Sunday, July 29, 2007

நாளை என்பதை இன்றே செய்மின்

சென்றப் பதிவில் நிதானத்தை கடைபிடிக்கச் சொன்ன கபீரைக் கண்டோம். "தீரே தீரே ரே மனா" என்று மனதுக்கு அமைதி ஊட்டிய அதே கபீர் இங்கே காட்டும் அவசரத்தைப் பாருங்கள்.

कल करे सो आज कर , आज करे सो अब ।
पल मे परलय होएगा, बहूरी करोगे कब ॥

கல் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பரலய் ஹோயேகா, பஹூரீ கரோகே கப்

நாளையதை இன்றே செய்மின் இன்றென்பதையும் இன்னே
ஊழியதும் வருமே நொடியில் பின் செய்வதும் நீ என்னே

(இன்னே =இப்பொழுதே : ஊழி = பிரளயம்)

வட இந்தியாவில் மிக மிகப் பிரபலமான தோஹாக்களில் இதுவும் ஒன்று. சர்வ சாமானியனாலும் 'கல் கரே ஸோ ஆஜ் கர்' என்று மேற்கோள் காட்டப்படுவது இது.

இறைவன் யாவருக்கும் வஞ்சமில்லால் கொடுத்துள்ள பெரிய செல்வம், நேரம். ஏழையாயினும் பணக்காரனாயினும் எல்லோருக்கும் அதே இருபத்திநான்கு மணித்துணிகள் தான். ஆனால் அதைத்தான் நாம் எப்படி எல்லாம் வீணடித்து விடுகிறோம். Procrastination என்கிற தள்ளிப்போடும் சுபாவம் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ள ஒரு பொது குணம்.

அதிலும் நல்ல விஷயங்களுக்கென்றால் சற்று தாராளமாகவேத் தள்ளிப்போடுவோம்.

காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒரு வாரம் நடந்திருப்போம். ஊரிலிருந்து விருந்தினர் விஜயம் செய்தனர். அது போதாதா காரணம். அவர்களோடு பேசுவதற்கு வேறு நேரமே இல்லை என்று ஒரு சப்பைக்கட்டு கட்டும் மனம். அவர்களெல்லாம் ஊர் திரும்பட்டும் பின்னர் மீண்டும் தொடங்குவோம் என்று சிறிது காலம் தள்ளிப்போடுவோம் அதன் பின் அலுவலக வேலைகள் நிமித்தமாக சில நாள் வெளியூர் பயணம். திரும்பிய பின் 'நான் வீட்டிலேயே யோகா செய்து கொள்கிறேன்' என்று வேறொரு நொண்டிச் சாக்கு. யோகா முழுசாய் மூணு நாள் நடக்காது. காலை தினசரியில் வரும் பரப்பரப்பான செய்திகளில் கவனம் ஓடி விடும். அதை படித்து முடித்ததும் "அய்யோ ஆபீஸுக்கு லேட் ஆச்சு" என்று யோகாவுக்கு ஒரு முழுக்கு.

உடல் ஆரோக்கிய விஷயத்திலேயே நமக்கு இப்படி ஒரு அலட்சியம். பின் மன ஆரோக்கியத்திற்காக சொல்லப்படும் வழிபாடு, தியானம் இவைகள் எப்படி கைக்கூடும் ? இந்த இயற்கையான மனித சுபாவத்தை அறிந்தே கபீர் நிலையாமையை நினைவூட்டும் வகையில் எந்த கணத்திலும் காலன் நம்மை கொண்டு போகக்கூடும் என்று கூறுகிறார். 'பல் மே பிரளய் ஹோயேகா' என்ற சத்தியம் தோய்ந்த வார்த்தைகள் சில நிமிடங்களுக்குள் சுநாமி செய்த பேரழிவை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகிறது.

