழக்கமான பழக்கமாயிற்று. இந்த ஈர்ப்புக்கு முக்கிய காரணம், மகான் கபீர் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டிய பேற்றை அவர் அணுஅணுவாக விவரித்த பாங்கு. தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று நமக்கும் பழக்கப்பட்டுப்போன தென்னகத்து தவச்சீலர்களின் பாடல் வரிகளை எடுத்தாண்டு மகான் கபீரின் வாய்மொழிகளாம் வாய்மை மொழிகளை நமக்குத் தெரிவித்தமையால் கபீர்தாசரைப் புரிந்து நம்மைப் புரிந்து கொள்வதில் எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாது போயிற்று.

சொல்லப்போனால், நம்மை நாமே புரிந்து கொள்வதற்காகத்தான் எல்லாமே. தவழும் பருவத்திலிருந்து தள்ளாடும் பருவம் வரை இந்த புரிபடல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி இந்த நேரத்தில் இன்ன நடப்பது என்பது கூட இறைவனின் வரமாகிப் போகிறது.

அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது

கபீர்தாசருக்கும் இந்த அன்பு தான் அவரது வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது. இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகப் பரிமளிக்கும் என்பது அவரது வழிகாட்டல். அதனாலேயே, 'தன்னலமற்ற அன்பு பேரின்ப நெறிக்கு முன்பதிவுச் சீட்டு' என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஏழைகளிடத்து வைக்கும் அன்பு இறைவனிடத்து இட்டுச் செல்லும் என்றும், இல்லாதோர் இறைவனிடம் வைக்கும் அன்பு அந்த இறைவனையே அவர் வீட்டு வாசலுக்கு இட்டு வரும் என்றும் எடுத்துச் சொன்னவர் அவர்.
உண்மை பக்தர் இரவிதாஸருக்காக கங்கை அவர் தொழில் செய்த தொட்டியிலேயே எழுந்தருளினாள் என்பது திகைக்கச் செய்யும் செய்தி, இல்லையா?... எப்படிப்பட்ட இரவிதாஸர்?.. 'இராமஜெபம் இருக்கையில் வேறொன்றும் வேண்டேன் பராபரமே' என்று கைகுவித்து இறைவனை தன் இதய சிம்மாசனத்தில் இருத்திக் கொண்ட இரவிதாஸர்!

அன்பு பக்தியாக குணமாற்றம் கொண்டு மூலமான இறைவனோடு இணையும் இரசவாதம் அற்புதமானது.

கபீரின் மொழியில் அவர் அன்பன் குறிப்பிட்டபடி

सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥


அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன் மயமானது.

தினமும் பூஜை செய்தது சிவபெருமானின் சிலையாக இருந்தது, சிவகோசரியாருக்கு. கண்ணப்ப நாயனாருக்கோ, தான் கொண்டிருந்த மாசு மருவற்ற பக்தியே சிவபெருமானாக இருந்தார். இந்த அன்பின் பிரதியான பக்தியே காளத்திநாதரின் கண்களில் இடம் வலம் என்று மாறி மாறி குருதி வழிந்த பொழுது தன் கண்களை ஒவ்வொன்றாக நோண்டி எடுத்து பெருமானின் முகத்தில் அப்பி வைக்க வைத்தது.

ஆதி சங்கரரின் சிவானந்த லஹரீயின் அறுபத்து மூன்றாவது சுலோகம் கண்ணப்ப நாயனாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

मार्गवर्तितपादुका पशुपते रङ्गस्य कूर्चायते
गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्ति: किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥

மார்க்காவர்த்தித-பாதுகா பசுபதே-ரங்கஸ்ய கூர்ச்சாயதே
ண்டூஷாம்பு-நிஷேசனம் புர-ரிபோர்-திவ்யாபி-ஷேகாயதே|
கிஞ்சித் க்ஷித-மாம்ஸசேஷ-கலம் நவ்யோபஹாராயதே,
க்தி: கிந் ந கரோத்யஹோ வநசரோ க்தாவதம்ஸாயதே ||


'காட்டு வழியெல்லாம் நடந்து நடந்து தேய்ந்த கண்ணப்பரின்
செருப்பு பெருமானின் மூர்த்திக்கு அபிஷேகத்திற்கு முன்
சிரசில் வைக்கப்படும் கூர்ச்சம் போலாகிறது. அவர் வாயிலிருந்து கொப்பளித்த நீரில் நனைந்தது தெய்வத்தன்மை பொருந்திய அபிஷேகம் போலாயிற்று. கொஞ்சமே கடித்து பார்த்த மாமிசத்தின் பாக்கிக் கவளம் புத்தம் புதிதான நைவேத்தியம் போலாகிறது. அஹோ! காட்டில் வசிக்கும் வேடர் பக்த சீலராகிறார்! ஆழ்ந்த பக்தி எதைத்தான் செய்யாது?' என்று பிரமிக்கிறார்.


திருநாவுக்கரசு சுவாமிகளோ தமது தேவாரத்து திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில்,

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ்ச் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்டனாரே

என்று கண்ணப்ப நாயனாரின் சரிதம் சொல்ல,

ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் -- சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து

என்று காரைக்கால் அம்மையாரும் அன்பென்னும் போர்வையினால் பிறவா யாக்கைப் பெரியோனைப் போர்த்தி தன் நெஞ்சத்தில் மாயத்தால் மறைத்து வைக்க,

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

-- என்று திருமந்திரம் முடித்து வைக்கிறது.

முதல் மூன்று ஆழ்வார்கள் கதை நமக்குத் தெரியும். மூவரும் தாயின் கர்ப்பத்தினின்று பூவுலகில் பிறவி எடுத்தவர்கள் அல்லர். தமிழகத்தின் வெவ்வேறு திருத்தலங்களில் அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என்று அவதரித்தவர்கள். மூவருக்கும் ஐப்பசி மாசம். ஜென்ம நட்சத்திரங்கள் தாம் அடுத்தடுத்தது. பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் திருவோண நட்சத்திரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லையில் அவிட்ட நட்சத்திரத்திலும், பேயாழ்வார் திருமயிலையில் சதய நட்சத்திரத்திலும் அவதரித்தனர்.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடுநாட்டில் உள்ள திருத்தலம் திருக்கோவலூர். தீராத விளையாட்டுப் பிள்ளை இங்கு திருவிக்கிரமனாய் காட்சி தருகிறார். கண்ணனை, கார்மேக வண்ணனைத் தரிசிக்கும் ஆவலில் மூவரும் வெவ்வேறு தலங்களிலிருந்து திருக்கோவலூர் வருகின்றனர். இந்த மூவருக்கும் திருக்கோவலூரில் ஒரு சந்திப்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருக்கமாய் நெருங்க வேண்டுமென்பது பெருமானின் ஏற்பாடு.

மூவரும் இரவு தங்கலுக்கு ஒதுங்கிய இடம் ஒன்றாகிறது. அடியார் ஒருவர் இல்லத்து இடைக்கழி. அந்த சின்னஞ்சிறிய இடத்தில் ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம். இவர்கள் மூவராகையால் நின்று கொண்டே இரவைக் கழிக்கலாம் என்று தீர்மானிக்கையில், கண்ணுக்குப் புலப்படாத இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இன்னும் நெருக்குகின்ற உணர்வு. நாலாவதாய் சேர்ந்து கொண்டவர் யார் என்று இருட்டை விரட்டிப் பார்த்து அறிய ஒவ்வொருவராக ஞான விளக்கேற்றி உணர முற்படுகின்றனர்.

