Saturday, January 22, 2011

அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்

யாரை எங்கே
வைப்பது என்று
யாருக்கும் தெரியலே
அண்டங் காக்கைக்கும்
குயில்களுக்கும்
பேதம் புரியலே!
பேதம் புரியலே !!

பழைய திரைப்பாடலின் ஆரம்ப வரிகள் இது. ஆள் மாறாட்டத்தால் சிறையில் சிக்கி கதாநாயகன் பாடுவது போல் கதையில் சொல்லப்பட்டாலும் இந்த முரண்பாட்டை வாழ்க்கையிலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

அருமையான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. குடத்திலிட்ட விளக்கு போல அவர்கள் யாராலும் அறியப்படாமல் மறைந்து போகிறார்கள். மிக சாதாரணமானவர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மேலே முன்னேற போட்டிகள் அதிகம். திறமையை விட சாமர்த்தியம் தேவை. அதுவாவது பரவாயில்லை. ஏதோ அதிர்ஷ்டம் இல்லை, அவர்கள் கேட்டுக் கொண்டு வந்தது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதைவிட வருத்தமளிக்கும் காட்சிகளும் அவனுடைய நாடகத்தில் உண்டு.

ஒருவருடைய தகுதிக்கு மதிப்பளிக்காது தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மேலமர்ந்து ஆட்டிப் படைப்பதும் இன்று சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. பலமாதங்கள்- ஏன் வருடங்கள்- கடினமான தேர்வுகள் எழுதி நாட்டு நிர்வாகத்தில் பயிற்சி பெற்று வரும் நேர்மையான உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளூர் எம். எல். ஏக்களின் அல்லது அரசியல் புள்ளிகளின் ஏளனப் பேச்சுகளையும் மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலருக்கு மன அழுத்தம் அதிகமாகி பல்விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். அம்மாதிரி சமயங்களில் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியின் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும். பலர் தம் பொறுப்பைத் துறந்தும் சென்று விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

சரி, அரசாங்கம்தான் அப்படி, தனியார் நிறுவனங்களில் எப்படி? அங்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. நிறுவனத்தை கட்டி வளர்த்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறும்போது புதுமைகளை புகுத்துவோம் என்ற பெயரில் திறமையான விசுவாசம் மிக்க நிர்வாகிகளெல்லாம் புறக்கணிப்படுகின்றனர். அவர்களது அனுபவத்தை அணுகுமுறையை ''Old fashioned" என்று கேலி பேசி புதிதாக வெளிநாட்டு பட்டங்களுடன் வந்திறங்கும் இளைஞர்களுக்கு அதுவரை கேட்டிராத சம்பளங்களை கொடுத்து சாதனைகளை படைக்க முற்படுகின்றனர். அந்த ’பழமை’வாதிகளின் நிலையும் மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது

போகட்டும், கலையுலகம், எழுத்துலகம் போன்றவற்றையாவது இந்த முரண்பாடு விட்டு வைத்திருக்கிறதா ? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். எல்லாத் துறையிலும் உதாரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இறைவனுக்கே குயிலுக்கும் காக்கைக்கும் பேதம் புரியவில்லையா !!

சிவபோகசாரமோ அப்படி ஒரு கூற்றை ஒப்புக் கொள்வதில்லை

இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை
அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்
பின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்
.

ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் கருத்துபடி எல்லாமே முன் கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. . அப்படியானால் மனிதர்களுடைய ’நேர்மை வெல்லும்’ ’உழைப்பு உயர்வு தரும்’ என்ற கூற்றுகளெல்லாம் பொய்யாக்குவது போல் தெய்வம் ஏன் நடந்து கொள்கிறது ?

