Thursday, November 25, 2010

சிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4

ஆசிரியர் அறிமுகம்

இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்கிறேனேத் தவிர எழுத்து மூலம் அல்ல. தன்னை ஒரு வாசகனாக அறிமுகப் படுத்திக் கொள்ளவே அவர் விழைவார், எழுத்தாளராக அல்ல.

பலவேறு வகையான ஆன்மீகப் பயிற்சிகளில் ஆர்வமுடன் அவர் ஈடுபடுகிறார். தியான முறைகள், கீதைப் பயிற்சி, சத்சங்கங்கள் என அவருடைய ஈடுபாடு தொடர்கிறது. குறிப்பாக நாமசெபத்தின் மகிமையில் அவருக்குள்ள ஈடுபாட்டை இந்த வலைப்பூவின் பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.

தன் பெயருடன் ஸ்ரீ யோகிராம் சூரத்குமாரை இணைத்துக் கொண்டுள்ள திரு பாலசந்தர் அவர்களே இந்த இடுகைக்கான குறிப்புகளையும் கட்டுரையையும் கொடுத்து உதவியுள்ளார்.

YRSK BALU என்றால்தான் பல பதிவர்களுக்கும் புரியும்.

அவருக்கு தம் குரு மீதுள்ள பக்தியை இக்கட்டுரையைப் படித்தாலே புரிந்து விடும். ஆம், இந்தக் கட்டுரை யோகிராம் சூரத்குமாரை மையமாகவே வைத்து பின்னப்பட்டுள்ளது.

கட்டுரைக்கான அழைப்பைத் தயங்காமல் முன் வந்து ஏற்று சமீபகாலம் வரையில் நம்மிடையே வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி அறிய தந்தமைக்கு அவருக்கு வாசகர்கள் சார்பாக நன்றி.

இனி பாலசந்திரன் அவர்களது கட்டுரை.

அய்யன் விரும்பும் பிச்சைக்காரன்


திருவண்ணாமலையில் தேரடி மண்டபத்திலோ புன்னை மரத்தடியிலோ தனது அய்யனின் விருப்பப்படி யோகிராம் சூரத்குமார் காலம் கழித்த வருடங்கள் அவை. பெரும் தமிழ் அறிஞர்களான கி.வா.ஜகன்னாதன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரியசாமி தூரன் போன்றவர்கள் அடிக்கடி அவரை சந்தித்து சத்சங்கம் நடத்திய காலம். ஞானானந்த கிரி அவர்களின் தபோவனத்திலிருந்து சிவராமகிருஷ்ண ஐயர் என்பவரும் அவ்வப்போது பங்கு பெறுவதுண்டு.

ஆன்மீகத்தின் சிகரங்களான தபோவன ஞானானந்த கிரி சுவாமிகளிடமும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மஹாசுவாமிகளுடனும் தனிப்பட்ட முறையில் யோகிராம் ஆழமான தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரிடமும் பெரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.

சில அன்பர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள வனகிரி என்ற ஊருக்கு மஹாப் பெரியவரின் சொற்பொழிவைக் கேட்பதற்காக புறப்பட்ட பொழுது யோகிராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மண்டபத்தில் பெரியவர் தரிசனம் நன்கு கிடைக்கும் வகையில் ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தார். அன்றைய சொற்பொழிவில் பெரியவர் அந்தர்முகம் (உள்முகம்) கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே யோகிராம் பக்கம் கையைக் காட்டி “ஒரு நல்ல உதாரணம், இதோ இங்கேயே ஒரு அந்தர் முகி” என்று குறிப்பிட்டார். உடனே கூட்டம் யோகிராம் சூரத்குமாரை சூழ்ந்து கொள்ளத் தொடங்கியது. அதை பெரியவரே அன்புடன் தடுத்து யோகியருக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

யோகிராம் சூரத்குமார் ஒரு சரித்திரப் பட்டதாரி. ஆங்கிலம் நன்கு அறிந்த ’பிச்சைக்காரர்’. அவர் வடநாட்டவர் என்றறிந்த சில ஹிந்தி எதிர்ப்பு விஷமிகள் அவருக்கு விடாமல் தொந்தரவு கொடுத்தனர். பைத்தியம் என்று அடித்து துன்புறுத்தினர். அவரது ஆடைகளை கிழித்து வேடிக்கை பார்த்தனர். பதிமூன்றுமுறை அவர் தங்கியிருந்த வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டது. அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. இவை எதுவுமே அவரை பாதிக்கவில்லை. யாரிடமும் கோபம் பாராட்டவில்லை.

ஒரு பக்கம் ஞானிகள் தமக்கு சமமாக அவரை மதித்துப் போற்றினர். மறுபக்கம் அஞ்ஞானிகள் அவருக்கு தீங்கிழைக்க அஞ்சவில்லை. கபீர்தாஸரின் ஈரடி ஒன்று அவருடைய நிலமையை பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது.

ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்
ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்


சூரத்குமார் அவர்களுக்கு துன்பம் இழைக்கப்பட்ட காலத்தில் இருபெரும் தவசிகளும் தத்தம் வழியில் யோகியாருக்கு பக்கபலமாக இருந்ததாக அறிகிறோம்.