பொய்கை ஆழ்வாரை அடுத்து பூதத்தாழ்வார் ஏற்றிய அகல் அன்பு ஒளியேந்தி பளீரென்று பளீரிட்டுப் பிரகாசிக்கின்றது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா -- நன்புருகி
ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார் ஏற்றிய அகல், அன்பு அகல். அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாய் அதில் வார்த்து, இனிய மனத்தை திரியாய் அதில் இட்டு நாராயணனுக்கு ஞானச்சுடர் ஏற்றுகிறார் அவர். ஆர்வ நெய்யில், இன்ப மனத்திரி அன்பு அகலில் ஒளிவிட்டு ஜொலிக்கிறது.

கபீரும் தன் ஆழ்ந்த அன்பை விளக்க ஒரு விளக்கு ஏற்றி அதன் ஒளியில் தன் தலைவன் முகம் காண ஏங்குகிறார்.

इस तन का दीवा करू, बाती मेल्यु जीव ।
लोही सींची तेल ज्यों, कब मुख देखू पीव ॥

உடலே அகலாய் உயிர் மூச்சும் அதிலிட்டத் திரியாய்
உதிர நெய்யில் ஒளிர்கையில் பதிமுகம் காண்பதெப்போ?

அன்பிற்கினியவன் தன்னை விட்டுப் பிரிந்த நேரத்து அவன் வருகையை எதிர் நோக்கி கையில் அகலுடன் காத்திருக்கிறாளாம் இளம் பெண் ஒருத்தி. அவன் திரும்புகையில் இருட்டில் அகல் வெளிச்சம் அவன் முக தரிசனம் கிடைக்க உதவும் என்பது அவளது எதிர்பார்ப்பு.

கபீருக்குக் கிடைத்த அகல் அவரது உடலேயாம். உடல் அகலில் உயிர் மூச்சைத் திரியாக்கி உதிர நெய்யில் நனைக்கிறார் கபீர். அகல் சுடர்விடும் அந்த ஆத்ம ஜோதியில் இறைவனைக் காண அவன் தரிசனம் கிடைப்பதெப்போ எனக் காத்திருக்கிறாராம்.

காலங்கள் வேறுபடலாம்; தருணங்கள் வெவ்வேறாய் இருக்கலாம்; தேச எல்லைகள் கூட கிழக்கு மேற்கு என்று எங்கெங்கோ மாறி மாறுபடலாம். இறைவனிடத்து பேரன்பு கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.

அன்பே உருவாய்க் கொண்ட அன்பூரே அது!

நமது இலக்கியங்களும் சரி, வழிபடுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளும் சரி, இறைவனுடன் ஒன்றி வாழ வழியேற்படுத்தி இருக்கின்றன. இன்னொன்று. இறைவனிடம் மனம் ஒன்ற ஒன்றத்தான் 'தான்' என்னும் அகம்பாவம் அழிந்து உண்மையான 'தானைத்' தானே கண்டு கொள்ளும் பாக்கியம் கிட்டும்.

தன்னைத் தானே உண்மையாக அறிதல் என்பது வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டக் கிடைத்த வரப்பிரசாதம். அந்த சித்தி கைவரப்பெற்றவர், தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். இறை பக்தியும் கூட இருந்து இரும்புக் கோட்டையென அவரைக் காக்கும்.

நிறைய எழுத மனம் அவாவுகிறது. அதை வேறோர் சமயம் செய்வதே சரி.

'நான்கு வருடம்; நூறு இடுகை. அதுவும் மகான் கபீரின் கனிமொழிகளைப் பற்றியே' என்று கபீரன்பர் செய்து வருவது சாதாரண விஷயம் இல்லை. மேற்பட்டப் படிப்பு ஆராய்ச்சிகளுக்குக் கூட இவ்வளவு சிரத்தையுடன் மெனக்கிடுவதில்லை. இறைவன் அருள் இருப்பதாலேயே இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது என்பது உள்ளம் உணர்ந்த உணர்த்தல்.

தமது கடுமையான உழைப்பு கொண்டு ஒரு சத்சங்கத்தை கபீரன்பன் நிறுவியிருக்கிறார் என்கிற நினைப்பே மோலோங்குகிறது.

மகான் கபீரிடத்து கொண்ட பிரேமை 'கபீரன்ப'ரானது. அன்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தான் அவரது இயற்பெயரை விடுத்து 'கபீரன்ப!' என்று அவரை அழைப்பதே நெருக்கமாகப் படுகிறது!
----------------------------------------------
நன்றி நவிலல்

நாவில் உணவின் சுவை நிற்பது சில கணங்களே. செவிவழி நுகரும் இசையின் மயக்கம் நினைவில் சில மணிநேரம் நீடிக்கக்கூடும். ஆனால் நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள் முழுவதும் உடன் நிற்பது என்பது இப்பொழுது புரிகிறது.

அந்த வாசிப்பின் சுவையை பகிர்ந்து கொள்ளவும் ஒரு திறமை வேண்டும். ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூன் அத்தனை இனிப்பையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல் பெரும் எழுத்தாளர்களின் வாசிப்பிலேயே ஊறிப்போன திரு ஜீவி அவர்களும் அப்படி ஒரு சுவை பட எழுதும் எழுத்தாளராக பரிமளிப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.


அவர் இந்த அன்பன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். ஜீவி மற்றும் சூரி ஐயா போன்ற பெரியவர்களின் ஆசிகளே இறைவனின் ஆசீர்வாதமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை
.

நமக்காக நேரம் ஒதுக்கி கருத்து செறிவுள்ள ஒரு கட்டுரையை சுவையாகப் படைத்து இந்த வலைப்பூவை கௌரவித்ததற்கு திரு ஜீவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய எழுத்துலக சேவை பல காலம் நம் யாவருக்கும் வழிகாட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்கிறேன்.

திரு ஜீவி அவர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு 2011 ஒளிமயமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன். நன்றி.

Sunday, December 19, 2010

சிறப்பு இடுகை-6 : தொடர்ச்சி (2)

கபீரின் இராமன் (பாகம் -2)

ஆசிரியர்: திரு. சுப்புரத்தினம்

இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்படுகின்றன: ஹட யோகம், தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வது, மந்திரங்களை உச்சரிப்பது, பூஜைகள், எல்லா விதமான கர்மாக்களுமே சிக்கலே. ராம நாம உச்சாடனத்தை ஆகவே எல்லா வழிகளிலிருந்தும் சிறந்ததாக, எளிதாகப் புரிந்து கொண்டு செய்தால், மற்ற வழிகளில் உள்ள ஆடம்பரங்கள் இல்லை எனவும் தெளிந்து செயல்படலாம்.

கபீர் தனது மனதிடம் இறைஞ்சுகிறார். :
, ஏ மனமே !! எப்படி உடைபட்ட ரத்தினங்கள் ஒன்றாகத் திரள்கின்று ரத்தின மாலை ஆகிறதோ, அது போல இந்த உலகின் மாயையிலே சிதைந்து போன நீ, அந்த பரபிரும்மன் ராமனின் அம்ருத குணங்களைக்கேட்டு, அவற்றையே பாடி மகிழ்வாய்,

ராமனையே ஸ்மரித்து ராமனிடமே நிலைத்து ராமனாகவே ஆவாய்.