தெய்வமா நடந்து கொள்கிறது, இது நமக்கு நாமே முடிந்து கொண்ட சிக்கல் என்று கபீர்தாஸர் சொல்கிறார்

अपने उरझै उरुझिया, दीखै सब संसार ।
अपने सुरझै सुरझिया, यह गुरु ज्ञान विचार ॥


தானே போட்ட முடிச்சு, தன்னைப் பிணைக்குது பூமியிலே
தானே பிரிக்கவும் முடியும்,குருமொழி ஞானம் பற்றிடினே


மாற்று:
சிக்கலை முடிந்தவ ரவரே,சம்சார சிக்கலில் தவிப்பவரே
சிக்கலை அவிழ்பவ ரவரே,ஐயனுரை கேட்டு உய்பவரே


ஐயன் உரை அல்லது குருமொழி என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் அவ்வழியில் நின்றால் வாழ்க்கையின் சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும் என்று கபீர்தாஸரின் தீர்ப்பு. இதுவும் மிகப் பொதுப்படையாக அல்லவோ இருக்கிறது! சம்சார சிக்கல்கள் யாவற்றிற்கும் நாமே காரணம் என்னும் வகையில் தானே இவரும் சொல்கிறார். குருமொழி என்று எதைக் கொள்வது?

எல்லா ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஆன்மீக வழி சொல்வது :
‘வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.

ஆனால் நாம் மேலே காணும் முரண்பாடு பல நல்லவர்களின் மனதை வாட்டுவதாகவே இருக்கிறதே. கடவுளை நம்பினாலும் ஏதும் தீர்வு தெரிவது இல்லையே. இதுதான் சிக்கல். இதை பிரிப்பது எப்படி ? நான் கண்ட இரண்டு அனுபவங்களால் விடை கிடைக்கிறதா பார்ப்போம்.

ஒரு புதிய இடத்தில் தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒவ்வொரு துறைக்கும் அதற்கான பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் கட்டுமானப் பணி மேற்பார்வை பார்த்தவர் ஒரு பன்முக வித்தகர். தேவையென்றால் எந்திர பராமரிப்பு, கணக்கெழுதுவது, எங்கே எது கிடைக்கும் என்று தெரிந்து தேவைப்பட்டவற்றை உடனுக்குடன் வரவழைப்பது கொடுப்பது என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதிகம் படித்திருக்காவிட்டாலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

இந்நிலையில் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் திடீரென்று வேறு வேலை கிடைத்து சென்று விட்டார். சற்றே தனது சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் தன்னுடைய பிற பொறுப்புகளுக்கு பங்கம் இல்லாதவாறு தானே அதனையும் கவனித்துக் கொள்வதாக பலமுறை அவ்வித்தகர் கூறி வந்தார். எனக்கும், இவருக்கு இருநூற்று ஐம்பது ரூபாய்கள் அதிகம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணக்கரின் சம்பளத்தில் ரூ 750 மிச்சம் ஆகுமே என்று தோன்றியது. எங்கள் இயக்குனரின் அனுமதி பெற மூன்று முறை முயற்சித்தும் அவர் அதை ஆதரிக்கவில்லை.’செலவு பற்றி கவலை வேண்டாம் வேறு ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்றே பதில் வந்தது. இதனால் நம் வித்தகருக்கு பெரும் மனவருத்தம், கோபம் எல்லாம் வந்தது. நிர்வாகம் சரியான முறையில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் தன் திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என்றும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு தனிமையில் இயக்குனரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்னது "We should not lead a good person in to his area of weakness "

ஆம். வித்தகர் பண விஷயத்தில் சற்று பலவீனமானவர்தாம். அவ்வப்போது நிர்வாகப் பணத்தை பல தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்வாகக் காரணம் காட்டி எடுத்து பயன்படுத்துவது, வாய்ப்பு இருந்தால் பேருந்தில் சென்று ஆட்டோவில் சென்றதாக கணக்கெழுதுவது இத்யாதி பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். ஆனால் என் எண்ணப்படி நல்லக் கண்காணிப்பில் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும் என்று நம்பினேன். மாறாக இயக்குனரோ அவர் மேல் இருந்த அன்பினால் அவர் தவறிழைப்பதற்கான வழியில் கூட அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. அதன் மூலம் எனக்கும் வித்தகருக்கும் இடையே பின்னால் எழுந்திருக்ககூடிய பலப் பிரச்சனைகளையும் தடுத்துவிட்டார். அதன் காரணமாக சம்பந்தப்பட்டவர் அதிருப்தி அடைந்திருப்பினும் இயக்குனர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. குழந்தை அழுது அடம் பிடித்தாலும் அதன் அன்னை ஒவ்வாதவற்றை கொடுக்க மறுப்பது குழந்தை மேல் உள்ள அன்பினால்தானே.

