விளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு பஞ்ச் வாசகத்தை தேர்ந்தெடுத்தது. பெரியவர்களெல்லாம் ஒன்று கூடி ஆலோசித்து நமது கலாசாரத்தை சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் முண்டகோபநிஷத்திலிருந்து ஆய்ந்தெடுத்த வரிதான் ”சத்யமேவ ஜயதே.”
அதை எந்த நேரத்தில் தேர்ந்தெடுத்தனரோ மக்களின் போக்கு சத்தியப் பாதையிலிருந்து விலகிக் கொண்டே போகிறது என்று பலரும் புலம்பும்படியாக இருக்கிறது. அந்த வாசகம் மக்கள் மனதிலே சத்தியத்திற்கான தாகத்தை உண்டு பண்ணாமல் ’அசத்யமேவ ஜயதே’ என்று கிண்டலுக்கும் உள்ளாகி விட்டது.
நாம் ’ஜயதே’ என்ற சொல்லுக்கு பொருள் கொள்ளும் விதத்தில் உண்மை மாறுபடுகிறது. சத்தியத்தை கடைபிடிப்பவன் காலத்தால் அழியாத புகழ் பெறுகிறான், அவனுடைய வாழ்நாளிலே அவன் சத்தியத்தை கடைபிடிப்பதால் வரும் இன்ப துன்பங்கள் ஒரு பொருட்டல்ல. அவன் இறைவனுக்கு அருகானவன். முக்தி நிலைக்கு தக்கவன். அதுவே உண்மையான வெற்றி.
சுவாமி ராமா தன் குருவுடன் புகைவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியிலே ஒரு நிலையத்தில் அந்நிலைய அதிகாரியாக இருந்த ஒரு சிஷ்யர் குருவைக் கண்டதும் மகிழ்ந்து அவரை வணங்கி ஆசி கோரினார்.சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார். பிரியும் வேளை வந்தது. குருவிடம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கும் படியான உபதேசம் ஒன்றை வேண்டினார்.“இனி எக்காரணம் கொண்டும் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசாதே” என்று உபதேசித்து அருளினார் குரு. பின் புகைவண்டியில் தம் பயணத்தை தொடர்ந்து ஊர் போய் சேர்ந்தனர்.
அன்று இரவு ஓய்வெடுக்கும் பொழுது குரு சத்தம் போட்டு சிரிப்பதைக் கண்ட சுவாமி ராமா அதற்கான காரணத்தை வினவினார்.”அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான். எல்லாம் உபதேசம் கேட்டதால் வந்த வினை” என்று சிரித்தாராம்.
நடந்தது இது தான்.சற்றே சபல புத்தி இருந்த அந்த அதிகாரி பலமுறை நிர்வாகத்தின் பணத்தை சிறு சிறு அளவில் கையாடல் செய்ததுண்டு. அவற்றை சுலபமாக பொய் கணக்குகள் மூலம் சரிகட்டியதும் உண்டு. ஆனால் அன்று உண்மையைத் தவிர வேறு பேசக்கூடாது என்று குருவிற்கு உறுதி அளித்ததானால் அன்று மாலையில் நடந்த தணிக்கையில் உண்மையை ஒத்துக் கொண்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.
குரு எங்கோ அமர்ந்து கொண்டு அந்த நிகழ்வை சுவாமி ராமாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் அவர் முக்காலத்தையும் உணர்ந்தவராகவே இருக்க வேண்டும். அவருடைய உபதேசத்தை கடைபிடித்ததால் சிறை வாசமென்றாலும் அதுவும் நல்லதற்கே. அந்த அதிகாரியின் வாழ்க்கையில் அன்று பொன்னாள். குரு அருள் முழுவதுமாக கிட்டி ஆன்மீகப் பாதையில் அவர் முதலடி எடுத்து வைத்து விட்டார். இனி எது வரினும் அவருக்கு குருவருள் துணை நிற்கும்.
(Life with Himalayan Masters, Swami Rama: )
பல மனத் துன்பங்களையும் சத்தியத்திற்காக தாங்கிக்கொள்வதும் ஒரு தவமே. அரிசந்திரன் கதை சொல்வதும் அதுவே.அதை கபீரின் வாயால் கேட்போம்.
सांच बराबर तप नहीं,झूठ बराबर पाप ।
जाके हिरदे सांच है, ताके हिरदे आप ॥
வாய்மையினும் உயர் தவம் இல்லை, பொய்யினும் பெரும் பாவம்
வாய்மை வழி நின்றார் உள்ளம், பரமா என்றும் நீ வாழும் இல்லம்
வாய்மை வழி நின்றார் உள்ளம் இறைவன் இல்லம் ஆகும் என்பதை திருமந்திரப் பாடல் ஒன்றிலும் காணலாம்.
மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னை
பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய்கலந்து ஊழித்தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைத்திடும் மெய்யர்க்கே
இறைவன் பொய்கலந்தார் உள்ளத்தில் புகுவதில்லை என்று திருத்தமாக சொல்கிறார்.
[முதன் முறையாக படித்தபோது மெய்கலந்தார் என்பதை வாய்மை நிறைந்த சான்றோராகவும், பொய் கலந்தார் என்பது காரணகாரியங்களுக்காக உண்மையையும் பொய்யையும் கலந்து திரியும் சாதாரண மக்களை குறிப்பிடுவதாகவும் தோன்றியது.
மெய்கலந்தார் என்பதை மெய்யுணர்வு அடைந்தவர்கள் என்றும், பொய்கலந்தார் என்பதை பொய்யான உலகத்தின் மேல் நாட்டமுடைய மக்கள் என்றும் பொருள் விளக்கவுரை தரப்பட்டுள்ளது]
நாம் அன்றாடம் பல வகைகளிலும் பொய்யுரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். வேலையெதுவும் இல்லாமல் வீட்டிலே தான் இருக்கிறோம். கைபேசியில் ஒரு அழைப்பு.
தவிர்க்க முடியாத முக்கிய நபர்.ஆனால் தவிர்க்க விழையும் விஷயம். வெகு நாட்களாக அவர் கேட்டுக்கொண்டி்ருந்த ஒரு காரியம் இன்னும் முடிக்கப் படவில்லை.
”ஹலோ வணக்கம் சார்.நான் இப்போ ட்ரைவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.வீட்டுக்கு போனதும் கூப்பிடட்டுமா?”
உண்மையை சந்திக்க மனதில் திராணி இல்லை.ஒரு பொய்யை தொடர்ந்து ஒன்பது பொய்கள். அது தரும் துயரம் சொல்லி மாளாது.ஒவ்வொரு முறையும் புதிய புதிய காரணங்கள்,சப்பைக் கட்டுகள்,முன்பு சொன்ன பொய்களை மறந்து சிக்கிக்கொள்ளும் அவஸ்தைகள் இத்யாதி. பாரதியார் அதை பாஞ்சாலிக்கு துகிலின் நீளம் கண்ணன் அருளால் வளர்ந்ததற்கு ஒப்பிடுவார்.
ஐய, நின்பதமலரே -சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி- என்றாள்;
பொய்யர் தம் துயரினை போல்- நல்ல
புண்ணிய வாணர் தம் புகழ் போல்
......
......
....
வண்ணப் பொற் சேலைகளாம்-அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே
மிக சுலபமாக வளர்வது பொய்தான்; புகழ் வளர்ச்சி சற்று நிதானமே. அதனால்தான் பொய்யருக்கு முதல் இடம் கொடுத்தாரோ.
மனிதனை சார்ந்து சத்தியமில்லை,சத்தியத்தை சார்ந்து மனிதன் இருக்கிறான்.அதை புறக்கணிக்குமளவும் அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான்.சத்தியத்தை கடைப் பிடிக்குமளவும் அழியாத தன்மைக்கு தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்கிறான் என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.
பொய்யை விட பெரும் பாவம் இல்லை என்றும் சொல்கிறார் கபீர். ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை சற்றே திரித்ததற்காக தர்மபுத்திரனும் சில நாழிகைகள் நரகத்தின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பர்.
அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்ற வீமன் அஸ்வத்தாமனை கொன்று விட்டேன் என்று துரோணருக்கு கேட்கும்படியாக கர்ஜிக்கிறான். மகனை இழந்ததாக நினைத்த துரோணர் அது உண்மையா என்று,வாழ்நாளில் பொய்யே உரைக்காத,தர்மனிடம் கேட்கிறார்.
பொய் சொல்லி அறியாத தர்மனோ திக்கித் திணறி ”ஆம்.உண்மைதான். அஸ்வத்தாமன் என்கிற யானை” என்று உரைக்கிறார்.அதில் இரண்டாம் பகுதியை சொல்லும் போதே கபடக் கண்ணன் தன் சங்கை ஊதி இறந்தது யானை என்கிற உண்மையை அறியாதவாறு செய்து விடுகிறான். மகனை இழந்ததாக நினைத்த துரோணர் போரை விட்டு விலகி அமர்கிறார்.
பாண்டவர்கள் வென்றார்கள்.
பலகால ஆட்சிக்குப் பின் மனித உடலோடு சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் தர்மபுத்திரர். அங்கே கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. துரியோதனனும் அவனுக்கு துணை போனவர்கள் சொர்கத்தில் இன்பமாக அமர்திருக்க தனக்கு பிரியமான பாண்டவர்களோ திரௌபதியோ எங்கும் காணப் படவில்லை. அவர்களிருக்கும் இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டிக் கொள்கிறார் தர்மர். அதன் காரணமாய் பிணக் குவியல்களுக்கிடையே துர்கந்தம் வீசும் இருட்டுப் பாதையிலே அழைத்துச் செல்லப்படுகிறார். அவற்றை சகிக்க முடியாமல் “இன்னும் எவ்வளவு தூரம் ?”என்று உடன் வந்தவனை கேட்கிறார். ”வேண்டுமானால் திரும்பி விடலாம்” என்கிறான் தூதன்.