कबीर् राम् रिझाड् लै, सुखि अम्र्रुत् गुण् गाइ
फूटा नग ज्यूम् जोडि मन्, सनधि मिलाइ

இது ஜீவாத்மா தனது மாயையைக் களைந்து தனது உண்மை சொரூபத்தினை உணர்வது. பரமாத்மாவுடன் ராமா, ராமா என உன் உதடுகளால் ராம மந்திரத்தை உச்சாடனம் செய். மனதிலே ராமனை இருத்து. ராமன் ஒரு சமுத்திரம்.அகண்ட சாகரம். கடக்க இயலாத கடல். அங்கே, அக்கடலிலே ஆனந்த அலைகள் எப்பொழுதுமே எழும்பி எழும்பி உத்சாகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வலைகள் முன்னே அன்னிய தேவதைகள், கடவுளர் சின்னஞ்சிறிய‌ குளங்கள் போலவோ இருப்பர் !! கடலின் சக்திக்குமுன்னே குளங்கள் எம்மாத்திரம் ? ஆகவே ராம நாமம் ஒன்றினால் மட்டுமே உண்மையான இன்பம் பெற இயலும்.


ராமா நீ சமானமெவரு ? பிரியா சகோதரிகள் குரலில் தியாகராஜரது பாடல்
ராகம்: கரஹரப்ரியா
Get this widget | Track details | eSnips Social DNA


(Rama,you glorified Raghu dynasty. Who can be equal to you?
Your beloved wife Sita is slender like the fragrant majoram(maruvam) She is
devoted to you like a pet parrot.
You are fortunate to have brothers whose talk is gentle and sweet like
honey drops.You are the most precious jewel of your lineage. Your speech
is refined,gentle and sweet.)

कबीर् राम् ध्याइ लै, जिभ्या साऔ करि मन्त्
हरि सागर् जिनि बीसरै, छीलर् देखि अनन्त्

அந்த ராஜ்ஜியம் உனக்கு கிடைத்துவிடின், உனது இகலோக கவலைகள் எதுவுமே இருக்காது. உண்மையான இன்பம்,உண்மையான சாம்ராஜ்யம் எது என உன் மனசுக்குப் புரிந்துவிடும் என்று சொன்னவர் கபீர்.


ராம பக்தி சாம்ராஜ்ய என்று தியாகராஜர் பாடியது நினைவில் வருகிறது.‌

[ராம பக்தி சாம்ராஜ்யம் நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணா பாடுகிறார். சுத்த பங்காள ராகம்]
Get this widget | Track details | eSnips Social DNA


இன்று எல்லாத்தொல்லைகளிலிருந்தும் விடுபட ராம ஜெபம் ஒன்றே வழி.
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

நம்மிடையே, இந்நாட்களில், ஆன்மீக உபன்யாசம் செய்யும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் சொல்வதைக் கேட்போமா ?

இன்றைய தேதியிலே, ராம ராம் என்று உச்சாடனம் செய். அது போதும்.ராம பஜன் ஒன்று மட்டுமே உண்மையான பஜன் என்பார் கபீர். இதை விடுத்து மற்ற மார்க்கங்கள் தேவையில்லாத கஷடங்களையே தருகின்றன.இறைவனின் உண்மையான பக்தனுக்கு அவனது பெயரின் நினைவு ஒன்று தான் இருக்கிறது,உலகத்தைப் பற்றியநினைவு இல்லை. ராமா ராமா என அழைத்தே, அவன்
நினைவிலே இருந்து ராம பக்தர்கள் ராம மயமாகின்றனர்.

இனி யார்முன்னே பக்தன் தலை வணங்குவான் ?

பக்தனும் இறைவனும் ஒன்று படும் வேளையிலே, " நான் " என்பது இல்லை. " நான்" இருந்த‌ இடமெலாம் " நீயே" . அது நீதான்.. ( தத் த்வமஸி) காணப்படுகிறது.

ஸ்ரீ ராமசந்திர கிருபாளு பஜ்மன என்கிற பிரசித்தமான பாடல் அனுராதா பதுவாள் அவர்கள் குரலில் [Sri Ramachandra kripalu bhaj man...anuradha patwal




ततम् तिलक लोक मै, राम् नाव् निज सार्
जन कबीर मस्तक दिया, सोभा अधिक अपार‌

ராம நாமம் ஒன்றே வேத உபனிஷத்துகளின் ஸாரம் . இந்த நாமமே மூவுலகங்களின் தத்வ மயமான திலகமாகும். கபீர் சொல்வார்: இந்த ராம நாம திலகத்தை எனது நெற்றியிலே இட்டுக்கொண்டு, எல்லா தேஜஸும் ஒளியும் என்னிடம் பிரகாசிக்க கண்டேன்:


பலுகே பங்காரமாயின - உன்னிகிருஷ்ணன் அவர்கள் குரலில்
Get this widget | Track details | eSnips Social DNA


ராமனுக்குத் தந்த உள்ளம் வேறு ஒருவரையும் கொள்வதில்லை.
कबीर सुमिरण सार है, और सकल जम्जाल
आदि अति सब सोधिया दूजा देखौ काल‌

च्य्न्ता तौ हरि नौ की, और् न चिन्ता दास‌
जे कुछ् चिम्तवै राम् बिन, सोइ काल कौ पास‌

ஒரு உண்மையான பக்தனுக்கு ஏதேனும் சிந்தனை இருப்பதென்றால், அது ராமனைக் குறித்த சிந்தனையே. மற்ற எதிலுமே அவன் மனம் லயிப்பதில்லை. தன்னைப்பற்றியோ, தனது குடும்பத்தைப்பற்றியோ அவனுக்கு கவலை இல்லை. அவன் ஒரே எண்ணத்தில் இருக்கிறான். ராம நாமத்தின் உள் இருக்கும் தத்வத்தை, மர்மத்தைப் புரிந்து, அந்த விராட் ஸ்வரூபத்தை புரிந்து கொள்வதில்லே கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ராமன் இல்லை என்று ஒரு எண்ணம் இருந்தால் அதுவே மிருத்யுவின் ஜாலம் அது தன்னை கர்மங்களின் வலையில் தள்ளிவிடும், அவ்வலையிலே சிக்கி எல்லா உலகங்களையும் சுற்றி சுற்றி , அவ்வப்பொழுது பிறந்து இறந்து தொடர் வினையை அனுபவிக்கிறான்.


நான் எல்லா சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து முடிவாக, ராம நாமம் எனும் ரத்தினத்தை அடைந்திருக்கிறேன், என்பார் கபீர்:

पन्च सनगी पिव पिव करै, छुठा जु सुमिरै मन‌
आइ सूति कबीर् की, पाया राम रतन

payoji maine..Ram rathan payo. by Latha Mangeshkar
rama natakathilE oru nikalchi.




அந்த ராமனைக் கண்ணாரக் கண்டேன் மதுரை மணி ஐயர் குரலில்

मेरा मन सुमिरै राम कूम, मेरा मन रामहि आहि
अब मन रामहि है रह्या , सीस नवावौ काहि

எனது மனம் ராமா, ராமா என ராமனையே ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது ராமனே எனது மனமாகி விட்டது. மனம் ராமன் வசம் ஆனபிறகு, நான் வேறு யாரை தலை வணங்குவேன் ?


ஜகஜித் சிங்க் என்ன பாடுகிறார் ?

