Tuesday, April 22, 2008

மனிதரின் மறுபக்கம்

திருவொற்றியூர் கோவில் மண்டபத்தில் ஒரு பண்டாரம். மக்கள் அவரை நெல்லிக்கா பண்டாரம் என்றனர். பலரும் அவரை சித்த சுவாதீனம் இல்லாதவர் என்றே கருதினர். காரணம் அவரிடமிருந்த ஒரு வேடிக்கையான பழக்கம். கோவிலுக்கு வருவோர் போவோரைப் பார்த்து கழுதை போகுது கழுதை என்றோ பன்னி கூட்டம் போகுது, பன்னி... பன்னி என்றோ காக்கா... காக்கா என்றோ பலவாறாக யாவரும் கேட்கும் படி உரக்க கூவுவாராம்.

சிறுவரை சிரிக்க வைத்தது, பெரியவர்களுக்கு அதன் உட்பொருள் புரியவில்லை.

ஆனால் பைத்தியத்தின் வாயை மூடுவது எப்படி ? இப்படி இருக்கையில் ஒரு நாள் திடீரென்று 'மனுசன் வர்றான், மனுசன் வர்றான்' என்று சத்தம் போட்டாராம்.
அப்பொழுது அங்கே வந்து கொண்டிருந்தது அன்பின் உருவமெனக் கருதப்படும் இராமலிங்க சுவாமிகள்.

வாரியார் சுவாமிகள் சொல்லிய கதை இது.

வள்ளலாரையே 'மனுசன்' என்றால் பண்டாரத்தின் நிலை இன்னும் எவ்வளவு உயர்வாக இருந்திருக்க வேண்டும் !!

பண்டாரத்திற்கு ஒரு கேலிசித்திரக்காரரின் மனோபாவம் இருந்தது. ஆகையால் அவர் காட்டிய கேலிச்சித்திரம் சிரிப்பை வரவழைத்தது.

கேலி சித்திரம் வரைபவர்கள் மனிதர்களின் முகங்களை பல அடிப்படையில் பிரித்துக் கொள்வார்கள். அவற்றில் பறவை ரகம், பிராணி ரகம், பூச்சி ரகம்,கறிகாய் ரகம் என்று பலவிதம்.

அது போல் ஞானிகள் மக்களை பார்த்தவுடனே அவர்களின் உள்ளத்தை பிராணிகளின் குணத்தின் அடிப்படையில் அறிந்து கொள்வார்களாம்.

ஆனால் மனிதர்களுக்கு இது முடிவதில்லை. ஏனெனில் நேரத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ளும் விசித்திரமான குணம் உடையவர்கள் மனிதர்கள். அதனால் சாதாரண மனிதர்களுக்கு அதைத் தாண்டிப் பார்க்கும் திறமை கிடையாது. அந்த போலி குணத்தைக் கண்டிக்கும் வகையில் உள்ள கபீர் தோஹா ஒன்றின் உட்பொருள் வெகுநாட்களுக்கு பிடிபடாமலே இருந்தது.

ஹிந்தி மொழி நன்கறிந்த நண்பர்களுக்கும் அதன் வரிகளுக்கான பொருளை கூற முடிந்ததே அன்றி கபீர்தாஸர் எதை அல்லது யாரைப் பற்றி குறிப்பாக உணர்த்துகிறார் என்று சொல்லத் தெரியவில்லை. முதலில் அந்த ஈரடி.

बाना पाहिरे सिंह का, चलै भेड़ की चाल ।
बोली बोले सियार की,कुत्ता खावै खाल ॥


பானா பாஹிரே சிம்ஹ் கா, சலை பேட் கீ சால்
போலீ போலே ஸியார் கீ, குத்தா காவை கால் ||


சிங்கம் போல் வேடமிட்டு,ஓநாய் போல் நடை போட்டு, நரி போல் பேசுவோர் சருமத்தை, நாய்கள் தின்றிடும். இது நேரடி பொருள்.அதாவது சமூகத்தில் பிறரை, நேரத்திற்கு தக்கபடி வேடமிட்டு ஏமாற்றுபவரை சமூகம் ஒதுக்கி வைக்கும். அவன் இறந்த பின் உடலை கூட அடக்கம் செய்ய யாரும் முன் வரமாட்டார்கள். நாய்களுக்கு உணவாகும் அவனது உடல்.