பல வருடங்கள் கழிந்தன. இப்போது வேறொரு நிறுவனம், வேறொரு தலைமை. நானும் எங்கள் நிதித்துறை செயலரும் சேர்மனோடு பல திட்டங்கள் பற்றி பேசி முடித்த பின், விற்பனைத்துறைப் பற்றிய சில புள்ளி விவரங்களை செயலர் அவரிடம் சமர்ப்பித்தார். பேச்சு வாக்கில் அவர்களின் செயல்முறை பற்றி நிதித்துறையின் அதிருப்தியை தெரிவித்தார். பல கோடிகள் புழங்கும் துறையில் இன்னும் சிறப்பான தணிக்கை முறையின் அவசியம் பற்றியும் கட்டுபாடுகள் அனுசரிக்க வேண்டிய அவசியத்தையும் அவரிடம் பரிந்துரைத்தார்.

புகைபிடித்தபடி யே எவ்வித சலனமும் இன்றி கேட்டுக் கொண்டிருந்த சேர்மன் ஓரிரு நிமிடங்கள் மவுனம் காத்தார். பின்னர் சிகரெட்டின் சாம்பலை ஆஷ்ட்ரேயுள் விரலால் தட்டியபடியே அமைதியாக சொன்னதன் சாராம்சம். “ They have submitted a budget and promised certain results within a time frame..... I don't like to restrain anyone nor police around.... May be they are experimenting with certain issues.... If we frequently question their decisions they may lose interest and later either blame you or me for not delivering the results. Any developmental activity needs certain degree of freedom.... It has some cost, I fully understand"

பேச்சினிடையே அவரது அணுகுமுறையை இன்னொரு சொற்றொடரால் குறிப்பிட்டார். 'Give them a long rope, they will hang themselves"

அவர் முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு தேவைப்படும் அதிகாரங்களும் முடிவெடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். முறைகேடுகளால் ஒருவேளை நஷ்டங்கள் வரினும் அதனால் நிர்வாகத்திற்கோ பிற பணியாளர்களுக்கோ பாதிப்பு இருக்காது என்பதையும் சொல்லாமல் சொல்லினார்.

கடவுளின் அணுகு முறையும் இதுதானோ ?

இரு நிர்வாகத் தலைமையிடமும் கடவுளின் இருவேறு நிலைபாடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது தனக்கு வேண்டியவர்கள் வழி தவறுவதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல் அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.

இரண்டாவது, சிலரை தகுதியற்றவர்கள் நாம் கருதினாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறான். அவர்களின் வழிமுறைகளின் நன்மை தீமைகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவன் பாதிக்கப்படப் போவதில்லை. Give a long rope என்பது போல விட்டுப் பிடிக்கிறான். அதிகாரம் வந்ததும் தலைகால் புரியாது ஆட்டம் போடும் அறிவிலிகளை யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் அவனும் வேடிக்கையை ரசிக்கிறான். அவனுக்குத் தெரியும் கடைசியில் இவர்களும் தன்னிடமே ஏதோ ஒரு பிறவியில் சரணடைய வேண்டியவர்கள் என்று.

ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்போது நமக்களிக்கப்பட்ட திறமைகளுக்கு வடிகால் எது? இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா? என் திறமைகளால் எனக்கே நன்மை இல்லாவிட்டால் அவை ஏன் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

சித்த புருஷர்களின் திறமை, அஷ்டமா சித்திகளை தம் வசப்படுத்தி இருப்பது. அதை மாயையின் சக்தி, அவற்றை உலக நன்மைக்கல்லாமல் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாகாது என்ற கட்டுபாடுடன் ஞானிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அது போலவே நம் ’திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.