யோகி ராம்சூரத்குமார் சில வேளைகளில் திருக்கோவிலூர் தபோவனத்திற்கு விஜயம் செய்வதுண்டு. ஸ்ரீ ஞானானந்தகிரியும் யோகியாரும் அவ்வப்போது செய்த பல புதிரான நிகழ்வுகளை- ஞானரசக் கொண்டாட்டத்தை- அவர்களுடைய பழங்கால அடியார்கள் சந்தோஷமாக நினைவு கூர்வதுண்டு.

தென்னாங்கூர் ஸ்ரீ நாமானந்த கிரி சுவாமிஜி சொல்லிய ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை கூடியிருந்த பக்தர்களிடம் ”கபீரை தரிசிக்க விருப்பமா ?”என்று ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் கேட்டாராம்

யாவரும் ஸ்ரீ ஞானனந்தகிரியையே ஆவலுடன் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்த்த வேளையில் யோகி ராம்சூரத்குமாரை சுட்டிக்காட்டி “ இவர்தாம் அப்போது கபீர் இப்போது யோகி ராம்சூரத்குமார்” என்று சொன்னார்.

ஞானானந்த கிரி சுவாமிகள் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கபீரைப் போலவே ராம்சூரத்குமாரும் கங்கை கரையில் பிறந்து வளர்ந்தவர். கபீரைப் போலவே இளமையிலேயே ஆன்மதாகத்தில் பல குருக்களிடம் ஞானத்தைத் தேடியவர்.

கபீருக்கு ராமானந்தர் குரு, யோகியரின் குருவோ ராமதாஸர். அவர் பெற்ற உபதேச மந்திரமும் ராம நாமம் இவருக்கு கிடைத்த மந்திரமும் ராமநாமம்.

கபீரைப் போலவே எந்த மதத்தினரும் தம்மவர் என்று யோகியர் மேல் உரிமை கொண்டாட இயலாது.

காவி உடை இல்லை நெற்றியில் மத சின்னங்கள் எதுவும் இல்லை. அழுக்கு உடையுடன் திரிந்த அருள் வேந்தன் அவர்.

தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ
(கி.வா.ஜகன்னாதன்)

பேட்ரிக் என்ற பெயருடைய கராத்தே மாஸ்டர் யோகியரை சந்தித்தபோது அவருக்கு பேட்ரிக் என்ற பெயரில் வெளி நாட்டில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய விவரமெல்லாம் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் யோகியரின் அருள் நோக்கில் ஏசு பிரானையே கண்டதாகப் பேட்ரிக் கூறினார்.

இந்துக்கள்,கிருத்துவர்கள்,முகமதியர்கள் போன்ற எல்லா மதத்தினரும் வந்து அவரிடம் அருளாசி பெற்றுச் சென்றனர். இதிலிருந்து கபீரைப் போலவே கடவுள் மதங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உணர்த்த வாழ்ந்து காட்டியவர் என்பதும் புலனாகிறது.
( T பொன்.காமராஜன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

பக்தர் ஒருவர், பலருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பி இப்பேற்பட்ட துன்பங்கள் எதற்காக என்று தனிமையில் பகவானிடம் வினவினார். அவரை ஆழ்ந்து நோக்கிய பகவான் வாசலில் மிதியடியாகப் போடப்பட்டிருந்த சாக்குப் பையை சுட்டிக்காட்டினார்.
”போ! அதில் உள்ளதைப் படித்துப்பார்”
தன் கேள்விக்கும் அவருடைய செய்கைக்கும் தொடர்பு புரியாது மிதியடி அருகே சென்று அதைப் படித்தார். படித்ததும் அவர் முகம் புரிந்துகொண்டது போல் நகை முகம் ஆனது. ”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்” என்று ஏற்றுக் கொண்டார்

அதில் இருந்த வாசகம்“ கல்,குருணை நீக்கிய நெ.1 திடம் அரிசி

ஆன்மீகத்தில் பல படிகள் இருக்குமே என்ற எண்ணத்தில் ஒரு மேற்கத்தியர், அவதாரம், முனிவர் மற்றும் சாது இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்று யோகியரிடம் கேட்டார். பகவான் தனக்கே உரிய எளிமையுடனும் அதே நேரம் முடிவுடனும் “ இந்தப் பிச்சைக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தன் உடலையே தான் என்று நினைத்திருக்கும் வரையில் அவன் இதில் எதுவாகவும் முடியாது. இந்த உடல் தானில்லை என்று உணர்ந்ததும் அவற்றில் வித்தியாசம் கிடையாது”

இதிலிருந்து அவர் தேக உணர்வை முற்றிலும் கடந்து விட்டிருந்த ஒரு முழு யோகி என்பதை அறிய முடிகிறது.

கிருத்துவமிஷினரிகளை சேர்ந்த சிலர் பகவானிடம் “ கிருத்துவர்களாகிய நாங்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்கிறோம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்களை நிறுவி உதவுகிறோம். ஆனால் உங்களைப் போன்றோர் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களே (ஏன்) ? என்று வினவினர்.

பகவான் சொன்னது, ”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை
நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால்தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.