தயக்கத்துடன் திரும்ப எத்தனித்த தர்மருக்கு “வேண்டாம், வேண்டாம் இப்போது தான் எங்களுக்கு சற்று ஒளி தெரிகிறது.குளிர்ந்த காற்று வீசுகிறது” என்று பல குரல்களில் வேண்டுகோள் கேட்கிறது. என்ன இது எல்லாம் பழக்கப்பட்ட அருச்சுனன், வீமன் நகுலன் பாஞ்சாலி அவர்களின் குரல் போலல்லவா இருக்கிறது ! அவர்கள் என்னுடன் தர்மத்தின்பால் நின்றதற்காக இது தான் பரிசு என்றால் நானும் இங்கேயே இருந்து விடுவேன். எனக்கு சுவர்க்கம் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
சிறிது நேரம் கழிந்தது. தர்மரின் உறுதி மாறாததைக் கண்ட இந்திரனும் எமதர்மனும் அவன் முன்னே தோன்றினர். நரகம் மறைந்து சுவர்கம் தோன்றியது. தர்மரின் பூதவுடல் நீங்கி தேவ உடல் வந்தது. தர்மருக்கு வைக்கப்பட்ட ஒரு சோதனைதான் அது என்று அவரை தேற்றினர்.
சூட்சுமம் அறிந்த பெரியவர்கள் அந்த சோதனைக்கான காரணத்தை சொல்லும் போது போரில் உண்மையை மறைக்க துணை போனதுதான் சில நாழிகைகள் பொய்யான காட்சியில் மனத்துன்பத்தை அனுபவிக்கும்படி செய்தது என்கின்றர்.
வாய்மையை காப்பாற்றுவதும் ஒரு தவமே. அந்த தவத்தில் மன அழுக்குகள் நீக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாறும் பொழுது இறைவன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் மனிதன்.
சுடச் சுடரும் பொன்போல ஒளிவிடும்,துன்பம்
சுடச்சுட நோக்கிற்பவர்க்கு (267)
அதற்காக வாய்மையை கடைபிடிப்பவர்கள் யாவரும் துன்பத்திலே உழன்று கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணம் கொள்ளத் தேவையில்லை. கஷ்ட காலத்திலும் சத்தியத்தை கைவிடாததால் அவர்கள் மேன்மை பொன்போல் ஒளிருகிறது.
அப்பேர்பட்டவர்களின் உள்ளம் எப்போதும் இறைவன் குடிகொண்டிருக்கும் இதயமாக திகழ்கிறது.
"மெய்" மெய்ஞானத்தின் மிகச்சிறந்த மந்திரச் சொல்.
ReplyDeleteசிறப்பான இடுகை !
மனிதனின் இயல்பே நேர்மையாக இருப்பது தான், சுயநலம் மேம்பட்டுவிட்டதால் இயல்பை தொலைத்து விடுகிறார்கள்.
நல்வரவு கண்ணன்,
ReplyDelete//மனிதனின் இயல்பே நேர்மையாக இருப்பது தான், சுயநலம் மேம்பட்டுவிட்டதால் இயல்பை தொலைத்து விடுகிறார்கள்//
சரியாகச் சொன்னீர்கள். சுயநலத்தால் உருவாவதுதான் எல்லாப் பிரச்சனைகளும்,தனிமனிதனுக்கும் சரி சமூக அளவிலும் சரி. தன்னலமற்ற சிந்தையை பெருக்கிக் கொண்டால் பல தீர்வுகள் தானாக வரும்.
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி
கிட்டத்தட்ட மனிதர்களின் இயல்பே பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த.. என்ற வரிகளுக்கு பின்னால் மறைந்து போவதுதான் என்றான வேளையில் நல்லதோர் விழிப்புணர்வுப்பதிவு.... உண்மையாய் இருப்பதே தெய்வசந்நிதானத்தில் இருப்பது போன்றது ஒன்றில் தோன்றும் உண்மைத்தன்மை நம்மை எல்லா இடத்தும் வழிநடத்தும்... ஆனாலும் எல்லா சமயத்திலும் நடைமுறைப்படுத்துவதில் சற்றே சிரமமாய்த்தான் உள்ளது.. அதற்கோர் ஊட்டச்சத்து போன்றதுதான் இந்த பதிவு...
ReplyDeleteஸத்யமேவ ஜயதே என்ற வார்த்தைகளுடன் வாக்கியம் முடிவ்டையவில்லை.