திறமை என்பது ஒருவகையில் நம்முடைய மனதினுடைய ஆற்றல்தான். ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.

மன ஆற்றல் பற்றி ரமணரின் கண்ணோட்டத்தை ரமணாசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம்.
கோசாலைக்கு போகும் வழியில் கெஸ்ட் ரூம் வாசலில் மிக அழகாக மயில் கோலம் ஒன்று போடப்பட்டிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு அவ்வழியாக பகவான் போகும் போது ஒரு மயில் அந்த கோலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனெதிரே பொரி கடலை டப்பாவை வைத்தாலும் அதை சாப்பிடாமல் கோலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சலனமற்ற அதன் பார்வையை கண்ட பகவான்” என்னடா! நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா?” என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடனே டொக் டொக்கென்று டப்பாவிலுள்ள கடலையைக் கொத்தியது.

அந்த கோலத்தைப் பார்த்த பகவான் “இவர்களுக்கெல்லாம் ஆத்ம வித்தை மிகச்சுலபம். ஏனென்றால் இவர்களின் புத்தி நுட்பம் அவ்வளவு சூட்சுமமாயிருக்கிறது. ஆனால் அதற்கு போக மாட்டாளே” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது

எவ்வளவு நிஜம். பெரும்பாலும் நமக்குள்ள திறமைகளைப் பற்றி நாமே பெரிதாக நினைத்துக் கொள்வதால் ரமணர் சொன்னது போல் அதிலேயே மேன்மேலும் புத்தி போகும். அது வெளிமுகமான போக்கு. இதுவே நாம் இவ்வுலகில் பின்னிக் கொள்ளும் சிக்கல். லௌகீக லாபங்களைப் பற்றியது. நம் கணிப்புகள் எவ்வளவு சரியாக இருப்பினும், நம் பார்வையில் நியாயமாக இருப்பினும் இறைவனுக்கு அதன் எல்லை தெரியும். அது எப்போதும் நம் நலன் கருதியே இருக்கும். பகவான் ரமணர் சொன்னது போல் மனதை உள்முகமாக்கினால் அந்த உண்மை புரியும். இதையும் ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிகர் விளக்குகிறார்

அவரவருக்(கு) உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்று மானால் – அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.

(நாடுவது என் நெஞ்சமே = நினைப்பதும் ஏன் நெஞ்சமே)

நமக்கென்று உலகத்தில் சாதிக்க வேண்டியது ஒன்று இல்லாத பொழுது யார் நல்லவர், யார் பொல்லாதவர்? அவன்தானே யாவற்றையும் முன்னின்று நடத்துகிறான் என்றிருப்பது உள்முகம் ஆகும்.

நமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்.
அரவிந்தருக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அவன் திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன் பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது......
.....நீ அதிலே தொடர்வது என் சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்

அதை அரவிந்தர் புரிந்து கொண்டதால் சிக்கலில் இருந்து வெளிவந்தார். ஆனால் நமக்கு அந்த பக்குவம் இல்லாத போது சுய பச்சாதாபம், கோபம், பொறாமை போன்றவற்றால் சிக்கலை மேன்மேலும் சிக்காகிக் கொள்கிறோம். தீர்வு கிடைப்பதில்லை. இதுவே கரண மயக்கம்.

எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்
பொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க
வல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது
சொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.


கரண மயக்கத்தால் ஏற்படும் பொல்லாத சங்கற்பங்கள் எதுவும் நமக்கான வழியல்ல. இதுவே குருமொழி, செம்மொழி, சிக்கல் களைந்திடும் நல்வழி. கபீர்தாஸ் சொல்வது போல் சிக்கலை பிரிக்க வேண்டுமானால் குருவின் வழி புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது.

--------------------------------

அறிவிப்பு : சிறப்பு இடுககைகளை பல விருந்தினர்கள் நேரமின்மை காரணமாக அனுப்ப இயலாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

அவர்கள் மட்டுமல்லாது இதர பதிவர்களும் வாசகர்களும் எப்போது வேண்டுமானாலும் கபீரின் கருத்துகளை மையமாக வைத்து கட்டுரைகளை அனுப்பி யாவருடனும் பகிர்ந்து மகிழலாம். This is an open invitation.