யார் மூலம் எவ்வகையான காரியங்கள் முடிக்கப்படவேண்டும் என்றுணர்ந்து அவர்களுக்கு அந்த ஆற்றலை அளிக்க வல்லவர்கள் யோகிகள். யோகி சூரத்குமார் “என் அய்யன் விரும்புவதால்” என்று அடிக்கடி சொன்னதன் மூலம் இறைவனின் கருவியாக தன்னை வைத்துக் கொண்டு செயலாற்றினார் என்பது புரிகிறது. ஞானானந்த கிரி சுவாமிகள் கபீர் என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப கபீரின் வரிகளை வாழ்ந்து காட்டியவர் யோகிராம் சூரத்குமார் அவர்கள்.

தான்செய்து நடப்பன இல்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான்செய்து நடப்பது போலக் காண்பீர், செய்விப்ப வனவன் யாரோ


ஒரு யோகிக்கு ”அய்யனின் ஆணை”யை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கலாம். ஆனால் சாமானியர்கள் நிலையென்ன?

அதற்கு விடையாக பகவான் யோகி ராம்சூரத்குமார் ஒரு அருமையான கதை சொல்லுவார்.

சமுத்திரக் கரையோரத்தில் இரு தித்திபப் பறவைகள் இருந்தன. முட்டையிட்டு இரை தேடச் சென்ற போது கடல் அலைகள் முட்டைகளை இழுத்துச் சென்று விட்டன. திரும்பி வந்த தித்திபப் பட்சிகளுக்கு ஒரே வருத்தம். கடலின் மீது ஒரே கோபம். கடலைப் பார்த்து முட்டைகளைத் திருப்பித் தா என்று கேட்டால் கடல் அலட்சியப்படுத்தி விட்டது. ”இந்தக் கடலை வற்றச் செய்து முட்டைகளை திரும்பப் பெறுவோம்” என்று தீர்மானித்த பறவைகள் தம் அலகுகளினால் நீரை கரையில் வாரி இறைத்தன. பல மணி நேரங்கள் முயற்சி நீடித்தது. அந்தப்பக்கம் வந்தப் பெரியவர் ” இது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவைகளின் குறிக்கோளைக் கேட்டவர் “இது நடக்கக் கூடிய காரியமா ?”என கேலி செய்தார். பறவைகளோ சற்றும் மனம் தளராமல் “உங்களுக்கு அதில் என்ன சந்தேகம்? கடல் நீரைக் கட்டாயம் வற்றச் செய்து முட்டைகளை மீட்போம்” என உறுதியுடன் கூறின. அவைகளின் உறுதியையும் விடாமுயற்சியையும் கண்டு அந்தப் பெரியவர் தன் தெய்வீகக் கரங்களை கடலில் விட்டு முட்டைகளை மீட்டுத் தந்தார்.

பகவான் இந்தக் கதையை மிகுந்த நெகிழ்வும் அன்பும் மிளிரக் கூறி “விடா முயற்சியும் தளரா மன உறுதியும் கொண்டு செய்யும் முயற்சிகள் இறையருளை ஈர்க்கும் சக்திஉடையவை என்று கூறுவார்.

விடாமுயற்சிக்குத் தேவை வைராக்கியம். அதனுடன் இலக்கை அடையவேண்டும் என்ற தணியாத தாகம், தீராப் பசி அல்லது வெறி அவசியம் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.

இதை நினைவுறுத்தும் கபீரின் ஈரடி ( பாரதி எதிரொலிக்கும் கபீர் )

ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து?

(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயப்படுதல்)

கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.


தளரா மனம் உள்ளவர்களின் முயற்சிக்கு இறைவன் கரங்களும் விரைந்து உதவிக்கு வரும் என்று நமக்கெல்லாம் நம்பிக்கை தரும் வகையில் தித்திப பறவைகளின் கதை மூலம் அவன் அருளை புரிய வைக்கிறார் இருபதாம் நூற்றாண்டு கபீரான ஸ்ரீ யோகிராம் சூரத்குமார்.

டிசம்பர் ஒன்றாம் தேதி யோகிராம் சூரத்குமார் அவர்களின் ஜன்ம ஜெயந்தி. அவருடைய அருள் வாசகர்கள் அனைவருக்கும் பூரணமாய் கிட்டட்டும்.

ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்.
கலிமலம் தீர்க்குமே, சதா செபிப்பீர் ராம நாமமே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்துத் தேயுமே
சென்மமு மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமா வென்றிரண் டெழுத்தினால்
(கம்பராமாயணம்)

---------------------------------------------------------

இருபதாம் நூற்றாண்டின் கபீரைப் பற்றி பல அரிய தகவல்களை மிகுந்த விருப்பத்துடன் வாசகர்கள் அனைவர்களுடனும் பகிர்ந்து கொண்ட திரு YRSK Balu அவர்களுக்கு மிக்க நன்றி.

அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

Sunday, November 14, 2010

சிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3

ஆசிரியர் அறிமுகம் :

”படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம், தெரிந்து கொள்ள முயல்கிறோம்!
ஆனால் கோடிக்கணக்கான வார்த்தைகள், நூற்றுக் கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம், அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி "எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது?" என்பதுதான்!வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி" என்கிறார் ஸ்ரீ அரவிந்தஅன்னை!


