Wednesday, October 05, 2016

குழலுடைந்தால் எழுமோ நாதம்?

முதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை.  ஒன்றல்ல இரண்டு.

ராபர்ட் கிரேவ்  என்பவரின்  ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நல்ல தத்துவத்தை போதிப்பதாக  எனக்குப்பட்டது. அந்த பகுதியை மட்டும் சுமாராக மொழிபெயர்த்த வரிகள் :

பனித்துளி ஒன்று தன்னுள் அடக்கியது
மலையும் வனமும், விசும்பும் கடலும்
பருவம் ஒட்டி பல்விதமாய் காட்டியது
ஆனால்
விலையிலா வைரத்தில்  அவை யாவும்
சிதர்ந்ததே எத்திக்கும்  மின் மினி ஒளியாய்
ஒருங்கி ணைத்து காண்பவர் இலர்
இயற்கையின் அழகை எல்லாம்.

’வழியிருந்தால் கடுகுள்ளே மலையை காணலாம்’ என்பது நிஜமோ இல்லையோ பனித்துளியின் பிரதிபலிப்பில் மலையையும் வானத்தையும் காண்பது என்னவோ நிஜம். ஆனால் வைரமோ ஒளிக்கூறுகளை சிதைத்து ஜொலிக்குமே அன்றி ஒரு முழு மையான பிரதிபலிப்பைக் கொடுக்காது.
இப்போது அதே பனித்துளியையும் வைரத்தையும்  மையமாகக் கொண்ட ஒரு கதை

புல் தரையில் அதிகாலை வேளை மெல்ல ஊர்ந்து வந்தது ஒரு புள்ளி வண்டுயாரோ தவற விட்டிருந்த ஒரு கண்ணைப் பறிக்கும் வைரக்கல்லைப் பார்த்ததுமே அது பெரிய இடத்தை சேர்ந்த சம்பந்தம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வணக்கம் போட்டது.( கபீர் வலைப்பூவுக்கென  பிரத்யேகமாக ஃபோட்டோஷாப்-பில்  தயாரிக்கப்பட்ட படம்)

அதுவும் அதை ஒரு நமட்டு சிரிப்புடன் அதை ஏற்று கொண்டதுசற்று மேலே ஒரு செடியின் கிளை நுனியில் பனித்துளிகள்  சூரிய ஒளியை  அழகாக  வெளிக்காட்டின.  “ அவரும் தங்களுக்கு உறவோ? “ என்று வினவியது வண்டு.  “அது வெறும் நீர். இன்னும் சிறிது நேரத்தில் காற்றில் ஆவியாகி விடும்.”  என்று ஏளனமாக பதிலளித்தது வைரம். ஏனெனில் பெரிய மனிதர்கள் அதைப் போற்றி பொக்கிஷமாக காத்து நிற்பராதலால்  தவற விட்டிருப்பவர்கள் சற்று நேரத்தில் தன்னைத் தேடி வருவர் என்பது அதற்குத் தெரியும். அப்போது தனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையும் எண்ணி செருக்குக் கொண்டிருந்தது.

பனித்துளி அமைதியுடன் இருந்ததுஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த வானம்பாடி பறவை  அந்த வைரத்தை ஒரு கொத்து கொத்தி துப்பியது. “ இது வெறும் கல் என் தாகம் தீர்க்கப் பயன்படாதுஎன்று சொல்லிக் கொண்டே தத்தித்  தத்தி, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தது.
நண்பனே என்னால் உன் தாகம் தீருமெனில் என்னை ஏற்றுக் கொள்என்றது பனித்துளிவானம்பாடியும் தாகம் தீர்ந்து சந்தோஷமாய் பறந்தது

சிறிது நேரத்தில் அங்கு வந்த கால்நடைகளின் காலில் மிதிபட்டு மண்ணுக்குள் அழுந்தி  யார் கண்ணிலும் படாமலே ஒரு பயனுமில்லாமலே புதையுண்டு போனது அந்த வைரக்கல்.