ஹரி அல்லால் வேறு யார் துணை ( ஹரி பின் கோன் சஹாய் ) என்னும் பொருளில் துவங்கும் கபீரின் பாடலை ஜகஜித் சிங் குரலில் இங்கே :


तू तू करता तू भया, मुझ मै रही न हूम्
वारी फेरी बलि गयि, जित् देखो तिह तू

ஆஹா ! ராமா ராமா என உன்னையே நான் ஸ்மரிப்பதால், நான், எனது என்று ஒன்றுமே இல்லை. நான் என்பது எதுவோ, எனது என்பது எதுவோ அவையெல்லாம் உன் நாம ஸங்கீர்த்தனத்தில் நிவேதனம் செய்யப்பட்டு என்னால் தியாகிக்கப்பட்டு விட்டன, இப்பொழுது நான் எங்கு பார்த்தாலும், ராமா ! நீயே அங்கு இருக்கிறாய் !!


என்பதாகவும் மற்றும்,

कबीर् निर्भै राम जपि, जब लगि दीवै बाति
तेल घटया बाती बुझी, तब सोवेगा दिन राति

ராம நாமத்தை உனது உடலில் உயிர் உள்ளவரை ஜபித்துக்கொண்டே இரு.
அது உன்னுடைய எல்லா பயங்களையும் போக்க வல்லது. எண்ணை இருக்கும் வரை தீபம் சுடர் விட்டு பிரகாசிப்பது போல , உன் உடலில் உயிர் உள்ளவரை நீ நிர்பயமாக, ஒளி விடுவாய். உன் உடல் மரிக்கும்பொழுது நீ கவலையிலாது நிரந்தரமாக அமைதியாகத் தூங்குவாய்
.

என்றும் ராமநாமத்தின் மகிமையைப் போற்றுகிறார்.

இத்தனை சொல்கிறோமே ? இன்னும் ஜனங்கள் என்னைப் புரிந்துகொண்டு, ராம ஜபத்தினைத் துவங்க வில்லையே என்ற கவலை கபீருக்கு. கதறுகிறார். கூக்குரல் இடுகிறார்.

लूटि सकै तो लूटियो, राम नाम है लूटि
पीछी ही पछिताहुगी, यहु तन जेहै छूटि


ஒ ஜனங்களே !! வாருங்கள்.ராம நாமம் எனும் அகண்ட கஜானா எல்லோரும் வந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அது காலியாகிவிடப்போகிறது. நீ உனது மன உறுதியும் சக்தியும் ஒருங்கே இணைத்து, சீக்கிரமே எத்தனை முடியுமோ அத்தனை அந்த கஜானாவிலிருந்து ராம நாமத்தை எடுத்துக் கொள். ஸ்மரணை செய்யத் துவங்கு. இறப்பு என்று வந்து காலன் உனது உயிரை தச த்வாரங்களிலிருந்து எடுத்துச் சென்றபின்னே உன்னால் ராம நாமம் ஸ்மரணை இயலாது.

பத்தாம் திருமொழி என்ன சொல்கிறது?

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
.

அது மட்டுமல்ல,

कबीर आपण राम कहि, औरो राम् कहाइ
जिहि मुखि राम न उचरे, तिहि मुख् फेरि कहाइ

நீ மட்டும் ராம நாமத்தைச் சொல்வதில் திருப்தி அடையாமல், மற்றோரையும் ராம நாம ஜபத்தில் ஈடுபடுத்து. உன்னால், ராம நாமத்தை ஜபிக்க இயலாது போனாலும், மற்றவர் ஜபிக்க நீ காது கொடுத்துக் கேட்கலாம். ராம ஜபத்தில் ஈடுபடலாம் என்று கபீர் சொல்கிறார்.


ராமா ! உன் பெயரைச் சொன்னாலே என் உள்ளம் மகிழ்கிறது. உடல் புல்லரிக்கிறது. நீ உருவமுடன் என்முன் ஒரு கோதண்ட ராமனாக வந்தாலும் சரி, உருவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பர பிரும்மமாக இருந்தாலும் சரி, எனக்கு அருள் புரிவாய். என் பிறவிக்கடலை நீந்தி அக்கரை சேர துணை நிற்பாய்.

जैसे माया मन् रमै, यू जे राम रमाइ
तौ तारा मन्डल् छान्डि करि, जहान् के सो तहान् जाइ.

ராம பக்தனே !! உலகத்தே இருக்கும் யாவையும் ஜீவன் உட்பட, மாயையில் முழுகி உள்ளதோ, அது போல, நீ ராமநாமத்திலே சங்கமமாகி விடு. நக்ஷத்திர மண்டலங்களுக்கப்பாலே கேசவன் இருக்கும் இடத்தை நீ அடைவாய். ஊர்த்வகமனம் செய்து நக்ஷத்திர மண்டலத்துக்கும் மேலே உள்ள ஸூன்ய சக்ரத்தை அடைந்து பரமாத்மாவுடன் ஐக்கியமாய். தன் பிறவிப்பயன் அடைவாய். அழியாப் புகழ் அடைவாய்.


---------------------------------------------------------------

ராம நாமத்திலே சர்வமும் அடக்கம் என்று கபீர் சொன்னதை அழகாக படம் பிடித்து நமது மனங்களில் ஒட்ட வைத்து விட்டார் சுப்புரத்தினம் சார். கபீரின் (ஈரடி) அருள் மழை இன்னிசை தென்றலுடன் மிகவும் சோபித்தது. மிகவும் சுகமான ஒரு வாசிப்பு. அவருக்கு அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி. அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் தந்து இறைவன் அவரை நமக்கு தொடர்ந்து வழிகாட்ட வழி செய்யட்டும்.

இன்று கர்நாடகமெங்கும் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமனை விட சிறந்த ராம பக்தன் உண்டோ ? வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கிய ’கபீரின் இராமன்’ பற்றிய இடுகை ஹனுமத் ஜெயந்தி அன்று நிறைவடைவது இன்னமும் விசேஷம் அன்றோ!

சத்சங்கத்திலே கூட்டுப் பிரார்த்தனைக்கு விசேஷ இடம் உண்டு. வாருங்கள் நாமும் சேர்ந்து கொள்வோம் இந்த ராம நாம ஜெபத்தில்.


ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்.

Friday, December 17, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6

ஆசிரியர் அறிமுகம்

மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே உண்டு. சங்கீதத்தின் ஆழமும் தெரியாது, எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மகத்துவமோ பெருமையோ தெரியாது [தெரிந்திருந்திருந்தால் அவன் மேடை ஏறியே இருக்கமாட்டான்].

அவன் பாடி முடித்ததும் பெரியவர் ஒருவர் அவனுக்கு பரிசளித்து வெகுவாகப் பாராட்டி உற்சாகம் அளிக்கிறார். அவரைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ளும் போது வாயைப் பிளக்கும் வண்ணம் இவர் முன்பா அரைகுறையான நான் பாடினேன் என்ற நாணம் தோன்றும். அப்படி பாராட்டி உற்சாகம் தந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் இன்று முன்வந்து நமக்கு சிறப்பு இடுகை தரவிருக்கிறார்.

கபீரையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு ’60 களிலேயே மேற்படிப்பு ஆராய்ச்சி மேற்கொள்ள விழைந்தவர். அப்படியானால் இரண்டு மொழிகளிலும் அவருடைய தேர்ச்சி எவ்வளவு இருக்க வேண்டும் !