மேலே காணும் உபதேசத்தின் முதல் பகுதியை சென்ற பதிவில் கவிநயா அவர்கள் தமது இடுகையில் கூறிய பயனற்ற ஏட்டுக்கல்வி என்கிற மையக்கருத்தில் கண்டோம். மேற்கண்ட ஸ்ரீ அன்னையின் வாசகங்களையே தமது வலைப்பூவின் மையக்கருத்தாக வைத்திருக்கும் இந்த ஆசிரியரின் வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, Consent to be.... nothing. (நான் புரிந்து கொண்டது “willing to be a zero” -தானொரு பூஜ்யம்). இது மட்டுமல்லாமல் (சு)வாசிக்கப் போறேங்க என்கிற வலைப்பக்கத்தில் படித்ததில் பிடித்தது என்னும் வகையில் தம் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

தமது வலைப்பூவை ஒரு காலிப் பாத்திரமாக சித்தரித்துக் கொள்ளும் இவர் அப்பாத்திரத்தினின்று படைக்கும் அமுது பல்சுவையானது. ஆரம்பத்தில் அரவிந்தருக்கும் ஸ்ரீ அன்னைக்கும் மட்டுமேயான ஒருவலைப்பூ என நான் நினைத்திருந்த போது அது ஆன்மீகம், அரசியல், மனித வளம், கல்வி, சுய முன்னேற்றம், விளம்பரத்துறை என பல பரிமாணங்களில் மலர்ந்த போது ஆசிரியருடைய உற்சாகத்தைக் கண்டு வியக்கிறேன். அவருடைய வெளிப்படையான விமரிசனங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் என்னை அவரது வலைப்பூக்களின் தொடர் வாசகனாக வைத்திருக்கிறது.

இந்நேரம் நீங்களே ஊகித்து இருப்பீர்கள்!

வேறு யாருமல்ல, பெருமளவு பதிவர்களுக்கு நன்கு அறிமுகமான திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களே இந்த சிறப்பு இடுகையை அளிக்க முன்வந்துள்ள விருந்தினர்.

அவர் நம்அழைப்பை ஏற்று கபீரைக் குறித்து எழுதுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

கபீரைப் பற்றிய இந்த இடுகையிலும் ஸ்ரீ அன்னைக் குறிப்பிடும் “கணநேர அனுபவ”த்தின் அருமையையும் கபீரின் பெருநோக்கையும் சுட்டிக்காட்டுகிறார்.

இனி திரு கிருஷ்ணமூர்த்தி பேசுவார்.

----------------------------------------------------------------------

தெரியாதவனையும் தேடி வந்த கபீரின் கனிமொழிகள்

இறைவன் இருக்கின்றானா - மனிதன் கேட்கிறான்!
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே
வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் -அவன் வசப்படவில்லை!
நான் நாத்திகனானேன் அவன்
பயப்படவில்லை!

நீண்ட நாட்களுக்கு முன்னால் ’அவன் பித்தனா’ என்ற படத்தில் டி.எம் சௌந்தரராஜன்-சுசீலா இருவரும் இணைந்து பாடிய ஒரு அருமையான பாடல், இப்போது ஒரு கேள்வியாக எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வியை எனக்குள் எழுப்பியது எனக்கு கபீரன்பன் அவர்கள் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்!

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தில் நூறு இடுகைகளை நிறைவடைந்ததை ஒட்டி சில சிறப்புப் பதிவுகளை அதன் வாசக-பதிவர்களைக் கொண்டு வெளியிடும் தன் உத்தேசத்தைத் தெரிவித்து அதற்கு என்னிடமிருந்தும் ஒரு கட்டுரை வேண்டியிருந்தார்.

1965 களில் உணர்ச்சிகளைக் கிளறி விட்டு ஹிந்தி எதிர்ப்பு என்று நடந்த கண்மூடித் தனமான போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு, ஹிந்தியைப் படிப்பதைத் தவிர்த்தவன் நான். இன்றைக்கும் எனக்கிருக்கும் ஒரே வருத்தம், இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த மகான்களைப் பற்றி, குறிப்பாக மீராபாய், கபீர் தாசர், துளசிதாசர், சைதன்ய மஹாப்ரபு போன்ற வட இந்தியாவில் பிறந்த வாழ்ந்த மகான்களைப் பற்றிய நேரடியான பரிச்சயம், இந்த மொழி வெறுப்பினால் கைகூடாமல் போய்விட்டதே என்பது தான்!

அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம் என்று எதை எதையோ தொட்டு எழுதத் தெரிந்த, எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற என்னைப் போய், ஒரு மகானைப் பற்றி எழுது, அவரைப் பற்றி உனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள் என்று கேட்டால், எதுவும் தெரியாத நான் என்னவென்று எழுதுவேன்? எப்படி எழுதுவேன்?

ஒரு கவிஞனின் வார்த்தைகளில் வெளிப்படுகிற உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும் சரி, அதை மொழி பெயர்ப்பில் அப்படியே கொண்டு வருவது என்பது மிகவும் சிரமம். அதுவே ஒரு உன்னதமான மெய்ஞானத்தைப் போதிப்பதாக இருந்தால்.........!

முஹமது ஜலாலுதீன் ரூமியின் சூஃபி கவிதைகளை, நெருடல் எதுவுமில்லாமல் மொழிபெயர்த்திருந்த எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.

நீ


உயிராய்ப் பூமியில் தோன்றிய தருணமே

ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!

ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன் பயம் கொள்ள வேண்டும்?
மரணம் உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறுதுளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!


(ஜலாலுதீன் முகமது ரூமி !)

அனேகமாக எல்லா விஷயங்களையுமே தேடிப் படிப்பதால், ஒரு வாசகனாக, பல விஷயங்களையும் அனுபவித்து, அதில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளைப் பதிந்து கொண்ட வகையில் எழுதியவை இவை. மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததில்லை இது.

இவை இணையத்தில், தேடிப் படித்துக் கொண்டிருக்கும் தருணங்களில் ஆங்கிலத்தில் கிடைத்தவை. அவைகளை ஆர்வத்தோடு கவனித்து வருகிறேன். ரூமியின் கவிதை எவ்வளவு தூரம் சிவபுராணத்தின்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

என்கிற வரிகளோடு ஒத்துப் போகிறது என்பதை பார்க்கும் போது ஒன்று புரிகிறது. தேசங்கள், மொழிகள், காலங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், மெய்ஞானிகள் அத்தனை பேருக்கும் ஒரே ஆன்மீகத் தேடல் தான், ஒரே ஆன்மீக உண்மைதான் வெளிப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட தேடல் நமக்குள்ளும் நிகழவேண்டும் என்பதற்காகவே இந்தமாதிரி ஒப்புமை, சிந்தனைகளை இறைவன் நமக்களிக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டு, அந்தக் கண நேரத்து வெளிச்சக் கீற்றையும் அனுபவித்திருக்கிறேன். ஒரு சராசரி, ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக, இருப்பதில் இருந்து உயரவேண்டும் என்ற வேட்கையை இந்தமாதிரிக் கணநேர வெளிச்சக் கீற்றுக்கள் தான் தீர்மானிக்கின்றன இல்லையா?

கபீரின் ஈரடி கொண்ட பாடல்களை, தோஹே என்று சொல்கிறார்கள், தமிழில் மிக எளிமையாக மொழிபெயர்த்து வருகிற இந்த வலைத் தளத்தில் தான், ஹிந்தி மொழியை அறியாத நான், கபீர்தாசர் என்ற மகாத்மாவின் பாடல்களை ஜீவனுடன் தமிழிலேயே பரிச்சயம் செய்துகொள்ள ஆரம்பித்தேன்.

கருவூரார் சன்னதியில் என்றைக்கோ பார்த்த வாசகங்கள், "குரு அருளே திருவருள்!" என்பதாக நினைவுக்கு வர, மணிவாசகப் பெருமானது வார்த்தைகள் "அவனருளாலே அவன் தாள் வணங்கும்" நுட்பத்தைச் சொல்லாமல் சொல்லின. குருவருளாகக் கிடைத்தாலொழிய இறை அனுபவத்தைப் பேசுவதோ, வார்த்தைகளில் சொல்ல முனைவதோ கைகூடாது என்பதும் நன்றாகவே உறைத்த அந்தத் தருணம்....!

நன்றறியேன் தீதறியேன் நான்என்று நின்றவன்ஆர்
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே


என்று தாயுமானவர் பராபரக் கண்ணியில் கசிந்துருகியதை நினைத்துக் கொண்டு, என்னுடைய ஏலாமையைக் கபீரன்பனிடம் இன்னொரு மின்னஞ்சலில் தெரிவித்தபோது, கபீரின் பாடல் ஒன்றை அவரே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்.

ஜலாலுதீன் ரூமியின் பாடலுக்கும் மணிவாசகப் பெருமானுக்கும் நாம் காணும் ஒற்றுமையின் ஒளிக்கீற்று கபீரின் இந்தப் பாடலில் பட்டப் பகலென ஒளி விடுகிறது. வெறும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள் இறைக்காட்சியை கொடுக்க முடியாது என்பதை இருமதத்தினருக்கும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடவுள் ஹிந்துவமல்ல முஸ்லீமும் அல்ல. அவன் வசிப்பது தெற்கிலோ மேற்கிலோ அல்ல. இடைவிடாத சிந்தனையின் மூலம் தன்னுள்ளே உணரப்படும் ஒரு அரிய பேருணர்வே என்பதை இந்தப் பாடல் மூலம் கபீர் சொல்கிறார்.

अलहु एकु मसीति बसतु है अवरु मुलखु किसु केरा ॥
If the Lord Allah lives only in the mosque, then to whom does the rest of the world belong?
மசூதியில் மட்டுமே அல்லா வாழ்ந்தால் இவ்வுலகம் யாருக்குச் சொந்தம்?

हिन्दू मूरित नाम निवासी दुह मिह ततु न हेरा ॥१॥
According to the Hindus, the Lord's Name abides in the idol, but there is no truth in either of these claims.
மூர்த்தத்தில் இருப்பவன் இறைவன் எனும் ஹிந்துவும் சரியல்ல

अलह राम जीवउ तेरे नाई ॥
O Allah, O Raam, I live by Your Name.
அல்லா! ராமா!! உம் பெயரில் வாழ்பவன் நான்

तू किर िमहरामित साई ॥१॥

Please show mercy to me, O Master.

கருணை பொழிவாய் ஓ தலைவனே !