மிகவும் பொதுப்படையான ஒரு கருத்து. அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வேண்டுமானல் இது யாரைக் குறித்து என்பது தெரிய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. பின்னர் வெகு நாட்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை,மொழி பெயர்க்கவும் முயலவில்லை.

ஒருநாள் தொலைக்காட்சியில் காண நேர்ந்த ஒரு திரைப்பட நகைச்சுவை துணுக்கு இந்த ஈரடிக்கு எதிர்பாராமல் விடையளித்தது. கேலிசித்திரங்கள் போலவே திரைப்படங்களில் சில நிஜங்களை மிகைப்படுத்தும் பொழுது நகைச்சுவை ஆகிறது என்பதற்கு அந்த துணுக்கு ஒரு உதாரணம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் யூ-ட்யூப் மூலம் அதே காட்சியை உங்களுக்கும் தருகிறேன்.
அதை வலையேற்றிருக்கும் அன்பருக்கு நன்றி.மேலே உள்ளப் படம் ஒரு காவல் அதிகாரியை பற்றிய துணுக்கு. அதில் நிமிடத்திற்கு நிமிடம் அவரது குணம் மாறுகிறது.

முதலில் ஓநாயின் குணத்தை காண்கிறோம்.எப்பொழுதும் பசித்திருக்குமாம் ஓநாய்.அது போல ஒரு பொருட்பசி. (1:10 min)

அடுத்து சிங்கத்தை போல(அதிகாரத்தை காட்டும் விதமாக)ஏமாற்றியவர்கள் இருப்பிடத்தை அடைந்து பேசுவது. (2:22 min)

சில நொடிகளிலே தான் சிக்கிக் கொண்டோம் என்பதை புரிந்து கொண்டதும் அவர்கள் காலில் விழாக்குறையாக குழைவது நரியின் குணத்தை சித்தரிக்கிறது.(3:10-4:20 min)

தனியார் நிறுவனங்களில் அதிகாரியாக இருந்து அரசாங்க அதிகாரிகளின் உருட்டல், மிரட்டல்,பணப்பசி இவற்றைக் கண்டு பல முறை மனம் வெதும்பியிருக்கிறேன்.

அந்த அனுபவம் இருந்தும் மேலே கண்ட தோஹாவிற்கு பொருள் புரியாமல் இருந்தவனுக்கு இந்த படத்தின் மிகைப்படுத்தப்பட்ட நிஜம் ஒரு மின்னல் போல கபீர் சொன்ன உண்மையை புரிய வைத்தது. நகைச்சுவை எழுத்தார்களுக்குள்ளும் ஞானிகள் ஒளிந்திருப்பரோ ? :))

இப்போது மொழிபெயர்ப்பை பார்ப்போம் :

கோளரி கோலம் பூணுவர்,கோநாய் போலும் திரிவர்
ஊளன் போலும் மொழிவர்,கூரன் தின்னும் சருமமிவர்

(கோளரி= சிங்கம், கோநாய் =ஓநாய், ஊளன்=நரி, கூரன்= நாய்
'கூரன் தின்னும் இவர் சருமம்' என்பது இயைபு மோனைக்காக ' சருமம் இவர்' அன்று மாறி வந்தது)

சிங்கம் என்ற வார்த்தை வந்துள்ளதால் இது அரசாங்கத்தின் அதிகாரம் பெற்றவர்களை குறிக்கிறது என்று அனுமானிக்கலாம். எல்லாக் காலங்களிலும் பெரும்பாலான அரசாங்க அதிகாரிகளின் போக்கு மக்களுக்கு சங்கடம் விளைவிப்பதாகவே இருந்து வந்திருக்கிறது என்பதையும் அவர்களைக் கண்டால் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கிறது என்பதையும் இந்த ஈரடி மூலம் அறிகிறோம்.