அர்த்தமுள்ள வலைப்பதிவுகள் என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நூற்றுக்கணக்கானப் பதிவுகளைப் படித்து அவற்றை தமது வலைப்பூவில் இணைப்புகளுடன் சுட்டிக் காட்டி வாசகர்களை ஒரு தரமான வாசிப்பு அனுபவத்திற்கு உயர்த்த பாடுபட்டவர். அவற்றில் வாரம் ஒரு முறை ஒரு சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அதற்கு மகுடம் சூட்டி வாழ்த்தியவர். ஒரு முறை கபீரின் கனிமொழிகள் இடுகை ஒன்றுக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.

வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும். சங்கீதப்பிரியர், அதற்கென ஒரு தனி வலைப்பூ. மூவி ராகாஸ்,மூவிங் ராகாஸ் என்னும் அந்த வலைப்பூவில் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை கோப்புகளுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட திரைப்படப் பாடல்களின் இசை நுணுக்கத்தை தொகுத்து தருகிறார். தமிழ் மறை தமிழர்நெறி என்று இன்னுமொரு வலைப்பூ. இதை திருமூலர் முதல் சுப்பிரமணி பாரதிவரை இலக்கியம் மற்றும் நடைமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் பல விஷயங்களுக்கு கருத்து சொல்லும் களமாக வைத்திருக்கிறார். ஆன்மீகம் என்ற பெயரில் ஆன்மீக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மட்டுமே ஒரு வலைப்பூ. கவிநயா போன்ற கவிஞர்களின் கவிதை வெளியான சில மணிநேரங்களிலேயே அதற்கு ராகம் போட்டு பாடி யூட்யூபில் வலையேற்றவும் செய்து விடுவார். அவருடைய உற்சாகம் யாவரையும் தொற்றிக் கொள்ளக்கூடியது. நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதையும் “ உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்” போன்ற வர்ணனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட சிறப்புகளுக்கு உரியவரான திரு சுப்புரத்தினம் என்கிற சூரியநாராயண சிவா அவர்களே இந்த சிறப்பு இடுகையின் ஆசிரியர். அவரை வாசகர் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

எச்சரிக்கை : கபீரின் ஈரடிகள் மழைபோல் பொழிய போகிறது. நனைந்து மகிழ வேண்டிய அருள் மழை. அதனோடு இன்னிசைக் காற்றும் சேர்ந்து வாசகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது.

--------------------------------------------------

கபீரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என அன்பர் திரு கபீரன்பன் பணித்தவுடன் ஒப்புதல் அளித்துவிட்டேன்.

இருப்பினும் கபீரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறேனா என்ற ஐயப்பாடு என் மனதிலே என்றென்றுமே உள்ளது. சொல்லப்போனால், 1957 முதல் கபீரின் தோஹாக்களை நான் பிரசார சபா தேர்வுகளுக்குக் கற்க துவங்கின காலத்திலிருந்து, ப்ரவீண் முடித்தபின்னும் சுமார் 1000 தோஹாக்களுக்கு மேல் மனப்பாடமாகத் தெரிந்தபின்னும் அதே நிலைதான். காரணம், கபீரின் பரிமாணம் அத்தகையது.

அவரை எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும், ஒரு பழுத்த ஆன்மீக வாதியாக, ஒரு தத்துவ ஞானியாக( தேரா சாயீ துஜ் மேய்ன் ஜோ ப்ஹுபன் மேய்ன் பாஸ்) , சமூக சீர்திருத்த வாதியாக, மூடப்பழக்க வழக்கங்களை அழிக்கும் நோக்குடையவராக ( பாஹன் பூஜென் ஹரி மிலை, தொ மைம் பூஜும் பஹாட்), ராம பக்தராக ( जिसी घटी प्रीती न प्रेम कि, पुनि रसना नहीं राम , ते नर इस संसार में उपजि गए बेकार ) எப்படிப்பார்த்தாலும் அவர் ஒரு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதராக, தெய்வத்துள் வைக்கப்படுபவராக இருக்கிறார்.

உலகத்தே ஆசானைப்போன்றவர் எவருமே இல்லை. அன்னை, தந்தை, உறவினர், நண்பர் யாவருமே இருப்பினும் நல்ல ஒரு குருவினைப்போன்று மிக நெருங்கிய சொந்தம் எவரும் இல்லை. உறவினர் யாவரும் உலக பந்தங்களே. உலகத்திலே ஒருவனை முழுகடிப்பதிலே தான் கண்ணாக இருக்கையிலே குரு ஒருவர் தான் தனது சீடனை இந்த இக லோக இருட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவு நிலையாம் ஞான ஒளியைத் தருவதிலே முனைப்புடன் இருப்பார். அப்படிப்பட்ட‌ குரு சாதாரண மனிதனான என்னை ஒரு தேவனாக ஆக்கிவிட்டாரே, அந்த குருவிடம் தினந்தோறும் எத்துணை முறை நான் நன்றி சொல்வேன், என கபீர் சொல்வதைக்கேட்டு இக்கட்டுரையைத் துவங்குவோம்.

பலிஹாரி குரு ஆபணை, த்யொள்ம் ஹாடி கை பார்.
ஜினி மானிஷ் தைம் தேவதா, கரத் ந லாகி பார்
.

கபீர் ஒரு இணையற்ற ராம பக்தர். கபீரின் பக்தி ஸாகரத்தில் முழுகியவர் பிறவிப்பெருங்கடல் நீந்தி இறைவனடி நிச்சயம் சேருவார் என்பதில் ஐயம் உண்டோ ?
கபீர் கண்ட ராமன் என எழுதுவோமா ? இல்லை , கபீர் அனுபவித்த ராமன் என சொல்வோமா?

கபீரின் மனதுக்கிசைந்த ராமன் பற்றி எழுதுவோம்.

ராமனைப் புரிந்துகொள்வதிலே அவனைப் போற்றுவதிலே, துதிப்பதிலே இருக்கும் வேற்றுமைகள், அந்த நாமம் நமக்கு என்ன நல்லது செய்கிறது என்று சொல்லும்பொழுது மறைந்து போகிறது.

ஒரு இடத்துக்குப் போகணும், டிரையினிலே போகலாமா, பஸ்ஸிலே போகலாமா இல்லை, ப்ளேனிலே போகலாமா என‌ யோசித்துக்கொண்டிருந்தபொழுது நான் மனசாலேயே அங்க ஆல்ரெடி போய்விட்டேன் என்று சொல்வதையும் நாம் கண்டு அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஆக, இந்த கட்டுரையில், இரண்டு நிலைகளிலும் ராம பக்தியை, மாயா ரஹித பிரும்மன் ஆகவும், அதே சமயத்தில் மாயா சஹித பிரும்மன் ஈஸ்வரன் ஆகவும் சந்திப்போம். சிந்திப்போம்.