दखन देसि हरी का बासा पिछिम अलह मुकामा ॥
The God of the Hindus lives in the southern lands, and the God of the Muslims lives in the west.
தெற்கில் வசிப்பதோ ஹிந்துவின் கடவுள், இசுலாமியர்தம் கடவுளோ மேற்கே

कहतु कबीरु सुनहु नर दिल् मिह खोजि दिलै दिल खोजहु एही ठउर मुकामा ॥२॥
So search in your heart - look deep in to your heart of hearts: this is the home and the place where God lives.
இதயத்தில் தேடு, உள்ளே ஆழ்ந்து தேடின் அதுவே இறைவன் வாழும் இல்லம்

बर्हमन िगआस करिह चउबीसा काजी मह रमजाना ॥
The Brahmins observe twenty-four fasts during the year, and the Muslims fast during the month of Ramadaan.
அந்தணர் நோன்பு இருபத்திநாலு மணியாம், இசுலாமியருக்கோ அது ரமதான் மாதம்


गिआरह मास पास कै राखे एकै मािह िनधाना ॥३|
The Muslims set aside eleven months, and claim that the treasure is only in the one month. ||3||
பதினோரு மாதம் விட்டு எஞ்சிய ஒரு மாதமே இறைபுகழாம்

कहा उडीसे मजनु कीआ िकआ मसीति सिरु नांएं ॥
What is the use of bathing at Orissa? Why do the Muslims bow their heads in the mosque?
ஒரிஸ்ஸாவில் தீர்த்த நீராடல் எதற்கு ? மசூதியில் தலை வணங்குவதும் எதற்கு?

दिल मिह कपटु िनवाज गुजारै किआ हज काबै जांएं ॥४॥
If someone has deception in his heart, what good is it for him to utter
prayers? And what good is it for him to go on pilgrimage to Mecca? ||4||

கபடம் மண்டிய மனதில், பிரார்த்தனையின் பயனும் என்ன? ஹஜ் பயணமும் எதற்கு?

एते अउरत मरदा साजे ए सभ रूप तुम्हारे ॥
You fashioned all these men and women, Lord. All these are Your Forms.
தேவனே, உன் விருப்பில் வந்தனர் ஆடவரும் பெண்டிரும்; யாவரும் உன் வடிவே.

कबीरु पूंगरा राम अलह का सभ गुर पीर हमारे ॥५॥
Kabeer is the child of God, Allah, Raam. All the Gurus and prophets are mine. ||5||
இறைவனின் குழந்தை கபீரன், அல்லா, ராம், குரு யாவரும் என்னவரே

नरवै परहु एक की सरना ॥
Says Kabeer, listen, O men and women: seek the Sanctuary of the One.
கபீர் உரைப்பேன், தஞ்சம் அடைவீர் , மாந்தரே

केवल नामु जपहु रे पर्ानी तब ही निहचै तरना ॥६॥२॥
Chant the Naam, the Name of the Lord, O mortals, and you shall surely be carried across.

செபித்திடுவீர் அவன் நாமம், அக்கரை சேர்வதும் நிச்சயமே.


கிட்டத்தட்ட இதே கருத்து அமைந்த இன்னொரு கபீரின் பாடலை, திரு ஜீவா வெங்கட்ராமன் தனது அருள் என்ற வலைப்பதிவில் மூன்றே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழில் மொழி பெயர்த்துப் போட்டிருப்பதையும் காணலாம்.

”என்னை எங்கே தேடுகிறாய்” என்று இறைவன் கேட்பது போல் அமைந்த அந்த பாடலின் ஒலி-ஒளி வடிவம் யூட்யூப் தளத்திலிருந்து இங்கே:


[ஸ்ரீ அன்னை சொன்ன ”..வெளியே தேடுவதை விட,தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி" என்ற கருத்தையே இந்தப் பாடலில் கபீரும் வலியுறுத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது - கபீரன்பன் ]

கபீர் தாசர் தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, தன்னுடைய மறைவுக்குப் பின்னால் கூட ஒரு குறுகிய மத அடையாளம் தன்மேல் சுமத்துவதை விரும்பியதில்லை என்பதுமே ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லப்படுகிறது.

இருக்கும்போதும் ஹிந்து முஸ்லிம்
சர்ச்சை

இறந்தபோதும் கபீரைத் தொடர்ந்து வந்தது.
அவரவர் மத வழக்கப்படிதான்
அடக்கமோ எரிப்பதோ என்று
இருதரப்பும் கோபத்துடன் குரலெழுப்பிக்
கொண்டிருந்த தருணம்

கபீர் எழுந்தார்! இருதரப்புக்கும் சொன்னார்!
"என் சடலத்தைத் தூக்குங்கள்!"
சீடரும் அவ்வாறே தூக்கினர்!

சடலம் இருந்த இடம்
முழுக்க மலர்கள்! மணம் வீசும் மலர்கள்!

இருகூறாய்ப் பிரித்துக் கொண்டு இருதரப்பும்
இருவிதமாய் கபீரை
அடக்கம் செய்தனர் என்றே

செவிவழிச் செய்தியைக் கதையொன்று சொல்லும்!

மேன்மக்கள் அமைதியை,
சமத்துவத்தைச் சுமந்து வந்தபோதிலும்
கீழ்மையில் இழிந்த மாந்தர்
அவரை வைத்து
அடித்துக் கொள்வதற்கான

காரணத்தைத் தான் தேடி நிற்பார்!
பூரணமாய் நின்ற பொருள்

கண்ணெதிரே தோன்றிடினும்
கிஞ்சித்தும் அதைக் காணார்.