வலைப்பூ ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

Saturday, January 08, 2011

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு-8

முதலில் புத்தாண்டு வாழ்த்து, அதுவும் முக்கிய விருந்தினரிடமிருந்து :)


(click the figure for larger view)

{என்ன இது? கபீர் வலைப்பூவிலே வந்து தன்னுடைய வலைப்பூவுக்கு ஆள் சேர்க்கிறாரே என்று யாரும் அவரைத் தப்பாக நினைக்க வேண்டாம். அது அவருடைய நகைச்சுவை உணர்வை சுட்டிக் காட்ட அவருடைய 2007 வருடத்து பதிவிற்கு நான் கொடுத்த புதுப் பொலிவு..ஹி ஹி அவ்வளவுதான். }

யானைக்குட்டியை கண்டதுமே விருந்தினர் யாரென்று தெரிந்திருக்க வேண்டுமே!
ஆயிரம் இடுகைகள் தாண்டிய பதிவர் திலகம், இதிகாசச் செம்மல், தாமிரபரணி கண்டார், திருக்கையிலாயம் கொண்டார், சிதம்பரம் வென்றார், அண்ணாமலையை ஆட்கொண்டார், இராம காதையுடனும் கண்ணன் கதையுடனும் இணைய உலகின் ஈடில்லாத் தானைத் தலைவி வருகிறார்,.... வருகிறார் .....பராக்.... பராக்
என்று கட்டியம் கூறி வரவேற்கப்பட வேண்டியவர் நம் தலைவி. அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வது கை விளக்கால் சூரியனை காட்ட முயல்வது போன்ற நகைப்பிற்கான விஷயம்.

ஆனால் சூரியனுக்கு நீராஜனம் காட்டினால் அது ஆசியை வேண்டுவது போலாகி விடுமல்லவா !

அதற்கான வாய்ப்பை நல்கிய இன்றைய சிறப்பு விருந்தினரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார வரவேற்கிறேன்.

இவருடைய பதிவு உலகப் பயணத்தைப்பற்றி தமது ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியில் கூறியிருக்கிறார், படியுங்கள்.

அவர் இடுகைகளை பிரசுரிக்கும் வேகம் கண்டு எப்போதும் பிரமிக்கிறேன்! தொடர்ந்து எழுதும் பழக்கம் இருக்கும் ஒரு பதிவர் வாரம் ஒரு இடுகை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பானவர் வாரம் இரண்டு இடுவர். வியாபார நோக்கத்தோடு எழுதும் ஒரு சிலர் தினம் ஒன்று கூட எழுதலாம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாரத்திற்கு ஒன்பது இடுகைகளை இடும் தலைவியின் எனர்ஜியை என்ன சொல்வது ? வாரத்திற்கு ஒன்பது இடுகைகள் !!!!!! நான் சொல்லவில்லை. கூகிள் ரீடர் சொல்கிறது. இது எண்ணங்கள் வலைப்பூவில்மட்டும். இன்னமும் மூன்று நான்கு வலைப்பூக்கள் , நான்கோ ஐந்தோ குழுமங்கள்; போதாதற்கு பஸ் (BUZZ) ட்ரெயின் என்று எங்கெங்கே பார்த்தாலும் கீதா மேடம் தான். அவர்கள் எழுதுவதை படிக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் முழிக்கிறோமே இவர் எப்படி இப்படி எழுதித் தள்ளுகிறார்? அவர் தொடாத துறையே கிடையாது எனலாம். ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !

எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன் செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.

இவர் எத்தனை வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்ற கணக்கு சரியாகத் தெரியாது. எனக்கு கிடைத்த வரையில் இவரது வலைப்பூக்களும் இடுகை எண்ணிக்கைகளும் வருமாறு.