ராம நாமத்தை சொல்ல, உச்சரிக்க, ராமனின் பக்தியில் மெய் மறக்க, கபீர் கூவியதைப்போல் வேறு யாரும் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் சொன்னார்களா என எனக்குத் தெரியவில்லை. அந்த ராம நாமத்தை ஒரு தடவை சொன்னால்,ஆயிரம் தரம் சொன்னால் மாதிரி.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹாச்ர நாம தச்துல்யம் ஸ்ரீ ராம நாம வராஹனே


நிற்க. ராமனைப் பற்றி கபீர் என்ன சொல்கிறார் என்ற உடனேயே நமது கண்களில், ராமன் ஒரு சீதா ராமனாக, கோதண்டராமனாக, ஜெயராமன், பட்டாபி ராமன்,ரகுராமன், கோசலைராம‌, கல்யாண ராமன், வேங்கட ராமன் , தசரத ராமன், இப்படி பல்வேறு நாமாக்களைக்கொண்ட ராமனாக சித்தரித்துக் கொண்டால், அதற்கு கபீர் பொறுப்பில்லை.

முதலில் நமக்கு தெரிந்த ராமனின் கதையை கேட்போமா ?

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடுவதை முதலில் கேட்போம்.




சகுணவாதியான துளசிதாசரைப்பார்த்தால்,அவரைப்போல் ராம பக்தர் இருப்பரோ என்று வியக்கிறோம்.
துளசிதாஸரின் ராம சரித மானஸில் ”துமக் சலத் ராமசந்த்ர” லதாமங்கேஷ்கர் அவர்கள் குரலில்




நாம் காணும் சர்வ குணஸ்ரேஷ்டனான Sarva guna sampannan, ragu kula nayakan Aana ராம பிரான், பக்த தியாகராஜர் எழுபத்தி இரண்டு மேள கர்த்தா ராகங்களிலும் பாடியிருக்கும் இராம பிரான் சகுண பிரும்மன். அவதார புருஷன்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத’ என்று அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட வந்த பரம்பொருள்.அந்த பரம்பொருள் ராமனாக அவதாரம் செய்தபொழுது, அப்பாலகன் ராமனுக்கு குலசேகர் ஆழ்வார் பிரபந்தத்தில் தாலாட்டு பாடி மகிழ்வார். ராமனிடம் அவர் காட்டும் வாத்ஸல்யத்துக்கு ஈடு ஏது!

ராகவனனே தாலேலோ இங்கே கேளுங்கள். பாம்பே ஜெயஸ்ரீ
Get this widget | Track details | eSnips Social DNA

Mannupugazh - பெருமாள் திருமொழி (Divya prabhandam)
Lyrics: Kulasekhara aazhwar ;Singer: Bombay Jayashree (Album: Vatsalyam); Raga : Nilambari


மும்மூர்த்திகளில் ஒருவராம் பக்த தியாகராஜரின் கீர்த்தனைகளில், அந்த யதுகுல, ராகவ ராமன், ராஜா ராமன், கோசலை ராமன் அழகிலே மயங்கி, அவனுடைய குணாதிசியங்களை எல்லாம் சொல்லி சொல்லி, பாடி பாடி மகிழ்ந்து, ராமா, நீயே எனக்கு எல்லாம் எனக் கதறி, ராமா ! என்னை இகலோக பந்தங்களில் இருந்து விடுவித்து மோக்ஷமதை தா என பிரலாபிக்கும், கண்ணீர் வடிக்கும் நிலை ஸர்வகுண ஸம்பன்ன ப்ரதீக உபாசனையின் ப்ரத்யக்ஷ உதாரணம்.

ராமா ! நீயே சர்வ குண ஸம்பன்ன தாரி. நீ வா என்று அழைக்கும் பக்த தியாகராஜர் அவர்களைப்பார்ப்போம்.




[Let all be attentive. Oh Ramachandra,please come. Oh Rama the repository of all virtues,please enter. ]

இதே பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் கேட்க

ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாயா சீதாயா பதயே நமஹா

என்று சொல்கிறோம்.

அதே சமயத்தில் இந்த நிர்குண சம்ப்ரதாய கபீர் ராம பக்தியில் திளைத்தவர் , என்று சொல்லும்போது அந்த நிர்குண நிராகார சத், சித், ஆனந்த ஸ்வரூபியாக உள்ள பரபிரும்மத்தையே ஹரி எனவும் ராமன் எனவும் குறிப்பிடுகிறார் எனக்கொள்ளுதல் வேண்டும்.

என்ன சொன்னாலும், சகுண பிரும்ம உபாசனையானாலும், நிர்குணமான இறை தத்துவமாக இருந்தாலும் சரி, ராம என்று ஒரு முறை சொல்லிவிட்டாலும் போதும் பாபங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று இருவருமே சொல்கிறார்கள்.

கபீரைப் பொறுத்தவரை, ராம் என்பது ஒரு இறைவனது பேரொளியில் அடைக்கலமாய், தன்னை மறந்து , "தன்னை " இழந்து,அந்த பிரும்மனில் சான்னித்யம் அடைந்து, தானும் அந்த பிரும்மனும் ஒன்றே எனத் தெளிந்த அத்வைத நிலை. தத்துவம். ஆயினும் இறைவனை அடைய அவர் சென்ற வழி, மார்க்கம், பக்தி மார்க்கம். ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் யாவையும் விடுத்து,பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகியவர் கபீர்.

பக்தி திராவிட உபஜை, லாயே ராமனந்த்.
பர்கத் கியா கபீர் நே , சப்த தீப் நவ காண்ட்

என சொல்லப்படும் உக்தி படி,

கபீர் தனது குருவின் உபதேசம் " ராம் " எனப்பெற்று, அதைப் போற்றி தமது தத்துவத்தை, நாரத பக்தி எனும் பெயர் சூட்டி, அதன் அடிப்படை தத்துவமே எல்லா ஜீவ ராசிகளிடம் அன்பு பூண்டு இருப்பதே இறைவனை அடையும் ஒரே வழி என தமது தோஹாக்கள் வழியே சொல்லியிருக்கிறார்.

இறைவனை ப்ரேம ஸ்வரூபி ஆகவும், அன்பின் வடிவாகவும் கண்டு, அன்பின் வழியேதான் அந்த ராமனை அடைவது எளிதான வழி எனவும் சொல்கிறார். அந்த காலத்திய பக்தி மார்க்கங்களுக்கு அப்பாற்பட்ட வழி நாரத பக்தி எனச் சொல்லப்பட்டது.
(# நாரத பக்தி பற்றிய விவரமான குறிப்பு கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது#)

அவரது ஹரி, அவரது ராம் நிர்குண, நிராகார, அத்விதீய, அத்வைத இறைவன் மாயா ரஹித பிரும்மன் ஆவான். உலக வாழ்க்கையில், லெளகீக ரீதியில் நமக்கெல்லாம் பரிச்சயமான , பிரதீக உபாசனை படி, அந்த பிரும்மதிற்கு ஒரு உருவத்தைக் கொடுத்து, அக்கடவுளை பிரதிஷ்டை செய்து, பூஜை முடிந்தவுடன் அவனை யதா ஸ்தானம் அனுப்பும் பக்தி மார்க்கம் அல்ல அவருடையது. சுருக்கமாக சொல்லப்போனால், அவரது ஹரி, அவரது ராமன், மாயா ரஹித பிரும்மன். ஒரு புரிதலுக்குச் சொல்லபோனால், அது கிட்டத்தட்ட இது போல்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
.

ஆனாலும், கபீருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பஹன் பூஜை ஹரி மிலை,
தொ மை பூஞ்சும் பஹாட்
என்பவர் கபீர்.

அவர் வழி தனி வழி. ராமா ராமா என உருகினாலும் அவரது ராமன் நிர்குணம், நிராகாரம், ஸர்வ வ்யாபி,ஸர்வ ப்ரேமி.
நம்முடைய பாரம்பரிய வழக்கம் உருவ வழிபாடு.