ஹிந்துவென்றும் முசல்மான் என்றும்
கபீர் தன்னைச் சொன்னதில்லை!

ஹிந்துதானென்று ஒருதரப்பு, இல்லை இல்லை
சூஃ பி தான் என்றொரு தரப்பும்
மாறி மாறி வம்புதான் செய்திருக்கக்
கபீரின் கனிமொழியைக்

கண்டுணரக் காலம் கனிந்து வரவேணும்!
மொழிகடந்த மெய்ஞானம்

கபீரின் கனிமொழிகள் தளத்தில்
தமிழில் பெருகிவர
உள்வாங்கும் திறம் வேண்டும்!
குருவருள் குறையின்றி இப்பணியை நடத்தட்டும்!

கபீரின் கனிமொழியைத்
தமிழில் தந்ததற்கு நன்றியுடன் வணங்குகிறோம்!


--------------------------------------

வாரம் மூன்று நான்கு இடுகைகளை பலவிதமான தலைப்புகளில் இடும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது கட்டுரையுடன் அனுப்பி வைத்த குறிப்பில்

“....இப்படி ஒரு சாக்கை வைத்தாவது, கபீரின் மொழிகளைத் தொடர்ந்து சிந்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறதே என்பதில் மிகவும் சந்தோஷம்”
என்று எழுதியிருந்தார்.

சந்தோஷம் அவரது மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரதும் ஆகும் என்று கூறி நமக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி. அவரது ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எழுத்துக்கள் அதிக அளவில் வாசகர்களை அடையட்டும் என்று வாழ்த்தி நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

Tuesday, November 02, 2010

சிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2

ஆசிரியர் அறிமுகம் :

கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து விடும்.

கவிதாயினி. அதனால் கவி அவர் பெயரில் உண்டு. அபிநயமும் வெகுவாகப் பிடித்திருப்பதால் அதையும் 'நய'மாகத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு விட்டார்.

கவிநயா என்ற பெயரில் அழகிய கவிதைகளையும், சிறுகதைகளையும், எண்ண ஓட்டங்களையும் தனது நினைவின் விளிம்பில் என்கிற வலைப்பூவில் பகிர்ந்து வரும் இவரது வாசகர் வட்டம் பெரியது. ஒரு காற்றுக்குமிழ் பற்றிய அவருடைய வரிகள் அவருடைய கவி உள்ளத்தைப் படம் பிடிக்கிறது.

அதே சமயம் குழந்தைகளுக்கானக் கவிதைகள் கூட எழுத வல்லவர்தான் என்பதை அவருடைய ஆனைப்பாரு பட்டாம்பூச்சி போன்ற கவிதைகளைப் படித்தாலேத் தெரியும். இரண்டு பாடல்களிலிருந்தும் சில மாதிரி ’நம்பிக்கைத் தரும்’ வரிகள் இங்கே :
.....
ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!
--------------
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!

குழந்தை மனம் உடையவர்களால்தான் குழந்தைகளுக்காகப் பாடமுடியும் என்று எப்போதோ படித்த நினைவு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"

இங்கே கவிநயா அவர்கள் நம் அழைப்பை ஏற்று கட்டுரை ஒன்றை வழங்கி இருப்பது பெருமகிழ்வு தருகிறது. அவருக்கு வணக்கங்கள்.

இனி கவிநயா அவர்களின் எழுத்து வண்ணம்

கற்றதனால் ஆய பயன்

ஒரு சாது இருந்தாராம். பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம். அதாவது, அவரால் தண்ணீரின் மேல் அநாயாசமாக நடக்க முடியுமாம். அதைப் பற்றி அவருக்கு ஏகப் பெருமையாம்.
ஒரு நாள் இவர் கங்கைக் கரையில் காத்துக் கொண்டிருந்த இன்னொரு சாதுவைப் பார்த்தாராம். “என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அவரும், “கரையைக் கடக்க வேண்டும். படகுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.

உடனே நம் சாது, “ப்பூ… இவ்வளவுதானா? நானாக இருந்தால் நடந்தே கடந்திருப்பேனே” என்றாராம், மகாப் பெருமையுடன்.

“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட அந்த இன்னொரு சாது, “இந்த சித்தியைப் பெற உங்களுக்கு எத்தனை காலம் ஆயிற்று?” என்று கேட்டாராம்.

“சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று” என்று பதிலிறுத்தாராம் அவர்.

“இதனால் என்ன பயன் ஏற்பட்டது? உங்களால் இறைவனை அறிய முடிந்ததா? காலணா மிச்சம் பண்ணுவதற்காக, பாதி வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே.” என்று சொல்லி விட்டுப் போனாராம் மற்றவர்.

எல்லோருக்கும் தெரிந்த கதைதான். விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும், இருந்தாலும் கதை சொல்ல வரும் கருத்தை மட்டுமே மனதில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இறைவனை அறிவதே பிறவியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய உதவாத எதுவும் பயனற்றதே.

அனைத்து மகான்களுமே வலியுறுத்தும் கருத்து, இது.