அவர் கூறுவதன் பொருள், கடவுள் கொடுத்துள்ள நேரத்தில் நாம் ஆத்ம லாபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஏனெனில் கடைசியில் நம்முடன் வர இருப்பது நமது ஆத்ம சிந்தனைகளும் வினைப்பயன்களும் தான். ஆத்ம சிந்தனைகள் இறையருளுக்கு நம்மை தகுதியுடையவராய் ஆக்குகிறது. வினைப்பயனை உடல் அனுபவிக்கிறது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் ' பூமியில் விழும் ஒவ்வொரு மழை துளியும் கடலை சென்றடைவது போல, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் படைப்பில் எல்லாம் இறைவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன'. ஆத்ம சிந்தனையைப் பெருக்கிக் கொள்ளும் போது வெள்ளத்தின் வேகம் போல் பயணம் துரிதமாகிறது. அதற்கான முயற்சியில்லாமல் பொருள் ஈட்டுவதிலும் சுக போகங்களுக்காக தேடி அலைவதிலும் நேரம் போனால் நிலத்திலே வடிந்து பலகாலம் காத்திருக்க வேண்டிய தரையடி நீராகவோ, குட்டை நீராகவோ, ஏன் சாக்கடை நீராகவோ கூட மாறிப் போய் விடுகிறது நமக்கு கொடுக்கப்பட்ட பிறவி.

பரிபூரணானந்தத்தில் தாயுமானவர், எப்படி இறைவன் அருளுக்காக ஏங்காமல் காலம் வீணாகிறது என்பதை குறிப்பிடுகிறார்.

வாசா கைங்கரியம் அன்றி ஒரு சாதனம்
மனோவாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும்
பழகியறியேன் துறவு மார்க்கத்தின் எண்ணம் போல்
நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த
நினைவையும் மறந்த பொழுது நித்திரை கொள்வேன்....
யோசிக்கும் வேளையில் எல்லாம் உண்பதும்
உறங்குவதுமாய் முடியும் .......

(வாசா கைங்கரியம் = வார்த்தைகளால் பெரிதாக பேசுவது்; வாய்பேச்சு. நினைவிலிருந்து எழுதப்பட்டது. சற்று முன்பின் இருக்கலாம்)

வாலாயமாக பழகுதல் என்றால் முறையாக தொடர்முயற்சியுடன் ஒரு வித்தையை பயிலுவது. மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அப்படி எதுவும் செய்யாமல் வெறும் உண்டு உறங்கி காலத்தை வீணாக்குகின்றேனே என்று கலங்குகிறார்.

எத்தனை கபீர்கள் வந்தால் என்ன அல்லது தாயுமானவர்களும் பரமஹம்சர்களும் வந்தால்தான் என்ன? அவ்வளவு சுலபமாகவா நம் தலைக்குள் போகிறது ? எல்லாம் உண்பதும் உறங்குவதுமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது.

Saturday, July 21, 2007

எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்.

நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் எடுத்த காரியத்தில் தொடர்ந்து பல தடங்கல்களை கண்ட அனுபவம் இருக்கும். அது வியாபாரத் தொடர்பானதாகவோ, திருமண விஷயமோ அல்லது உத்தியோக உயர்வு வீடு கட்டுதல் இத்யாதி காரணங்களுக்காக இருக்கலாம்.. சில அற்ப காரணங்களுக்காக கூடி வரும் போல இருந்தது கூட தட்டிப் போவதும் உண்டு. அத்தகைய நேரங்களில் -குறிப்பாக இந்திய மண்ணில் -நம்மை நாமே தேற்றிக் கொள்ள சொல்லிக் கொள்ளும் பொன்மொழி "எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்".

பல நாட்களுக்குப் பிறகு பின்னோக்கிப் பார்க்கையில் அப்படித் தட்டிப் போனதே வேறொரு வகையில் நல்லதாய் போனது என்று சந்தோஷப் படுவதும் உண்டு.

Many a time we are blessed by not getting what we desired.

வாழ்க்கையை ஒரு தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கற்றுக் கொள்ளும் போது மன உளைச்சலைப் பெருமளவு தவிர்க்கலாம். காலம் கனிவதன் அவசியம் தெரியாத போது நம் முயற்சிகளெல்லாம் வீணாகப் போனதாக எண்ணி மனம் துன்பப் படுகிறது. காலமறிந்து செயலாற்றுதலின் முக்கியத்துவத்தை வள்ளுவரும் ஒரு அத்தியாயம் முழுவதுமாக உரைக்கிறார்.

கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.


பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த பொழுது கொக்கு விரைந்து குத்துதல் போல விரைந்து செயல்பட வேண்டும்.

உள்ளத்தில் அமைதி இருக்கும் போதுதான் காலம் கனிந்து வருவதை அறியும் விவேகம் இருக்கும். அமைதி கொள்ளும்படி கபீர் மனதிற்கு உபதேசிக்கிறார். அதுவும் எப்படி ? ஒரு அழகிய உதாரணத்துடன்;

धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए ।
माली सीचे सौ घडा, ऋतु आये फल होए ॥


தீரே தீரே ரே மனா, தீரே ஸப் குச் ஹோயே
மாலீ ஸீசே ஸௌ கடா, ருது ஆயே பல் ஹோயே


நிறைவுறும் காரியம் யாவுமே, மெல்ல மெல்லவே மனமே
இறைப்பினும் குடந்நூறு தினமே காலத்தே வரும் பலனே


தாவரங்களுக்கு தண்ணீர் இன்றிமையாததுதான். தோட்டக்காரன் நாள் முழுவதும் நீர் இறைக்கலாம். ஆனால் தண்ணீர் ஒன்று மட்டும் செடி கொடிகளின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்லையே. தோட்டக்காரனின் அவசரத்திற்காக அவை காய்த்து விடுவதில்லை. அதற்குரிய பருவம் வரும் பொழுது பூப்பூத்து காயாகி பின் கனியாகவும் தருகிறது. நம் முயற்சிகளுக்கான பலன் என்ன என்பதையும் எப்பொழுது தரவேண்டும் என்பதையும் காலம் அறியும்.

சீனாவில் ஒரு குறிப்பிட்ட மூங்கில் வகையைப் பற்றிச் சொல்வதுண்டு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் அதன் விதைகள் நேர்த்தி செய்து பாதுகாக்கப்பட்டால் பன்னிரெண்டாவது வருடத்தில் அது முளைவிடும். அடுத்த ஆறு மாதங்களில் அதன் வளர்ச்சி சுமார் தொன்னூறு அடிகள் ! இது நம் ஊரின் குறிஞ்சி பூக்களைப் போல் பன்னிரெண்டு வருட சுழற்சியை ஒத்ததாக இருக்கிறது இல்லையா! பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு நடக்க வேண்டிய அந்த வெளிப்பாட்டுக்காக உரிய மாற்றங்கள் ஏதோ அந்த விதைக்குள்ளே (அல்லது செடிக்குள்ளே) தொடர்ந்து நடைப்பெற்றிருக்க வேண்டும். நம் புற கண்களுக்கு அவை தெரிவதில்லை அவ்வளவுதான்.

ஒரு வருடத்திற்குள்ளான பருவ மாற்றங்களை பூகோள ரீதியாக தெரிந்து வைத்திருக்கிறோம். பல வருடங்களுக்குட்பட்ட உயிரியல் சார்ந்த பருவங்கள் பற்றி- மேலே சொன்ன உதாரணங்களைப் போல- வெகு குறைவாகவே நாம் அறிவோம். பல ஜென்மங்களில் தொடர்ந்து வரும் வினைவழி சார்ந்த வெளிப்பாடுகளை (பலன்களை) யாரே அறிவார்?

கபீர் ஒரு வகையில் ஔவையாரின் கருத்துக்களை (மூதுரை 05) எதிரொலித்திருக்கிறார் எனலாம்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா.

ஆனால் யாரும் தமது முயற்சியின்மைக்கு, தள்ளிப் போடும் சுபாவத்திற்கு நேரம் வரவில்லை என்பதை ஒரு போலியான காரணமாகக் கொள்ளக் கூடாது. முயற்சியின்மையை வன்மையாகக் கண்டிக்கிறார் கபீர். அதை வேறொரு சமயம் பார்ப்போம்.