உருவ வழியே அருவத்திற்குச் செல்ல நமது யோக மார்க்கங்கள் வழி காட்டுகின்றன.


தியானத்தின் வழியாக, இறைவனை அடையச்சொல்வது ராஜ யோகம். ராஜ யோகத்திலே, யமம், நியமம் என்று தொடங்கி ஆசனம், பிராணாயாமம் ,பிரத்யாஹர்ரம், தாரண, த்யானம், சமாதி என எட்டு நிலைகள் புரிந்துகொள்வதற்கே முடியவில்லையே ? இதை சாதனை செய்வது எங்கனம் ?

அது சரி . யோகங்களைப் படிப்போம் என்றால், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், ராஜ யோகம். ஹட யோகத்திலே ஹ என்றால் ஞானம். ட என்றால் ஆனந்தம். ஹட யோகத்தில் குண்டலினி ஷக்தி யை உசிப்பி விடவேண்டுமாம்.

இந்த மஹா குண்டலினி சக்திதான் மஹா பிரளயித்திலும் இருக்கிறதாம். மூலாதார சக்கிரத்தில் ஒரு முக்கோணம் வடிவத்தில் இந்த குண்டலினி ஒரு பாம்பு போல் மூனரை அடிக்கு சுருட்டி படுத்து கொண்டு இருக்கிறதாம். இதை எழ வைக்க வேண்டுமாம்.( யோவ் ! பயமா இருக்கிறதையா !!)

இது போல் ஸ்வாதிஷ்டான சக்ரம், மணி பூரக சக்ரம், அனஹத் சக்ரம், விஷுத்த சக்ரம், ஆங்கயா சக்கிரம், பிரம்மா ரங்கரா சக்கிரம், ( தலை சக்கிரம் போல் சுழல் கிறதே அய்யா !! இந்த காலத்தில் இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா ? அதற்கு எனக்கு நேரம் கிடையாதே !! )

இதுவெல்லாம் போதாது என்று எனது நண்பர் வேங்கட ராமன் சாஸ்திரம் படித்தவர் அவ்வப்பொழுது, ஈடா, பிங்களா, சுஷும்னா நாடிகளைப் பற்றி தெளிவாகச் சொல்கிறேன் என்று குழப்புவார். (என்னை விட்டுடுங்க சார் !!)

அப்ப கபீர் சொல்லுவார்:
[ab mohin raam baroso thera, aur kown kaa karown nihor]

ஹரியை நம்பி அவனை நினை, அது போதும். இந்த கலி யுகத்திலே நாம ஜபம் செஞ்சாலே போதும்.

(அப்பாடா ! ஆளை விடுடா !)

இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை
எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின் நுழைவாயிலை, ராமனது ஸ்மரணையின் மகத்துவத்தை, ராம நாம உச்சாடனத்தை, கபீர் எடுத்துரைத்தது பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது.

எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது எனச்சொல்லும் கபீர் பக்தி மார்கத்தில் ராம நாம ஸ்மரணைதனை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் எளிது என்கிறார்.

कबीर् कहता जात है, सुणता है सब् कोइ
राम् कहे भला होइगा, नहि तर् भला न होइ
||

कबीर् कहै मै कथि गया, कथि गया ब्रम् महेश्
राम् नाव् ततसार् है, सब् काहू उपदेस


எல்லா தத்வங்களின் ஸாரமும் ராம நாமம் தான். இதை
நான் சொல்லவில்லை, பிரும்மாவும் சிவனும் இதே தான் சொல்கிறார். பிரம்மனும் மஹேஸ்வரனும் போற்றும் ராம நாம உச்சாடனைத்தை அதன் மகிமையை கபீர் எடுத்துக்காட்டியதை அடுத்த இடுகையில் காண்போம்.
----------------------------------------
நாரத பக்தி சூத்திரத்தை ஒட்டியக் குறிப்புகளும் கபீரின் பாடல்களில் உண்டு என்பதைப் பற்றிய சுப்புரத்தினம் ஐயா அனுப்பியுள்ள இன்னொரு குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

May I add naradha bhakthi as the contemporaries of Kabir called the same included at least eleven formats that were usual amongst the saguna upasaka krama also.

This would be evident from the ஆஸக்திகள் (aasakthis) detailed below:

1. குண மஹாத்மிய சக்தி [guna mahathmiyamasakthi ]
Govyandha gun gaayiye
thathai bhayee param nirdhan

2. ரூப சக்திrupasakthi
loot chooti khelai vikaraal, ananth kala natvar gopal

3. பூஜா சக்தி poojasakthi
jehi pooja man bhaavai, sow poojanahaar na jaanai.

4. ஸ்மரண சக்தி smaranasakthi.
kahai kabeer jogee aru kangam ai sab jhooti aasa
guru prasaadi rahi chathrig jyun nihachai bhagathi nivaasaa

5. தாஸ்ய சக்தி Dasyasakthi
kahai kabeer sevom bhanvaari.

6. சக்ய சக்திsakyasakthi
( nil )
7. காந்த சக்தி kaanthasakthi.
hari mera priya main raam hi bhahuriya

8. வாத்ஸல்ய சக்தி vatsalyasakthi
hari mera piv , main raam kee bhahuriyaa

9. தன்மய சக்தி thanmayasakthi
virahin piya paavai nagin, jiyaraa thalpai maayi
kai virahin ke meech dhai, kai aapaa dhikalaayi

10. பரவிரஹ சக்தி para virahasakthi
bhahuth thinan ko johathee, bhat thumhaari raam
jiv tharasai thuj milan koon mani naahin vishraam.

11. ஆத்ம நிவேதன சக்தி aathmanivedhanaasakthi
maagho main aisaa aparaadhee, theri bhagathi heth nahin saadhi.

The inclusion of all these sakthis in his poetry does in no way indicate that kabir has astrayed away from his main Nirguna Sampradaya. These scholars say indicate to the extent kabir was influenced or 'taught' by his guru Ramanandh or the scholars of his age.

----------------------------------
வானிலை அறிக்கை : அடுத்த சில நாட்களுக்கு (அருள்) மழை தொடரும் :)))

Monday, December 06, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5

ஆசிரியர் அறிமுகம்

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்ள முன் வந்த முதல் வலைப்பதிவர். அது மட்டுமல்லாமல் தமது வலைப்பூவில் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள் பட்டியலில் இணைத்தும் அவ்வப்போது தமது இடுகைகளில் மேற்கோள் கொடுத்தும் பலருக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தியவர். ஆன்மீகத்திலும் இசையிலும் அளவு கடந்த ஆர்வம் உள்ளவர். ரமணரின் ஆத்மபோதத்தையும் கீதையின் சாரத்தையும் மிகவும் சிரத்தையாக விளக்கியவர். அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல்களை எழுத்துருவுடன் இவருடைய வலைப்பக்கங்களில் கேட்டு ரசிக்கலாம். மார்கழி இசை உற்சவத்தை தம் பதிவுகளிலே இணைப்பு கொடுத்து இசையைக் கொண்டாடுபவர். ஆரம்ப காலங்களில் அவரே ”டாப் டென்” திரைப்படப் பாடல்களையும் சில வருடங்கள் தொகுத்து வந்தார். தமிழ் ஆர்வம் மிகுந்து வெண்பா எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அவருடைய வாசகம் என் வாசகம்”. இதைத் தவிர அருள் என்னும் வலைப்பூவிலும், இசை இன்பம் என்ற வலைப்பக்கத்திலும் தன் எழுத்துப் பணியை நடத்திவருகிறார்.