எண்ணங்கள் (1125 +) கண்ணனுக்காக ( 36) சாப்பிடலாம் வாங்க (27) பேசும் பொற்சித்திரமே (38) என் பயணங்களில் (128 ) ஆன்மீகப்பயணம் (302) (பக்தி) ராம ஆஞ்சனேய பிரபாவங்கள் .....etc

நம் நாட்டின் புராண இதிகாசங்களையும் அதிகம் அறியப்படாத வரலாறுகளையும் ஆழமாகப் படித்து அவற்றை மெகா சீரியல்கள் போலவே அலுப்பில்லாமல் எழுதிக் குவிக்கிறார் கீதா சாம்பசிவம் அவர்கள். அதற்கு அவரே கொடுத்த விளக்கம் :
இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறிய வேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

ஜீவி ஐயாவைப் போலவே இவரும் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதை அவருடைய பல பதிவுகள் மூலம் அறியலாம். அதை, சிறு வயதில் அவர் படித்து மனதில் நின்று விட்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்:
....அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது

‘’ மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன். ’’

அந்த அன்பின் அதிசயம் அவரை மிக உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றையக் கட்டுரைக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பும் ‘அன்பெனும் அக்ஷயப் பாத்திரம்”. சென்ற இடுகையில் ஒளியேற்றிய அன்பு இந்த இடுகையில் அட்சயப்பாத்திரமாய் யாவர் மனதையும் நிறைக்க வருகிறது. கீதா சாம்பசிவம் அவர்களை வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.

இனி விருந்தினர் படைப்பு .....


அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான்.


இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது??

நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.

நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே


இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.


இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.

மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே


மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது.

ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல.

உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும்.

அன்பானது கொடுக்கும் பொருள்.

அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும்.

ஊற்றுக் கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனைக் குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.

அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.

ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.

நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.


எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"


என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப் பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.

இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது.

எல்லாரையுமெல்லலவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக் குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்கு மூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன்.

அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''


[நன்றி : ’அறிவுக்கனலே அருட்புனலே’ ரா. கணபதி, இராமகிருஷ்ணாமடம், சென்னை; பக்கங்கள் 698-700]


அன்புக் கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.

அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும்.


பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும்.

அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

------------------------------------------------------------------------
நன்றி நவிலல்

கீதா மேடம், இறைவன் என்றென்றும் எழுதுவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளட்டும். தங்களுடைய "எண்ணங்கள்" இன்று போல் என்றும் அட்சயப் பாத்திரமாய் நல்ல விஷயங்களை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கட்டும். சூரியனின் பல்வேறு நிலைகளில் வானம் பல வேறு வர்ணங்களை அள்ளித் தெளித்து நம் மனங்களை கொள்ளை கொள்வது போல் உங்களது எண்ணங்களும் பல ரசங்களையும் அள்ளித் தெளிக்கட்டும்.

Madam, what is the secret of your energy ? :))

என்னைப் போன்றவர்களுக்கு -இன்று இல்லை நாளை-ஏதாவது சந்தேகம் என்றால் ‘கீதா மேடம் கண்டிப்பாக இதை பற்றி எழுதியிருப்பார்கள், பார்ப்போம்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ”எண்ணங்களை” தேடி வருவோம். உங்கள் சேவை வாசகர்க்கு தேவை ! [ நானும் தொண்டன் தானே :))]

”இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது ரொம்ப பிசி , நேரமே கிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி....

என்றெல்லாம் 'பிசி' என்பவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படித்திருக்கிறோம். சொல்லிக் கொள்ளாமலே பிசியாக எப்போதும் இருக்கும் நீங்கள் பல குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே செய்து வரும் எழுத்துலக சேவைக்கு வாசகர்கள் கடமைப் பட்டவர்கள். இதனிடையே கபீர் வலைப்பூவிற்கும் எழுத நேரம் ஒதுக்கி இதனை சிறப்பித்திருக்கிறீர்கள். பணிவான வணக்கங்களுடன்,மிக்க நன்றி

தங்கள் குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.