ReplyDeleteந அன்ருதம் என்று இரண்டு வார்த்தைகளும் இருக்கின்றன்.
ருதம் என்றால் ஸத்யம், உண்மை. அன்ருதம் என்றால் ஸத்யமில்லாதது, உண்மையில்லாதது.
ந அன்ருதம் என்ற வார்த்தைத்தொடர் ஆகவே, ஸத்யமில்லாதது, ந = அல்ல
என அறுதியாகவும் உறுதியாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஸத்யம் என்ற சொல்லுக்கு வாய்மை, உண்மை, நிஜம் என்று எவ்வளவு அடைமொழிகள்
சொன்னாலும் பூரணமான பொருளைக்கொண்டுவர இயலுமோ என்ற ஐயப்பாடு எழுவதால்தான்,
வள்ளுவப்பெருந்தகையும்,
வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.
என்பார். தீமை ஏதும் யாருக்கும் ஏற்படாது எனின், பொய் பகரலாமா ?
பொய்மையும் வாய்மையிடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்குமெனின்.
எனச்சொன்னதால், அந்த நன்மை குறைகள் நீங்கியதாக, மாசற்றதாக இருக்கவேண்டும் எனவும்
சொன்னார்.
நீங்கள் குறிப்பிடும் அஸ்வத்தாமா ஹதஹ குஞ்சரஹ உபமானம் குறித்து ஒரு வார்த்தை.
ஸப்ரஸியோ வெரி, ஸஜஸ்டியோ ஃபால்ஸி என்பார்கள்.
(suppressio veri suggestio falsi)
மெய்யை, உண்மையை மறைக்க முற்படினும் அது பொய்யே.
இத்தனையும் சேர்த்துப்பார்த்தால், ஸத்யம் என்பது ஒன்று தான் இருக்கமுடியும்.
நிலைத்திருப்பது எதுவோ அதுதான் ஸத்யம்.
நிலையாத எதுவுமே அஸத்யம்.
அந்த ஸத்யமே சிவம், சுந்தரம்.
மிக மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
வருக கிருத்திகா,
ReplyDelete//ஆனாலும் எல்லா சமயத்திலும் நடைமுறைப்படுத்துவதில் சற்றே சிரமமாய்த்தான் உள்ளது.. //
அதனால் தான் “அம்மாதிரியான இக்கட்டான நிலைக்கு என்னை தள்ளிவிடாதே “ என்பதையும் பிரார்த்தனையின் அங்கமாக சேர்த்துக் கொண்டால் அதற்கான வழி செய்வதும் அவன் பொறுப்பு ஆகிவிடும் :)
கடவுளே! பரீட்சையே இல்லாமல் பாஸ் பண்ணிவிடுன்னு கேட்பது போலத்தான் இதுவும். என்ன செய்வது, தன்னம்பிக்கை இல்லாத போது அவனை சரண் புகுவது ஒன்றுதான் வழி :)))
வருகைக்கும் கருத்து சொன்னதற்கும் மிக்க நன்றி
நன்றி சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteகட்டுரையின் மையக்கருத்துக்கு மேலும் வலு கூட்டும் வகையில் ”சத்தியம்” பற்றி ஆழமான கருத்துகளை அளித்ததற்கு மிக்க நன்றி. வாசகர்கள் அனைவருக்கும் பயனளிக்கும். நன்றி
//வாய்மையை காப்பாற்றுவதும் ஒரு தவமே. அந்த தவத்தில் மன அழுக்குகள் நீக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாறும் பொழுது இறைவன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் மனிதன்.//
ReplyDeleteமிகவும் அருமையான வரிகள்.
எப்போதும் போல மிகுந்த பிரயத்தனத்துடன் செய்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
”சத்யமேவ ஜயதே.”அதை எந்த நேரத்தில் தேர்ந்தெடுத்தனரோ மக்களின் போக்கு சத்தியப் பாதையிலிருந்து விலகிக் கொண்டே போகிறது என்று பலரும் புலம்பும்படியாக இருக்கிறது. அந்த வாசகம் மக்கள் மனதிலே சத்தியத்திற்கான தாகத்தை உண்டு பண்ணாமல் ’அசத்யமேவ ஜயதே’ என்று கிண்டலுக்கும் உள்ளாகி விட்டது.
ReplyDeleteதிரு சோ அவர்கள் தன்னுடைய ஒரு நாடகத்தில் கூறுவார். வய்மையே வெல்லும் என்றாலென்ன அர்த்தம் தெரியுமா "வாய் மெய்யை வெல்லும் வாயினால் சாதுர்யமாக பேசி உண்மையை வென்றுவிடலாம் இன்றைய அரிசியல்வாதிகள் அதைத்தான்செய்துகொடு இருக்கிறார்கள்
மற்றொமொரு ஆழ்ந்த விளக்கமளிக்கும் பதிவு.