ஜீவா வெங்கடராமனை அறியாத சீனியர் பதிவர்கள் இருக்க முடியாது. அவர் ஊட்டம் ஊட்டி வளர்த்த வலைப்பூவில் அவரே பங்கேற்க வந்திருப்பது மட்டில்லா மகிழ்ச்சி தருகிறது. கபீரை பற்றி அவர் எழுதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கபீருடையக் கவிதைகள் பற்றி மூன்று நான்கு இடுகைகள் என் வாசகத்திலும்’ ( மன ஊஞ்சல், இவ்வுலகம் ),
அருள் வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன. எனவே அவருக்கு கபீரும் புதியவர் அல்லர். இம்முறை கபீர்தாஸாரின் மூன்று பாடல்களை எடுத்துக் கொண்டு நமக்காக அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகவே இருக்கும். சுருங்கக் கூறின் இந்த வலைப்பூ அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

இனி ஜீவா ...

-----------------------------------------------
பீரின் கனிவான கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.
எளிமையானவை. இரசிக்கத் தக்கவை. அவற்றுக்கு விரிவுரையோ, விளக்கங்களோ தேவையில்லை. இடராமல் ஓடி வரும் தெளிந்த சிற்றோடை.
பொதிந்த கருத்துக்களை அள்ளித் தரும் வற்றா அருள் ஓடை.
"இது தான் என் மதம்! இப்படித்தான் இருக்க வேண்டும்!" போன்ற தடைக்கற்களை தாண்டிய நீரோடை.

அக்கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளின் தமிழாக்கம்.
---------------------------------------------------------------------

1. "பழந்துணி வெளுத்த குரு"

சீடன் என்பவன் பழந்துணி போல,
குரு அத்துணியினை வெளுப்பவர்.
தியானம் என்னும் கல்லில் அடித்து அவர்
துவைக்கையில் துலங்குது என் சொரூபம்;
அஞ்ஞான அப்பழுக்குகள் அகன்றன முழுவதும்.

அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;
பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.
மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,
கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.

தனது குருவை மனிதனாய்ப் பார்ப்பவன் குருடன்;
தன் வாழ்நாள் முழுதும் அவன் மகிழ்ச்சி அடையான்;
இறந்தபின்னும் அவன் இருளிலேயே இருப்பான்.

கபீரா, குருடராய் இருக்கும் சீடர்களால்
குருவினை இறைவனாய்க் காண இயலுவதில்லையே.

இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்
அதைத்தணிக்க குருவால் இயலும்.
அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்
யாரால் என்ன செய்ய இயலும்?

குருவின் பெருமையும், குருவருளின் இன்றியமையாமையும் இக்கவிதையில் தெளிவாகிறது.
குரு-சீடன், என்றவுடன் நமக்கு இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------

2. "மலர்வது காய்க்கத்தான்"

என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.
அந்நிலவும் பகலவனும் கூட என்னுள்ளேயே இருந்தும்.
என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா.

"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?
எப்போது "நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ
அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.
ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு
ஞானம் பெற்றுத் தருவதுதான்.
ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.
மலர் மலர்வது காய்க்கத்தான்.
காய்த்த பின் மலர் சருகாவதுபோல்.

[ இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]

க்கவிதையை முடித்த விதம் உங்களையும் ஏதோ செய்தால் அதற்கு கபீர் தான் பொறுப்பாவார்!
"நான் ஏன் நாத்திகன்?" என்பதற்கு எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லிடலாம்.
ஆனால் ஆத்திகனாவதற்கு, இயற்கையைத் தவிரை வேறெதைச் சொல்வது!

மலர்வது காய்க்கத்தான்.
மனம் மலர்வது,
அவனைக் காணத்தான்.

அன்பெனும் நாரெடுத்து அதில் மனமெனும் மலர் கொண்டு தொடுத்த மாலையும் மணம் வீசும்.
சுடர்கொடி கோதை சூடிக்கொடுத்த மாலை போலே.
இயற்கை என்பார் சிலர்.
இறைவனின் வேலை என்பார் சிலர்.
இரண்டும் வேறில்லை என்பார் இன்னும் சிலர்! :-)
------------------------------------------------------------------

3. "எப்படிச் சொல்வேன்?"

எப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்?
இறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்?
அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.
அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.

உள்ளுலகத்திற்கும் வெளியுலகத்திற்கும் இடையே
வேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.
அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.
அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.
என்ன பார்க்கிறீர்கள்?
அவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.

[இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]

ள்ளதெல்லாமிலும் உறைபவன், உள்ளையும் புறத்தையும் ஒன்றெனச் செய்பவன்.
ஒன்றென உறைபவன். ஒன்றென்றில் வேறில்லை. ஓம்.

இறைவன் யாரென வெளிப்படுத்தும் அழகான கவிதை.
மேலோட்டமாக படித்துப் பார்த்தால் - ஈதென்ன, இதில் இயலாமை தானே இருக்கிறது எனலாம்.
இறைவன் வெளிப்படுத்தக்கூடாத இரகசியமோ, வெளிப்படுத்த இயலாத இரகசியமோ இல்லை.
ஆனால் அகத்தைச் சுற்றி புறம் எழுப்பிய சுவர்களால் மறைக்கப்பட்ட இரகசியம்.
அச்சுவர் இருக்கும் வரை அகத்தால் அனுபவிக்கப்படுவது இரகசியமாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அது இரகசியம்.

அன்பால் மட்டுமே அச்சுவரினை இடித்து இறைவனை இவனேயென இன்புற்றிட இயலும்.

கபீரைப் போன்ற மகான்கள், ஞானியர், பக்தியில் கரை கண்டவர் எனப்பலர், அவர்கள் கண்ட ஆனந்தத்தை இதுபோன்ற கவிதைகளிலும், பாடல்களிலும், கதைகளிலும், உபதேசங்களிலும் உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணத்திற்கு பள்ளிப் பருவத்தில் படித்த வள்ளலாரின் பாடல் அப்படியே கபீரின் கருத்துகளை பிரதிபலிக்கிறது.

எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்

எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே

எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறையவனே.

அப்படிப்பட்டோர் போன பாதையை மறந்து போகலாமா?
அவர்கள் கண்ட ஆனந்தம் என்றென்றும் நிலை பெற்றிருப்பது.
தில்லைக்கூத்தன் எப்போதும் அம்பலம் என்னும் ஆனந்த வெளியில் தாண்டவம் ஆடுவதை ஒத்தது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்

---------------------------------------------

பல அலுவல்களுக்கிடையேயும் நேரம் ஒதுக்கி ஒரு சிறப்பான பதிவை வழங்கிய ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

கண்ணன் காட்டும் கரும யோகம் என்கிற இடுகை ஒன்றில் அவர் இறுதியாக சொல்லியிருக்கும் வரிகள் :

பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

நமக்கு அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்து இடுகையின் பலனை அற்புதமாக பூர்த்தி செய்திருக்கிறார். இப்படியே அவருடைய எழுத்துப் பணி மேன்மேலும் நல்லமுறையில் தொடரட்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துவோம்.