இது இறுமாப்பின் இறுதி நிலைமனிதநிலைக்கும் இறை நிலைக்கும் இடையே உள்ள திரை இது தான். இது நம்முள் தோற்றமெடுப்பதற்கு காரணம் வேண்டியதில்லைநாரதர் போன்ற தேவர்களே கூட தன்னிலும் சிறந்த பக்தரில்லைஎன்ற மயக்கத்திற்கு ஆளாவதுண்டு என்று பரமஹம்சரின் கதைகள் கூறுகின்றன.

இராவணன் போன்ற சிறந்த சிவபக்தன் இல்லை. அவனுக்கும் அந்த இறுமாப்பு வந்தபோது   கயிலாய மலையையே பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை தன் சுண்டு விரலால் அடக்கினார் சிவனார் என்பது நாயன்மார்களால் பெரிதும் போற்றப் படுகிறது.  ஞானசம்பந்தர் பெருமான் திருவையாற்று தியாகராஜரைப் போற்றும் போது
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்.
என்று பாடுகிறார்.

மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த

என்று நாவுக்கரசர் தில்லை சிவனை போற்றும் போது குறிப்பிடுகிறார்.
இப்படி  சைவ இலக்கியம் முழுவதும்  இந்நிகழ்ச்சிபலவேறு  பாடல்களில், இறுமாப்பினால் வரும் இடரை உணர்த்த எடுத்துக்காட்ட வருகிறது.

இதனை கபீரும் எளிமையாகச் சொல்கிறார். எவ்வளவு எளிமையான வரிகள்.


तिमिर गया रवि देखते ,कुमति गई गुरु ज्ञान  ।
सुमति गई अति लोभ ते ,भक्ति गई अभिमान ।। 

கதிரவன் கண்டு காரிருள் விலகும் , கெடுமதி ஓடும் குரு ஞானம் கண்டு மதி,நெறி தவறும் பேராசை கொண்டு, பக்திநெறி போகும் பெருமிதம் கண்டு

மாற்று:-

1.       இருளும் போச்சு இரவியைக் கண்டே  மருளும் போச்சு குருஞானம் கண்டே
பெருநெறியும் போச்சு பேராசை கொண்டே, பக்தியும் போச்சு இறுமாப்பு  கொண்டே

 [ குமதி- சுமதி ( कुमति- सुमति) அஞ்ஞானி மற்றும் நல்வழி அறிந்தவர் என்று கொள்ள வேண்டும்]

சத்குரு என்பவர் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கியவர். பனித்துளிகள் சூரியனின் வரவைக் காத்திருப்பது போல அவரும் இறைக்காட்சிக்காக காத்து கிடப்பவர். இடையிலே அருள் தாகம் கொண்டு வரும் ஆன்மீக அடியார்களின்  தாகத்தையும் தீர்க்க வல்லவர்.  உலகிற்காக தன்னையும் தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்அடக்கம் உள்ள இடத்தில் தான் ஞானம் வரும்.

ஆனால்  மனிதரை ஏதேனும் ஆசை பீடிக்கும் பொழுது  சத்குரு சொல்லும் நன்னெறிகள் மறைந்து போய் இறுமாப்பு குடி கொள்ளும்.  அதனால் நமது ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் மிக்க கவனம் கொள்ள வேண்டும்

அடக்கம் இருக்கும் போது மட்டுமே குருவை கண்டால்  இருக்கும் கொஞ்ச நஞ்சம் குறைகளும் விலகிடும்இல்லாவிட்டால் குரு அருகிலேயே இருந்தாலும்  ஞானம் வராது அதைப்பற்றியும் கபீர் சொல்வதை  கடைசியில் பார்ப்போம்.

கபீர் குறிப்பிடும் பேராசை  என்பது தன் தகுதிக்கு மீறிய  ஆசை. அப்படி ஆசையின் வலையில் வீழ்ந்தவன் பற்றிய ஒரு கதை

தேவதத்தன் பகவான் புத்தரின் நெருங்கிய உறவினன். அவரை அடைக்கலம் புகுந்து அவரது சீடன் ஆனவன். மன்னன் பிம்பசாரனின்  மகன் அஜாதசத்ருவின் அசையா நம்பிக்கை பெற்று அவனுக்கு குரு போல விளங்கியவன்புத்தரிடத்தில் பிம்பசாரனுக்கு  இருந்த அபார மதிப்பும் கௌரவமும்  கண்டு அவன் மனதில்  தானும் ராஜ குரு ஆகவேண்டும்  என்கிற பேராசையை உருவாக்கியது.