வாங்க மதுரையம்பதி,
ReplyDelete// எப்போதும் போல மிகுந்த பிரயத்தனத்துடன் செய்திருக்கிறீர்கள். //
தங்கள் பின்னூட்டம் வந்தவுடனே அதற்கான பலன் கிடைத்துவிட்டதே :)
தவறாமல் வந்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி
தி.ரா.ச ஐயா நல்வரவு
ReplyDelete//"வாய் மெய்யை வெல்லும் வாயினால் சாதுர்யமாக பேசி உண்மையை வென்றுவிடலாம் ...//
என்ன ஒரு நகைச்சுவை உணர்வு !!!
ஆனால் அது உண்மையாகி போவதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்
படித்து கருத்துகளை சுவையுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
//வாய்மையை காப்பாற்றுவதும் ஒரு தவமே. அந்த தவத்தில் மன அழுக்குகள் நீக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாறும் பொழுது இறைவன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் மனிதன்.//
ReplyDeleteமுடித்து வைத்த அழகே, அழகு!
'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்!' என்றார் மஹாகவி. 'அந்த தவத்தில்'
என்கிற யாகம் தான் வாழ்க்கையாகவும் இறைவனைச் சென்றைடையும் வழியாகவும் தெரிகிறது. இதைத் தவிர வேறு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது என்பதும் உண்மை.
நல்ல பதிவு.
நன்றி ஜீவி ஐயா,
ReplyDeleteஉற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
//குரு அருள் முழுவதுமாக கிட்டி ஆன்மீகப் பாதையில் அவர் முதலடி எடுத்து வைத்து விட்டார். இனி எது வரினும் அவருக்கு குருவருள் துணை நிற்கும்.//
ReplyDeleteஉண்மையாய் இருப்பதையே கேலி செய்யும் இந்நாட்களில் இப்படி ஒருத்தர் இருக்க மாட்டாரா என ஏங்க வைக்கின்றது. தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்று சொன்னவனும் அதே பாரதி தானே. உண்மைதான் தர்மம் என அனைவரும் உணரும் நாள் வரவேண்டும் எனப் பிரார்த்திக்கலாம். வேறே என்ன செய்ய? வழக்கம் போல் அருமையான பதிவு.
வருக கீதா மேடம்,
ReplyDeleteஉடல் நலம் சற்றே பரவாயில்லையா?
படித்து கருத்து சொல்லி பாராட்டியதற்கு நன்றி
//மெய்கலந்தார் என்பதை மெய்யுணர்வு அடைந்தவர்கள் என்றும்//
ReplyDeleteஉடம்புக்கு மெய் என்ற பெயர் ஏன் வந்துச்சு-ன்னு யோசிச்சா, இந்த மெய் கலந்தார் சட்டுன்னு புரிந்துவிடும் கபீரன்பன் ஐயா!
பாழும் மேனி, பாழும் உடம்பு, ஊன் என்றெல்லாம் சொல்லும் ஞான நூல்கள், பாழும் "மெய்"-ன்னு மட்டும் சொல்லவே சொல்லாது! :)
//அதில் இரண்டாம் பகுதியை சொல்லும் போதே கபடக் கண்ணன் தன் சங்கை ஊதி இறந்தது யானை என்கிற உண்மையை//
ReplyDeleteகபீரன்பன் ஐயா,
பெரியோர் அவையில் ஒரு கேள்வி! அடியேன் எம்பெருமானை எதிர்ப்பதாய்த் தவறாக எண்ணிடாது, அனைவரும் அறியும் பொருட்டு, இதனை விளக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பொய் சொல்லாமல், பொய் சொல்லத் துணை போனதற்கே தருமருக்குச் சோதனை என்றால்...
பொய் உரைக்கத் தூண்டிய "கபடக்" கண்ணனுக்கு என்ன சோதனை?
இதை "அவன் சொன்னானே, அவனுக்கு ஒன்றும் இல்லையே, இவன் சொன்னானே, இவனுக்கு மட்டும் ஏன்?" என்ற ஒப்பீட்டுக்காகக் கேட்கவில்லை!
சத்ய நிர்ணயம் எப்படி என்று அறிந்து கொள்ளவே கேட்கிறேன்!
கர்ணன் குருவிடம் பொய்யுரைத்தான். ஆனால் சுவர்க்கம் புகுந்தான்!
தருமர் பொய்யுரைக்கத் துணை போனார்! ஆனால் அவருக்கு நரகச் சோதனை!
சத்ய நிர்ணயம் எங்ஙனம்?
வருக கே.ஆர்.எஸ்.