Sunday, April 13, 2008

பெருங்காய டப்பா-பெருகிவரும் வாசனை

மதுர்பாபு என்று அன்புடன் அழைக்கப்பட்ட மதுராநாதர் இராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவர். கிருஹஸ்தர்.அவரிடம் இராமகிருஷ்ணருக்கு அளவற்ற அன்பு இருந்தது. இருந்த போதிலும் நரேந்தரையும் மற்ற பிரம்மச்சாரி சிஷ்யர்களையும் மதுர்பாபு போன்ற கிருஹஸ்தர்களுடன் அளவுக்கு அதிகமாக உறவு பாராட்ட வேண்டாம் என்று அவர் எச்சரித்து வைத்திருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட மதுராநாதருக்கு பெரும் வருத்தம் உண்டாயிற்று. தன் மதிப்பிற்குரிய குருவிடமே அதற்கான காரணத்தை கேட்டார். “இதோ பார்! உனது
இல்லத்தில் பெருங்காய டப்பா வைத்திருக்கிறாயல்லவா. அதில் உள்ள பெருங்காயத்தை காலி செய்துவிட்டாலும் வெகு நாட்களுக்கு அதன் வாசனை போகாது. அதில் பின்னர் வேறு எந்த பொருளை வைத்தாலும் அதற்கும் அதன் வாசனை ஒட்டிக்கொண்டு விடும். உன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது எனினும் உனக்குள் இருக்கும் உலகத் தொடர்பான வாசனைகள் உன்னையறியாமல் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் பிறரிடமும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆன்மீகத்தில் நீ பின்பற்ற வேண்டிய வழிமுறைகளே வேறானவை. நரேன் போன்றவர்களின் முறையே வேறானவை என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மதுராநாதரும் சமாதானம் அடைந்தார்.

மருத்துவத்துறையில் ரணச்சிகிச்சை செய்யும் அறையிலோ, உணவு பதனப்படுத்தும் தொழிலிலோ வெளிக் காற்றிலிருந்து மாசு உட்புகாவண்ணம் அறைக்குள்ளே சற்றே உயர் அழுத்த சுத்திகரிகப்பட்ட காற்றை (sterile air) செலுத்தி அதிக அழுத்தத்தில் (positive pressure) வைத்திருப்பர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட காற்று வெளியே தப்பிச் செல்லுமே அன்றி மாசடைந்த காற்று உட்புக முடியாது. மேற்கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப 'பல மட்ட தரக்கட்டுப்பாடுகள்' சுத்திகரிக்கப் பட்ட காற்றுக்கும் உண்டு. அந்த தரத்தை நிறுவுவதற்கு பல லட்சங்களை நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் செலவழிக்கின்றன.

தன்னுடைய சிஷ்யர்கள் விஷயத்தில் ராமகிருஷ்ணர் மேற்கொண்டதும் அத்தகைய ஒரு தரக் கட்டுபாட்டு செயல் தான் என்பதை புரிந்து கொண்டால் அதில் தவறேதும் காணமுடியாது.

நம் 'பெரும் காயத்துள்' நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள வாசனைகளின்(வினைப்பதிவுகள்) பலத்தைப் பற்றி எவ்வளவு எளிமையான விளக்கம்! அது ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்வது. ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களையும் பழக்கங்களையும் களையச் செய்ய வேண்டிய செயல்கள் தான் ஆன்மீக சாதனையின் பெரும் அங்கம்.

அதனாலேயே பூஜை புனஸ்காரங்களை எந்த மகான்களும் நிராகரிக்கவில்லை.மனம் முழுமையாக அதில் ஈடுபட்டு இருக்கும் அளவும் பலவித விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கூடுகிறது. இதை ஒருவகையில் மேலே கண்ட positive pressure எனலாம்.

ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை. அகங்காரம் என்னும் மாயை உடலளவிலாலான குற்றங்களைத் தாண்டி மன அளவில் ஆன்மீக உயர்வை தடுக்கும் பல தவறுகளை செய்து கொண்டே இருக்கிறது. மனம் விவேகத்தின் பலமிழந்து புத்தியை மறைத்து அஞ்ஞான இருளில் உழல்கிறது.

மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.

கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய் வினை தீர்த்தவனே (திரு ஏகம்ப மாலை)

என்பதாக பட்டினத்தார் வெகுவான ஜனங்கள் செய்யும் பூஜையின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.

இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் கபீர் விளக்குகிறார்.