புத்தரை அணுகி தன்னை தலைவனாக்கும்படி கேட்டுக் கொண்டான். புத்தரோஅது ஒருவர்  இன்னொருவருக்கு கொடுத்து வருவதல்ல.  உழைப்பினாலும் முயற்சியினாலும் தகுதி வரும் பொழுது தானே வருவதுஎன்றுரைத்த நல்லுபதேசம் அவன் புத்தியில் ஏறவில்லை

அஜாத சத்ருவை தன் கைப்பாவையாக்கிக் கொண்டு பிம்பசாரனை சிறையில் அடைக்கச் செய்கிறான்.   மூன்று முறை  கௌதமபுத்தரை, தன்னுடைய குருவையே, கொலை செய்ய முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கிறான்

பிற பிக்ஷுக்கள் புத்தரிடம் தம் கவலையை தெரிவித்த போதுஒருவருடைய உயிரை இன்னொருவர் பறிக்க முடியாது. அவரவர் வாழ்நாள் முடியும் வரையில் பூமியில் இருக்கத்தான் வேண்டும். ஆகையால் இதைப் பற்றிய கவலையை விடுங்கள்”  என்று மரணத்தைப் பற்றிய கவலையின்றி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அன்பின் நெறியிலே  பிம்பசார மன்னனையும் அவன் ராஜ்ஜியத்தையும் திருப்பிய புத்தராலே கூட தன் நெருங்கிய சீடனை திருத்த முடியவில்லைஇப்போது குற்றம் எங்கே

இதை கபீர் இன்னொரு ஈரடியிலே  திருத்த முடியாத, முயற்சி இல்லாத சீடனுக்கு ஒப்பிடுகிறார்.

गुरु बिचारा क्या करे,  सिक्खहि माहिं चूक।

भावे त्यों परबोधिये , बास बजाये फूँक ॥

சீடனில்  உள்ளது தோசம், குருவும் என்செய்வார் பரிதாபம் 
பாடம் எப்படி சொல்லியும், குழலில் எழவில்லை சுகநாதம் 

தேவதத்தன் ஒரு  உடைந்த குழல்.   திருத்த முடியாத சீடன். ஏனெனில் பேராசையினால் நன்னெறி அவனை  விட்டு விலகியது

எப்பேர்பட்ட குருவுக்கு இப்படி ஒரு சீடனா என்று  நாம் வியக்கிறோம். ஆனால் நிழலில்லாமல் ஒளியின் அழகு தெரிவதில்லைஆகையால் இறைவன்  பெரியார்களின் பெருமையை உலகுக்கு புரிய வைக்க கூடவே தேவதத்தன் போன்றவர்களையும் அனுப்புகிறானோ என்னவோ

[  फूँक  என்பதற்கு ஊதுதல் அல்லது வாயால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இந்த ஈரடிக்கு பரவலாக உடைந்த குழலில் இசை வராது என்ற அடிப்படையில் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் குழலிசையை முயன்றவன் என்ற அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவெனில்  மூச்சை முறையாக குழல் வழியே செலுத்தத் தெரியாதவனுக்கும் இசை வராது. வெறும் புஸ் புஸ் என்று காற்றுதான் வரும். அதை குருவானவர் சொல்லிக் கொடுத்தாலும் மாணவனின் சுயமுயற்சி யில்லாமல் முன்னேற முடியாது. கபீர் இந்த ஈரடியில் குழல் உடைந்தது என்ற வகையில் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வில்லை. ஆகவே குழலில் குற்றமில்லை, குருவில் குற்றமில்லை மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம் என்ற வகையில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ] 

Robert Grave's original lines
..........
The dew-drop carries in its eye
Mountain and forest, sea and sky,
With every change of weather;
Contrariwise, a diamond splits
The prospect into idle bits
That none can piece together.