ReplyDelete////பொய் உரைக்கத் தூண்டிய "கபடக்" கண்ணனுக்கு என்ன சோதனை? //
இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவில்லை. ஆயினும் பல சமயங்களில் சில அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் நம்மை நாமே திருப்திப் படுத்திக் கொள்ள முடிகிறது. அப்படி என் மனதில் தோன்றியது :
न तु अहम तेषु (ஆனால் நான் அவற்றில் இல்லை) ते मयि (அவைகள் என்னுள்ளே) என்பதாக கீதையில் (7:12) சொல்லும் பொழுதே விதியை நிர்ணயிப்பவனுக்கு சாமானியருக்கான கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. விதியையும் அதை மீற வேண்டிய காரண காரியங்களையும் அவனே நிர்ணயிக்கும் போது அவனை எடை போட நாம் யார்?
கண்ணன் சொல்லித்தானே தர்மர் செய்தார்? அப்படியானால் அவருக்கு ஏன் சோதனை என்ற நியாயமான கேள்வி யாவர் மனதிலும் எழக்கூடியது தான். ஒரு வேளை தவறிழைக்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் பூரண சரணாகதியுடன் தர்மர் செயல்பட்டிருந்தால் அவருக்கும் சோதனை வந்திருக்காதோ என்னவோ.
ஆனால் அதுவும் அவன் லீலை. मम माया दुरत्यया (என் மாயையை கடப்பது கடினம் 7:14) என்று நாடகத்தை நடத்தி வருகிறான். मामेव प्रपद्यन्ते ते एताम् मायाम् तरन्ति (என்னை சரணடைந்தவர்கள் மட்டும் இந்த மாயை கடக்கிறார்கள்).
கர்ணன் விஷயத்தில், போரின் நடுவே கண்ணனே கையேந்தி அவனுடைய நல்லது கெட்டது எல்லாமே ஏற்றுக் கொண்டபின் அங்கே எஞ்சியிருப்பது ஏதுமில்லை. அதனால் அவனுக்கு சுவர்க்கத்திற்கு தடையேதும் இல்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
வேறு ஏதேனும் நல்ல விளக்கங்கள் இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லக் காத்திருப்போம்.
கருத்துப் பறிமாற்றத்திற்கு நன்றி
///ஞான நூல்கள், பாழும் "மெய்"-ன்னு மட்டும் சொல்லவே சொல்லாது! :)///
ReplyDelete:))
நன்றி கே.ஆர்.எஸ்.
கடந்த பதிலில்
பரிமாற்றம் என்பது பறிமாற்றமாகி விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்
//ஒரு வேளை தவறிழைக்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் பூரண சரணாகதியுடன் தர்மர் செயல்பட்டிருந்தால் அவருக்கும் சோதனை வந்திருக்காதோ என்னவோ//
ReplyDeleteசூப்பர்! இந்தப் பதிலைத் தான் எதிர்பார்த்தேன்! அதற்குத் தான் அப்படிக் கேட்கவும் செய்தேன்! :)
இது பல ஆத்திக உள்ளங்களிலும் எழும் நியாயமான கேள்வி தான் கபீரன்பன் ஐயா! ஆனால் நிறையப் பேர், மதிப்பு மரியாதை கருதி வெளிப்படையாகக் கேட்பதில்லை! இளம் தலைமுறை கேட்டு அறியும் ஆவலில் கேட்டு விடுகின்றனர்! எப்படியோ தெளிவு பிறப்பது நல்லது தானே!
பூவுலக தர்ம நியாயங்களுக்கு இறைவன் கட்டுப்பட்டவன் இல்லை என்றாலும்,
அவதார காலங்களில் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கிறான்! நமக்கு வாயால் உபதேசிப்பதை விட, நடந்து காட்டுகிறான்!
வாலியை வதம் செய்யும் இக்கட்டான சூழலில், அதைத் தர்மத்திற்கே செய்தாலும் கூட, வதம் வதம் தானே! ஒரு செயலால் உண்டாகும் விளைவை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும் என்பதை நமக்குப் பாடம் காட்டுகிறான். இராமன் செயலுக்கு விளைவு, அதே போல் கண்ணன் மறைந்திருந்து கொல்லப் படுவான் என்ற விளைவையும் ஏற்றுக் கொண்டு, அதை நடத்தியும் காட்டுகிறான்.
ஒரு பெரிய தர்மத்தை நிலைநாட்ட, சிறிய தர்மத்தை மீறினாலும், அந்த மீறலுக்கான விளைவை, மனம் பக்குவத்துடன், தியாகத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்! - இதுவே எம்பெருமான் உணர்த்தும் பாடம்!
தருமர் சிறிய தர்மத்தை மீறினாலும், பெரிய தர்மத்தை நிலைநாட்டத் தான் கண்ணன் அப்படிச் செய்யச் செய்தான் என்பதை மனதில் பூரணமாக உள்வாங்கிக் கொள்ளவில்லை! அதனால் அதன் விளைவு பற்றிய தியாக உணர்வோ, பக்குவமோ பெறாமல், என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ என்று சுயநலம் கலந்த குற்ற உணர்வால் அவதிப்பட்டார்! அதான் அவருக்கு இந்தச் சோதனை!