न्हाये धोये क्या हुआ, जो मन का मैल न जाय ।
मीन सदा जल में रहै,धोये बास न जाय ॥


ந்ஹாயே தோயே க்யா ஹுவா, ஜோ மன் கா மைல் ந ஜாய் |
மீன் ஸதா ஜல் மே ரஹை, தோயே பாஸ் ந ஜாய் ||


நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்கலையே இவர்தம் உள் அழுக்கும்
தீராது நீரதனில் திளைத்தென்ன நீங்கலையே மீனதனின் துர்கந்தம்

(மடி உடுப்பு= ஆசார உடுப்பு)
மாற்று:
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்காவே இவர்தம் உள்ளழுக்கும்
நீரதனில் முக்காலும் திளைத்தென்ன, நீங்காதே மீனதனின் துர்கந்தம்

மீனுக்கு தன் துர்கந்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அது எப்போதும் போல் நீரில் தீராது நீந்திக் கொண்டே இருக்கிறது. மீனிடமிருந்து வரும் வாடையை துர்கந்தம் என்று வகைப்படுத்தியிருப்பவர்கள் மனிதர்கள்தான். அது போல் சாதாரணமான வாழ்க்கை நடத்தி வரும் நம்மைப் போன்றவர்கள் ஜன்மாந்திர வாசனைகளால் வெளிப்படுத்தும் உலகியல் ஆசாபாசங்கள் ஞானிகளை பொறுத்தவரை துர்கந்தமாகவே இருக்கிறது. ஆகவே தான் நமக்கு அவை பெரிதாக தோன்றாவிடினும் இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் தம்மை அண்டி வருபவரை மிக சுலபமாக தரம் பிரித்து விடுகிறார்கள்.

நம்முடைய வெளி வேஷங்களால் அவர்களை மெச்ச வைக்க முடியாது.

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே (தி.ம.1655)

என்கிறது திருமந்திரம். மனதளவில் ஆழ்ந்த பக்தியில்லாமல் உலகோர் மெச்சுவதற்காக ஆடம்பரமான பூஜைகளை செய்வதும்,விருந்துகள் படைப்பதும் உண்மையான பக்தியின் லட்சணமல்ல. அளவுக்கு மிஞ்சும் போது பக்தியை தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே தூண்டும். உட்பொருள் அறியாது செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் இது பொருந்தும்.

'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்' எனப்படும் நிலை எண்ணத்தூய்மை இல்லாமல் முடியாது. மனதை சுத்திகரிப்பது என்பது மிகக் கடினமான பயிற்சி.

துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பலுண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு
எங்கள் முத்து மாரி எங்கள் முத்துமாரி

என்று பாரதி பாடுவதும் அதே காரணத்தினால் தான்.

மனம் வெளுப்பதற்கு கபீரும் பிறஞானிகளும் சொல்லும் ஒரே வழி நாமஸ்மரணை ஒன்றுதான்.

“மூச்சு மூச்சிலும் செபி நாமம், முயல்வதற்கில்லை வேறெதுவும்” என்று அவர் சொல்லியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

மீண்டும் அந்த கருத்தை, நீரை விட்டு வெளியே வந்துவிட்ட மீனின் துடிப்பிற்கு ஒப்பிட்டு அது போல் நாமசெபம் முடியாமல் போனால் மனம் நிலைகொள்ளாது தவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

सुमरण से मन लाइए, जैसे पानी बिन मीन ।
प्राण तजे बिन बिछडे ,सन्त कबीर कह दीन ॥


சுமரன் ஸே மன் லாயியே, ஜைஸே பானீ பின் மீன் |
ப்ராண் தஜே பின் பிச்டே, ஸ்ன்த் கபீர் கஹ் தீன் ||


செபிமின் மந்திரம் மனமுய்ய, நீர் விட்டு அகலிய மீன் போலே
தவித்து உயிர் விடும் நீரின்றி, தெளிமின் தீனன் கபீர் போலே
(உய்ய = உயிர்வாழ்தல்,தப்பிப் பிழைத்தல்; தீனன்= ஏழை)

மாற்று:

மந்திரம் வேண்டும் மனமுய்ய, மீனுய்ய வேண்டும் நீரும்
நீரின்றி நிலைக்குமோ உயிரும், உரைப்பனே ஏழை கபீரும்.

மனம் செய்யும் அவலங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் நாமஸ்மரணைதான் கைகொள்ள வேண்டிய சுலபமான வழி. அதுவே மன மாசுகளை தூரவிரட்டும் positive pressure.


வாசகர்களுக்கும் சகபதிவாளர்கள் அனைவருக்கும் சர்வதாரி வருட புத்தாண்டு வாழ்த்துகள்