ஸ்ரீராமகிருஷ்ணரும் அடிக்கடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் சாப்பிடவெனப் போகிறோம். அங்கே போனதும் வந்த வேலையைக் கவனிக்காமல், அந்தத் தோப்பில் எத்தனை மரம், மரத்தில் எத்தனை கிளை, கிளையில் எத்தனை இலை, மரத்தில் எத்தனை பழம், இப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தோப்பின் சிறப்பு தெரியும்; ஆனால் அதனால் மாம்பழத்தின் ருசி எப்படித் தெரியும் என்பார்.

அதைப் போலத்தான் நாமும் பல விஷயங்களையும், இறைவனைப் பற்றியுமே கூட, அனுபவித்து அறிய முயலாமல், கற்று அறிவதில் மட்டுமே திருப்தி அடைந்து விடுகிறோம்.

நெய்யையே பார்த்திராத ஒருவருக்கு நெய்யின் ருசி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்க முடியும்? அதைப் பற்றி புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் உடனே தெரிந்து விடுகிறது... இதுவும் குருதேவர் சொல்வதுதான்.

அதைப் போலத்தான் இறைவனும். அவன் படித்து அறியக் கூடியவன் அல்ல; உணர்ந்து அடைய வேண்டியவன் – இதுவும் அவனை அனுபவித்து அறிந்தவர்கள் கூறுவதுதான்.

வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிறவையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆனால் அவை எதற்காக ஏற்படுத்தப் பட்டனவோ, அதனை அடைய அந்த அறிவு பயன்படா விட்டால், அத்தனையும் கற்பதன் பயன்தான் என்ன?
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தானே சொல்கிறார்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அலுவலக வேலையாக நம்மை வெளியூர் அனுப்புகிறார்கள். வந்த வேலையை விட்டுவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் (நம்மூர் அரசாங்க உத்தியோகத்தைச் சொல்லவில்லை!). ஆனால்

நாம் பிறவி எடுத்ததன் காரணத்தை கவனிக்கா விட்டால் இந்த வேலையை விட்டு எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது! வந்த வேலையைக் கவனிக்கும் வரை திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டிதான் வரும்! ஜீரா ரொம்ப ருசி என்பதற்காக அதை மட்டும் சாப்பிட்டு விட்டு குலோப் ஜாமூனை சாப்பிடா விட்டால் எப்படி?!

அது சரி, குலோப் ஜாமூனை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லையே என்கிறீர்களா? அதற்கும் ஸ்ரீராமகிருஷ்ணர், கபீர், போன்ற அனைத்து மகான்களும் ஒரு சுலபமான வழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதுவே நாமஜபம்.

கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.

இதைப் பற்றி கபீர் சொன்ன ஈரடிகள், கபீரன்பரின் தமிழாக்கத்தில், இதோ:

செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே


அதனால், ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காமல், வந்த வேலையைக் கவனிப்போம்.

கவிநயான்னு பேர் வச்சுக்கிட்டு கவிதை சொல்லலைன்னா எப்படி, அப்படின்னு விருந்துக்கு அழைச்சவர் சொன்னதால…

இப்போ சொன்னதெல்லாம் சேர்த்து வச்சு…

இதோ ஒரு கவுஜ:


உலகெலாம் சுற்றி வந்து
உன்னிப்பாய்க் கற்பார் பலநூல்;
மொழியெலாம் கற்று வந்து
மழையெனப் பொழிவார் அறிவை;
கலையெலாம் கற்று வந்து
உலகெலாம் பரப்புவார் புகழை.

சாதனை பலசெய் தாலும்
பழவினை அழிவ தில்லை;
எத்தனை கற்றறிந் தாலும்
இறைவனேட் டறிவினி லில்லை.

உள்ளுக்குள் உறையும் அவனை
உணர்வினில் அறிய வேண்டின்
கள்ளெனச் சுவைக்கும் நாமம்
உள்ளத்தில் ஊறிட வேண்டும்.

இப்பொருள் அப்பொரு ளெல்லாம்
பொய்மையின் வடிவே ஆகும்;
மெய்ப்பொருள் அறிவது ஒன்றே
மனிதர்க்கு மெய்யறி வாகும்!

(கபீர் இரண்டு அடிகளில் சொன்னதைச் சொல்ல, நமக்கு இத்தனை அடி வேண்டியிருக்கு!)

கபீரன்பர் அவர்கள் அளித்த வாய்ப்பிற்கு நன்றிகளுடன்…

அன்புடன்,

கவிநயா

----------------------------------------
மாம்பழத்தில் ஆரம்பித்து நெய், குலாப்ஜாமூன், ஜீரா வரை தித்திப்புச் சுவைகளை அள்ளித் தெளித்து விட்ட கவிநயா அவர்கள் கடைசியில் மனிதனுக்கு வேண்டிய 'கள்' ளையும் விட்டுவைக்கவில்லை :)))

இடுகை முழுவதும் தித்திக்கக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது.

இந்த வாரம் தீபாவளி !

அவருக்கும் வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.


அன்னை அருளில் திளைக்கும் கவிநயா அவர்களின் எழுத்து மேன்மேலும் அருட்சுவையை கவிதையாகவும் கட்டுரையாகவும் பரப்பட்டும் என்று வேண்டி வாழ்த்துவோம்.