கர்ணனோ கிருஷ்ணார்ப்பணம் செய்தான்!
வருவது வரட்டும் என்று, அவன் தர்மத்துக்காக கெட்ட பெயரையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாய் இருந்தான், இராமனைப் போலவே! அதான் அவனுக்கு சோதனை தேவைப்படவில்லை!
தர்மச் செயலுக்காக, சத்தியம் மீற வேண்டி வந்தால், அதனால் வரப் போகும் பாரத்தையும் இன்முகத்துடன் தாங்கிக் கொள்வதே சத்ய லட்சணம்! சத்ய நிர்ணயம்!
"கபடக்" கண்ணன் நமக்கு உணர்த்தும் பாடம் இதுவே! :)
சென்னியோங்கு தண் திருவேங்கடம் உடையாய்
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு...
நின்னருளே புரிந்து, "இருந்தேன்"!
இனி என்ன திருக்குறிப்பே?
விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி கே.ஆர்.எஸ்.
ReplyDeleteஇது ஓர் உரத்த சிந்தனை. அவ்வளவே.
ReplyDelete(This is just a loud thinking)
// தருமர் சிறிய தர்மத்தை மீறினாலும், பெரிய தர்மத்தை நிலைநாட்டத் தான் கண்ணன் அப்படிச் செய்யச் செய்தான் என்பதை மனதில் பூரணமாக உள்வாங்கிக் கொள்ளவில்லை!//
தருமன் ஸத்யத்தின் முழு உருவம். தருமனைப்பொறுத்த அளவில் சிறிய தர்மம், பெரிய தர்மம் என்று வேறுபடுத்திப்பார்த்தது இல்லை. அப்படி இருப்பின்,த்ரெள்பதியின் வஸ்த்ரம் உருவப்படடிருக்கையில், பின்னே த்ரெள்பதியே சொன்னது போல, ஒரு பெண்ணின் அதுவும் தன் மனைவியின் மானத்தைக்காப்பற்றியிருக்கவேண்டும்.
// தர்மச் செயலுக்காக, சத்தியம் மீறவேண்டி வந்தால், அதனால் வரப் போகும் பாரத்தையும் இன்முகத்துடன் தாங்கிக் கொள்வதே சத்ய லட்சணம்! சத்ய நிர்ணயம்!
//
முற்றிலும் உண்மையே.
பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்குமெனின் என்பார் வள்ளுவர்.
இது விதிவிலக்கு, விதியல்ல. மேலும் எது புரை தீர்ந்த உண்மை என தீர்மானிப்பது யார் எனக்கேள்வியும் எழும்.
பொதுவாக, சட்டம் (law) ஒன்று சொல்லும். சட்டம் சொல்வதெல்லாம் தீர்மானிப்பதெல்லாம் நியாயமாகாது.(justifiable as per law but not justiciable) நியாயம் அடுத்த நிலை. நியாயம் (equitable justice ) சொல்வதெல்லாம் தர்மம் (justice) ஆகாது. ஸ்வதர்மம் (what one feels right according to one's own conscience) அதற்கும் அடுத்த நிலை.
இந்த நோக்கில் ப்பார்த்தால் கர்ணன் தன் குண்டல்த்தை தானம் செய்யுமுன் தன் தலைமையிடம் அனுமதி வாங்கிக்கொண்டிருக்கவேண்டும். குண்டலத்தை தானம் செய்து இழந்துவிடுவதால் தனது உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது என கர்ணனுக்குத்தெரியாதா என்ன ? சட்டப்படி ஒரு போர் துவங்கியவுடன் ஒரு வீரன் தெரிந்தே தனது பலத்தை தியாகம் செய்யலாமா ? அது தான் ஏற்றுக்கொண்ட சபதத்திற்கு ஒவ்வியதா?
இருப்பினும், கர்ணனுக்கு ஸ்வதர்மம் முக்கியம்.
தருமனுக்கு க்ஷத்திரிய குல தருமம் முக்கியம்.
இதெல்லாம் இருக்கட்டும். நடந்தவை, நடப்பவை, நடக்கபோகிறவை எல்லாமே நடத்துபவன் நானே எனக் கண்ணன் கூறியபின்னே இந்த தர்க்கததிற்கு எல்லாம் ஏதும பொருளதோ ?
சுப்பு ரத்தினம்.
//இதெல்லாம் இருக்கட்டும். நடந்தவை, நடப்பவை, நடக்கபோகிறவை எல்லாமே நடத்துபவன் நானே எனக் கண்ணன் கூறியபின்னே இந்த தர்க்கததிற்கு எல்லாம் ஏதும பொருளதோ ?//
ReplyDeleteசூரி சார்
நடந்தது தர்க்கமே அல்ல! புரிதல் மட்டுமே!
சத்ய நிர்ணயம் எப்படி என்ற புரிதல் மட்டுமே! :)
//அதனால் தான் “அம்மாதிரியான இக்கட்டான நிலைக்கு என்னை தள்ளிவிடாதே “ என்பதையும் பிரார்த்தனையின் அங்கமாக சேர்த்துக் கொண்டால் அதற்கான வழி செய்வதும் அவன் பொறுப்பு ஆகிவிடும் :)//
ReplyDelete:)) உண்மைதான்.. வழக்கப்படி அருமையான பதிவுடன் பின்னூட்டங்களும் சேர்ந்து கொண்டன. மிக்க நன்றி ஐயா.
கர்ணன் குருவிடம் பொய்யுரைத்தான். ஆனால் சுவர்க்கம் புகுந்தான்!
ReplyDeleteதருமர் பொய்யுரைக்கத் துணை போனார்! ஆனால் அவருக்கு நரகச் சோதனை!
சத்ய நிர்ணயம் எங்ஙனம்
கர்ணன் குருவிடம் பொய்யுரைத்த்தால் கர்ணனுக்குத்தான் கஷ்டம் வேறுயாருக்கும் கிடையாது. அங்கு சத்தியநிர்ணயம் கர்ணனுக்கு சரீர உபாதை.
தருமர் உறைத்த பொய்யால் துரோணரின் துர்மரணம். அதனால் தருமருக்கு சத்திய நிர்ணயம் நரகச் சோதனை.ஆனால் இந்தப் பொய்யில்லாமல் துரோணருக்கு மரணம் கிட்டாது. துருபத ராஜகுமரனின் சப்தம் நிறைவேறாது. ஆகவேஇது கண்ணனின் தீர்மானம். கண்ணனின் விளையாட்டு.மனிதர்கள் விளையாடும் விளையாட்டில் சட்ட திட்டங்கள் உண்டு ஆனால் கடவுளின் விளையாட்டில் இதெல்லாம் கிடையாது. இதைத்தான் ""உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீங்கலும் அலகிலா விளையாட்டுடையார்"என்றார் கம்பர் அலகு என்றால் விதிமுறைகள்.விதிக்கும் விதிமுறைகளூக்கும் கடந்தவந்தான் கடவுள்
சத்ய நிர்ணயம் பற்றி சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் கூறியதற்கு
ReplyDeleteசுப்புரத்தினம், கே.ஆர்.எஸ்., தி.ரா,ச அவர்களுக்கு
மிக்க நன்றி.
வாங்க கவிநயா,
ReplyDelete///அருமையான பதிவுடன் பின்னூட்டங்களும் சேர்ந்து கொண்டன.///
கபீர் வலைப்பூவின் பெருமையை உயர்த்துவதே அதன் உயர்ந்த வாசகர்கள் தான். அதற்கு கைம்மாறு கிடையாது.
ஆழ்ந்து படித்து வருகிறீர்கள். நன்றி
//மனிதர்கள் விளையாடும் விளையாட்டில் சட்ட திட்டங்கள் உண்டு ஆனால் கடவுளின் விளையாட்டில் இதெல்லாம் கிடையாது//
ReplyDeleteதிராச
இப்போ தான் பார்த்தேன்! அருமையாச் சொன்னீர்கள்!
மனிதர்கள் விளையாடும் விளையாட்டில் சட்ட திட்டங்கள் உண்டு! இறைவன் சட்ட திட்டங்களைக் கடந்தவன்!
என்றாலும் நம் பொருட்டு, நம் புரிந்து கொள்ள வேண்டுமே என்று சட்ட திட்டங்களுக்குத் தம்மைத் தாமே ஆட்படுத்திக் கொள்கிறான்! அது தானே அவதார சூட்சுமம்!
இறைவனே மறைஞ்சிருந்து கொல்லலாம்-ன்னு காட்டிட்டாரு-ப்பா என்று சூட்சுமம் புரியாத மனிதர்கள் தவறான பாதைக்குப் போய் விடப் போகிறார்கள் என்று தான், இராமன் செய்த செயலுக்கு, கண்ணனாய் கழுவாய் தேடினான்! வாலியை மறைந்திருந்து கொன்றதற்கு, அப்படியே மறைந்திருந்து கண்ணனும் கொல்லப்பட்டான்!
கர்ம பலனுக்கு அப்பாற்பட்ட இறைவன், கர்ம பலனுக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்வது போல் காட்டும் நோக்கம் இது தான்!
பிள்ளையுடன் சேர்ந்து அப்பா ஒன்னாங் கிளாஸ் வாய்ப்பாடு படிப்பது போலத் தான்! :))
The Lord is already a Leader!
But He still wants to lead by example!